48 பிரியாவின் திட்டம்

48 பிரியாவின் திட்டம்

தனது தோழியுடன் அளவளாவிக் கொண்டிருந்த புஷ்பாவை தேடிக் கொண்டு வந்தாள் நர்மதா.

"சித்தி..."

பதட்டத்துடன் நின்றிருந்த நர்மதாவை பார்த்தவுடன், ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்து கொண்டுவிட்டார் புஷ்பா. தனது தோழியிடமிருந்து விடை பெற்று வந்தார் அவர்.

"என்ன ஆச்சி, நர்மதா?"

"லயாவுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு"

அதைகேட்டு புஷ்பா அதிர்ச்சியனார். அவர்கள் பேசுவதை கேட்ட பாட்டியும் அங்கு வந்தார்.

"உனக்கு எப்படி தெரியும் நர்மதா?" என்றார்.

"அவங்க அம்மா எனக்கு ஃபோன் பண்ணியிருந்தாங்க. லயா நம்ம வீட்டுல இருக்கிறதா அவங்க நினைச்சுகிட்டு இருக்காங்க. அவளை நல்லபடியா பார்த்துக்க சொன்னாங்க. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல"

"நீ கவலைப்படாதே. நான் பரத்தையும், ப்ரியாவையும் அவளை பாத்துக்க அனுப்புறேன்"

"இல்ல சித்தி. அது நல்லா இருக்காது. அவங்க அம்மா நம்மளை பத்தி என்ன நினைப்பாங்க? நம்ம இங்க இருக்கோம்னு தானே அவங்க அவளை இங்க அனுப்பி வச்சாங்க? நம்ம அவளை நம்ம வீட்டை விட்டு துரத்திட்டோம்னு அவங்ககிட்ட சொல்ல முடியுமா? அவங்க வருத்தப்பட மாட்டாங்களா?"

"ஆனா, அவ ரொம்ப ஆபத்தானவ, நர்மதா" என்று எச்சரித்தார் புஷ்பா.

"இது, அதைப் பத்தி யோசிக்குற நேரமில்ல, புஷ்பா" என்றார் பாட்டி.

"பாட்டி சொல்றது சரி தான், சித்தி. நம்ம அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது தான் சரி"

"இரு நர்மதா... அவ ஸ்ரீராம்கிட்ட மட்டும் விளையாடல... மிதிலாகிட்டயும் விளையாடியிருக்கா... அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகப்போகுது. இன்னும் கொஞ்ச நாள்ல மிதிலா நம்ம வீட்டுக்கு வரப் போறா. அவளுக்கும் ராமுவுக்கும் நடுவுல பிரச்சனையை ஏற்படுத்தின பொண்ண, நம்ம வீட்ல பார்த்தா அவ என்ன நினைப்பா?"

"அப்படின்னா இந்த விஷயத்தில் மிதிலாவே முடிவெடுக்கட்டும். அவங்க பெஸ்ட் சொல்யூஷன் மேக்கர்னு ஊர்மிளாவோட அம்மா சொன்னாங்கல்ல...?"

"மிதிலா ஒத்துக்கிட்டாலும், ராமு ஒத்துக்க மாட்டான்... மிதிலா இருக்கப் போற இடத்துல, அந்த பொண்ணு இருக்கிறதை அவன் விரும்ப மாட்டான்"

"அது உண்மை தான். ஆனா, பிரியாவுடைய அம்மாவை நம்ம வருத்தப்பட வைக்க முடியாது. அவங்க, நம்ம மேல நம்பிக்கை வச்சிருக்காங்க" என்றாள் நர்மதா சோகமாக.

"நீ தேவையில்லாத பிரச்சனையை இழுத்து போட்டுக்குற. அவ்வளவு தான் நான் சொல்லுவேன். நம்ம மிதிலாவைப் பத்தி தான் கவலைபடணும். நம்ம அவளோட உணர்வுக்கு தான் மரியாதை கொடுக்கணும். அவளை நம்ம காயப்படுத்தக் கூடாது. அவ நம்ம வீட்டு மருமக. பிரியாவுடைய அம்மாவை விட அவ தான் நமக்கு முக்கியம்" என்றார் புஷ்பா.

