31 என்ன உண்மை?
31 என்ன உண்மை?
லக்ஷ்மணனும், பரத்தும் தங்கள் அறைக்கு சென்றார்கள். பரத்தை பின் தொடர்ந்து சென்றாள் பிரியா. மறைந்து நின்று அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த லயாவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ஸ்ரீராமின் விருப்பத்திற்கு, அவன் குடும்பமே எதிராய் இருக்கிறதல்லவா...! அவளும் நிம்மதியுடன் தன் அறைக்குச் சென்றாள்.
பாட்டி, புஷ்பா, நர்மதா மட்டும் தினேஷுடன் அங்கேயே அமர்ந்திருந்தார்கள்.
"ஏன் இப்படி செஞ்ச நர்மதா? எதுக்காக ராமுவுடைய விருப்பத்துக்கு எதிரா பேசினீங்க? நம்ம தான் இதைப் பத்தி ஏற்கனவே பேசியிருந்தோமே. ராமு, மிதிலாவை விரும்புறது உனக்கு தெரியாதா?"
பாட்டியையும், புஷ்பாவையும் பார்த்தாள் நர்மதா.
"நீங்க என்ன நெனச்சுக்கிட்டு இருக்கீங்க மாப்பிள்ளை? நாங்க ராமுவோட விருப்பத்துக்கு எதிரா இருக்கோம்னு நினைக்கிறீங்களா?" என்றார் பாட்டி.
"நான் வேற எப்படி நினைக்கிறது பாட்டி?"
அதே நேரம், லேண்ட் லைன் ஃபோனின் மணி அடித்தது.
"மிதிலா தான் ஃபோன் பண்றான்னு நினைக்கிறேன்" என்றார் புஷ்பா புன்னகையுடன்.
ஆமாம் என்று தலையை அசைத்தபடி அதை எடுத்து பேசினாள் நர்மதா.
"ஹலோ... "
"ஐ அம் சாரி கா" என்ற மிதிலாவின் குரல், அவர்கள் எதிர்பார்த்தது சரி என்று கூறியது.
"எதுவும் சொல்லாம காலை கட் பண்ணிட்டேன். தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க. நீங்க எல்லாரும் என்னை கிண்டல் செய்றீங்கன்னு நான் நெனச்சுட்டேன்"
"பரவாயில்லை விடுங்க..."
"ப்ளீஸ் ஃபோனை பாட்டிகிட்ட குடுங்க"
"ஒரு நிமிஷம்" பாட்டியிடம் போனை கொடுத்தாள் நர்மதா.
"என்னை மன்னிச்சிடுங்க பாட்டி. நான் உங்களை இன்சல்ட் பண்ணிட்டேன்னு நினைக்காதீங்க. நான் வேணும்னு செய்யல..."
"இதை நீ எதிர்பார்க்கல, இல்லையா?" என்றார் பாட்டி.
"ஆமாம் பாட்டி" என்றாள் கம்மிய குரலில்.
"எங்களுக்கு தெரியும், நீ பெரியவங்ககிட்ட மரியாதை குறைவா நடந்துக்கிற பொண்ணு இல்ல...."
"தேங்க்யூ சோ மச் பாட்டி"
"எங்களை நீயும் தப்பா நினைச்சுக்காத. எந்த முடிவா இருந்தாலும் அவசரப்பட்டு எடுத்துடாதே. நீ புத்திசாலி பொண்ணு. எது சரி, எது தப்புன்னு உனக்கு யாரும் சொல்லித் தரவேண்டியதில்ல. ராமுவோட விருப்பத்தை நீ பரிசீலனை செய்வேன்னு நினைக்கிறேன்" என்றார் பாட்டி.
அமைதியாய் இருந்தாள் மிதிலா. பாட்டியின் கையில் இருந்து ஃபோனை வாங்கி பேசினாள் நர்மதா.
"மிதிலா, எனக்கு தெரியும், ராமுவோட முந்தைய நடவடிக்கைகளால உங்களுக்கு அவன் மேலே வருத்தம் இருந்தது..."
"அதை எல்லாம் நான் எப்பவோ மறந்துட்டேன் கா. ஆனா, கல்யாணம் வேற விஷயம். உங்களுக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு எனக்கு தெரியல"
"பரவாயில்ல, மிதிலா. எனக்கு தெரிஞ்ச வரைக்கும், தான் எடுத்த முடிவில் இருந்து ராமு எப்பவும் பின் வாங்க மாட்டான். அதே மாதிரி, இந்த விஷயத்துலயும் அவன் நிச்சயம் அவனுடைய மனசை மாத்திக்க மாட்டான்"
நர்மதாவின் குரல், மென்மையாய் தான் ஒலித்தது என்றாலும், அது எச்சரிக்கை மணி போல் ஒலித்தது.
