51நெருப்பு
51 நெருப்பு
பூவனம்
வெகு தாமதமாய் தூங்கியதால், வெகு தாமதமாய் கண்விழித்தாள் லயா. தான் நடத்திக்கொண்டிருந்த விபத்து நாடகத்தை மறந்து கைகால்களை முறுக்கினாள். புஷ்பா அவளையே பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்து, தன் கால் வலிப்பது போல பாவனை செய்தாள்.
"ஜாக்கிரதையா இரு, லயா... நீ இருக்கிற நிலைமையை மறந்துடுற..." என்றார் போலியான அக்கறையோடு.
ஆமாம் என்று சோகமாய் தலையசைத்தாள் லயா. அவள் கட்டிலை விட்டு கீழே இறங்க முயன்ற பொழுது, புஷ்பா அவளை தடுத்தார்.
"எதுக்காக இப்போ கீழே இறங்குற நீ?"
"பாத்ரூமுக்கு போறேன், ஆன்ட்டி"
"எதுக்கு?" என்று அவர் கேட்க, முகம் சுளித்தாள் லயா.
"என்ன கேள்வி ஆன்ட்டி இது? பாத்ரூமுக்கு எதுக்கு போவாங்க?"
"நான் இங்க இருக்கும் போது நீ எதுக்காக பாத்ரூமுக்கு போகணும்? நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்"
கீழே குனிந்து *பெட் பேனை* எடுத்தார் புஷ்பா.
"நீ பாத்ரூமுக்கு போக வேண்டாம்" என்றார், அவளது முக பாவத்தை கவனித்தவாறு.
லயாவின் முகம் இருளடைந்து போனது.
"இல்ல இல்ல... நான் இதெல்லாம் யூஸ் பண்ண மாட்டேன்" என்று அலறியபடி கட்டிலின் மறுபக்கம் இறங்கி, நோண்டியடித்தபடி குளியலறைக்கு ஓடினாள்.
அவள் குளியலறையின் கதவை சாத்தியவுடன் விழுந்து விழுந்து சிரித்தார் புஷ்பா.
எஸ் ஆர் ஃபேஷன்ஸ்
மிதிலாவுக்கு ஃபோன் செய்தான் குகன்.
"சொல்லுங்க குகா"
"எங்க காலேஜ் ஆனுவல் டே ஃபங்சன்ல எஸ்ஆர்கே ஆடின டான்ஸ் வீடியோவை நான் உங்களுக்கு அனுப்பியிருக்கேன்"
"அது உங்களுக்கு எப்படி கிடைச்சது?" என்றாள் ஆச்சரியமாய்.
"எங்க கூட காலேஜில் ஒன்னா படிச்ச ஃப்ரெண்டு தான் எங்க காலேஜ்ல பிஸிகல் இன்ஸ்ட்ரெக்டரா இருக்கான். அவன்கிட்ட கேட்டு வாங்கினேன்"
"ஓ... தேங்க்யூ"
அதை அவசரமாய் திறந்து பார்த்தாள் மிதிலா. அது ஒரு ஸ்லோ பீட் வெஸ்டன் டான்ஸ். ஆடவே தெரியாத ஸ்ரீராம் அற்புதமாய் ஆடியிருந்ததை பார்த்து ஆச்சரியம் அடைந்தாள் மிதிலா. அதை உடனே ஊர்மிளாவுக்கு அனுப்பி வைத்தாள். அதை பார்த்துவிட்டு மிதிலாவுக்கு ஃபோன் செய்தாள் ஊர்மிளா.
"மித்து, உன்னோட ஆளு, டான்ஸ் ஆடி இருக்காருன்னு என்னால நம்பவே முடியல..."
"என்னாலையும் நம்ப முடியல" என்றாள் லேசான புன்னகையுடன் மிதிலா.
