41 அதிரடி முடிவு
41 அதிரடி முடிவு
தனது அலுவலகத்தின் தொலை தொடர்பாளரை, தன் கைப்பேசி மூலம் அழைத்தபடி தனது அறையிலிருந்து கீழ் தளம் நோக்கி நடந்தான் ஸ்ரீராம்.
"இன்னைக்கு நம்ம ஆஃபீஸுக்கு வந்த எல்லா இன்கம்மிங் கால் லிஸ்ட்டோட பிரிண்ட் அவுட் எனக்கு வேணும்" என்று ஆணையிட்டான்.
"இதோ இப்ப எடுத்துக் கொடுக்கிறேன் சார்"
அது ஸ்ரீராமிடமிருந்து வந்த உத்தரவு என்பதால், துரிதமாய் செயல்பட்டார் தொலைத் தொடர்பாளர்.
நேராக பரத்தின் அறைக்குச் சென்றான் ஸ்ரீராம்.
"பரத், என்னோட கிளம்பி வா"
"அண்ணா, இப்ப தான் நீங்க அனுப்புன ஸ்டேட்மென்ட்டை பார்க்க ஆரம்பிச்சேன்"
"அதை அப்படியே விட்டுட்டு என் கூட வா" என்று ஆணையிட்டான்.
அவனது குரலைக் கேட்டு தனது அறையில் இருந்து வெளியே வந்த லக்ஷ்மன்,
"என்ன ஆச்சி ராமு?" என்றான்.
"நீயும் என் கூட கிளம்பு"
"நானுமா?"
"நீயும் தான்"
பரத்தும், லட்சுமணனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு ஸ்ரீராமை பின்தொடர்ந்தார்கள். அப்பொழுது, ஸ்ரீராம் கேட்ட ப்ரிண்ட்அவுட்டுடன் அங்கு ஓடி வந்தார் தொலைத் தொடர்பாளர். நடந்துகொண்டே அதை அவர் கையிலிருந்து வாங்கிக் கொண்டு வெளியே வந்தான் ஸ்ரீராம்.
அவர்கள் மூவரும் வேகமாய் வெளியே செல்வதை பார்த்து நின்றாள் மிதிலா. ஸ்ரீராமை பின்தொடர்ந்து தரைதளம் வந்த குகனும் அவர்களைப் பார்த்துக் கொண்டு நின்றான்.
"அவங்க மூணு பேரும் எதுக்காக ஆஃபீஸை விட்டு போறாங்க குகா? ஏதாவது பிரச்சனையா?" என்றாள் மிதிலா.
"ஆமாம், அவங்க மூணு பேரும் வீட்டுக்கு போறாங்க"
"ஒன்னும் பிரச்சனை இல்லையே?"
"அதை எஸ்ஆர்கே திரும்பி வந்ததுக்கு பிறகு தான் சொல்ல முடியும்"
"நீங்க என்ன சொல்றீங்க, குகா?"
"அவன் லயாவுடைய பிரச்சனையை முடிக்கிறதுக்காக வீட்டுக்கு போறான்"
"எந்த பிரச்சனை?"
"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடந்த பிரச்சனை"
"ஆனா, அந்த விஷயம் அவருக்கு எப்படி தெரிஞ்சிது?"
"அவனுக்கு எல்லாம் தெரிய வந்துடும்... அதிலும், அது நீங்க சம்பந்தப்பட்ட விஷயமா இருந்தா..."
"எதுக்காக அவர் தேவையில்லாம குடும்பத்தில் பிரச்சனை பண்றாரு? பரத்தும், ப்ரியாவும் வருத்தப்பட போறாங்க" என்றாள் கவலையாக.
"நீங்க வருத்தப்படலயா, மிதிலா? நீங்களும் தானே அவனுடைய குடும்பமாக போறீங்க?"
வாயடைத்துப் போனாள் மிதிலா.
"பரத்தும், பிரியாவும் வருத்தப்படத் தான் செய்வாங்க. அதுக்கு யாரும் எதுவும் செய்ய முடியாது. அவங்க இதை ஃபேஸ் பண்ணி தான் ஆகனும். ஏன்னா, இது தவிர்க்க முடியாதது"
"பிரியா என்னை தப்பா நினைக்க வாய்ப்பு இருக்கு. நான் எப்படி அவங்க கூட கேஷுவலாக இருக்கிறது? அவங்க எனக்கு ஓரகத்தி ஆக போறவங்க..." என்றாள் யோசிக்காமல் கவலையாக மிதிலா.
