50 விசித்திர உணர்வு

50 விசித்திர உணர்வு

நர்மதா கூறியது போலவே மிதிலாவின் கையில் மருதாணி வரைய, அவளது வீட்டுக்கு வந்தார் அழகு கலை நிபுணர். நர்மதா கொடுத்து அனுப்பியிருந்த டிசைனை, அவர் மிதிலாவிடம் காட்டினார். அது மிதிலாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன் மத்தியில் ஸ்ரீராமின் பெயர் எழுதப்பட்டிருந்தது. அவனது பெயர் பார்ப்பதற்கு ஒரு டிசைனை போலவே இருந்த போதிலும், ஸ்ரீராமின் பெயர் தெள்ளத் தெளிவாய் தெரிந்தது.
ஒரு விஷயத்தை நினைக்கும் பொழுது தான் அவளுக்கு வயிற்றைக் கலக்கியது. அவளது கையில் தனது பெயரைப் பார்க்கும் பொழுது ஸ்ரீராம் என்ன செய்வான்? நாளை, தினேஷ், நர்மதாவின் திருமண நாள். அவள் பூவனத்திற்கு செல்ல வேண்டும். அவளது நண்பர்களும், உறவினர்களும், ஸ்ரீராமின் முன் இதை வைத்து அவளை கிண்டல் கேலி செய்யாமல் இருக்க வேண்டும். அவள் நாளை மாலை பூவனம் செல்வதைப் பற்றி யோசித்தாளே தவிர, நாளை அலுவலகத்தில் ஸ்ரீராமை எதிர்கொள்ள வேண்டும் என்பது அவள் நினைவுக்கு வரவில்லை.

அவள் கையில் வரையப்பட்டிருந்த மருதாணி காயும் வரை தூங்காமல் விழித்திருந்தாள். அந்த மருதாணி கலைந்து விடக்கூடாது என்பதற்காக அல்ல. ஸ்ரீராமின் பெயர் கலைந்து விடக்கூடாது என்பதற்காக. தன் கையில் இருந்த அவனது பெயரை பார்த்து சிரித்தபடி அமர்ந்திருந்தாள் மிதிலா.

பூவனம்

தன் கையிலிருந்த மருதாணியை சந்தோஷமாய் பார்த்துக் கொண்டிருந்தார் புஷ்பா.

"பார்த்தியா லயா, என்னோட கையில எவ்வளவு செகப்பா மருதாணி பிடிச்சிருக்கு..."

விதியே என்று சிரித்தாள் லயா.

"எதனால என்னோட மருதாணி இப்படி செவந்திருக்கு தெரியுமா? என்னோட வீட்டுக்காரர் என்னை ரொம்ப காதலிக்கிறார்" என்றார் பெருமையுடன்.

தன் கண்களை சுழற்றினாள் லயா. புஷ்பா உறங்கட்டும் என்று அவள் காத்திருந்தாள். சிறிது நேரமாவது நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தாள் அவள். இப்படி, அப்படி திரும்பாமல் கட்டிலில் படுத்திருப்பது என்பது கொடுமை.

கதவை உட்புறமாக பூட்டி கொண்டு, சாவியை தனது தலையணையின் அடியில் வைத்துக் கொண்டார் புஷ்பா.

"எதுக்காக கதவை பூட்டினிங்க, ஆன்ட்டி?" என்றாள் லயா.

"சில சமயம் நான் தூக்கத்துல நடப்பேன்... அதுக்காக தான்" என்று புளுகி தள்ளினார் புஷ்பா.

தன் மீது, தானே பாவப்பட்டு கொண்டாள் லயா. அவள் வாழ்க்கையிலேயே இது தான் அவள் எதிர்கொள்ளும் மிகவும் மோசமான சூழ்நிலை.

எல்லாவற்றிற்கும் மேலாக, புஷ்பாவின் குறட்டை சத்தத்தை சமாளிக்க முடியாமல் அவள் தவித்தாள். அந்த குறட்டை சத்தத்தை சமாளிக்க, ஒரு போர்வையை எடுத்து தன் தலையை சுற்றிக் கொண்டாள். ஆனால் புஷ்பாவின் குறட்டை, அவளை அவ்வளவு எளிதில் தூங்க விட்டுவிடவில்லை. அவளால் விடியற்காலையில் தான் உறங்க முடிந்தது. தூக்கமில்லாத சோர்வில், விடிந்து நீண்ட நேரம் ஆகியும் உறங்கிக் கொண்டிருந்தாள் லயா.