"சேம் ஸ்டெப்ஸை நம்ம பிராக்டிஸ் பண்ணலாமா? ரொம்ப ஈஸியா இருக்கு. நமக்கு மெமரைஸ் பண்றதும் ரொம்ப ஈஸி. ரெண்டு மூணு தடவை பார்த்தா ஆடிடலாம்"
"உனக்கு ஒரு ஐடியா கிடைக்கும்னு தான் நான் அதை அனுப்பினேன்" என்று அப்பட்டமாய் பொய் சொன்னாள் மிதிலா.
"என்னவா வேணாலும் இருக்கட்டும்... அது ரொம்ப சூப்பரா இருக்கு. நம்ம அதே ஸ்டெப்புக்கு ஆட போறோம். கவனமா பார்த்து மனப்பாடம் பண்ணிக்கோ. நானும் பாத்துக்கிறேன். சாயங்காலம் வீட்டுக்கு வா. ஹாஃப் அன் ஹவர் பிரக்டிஸ் பண்ணா போதும். நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரே மாதிரி ப்ளூ ஜீன்சும், ஒயிட் விங்-டாப்ஸ்ஸும் வாங்கினோமே, அதை கொண்டு வந்துடு... இந்த மியூசிக்குக்கு அது சூப்பரா இருக்கும்"
"அவர் என்ன நினைப்பாரோ தெரியலையே"
"அதனால என்ன? மூணு நாளைக்கு பிறகு எல்லாம் கிளியர் ஆயிடும்... உங்க ஃபர்ஸ்ட் நைட்ல..." என்று சிரித்தாள் ஊர்மிளா.
"ஊரிரிரிரி..." என்று பல்லை கடித்தாள் மிதிலா.
"பை, ஸ்வீட் ஹார்ட்... கெட் ரெடி..." என்று அழைப்பை துண்டித்தாள் ஊர்மிளா.
சாந்தாவுக்கு ஃபோன் செய்து, ஊர்மிளா கூறிய உடைகளை பூவனத்திற்கு கொண்டு வரச் சொன்னாள் மிதிலா. அலுவலகம் முடிந்த பின், அங்கிருந்து நேராக ஊர்மிளாவின் இல்லம் சென்றாள். இரண்டு மூன்று முறை ஆடி பார்த்து, திருப்தி அடைந்தவுடன் அவர்கள் பூவனம் கிளம்பினார்கள்.
பூவனம்
"லயா, நான் வெளியில் கதவை சாத்திகிட்டு போறேன். ப்ரோக்ராம் சவுண்ட் உனக்கு டிஸ்டர்பன்ஸா இருக்கும். நீ படுத்து ரெஸ்ட் எடுத்துக்கோ. ஏதாவது வேணும்னா எனக்கு ஃபோன் பண்ணு. நான் அடுத்த நிமிஷம் உன் முன்னாடி நிப்பேன்"
லயா எதுவும் கூறுவதற்கு முன், அங்கிருந்து கிளம்பி சென்று, வெளியில் கதவை பூட்டினார் புஷ்பா.
எரிச்சலுடன் தனது அம்மாவிற்கு ஃபோன் செய்தாள் லயா.
"அம்மா, இதுக்கு மேல என்னால பொறுக்க முடியாது. இந்த புஷ்பா டார்ச்சர் என்னால தாங்க முடியல. என்னை ரூமுக்குள்ள வச்சு பூட்டிட்டு அவங்க எல்லாரும் ஆனிவர்சரி பார்ட்டியை என்ஜாய் பண்றாங்க. போன வருஷம் மாதிரியே இந்த வருஷமும் டான்ஸ் பார்ட்டி எல்லாம் நடக்கப் போகுதாம்..."
"எனக்கு தெரியும்... நான் என்ன செய்யணுமோ அதை செஞ்சிட்டேன்..."
"என்ன செஞ்சீங்க?"
"நீ தானே சொன்ன, அந்த பொண்ணுக்கு நெருப்புன்னா பயம்னு...? அவங்க எல்லாரும் ஒண்ணா கூடி இருக்கும் போது ஏதாவது ஒன்னு பத்தி எரியும். அந்தப் பொண்ணு பயந்து சாவா. அதே நேரம், நாளைக்கு பந்தக்கால் நடுறதுக்கு முன்னாடி இப்படி நடக்கிறதை எல்லாரும் அபசகுணமாவும் நினைப்பாங்க... மிச்சத்தை அப்பறம் பாத்துக்கலாம்..."
