34 சத்தியம்
34 சத்தியம்
ஸ்ரீராம், மிதிலாவின் கார் பயணம் அமைதியுடன் நகர்ந்தது. தன்னை திருமணம் செய்து கொள் என்று கேட்டு, தான் மறுத்தளித்தவருடன் பக்கத்தில் அமர்ந்திருப்பது என்பது சங்கடமான விஷயம். அவள் மறுத்ததற்கு காரணம், அவன் தலைக்கனம் பிடித்தவன் என்பதால். கசப்பான கடந்த காலத்தை உடைய அவள், திருமணம் செய்துக் கொள்ள தயங்குவது நியாயம் தானே...? அதிலும் ஸ்ரீராமை போல பணக்காரனை... தனது கௌரவத்தை பெரிதாய் நினைப்பவனை... அதை அவளே நேரில் பார்த்திருக்கிறாளே...!
நெருப்பை பார்த்து, அவள் ஏன் பதட்டப்பட்டு மயங்கி விழுந்தாள் என்பதை நிச்சயம் அவளிடம் ஸ்ரீராம் கேட்பான். அவள் நினைத்தது சரி தான். அவளிடம் அதைப் பற்றி கேட்க வேண்டும் என்று தான் ஸ்ரீராமின் மனம் துடித்தது. அதற்கு சந்தர்ப்பம் அளிக்க விரும்பாமல், கண்ணை மூடி தூங்குவது போல் பாசாங்கு செய்தாள் மிதிலா.
வாழ்க்கை மிகவும் விசித்திரமானது... நாம் எதை நினைக்கவே கூடாது என்றும், மறக்கவும் நினைக்கிறோமோ அதைத் தான், நமக்கு அதிகம் ஞாபகப்படுத்தி வேடிக்கை காட்டுகிறது. அதே போலத் தான், மிதிலா மறக்க நினைக்கும் அந்த கோர சம்பவம், மூடியிருந்த அவள் விழிகளில் நிழலாடியது.
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன், விழுப்புரம்...
தனது அம்மா, மண்ணெண்ணையை ஸ்டவ்வில் ஊற்றுவதை, பக்கத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் பன்னிரெண்டு வயது சிறுமியான மிதிலா.
தனது வீட்டிற்கு திடீர் விஜயம் செய்த பெரியப்பா குடும்பத்தினரை பார்த்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்த மிதிலா,
"அம்மா, பெரியம்மா வந்திருக்காங்க" என்று கூற, தான் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டு தன் அக்காவிடம் சென்றார் மிதிலாவின் அம்மா வசந்தா.
"எப்படி இருக்க மிதிலா?" என்றார் அவளுடைய பெரியப்பா ஆனந்தன்.
"நான் நல்லா இருக்கேன் பெரியப்பா"
மிதிலாவின் அம்மா வசந்தா, தனது அக்கா சாந்தாவையும், மாமாவையும் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தார். மிதிலா, தனது அக்கா பிருந்தாவிடம் ஓடிச் சென்று, அவளை கட்டிக் கொண்டாள்.
"என்னக்கா... சொல்லாம திடீர்னு வந்திருக்கீங்க? "
"உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு தான் திடீர்னு வந்தோம்" என்றாள் பிருந்தா.
அவர்களை அமர வைத்து காபி போட்டுக் கொடுத்தார் வசந்தா.
"நாங்க ஒரு கல்யாணத்துக்காக வந்தோம். அப்படியே உனக்கும் அதிர்ச்சி கொடுக்கலாம்னு நினைச்சோம்" என்றார் சாந்தா சிரித்தபடி.
"நீ ஏன் இன்னைக்கு ஸ்கூலுக்கு போகல மிதிலா?" என்றாள் பிருந்தா.
அவளுக்கு பதில் கூறாமல் தனது அம்மா வசந்தாவை பார்த்தாள் மிதிலா. அது ஆனந்தனையும் சாந்தாவையம் ஒருவரையொருவர் கேள்விக்குறியோடு பார்த்துகொள்ள செய்தது.
"அவளுக்கு காலையில் கொஞ்சம் வயித்துவலி... அதனால தான் இன்னைக்கு ஸ்கூலுக்கு அனுப்பல" என்றார் வசந்தா.
