44 இன்ப அதிர்ச்சி...

44 இன்ப அதிர்ச்சி...

தன் வீட்டு வாசலில் நின்றிருந்த தனது பாஸை பார்த்த மிதிலா, செய்வதறியாது திகைத்தாள். அவன் உண்மையிலேயே வந்திருக்கிறான் என்பதை அவளால் நம்ப முடியவில்லை. வீட்டின் உள்ளே நுழையாமல் இங்கும் அங்கும் யாரையோ தேடினான் ஸ்ரீராம். தன்னை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த, அந்த நபரின் மீது அவனது பார்வை விழுந்தவுடன், அவனது விழிகள் நகர மறுத்தன. மிதிலாவை சுற்றி இருந்த மற்ற அனைத்தும் மங்கி போனது. அந்த விசேஷ வீட்டின் இறைச்சல் கூட அவன் காதுகளுக்கு எட்டவில்லை. குகன் கூறிய வார்த்தைகள் எந்த அளவுக்கு உண்மை என்று நிரூபித்து, மிதிலாவை பார்த்து கல்லாய் சமைந்து நின்றான் ஸ்ரீராம்.

தனது உறுதியைக் குலைத்த  ஸ்ரீராமின் குத்தீட்டி பார்வையை எதிர்கொள்ள முடியாமல் திணறினாள் மிதிலா. அவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அவன் இங்கு எப்படி வந்தான்? அவனுக்கு இந்த விசேஷம் பற்றி எப்படி தெரிந்தது?

"நான் சொல்லல? பாருங்க, தன்னோட பார்வையாலேயே அவன் எப்படி உங்களை முழுங்கிகிட்டு இருக்கான்னு..." என்று சிரித்தான் குகன்.

யாரோ தன் தோளை தொட, வானத்திலிருந்து பூமிக்கு வந்தான் ஸ்ரீராம். அவனை நம்பமுடியாமல் பார்த்தார் ஆனந்தன்.

"ஸ்ரீராம்... என்ன ஒரு ப்ளஸன்ட் சர்ப்ரைஸ்...! நீங்க வருவீங்கன்னு எனக்கு தெரியாது. உங்களை கூப்பிட்டிருக்கிறதா மிதிலா சொல்லவே இல்லையே..."

"நான் அத்தைக்காக வந்தேன்..."

அது அவரை மேலும் ஆச்சரியப்படுத்தியது. ஏனென்றால், சாந்தாவும் இதைப் பற்றி அவரிடம் ஒன்றும் கூறியிருக்கவில்லை.

"உங்களை சாந்தாவா கூப்பிட்டா?"

"அவங்க எங்க ஃபேமிலி லேடிஸை கூப்பிடணும்னு ஃபோன் பண்ணாங்க. அவங்க யாரும் வீட்ல இல்ல. அதனால, அவங்க சார்பா நான் வந்தேன்"

"ரொம்ப, ரொம்ப சந்தோஷம்"

ஆனந்தன் சாந்தாவை தேடினார். அவரோ வந்திருந்த விருந்தாளியிடம் பேசிக்கொண்டிருந்தார்.

"சாந்தா..." என்று அவர் அழைக்க, அவர்களை நோக்கி திரும்பினார் சாந்தா. அங்கு தங்களது வருங்கால மாப்பிள்ளையை பார்த்தவுடன், இன்ப அதிர்ச்சியடைந்து பரபரவென ஓடிவந்தார்.

"மாப்பிள்ளை... நீங்களா...?"

"அவர் உனக்காகத் தான் இங்க வந்திருக்கார்" என்றார் ஆனந்தன் புன்னகையுடன்.

"நெஜமாவா? என்னால நம்பவே முடியலையே..." என்று குதூகலித்தார் சாந்தா.

"வீட்ல எல்லாரும் மதுரைக்குப் போயிருக்காங்க... அதனால..." என்று ஏதோ மேலும் கூற போனவன், அங்கு பரத்துடன் இருந்த பிரியாவை பார்த்து திகைத்து நின்றான். அவன் பிரியாவை அங்கு எதிர்பார்க்கவில்லை. பிரியா எப்படி இங்கு வந்தாள்? ஒருவேளை அவளையும் கூட சாந்தா தான் அழைத்திருப்பாரோ...?

