35 மேலும் இரண்டு புள்ளிகள்...
35 மேலும் இரண்டு புள்ளிகள்...
சென்னை புறவழிச் சாலையில் சீறிப்பாய்ந்து சென்றது ஸ்ரீராமின் கார். சற்று நேரத்திற்கு முன் அவன் கேட்ட விஷயத்தில், அவன் மனம் உழன்று கொண்டிருந்தது. பணக்காரர்களைப் பற்றி மிதிலா பேசிய விஷயம் அவனை அடித்து நொறுக்கியது. ஏனென்றால், அவள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனுடைய முந்தைய நடவடிக்கைகளை அவனுக்கு நினைவூட்டியது. காரணமே இல்லாமல் அவளை அவமானப்படுத்தியது... மரியாதை இல்லாமல் நடத்தியது... தனது கௌரவத்தை பறைசாற்றியது... மனித உணர்வுகளை விட பணத்திற்கு முக்கியத்துவம் வழங்கியது...
அவள் மனதில் இருந்த வேதனையை அறியாமல், அவளை மேலும் அவன் ரணபடுத்திவிட்டான். *கடந்தகாலம்* அவளுடன் ஆடிய கோரத்தாண்டவம் போதாதென்று, இவன் வேறு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சி விட்டான். பிறகு எப்படி அவனை திருமணம் செய்து கொள்ள அவள் சம்மதிப்பாள்?
தனக்குத் தான் கசப்பான கடந்த காலம் இருக்கிறது என்று எண்ணியிருந்தான் அவன். ஆனால், மிதிலாவுடையதை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, அவனுடையது ஒன்றுமே இல்லை. தன் அம்மாவின் கோர மரணத்தை கண்ணெதிரில் பார்த்ததால் தான், அவள் நெருப்பை பார்த்து பயந்து மயங்கி இருக்கிறாள். எவ்வளவு கொடுமை...! மனதில் எவ்வளவு வேதனை இருந்த போதும், அவள் தான் எவ்வளவு உயிர்ப்புடன் இருக்கிறாள்...! தனது கடந்த காலத்தை பழித்துக்கொண்டு, தனக்கு பிரியமானவர்களிடம் கூட பேசி சந்தோஷப்பட நேரம் ஒதுக்காத தான் எங்கே... தனது வலியை மறைத்துக் கொண்டு, தன்னைச் சுற்றி இருக்கும் அனைவரையும் சந்தோஷப்படுத்தி பார்க்கும் அவள் எங்கே...! அவள் அவனுக்கு வேண்டும்... அவன் வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்லவும், அவனது கேள்விகளுக்கு பதிலாகவும்...!
காரை நிறுத்திவிட்டு, கண்களை மூடி யோசித்தான் ஸ்ரீராம். தனது கொலைகார அப்பாவை பற்றி மற்றவரிடம் கூறி தலைகுனிய அவள் தயாராக இல்லை. அவள் தலை குனிய வேண்டிய அவசியமும் இல்லை. அவள் செய்யாத தவறுக்காக அவள் தலை குனிய வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? தேவையே இல்லை.
மிதிலா தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்று தான் ஸ்ரீராம் நினைத்திருந்தான். ஆனால், அவள் யாரையுமே திருமணம் செய்துகொள்ள தயாராக இல்லை. அப்படி என்றால், அவள் அவனை வெறுக்கவில்லை என்று தானே அர்த்தம்... திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று கூற, அவளுக்கு உறுதியான, நியாயமான காரணம் இருக்கிறது. தன்னிடம், யாரும் கேட்டால் மட்டுமே உண்மையை கூறுவேன் என்று அவள் கூறியிருக்கிறாள். அது அப்படியே இருக்கட்டும். அவள் உண்மையை கூற வேண்டிய அவசியமும் இல்லை... அவளிடம் யாரும் கேட்க போவதுமில்லை...!
அவளிடம் உண்மையை கேட்காமல், அவளை தலைகுனிய வைக்காமல், அவளை திருமணம் செய்து கொள்ள முடியாதா என்ன? தன்னுடைய பாணியில், தன் மீது விழப்போகும் பழி பாவத்திற்கு அஞ்சாமல், மிதிலாவை திருமணம் செய்து கொள்ள தயாரானான் ஸ்ரீராம் கருணாகரன். அவளைப் பற்றிய உண்மை தனக்கு தெரிந்துவிட்டது என்று அவன் அவளிடம் கூற முடியும் தான். ஆனால், அவள் அதை பற்றி என்ன நினைப்பாள்? அவளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வதற்காக தான் இதையெல்லாம் அவன் செய்கிறான் என்று நினைப்பாள். அல்லது, அவளது இயலாமையை தனக்கு சாதகமாய் அவன் பயன்படுத்திக் கொள்வதாக நினைப்பாள். அவள் நிச்சயம் அப்படித்தான் நினைப்பாள். ஏனென்றால், அவனைப் பற்றிய அவளுடைய எண்ணம், அப்படிப்பட்டது தான். அவளைப் பொருத்தவரை ஸ்ரீராம் அகங்காரம் கொண்டவன், தலைக்கனம் பிடித்தவன், தனது கௌரவத்தை பெரிதாய் நினைப்பவன். அவள் அப்படி நினைப்பதில் தவறும் இல்லை. அவன் அப்படித் தான் இருந்தான். அதனால், அவளது கடந்தகாலத்தை பற்றி அவனுக்கு தெரியும் என்று இப்போது கூறுவது சரியாக இருக்காது.