"இங்க வா மிதிலா" என்று மிதிலாவை அழைத்தார் சாந்தா.
இந்த முறை, தனது அம்மாவின் முகத்தை பார்க்காமல், தனது பெரியம்மாவிடம் ஓடிச் சென்றாள் மிதிலா.
"நீ ரொம்ப நல்ல பொண்ணு. நீ பொய் சொல்ல மாட்டேன்னு எனக்கு தெரியும். நீ ஏன் இன்னைக்கு ஸ்கூலுக்கு போகல? என்கிட்ட சொல்லு"
தனது அம்மாவை நோக்கி முகத்தை திருப்ப முயன்ற மிதிலாவின் கன்னத்தை பற்றி, அவளை பார்க்க விடாமல் தடுத்தார் சாந்தா.
"என்கிட்ட உண்மையை சொல்ல மாட்டியா?"
"ஃபீஸ் கட்டலன்னு என்னை ஸ்கூல்ல இருந்து அனுப்பிட்டாங்க பெரியம்மா" என்று கூறினாள் தலைகுனிந்தபடி மிதிலா.
"அவ சொல்றது உண்மையா?" என்றார் ஆனந்தன் அதிர்ச்சியாக.
"எங்ககிட்ட இதைப் பத்தி நீ ஏன் சொல்லல?" என்றார் சாந்தா வேதனை நிறைந்த முகபாவத்தோடு.
"அவ எப்படி சொல்லுவா சாந்தா? இது அவ புருஷனுடைய கவுரவ பிரச்சனை ஆச்சே..." என்றார் ஆனந்தன் வெறுப்போடு.
"அம்மா பணம் கேட்டா, அப்பா அவங்களை அடிக்கிறாரு" என்றாள் கலங்கிய விழிகளோடு மிதிலா.
அதைக்கேட்டு பல்லை கடித்த சாந்தா,
"அவனை நான் சும்மா விடப் போறதில்ல" என்றார் கோபமாக.
"வேண்டாம் கா. அவரைக் கேட்டு எந்த பிரயோஜனமும் இல்ல. அவரு நம்ம கைல இருந்து மொத்தமா நழுவிப் போயிட்டாரு... எந்த நேரமும் போதையிலேயே இருக்காரு. அவருக்கு குடிக்க மட்டும் எப்படி பணம் கிடைக்குதுன்னு எனக்கு புரியல. குடிப்பழக்கத்தால அவருடைய வேலையையும் விட்டுட்டாரு. பாக்குறவங்ககிட்ட எல்லாம் வெட்கமே இல்லாம பணம் கேட்கிறாருன்னு கேள்விப்பட்டேன்... எல்லாருக்கும் பெரிய தொல்லையா இருக்காரு..."
"நேத்து, அப்பா ரோட்டுல விழுந்து கிடந்தாரு. நானும் அம்மாவும் தான் அவரை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தோம்" என்றாள் மெல்லிய குரலில் மிதிலா.
"எது எப்படி இருந்தாலும், இந்த விஷயத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவராம, நான் விழுப்புரத்தை விட்டு கிளம்ப போறதில்ல. ஆனா, அதுக்கு முன்னாடி, மிதிலாவுடைய ஸ்கூல் ஃபீஸை கட்டி அவளை ஸ்கூலுக்கு அனுப்பறேன்"
"தேங்க்யூ பெரியப்பா. இதுக்கப்புறம் என்னால ஸ்கூலுக்கு போகவே முடியாதுன்னு நினைச்சேன்" என்று ஆனந்தனை கட்டிக்கொண்டாள் மிதிலா.
"நீ அப்படியெல்லாம் நினைக்க வேண்டாம் டா. நாங்க இருக்கோமில்ல? நான் உன்னைப் படிக்க வைக்கிறேன். நீ நல்லா படிக்கிற பொண்ணு இல்லையா...!"
மிதிலாவின் முகம், புதிதாய் மலர்ந்த மலரை போல் மாறியது தனது பெரியப்பா ஆனந்தனின் வார்த்தைகளைக் கேட்டு.
"நீ கல்யாணத்துக்கு ரெடி ஆகு. நான் இப்ப வரேன்" என்று கூறிவிட்டு சென்ற ஆனந்தன், அருகிலிருந்த ஏடிஎம்முக்கு சென்று, சில நிமிடங்களில் பணத்துடன் திரும்பி வந்தார். அதை வசந்தாவிடம் கொடுத்தார்.