பிரியாவை பார்த்த சாந்தா,

"அவங்க எல்லாரும் மிதிலாவுடைய கெஸ்ட்... ஆனா, நீங்க என்னோட கெஸ்ட்" என்றார் அலட்டலாக.

ஸ்ரீராம் வாயடைத்துப் போனான். பிரியாவை இங்கு அழைத்தது மிதிலாவா? லயா செய்து வைத்த வேலைக்கு, மிதிலா, பிரியாவுடன் பேசவே மாட்டாள் என்று எண்ணியிருந்தான் ஸ்ரீராம். இந்தப் பெண் எப்பொழுதுமே கணிப்புகளுக்கு அப்பாற்பட்டவள்.

ஸ்ரீராமை அமர வைத்துவிட்டு அவனுக்கு சர்க்கரையில்லாத காபி கொண்டுவர சென்றார் சாந்தா. அப்பொழுது ஆனந்தனின் நண்பர் குடும்பம் அங்கு வந்தது.

"நான் இப்ப வந்துடறேன்" என்றார் ஆனந்தன்.

"ஒன்னும் பிரச்சனை இல்ல. நீங்க வேலையை பாருங்க"

வந்த விருந்தாளிகளை உபசரிக்க சென்றார் ஆனந்தன்.

புடவை கட்டி ஜொலித்துக் கொண்டிருந்த மிதிலாவின் பக்கம் தன் பார்வையைத் திருப்பினான் ஸ்ரீராம். பாரம்பரிய உடையில் கூட, தன்னைப் பொறிகலங்க வைக்கத் தான் செய்கிறாள் இந்தப் பெண் என்று நினைத்துக் கொண்டான்.

"மிதிலா, போய் உங்க வருங்கால வீட்டுக்காரரை கவனிங்க" என்றான் குகன்.

தன் புடவை முந்தானையில் முடிச்சிட்டுக் கொண்டு அமைதியாய் நின்றாள் மிதிலா.

"சரி உங்க வருங்கால வீட்டுக்காரரை கவனிக்கலனாலும், உங்களுடைய பாஸை கிரீட் பண்ணலாம் இல்ல?"

"ஏன்? நான் அவரை கிரீட் பண்ணலைன்னா என்னை வேலையை விட்டு தூக்கிடுவாரா?" என்றாள் கிண்டலாக.

"உங்களை வேலையை விட்டு தூக்குறதா? உங்களுடைய டேபிளை அவனுடைய ரூமுக்கு மாத்த சொல்லிடுவான். ஜாக்கிரதை" என்று சிரித்தான்.

"கொஞ்ச நேரம் சும்மா இருக்கீங்களா...?"

"என் கூட வாங்க" என்று ஸ்ரீராமை நோக்கி நடந்தான் குகன். அவனை பின் தொடர்ந்தாள் மிதிலா.

ஸ்ரீராமுக்கு பக்கத்தில் அமர்ந்து, அவனை பார்த்து கிண்டலாய் சிரித்தான் குகன். அவனை நோக்கி தன் புருவத்தை உயர்த்திய ஸ்ரீராம்,

"நீ இங்க என்ன செய்ற?" என்றான்.

"நீ ரொம்ப ஸ்மார்ட், எஸ்ஆர்கே. நான் கேட்க நெனச்ச அதே கேள்வியை, நான் கேக்குறதுக்கு முன்னாடி நீ கேட்ட பாரு..."

"நான் என்னோட மாமியாருக்காக இங்க வந்தேன்" என்றான் மிதிலாவை பார்த்தபடி.

"ஓஹோ... மாமியார்கிட்டயிருந்து இன்விடேஷனா...?"

"ஆமாம். உன்னை இன்வைட் பண்ணவங்க, என்னை இன்வைட் பண்ணல... ஆனா, அவங்க அம்மா இன்வைட் பண்ணாங்க..."

அப்பொழுது, குலாப்ஜாமுன் கிண்ணத்துடன் அங்கு வந்த லக்ஷ்மன், ஸ்ரீராமை பார்த்தவுடன் விக்கித்து நின்றான்.

"ராமு... நீயா?" என்று கேட்டபடி மிதிலாவை அதிர்ச்சியுடன் பார்த்தான் லட்சுமணன்.

"நீ ராமுவையும் இன்வைட் பண்ணி இருக்கேன்னு என்கிட்ட சொல்லவே இல்லையே..." என்றான் மிதிலாவிடம்

"அவர் என்னோட கெஸ்ட்" என்றார், சர்க்கரை இல்லாத காபியுடன் அங்கு வந்த சாந்தா.