*அவனது வழியில்* செல்வதை தவிர அவனுக்கு வேறு வழியில்லை. முதலில், அவள் நிச்சயம் அவன் மீது கோபம் கொள்ளத் தான் செய்வாள்... எரிச்சல் அடைவாள்... ஆனால், நிச்சயம் அவனை புரிந்து கொள்வாள்... அல்லது, அவன் அவளுக்கு புரிய வைப்பான். எது எப்படி இருந்தாலும், மிதிலா அவனுக்கு வேண்டும்... அதே போல, மிதிலாவுக்கும் அவன் வேண்டும்.
மிதிலா ஸ்ரீராமை மறுத்தளித்தாள். முடியாது என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தாள். ஆனால், அது முடிவல்ல. அவள் வைத்த முற்றுப்புள்ளியின் பக்கத்தில், மேலும் இரண்டு புள்ளிகளை வைத்து, அந்த வாக்கியத்தை எப்படி தொடர வேண்டும் என்பது அவனுக்கு தெரியும்...!
ஆனந்த குடில்
வாசலில் வந்து நின்ற ஆனந்தனை பார்த்து, அவரிடம் ஓடிச் சென்றாள் மிதிலா.
"என்னை மன்னிச்சிடுங்க பா. உங்க அனுமதி இல்லாம நான் ஒரு காரியம் செஞ்சுட்டேன்..."
"எனக்குத் தெரியும். சாந்தா என்கிட்ட சொல்லிட்டா"
"நான் செஞ்சது தப்பா பா?"
"நீ செஞ்சதும் தப்பு இல்ல. உங்க அம்மா மேலயும் தப்பு இல்ல"
"அம்மா என்கிட்ட சத்தியம் வாங்கிட்டாங்க பா"
"அவளுடைய இடத்தில் யார் இருந்தாலும் அதைத் தான் செய்வாங்க. ஏன்னா, அவளுக்கு உன் மேல அன்பும், அக்கறையும் இருக்கு. அவ உன் அம்மா இல்லையா?"
"ஆனா, உண்மையை மறைக்குறது தப்பில்லையா பா?"
"நீ அதைப் பத்தி கவலைப் படாதே. ஏனோ தானோன்னு உன்னை யாருக்கும் கல்யாணம் பண்ணி நாங்க கொடுக்க மாட்டோம். உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கு இல்ல?"
ஆமாம் என்று தலையசைத்தாள் மிதிலா.
"போய் நிம்மதியா படுத்து தூங்கு. உன்னுடைய எதிர்காலத்தை நான் பார்த்துக்கிறேன்" என்று அவள் முதுகில் தட்டிக் கொடுத்தார் ஆனந்தன்.
மறுபடியும் தலையசைத்துவிட்டு, தனது அறைக்குச் சென்றாள் மிதிலா மனநிம்மதியுடன்.
மறுநாள்
எஸ்ஆர் ஃபேஷன்ஸ்
வழக்கம் போல், சற்று முன்னதாகவே சௌமியாவுடன் அலுவலகம் வந்தாள் மிதிலா. தனது அறைக்கு செல்லும் முன், குகனின் அறைக்கு வந்தாள். அவன் தனது கணினியில் ஏதோ தட்டச்சு செய்து கொண்டிருந்தான். அவளுக்கு தெரியும், அவளது நண்பர்கள் அனைவரும் முதல் நாள் நடந்த நிகழ்வினால் கவலையுடன் இருப்பார்கள் என்று.
"ஹாய் குகா..."
"ஹாய் மிதிலா... எப்படி இருக்கீங்க? நேத்து என்ன ஆச்சு உங்களுக்கு?" என்றான் கவலையாக மிதிலா நினைத்தது போலவே.
"நான் நல்லா இருக்கேன், குகா"
"நெருப்பை பார்த்து ஏன் பயந்திங்க?"
"விடுங்க, அதெல்லாம் ஒன்னுமில்ல"
"நிஜமாத் தான் சொல்றீங்களா?"
"ஆமாம்"
"அப்புறம்?"
