5 நேர்மறை எண்ணம்
5 நேர்மறை எண்ணம்
ஆனந்த குடில்
கர்ப்பவதியான தன் அக்கா பிருந்தாவுடன் பேசிக் கொண்டிருந்தாள் மிதிலா. தனது அம்மா, அப்பாவையும், தங்கையையும் பார்ப்பதற்காக தனது கணவனுடன் பிறந்தகம் வந்திருந்தாள் பிருந்தா.
"இன்டர்வியூ எப்படி பண்ணியிருக்க, மிதிலா?" என்றான் மிதிலாவின் அக்காவின் கணவனான சதீஷ்.
"நம்ம ஒத்துக்கிட்டே ஆகணும், எஸ் ஆர் ஃபேஷன்ஸ், நம்பர் ஒன் கம்பெனியா இருக்கிறதுல எந்த ஆச்சரியமும் இல்ல. அவங்க இன்டர்வியூவை நடத்தின விதமே அவங்களுடைய ஸ்டாண்டர்ட் எப்படிப்பட்டதுன்னு சொல்லுது..." என்று சிலாகித்தாள் மிதிலா.
"அதுக்காகத் தான், உனக்காக நான் அந்த ஜாபுக்கு அப்பளை பண்ணேன். அந்த போஸ்டுக்கு நீ எலிஜிபிலா இருப்ப."
"எஸ் ஆர் ஃபேஷன்சை கம்பேர் பண்ணும் போது, நான் இதுக்கு முன்னாடி வேலை செஞ்ச கம்பெனி ஒன்னுமே இல்ல."
"ஆனா, அந்த கம்பெனியில் வேலை செஞ்சப்போ, நீ மல்டி ஒர்க்கரா இருந்திருக்க. அந்த அனுபவம், உனக்கு எஸ் ஆர் ஃபேஷன்ஸில் நிச்சயம் கை கொடுக்கும்"
"நான் இன்டர்வியூவை ரொம்ப நல்லா பண்ணி இருக்கேன். அவங்க மேனேஜர் முகத்தில் ஒரு திருப்தி தெரிஞ்சது"
"உனக்கு நிச்சயமா அங்க வேலை கிடைக்கும். உன்னுடைய எதிர்காலமே மாறப் போகுது பாரு." என்று உண்மையை கூறினான் சதீஷ்.
சில மாதங்களுக்கு முன்பு தான் சதீஷுக்கும் பிருந்தாவுக்கும் திருமணம் நடைபெற்றது. சதீஷ், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன். ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறான். பிருந்தாவை மிகவும் நேசிப்பவன். அவர்களின் திருமணத்திற்காக தான், ஒரு பெரிய தொகையை கடனாகப் பெற்றார் மிதிலாவின் அப்பா ஆனந்தன். அவருடைய வருமானத்தில், மூன்றில் இரண்டு பங்கு பிடித்தம் செய்யப்படுகிறது. தானும் பணியில் இருப்பதால், அவருக்கு கடன் வாங்க சொல்லி தைரியம் அளித்தது மிதிலா தான். தன் வேலையை இழப்போம் என்று அவள் அப்போது நினைத்திருக்கவில்லை. இது தான் அவர்களின் குடும்ப நிலைமை. அதனால் தான், தனக்காக ஒரு வேலையை மும்முரமாய் தேடிக் கொண்டிருக்கிறாள் மிதிலா.
அப்போது, விஷயத்தை அவளிடம் கூற, அவளுக்கு ஃபோன் செய்தான் லக்ஷ்மன். தனது குடும்பத்தாரிடம் விஷயத்தை கூறி விட்டு, தன் கைபேசியுடன் சற்று தொலைவுக்கு வந்தாள் மிதிலா.
"ஹாய், பட்டி..."
"நீ இன்டர்வியூவில் செலக்ட் ஆகி இருக்க"
"நெஜமாவா? தேங்க் காட்..."
"ஆனா..."
"என்ன இழுக்குற?"
"நீ பரத்துக்கு வேலை செய்யப் போறதில்ல..."
"பின்ன?"
"நீ ராமுவுக்கு பிஏ வா செலக்ட் ஆகி இருக்க"
"என்ன்ன்னது...?"
"உனக்கு விருப்பம் இல்லேன்னா நீ இந்த வேலையில் சேர வேண்டிய அவசியம் இல்ல. வேண்டாமுன்னு சொல்லிடு. என்னோட ஃப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லி நான் உனக்கு ஒரு நல்ல ஜாப் தேடித் தரச் சொல்றேன்"
"ஆனா, நான் ஏன் உங்க பெரிய அண்ணனுக்காக வேலை செய்யக் கூடாது?"