"ஒ..."

"ஆமாம் லக்கி. எஸ்ஆர்கே வுக்கு ரொம்ப ஸ்பெஷல் இன்விடேஷன்... அவனோட மாமியார்கிட்ட இருந்து..." என்று வெளிப்படையாக கிண்டல் செய்தான் குகன்.

"அவர் எங்களுக்கு ஸ்பெஷல் தான்" என்றார் சாந்தா.

அங்கு நிகழ்ந்த அனைத்திலும் சங்கடத்திற்கு உள்ளானது என்னவோ மிதிலா தான்.

அப்பொழுது அங்கு வந்த தனது தோழி அருணாவை பார்த்து, மிதிலாவின் முகம் பிரகாசம் அடைந்தது. ஓடிச்சென்று அவளை ஆரத் தழுவிக்கொண்டாள்.

"எப்படி இருக்க அருணா?"

"நான் ரொம்ப நல்லாயிருக்கேன். காலையிலயிருந்து ஆன்ட்டிக்கு ஹெல்ப் பண்ணிக்கிட்டு இருந்தேன். நீ தான் இன்னிக்கு லேட்" என்று சிரித்தாள் அருணா.

"அம்மா சொன்னாங்க. நான் ஆறு மணிக்குத் தான் ஆஃபீஸ்லயிருந்து வந்தேன்"

"ஹாய் அருணா," என்று அவளிடம் ஒரு குலாப்ஜாமுன் கிண்ணத்தை நீட்டினான் லட்சுமன்.

"ஹாய் லக்கி, எப்படி இருக்க?"

"நல்லா இருக்கேன்"

"எப்போ கல்யாண சாப்பாடு போட போற?"

"ரொம்ப சீக்கிரமே... நானும் மிதிலாவும் ஒரே நாள்ல உனக்கு கல்யாண சாப்பாடு போடுவோம்னு நினைக்கிறேன்."

குழப்பத்துடன் மிதிலாவை பார்த்தாள் அருணா. அவள் குழப்பத்தை புரிந்து கொண்ட லக்ஷ்மன்,

"ஆக்ச்சுவலி, இப்ப தான் நாங்க கல்யாணம் பேச ஆரம்பிச்சிருக்கோம்"

"நிஜமாவா மிதிலா?" என்றாள் அருணா அதிர்ச்சியாக.

"ஆமாம். என்னோட அண்ணன் தான் அவளை கல்யாணம் பண்ணிக்க போறான்"

"உன்னோட அண்ணனா?" என்றாள் மேலும் அதிர்ச்சியாக.

"உனக்கு மாப்பிள்ளையை பார்க்கணுமா?" என்றான் லட்சுமணன்.

"அவர் இங்க வந்திருக்காரா?"

"வா..."

லட்சுமணனை பின் தொடர்ந்தாள் அருணா.

"ராமு, இது அருணா. மிதிலாவுடைய பெஸ்ட் ஃபிரெண்ட்"

"ஹாய்..."

"நல்லா இருக்கீங்களா அண்ணா?"

நன்றாக இருக்கிறேன் என்று புன்னகையுடன் தலையசைத்தான் ஸ்ரீராம். லட்சுமணனின் பக்கம் திரும்பிய அருணா,

"உங்க அண்ணன் உன்னை மாதிரியே இருப்பார்னு நெனச்சேன்...  ஆனா இவரு ரொம்ப சூப்பரா இருக்காரு..." என்று லக்ஷ்மணனை வம்புக்கு இழுத்தாள்.

ஸ்ரீராமின் பார்வை, அனிச்சையாய் மிதிலாவின் பக்கம் சென்றது. அவளும் சட்டென்று ஸ்ரீராமை பார்த்துவிட்டு தன் பார்வையை தாழ்த்திக் கொண்டாள். அது ஸ்ரீராமின் முகத்தில் புன்னகையை கொண்டு வந்தது.

"அப்படியா? என்னை விடவா எஸ்ஆர்கே சூப்பரா இருக்கான்?" என்ற குகனை, *யார் இவன்?* என்பது போல் மேலும் கீழும் பார்த்தாள் அருணா.

"இவர் என்னுடைய ஃபிரண்ட் குகன்" என்று அவனை அருணாவுக்கு அறிமுகம் செய்து வைத்தாள் மிதிலா.

