32 கல்லுக்குள் ஈரம்
32 கல்லுக்குள் ஈரம்
வழக்கத்திற்கு மாறான அமைதியுடன் விளங்கியது பூவனம். இருப்புக் கொள்ளாமல் இங்குமங்கும் உலவிக் கொண்டிருந்தான் ஸ்ரீராம். மிதிலாவின் வார்த்தைகள், அவன் தலைக்குள் மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தன. அவனை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று கூறுவதற்கு அவளுக்கு எவ்வளவு தைரியம்...! அவள் தைரியத்திற்கு என்ன குறை...! அவள் எப்போதுமே தைரியத்துடன் அவனை எதிர்த்து நிற்பவள் தானே...! எப்போது அவனைப் பார்த்து அவள் பயந்திருக்கிறாள்...? அவர்கள் சந்தித்த முதல் நாளிலிருந்தே, அவனை அவள் எதிர்த்து நின்று சமாளித்துக் கொண்டு தான் இருக்கிறாள்... ஏதோ ஒருவிதத்தில் இவனும் அவளால் கவரப்பட்டு கொண்டு தான் இருக்கிறான்... எல்லோரிடத்திலிருந்தும், எல்லாவற்றிலிருந்தும் அவள் ஒரு விதிவிலக்கு...
யாரோ கதவை திறக்கும் சத்தம் கேட்டு, தனது அறையின் வாசற்படியை பார்த்து நின்றான் ஸ்ரீராம். அவனைப் பார்த்தபடி உள்ளே நுழைந்தாள் நர்மதா. அவளைப் பார்த்தவுடன், சோபாவில் அமர்ந்து, கீழே பார்த்தபடி தன் கை விரல்களை கோர்த்துக் கொண்டான் ஸ்ரீராம், அம்மாவிடம் கோபத்தை காட்டும் சிறு பிள்ளையை போல, முகத்தை வைத்துக்கொண்டு. அவன் அருகில் வந்தமர்ந்தாள் நர்மதா.
"என் மேல நீ கோவமா இருக்க இல்ல?"
அவளுக்கு பதில் கூறாமல் அமைதியாக இருந்தான் ஸ்ரீராம்.
"எனக்குத் தெரியும் நீ கோவமா இருக்கேன்னு. உன்னை காயப்படுத்த நான் அப்படியெல்லாம் பேசல. இது வேற விஷயமா இருந்தா, நிச்சயம் நான் உனக்காகத் தான் போராடுவேன். அது உனக்கும் நல்லா தெரியும். ஆனா, மிதிலா விஷயம் வேற. அவங்க மனசுல, உன்னை பத்தின தப்பான அபிப்ராயத்தை நீயே தான் உருவாக்கிட்ட. இது அவங்களுடைய வாழ்க்கை... தனக்கு என்ன வேணுமுன்னு முடிவு எடுக்கிற எல்லா உரிமையும் அவங்களுக்கு இருக்கு இல்லையா...?"
அவள் பேசுவதை தடுத்து நிறுத்தி, ஸ்ரீராம் கூறிய வார்த்தைகள் நர்மதாவுக்கு திகைப்பூட்டியது.
"ஏன் கா அவங்களுக்கு நான் வேண்டாம்? நான் அவ்வளவு கெட்டவனா? என்கிட்ட நல்லதுன்னு எதுவுமே இல்லையா?" என்ற போது அவன் குரல் கம்மியது.
அகங்காரத்திற்க்கு பெயர் போனவனான ஸ்ரீராமின் இயலாமை நிலையை பார்த்த நர்மதா, தன் தம்பிக்காக வருத்தப்பட்டாள்.
"இதுல என்னோட தப்பு என்ன இருக்கு? நம்மளை நடுத்தெருவுல நிறுத்தினார் வேலாயுதம். அவருக்கு முன்னாடி வாழ்ந்து காட்டணும்கிற வெறியோட முன்னேறினப்போ, நான் என்னுடைய இயல்பை இழுந்துட்டேன். அப்போ அது அவசியமா தோணாததால, கவனிக்காம விட்டுட்டேன்... மத்தவங்களை இம்ப்ரஸ் பண்றா மாதிரி பேசவும், நடந்துக்கவும் நான் கத்துக்க தவறிவிட்டேன் கா."
நர்மதாவின் கண்கள் கலங்கியது. அவள் இதற்கு முன் எப்போதும் ஸ்ரீராமை இப்படி பார்த்ததில்லை. ஸ்ரீராமின் கல் மனதிற்குள்ளும் ஈரம் இருக்கத் தானே செய்கிறது.