மறுநாள்

எஸ் ஆர் ஃபேஷன்ஸ்

அடர் சிவப்பு நிறத்தில் சிவந்திருந்த மருதாணி நிரம்பிய கரங்களுடன் அலுவலகத்திற்குள் நுழைந்தாள் மிதிலா. சற்று முன்னதாகவே அலுவலகம் வந்து வேலையில் மூழ்கி இருந்தான் ஸ்ரீராம். திருமணத்திற்காக விடுப்பு எடுக்க வேண்டியிருப்பதால், அதற்கு முன்னதாக அனைத்து வேலைகளையும் முடிக்க வேண்டும் என்று நினைத்தான் அவன்.

அப்பொழுது நர்மதா அவனுக்கு ஃபோன் செய்தாள். தன் கையில் இருந்த கோப்பை சரி பார்த்தபடியே,

"சொல்லுங்க அக்கா" என்றான்.

"சாயங்காலம் சீக்கிரமா வந்துடு"

"சரிக்கா"

"ஆறரை மணிக்கு கேக் கட் பண்ண போறோம். நீ ஆறு மணிக்கு வந்துடணும்..."

"சரி" அவன் அழைப்பைத் துண்டிக்க போக,

"ராமு..."

"சொல்லுங்க"

"மிதிலா கையில இருந்த மருதாணியை பாத்தியா?"

"இன்னும் நான் மிதிலாவையே பார்க்கலையே..."

"போ, ராமு... நீ சுத்த வேஸ்ட்..."

தன் கையிலிருந்த கோப்பை மூடி வைத்துவிட்டு , நாற்காலியில் சாய்ந்து,

"ஏன்?" என்றான்.

"அவங்க கையில ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான மேட்டர் இருக்கு"

"என்ன அது?"

"நீ தான்..."

"என்ன்ன்ன?"

"உன்னோட பேர் அவங்க கையில இருக்கு"

"நிஜமாவா?" என்றான் ஆச்சர்யமாய்.

"ஆமாம்"

"அது எப்படி நடந்தது?"

"நான் தான் டிசைன் பண்ணினேன்...!"

"அப்படின்னா அவ உங்களுக்காக தான் அதை வரைஞ்சிருக்கணும்"

"ஆனா, சொன்னவுடனே ஒத்துக்கிட்டாங்க. ஒரு செகண்ட் கூட யோசிக்கல தெரியுமா...?"

"ஓ..."

"சரி. நான் ஃபோனை கட் பண்றேன். ஏதாவது சாக்குப்போக்கு யோசிச்சி மிதிலாவை உன்னோட கேபினுக்கு கூப்பிடு..." என்று கலகலவென சிரித்தாள் நர்மதா.

"பை கா " என்று அழைப்பை துண்டித்தான்.

எந்த சாக்குபோக்கையும் யோசிக்காமல் மிதிலாவுக்கு ஃபோன் செய்தான் ஸ்ரீராம். அவளைத் தன் அறைக்கு அழைக்க அவனுக்குத் தான் ஏகப்பட்ட காரணங்கள் இருக்கிறதே. மிதிலா அழைப்பை ஏற்று பேசினாள்.

"மிதிலா, நம்மளுடைய ஃபோன ப்ராஜெக்ட் ஃபைலை குகன்கிட்ட இருந்து வாங்கிகிட்டு என்னோட ரூமுக்கு வா" என்று அழைப்பை துண்டித்தான்.

மிதிலா விக்கித்து நின்றாள். தன்னுடைய கையிலிருந்த மருதாணியை பார்த்துவிட்டு அதை இறுக்கமாய் மூடிக் கொண்டாள். தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு குகனின் அறைக்கு சென்றாள்.

"குகா, நம்மோட போன ப்ராஜெக்ட் ஃபைலை கொடுங்க"

"ஏன் மிதிலா?"

"பாஸ் கேக்குறாரு"

"எதுக்கு?"