"முதல்ல ஃபீஸை கட்டு. மிதிலா என்னுடைய பொறுப்பு. என்கிட்ட எதையும் கேட்க தயங்காதே. படிப்பு ரொம்ப முக்கியம்" என்றார் ஆனந்தன்.
"எனக்கு நீங்க இன்னொரு உதவி செய்ய முடியுமா?"
"என்ன வேணும்?"
"எனக்கு ஒரு வேலை வாங்கி கொடுங்க. அவளை நான் படிக்க வச்சிக்கிறேன்"
சரி என்று தலையசைத்த ஆனந்தன்,
"உனக்கு வேலை நான் வாங்கி தரேன். ஆனாலும், மிதிலாவுடைய படிப்பை நான் பார்த்துக்கிறேன்"
பெருமூச்சு விட்டார் வசந்தா.
ஆனந்தன் குடும்பத்தினர் திருமணத்திற்கு கிளம்பி சென்றார்கள். தனது அம்மாவை சந்தோஷமாய் கட்டிக்கொண்டாள் மிதிலா.
"எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மா"
"எனக்கும் தான். நீ பாத்தல்ல... பெரியம்மாவும் பெரியப்பாவும் நமக்கு எவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்காங்கன்னு...? நீ அவங்களுக்கு எப்பவும் நன்றியோட இருக்கணும். அவங்க செஞ்ச உதவியை எப்பவும் மறக்க கூடாது"
"எப்பவும் மறக்க மாட்டேன் மா..."
"அதுக்கு நீ நல்லா படிக்கணும். அது தான் நீ அவங்களுக்கு செய்ற ரொம்ப பெரிய கைமாறு. ஒரு பொண்ணுக்கு எல்லாத்தையும் விட படிப்பு தான் ரொம்ப முக்கியம். பாரு, என்னால உங்க அப்பாவை எதிர்த்து எதுவுமே செய்ய முடியல... நான் மட்டும் நல்லா படிச்சு, வேலைக்கு போயிருந்தா, உங்க குடிகார அப்பாவோட கையை எதுக்கும் எதிர்பார்த்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அதை நீ மனசுல வச்சி நல்லா படிக்கணும். உன்னுடைய திறமையையும், நம்பிக்கையையும் வளர்த்துக்கணும்... புரிஞ்சதா?"
புரிந்தது என்று புன்னகையுடன் தலையசைத்தாள் மிதிலா.
"அதோட, எப்பவும் இதே மாதிரி சந்தோஷமா சிரிச்சுக்கிட்டே இருக்கணும்... உன்னுடைய சந்தோஷத்தை தவிர வேறு எதுவும் எனக்கு வேண்டாம்..."
"நான் சந்தோஷமா இருப்பேன் மா. நீங்க தான் எனக்கு ஃபீஸ் கட்டி ஸ்கூலுக்கு அனுப்ப போறீங்கல்ல..." என்றாள் சந்தோஷமாக.
அவர்களது முகபாவம் மாறிப்போனது, மிதிலாவின் அப்பா காமராஜின் குரலைக் கேட்டு.
"என்னது, ஃபீஸ் கட்ட போறியா? அப்படின்னா உன்கிட்ட பணம் இருக்கு. அதை என்கிட்ட குடு" என்றார் தள்ளாடியபடி.
அம்மாவும் மகளும் பேயறைந்தது போல் ஆனார்கள். பணத்தை தன் பின்னால் மறைத்துக் கொண்டார் வசந்தா.
"இங்க பாரு இது மிதிலாவுடைய ஸ்கூல் ஃபீஸ்க்கு..."
"அது படிச்சு என்ன செய்யப் போகுது? இன்னொரு வீட்டுல போயி பத்துபாத்திரம் தானே தேய்க்க போகுது?"
அவர் கையிலிருந்த பணத்தை பிடுங்க முயன்றார். தனது குடிகார கணவனிடமிருந்து அந்த பணத்தை காப்பாற்ற போராடினார் வசந்தா. தனது பெற்றோரின் சண்டையை பார்த்து பயந்த மிதிலா, ஓடிச்சென்று அந்த அறையின் மூலையில் பயத்துடன் நின்று கொண்டாள்.