"ஒரு பொண்ணு, இந்த அளவுக்கு உண்மையானவளா இருப்பான்னு நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவே இல்ல கா. அவ ரொம்ப உண்மையானவ... உங்களை மாதிரி... நம்ம அம்மாவை மாதிரி..."
பேச்சிழந்து போனாள் நர்மதா. தங்கள் அம்மாவுடன் மிதிலாவை சேர்த்து வைத்து பேசியதற்காக நர்மதாவிடம் கோபப்பட்ட அதே ஸ்ரீராம், இன்று அதையே செய்கிறான்... முழுமனதாய்... அவன் மனதில் மிதிலா கொண்டுள்ள இடம் என்ன என்பதை புரிந்து கொள்ள இதைவிட வேறு என்ன வேண்டும்?
"நீ கெட்டவன் இல்ல ராமு. நீ கவலை படாதே. மிதிலா புத்திசாலி பொண்ணு. உன்னை அவங்க புரிஞ்சுக்குவாங்க. அவங்க அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கிறவங்க இல்ல. உன்னை மிதிலாவுக்கு நிச்சயம் பிடிக்கும். இப்போ இல்லனாலும், எதிர்காலத்துல நிச்சயம் அவங்க உன்னை விரும்புவாங்க"
அதைக்கேட்டு ஸ்ரீராமின் முகம் அழகிய புன்னகையுடன் மலர்ந்தது. எதிர்காலம்... தனது எதிர்காலம் முழுவதும் மிதிலா தன்னுடன் இருக்க வேண்டும் என்பது தான் அவனுக்கும் வேண்டும்.
"நாங்க மிதிலாவோட அப்பா அம்மாகிட்ட பேசுறோம்..."
"இல்லக்கா... இப்போ வேண்டாம்..."
அவனை குழப்பத்துடன் பார்த்தாள் நர்மதா.
"நான் சொன்ன பிறகு பேசுங்க"
சரி என்று தலையசைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் நர்மதா. ஸ்ரீராமின் மனதில் ஏதோ ஓடிக் கொண்டிருப்பது அவளுக்கு புரிந்தது.
நர்மதா நினைத்தது தவறில்லை. ஸ்ரீராமின் மனதில் எண்ணற்ற எண்ணங்கள் ஓடிக் கொண்டு தான் இருந்தது. மிதிலாவின் அப்பா ஆனந்தன், அவனிடம் கூறிய வார்த்தைகள் அவனுக்கு நினைவுக்கு வந்தது.
*மிதிலா எப்பவும் உங்களைப் பத்தி தான் பேசிக்கிட்டே இருப்பா. உங்களைப் பத்தி பேச ஆரம்பிச்சா, அவளுக்கு சலிக்கவே சலிக்காது. உங்களுடைய ஹார்ட் வொர்க்... எஃபர்ட்ஸ்... மேனேஜ்மென்ட் ஸ்கில்ஸ்... எல்லாமே அவளுக்கு ரொம்ப பிடிக்கும். சுருக்கமா சொல்லணும்னா அவ உங்களுடைய ரசிகை*
மிதிலாவுக்கு தன்னை பிடிக்காமல் ஒன்றுமில்லை. அவனிடம் இருக்கும் சில விஷயங்கள் அவளுக்கு பிடிக்கும். அவனுடைய ரசிகை அவள். அவளுடைய அப்பாவே அதைப் பற்றி கூறியிருக்கிறாரே. மனநிறைவோடு சிரித்தான் ஸ்ரீராம்.
மறுநாள்
எஸ்ஆர் ஃபேஷன்ஸ்
பரத்தும், லட்சுமணனும் குகனின் அறைக்கு வந்தார்கள். அவர்களைப் பார்த்து,
"ஹாய்" என்றான் குகன்.
ஒன்றும் கூறாமல் அவன் முன்னால் அமர்ந்தார்கள் இருவரும்.
"ஏன், ரெண்டு பேரும் ஒரு மாதிரியா இருக்கீங்க? "
"எதுக்காக ராமு இப்படி எல்லாம் செய்றான்?" என்றான் லட்சுமன் முகத்தை சுள்ளென்று வைத்துக்கொண்டு.
"அவன் என்ன செஞ்சான்?"
"அவருக்கு மிதிலாவை கல்யாணம் பண்ணிக்கணுமாம்." என்றான் பரத் சுரத்தே இல்லாமல்.