அதை கேட்டு முப்பத்தி இரண்டு பல்லும் தெரிய சிரித்தான் குகன்.
"ஓரகத்தியா...? அப்படியா மிதிலா?" என்றான் கிண்டலாக.
தான் உதிர்த்துவிட்ட வார்த்தையை அப்பொழுது தான் உணர்ந்தாள் மிதிலா. குகனை பார்க்காமல் வேறு எங்கோ பார்த்துக்கொண்டு நின்றாள்.
"உங்க ஓரகத்தியைப் பத்தி கவலைப்படுற அதே நேரம், கொஞ்சம் உங்க புருஷனை பத்தியும் கவலை படுங்களேன்.! உங்களுக்கு அவன் மேலே சந்தேகம் வந்தா அவனால் நிம்மதியா இருக்க முடியுமா?"
அவன் புருஷன் என்று கூறியதைக் கேட்டு மென்று விழுங்கினாள் மிதிலா.
"எஸ்ஆர்கே வை கல்யாணம் பண்ணிக்க நீங்க பக்காவா ரெடி ஆயிட்டீங்க போல இருக்கு..."
"வாயை மூடுங்க குகா. இது கிண்டல் செய்ற நேரம் இல்ல. அந்த சிடுமூஞ்சி அங்க போயி என்ன என்ன கலாட்டா பண்ணி வைக்கிறாரோ தெரியல" என்று அலுத்துக் கொண்டாள்.
"அவனுடைய கேரக்டரை நெருப்பு மேல நிறுத்தினதுக்கு பிறகு, அவனால எப்படி சும்மா இருக்க முடியும்?"
"நெருப்பால நெருப்பை எதுவும் செய்ய முடியாது..." என்று அவள் முணுமுணுத்தாள்.
"நீங்க ஏதாவது சொன்னீங்களா?" என்றான் தனக்கு கேட்காததைப் போல.
"ஒன்னும் இல்ல" என்று கூறிவிட்டு அங்கிருந்து தன் அறையை நோக்கி சென்றாள் மிதிலா.
முகமெல்லாம் பல்லாக சிரித்துக் கொண்டு நின்றான் குகன், தனது நண்பனை அவள் நெருப்புடன் ஒப்பிட்டதை கேட்ட மகிழ்ச்சியில்.
.........
எப்பொழுதும் இல்லாமல், கண்மூடித்தனமான வேகத்துடன் காரை செலுத்திக் கொண்டிருந்தான் ஸ்ரீராம். நல்லவேளை, அவர்கள் தங்களை சீட்பெல்டுடன் பிணைத்துக் கொண்டிருந்தார்கள்.
"எங்களை எங்க கூட்டிட்டு போறீங்க, அண்ணா?" என்றான் பரத் தயக்கத்துடன்.
"வீட்டுக்கு" என்றான் ஒரு வார்த்தையில்.
"ஏதாவது பிரச்சனையா, அண்ணா?"
"ஆமாம்" என்ற அவனது கண்கள் சாலையின் மீது நிலைத்திருந்தது.
"என்ன ஆச்சு, அண்ணா?"
"நம்ம வீட்டுக்கு போனதுக்கு பிறகு அதை நீயே தெரிஞ்சுக்குவ"
பரத் மேலும் ஏதோ கேட்க போக, அவனது தொடையை அழுத்தி, அவனை அமைதியாக இருக்கும்படி கண்ணிமைத்து சைகை செய்தான் லக்ஷ்மன்.
*என்ன விஷயம் என்று உனக்கு தெரியுமா?* என்பதைப் போல் அவனைப் பார்த்தான் பரத். அவனுக்கு எந்த ஜாடையும் காட்டாமல், ஜன்னலை நோக்கி தன் முகத்தை திருப்பி கொண்டான் லக்ஷ்மன்.