"ஆனா... " என்று மேற்கொண்டு ஏதோ சொல்லப் போன நர்மதா ஒன்றும் கூறாமல் நிறுத்தினாள், மிதிலா நின்றிருந்ததைப் பார்த்து.

"நீங்க ஏன் என்னை காயப்படுத்த போறீங்க?" என்றாள் குழப்பத்துடன் மிதிலா.

"இது ரொம்ப தர்மசங்கடமான சூழ்நிலை, மிதிலா..." என்று தயங்கினாள் நர்மதா.

"எனக்கு புரியல"

"லயாவுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. அவ எங்க வீட்ல இல்லங்குற விஷயம் அவங்க அம்மாவுக்கும் தெரியாது. அவளை கவனிச்சுக்க சொல்லி கேக்குறாங்க..."

"அதுல என்ன தர்மசங்கடம் இருக்கு?அவங்க கேட்ட மாதிரியே கவனிக்க வேண்டியது தானே..."

"ஆனா அவளை எப்படி எங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு வர முடியும்?"

"அதுல என்ன பிரச்சனை?"

"அவ என்ன செஞ்சான்னு நீ மறந்துட்டியா?" என்றார் புஷ்பா.

"நான் மறக்கல... மறக்கவும் முடியாது... ஆனா, இப்போ அது விஷயமில்ல. அவங்களுக்கு இப்போ கவனிப்பு தேவை. அதைக் கொடுக்க வேண்டியது உங்க கடமை. அதை செய்யுங்க"

"அவளை பூவனத்தில் பார்க்கும் போது உங்களுக்கு சங்கடமா இருக்காதா?"

"நான் ஏன் சங்கடப்படணும்? சொல்லப் போனா, அவங்க தான் என்னை பார்த்து சங்கடப்படணும்." என்று புன்னகைத்து, மற்றவர்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்தாள் மிதிலா.

"ரொம்ப தேங்க்ஸ் மிதிலா. எங்களுடைய ரொம்ப பெரிய பிரச்சனையை நீங்க தீர்த்து வச்சுட்டீங்க" என்று அவளை அணைத்துக் கொண்டாள் நர்மதா.

அவள் அணைப்பிலிருந்து வெளிவந்த நர்மதா, கோபக்கனல் தெறிக்க நின்றிருந்த ஸ்ரீராமை பார்த்து, நடுக்கத்துடன்

"ராமு..." என்றாள்.

"போதும் கா... அந்தப் பொண்ணு நம்ம வீட்டுல இருக்க கூடாதுன்னு நான் ஏற்கனவே சொன்னேன்ல...?"

"ஆனா அவளுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு..."

"அது உண்மையா இருக்காது. நான் அவளை நம்ப மாட்டேன்"

"நானும் நம்பல" என்றார் புஷ்பா.

"அவ சும்மா இருக்கமாட்டா கா. போன தடவை நான் அவளை எதுவும் செய்யாம சும்மா விட்டேன். இந்த தடவை அவ நம்ம வீட்டுக்கு வந்தா, பிரச்சனை வேற மாதிரி ஆகும்..."

"இது நம்ம குடும்ப கௌரவம் சம்பந்தப்பட்ட விஷயம் ராமு..."

தனது கையை காட்டி, அவள் பேசுவதை தடுத்து நிறுத்தினான்.

"மிதிலா கூட தனக்கு அதுல எந்த பிரச்சினையும் இல்லேன்னு சொல்லிட்டாங்க " என்றாள் அவசரமாக.

மிதிலாவைப் பார்த்து ஸ்ரீராம் முறைக்க, அவள் தலையை குனிந்து கொண்டாள்.

"உனக்கு அவளைப் பத்தி என்ன தெரியும்னு அதுல உனக்கு எந்த பிரச்சனையும் இல்லன்னு சொன்ன? நீ உன்னுடைய தலையை சிங்கத்தோட வாயில நுழைக்கிற, மிதிலா" என்று முதல் முறையாக அவளை சத்தம் போட்டான் ஸ்ரீராம்.