"என்ன்ன்னனனது.? உங்களுக்கு எப்படி தெரியும்?" என்ற அவனது குரலில் அதிர்ச்சியும், உற்சாகமும் ஒரு சேர கலந்திருந்தது.
"நேத்து, அதை அவனே சொன்னான்" என்றான் லட்சுமன்.
"என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெளிவா சொல்லுங்க" என்றான் குகன்.
பரத்தும், லக்ஷ்மணனும் முதல் நாள் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடித்தார்கள். ஸ்ரீராம் நேரடியாய் மிதிலாவிடம் பேசுவதற்கு முன்னால், அவனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நினைத்தான் லக்ஷ்மன். குகன் ஒருவனால் மட்டும் தான் ஸ்ரீராமிடம் மிதிலாவுக்காக வாதாட முடியும் என்பதால் தான் இப்போது அவனிடம் வந்திருக்கிறான் அவன். ஆனால் பரத்தும், லக்ஷ்மணனும் எதிர்பாராத விதமாய், ஸ்ரீராமின் பக்கம் நின்றான் குகன்.
"நிஜமாவா சொல்றீங்க...? உண்மையிலேயே எஸ்ஆர்கே தான் இதெல்லாம் சொன்னானா?"
"ஆமாம் குகா... என்னால நம்பவே முடியல" என்றான் பரத்.
"எது அவனை கல்யாணத்தைப் பத்தி நினைக்க வைச்சிதுன்னு எனக்கு புரியல" என்றான் லட்சுமணன்.
"வேற எது? மிதிலா தான். அவங்களை அவன் காதலிக்கிறான்..." என்றான் புன்னகையுடன் குகன்.
"நான் அப்படி நினைக்கல" என்றான் லட்சுமணன்.
"உன்னுடைய பார்வையில, காதல் வேற விதமா இருக்கலாம். காதலைப் பத்தி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கு. ஸ்ரீராமை பொறுத்தவரைக்கும், அது நம்ம கற்பனைக்கு எட்டாதது. அவன் மனசுல இருக்கிறதை வெளியில் காட்டிக்க மாட்டான். அதுக்காக, அவன் மனசுல காதல் இல்லன்னு அர்த்தமில்ல. அவன் கொஞ்சம் வித்தியாசமானவன். அவ்வளவு தான்"
"எவ்வளவு ஈசியா சொல்லிட்ட... உனக்கு தெரியாதா, அவனுக்கும் மிதிலாவுக்கும் நடுவுல இருக்கிற வேவ்-லெங்த் என்னன்னு? தனக்கு வரப் போற ராஜகுமாரனை பத்தி பெரிய கற்பனை இருக்கு மிதிலாவுக்கு. அந்த ராஜகுமாரன் நிச்சயம் ராமு கிடையாது..."
"அதை நீ எப்படி சொல்லுவ? அவனைப் பத்தி உனக்கு என்ன தெரியும்? எது பிடிக்கும், பிடிக்காதுன்னு நம்மளை மாதிரி அவன் தம்பட்டம் அடிக்கிறது கிடையாது... அவன் அப்படித் தான்..."
"ஆனா மிதிலாவுக்கு அவனை பிடிக்காது..."
"அதை அவங்களே முடிவு பண்ணட்டும், லக்ஷ்மன். இந்த விஷயத்துல ஸ்ரீராமுக்கு சப்போட்டா உன்னால இருக்க முடியாதுன்னா, தயவுசெய்து அவனுக்கு எதிராவும் நிக்காதே..." என்றான் கண்டிப்பான குரலில் குகன்.
"ஆனா..."
"அவனுடைய தம்பிகளா இருந்துகிட்டு நீங்களே அவனுக்கு எதிரா இருந்தா வேற யாரு அவனுக்கு துணையா இருப்பா? அவனுடைய தம்பிகளுக்கே அவன் மேல நல்ல மதிப்பில்லைன்னு தெரிஞ்சா அவனை யார் மதிப்பா?" தனது நண்பனுக்காக வரிந்து கட்டிக் கொண்டு வந்தான் குகன்.
"நாங்க அவருக்கு எதிரா இல்ல, குகா. நாங்க மிதிலாவை பத்தி தான் கவலைப்படுறோம். கல்யாணம்ங்குறது சரியான ஆளை தேர்ந்தெடுக்கிறது தானே?" என்றான் பரத் குரலில் வருத்தம் தெறிக்க.