என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று பரத்திற்கு புரியவில்லை. ஆனால், நடக்கப் போவது என்ன என்பது லக்ஷ்மணனுக்கு புரிந்துவிட்டது. இந்த விஷயத்தில் ஸ்ரீராம் என்ன செய்யப் போகிறான் என்பதை பார்க்க வேண்டும் என்று அவனுக்கும் ஆவலாக தான் இருந்தது. அவனுக்கு நன்றாகவே தெரியும், எதற்காக ஸ்ரீராம் தன்னையும் உடன் அழைத்துச் செல்கிறான் என்று. இங்கு நடப்பதை மிதிலாவிடம் கூற ஸ்ரீராமுக்கு ஒருவர் தேவை. லக்ஷ்மணனை தவிர அதை வேறு யாரால் சிறப்பாய் செய்து விட முடியும்? மிதிலாவை பற்றி ஸ்ரீராம் இவ்வளவு தூரம் கவலைப்படுவதை நினைத்து சந்தோஷப்பட்டான் லட்சுமன்.
பூவனம்
சகோதரர்கள் மூவரும் ஒன்றாய், அதுவும் வெகு சீக்கிரம் வீடு திரும்பியதை பார்த்து, வரவேற்பறையில் அமர்ந்து தேநீர் பருகிக் கொண்டிருந்த பூவனத்து பெண்கள் ஆச்சரியம் அடைந்தார்கள். இவ்வளவு சீக்கிரம் அவர்கள் எப்போதும் வந்ததே இல்லை.
அங்கு லயா இல்லை என்பதை கண்ட ஸ்ரீராம்,
"சுப்பிரமணி..." என்று தொண்டை கிழிய கத்தினான்.
அடுத்த நிமிடம் அவன் முன் வந்து நின்றான் சுப்பிரமணி.
"லயாவை கூப்பிடு" என்றான்.
அவளை அழைத்து வர, அவளது அறையை நோக்கி ஓடினான் சுப்பிரமணி. மற்றவர்களோ பதட்டம் அடைந்தார்கள்.
"என்ன ஆச்சி ராமு?" என்றாள் நர்மதா சோபாவை விட்டு எழுந்து.
தன் கையை காட்டி அவளை அமைதியாக இருக்கும்படி சைகை செய்தான் ஸ்ரீராம். பிரியாவுக்கு உதறல் எடுத்தது. ஏதோ தவறாக நடந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டாள் அவள். அவள் பரத்தைப் பார்த்து, *என்ன நடந்தது* என்று கண்களால் கேட்க, அவன் *எனக்கும் ஒன்றும் தெரியாது* என்று தலையசைத்தான்.
அவர்கள் லயா அங்கு வருவதைப் பார்த்தார்கள். பேய் போல் இருந்த ஸ்ரீராமின் முகத்தை பார்த்து அவளுக்கு கதி கலங்கியது. அவளுடைய கதை, இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதை ஒருவாறு உணர்ந்தாள் அவள். மிதிலா அவனிடம் என்ன சொல்லி தொலைத்தாளோ தெரியவில்லையே என்ற பதட்டம் அவளை முழுமையாய் ஆட்கொண்டது.
"மிதிலாகிட்ட என்ன சொன்ன?" என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு கோபமாக ஸ்ரீராம்.
"நானா...? நான் எதுவும் சொல்லலையே..." என்றாள் லயா.
"பொய் சொல்லாத..." என்று வீடே அதிரும் படி கத்தினான் ஸ்ரீராம்.
"நான் ஏன் பொய் சொல்ல போறேன்?" என்று தடுமாறினாள் லயா.
தான் கொண்டு வந்திருந்த பிரிண்ட் அவுட்டை ப்ரியாவை நோக்கி நீட்டினான் ஸ்ரீராம்.
"இதைப் பாருங்க... சரியா 3:43க்கு வந்த இன்கம்மிங் கால் நம்பரை யாருதுன்னு உங்களால தெரிஞ்சிக்க முடியுதான்னு பாருங்க"
அதைப் பரிசோதித்த ப்ரியாவின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. அது லயாவின் எண்.
"அது யாரோட நம்பர்?" என்றான் ஸ்ரீராம்.
அவனுக்கு பதில் கூறாமல் லயாவை நெருங்கிய பிரியா, அவளை ஓங்கி ஒரு அறை விட்டாள்.