"எனக்கு தெரியல"

அவளிடம் அந்த கோப்பை வழங்கிய அவன், அவள் கையில் இருந்த மருதாணியை பார்த்து புன்னகைத்தான்.

"மருதாணி வரைஞ்சாச்சா?"

"ம்ம்ம்... நேத்து"

"உங்க கையில என்ன எழுதியிருக்கீங்க?"

"ஒன்னுமில்ல"

"ஸ்ரீராமுக்கு *ஒன்னுமில்லை* ன்னு ஒரு பெயர் இருக்கா என்ன?" என்று அவள் காலை வாரினான் குகன்.

"நீங்க ஒரு ராட்சசன், குகா" என்று தன் கையிலிருந்த கோப்பினால் அவனை ஒரு அடி போட்டாள்.

"போங்க... ராட்சசனுக்கெல்லாம் ராட்சசன் உங்களுக்காக காத்திருக்கான்" என்று சிரித்தான்.

அவன் அதை மெதுவாகத் தான் கூறினான் என்றாலும், அது மிதிலாவின் காதில் நன்றாகவே விழுந்தது.

அவள் ராட்சசனின் அறையின் கதவை தட்டினாள். உள்ளிருந்து எந்த பதிலும் கிடைக்காமல் போகவே, மெல்ல எட்டிப் பார்த்தாள். வாசற்படியை பார்த்தபடி, அவள் உள்ளே நுழையட்டும் என்று காத்திருந்தான் ஸ்ரீராம். அவளைப் பார்த்தவுடன் *வா* என்பது போல தலையசைத்தான். குகனிடம் பெற்ற கோப்புடன் உள்ளே நுழைந்தாள் மிதிலா.
 
"என்னோட கேபின்குள்ள வர, பர்மிஷன் கேக்குறதை நிறுத்து..." என்றான்.

ஒன்றும் சொல்லாமல் நின்றாள் மிதிலா. அவன் வழங்கும் மரியாதைக்கெல்லாம் அவள் பதிலுக்கு என்ன தான் செய்ய போகிறாளோ தெரியவில்லை. அவள் ஒரு பெரிய உண்மையை அவனிடம் மறைத்துவிட்டாள் என்று அவனுக்கு தெரிந்த பிறகு, அவனுடைய நம்பிக்கையை எப்படி அவள் திரும்ப பெறுவாள்? ஒன்றுமே புரியவில்லை மிதிலாவுக்கு. தன் கையிலிருந்த கோப்பை அவனது மேஜையின் மீது வைத்தாள்.

"எனிதிங் எல்ஸ், சார்?"

"நம்மளோட அடுத்த ப்ராஜெக்ட்டுக்கு இந்த ஃபைலில் இருக்கிற இன்ஸ்டிரக்ஷன்ஸை ஃபாலோ பண்ணிக்கோ."

சரி என்று தலையசைத்தாள் மிதிலா.

"அதுக்கு ஒரு தனி ஃபைலை கிரியேட் பண்ணி, அதை நம்ம கம்பெனி சைட்ல அப்லோட் பண்ணு... அது ஒன்னும் அவசரமில்ல. அதை நீ அப்புறமா செஞ்சுக்கலாம்..."

"நான் நாளைக்கு செஞ்சுடறேன் சார்"

"நீ நாளைக்கும் ஆஃபீஸுக்கு வரப் போறியா?"

"ஆமாம்"

"நம்ம கல்யாணத்துக்கு மூணு நாள் தான் இருக்கு. நாளைக்கு பந்தக்கால் நட போறாங்களாம்.  அதுக்கு பிறகு வீட்டை விட்டு வெளியே வர கூடாதாமே..."

"ம்ம்ம்..."

"நாளைக்கு லோக்கல் ஹாலிடே. தெரியுமா?" என்றான்.

"எனக்கு தெரியாது, சார்"

"கல்யாணத்துக்கு நீ ரெண்டு மூணு நாள் லீவு எடுப்பேன்னு நெனச்சேன்..."