"அப்படியா? இங்க பாருங்க குகன் சார், இப்படி ஒரு கேள்வியை கேக்குறதுக்கு முன்னாடி, கண்ணாடியை பாருங்க" என்றாள் அருணா, அங்கிருந்த அனைவரையும் கொல்லென்று சிரிக்க வைத்தது.

"பார்க்க சுமாரா இருக்கற நீங்க, அவர் கூட உங்களை கம்பேர் பண்ணாதீங்க. அவரு எங்க மிதிலாவுடைய சாய்ஸ். எல்லாத்தையும் விட பெஸ்டா தான் இருக்கும். நான் சொல்றது சரி தானே, மிதிலா?"

தன்னை நோக்கி வீசப்பட்ட நேரடி கேள்வி மிதிலாவை ஆட்டி பார்த்தது. அருணாவைப் பார்த்து மென்மையாய் புன்னகைத்தாள் மிதிலா. அனைவரும் சேர்ந்து, மிதிலாவை பாடாய்ப்படுத்தி வைத்தது ஸ்ரீராமுக்கு மிகவும் பிடித்திருந்தது.

"மிதிலா, இவங்க எல்லாரையும் சாப்பிட கூட்டிக்கிட்டு போ. நல்ல, நல்ல டிஷ் எல்லாம் காலியாயிட போகுது" என்றாள் அருணா.

தான் கொண்டு வந்திருந்த புடவையை பிரியாவிடம் கொடுத்தான் ஸ்ரீராம்.

"இதை மிதிலாவுடைய அக்காகிட்ட கொடுத்துடுங்க. நீயும் அவங்ககூட போ பரத்" என்றான் ஸ்ரீராம்.

"நீங்களும் எங்க கூட வாங்க அண்ணா" என்றான் பரத்.

"பரவாயில்ல, நீங்க போங்க"

"அட, இது உன்னோட குடும்ப பங்க்ஷன் எஸ்ஆர்கே..." என்று அவனையும் இழுத்துக் கொண்டு, பிருந்தாவை நோக்கி சென்றான் குகன். அவர்களை புகைப்படம் எடுக்க, நேராய் நிற்கச்சொல்லி புகைப்படக்காரர் கேட்டுக்கொண்ட போது,

"ஒரு நிமிஷம்" என்று மிதிலாவை நோக்கி ஓடிய குகன், அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வந்து ஸ்ரீராமின் பக்கத்தில் நிறுத்தினான்.

"இப்ப எடுங்க"  என்றான்.

அந்த சுவாரசியமான தருணம் புகைப்படமாய் மாறியது.

அப்போது அங்கு வந்த சாந்தா,

"மிதிலா, உன்னுடைய ரூம்ல நான் சில டேபிள்ஸ் அரேஞ்ச் பண்ணி இருக்கேன். இவங்க எல்லாரையும் கூட்டிட்டு போய் சாப்பிட வை"

"என்னுடைய ரூம்லயா?" என்று மலைத்தாள் மிதிலா.

"ஆமாம், கூட்டத்தில சாப்பிட மாப்பிள்ளை சங்கடபடலாம்..."

"அதனால ஒன்னும் பிரச்சனை இல்ல" என்றான் ஸ்ரீராம்.

"இல்ல மாப்பிள்ளை, எல்லாத்தையும் ஏற்கனவே அரேஞ்ச் பண்ணியாச்சு. அவங்களை கூட்டிக்கிட்டு போ, மிதிலா"

மிதிலாவை தன் பக்கம் இழுத்தவர்.

"அவருக்கு என்ன வேணுமுன்னு கேட்டு, கூடவே இருந்து பரிமாறு" என்றார்.

மிதிலா அவர்களை அங்கிருந்து அழைத்துச் செல்ல எத்தனித்த போது, பிருந்தாவின் கணவன் சதீஷுடன் அங்கு வந்தார் ஆனந்தன்.

"ஸ்ரீராம், இவர் தான் என்னுடைய மூத்த மாப்பிள்ளை" என்று சதீஷை ஸ்ரீராமுக்கு அறிமுகம் செய்து வைத்தார் ஆனந்தன்.

சதீஷை பார்த்த ஸ்ரீராமுக்கு சங்கடமாய் போனது. உதட்டை மடித்து மிதிலாவை பார்த்தான் அவன்.