"அக்கா சொன்னாங்க, உங்க ரெண்டு பேருக்கும் ஏதோ வாக்குவாதம் நடந்துதாமே..."
"அது ஒரு பெரிய விஷயமே இல்ல, பா"
"உனக்கு இல்லாம இருக்கலாம்... ஆனா, அவன் நிச்சயம் அதை பெருசா தான் நினைப்பான்"
"ஆனா, நான் எதுவும் தப்பா பேசலையே..."
"எதைப் பத்தி நீ அவன்கிட்ட பேசின?"
"உன்னுடைய லவ்வை பத்தி"
"என்னது....? என்னோட லவ்வை பத்தியா...? ஆனா, அவனுக்கு அதைப் பத்தி ஒன்னும் தெரியாதே..."
"அப்புறம் ஏன் அவர் அப்படியெல்லாம் பேசினாரு?"
"அவன் உன்கிட்ட என்ன கேட்டான்?"
அன்று நடந்தவற்றை ஒன்று விடாமல் லட்சுமணனிடம் கூறி முடித்தாள் மிதிலா. அவனுக்கு, ஊர்மிளாவுடன் இருக்கும் காதலைப் பற்றி ஸ்ரீராமுக்கு எப்படி தெரியும் என்று ஒன்றுமே புரியவில்லை லட்சுமணனுக்கு. ஆனால், இது தான் பிரச்சினை என்றால், அவன் இதை சரி செய்தாக வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
"எனக்கு அவனை நெனைச்சா பயமா இருக்கு" என்றான் லக்ஷ்மன்.
"நீ ஏன் பயப்படுற? அவர் அப்படி என்ன செய்வார்? ஏதாவது தகாத விதத்தில் நடந்துக்குவாரா?" என்றாள் தயக்கத்துடன்.
அவள் நினைப்பது என்னவென்பதைப் புரிந்து கொண்டான் லக்ஷ்மன்.
"சேச்சே... அப்படியெல்லாம் எதுவுமில்ல... பெண்கள் விஷயத்துல, அவன் உண்மையிலேயே ஸ்ரீராமன் தான். ஆனா, வேலையில ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பான். எல்லாமே பர்ஃபெக்டா இருக்கணும்னு நினைப்பான். யாராவது அவனை எதிர்த்து பேசினா அவனுக்கு பிடிக்காது. அவனுக்கு கொஞ்சம் ஈகோ அதிகம்..."
நிம்மதி பெருமூச்சு விட்டாள் மிதிலா.
"இவ்வளவு தானே...? நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்"
"உனக்கு பயமா இல்லையா?"
"இதுல பயப்பட என்ன இருக்கு? அவர் ஸ்ட்ரிக்ட்டா இருப்பாரு. எல்லாம் பெர்ஃபெகட்டா வேணுமுன்னு நினைப்பாரு. அதுல என்ன தப்பு இருக்கு? எல்லா *எம்டி*யும் அப்படித் தானே இருப்பாங்க...? அவர் எதிர்பார்க்கிற ரிசல்ட்டை கொடுத்துட்டா போகுது..."
"நீ ஜாக்கிரதையா இருக்கணும்"
"நான் ஜாக்கிரதையா தான் இருப்பேன். எனக்கு இந்த வேலை பிடிக்கலன்னா நான் அதை ரிசைன் பண்ணிடுறேன்... ஓகேவா?"
"ஓகே"
அழைப்பை துண்டித்தான் லட்சுமன். ஆழ்ந்து சிந்திக்கத் துவங்கினாள் மிதிலா. ஆம், அவளுக்கு ஸ்ரீராமுடைய நடவடிக்கை பிடிக்கவில்லை தான். அவன், அவளைக் கீழ்த்தரமானவள் என்று கூறினான். அவனுக்கு கொஞ்சமல்ல, நிறையவே ஈகோ இருக்கிறது. ஸ்ரீராம் நிச்சயம் மிதிலாவின் ரகம் அல்ல. இருந்தாலும் அவளுக்கு இந்த வேலை வேண்டும். இப்படிப்பட்ட நல்ல வேலையும், கைநிறைய சம்பளமும் நிச்சயம் அவளுக்கு கிடைக்காது. எஸ்ஆர் ஃபேஷன்ஸ், ஒரு மதிப்புமிக்க நிறுவனம். அதில் பணிபுரிவதும் மதிப்புமிக்கது. முயற்சி செய்து பார்க்காமலேயே பின்வாங்கி செல்பவள் அல்ல மிதிலா. முயற்சி செய்து பார்ப்பதில் எந்த தவறும் அல்ல. ஸ்ரீராம் கருணாகரனுக்கு உதவியாளராக இருந்து தான் பார்ப்போமே. பிறகு முடிவு செய்து கொள்வது, என்று தீர்மானித்தாள் மிதிலா.