"கொடு பணத்தை"
"என் உயிரே போனாலும் கொடுக்க மாட்டேன்... "
இறுதியில், குடிகாரனின் கைக்கு பணம் சென்றது. அருகில் இருந்த கத்தியை எடுத்து அவரை மிரட்டினார் வசந்தா. அதைப் பார்த்து மேலும் பயந்து போன மிதிலா, பக்கத்து வீட்டுக்காரரிடம் உதவி கோரி ஓடினாள்.
"மரியாதையா பணத்தைக் கொடு. இல்லன்னா உன்னை கொன்னுடுவேன்" என்றார் வசந்தா.
அவரை வேகமாய் பிடித்து தள்ளினார் காமராஜ். அங்கு மூடாமல் வைத்திருந்த மண்ணெண்ணெய் டின்னின் மீது விழுந்தார் வசந்தா. அவர் உடல் மண்ணெண்ணெயில் நனைந்தது. விடாமல் மீண்டும் கத்தியுடன் காமராஜை நெருங்கினார். மீண்டும் அவரைப் பிடித்துத் தள்ள, இந்த முறை, எரிந்து கொண்டிருந்த அடுப்பில் சென்று விழுந்தார் வசந்தா. மண்ணெண்ணெயால் நனைந்திருந்த அவரது உடலில் நெருப்பு சட்டென்று பற்றியது.
அக்கம் பக்கத்து வீட்டாருடன் அங்கு வந்த மிதிலா, அந்த கோரக் காட்சியை கண்டு திகைத்து நின்றாள். பணத்துடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார் காமராஜ். வசந்தாவின் மரண ஓலம் அந்த இடம் முழுவதையும் ஆக்கிரமித்தது. தன் அம்மாவை நோக்கி ஓட முயன்ற மிதிலாவை, அருகில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தினார்கள், அவளையும் நெருப்பு பற்றிக் கொண்டுவிடலாம் என்ற எண்ணத்தில்.
அந்தக் கொடுமையை கேட்ட ஆனந்தன் குடும்பத்தினர், திருமணத்திலிருந்து பாதியில் ஓடோடி வந்தார்கள். எரிந்து சாம்பலாகிப் போன தனது அம்மாவை பார்த்து, நிராதரவாய் கதறி அழுது கொண்டிருந்த மிதிலாவுக்கு, ஆதரவு தோள் கொடுத்தார்கள் ஆனந்தன் குடும்பத்தினர்.
.......
ஒரு நாய் குறுக்கே ஓடியதால், சடன் பிரேக்கை அழுத்தி, ஸ்ரீராம் காரை நிறுத்த, தனது நினைவலையிலிருந்து வெளியேறினாள் மிதிலா. திடுக்கிட்டு கண் விழித்த மிதிலா, தான் தனது பாஸின் காரில் அமர்ந்திருப்பதை கண்டாள். சுற்றும் முற்றும் பார்த்தவள், தனது குடியிருப்பு பகுதிக்கு வந்து விட்டதை உணர்ந்தாள்.
"என்னை இங்கேயே இறக்கி விட்டுடுங்க சார்"
"உங்க வீட்டுக்கு இன்னும் ஒரு தெரு தான் இருக்கு"
"ப்ளீஸ் சார்... நான் நல்லபடியா வீடு வந்து சேர்ந்துட்டேனான்னு தெரிஞ்சுக்க தானே நினைச்சீங்க? நான் தான் இங்க வந்துட்டேனே"
காரின் சென்டர் லாக்கை ஸ்ரீராம் திறக்க, காரைவிட்டு இறங்கி நடக்கத் தொடங்கினாள் மிதிலா. காரில் அமர்ந்து அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான் ஸ்ரீராம். அவள் ஏன் இவ்வளவு கலவரப்பட்டு காணப்படுகிறாள்? அவ்வாறு அவன் நினைத்த போது தான், அவளுக்கு கொடுக்க வேண்டிய மருந்தை அவன் கொடுக்காமல் மறந்து போனது அவனது ஞாபகத்திற்கு வந்தது. அதை மறந்து விடாமல் அவளிடம் கொடுக்க சொல்லி மருத்துவர் கூறியிருந்தாரே... காரை ஓரமாக நிறுத்திவிட்டு, அவள் வீட்டை நோக்கி நடந்தான் ஸ்ரீராம்.