"ஏற்கனவே அவங்களை ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியும் பா" என்றாள் மிதிலா

"நிஜமாவா? எப்படி?"

"இவர், மாமாவுடைய கம்பெனியின் மேஜர் ஷேர் ஹோல்டர்" என்று தன் தொண்டையில் அடைத்த ஏதோ ஒன்றை விழுங்கினாள் மிதிலா. அது நிச்சயம் ஸ்ரீராமை முள்ளால் தைத்தது.

ஆனந்தன் குழப்பம் அடைந்தார்.

"ஸ்ரீராம் நடத்துறது ஃபேஷன் கம்பெனி... சதீஷ் வேலை பாக்குறது சாஃப்ட்வேர் கம்பெனி... ரெண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே..."

"ரெண்டுக்கும் நிறைய சம்மந்தம் இருக்கு பா. சாதாரண ஜனங்களுக்கு அது புரியாது" ஸ்ரீராமை பார்த்தபடி கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள் மிதிலா.

"சதீஷ், ஸ்ரீராமை மிதிலா ரூமுக்கு கூட்டிகிட்டு போங்க"

சரி என்று தலையசைத்தான் சதீஷ்.

"மிதிலா கொஞ்சம் அப்ஸட்டா இருக்கா..." என்றான் சதிஷ்.

"எனக்கு தெரியும். என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி அவங்களை கட்டாயப்படுத்தினதனால என் மேல அவங்க கோவமா இருக்காங்க."

"அவ உங்களை சீக்கிரமே புரிஞ்சிக்குவா"

பெருமூச்சுவிட்டான் ஸ்ரீராம். அந்த ஒரே நம்பிக்கை தான் அவனை முன்னேற செய்து கொண்டிருக்கிறது. அவள் என்ன நினைத்துக் கொண்டாலும் சரி, அவன் அவளை காதலிக்கிறான் என்பதும், அவனுக்கு அவள் வேண்டும் என்பதும் தான் உண்மை. அதை நிச்சயம் அவன் அவளுக்கு புரிய வைப்பான். அது தான் அவன் முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால். ஒருவரின் மனதை மாற்றுவது என்பது அவ்வளவு சாதாரண காரியம் அல்ல. அது ஸ்ரீராமுக்கும் தெரியும்...

இதற்கிடையில்...

பிரியாவுக்கு லயாவிடமிருந்து கைபேசி அழைப்பு வந்ததால்,  அதை ஏற்க பதற்றத்துடன் வெளியே வந்தாள் பிரியா.

"சொல்லு..." என்றாள்.

"உன்னோட ஓரகத்தி கூட ரொம்ப சந்தோஷமா இருக்க போலயிருக்கு...?"

"உனக்கு எப்படி தெரியும்? எதுக்காக நீ எனக்கு இப்போ கால் பண்ண?"

"எனக்கு எல்லாம் தெரியும். உன்னை ஒரு விஷயம் கேட்கத் தான் உனக்கு கால் பண்ணேன்"

"என்ன? "

"உனக்கு என் மேல கொஞ்சம் கூட பாசமே கிடையாதா? எனக்கு நடந்த விஷயத்தை நெனச்சி நீ கொஞ்சம் கூட வருத்தப்படலயா? உன்னோட மாமியார் வீட்ல என்னை வெளியே அனுப்பிட்டாங்க. ஆனா நீ, அதுக்கு காரணமானவள் கூட சந்தோஷமா இருக்க. எவ்வளவு பெரிய மனசு உனக்கு...! என்னை விட அவள் உனக்கு முக்கியமா போயிட்டாளா? என்னுடைய ஆசையை நிறைவேத்தி வைக்கணும்னு உனக்கு கொஞ்சம் கூட எண்ணமே இல்லையா? நான் செத்தா பரவாயில்லையா?"

"வாயை மூடு. பைத்தியக்காரி மாதிரி உளறாதே"

"ஸ்ரீராமை அடைய நீ எனக்கு உதவ மாட்டியா? நான் அவரை ரொம்ப காதலிக்கிறேன்னு நீ ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கிற?"