"என்னை சிங்கம் ஒண்ணும் சாப்பிட்டுடாது" என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் மிதிலா, ஸ்ரீராமை திகைப்படைய செய்து. அவனைத் தானே எல்லோரும் சிங்கம் என்று அழைப்பது வழக்கம்...! அவள் கூறியதின் உள்ளர்த்தத்தை புரிந்து கொண்டு அவனது இதழ்கள் புன்னகையில் விரிந்தன. அவன் கூறிய வார்த்தையை வைத்து, அவனை சிங்கம் என்று கூறி, அவனுக்கே திருப்பிவிட்டு சென்று விட்டாள் அவள்.

"சிங்கம் அவர்களே, பெண் சிங்கமே அனுமதி தந்தாச்சி. இப்ப என்ன சொல்றீங்க?" என்றாள் நர்மதா.

"நீங்க என்ன வேணா நெனச்சுக்கோங்க கா. எனக்கு இது சுத்தமா பிடிக்கல" என்று கூறிவிட்டு அங்கிருந்து நடந்தான் ஸ்ரீராம்.

என்ன செய்வது என்று புரியாமல் சலித்துக்கொண்டாள் நர்மதா. பிரியாவை தன்னிடம் வருமாறு சைகை செய்தார் புஷ்பா. அவளிடம் விஷயத்தைக் கூற, பேயறைந்தது போலானாள் பிரியா. இது நடக்கக் கூடாது. லயாவின் அம்மாவுக்கு அவள் பூவனத்தில் இல்லை என்ற விஷயம் தெரியும். லயாவின் அம்மாவா? ஆம் அவர் லயாவுக்கு தான் அம்மா. பிரியாவும், லயாவும் மாற்றாந்தாய் பிள்ளைகள். அவர் ப்ரியாவை எப்பொழுதும் லயாவிற்கு சமமாக நடத்தியது இல்லை. லயாவின் அம்மாவுக்கு, லயா எல்லாவற்றிலும் பிரியாவை விட ஒரு படி மேலே இருக்க வேண்டும். ஸ்ரீராமை காதலிக்கிறேன் என்று லயா கூறிய போது, அவர் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தார். லயா ஸ்ரீராமை திருமணம் செய்து கொண்டால், அவள் ப்ரியாவை விட எல்லாவற்றிலும் மேலோங்கி இருப்பாள் அல்லவா? அதனால் அவளை சந்தோஷமாய் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார். இப்பொழுது, தாயும், மகளும் சேர்ந்து விளையாடுகிறார்கள். அது ப்ரியாவை ரொம்பவே கவலை கொள்ளச் செய்தது. ஆரம்பத்தில், லயா, ஸ்ரீராமை காதலிக்கும் விஷயம் தெரிந்த பொழுது, பிரியா உண்மையிலேயே சந்தோஷம் தான் கொண்டாள். ஆனால், ஸ்ரீராம் மிதிலாவை காதலிக்க துவங்கிவிட்ட பிறகு, அவளுக்கு லயாவின் செயல் சுத்தமாய் பிடிக்கவில்லை. இப்பொழுது அவள் லயாவினால் நெருப்பின் மீது நின்று கொண்டிருக்கிறாள். அவளும், அவளது அம்மாவும் சேர்ந்து என்ன செய்யப் போகிறார்களோ தெரியவில்லை.

வரவேற்பறையில் மிதிலாவை காணாததால் அவளைத் தேடி கொண்டு வந்தான் ஸ்ரீராம்.

"சுப்பு..."

"சொல்லுங்க அண்ணா"

"மிதிலாவை பாத்தியா?"

"அவங்க அப்பாவுக்கு தண்ணி கொண்டுவர கிச்சனுக்கு போனாங்க"

"ஏன்... இந்த வீட்ல தண்ணி கொடுக்க கூட வேலைக்காரங்க இல்லாம போயிட்டாங்களா?" என்றான் கோபமாக.

"நான் கொண்டு வரேன்னு சொன்னேன். ஆனா, அவங்க கேட்கல"

ஒன்றும் கூறாமல் நேராக சமையலறைக்கு சென்றான் ஸ்ரீராம். அங்கு, மிதிலா ஜக்கில் தண்ணீர் நிரப்பிக் கொண்டிருந்தாள். தண்ணீரை எடுத்துக்கொண்டு திரும்பியவள், ஸ்ரீராம் தன் முன் நிற்பதை பார்த்து நின்றாள்.

"நீ என்ன செஞ்சு வெச்சிருக்கேன்னு உனக்கு தெரியுமா?" என்றான் தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு.