"எதுக்காக நீ மிதிலாவுக்கு ஃபோன் பண்ண? அவங்ககிட்ட என்ன சொன்ன?" என்று கத்தினாள் பிரியா.
தன் கன்னத்தை பிடித்தபடி தலைகுனிந்தாள் லயா.
"எனக்கும், அவளுக்கும் தொடர்பு இருக்குன்னு மிதிலாகிட்ட சொல்லியிருக்கா" என்று பார்வையால் நெருப்பை உமிழ்ந்தான் ஸ்ரீராம்.
"இல்ல... மிதிலா பொய் சொல்றா" என்றாள் லயா.
அப்பொழுது, அவர்களது பேச்சின் ஊடே நுழைந்தான் லக்ஷ்மன்.
"இல்ல... மிதிலா பொய் சொல்லல. முதல்ல, அந்த ஃபோன் யார்கிட்ட இருந்து வந்ததுன்னு மிதிலாவுக்கு தெரியாது. ஃபோன் பண்ணவங்க, யார் பேசறதுன்னு சொல்லிட்டு பேசல. அதனால, குகன்கிட்ட அந்த நம்பர் யாருடையதுன்னு கண்டுபிடிச்சி கொடுக்கச் சொல்லி கேட்டா மிதிலா. நம்ப கம்பெனியோட கம்யூனிகேஷன் இன்சார்ஜ்கிட்ட அந்த நம்பரை கேட்டான் குகன். அவர் நம்பரை சொல்லும் போது, நான் தான் என்னுடைய மொபைலில் அதை டைப் பண்ணேன். லயாவுடைய நம்பர் ஏற்கனவே என்கிட்ட இருந்ததால, அவங்களுடைய பேர் அதுல டிஸ்பிளே ஆச்சு. அப்ப தான் மிதிலாவுக்கு தெரிஞ்சிது, அவகிட்ட ராமுவைப் பத்தி பேசினது லயா தான்னு"
அவனை அதிர்ச்சியுடன் பார்த்தான் பரத். ஆனால், பூவனத்தின் பெண்களுக்கு அதில் எந்த அதிர்ச்சியும் இல்லை. அவர்களுக்கு தான் லயாவைப் பற்றி ஏற்கெனவே தெரியுமே...
"நான் அவரை காதலிக்கிறேன் கா" என்றாள் லயா மெல்லிய குரலில்.
"வாயை மூடு... நான் உனக்கு ஏற்கனவே சொன்னேன், இதெல்லாம் நடக்க வாய்ப்பில்லைன்னு" என்று குரல் எழுப்பினாள் பிரியா.
தனது அறையை நோக்கி நடந்தான் ஸ்ரீராம். பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வராமல் அவன் அங்கிருந்து செல்வதை பார்த்து பதறினாள் நர்மதா.
"எங்க போற ராமு?"
"நான் இந்த வீட்டை விட்டு போறேன் கா" என்று அவன் கூறியது, அங்கிருந்த அனைவரையும் உலுக்கியது.
"எங்க போக போற ராமு?" என்றார் பாட்டி.
"நம்ம வீட்டுக்கு வந்த விருந்தாளியை வீட்டைவிட்டு வெளியே அனுப்புறது நமக்கு கௌரவம் இல்ல. அதே நேரம், இந்த பொண்ணு இருக்கிற இடத்துல இருக்க நான் விரும்பல. அதனால, நான் இங்கிருந்து போறேன். என்னோட கல்யாண சடங்கு எல்லாம் என்னுடைய இடத்தில் தான் நடக்கும். இந்த பொண்ணு அங்க அடியெடுத்து வைக்கக் கூடாது. புரிஞ்சுதா?"
"நான் அவளை திருப்பி அனுப்பிடுறேன்" என்றாள் பிரியா.
"நீங்க அவளை அனுப்புறிங்களா இல்லைங்கிறதைப் பத்தி எனக்கு கவலை இல்லை பிரியா. அவ இருக்கிற இடத்துல நான் ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டேன். இல்லவே இல்லாத ஒரு விஷயத்துக்காக மிதிலாவை சங்கடபட வைக்க நான் விரும்பல"
அவன் மேலும் ஒரு அடி எடுத்து வைத்த போது, புஷ்பா அவனைத் தடுத்தார்.