"ஏன் பரா? ஸ்ரீராம் என்ன பொறுக்கியா? பொம்பளைங்க பின்னாடி சுத்துறவனா? குடிகாரனா? இல்ல முதுகுல குத்துறவனா? அவன் ஒரு பொண்ணுக்கு சரியானவனா இருக்க மாட்டான்னு, உன்னால தைரியமா சொல்ல முடியுமா?"
பரத்தும் லக்ஷ்மணனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"ஸ்ரீராம் மாதிரி தங்கமான ஒருத்தன் மிதிலாவுக்கு நிச்சயம் கிடைக்க மாட்டான். அவனும் மிதிலாவை மாதிரியே சுத்தமானவன். அவங்க ரெண்டு பேரும் நிச்சயம் சந்தோஷமா இருப்பாங்க. ஏன்னா, மிதிலா புத்திசாலி. நம்ம யாரும் அவங்களை பத்தி கவலைப்பட வேண்டிய அவசியமில்ல. தன்னுடைய வாழ்க்கையை எப்படி லீட் பண்ணனும்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும். ஸ்ரீராம் அவங்களை கல்யாணம் பண்ணிக்க விரும்புறதுக்காக நீங்க நியாயமா சந்தோஷ படணும். இது எவ்வளவு பெரிய சாதனை தெரியுமா? தன்னோட கல்யாணத்தை பத்தி ஸ்ரீராம் எப்பவுமே நினைச்சி பார்த்ததில்ல. அதை சாத்தியமாக்கி இருக்காங்க மிதிலா. மிதிலா ஒரு ஏக பத்தினி விரதனை புருஷனா அடைய போறாங்க. அதுக்காக பெருமைப்படுங்க"
வார்த்தைகளே வரவில்லை பரத்துக்கும், லட்சுமணனுக்கும். மிதிலாவின் விருப்பத்தை பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருந்த அவர்கள், ஸ்ரீராமை பற்றி யோசிக்க மறந்து தான் போனார்கள்.
"ஸ்ரீராம்கிட்ட தெரியிற மாற்றத்தை நீங்க கவனிக்கலையா? அவன் யாருக்காவது கிஃப்ட் கொடுத்திருக்கானா? அவன் யார்கிட்டயாவது இந்த கம்பெனி டெண்டரை பத்தி டிஸ்கஸ் பண்ணி நீ பார்த்திருக்கியா?"
"எனக்கு குழப்பமா இருக்கு. ஏன்னா, ராமு தனக்கு பிஏவா மிதிலா வரணும்னு கேட்டப்போ, நீ கூட கவலைப்பட்ட. ஆனா இப்போ நீ அவனுக்கு சப்போர்ட் பண்ற..." என்றான் லட்சுமணன்.
"ஏன்னா, இப்போ ஸ்ரீராம்கிட்ட பெரிய மாற்றத்தை நான் பார்க்குறேன். நான் மிதிலாவுக்காக கவலைப்பட்டது உண்மை தான். ஏன்னா, அப்போ எனக்கு மிதிலாவுடைய திறமையை பத்தி தெரியாது. ஆனா இப்போ, நான் அடிச்சு சொல்லுவேன், மிதிலாவால மட்டும் தான் ஸ்ரீராமை மாத்தி கொண்டு வரமுடியும். அவங்க ரெண்டு பேரும் எவ்வளவு சந்தோஷமா இருக்க போறாங்கன்னு நீங்க பார்க்க தான் போறீங்க..."
"ஆனா, மிதிலா முடியாதுன்னு சொல்லிட்டா...?"
"அதை எஸ்ஆர்கே பார்த்துக்குவான். நம்ம வெறும் ஆடியன்ஸ் தான். நம்ம கேமை மட்டும் வேடிக்கை பார்ப்போம்"
சரி என்று தலையசைத்துவிட்டு அங்கிருந்து சென்றார்கள் பரத்தும் லக்ஷ்மணனும். நிம்மதிப் பெருமூச்சுவிட்டான் குகன். எப்படியோ ஸ்ரீராம் தன் மனதில் இருப்பதை கூறி விட்டானே...
.....
அன்று முழுவதும் தனது அறைக்கு மிதிலாவை அழைக்கவே இல்லை ஸ்ரீராம். அது உண்மையிலேயே மிதிலாவை ஆச்சரியப்படுத்தியது. அந்த நாள் முழுக்க, தன்னை அவன் முன் அமரச்செய்து, தனது குத்தீட்டி பார்வையால் தன்னை கொல்வான் என்று எண்ணியிருந்தாள் மிதிலா. ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. அது மிதிலாவை குழப்பவும் செய்தது.