பூவனம்
நர்மதாவின் அறைக் கதவை தட்டினான் லக்ஷ்மன்.
"உள்ள வா, லட்சு" என்றாள் நர்மதா.
"உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும், கா"
"சொல்லு"
"நான் மிதிலாகிட்ட பேசினேன். அவ ராமுவுக்காக வேலை செய்ய தயாரா இருக்கா"
"நிஜமாவா சொல்ற?"
"ஆமாக்கா"
"நான் வேணும்னா இதை பத்தி ராமுகிட்ட பேசிட்டுமா?"
"வேணாம், கா. நம்ம மிதிலாவுக்கு சப்போர்ட் பண்ணா, அவன் கோபப்படுவான்"
"நீ சொல்றதும் சரி தான்"
"நான் உங்ககிட்ட வேற ஒரு விஷயம் சொல்ல வந்தேன்"
"என்ன விஷயம்?"
"நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன்"
"என்னது? நெஜமாவா?" என்றாள் நம்ப முடியாமல்.
"ஆமாக்கா. அவ பேரு, ஊர்மிளா. அவளும் எங்க காலேஜ் மேட் தான். இதைப் பத்தி, அம்மாகிட்டயும், பாட்டிகிட்டயும் சொல்லணும்னு நினைக்கிறேன்."
"ஓ... யாருக்கோ கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை வந்துடுச்சு போல இருக்கு..."
"ராமுவுக்கு முன்னாடி இல்லக்கா..."
பெருமூச்சுவிட்டாள் நர்மதா.
"அந்த சிடுமூஞ்சி, சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க மாட்டான் போல இருக்கே" என்றாள்.
"எது எப்படி இருந்தாலும், நம்ம ஃபேமிலிக்கு ஊர்மிளாவை பத்தி தெரியணும்னு நினைக்கிறேன்"
"ஓகே... அவளைப் பத்தி என்கிட்ட சொல்லு... எல்லாருக்கும் சொல்லிடலாம்"
"அவங்க அப்பா, அம்மாவுக்கு அவ ஒரே பொண்ணு. அவங்க அப்பா, அம்மா ரெண்டு பேருமே டாக்டர்ஸ். இப்போ அவ லண்டன்ல இருக்கா. அவ பேரன்ட்சோட, ஒரு கசினோட மேரேஜுக்கு போயிருக்கா. அவ ஒரு அல்ட்ரா மாடர்ன் கேர்ள்..."
"என்கிட்ட சொல்லிட்ட இல்ல...? நான் பார்த்துகிறேன். நீ கவலைப்படாதே"
"நீங்க அவங்ககிட்ட இதைப் பத்தி பேசும் போது, ராமுவும் அங்க இருக்கிற மாதிரி பாத்துக்கோங்க..."
"கண்டிப்பா" என்று சிரித்தாள் நர்மதா.
ஆனந்த குடில்
ஸ்ரீராம் கருணாகரனிடம் பணிபுரிய தன்னை தயார்படுத்திக் கொள்ள தொடங்கிவிட்டாள் மிதிலாஆனந்த். அவனைப் பற்றிய விஷயங்களை தேடித்தேடி படிக்க துவங்கினாள். இப்பொழுது தான், உலகமே இன்டர்நெட்டில் அடங்கிவிட்டதே... ஸ்ரீராம் கருணாகரன் என்று கூகுளின் வாயில் கொடுத்தவுடன், பாந்தமான புன்னகையுடன் திரையில் தோன்றினான் ஸ்ரீராம். அவன் புன்னகைத்த அந்த நாள், ஒரு திருநாளாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள் மிதிலா. ஒரு முன்னணி பொருளாதார மாத இதழுக்காக அவன் அளித்திருந்த பேட்டியை ஒரு எழுத்து விடாமல், ஆழ்ந்து படித்தாள் மிதிலா. அது ஸ்ரீராமை பற்றி 90% விளக்கி கூறியது.