"சூப்பர் ஐடியா மா..." குதூகலித்தாள் லயா.
"நான் கேட்கிறேன்னு தப்பா நினைக்காதே. ஸ்ரீராமுக்காக நீ இவ்வளவு தூரம் மெனக்கெடனுமா?"
"நிச்சயமா மா... ஸ்ரீராம்னா என்ன நினைச்சீங்க...? அவன் பக்கத்தில் நின்னா, என்னை எல்லாரும் எவ்வளவு மரியாதையா பார்ப்பாங்க தெரியுமா...! எல்லாத்துக்கும் மேல நான் அவனை காதலிக்கிறேன்"
"ஆனா, அவன் உன்னை காதலிக்கலையே... நீ போராடி அவனை கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகு, அவன் உன்னை கண்டுக்காம போனா, உன்னுடைய வாழ்க்கை கசந்து போயிடும்"
"அவனை எப்படி என்னை கண்டுக்க வைக்கணும்னு எனக்கு தெரியும். ஆனா திடீர்னு உங்களுக்கு என்ன ஆச்சு?"
"உன் அண்ணனோட ஃப்ரெண்ட் சுபாஷுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்காம். உங்க அண்ணன்கிட்ட நேரடியாவே உன்னை பொண்ணு கேட்டிருக்கான்..."
"என்னது...! நிஜமாவா?"
"ஆமாம். அவனைப் பத்தி யோசிச்சு பாரு. அவனும் ஒன்னும் ஸ்ரீராமுக்கு சளச்சவன் இல்ல"
"ஆனா, அவன் ஸ்ரீராம் மாதிரி ஹாண்ட்சம் இல்ல... "
லயாவின் அம்மா பெருமூச்சு விட்டார்.
"அம்மா ப்ளீஸ்... எனக்கு ஸ்ரீராம் வேணும்..."
"ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வச்சுக்கோ. வாழ்க்கை பூரா நீ போராடிக்கிட்டு இருக்க முடியாது. சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்து தான் ஆகணும். அவனோட கல்யாணத்துக்கு இன்னும் மூணு நாள் தான் இருக்கு. மறந்திடாதே" என்று அழைப்பைத் துண்டித்தார்.
தனக்கு வந்திருந்த வரனை நினைத்து எரிச்சல் அடைந்தாள் லயா. அவளுடைய அம்மா எப்பொழுதும் இப்படி பேசியதில்லை. இது எல்லாம் அந்த சுபாஷால் தான்... தனது கைப்பேசியை கட்டிலின் மீது எறிந்தாள்.
.......
தினேஷ், நர்மதாவின் திருமண நாள் விழா களைகட்டியது. பரத்தும், ப்ரியாவும், மேடை அலங்காரங்களை பார்வையிட்டு முடித்துவிட்டு தயாரானார்கள். அந்த மேடை அழகிய திரைச்சீலைகளுடன் ஜொலித்தது. எல்லோரும் தத்தம் நண்பர்களை வரவேற்பதில் முனைந்தார்கள். நர்மதாவும், பாட்டியும் மிதிலாவின் பெற்றோரை வரவேற்றார்கள் .
"மிதிலா எங்க?" என்றாள் நர்மதா.
அதே கேள்வியை தன் மனதில் தாங்கியிருந்த ஸ்ரீராம், அவர்கள் கூறப்போகும் பதிலுக்காக காத்திருந்தான்.
"அவ ஊர்மிளா கூட வாரா..." என்றார் சாந்தா.
"ஓஹோ, ரெண்டு மருமகள்களும் சேர்ந்து வராங்களா?" என்றாள் நர்மதா.