"அப்புறம் என்ன?"
"நான் நெனச்சேன், நீங்க என்னை ஒரு ஃபிரண்டா ஏத்துக்கிட்டிங்கன்னு. ஆனா, அப்படி இல்ல போல தெரியுது"
"ஏன் அப்படி சொல்றீங்க?"
"ஃப்ரண்ட்ஸ்னா எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்குவாங்க. ஆனா, நீங்க எதையுமே சொல்ல மாட்டேங்கறீங்க"
"நீங்க எதை பத்தி பேசுறீங்க?"
"எஸ்ஆர்கே உங்களை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டானாமே?"
"ஓ அதை கேக்கறீங்களா? அதைப் பத்தி நான் ஏன் உங்ககிட்ட சொல்லலைன்னா, நான் அவர்கிட்ட முடியாதுன்னு சொல்லிட்டேன். அதனால தான்" என்றாள் மெல்லிய குரலில்.
"என்னது... எப்போ???"
"அதே நாள்"
"அவன் ஒன்னுமே சொல்லலையா?"
"நான் அவரைக் நிச்சயம் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்னாரு"
"அதானே பார்த்தேன்..." களுக்கென்று சிரித்தான் குகன்.
"உங்களுக்கு இது விளையாட்டா தெரியுதா?" என்றாள் மிதிலா முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு.
"நான் விளையாடல" என்றான் குகன்.
தன் கண்களை சுழற்றினாள் மிதிலா.
"மிஸஸ் ஸ்ரீராமா ஆகுறது அவ்வளவு ஈஸி இல்ல. அது எப்படிப்பட்ட விஷயம்னு உங்களுக்கு தெரியுமா?" என்றான் குகன்.
"தெரியும் குகா. அது, இருபத்தி எட்டு லட்சம் மதிப்புள்ள கௌரவமான புடவையை கட்ற விஷயம்..."
"நான் சொல்றத கேளுங்க மிதிலா..."
அவன் பேச்சை துண்டித்து,
"அப்படிப்பட்ட புடவையை கட்ட எனக்கு தகுதி இல்ல குகா. பாருங்க, நான் ஒல்லியா இருக்கேன்...! ( களுக்கென்று சிரித்து) என்னால அதிக கனத்தை தாங்க முடியாது. அது புடவையா இருந்தாலும் சரி, ஜூனியரோட ஆட்டிட்யூடா இருந்தாலும் சரி."
"அவனோட ஆட்டிட்யூடை உங்களாலயே தாங்க முடியலனா, வேற யாரால முடியும்? உங்க தலையில கிரீடமா இருப்பான் எஸ்ஆர்கே"
அதைக் கேட்டு நக்கலாய் சிரித்தாள் மிதிலா.
"இது டெண்டரோ, டீலோ கிடையாது... வாழ்க்கை. பொருந்தாத கிரீடத்தோட ராணியா வலம் வர நான் விரும்பல. என்னை புரிஞ்சுக்குற மனுஷன் தான் எனக்கு வேணும்... ஈகோ இல்லாத மனுஷன். உங்களுக்கே நல்லா தெரியும், எனக்கும் ஜூனியர்க்கும் கொஞ்சம் கூட பொருந்தாதுன்னு. அப்படி இருக்கும் போது, நான் அவரை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்குவேன்னு நீங்க எப்படி நினைக்கிறீங்க? எனக்கும் அவருக்கும் ஏணி வச்சா கூட எட்டாது. முக்கியமா ஸ்டேட்டஸ். நான் எப்படி அவரை கல்யாணம் பண்ணிக்கிறது? எல்லாத்துக்கும் மேல, அவருக்கு கொஞ்சம் கூட தகுதி இல்லாத என்னை அவர் ஏன் கல்யாணம் பண்ணிக்க நினைக்கணும்?"
"அது ஏன்னா..."
"விடுங்க குகா. இதைப் பத்தி இதுக்கு மேல நான் எதுவும் பேச விரும்பல"
அங்கிருந்து செல்ல நினைத்து வெளியே வந்தவள், தனது பாஸ் எதிரில் நிற்பதைப் பார்த்து திகைத்து நின்றாள். சுவற்றில் சாய்ந்தபடி, கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தான் ஸ்ரீராம் கருணாகரன். அவனது இருப்பை விட, அவள் வயிற்றை அதிகம் கலங்க செய்த விஷயம், அவன் முகத்தில் தவழ்ந்த புன்னகை. எப்பொழுதும் இறுக்கமாய் காணப்படும் அவனது முகத்தில் அப்போது புன்னகை தவழ்ந்தது. அது எதிர் வரப்போகும் ஆபத்தின் அறிகுறியோ?