"மூணு நாள் லீவு எடுத்தா, ஆறு நாள் சேலரி கட்டாகுமே, சார்"

தனது நாற்காலியை விட்டு எழுந்து அவளை நோக்கி வந்தான். அவன் தன்னை நெருங்க நெருங்க, பின் நோக்கி நகர்ந்தாள் மிதிலா. தனது நடையின் வேகத்தைக் கூட்டி, மேஜையின் மீது கை வைத்து, அவளை நகர விடாமல் தடுத்தான் ஸ்ரீராம். தனது உடலில் ஓடிய மொத்த ரத்தமும் ஒரேடியாய் தலையில் பாய்ந்தது போல் இருந்தது மிதிலாவுக்கு, அவனை அவ்வளவு அருகில் பார்த்த போது.

"என்னோட வருங்கால பொண்டாட்டியே... உனக்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலையா...?"

மிதிலா உதட்டை கடித்து தலை குனிந்தாள்.

"இந்த... கம்பெனியோட கிளாஸ் என்னால மாற வேண்டாம்னு நினைக்கிறேன்." என்றாள் தடுமாற்றத்துடன்.

"நானே உனக்கு மூணு நாள் லீவு கொடுத்தா என்ன செய்வ?"

"நான் அதை ஏத்துக்கலைனா நீங்க என்ன செய்வீங்க?" என்று அவனை திருப்பி கேள்வி கேட்டாள் மிதிலா தயங்கியபடி.

"உனக்கு ஒன்னு சொல்லவா...? முதல் தடவை நீ என்கிட்ட சண்டை போடும் போது எனக்கு அவ்வளவு கடுப்பா இருந்தது. ஆனா இப்பெல்லாம், நீ என்கிட்ட சண்டை போட்டா எனக்கு செம்ம ஜாலியா இருக்கு." என்று அவள் கையை அவன் தொட முயன்ற போது, தன் கையை பின்னால் இழுத்தாள் மிதிலா.

"உன்னோட கையில எதோ இன்ட்ரஸ்டிங்கான மேட்டர் இருக்காமே"

*மாட்டிக் கொண்டோம்* என்று தோன்றியது மிதிலாவுக்கு.

"கல்யாணத்துக்கு முன்னாடி நீங்க என்னோட கையை பார்க்கக் கூடாது..."

"ஓ... பாத்தா என்ன ஆகும்?"

"கல்யாண பொண்ணு ஓடிப்போயிடுவாளாம்" என்றாள் எங்கோ பார்த்துக்கொண்டு.

புருவத்தை உயர்த்தி சிரித்தான் ஸ்ரீராம்.

"உன்னால ஓட முடியாது"

"இப்படியெல்லாம் கட்டாயப்படுத்தி, என்னை காதலிக்க வைக்க முடியும்னு நினைக்கிறீங்களா?"

"கட்டாயப்படுத்தியெல்லாம் யாரையும் காதலிக்க வைக்க முடியாது... நான் உன்னை கட்டாயப் படுத்துறேனா என்ன?"

"இல்லையா?"

"கட்டாயப்படுத்துறதுன்னா என்னன்னு கல்யாணத்துக்கு அப்புறம் நீயே தெரிஞ்சுக்குவ" என்றான் இரகசியமாக.

அவள் அவனைப் பார்த்து பேய் முழி முழிக்க, சிரித்தான் ஸ்ரீராம்.

"உன்னோட கற்பனை குதிரையை ரொம்ப வேகமா ஓட்டாத" என்று சிரித்தான்.

தன் கைகளை எடுத்து அவன் விலகி நிற்க, ஓரடி நகர்ந்தாள் மிதிலா. அவள் எதிர்பார்க்காத வண்ணம், சட்டென்று அவள் கையைப் பிடித்து தன்னை நோக்கித் திருப்பினான் ஸ்ரீராம். அவள் கரத்தில் அவனுடைய பெயர் அழகாய் மிளிர்ந்தது.

"இனிஷியல் மட்டும் தானே எழுதுவாங்க? நான் என்ன அவ்வளவு ஸ்பெஷலா?" என்றான்.

தன் கையை இப்படியும் அப்படியும் முறுக்கினாள் மிதிலா.

"என்னோட பெயரை எழுத முடியாதுன்னு சொல்லியிருக்க வேண்டியது தானே?"

"நர்மதா அக்கா தான் எழுத சொன்னாங்க..."

"ஓஹோ... நர்மதா அக்கா நிறைய விஷயம் செய்ய சொல்லுவாங்க. அதுக்கெல்லாம் நீ ரெடியா?"