தன்னை கணித்து விடும் சந்தர்ப்பத்தை மற்றவருக்கு வழங்கிவிட்டால், அவன் ஸ்ரீராமே இல்லையே... அவன், விஷயங்களை கையாளும் விதம் அலாதியானது. அதை வெகு விரைவில் மிதிலா தெரிந்து கொள்வாள்.
ஸ்ரீராம் ஏந்த வேலையும் வழங்காததால், தான் முடிக்க வேண்டிய வேலைகளை செய்ய தொடங்கினாள் மிதிலா. அது சம்பந்தமாய், அடுத்த டென்டர்கான மூலப்பொருட்களை பார்வையிட எண்ணினாள். அதனால் உற்பத்தி கூடத்தை நோக்கி நடந்தாள்.
அவள் வெளியே செல்வதை தனது அறையின் கண்ணாடி சுவரின் வழியாக பார்த்தான் ஸ்ரீராம். அவள் எங்கு செல்கிறாள் என்று அவனுக்கு புரியவில்லை. அவள் தான், வேலை நேரத்தில் வேலையை தவிர வேறு எதுவும் செய்ய மாட்டாளே... அதனால் அவளைப் பின்தொடர்ந்து வந்தான். அவள் உற்பத்தி கூடத்தின் உள்ளே செல்வதை கவனித்தான். வாசலில் நின்றபடி அவளை கவனித்துக் கொண்டிருந்தான். மூலப் பொருட்களின் தரத்தை மிகவும் கவனமாய் பரிசோதித்துக் கொண்டிருந்தாள் மிதிலா.
அங்கு, ஒரு தொழிலாளி வேலை செய்தபடி புகை பிடித்துக் கொண்டிருந்தார். அவர் மிதிலாவை கவனிக்கவில்லை. ஆனால், ஸ்ரீராமை கவனித்து விட்டார். ஸ்ரீராமின் திடீர் வருகையை எதிர் பார்க்காத அவர், அவனை பார்த்த பதட்டத்தில் யோசிக்காமல், தன் கையில் இருந்த சிகரெட்டை தூக்கி எறிந்தார். அது, அங்கு சேர்த்து வைக்கப்பட்டிருந்த, வெட்டி வீசப்பட்ட தேவையற்ற துணி குவியலின் மீது சென்று விழுந்தது.
துரதிர்ஷ்டவசமாக, அதற்கு வெகு அருகில் நின்றிருந்தாள் மிதிலா. சரசரவென அந்த துணி குவியல் கொழுந்துவிட்டு எரிய துவங்கியது. அந்த உற்பத்தி கூடம் முழுவதையும் பதற்றம் ஆட்கொண்டது. ஒரு தொழிலாளி தீயணைப்பானை நோக்கி ஓடினார். ஆனால் அதற்கு முன் அந்த இடம் முழுவதும் புகை சூழ்ந்தது.
மிதிலா நின்றிருந்த இடத்தை குறி வைத்து அவளைத் தேடி பாய்ந்தோடினான் ஸ்ரீராம். மிதிலா நின்றிருந்த கோலத்தை பார்த்து அவனுக்கு அதிர்ச்சியானது. அவள் நெருப்பை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தாள். அவள் உடல் முழுவதும் வியர்வையால் நனைந்து போனது. அவள் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாய் பெருகியது... ஆனால், அதை அவள் உணர்ந்தது போல் தெரியவில்லை. அவள் தோள்களைப் பற்றி உலுக்கினான் ஸ்ரீராம்,
"மிதி...லா..." என்று கத்தியபடி.
"ன்ன்ன்... நெருப்ப்ப்.....பு..." என்று திணறினாள் மிதிலா.
"உங்களுக்கு ஒன்னும் இல்ல... பயப்படாதீங்க..." என்று கூறிய அவன், அவள் தன்நிலையை முழுவதுமாய் இழந்துவிட்டு இருந்ததை உணர்ந்தான்.
அவளது உதடுகள் நடுங்க, கண்ணீர் பெருகும் தன் கண்களை மெல்ல இமைத்து, ஏதோ சொல்ல முயன்றாள். ஆனால், அவள் வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை. அவளது நிலையைப் பார்த்து பொறி கலங்கிப் போனான் ஸ்ரீராம். அவளுக்கு என்ன ஆனது? தனது சுயநினைவை இழந்து, ஸ்ரீராமின் நெஞ்சில் சரிந்தாள் மிதிலா.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top