அவனுக்கு பதில் கூறாமல் அமைதியாக நின்றாள் மிதிலா. ஏனென்றால், அவள் என்ன செய்து வைத்திருக்கிறாள் என்று அவளுக்கு தெரியும்.

"மிதிலா, உனக்கு அவளைப் பத்தி தெரியாது. எல்லா பொண்ணுங்களும் உன்னை மாதிரி கிடையாது. அவ கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம எந்த அளவுக்கும் இறங்கி போவா"

அவனுக்கு தன்னைப் பற்றி இருக்கும் எண்ணத்தை எண்ணி வியந்து போனாள் மிதிலா.

"அவளை நான் எத்தனை தடவை இன்சல்ட் பண்ணி இருக்கேன்னு உனக்கு தெரியுமா? அவளை சமாளிக்கிறது..."

அவனது பேச்சைக் துண்டித்து,

"உங்களோட கன்னித் தன்மையை நிரூபிக்கிறதை விட ஒன்னும் கஷ்டமில்ல"

ஸ்ரீராம் திகைத்துப் போனான்.

"அவங்க பூவனத்துக்கு வந்து, அவங்க அக்காவோட இருக்கப் போறாங்க..."

"அது வெறும் எக்ஸ்க்யூஸ்"

"எதுக்காக நீங்க அவங்களைப் பத்தி இவ்வளவு கவலைப்படுறீங்கன்னு எனக்கு புரியல"

"ஏன்னா, அவ பொம்பளை உருவத்தில் இருக்கிற பேய்"

"நீங்க தான் அந்த விஷயத்துல ரொம்ப தெளிவா இருக்கீங்களே... ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கோங்க. நர்மதா அக்கா என்னை மதிக்கிறாங்க. அதனால் என்னுடைய ஒப்பினியனை கேட்டாங்க. நானும் அவங்களை ரொம்ப மதிக்கிறேன். இந்த குடும்பத்தோட கௌரவம்னு வரும் போது, அதுல நானும் எந்த காம்ப்ரமைஸும் பண்ணிக்க முடியாது. என்னை சங்கடத்துக்கு ஆளாக்காதிங்க"

அவள் சமையல் அறையை விட்டு வெளியேறினாள். அவளை பின் தொடர்ந்து வந்தான் ஸ்ரீராம். லயாவை பூவனத்திற்கு அழைத்து வரும் அவளுடைய முடிவு அவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும், அவள், அவன் மீது கொண்டிருந்த நம்பிக்கை அவனுக்கு ரொம்பவே பிடித்திருந்தது. இல்லாவிட்டால், உங்களது கன்னித் தன்மையை நிரூபிப்பதை விட ஒன்றும் கஷ்டம் இல்லை என்று கூறி இருப்பாளா...? அவனது அந்தச் செயல், அவள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது போல தெரிகிறது.

அவர்கள் இருவருக்கும் தெரியாது, அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை வேறு ஒருவர் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த ஒருத்தி பிரியா தான். அவர்கள் பேசியதைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தாள் ப்ரியா. ஸ்ரீராம், லயாவை எந்த அளவிற்கு வெறுக்கிறான் என்பது அவள் அறிந்தது தான். ஏன், லயாவும் கூட அதை அறிந்து தான் இருந்தாள். இருந்தும் கூட, ஸ்ரீராமின் கவனத்தை தன் பக்கம் திருப்ப முடியும் என்று அவள் நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்...! லயா இவ்வளவு அறிவு கெட்டவளாய் இருப்பாள் என்று அவள் நினைத்திருக்கவில்லை. ஸ்ரீராமிடம் பிரச்சனை செய்வது என்பது, கரும்பாறையில் மோதி கொள்வதற்கு சமம். அவளுக்கு என்ன சொல்லி புரியவைப்பது? அறிவுரை கூறினால் அவள் ஏற்றுக் கொள்வாளா? நிச்சயம் மாட்டாள். அவள் தான் லயாவிடம் கவனமாய் இருக்கவேண்டும். தனது மாமியார் வீட்டாரை போல நல்ல மக்களை பார்ப்பது அரிது. அவர்களது சந்தோஷம் கெட்டு விடக்கூடாது. பார்ப்போம் லயா என்ன செய்கிறாள் என்று. தன் மனதை திடப்படுத்திக் கொண்டு அங்கிருந்து சென்றாள் பிரியா.