தனது கைப்பேசியை எடுத்துப் பார்த்தவன், அதில் மணிகண்டனிடம் இருந்து ஏழு மிஸ்டு கால்கள் வந்திருந்ததை கண்டான். அப்பொழுது தான் அவன் நினைவுக்கு வந்தது, மிதிலா தனது அறையில் உறங்கிக் கொண்டிருந்த போது, அதை சைலன்ட் மோடுக்கு மாற்றியது. உடனே மணிகண்டனுக்கு போன் செய்தான்.
"எஸ்ஆர்கே..."
"சொல்லுங்க "
"இன்னைக்கு, யுவராஜும், அவனோட அம்மாவும் மிதிலா மேடம் வீட்டுக்கு போய் கல்யாணத்தை பத்தி பேசினாங்க"
"வாட் த ஹெல்" என்று பல்லைக் கடித்தான் ஸ்ரீராம்.
"மிதிலா மேடத்தோட அம்மாவுக்கு இந்த சம்பந்தத்தில் முழு விருப்பம்"
"உங்களுக்கு எப்படி தெரியும்?"
"அவங்க ஹஸ்பண்ட்கிட்ட இதைப் பத்தி அவங்க சந்தோஷமா பேசினதை நான் கேட்டேன்"
"நீங்க யுவராஜை கண்காணிங்க..." என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான் ஸ்ரீராம்.
யுவராஜுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்...! இதற்கு மேலும் அவன் சும்மா வேடிக்கை பார்க்க முடியாது. அவனுக்கு பதில் கூறாமல் இன்று மிதிலாவை விடப்போவதில்லை, என்ற எண்ணத்துடன் மிதிலாவின் வீட்டை நோக்கி நடந்தான் ஸ்ரீராம்.
ஆனால், அவள் வீட்டை நெருங்கிய போது, அவனது கால்கள் தனது வேகத்தை இழந்தன. மிதிலாவும் அவளது அம்மாவும் பேசிக்கொண்டிருந்ததை கேட்டு அவன் அப்படியே சிலை போல் நின்றான்.
இதற்கிடையில்,
வீட்டிற்குள் நுழைந்த மிதிலாவை பார்த்து, அவளை நோக்கி இனிப்புடன் சந்தோஷமாய் ஓடினார் சாந்தா. அதை மிதிலாவுக்கு அவர் ஊட்டிவிட முயன்ற போது, அவரை தடுத்தாள் மிதிலா.
"இந்த ஸ்வீட்டை சாப்பிடு... உனக்கு எவ்வளவு நல்ல சம்பந்தம்..."
அந்த வாக்கியத்தை அவர் முடிக்கும் முன்,
"இந்த கல்யாணம் நடக்காது" என்றாள் மிதிலா.
இனிப்பை பிடித்திருந்த சாந்தாவின் கரம் அனிச்சையாய் கீழே இறங்கியது.
"நீ என்ன சொல்ற?"
அமைதியாய் நின்றாள் மிதிலா.
"நீ என்ன செஞ்ச மிதிலா?"
"யுவராஜ் அம்மாகிட்ட உண்மையை சொல்லிட்டேன்"
"எந்த உண்மை?" என்றார் பதட்டத்துடன்.
"என் வாழ்க்கையோட ரொம்ப பெரிய உண்மை"
"என்னது...???? ஏன் மிதிலா?"
"ஏன்னா, அது உண்மை..."
"அது செத்துப் போன உண்மை"
"உண்மை எப்பவுமே சாகாது மா"
"உண்மையிலேயே நீ அவங்ககிட்ட சொல்லிட்டியா?"
ஆமாம் என்று தலையசைத்தாள் மிதிலா. தொப்பென்று சோபாவில் அமர்ந்தார் சாந்தா. அவர் முன் மண்டியிட்டு அமர்ந்தாள் மிதிலா.
அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டு வெளியே நின்ற மனிதனுக்கு, அவர்கள் எந்த உண்மையைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று புரியவில்லை.