திடுக்கிட்டு தன் விழிகளை விரித்து அவனை பார்த்தாள் மிதிலா.

"மறுபடியும் உன்னோட கற்பனை குதிரையை தட்டி விடாதே" என்று சிரித்தான்.

தன் கையை உதறிவிட்டு அங்கிருந்து ஓடி போனாள் மிதிலா, ஸ்ரீராமை புன்னகையுடன் விட்டு.

தரைதளம் வந்த மிதிலாவை தடுத்து நிறுத்தினான் லட்சுமண்.

"உனக்கு ஊரி ஃபோன் பண்ணாளா?"

"இல்லையே"

"இன்னைக்கு அக்கா மாமாவோட வெட்டிங் ஆனிவர்சரி இல்ல... அதை பத்தி எதோ பேசனுமாம்"

"நான் அவகிட்ட பேசுறேன்"

"ஏதாவது ஒரு சாங்கை சூஸ் பண்ணிட்டு பேசு"

"எதுக்கு?"

"இன்னைக்கு பங்க்ஷன்ல டான்ஸ் ஆடுறதுக்கு"

"நான் ஆட மாட்டேன்"

"ஏன் மிதிலா? நீயும் ஊர்மிளாவும் நம்மளோட காலேஜ்ல எல்லா ஃபங்ஷனுக்கும் டான்ஸ் ஆடுவீங்க தானே?"

"அது வேற இது வேற..."

"என்ன வேற?"

மிதிலா பதில் கூறுவதற்கு முன்,

"உங்க காலேஜ் ஃபங்க்ஷன்ல, எஸ்ஆர்கே இருக்கல... ஆனா இன்னைக்கு ஃபங்ஷன்ல அவன் இருப்பான் இல்ல?" என்றான் குகன்.

"ராமு முன்னாடி ஆடுறதுக்கு மிதிலா தயங்குறான்னு சொல்றியா?" என்றான் லட்சுமணன்.

"வேற என்ன?"

"அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. மிதிலாவும், ஊர்மிளாவும்  இன்னைக்கு ஆடப் போறாங்க. பாட்டியே சரின்னு சொல்லிட்டாங்க. அவங்க டான்ஸ்ஸை பாக்க எல்லாரும் ரொம்ப ஆர்வமா இருக்காங்க"

அதைக்கேட்டு தயங்கியபடி நின்றாள் மிதிலா.

"ஏன் மிதிலா தயங்குறீங்க? எஸ்ஆர்கே கேட்டா, அவனோட சேந்து நீங்க ஆட மாட்டீங்களா?"

ஆமாம், இல்லை, என்று ஏதோ ஒரு பதிலை அவள் கூறுவாள் என்று எதிர்பார்த்தான் குகன். ஆனால்,

"ஜூனியர் டான்ஸ் ஆடுவாரா?" என்று கேட்டாள் மிதிலா.

அதை கேட்டு இருவரும் களுக்கென்று சிரித்தார்கள்.

"உண்மையை சொல்லப் போனா, அவன் ஒரு புவர் டான்சர். ஆனா, ஒரே ஒரு தடவை மட்டும் எங்க காலேஜ் ஆனுவல் டேவில் ஆடினான்"

"புவர் டான்சர்னு சொல்றீங்க... அப்படி இருந்தும் காலேஜ் ஆனுவல் டேவில் ஆடினாரா?" என்றாள் ஆச்சரியமாய்.

"ஒரு சேலஞ்சுக்காக ஆடினான். ஒரு டான்சர் அவன்கிட்ட சேலஞ்ச் பண்ணினான். அவன் என்ன செஞ்சிருப்பான்னு தான் தெரியுமே. சேலஞ்சை ஏத்துக்கிட்டு ஆடினான்."

"ஓ..."

"அதுக்கு முன்னாலயும், அதுக்குப் பிறகும், அவன் ஆடினதேயில்ல..."

"ஓஹோ..."

"நீ ஆட போற தானே?" என்றான் லட்சுமன்.

"இல்ல லக்கி... கல்யாணத்துக்கு முன்னாடியே மாமியார் வீட்ல இப்படியெல்லாம் ஆடினா நல்லா இருக்காது..."