சில நிமிடங்களில் ஊர்மிளாவின் குடும்பம் வந்து சேர்ந்தது. அன்று காலை, அலுவலகத்தில் அணிந்திருந்த அதே உடையை அணிந்து கொண்டு வந்த மிதிலாவை பார்த்து ஏமாற்றம் அடைந்தான் ஸ்ரீராம்.
நீல நிற ஜீன்ஸும், வெள்ளை நிற விங் டாப்ஸும் அணிந்திருந்த ஊர்மிளாவை பார்த்து,
"யூ ஆர் லுக்கிங் கார்ஜியஸ்" என்றான் லட்சுமணன்.
"ஆமாம் ஊர்மிளா... இந்த ட்ரஸ் ரொம்ப நல்லா இருக்கு" என்றாள் நர்மதா.
"இதே மாதிரி டிரஸ் மிதிலாகிட்ட கூட இருக்கு" என்றாள் ஊர்மிளா.
"ஊர்மிளாவை போலவே மிதிலாவும் இப்படி வித்தியாசமாய் உடையணிந்து வந்திருக்கலாமே..." என்று முணுமுணுத்தபடி அங்கிருந்து அமைதியாய் நகர்ந்து சென்றான் ஸ்ரீராம்.
சாந்தாவிடமிருந்து தனது உடைகளை வாங்கிக்கொண்டு நர்மதாவிடம் சென்றாள் மிதிலா.
"அக்கா நான் டிரஸ் சேஞ்ச் பண்ணனும்" என்றாள்
"ஷ்யூர்... என்கூட வாங்க"
அதைக் கேட்ட லக்ஷ்மன்,
"என்னோட ரூமுக்கு போக சொல்லுங்க கா. ஊர்மிளா, மிதிலாவை கூட்டிகிட்டு போ" என்றான்.
லக்ஷ்மணனின் அறைக்குச் சென்ற அவர்கள், உடைமாற்றிக்கொண்டு திரும்பி வந்தார்கள். யாருடனோ மும்முரமாய் பேசிக்கொண்டிருந்த ஸ்ரீராம், ஏதோ வித்தியாசமாய் உணர்ந்து, மாடிப்படியின் பக்கம் தன் பார்வையைத் திருப்பினான். ஊர்மிளா அணிந்திருந்த அதே போன்ற உடையை அணிந்து, தனது இடுப்புயர பட்டுக் கூந்தலை, பின்னாமல் காற்றில் அலைய விட்டு, முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் இறங்கி வந்த மிதிலாவை பார்த்து பேச்சிழந்து போனான் ஸ்ரீராம்.
தோழிகள் இருவரும், பேசி வைத்துக்கொண்டு ஒரே உடையணிந்து வந்ததாக எண்ணிக்கொண்டான் அவன். அவர்கள் இருவரும், அன்று ஆடுவதற்கு தயாராக வந்திருந்தது அவனுக்கு தெரியாது அல்லவா...!
நிகழ்ச்சி துவங்கியது. லட்சுமணன் கூறியது போலவே, வயது வித்தியாசமின்றி, ஆண்களும், பெண்களும், தயக்கமின்றி நடனமாடினார்கள். அதை பார்த்து நிம்மதி அடைந்தாள் மிதிலா. அவளது நடனம், விமர்சனத்திற்கு ஆளாகாது என்ற நம்பிக்கை பிறந்தது அவளுக்கு. மேடைக்கு அருகில் நின்றிருந்த ஸ்ரீராம், ஆட்டத்தை கவனிக்காமல் தனது வருங்கால மனைவியின் புதிய தோற்றத்தை கண்டுகளித்து கொண்டிருந்தான். அவளோ, ஊர்மிளாவோ *நாங்களும் ஆடப் போகிறோம்* என்பது போன்ற எந்த ஒரு அறிகுறியையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அப்பொழுது, அங்கு வந்த ஒரு நண்பரை வரவேற்க சென்றான் ஸ்ரீராம்.
கடைசி நிகழ்ச்சிக்கான நேரம் வந்தது. இதற்கு முன் கூறி வந்ததை போல், யார் ஆடப் போவது, என்ன பாட்டுக்கு ஆட போகிறார்கள், என்று எதுவும் கூறப்படவில்லை.