மறுநாள்

லயாவை பூவனம் அழைத்துவர, பரத்துடனும், பிரியாவுடனும் மருத்துவமனைக்குச் சென்றாள் நர்மதா. கண்களை மூடி கட்டிலில் படுத்திருந்தாள் லயா. அவளது கணுக்காலிலும், கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது.

"இது எப்படி நடந்தது?" என்றாள் நர்மதா.

"என்னோட ஃப்ரெண்டோட ஸ்கூட்டியை ஒட்டும் போது கீழே விழுந்து இந்த ஆக்சிடென்ட் ஆயிடுச்சு"

"சரி வாங்க எங்க வீட்டுக்கு போகலாம்"

"பரவாயில்லை கா. நான் அங்க வர்றது ஸ்ரீராமுக்கு பிடிக்காது. நான் என் ஃபிரண்ட் கூடவே இருக்கேன்"

"இப்போ அதைப் பத்தியெல்லாம் யோசிக்காதீங்க. நாங்க இருக்கும் போது நீங்க உங்க ஃபிரண்டு கூட இருக்க வேண்டியதில்ல. எங்க கூட வாங்க"

பதில் கூறாமல் அமைதி காத்தாள் லயா. முடியாது என்று கூறி விஷயத்தை சிக்கலாக அவள் விரும்பவில்லை. பரத்தின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அமைதியாய் நின்றிருந்த பிரியாவை பார்த்து உள்ளூர நகைத்துக் கொண்டாள் லயா. பிரியா என்ன நினைக்கிறாள் என்பதை பற்றி யார் கவலைப்பட்டது?

மறுபடியும் பூவனம் செல்ல போவதை நினைத்து உள்ளூர துள்ளி குதித்தாள் லயா... ஸ்ரீராமை பார்க்கவும்... ஸ்ரீராமுடன் இருக்கவும்...

ஆனால் அவள் எதிர்பாராத வண்ணம், அவளது முறிந்த காலை காரணம் காட்டி, அவளை தரைதளத்தில் தங்க வைத்தாள் பிரியா. அது மட்டுமல்லாது, இந்த முறை நேரடியாக புஷ்பாவின் உதவியை நாடுவது என்று முடிவு செய்தாள் பிரியா. அவளுக்கு தெரியும், லயா, தான் கூறுவதை துளியும் கேட்க மாட்டாள் என்று. அதனால் புஷ்பாவிடம் சென்றாள் பிரியா.

"அத்தை..."

"சொல்லு பிரியா"

"எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா?"

"என்ன உதவி?" என்று புருவம் உயர்த்தினார் புஷ்பா.

"என்னோட பேச்சை லயா கேட்கமாட்டா"

"அது எனக்கு தெரியும்"

"அதனால அவளுக்கு நீங்க சொல்லுங்க..."

"நானா?"

"ஆமாம் அத்தை"

"நான் என்ன சொல்லணும்னு நினைக்குற?"

"அவளை ரூமை விட்டு வெளியே விடாதீங்க. ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க. அது போதும்"

அவள் செய்ய நினைப்பது என்ன என்பதை புரிந்து கொண்டார் புஷ்பா. உண்மையிலேயே பிரியா நல்ல பெண். அவளது திமிர் பிடித்த தங்கையைப் போல் அல்ல.

"அதை நீ என்கிட்ட விடு. அவ ரூமை விட்டு வெளியே வர மாட்டா"

"ரொம்ப தேங்க்ஸ் அத்தை" என்று கூறிவிட்டு சந்தோஷமாய் அங்கிருந்து சென்றாள் பிரியா.

தன்னிடம் கொடுக்கப்பட்ட பொறுப்பை நினைத்து உள்ளூர புன்னகை புரிந்தார் புஷ்பா. நமக்குத் தான் தெரியுமே, புஷ்பா சும்மாவே ஆடுவார் என்று... இப்போது, ப்ரியா அவர் காலில் சலங்கையை வேறு கட்டிவிட்டு விட்டாள்... அவர் ஆட்டத்தை பார்ப்போம்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top