"ஏன் இப்படி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டிருக்க? அவருக்கு உன் மேல துளியும் விருப்பம் இல்ல. அது உனக்கும் நல்லா தெரியும்"

"ஏன்? ஏன் என் மேல அவருக்கு விருப்பமில்ல? நான் பார்க்க அழகா இல்லையா? அக்கா, ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணு. இல்லனா நான் நிச்சயமா செத்துடுவேன்"

"தயவுசெய்து புரிஞ்சுக்க முயற்சி பண்ணு. எதையாவது செஞ்சு என்னுடைய வாழ்க்கையையும் கெடுக்காதே. அமெரிக்காவுக்கே திரும்பிப் போயிடு"

"நீ ஒரு சுயநலவாதி. உன்னுடைய வாழ்க்கையை பத்தி மட்டும் தான் உனக்கு கவலை. நீ சந்தோஷமா இருந்தா மட்டும் உனக்குப் போதும்..." என்று கோபமாய் கத்தினாள் லயா.

"நான் உன்கிட்ட அப்புறம் பேசுறேன்" என்று அழைப்பை துண்டித்தாள் பிரியா. 

ஆனால், லயா விடாமல் மீண்டும் அவளுக்கு ஃபோன் செய்தாள். தன்னுடைய கைபேசியை சைலன்ட் மோடுக்கு மாற்றினாள் பிரியா. லயாவை நினைத்த போது அவளுக்கு பயமாய் இருந்தது. அவள் என்ன செய்ய காத்திருக்கிறாளோ தெரியவில்லை. இப்பொழுது தான், அவளும் அவளது குடும்பமும் சகஜ நிலைக்கு திரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள். லயாவோ இன்னும் பிரச்சனையை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறாள். இதைப் பற்றி அவளது பெற்றோரிடம் பேசுவது என்று முடிவு செய்து, உள்ளே சென்றாள் பிரியா.

.....
 
ஸ்ரீராமை மிதிலாவின் அறைக்கு அழைத்து வந்தான் சதீஷ். மற்றவர்கள் ஏற்கனவே சாப்பிட அமர்ந்து விட்டிருந்தார்கள். மிதிலாவும் அருணாவும் அவர்களுக்கு பரிமாற துவங்கினார்கள். ஸ்ரீராமுக்கு ஃப்ரூட் கேசரியை பரிமாற அருணா கொண்டு வந்த போது, அவளை தடுத்தாள் மிதிலா.

"அவர் ஸ்வீட் சாப்பிட மாட்டார்"

"ஏன்?"

"அவர் டயாபட்டிக்"

திகைத்துப் போனாள் அருணா.

"நீங்களுமா...? என்ன ஒரு பொருத்தம்...! நீங்க அதைப் பத்தி கவலைப் படாதீங்க அண்ணா. உங்க சுகர் லெவலை எப்படி பேலன்ஸ்ஸா வைச்சிகிறதுன்னு மிதிலா உங்களுக்கு சொல்லிக்கொடுப்பா. அவ தாராளமா ஸ்வீட் சாப்பிடுவா தெரியுமா?"

"தெரியும்" என்று சிரித்தான் மிதிலாவை பார்த்தவாறு.

ஸ்ரீராமுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த குகன், எதையும் சாப்பிடாமல் அமைதியாய் அமர்ந்திருந்ததை பார்த்து,

"ஏன் எதையும் சாப்பிடாம இருக்கீங்க?" என்றாள் அருணா.

"நான் ரொம்ப அப்செட்டா இருக்கேன்"

"ஏங்க? "

"நான் நல்லாவே இல்லன்னு நீங்க சொல்லிட்டீங்களே... என் மனசு எவ்வளவு கஷ்டப்படுது தெரியுமா?"

எல்லோரும் களுக்கென்று சிரிக்க, சங்கடத்துடன் புருவத்தை உயர்த்தினாள் அருணா.

"இதுல வருத்தப்பட என்ன இருக்கு, குகா? அவங்க உண்மையை தானே சொன்னாங்க?" என்றான் பரத் கிண்டலாக.

"நீ ஏன் சொல்ல மாட்டே...? நீ அழகா இல்லனாலும் பரவாயில்லன்னு பிரியா உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க..." என்றான் குகன்.

அந்த அறை, சிரிப்பொலியால் நிரம்பியது. அவனைப் பார்த்து முறைத்தான் பரத்.

"சரி, சரி, நீங்க நல்லா தான் இருக்கீங்க. சாப்பிடுங்க" என்றாள் அருணா.

"நெஜமாவா?" என்று குழைந்தான் குகன்.