திடீரென்று காற்றில் மிதந்து வந்த இசைஞானியின் இசை, அந்த இடத்தை நிசப்தமாக்கியது. தனக்கு மிகவும் பிடித்த அந்த இசையை கேட்ட ஸ்ரீராமை அது திடுக்கிடச் செய்தது. தன் வாழ்நாளில் மறக்க முடியாத அந்த இசைக்கு, அவன் சிறிதும் எதிர்பாராத அந்த நபர் மேடையில் ஆட துவங்கியதை பார்த்து அவன் சிலையாகிப் போனான். அவன் ஆடிய அதே அசைவுகளுடன், சிறிய மாற்றம் கூட இல்லாமல் அவர்களும் ஆடியதை பார்த்து, அவன் திக்கு முக்காடினான். அப்படியென்றால், *மேடம்* அவனைப் பற்றி தெரிந்து கொள்வதை இன்னும் நிறுத்தவில்லை... மெல்லிய புன்னகை பூத்தான் ஸ்ரீராம்.
இதை குகனும், லக்ஷ்மணனும் கூட எதிர்பார்க்கவில்லை. ஸ்ரீராம் ஆடியதை மிதிலா பார்க்கட்டுமே என்று தான் குகன் அவளுக்கு அந்த காணொளியை அனுப்பியிருந்தான்.
தனது உடலை மெல்லிய இறகாக்கி, காற்றில் மிதந்து ஆடிய மிதிலாவின் மீது ஸ்ரீராமின் பார்வை நிலைகுத்தி நின்றது. எல்லாவற்றையும் அவனைவிட சிறப்பாய் செய்யக் கூடியவள் அவள் என்பது மறுக்க முடியாத உண்மை. இன்று அவள் ஆடியதும் அப்படித் தான் இருந்தது. அவனது மனம், விசித்திரமான கற்பனைக்குள் நுழைந்தது. மிதிலாவின் அருகில் ஆடிக்கொண்டிருந்த ஊர்மிளா காணாமல் போனாள். ஸ்ரீராமின் பார்வையில், மிதிலாவின் பக்கத்தில் ஸ்ரீராம் தோன்றினான். அந்த நடன அசைவுகள் அனைத்தும் அவனுக்கு அத்துப்படி என்பதால், கற்பனையில் மிதிலாவுடன் ஆட அவனுக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை.
கற்பனையில் லயித்தபடி கண்களை மூடி அவன் பின்னால் நகர்ந்த பொழுது, யார் மீதோ மோதிக் கொண்டான்.
"ஐ அம் சாரி... " என்றவன் தனக்கு முன்னால் நின்ற புதிய மனிதனை பார்த்து,
"யார் நீங்க?" என்றான்.
"எலக்ட்ரீசியன், சார்"
"ஓ..."
அந்த மனிதன் அங்கிருந்து மேடைக்குப் பின்னால் சென்றான். மிதிலாவும், ஊர்மிளாவும் தங்களது நடனத்தின் முடிவை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.
ஸ்ரீராமின் மீது மோதிக் கொண்ட அந்த மனிதன், மேடையின் மீது போடப்பட்டிருந்த திரைச்சீலைக்கு தீ வைத்தான். ஆம், அவன் தான் லயாவின் அம்மாவால் அனுப்பப்பட்ட ஆள்.
மிதிலாவின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்த ஸ்ரீராமின் பார்வை, தீப்பிடித்த திரைச்சீலையின் மீது விழுந்தது. அடுத்த நிமிடம் மேடையின் மீது தாவி ஏறி, மிதிலாவை அடைந்தான். அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு மேடையை விட்டு அவன் கீழே இறங்க, ஒன்றும் புரியாமல் விழித்தாள் மிதிலா, அங்கிருந்த மற்றவர்களுக்கு ஸ்ரீராம் ஆணையிடும் வரை...