"இன்னைக்கு அங்க வந்து பாரு. எங்க ரிலேட்டிவ்ஸ் எல்லாரும் எப்படி ஆட போறாங்கன்னு. உனக்கு ஓகேன்னு தோணிச்சின்னா நீ ஆடு."

"அவங்க ஹை கிளாஸ் சொசைட்டில இதெல்லாம் ரொம்ப சாதாரணம், மிதிலா. யாரும் உங்களை தப்பா நினைக்க மாட்டாங்க." என்றான் குகன்.

"ஆமாம் மிதிலா. குகன் சொல்றது சரி தான். எங்க பேமிலில இதெல்லாம் ரொம்ப சாதாரணம். நீ ரொம்ப ஜோவியலா இருக்கிறதா தான்  நினைப்பாங்க. ஊர்மிளா ஆடணும்னு முடிவோட இருக்கா. அவ உன்னை விட மாட்டா. ஞாபகம் வச்சுக்கோ" என்றான் லட்சுமணன்.

அங்கிருந்து அவள் செல்ல நினைத்து ஒரு நொடி நின்றாள்.

"ஜூனியர் என்ன பாட்டுக்கு ஆடினார்?" என்றாள்.

"புன்னகை மன்னன் தீம் மியூசிக்"

"இருந்தாலும் ஜூனியருக்கு திமிர் அதிகம் தான். எவ்வளவு தைரியம் இருந்தா, உலகநாயகன் ஆடின மியூசிக்குக்கு டான்ஸ் ஆடியிருப்பாரு...?" என்றாள் கிண்டலாக.

"அது சிம்பிள் மியூசிக் தானே, மிதிலா..." என்றான் குகன் சிரித்தபடி.

தனது அறைக்கு வந்த மிதிலா, ஊர்மிளாவிடம் விஷயத்தைக் கூறினாள்.

"மிதிலா, இந்த மியூசிக்கு நம்ம ஆடினா என்ன?" என்றாள் ஊர்மிளா.

"இல்ல ஊரி... நீ ஆடுவேன்னு தான் சொன்னேன்..."

"நோ வே... நீயும் என்கூட ஆடுற. நான் இதுக்கு ஏத்த மாதிரி சிம்பிள் ஸ்டெப்ஸ் போட்டு வைக்கிறேன். நீ ரெண்டு மூணு தடவை ரிகர்சல் பண்ணா போதும், நம்ம ஆடிடலாம்... சாயங்காலம் வீட்டுக்கு வா" என்று அழைப்பை துண்டித்தாள் ஊர்மிளா.

எதையோ நினைத்து சிரித்துக் கொண்டாள் மிதிலா. அந்த இசைக்கு ஆடி, ஸ்ரீராமுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க வேண்டும் என்று தான் அவளுக்கும் ஆசை. இன்றைய நிகழ்ச்சிக்குப் பிறகு திருமணம் வரை அவள் ஸ்ரீராமை பார்க்கப் போவதில்லை. அதனால், அதை பற்றி அவளிடம் அவன் வம்பு செய்யும் வாய்ப்பும் அவனுக்குக் கிடைக்கப் போவதில்லை.

அவனுக்கு தெரிந்த அந்த ஒரே ஒரு நடன அசைவுக்கு அவள் ஆடினால் அவன் என்ன நினைப்பான்?

எல்லாம் சரி... ஆனால், ஸ்ரீராமிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று நினைக்கும் மிதிலா, அவனுடைய கவனத்தை தன் பக்கம் திருப்ப வேண்டும் என்று நினைக்க காரணம் என்ன?

அது தானே காதல்...! அது ஒரு விசித்திர உணர்வு. தன் மனதை கொள்ளை கொண்ட அந்த நபரை மட்டும் எப்பொழுதும் தன் கண் பார்வையிலேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் ஒரு பைத்தியக்கார உணர்வு... எப்பொழுதும் தனக்கு பிடித்த அந்த நபரின் கவனம் தன் மீதே இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு கிறுக்குத்தனமான உணர்வு. மிதிலா மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?  தன் மனம் கவர்ந்த ஸ்ரீராமின் கவனத்தை ஈர்க்க தயாரானாள் மிதிலா...

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top