"என்னை மன்னிச்சிடுங்க மா. உங்களுக்கு பணக்காரங்களை பத்தி தெரியாது. அவங்க, மனுஷங்களுக்கும், அவங்களுடைய உணர்வுகளுக்கும் மரியாதையே கொடுக்க மாட்டாங்க. அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் பணம் மட்டும் தான். மத்தவங்களை அவமானப்படுத்த தயங்கவே மாட்டாங்க. அதை நானே அனுபவிச்சிருக்கேன் மா. பணக்காரங்களை நம்பாதிங்க மா. யுவராஜ் என் மேல வச்சிருக்கிறது உண்மையான காதல் இல்ல. அவருடைய வியாபார வளர்ச்சிக்கு நான் தேவை. அதுகாகத் தான் அவர் என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறார். அவ்வளவு தான்..."
கண்களைத் துடைத்தபடி எழுந்து நின்றாள் மிதிலா.
"நான் கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்ங்குற முடிவுக்கு வந்துட்டேன். எல்லார்கிட்டயும் போய் எங்க அப்பா ஒரு கொலைகாரன்னு சொல்லிக்கிட்டு இருக்க எனக்கு பிடிக்கல. யார் முன்னாலயும் தலைகுனிஞ்சி நிக்க நான் விரும்பல..."
"என்ன சொல்ற மிதிலா?"
"நான் கடைசி வரைக்கும் உங்களோடவும் அப்பாவோடவும் இருந்துடுறேன் மா. ஏன்னா, இந்த உலகம் நம்ம பலவீனத்தோட விளையாட தான் ரொம்ப விரும்புது... என்னை குத்தி காட்டி பேசுற சந்தர்ப்பத்தை நான் ஏம்மா ஒருத்தருக்கு கொடுக்கணும்? அதனால தான் சொல்றேன் எனக்கு கல்யாணமே வேண்டாம்..."
"அப்படின்னா, நீ எங்களை உன்னோட அம்மா அப்பாவா நினைக்கலயா? இது தான் உன் மனசுல இருக்கா?"
"என்னோட அம்மாவுக்கு அடுத்ததா நான் உங்களையும் அப்பாவையும் தான் ரொம்ப நேசிக்கிறேன். நீங்க எனக்கு வாழ்க்கை கொடுத்திருக்கீங்க, படிப்பு, மரியாதை எல்லாம் கொடுத்திருக்கீங்க"
"அப்படின்னா, உனக்கு, நாங்க தான் அம்மா அப்பான்னு நினைச்சுக்கோ. உன்னோட கடந்த காலத்தை மறந்துடு மிதிலா..."
"நீங்க தான் என்னோட அப்பா அம்மா..."
"நீ சொல்றது உண்மையா?"
"அதுல உங்களுக்கு சந்தேகமா?"
"இதுவரைக்கும் நான் உன்னோட அன்பை சந்தேகப்பட்டது இல்ல. ஆனா, இப்ப படுறேன்... "
"அம்மா தயவுசெய்து புரிஞ்சுக்கோங்க. என் அம்மாவோட கடைசி வார்த்தைகளை நான் இன்னும் மனசுல வச்சிக்கிட்டு தான் வாழறேன். நான் உங்களுக்கு நன்றியோடு இருக்கணும்னு அவங்க சொல்லிட்டு தான் இறந்தாங்க"
"உண்மையிலேயே உனக்கு நன்றி இருந்தா, ( அவளது கையை எடுத்து தன் தலையில் வைத்துக் கொண்டு ) உன்னை கல்யாணம் பண்ணிக்க விரும்புறவங்ககிட்ட நீ உண்மைய சொல்ல கூடாது."
"அம்மா..." என்று அதிர்ந்தாள் மிதிலா.
"சத்தியம் பண்ணி குடு"
"நான் குற்ற உணர்ச்சியோடு வாழணும்னு நினைக்கிறீர்களா? உண்மையை மறைச்சி நான் எப்படி மா சந்தோஷமா இருக்க முடியும்?"
"நீ செய்யாத ஒரு தப்புக்காக எதுக்காக நீ தண்டனை அனுபவிக்கணும்? உன்னோட அப்பா உங்க அம்மாவை உயிரோட எரிச்சான். அதுல நீ செஞ்ச தப்பு என்ன இருக்கு?"