"நெருப்பை அணைங்க..." என்று கத்தியபடி அருகில் இருந்த அறையை நோக்கி மிதிலாவை இழுத்துக்கொண்டு ஓடினான்.
மிதிலா நெருப்பை பார்க்கும் முன், அங்கிருந்து சென்று விட வேண்டும் என்பது தான் அவனது ஒரே குறிக்கோளாக இருந்தது. ஆனால், பின்னால் திரும்பி, கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த மேடையை பார்த்துவிட்டாள் மிதிலா. அவளது கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. அருகில் இருந்த அறைக்கு சென்று கதவை சாத்தி தாழிட்டான் ஸ்ரீராம்.
மூச்சு வாங்க நின்று, அங்கிருந்து குகனுக்கு ஃபோன் செய்தான்.
"குகா, நெருப்பை அணைச்சுட்டு, எனக்கு சொல்லு. "
"ஓகே, எஸ்ஆர்கே"
"ஒரு வெளியாளை இங்க நான் பார்த்தேன். லைட் ப்ளூ ஷர்ட் போட்டுக்கிட்டு ஸ்டேஜுக்கு பின்னாடி போனான். அவனை பிடிக்க ட்ரை பண்ணுங்க"
"சரி"
அழைப்பை துண்டித்து விட்டு ஸ்ரீராம் கூறிய ஆளை தேடிச் சென்றான் குகன்.
மிதிலாவுக்கு நெருப்பின் மீது இருந்த பயத்தைப் பற்றி ஸ்ரீராம் ஏற்கனவே கூறிவிட்டு இருந்ததால், அவனது குடும்பத்தினர், அவன் எதற்காக மிதிலாவை அங்கிருந்து அழைத்துச் சென்றான் என்ற காரணத்தை புரிந்து கொண்டார்கள். அங்கு கூடியிருந்த மக்கள் நெருப்பை பார்த்து பதட்டம் அடைந்தார்கள். அனைவரும் இணைந்து, மற்ற திரைச்சீலைகளுக்கு தீ பரவுவதற்கு முன், அதை இழுத்து அகற்றி நீரை ஊற்றி அணைத்தார்கள்.
.......
நடுக்கத்துடன் நின்றிருந்த மிதிலாவின் மீது ஸ்ரீராமின் கவனம் சென்றது. அன்று போலவே இன்றும், அவள் கண்கள் அருவியென பொழிந்தது. அவளது உடல் உதறியது. ஓரடி எடுத்து அவளை அடைந்த ஸ்ரீராம்,
"மிதிலா, ரிலாக்ஸ்... ஒன்னுமில்ல" என்று அவளை சமாதானப்படுத்த முயன்றான்.
ஆனால், மிதிலாவிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அவளது வெறித்த பார்வையும், நடுங்கும் உடலும், அவளது மனத்தில் எழுந்திருந்த பயத்தை வெளிச்சமிட்டு காட்டின. எதைப் பற்றியும் கவலைப் படாமல், அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான் ஸ்ரீராம்.
"மிதிலா பயப்படாத... நான் இருக்கேன்..." என்று மெல்லிய குரலில் கூறினான்.
அவன் அணிந்திருந்த கோட்டை இறுக்கமாய் பற்றிக்கொண்டு, கண்ணீர் வழியும் தன் கண்களை மெல்ல மூடினாள் மிதிலா. அவள் தலையை வருடிக்கொடுத்து அவளை ஆசுவாசப் படுத்தினான் ஸ்ரீராம். அவளது நடுக்கம் படிப்படியாய் குறைந்து, அவளது மூச்சு சீரடைந்தது. அப்படியிருந்தும் அவனிடமிருந்து விலகி செல்ல அவளுக்கு தோன்றவில்லை. ஸ்ரீராமுக்கும் அவளை அணைத்துக் கொண்டிருக்க எந்த காரணமும் தேவைப்படவில்லை. எதைப் பற்றியும் சிந்திக்காமல்... யாரைப் பற்றியும் சிந்திக்காமல்... அவளை அணைத்துக் கொண்டு நின்றான் ஸ்ரீராம்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top