அவர்கள் பேசியதை அவன் கேட்டு விட்டான் என்பதில் அவளுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவன் நின்றிருந்த தோரணையும், அவன் முகத்தில் தவழ்ந்த புன்னகையும் அதற்கு சாட்சியம் கூறின. மென்று விழுங்கினாள் மிதிலா.
"எப்படி இருக்கீங்க மிதிலா?" என்று அவன் கேட்டபோது அவன் முகம் அக்கறையை வெளிப்படுத்தியது.
"நல்லா இருக்கேன்" என்றாள் தட்டுத்தடுமாறி.
"நேத்து ராத்திரி நிம்மதியா தூங்கினீங்களா?"
"ஆங்..." என்றாள் எங்கோ பார்த்துக்கொண்டு.
"நான் நெனச்ச மாதிரியே, நீங்க காய் நகர்த்துறது எனக்கு ரொம்ப சந்தோஷம்" என்றான்.
"எந்த காய்?" என்றாள் ஒன்றும் புரியாமல்.
"யுவராஜை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு நீங்க சொன்னதை பத்தி தான் பேசிகிட்டு இருக்கேன். நீங்க அப்படித் தான் செய்யணும்னு நான் விரும்பினேன்"
அவர்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த குகன் திகைப்படைந்தான். யுவராஜை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று மிதிலா கூறிவிட்டாளா? இது எப்போது நடந்தது?
"அது ஏன்னா..." என்று அவள் ஏதோ கூற முயல,
"காரணம் என்னவா வேணாலும் இருக்கட்டும். உங்களை யார் வேணா ப்ரொபோஸ் பண்ணட்டும். எனக்கு கவலை இல்ல. ஏன்னா, உங்களை நான் தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்"
"இங்க பாருங்க ஜூனியர்..."
அவள் ஏதோ பேச முயல, அதே நேரம் தனது அறையில் இருந்து வெளியே ஓடி வந்த குகன், ஸ்ரீராமனின் மீது நம்பமுடியாத பார்வை வீசினான். அப்போது குகனிடம்,
"குகா, நானும் மிதிலாவும் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்" என்றான் ஸ்ரீராம்.
குகனின் விழிகள் அகல விரிந்தது. அவன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு,
"கங்க்...ராஜுலேஷன்ஸ், எஸ்ஆர்கே" என்றான்.
அவனை வாயை பிளந்து கொண்டு பார்த்தாள் மிதிலா.
"தேங்க்யூ குகா. நம்ம ப்ரொடக்ஷன் யூனிட்கிட்ட சொல்லி, மிதிலாவுக்கு அமேசிங்கான ஸாரியை ரெடி பண்ண சொல்லு"
"நீ சொல்ற மாதிரியே செஞ்சிடுறேன்" என்றான் சந்தோஷமாக குகன்.
சரி என்று தலையசைத்துவிட்டு தனது அறைக்கு செல்ல திரும்பினான் ஸ்ரீராம். அவனை வழி மறித்தாள் மிதிலா.
"உங்க மனசுல நீங்க என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க? உங்க இஷ்டத்துக்கு என்னை ஆட வைக்கலாம்னு நினைக்கிறீர்களா? இந்த கல்யாணம் நிச்சயம் நடக்காது"
தனது கைக்கடிகாரத்தை காட்டினான் ஸ்ரீராம்.
"மணி 10 ஆயிடுச்சு. ஆஃபீஸ் டைம்ல என்னோட பர்சனல் மேட்டரை நான் பேசுறது இல்ல. நம்ம அப்புறம் பேசலாம்" அவளைப் பார்த்து புன்னகைத்துவிட்டு, தனது அறையை நோக்கி நடந்தான் ஸ்ரீராம் அதே புன்னகையுடன்.
களுக்கென்று சிரித்த குகனை திரும்பி பார்த்து முறைத்தாள் மிதிலா. வாயை கையால் பொத்திக் கொண்டு தன் அறைக்குள் ஓடிச் சென்றான் குகன்.
ஸ்ரீராமிடம் இதைப் பற்றி பேச வேண்டும் என்று நினைத்தாள் மிதிலா. ஆனால் அதை உடனடியாக அவளால் செய்ய முடியாது. ஏனென்றால், அவன் தான் அலுவலக நேரத்தில் பேச மாட்டேன் என்று கூறி விட்டானே. அதனால், அலுவலக நேரம் முடிந்த பின் பேசுவது என்று முடிவு செய்தாள். ஆனால், அவளுக்கு அந்த சந்தர்ப்பத்தை வழங்க விரும்பாத ஸ்ரீராம், முன்னதாகவே அலுவலகத்தை விட்டு கிளம்பிச் சென்று விட்டான். தன்னுடைய திட்டம் அவளை சென்று அடையும் முன், அவளுக்கு பேசும் சந்தர்ப்பத்தை அவனால் வழங்க முடியாது.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top