"ஆனா, என்னை எல்லாரும் கொலைகாரனுடைய மகள்னு தான் கூப்பிடுறாங்க"
"அவங்களைப் பத்தியெல்லாம் நீ கவலைப்பட வேண்டியதில்ல. உன்னுடைய விதி ஏற்கனவே எழுதப்பட்டுடுச்சு. உன்னை கல்யாணம் பண்ணிக்க போறவனும் ஏற்கனவே பொறந்துட்டான். நான் வணங்குற கடவுள், உன்னை நல்லா புரிஞ்சுக்கிற ஒருத்தன் கையில தான் உன்னை ஒப்படைப்பார்னு நான் நம்புறேன்"
"அப்படிப்பட்ட ஒருத்தன், இந்த உலகத்துல இருக்க வாய்ப்பே இல்லம்மா..."
"இல்ல மிதிலா, கடவுளை நம்பு. வாழ்க்கையை எதிர்த்துப் போராடு. உங்க அம்மாவுக்கும் அது தான் விருப்பம். தன்னுடைய மகள், போராட்ட குணத்தோட இருக்கணும்னு தான் அவளும் விரும்பினா. அதை மறந்துடாத"
அமைதியானாள் மிதிலா. அவளுக்கு புரியவில்லை எப்படி சாந்தாவுக்கு புரியவைப்பது என்று.
"எனக்கு சத்தியம் பண்ணி கொடு மிதிலா"
"என்னை யாரும் கேட்காத வரைக்கும், நான் உண்மையை சொல்ல மாட்டேன்"
"அப்படின்னா என்ன அர்த்தம்?"
"என்னோட கடந்த காலத்தை பத்தி யாராவது நேரடியா என்கிட்ட கேட்டா, நான் உண்மையை சொல்ல தான் செய்வேன்"
"ஆனா, மிதிலா..."
"அப்படி சொன்னா, அது என் வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்தும்னு நீங்க பயப்படுறீங்க இல்லையா...? அதுக்காகத் தான் மா நானும் கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்னு நினைக்கிறேன்"
"இல்ல மிதிலா, உன்னோட நல்ல குணம் தெரிஞ்ச யாரும் உன்னுடைய கடந்த காலத்தை பெரிசா எடுத்துக்க மாட்டாங்க. நானும் உனக்கு வாக்கு கொடுக்கிறேன், எதைப் பத்தியும் கவலைப்படாம உன்னை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறவனுக்கு தான் உன்னை கல்யாணம் பண்ணிக் கொடுப்பேன். நாங்களா யார்கிட்டயும் கல்யாண பேச்சை எடுத்துக்கிட்டு போகமாட்டோம். அதனால தான் யுவராஜ் வந்தப்போ நான் சந்தோஷப்பட்டேன். உன்னுடைய ஃபிரண்டு உன்னை புரிஞ்சுக்குவாருன்னு நெனச்சேன்..."
"ஆனா, அவங்க அம்மாவை பத்தி உங்களுக்கு தெரியாது. அவங்க ரொம்ப கவுரவம் பாக்குறவங்க. ஒரு கொலைகாரனுடைய மகளை நிச்சயம் மருமகளா ஏத்துக்க மாட்டாங்க. உண்மை தெரிஞ்சா, ரொம்ப பெரிய பிரச்சனை செய்வாங்க. அதனால தான் அவங்ககிட்ட நான் உண்மையை சொல்லிட்டேன்"
இயலாமையுடன் தலையசைத்தார் சாந்தா.
"ஐ அம் சாரி மா... "
"போய் முகத்தை கழுவிட்டு வா. உனக்கு நான் காபி போட்டு கொடுக்கிறேன்"
முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு சரி என்று தலை அசைத்த மிதிலா, தன் அறையை நோக்கி சென்றாள். அவளுக்கு தெரியும் சாந்தாவிற்கு தன் மீது வருத்தம் என்று. ஆனால், அவளுக்கு வேறு வழி இல்லை. பவித்ராவை பற்றி நன்கு அறிந்து கொண்டபின், அவளால் உண்மையை கூறாமல் இருக்க முடியாது.
கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு அதிர்ச்சியான விஷயங்களை கேட்ட ஸ்ரீராம் கருணாகரனும், அமைதியாய் அந்த இடத்தை விட்டு அகன்றான்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top