"ஒரு நிமிஷம் இரு, ராமு"
அவரைப் பார்க்காமல் அப்படியே நின்றான் ஸ்ரீராம்.
"நீ சொல்றது சரி தான். நம்ம வீட்டுக்கு வந்த விருந்தாளியை நம்மால அனுப்ப முடியாது. ஆனா, நம்ம அவளை ஷிஃப்ட் பண்ணலாம்"
அவர் என்ன கூற வருகிறார் என்று புரியாமல் பார்த்தார்கள் அனைவரும்.
"பரத், நீ உன் வைஃபையும், மச்சினிச்சியையும் கூட்டிக்கிட்டு நம்ம கெஸ்ட் ஹவுசுக்கு போ. அவ இந்தியாவில் இருக்கிற வரைக்கும், நீயும் பிரியாவும் அவ கூட இருந்து அவளை பாத்துக்கங்க. அவ இந்தியாவை விட்டு போனதுக்குப் பிறகு நீங்க ரெண்டு பேரும் திரும்பி வாங்க." என்றார் புஷ்பா.
"சரிம்மா" என்று உடனடியாக ஒப்புக் கொண்ட பரத், அவனது அறையை நோக்கி செல்ல நினைத்த போது,
"இருங்க... நீங்க யாரும் இந்த வீட்டை விட்டு போக வேண்டாம். நான் என்னோட ஃப்ரண்டு வீட்டுக்கு போறேன்" என்றாள் லயா.
"இல்ல... நீ நம்ம அப்பா, அம்மாகிட்ட திரும்ப போ. இல்லன்னா, இங்க நடந்த எல்லாத்தையும் நான் அவங்ககிட்ட சொல்லிடுவேன்" என்று அவளை மிரட்டினாள் பிரியா.
"அடுத்த வாரம் என் ஃப்ரெண்டு கல்யாணம் முடிஞ்சதுக்கு பிறகு நான் இந்தியாவை விட்டு போறேன்" என்று கூறிவிட்டு, பிரியாவின் பதிலுக்காக காத்திராமல் தனது உடமைகளை எடுக்க தன் அறையை நோக்கி சென்றாள் லயா.
"தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க, அண்ணா. எங்களால தான் உங்களுக்கு இவ்வளவு பிரச்சனை" என்றான் பரத் வருத்தத்துடன்.
"இந்த விஷயத்தை பத்தி மிதிலா என்ன நினைக்கிறாங்க?" என்றாள் நர்மதா லட்சுமனிடம் கவலையாக.
"தெரியல அக்கா. அவ எதையும் வெளிப்படையா சொல்லல" என்றான் லக்ஷ்மன்.
"அவ இந்த விஷயத்தை, இந்த விதமா கையாண்டதுக்காக நம்ம சந்தோஷ படணும்" என்றார் புஷ்பா.
"உண்மை தான். இதுவே வேற யாராவதா இருந்திருந்தா, இந்த பிரச்சனையை ரொம்ப பெரிசாகி நம்மளை தலைகுனிய வச்சிருப்பாங்க" என்றார் பாட்டி.
"என்னைப் பத்தி மிதிலா என்ன நினைச்சுட்டு இருக்காங்கன்னு ஒன்னும் புரியல" என்றான் எரிச்சலுடன் ஸ்ரீராம்.
"அவங்க புரிஞ்சிக்குவாங்க ராமு" என்றாள் நர்மதா.
"இல்லக்கா... ஏற்கனவே என் மேல அவங்களுக்கு நிறைய வருத்தம் இருக்கு. போதாக்குறைக்கு இது வேற ஒரு பிரச்சனை..." என்றான் சலிப்பாக.
"கவலைப்படாதே ராமு, மிதிலா அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க மாட்டா" என்றான் லக்ஷ்மன்.
"நான் போகணும்..." என்று விறுவிறுவென நடந்தான் ஸ்ரீராம்.
மிதிலா அலுவலகத்தை விட்டு கிளம்பிச் செல்லும் முன், அவன் அவளை சந்தித்தாக வேண்டும்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top