தனது தொழிலில் மிகையான ஈடுபாடு கொண்டவன்... கடுமையான உழைப்பாளி... எல்லாமே சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன்... தவறுகளை மன்னிக்காதவன்... நேர்மையற்றவர்களை தூக்கி எறிய தயங்காதவன்...
இவை அனைத்தையும் விட, ஒரு விஷயம் அவளை வெகுவாக கவர்ந்திருந்தது... அது, அவன் தன் குடும்பத்தை மிகவும் நேசிக்கிறான். அதை அவன் வெளிப்படையான வார்த்தைகளில் கூறாவிட்டாலும், அதை புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கவில்லை மிதிலாவுக்கு.
நம்மால் நம்ப முடியவில்லை... அவனிடம் ஒரு *குறையை* கூட அவள் காணவில்லை. அது மிதிலாவின் நற்குணம் போல் தெரிகிறது. அவனுடைய கெட்ட பக்கத்தை தெரிந்து கொள்வதை விட, நல்ல பக்கத்தை தெரிந்து கொண்டிருக்கிறாள் அந்தப் பெண். நாம் ஒரு மனிதனின் தீய குணங்களை பார்க்க துவங்கினால், நம்முடைய கவனம், அவனது தீய குணங்களின் மீதே குத்திட்டு நிற்கும். ஆனால், அவனுடைய நற்குணங்களை நாம் பார்க்கத் தொடங்கி விட்டோமானால், அவனது தீயகுணங்கள் பெரிதாய் தெரிவதில்லை. இது தான் மிதிலா கடைப்பிடிக்கும் வாழ்க்கை தத்துவம்... ஸ்ரீராம் கடைப்பிடிக்கும் தத்துவத்திற்கு நேரெதிரான தத்துவம்... அவன் பார்ப்பதெல்லாம் குறைகளை மட்டும் தான்...!
பூவனம்
வரவேற்பறையில் அனைவரும் கூடியிருந்ததை பார்த்து முகத்தை சுருக்கினான் ஸ்ரீராம். சோபாவில் அமர்ந்து, அவர்கள் என்ன கூறப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வமானான்.
பாட்டி பேசத் துவங்கினார்.
"நீ காதலிக்கிறதுல எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல, லட்சு. ஆனா, ஸ்ரீராமுக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும், நீ காத்திருந்து தான் ஆகணும். இந்த முறை, அதில் எந்த மாற்றமும் கிடையாது"
தன் புருவத்தை உயர்த்தினான் ஸ்ரீராம்.
*இந்த லக்ஷ்மணனுக்கு தான் எவ்வளவு தைரியம்? அனைவருக்கும் முன்னால் குட்டை உடைத்துவிட்டானே... இதை செய்யச் சொல்லி, அந்தப் பெண் தான் இவனுக்கு தைரியம் அளித்திருப்பாள். தன்னை அலுவலகத்தில் எல்லோரும் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று தான், அவள் இதை செய்யச் சொல்லி இருப்பாள்...* என்று நினைத்தான் ஸ்ரீராம்.
"ஒன்னும் பிரச்சனை இல்ல பாட்டி. நாங்க ராமுவுக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் காத்திருப்போம். நீங்க ஒத்துக்கிட்டதே எனக்கு போதும்"
"உனக்கு பெண்ணை பிடிச்சிருக்கும் போது, நாங்க ஏன் ஒத்துக்காம போகப்போறோம்? உன்னுடைய சாய்ஸை பத்தி எங்களுக்கு தெரியாதா?" என்றாள் நர்மதா.
"ராமுவுக்கும் சீக்கிரம் ஒரு பெண்ணை பார்த்து நம்ம முடிவு செய்யணும். இந்தப் பையனை நான் நம்ப மாட்டேன்" என்றார் சித்தி புஷ்பா கிண்டலாக.
"வாய்ப்பே கிடையாது... நான் பரத், பிரியாவுடைய கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். ஏன்னா, அவங்க அம்மா, அப்பா, அமெரிக்காவுக்கு போயி, அவங்க தம்பி கூட செட்டிலாக இருந்தாங்க. அவங்களுடைய சூழ்நிலையை புரிஞ்சுகிட்டு, அவங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். இந்த தடவை, எந்த சால்ஜாப்புக்கும் நான் ஒத்துக்க மாட்டேன்" என்றார் பாட்டி திடமாக.