அவனுக்கு பதில் கூறாமல் அங்கிருந்து நழுவினாள் அருணா. அவன் முகம் போன போக்கைப் பார்த்து சிரித்தான் ஸ்ரீராம்.

"எதுக்கு சிரிக்கிற?" என்றான் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு குகன்.

"நீ ஓவரா வழியறேன்னு உனக்கு புரியலையா?"

"இருக்கட்டுமே... அதனால யாருக்கு நஷ்டம்? அந்த பொண்ணு அழகா இல்ல?" என்று மீண்டும் குழைந்தான்.

"சாப்பிடுடா..." என்றான் ஸ்ரீராம்.

ஸ்ரீராம் சாப்பிட்டுக் கொண்டு தான் இருந்தான் என்ற போதும், அவனது கண்கள் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த மிதிலாவின் புகைப்படங்களின் மீது அலைபாய்ந்து கொண்டிருந்தது. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மாதிரியாய் இருந்தாள் மிதிலா. குறிப்பாய் மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தில் மிக அழகாக இருந்தாள்.

"மிதிலா ரொம்ப அழகா இருக்காங்க இல்ல" என்றான் குகன்.

மெலிதாய் புன்னகைத்தான் ஸ்ரீராம்.

ஒவ்வொருவராய் அறையை விட்டு வெளியேற துவங்கினார்கள். வேண்டுமென்றே மெதுவாய் சாப்பிட்டான் ஸ்ரீராம். அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அவனுக்காக காத்திருந்தாள் மிதிலா. சாப்பிட்டு முடித்து, கை கழுவ குளியலறைக்குச் சென்றான் ஸ்ரீராம். மேஜையின் மீது இருந்த புகைப்படத்தை எடுத்துக் கொண்ட குகன், மிதிலாவை அருகில் வருமாறு அழைத்தான்.

"என்ன குகா?"

"இந்த போட்டோவை நான் எடுத்துக்கிறேன்"

"எதுக்கு?"

"எனக்கு வேணும்"

"அதான் எதுக்குன்னு கேட்டேன்"

"இதை நான் எஸ்ஆர்கே வுக்கு கிஃப்டா கொடுக்க போறேன்"

"உங்களுக்கு என்ன பைத்தியமா?"

"அவன் இந்த போட்டோவை எவ்வளவு ஏக்கமா பார்த்தான்னு எனக்கு தான் தெரியும்... பாவம், அவன் கூட இந்த போட்டோவாவது இருக்கட்டுமே..."

"அதை என்கிட்ட கொடுங்க"

"முடியாது..." அந்த புகைப்படத்துடன் அங்கிருந்து வெளியே ஓடினான் குகன்.

அப்பொழுது, குளியலறையிலிருந்து ஸ்ரீராம் வெளியே வருவதைப் பார்த்தாள் மிதிலா. அவனுக்கு கையை துடைத்துக் கொள்ள ஒரு துண்டை கொடுத்தாள். அதை அவளிடமிருந்து புன்னகையுடன் பெற்றுக்கொண்டான் ஸ்ரீராம்.

"இங்க வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்" என்றாள் மிதிலா.

"உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயத்துக்காக நீங்க எனக்கு தேங்க்ஸ் சொல்ல வேண்டியதில்ல. நீங்க என்னை கூப்பிடல இல்லையா?" என்றான் கையைத் துடைத்தபடி.

இது உண்மையிலேயே மிதிலாவுக்கு  மிகவும் சங்கடமான தருணம்.

"நான், ரொம்ப கிளோஸ் ஃபிரண்ட்ஸை மட்டும் தான் கூப்பிட்டேன்." என்றாள் தயக்கத்துடன்.

அவன் அவளுக்கு *க்ளோஸ்* இல்லை என்று கூறுகிறாளா?

"பரவாயில்ல... நான் உங்க ஃப்ரெண்ட் இல்ல... ஆனா... " என்று அந்த வாக்கியத்தை முடிக்காமல் விட்டான் ஸ்ரீராம்.

அங்கிருந்து செல்ல ஒரு அடி எடுத்து வைத்தவன் சற்றே நின்று,

"பை தி வே... நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க" என்று புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்தான் ஸ்ரீராம், மிதிலாவின் நெஞ்சாங்கூட்டையே உடைத்துவிடும் அளவிற்கு அவளது இதயத்தை துடிக்கச் செய்து...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top