தன் கையைப் பிசைந்து கொண்டிருந்தான் ஸ்ரீராம். லக்ஷ்மணனின் திருமணத்தை முடிவு செய்வதற்கு முன், அவனிடம் யாரும் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. எப்படி அவர்கள் இந்த முடிவை தன்னை கலந்தாலோசிக்காமல் எடுக்க முடியும்? அந்தப் பெண் மிதிலா, அவன் எதிர்பார்த்ததை விட ஆபத்தானவளாக இருக்கிறாள்...
ஆனால், நர்மதாவின் அடுத்த வார்த்தைகள், அவனை குழப்பின.
"லட்சு, ராமுவுக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும், ஊர்மிளாவை கொஞ்சம் பொறுத்துக்க சொல்லு"
"ஊர்மிளாவா...? யாரது?" என்று முகத்தை சுளித்தான் ஸ்ரீராம்.
"வேற யாரு? லட்சுவோட கேர்ள் ஃப்ரெண்ட்" என்றார் புஷ்பா.
"லட்சுமணனோட கேர்ள் ஃபிரண்டா?" என்றான் புரியாமல்.
"ஆமாம் ராமு. நாங்க காலேஜில் படிக்கும் போதே, ஒருத்தரை ஒருத்தர் விரும்ப ஆரம்பிச்சோம்" என்றான் லட்சுமன்.
"அப்படின்னா, ஊர்மிளாவை மிதிலாவுக்கு தெரியுமா?" என்றார் பாட்டி.
"என்னைவிட, அவங்க ரெண்டு பேரும் தான் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். ஒரு நாள் விட்டு ஒரு நாள், மிதிலாவுக்கு லண்டன்ல இருந்து ஊர்மிளா ஃபோன் பண்ணிடுவா"
"அப்படின்னா, நீ சொன்னது சரி தான். உன்னைவிட அவங்க ரெண்டு பேரும் தான் கிளோஸ் ஃப்ரெண்ட்ஸ் போலிருக்கு" என்றாள் பிரியா.
"ஆமாங்க அண்ணி" என்றான் லக்ஷ்மன்.
"யாருக்கு தான் மிதிலாவை பிடிக்காது? அவளுடைய எளிமையா பழகுற விதம் எல்லாருக்கும் பிடிக்கும். அவ ரொம்ப நல்ல பொண்ணு" என்றார் பாட்டி.
அவர்களை மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான் ஸ்ரீராம். அப்படி என்றால், அவள் லஷ்மனை காதலிக்கவில்லையா? அப்படி என்றால், அவள் அவனிடம் விவாதித்தது, அவளுக்காக அல்ல, லக்ஷ்மணனுக்காக... அப்படி என்றால் அவள் உண்மையிலேயே தைரியசாலி தான்...!
அவள் லக்ஷ்மணனின் காதலியாக இருந்து விடுவாளோ என்று ஆரம்பத்தில் அவனுக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது. இனி அவனுக்கு அந்த தயக்கம் இல்லை. அவன், தன் இஷ்டத்திற்கு விளையாடலாம்... ஏனென்றால், அவள் பூவனத்தின் மருமகளாக போவதில்லை...! அவளைத் தன் முன் நிச்சயம் அவனால் மண்டியிட வைக்க முடியும். அவனது குடும்பத்தினர், எந்த விதத்திலும் அதனால் பாதிக்கப்பட மாட்டார்கள், என்று நினைத்தான் ஸ்ரீராம்.
இரண்டு எதிரெதிர் துருவங்கள், ஒன்றாய் பயணிக்க தயாராகி விட்டார்கள்... ஒன்றாய் இருக்கவும் போகிறார்கள்... அவர்கள், ஈர்ப்பு விசையால் இழுக்கப் படுவார்களா ? மிதிலாவை பற்றி நாம் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. ஏனென்றால், அவள் ஸ்ரீராமை போல், அவனை தலையில் தூக்கி சுமக்கவில்லை. ஆனால் ஸ்ரீராமன் தான், தன் தலையில் ஏற்றிவிட்ட அவளை, கீழே இறக்காமல் சதா அவளை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறான். இப்போதைக்கு, அவள், அவன் புத்தியை மட்டும் தான் ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறாள்... வரும் காலத்தில், அவளுடைய இடம், ஸ்ரீராமின் புத்தியிலிருந்து இதயத்திற்கு மாறவும் வாய்ப்பிருக்கிறது... யாருக்கு தெரியும்?
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top