"உங்களை நான் வார்ன் பண்றேன்னு நீங்க நெனச்சா, ஆமாம், நான் உங்களை வார்ன் தான் பண்றேன். ஏன்னா, எனக்கு உங்க மேல அக்கறை இருக்கு. விஷயத்தோட ஆழத்தை நீங்க புரிஞ்சுக்கணும்னு நான் நினைக்கிறேன். ராமுவைப் பத்தி உங்களைவிட எனக்கு நல்லாவே தெரியும். அவனை குறைச்சி எடை போடாதீங்க"
மிதிலா திடுக்கிட்டாள். நர்மதா கூறியதற்கு என்ன அர்த்தம்?
"புத்திசாலித்தனமா யோசிங்க மிதிலா. குட் நைட்" என்று அழைப்பை துண்டித்தாள் நர்மதா.
அவளை ஏதோ கொள்ளைக் கூட்ட தலைவியைப் போல் பார்த்துக் கொண்டிருந்தான் தினேஷ். இந்தப் பெண்களின் மனதில் என்ன தான் இருக்கிறது என்பது அவனுக்குப் புரியவில்லை.
"ராமு, மிதிலாவை விரும்புறான்னு எங்களுக்கு ஏற்கனவே தெரியும். இருந்தாலும் நாங்க அவனுக்கு எதிரா பேசினோம். ஏன்னா, மதிலாவுக்கு அவன் மேல விருப்பம் இல்லைங்கிற உண்மையை அவன் உணரணும். மிதிலா எதுக்காவது பதட்டப்பட்டு நம்ம பார்த்திருக்கோமா? ஆனா விஷயம் தெரிஞ்ச உடனே, அவ பதட்டத்தில் ஃபோனை கட் பண்ணிட்டா. மிதிலா குழம்பி போன முதல் விஷயம் இதுவா தான் இருக்கணும்" என்று சிரித்தார் புஷ்பா.
"ராமு வசதியானவன், அழகானவன், அந்தஸ்து உள்ளவன். ஆனா, மிதிலாகிட்ட இதெல்லாம் வேலை செய்யாது. வேற விதத்தில் தான் மிதிலாவை அவன் ஒத்துக்க வைக்கணும்." என்றார் பாட்டி.
"மிதிலா நிச்சயமா கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாங்கன்னு எங்களுக்கு தெரியும். அப்படி அவங்க மறுக்கும் போது, நிச்சயமா ராமுவுக்கு அவங்க மேல எக்கச்சக்க கோபம் வரும். ஆனா இப்போ, அவன் குடும்பத்தை சேர்ந்தவங்களே அவனுக்கு எதிரா இருக்கும் போது, மிதிலா மேல அவனுக்கு கோபம் குறையும். அவன் கோபப்பட்டு எதுவும் ஏடாகூடமா செஞ்சு, பிரச்சனையை பெருசாக்க கூடாதுன்னு தான் நாங்க அவனுக்கு எதிரா பேசினோம். அவனுக்கு இப்ப நம்ம மேல தான் கோவம்"
"அவருக்கு அது வருத்தத்தை தராதா?" என்றான் தினேஷ்.
"அவனை நான் சமாதானப்படுத்திக்கிறேன்" என்றாள் நர்மதா.
"அப்படின்னா பரத்தும் லக்ஷ்மணனும் கூட உங்க பக்கம் தானா? "
"இல்ல. அவங்க உண்மையிலேயே மிதிலா பக்கம் தான். ஏன்னா, மிதிலாவோட விருப்பு, வெறுப்பை பத்தி அவங்களுக்கு நல்லா தெரியும். மிதிலா எப்பவும் உயிர்ப்போடு இருக்கிற பொண்ணு. மிதிலாவை பத்தி லட்சுமணன் சொல்லி, நிறைய தடவை நான் கேட்டிருக்கேன். அதெல்லாம், கொஞ்சம் கூட நம்ம ராமு கூட ஒத்து போற விஷயமே இல்ல. அதனால, மிதிலா இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிற வரைக்கும், அவங்க ரெண்டு பேரும் மிதிலா பக்கம் தான் இருப்பாங்க" என்றார் புஷ்பா.
ஆனந்த குடில்
நர்மதா கூறியவற்றை பற்றி நினைத்தபடி அமர்ந்திருந்தாள் மிதிலா. ஸ்ரீராமின் சுபாவத்தை பற்றி அவள் அறியாததல்ல. அவளுக்கு ஏற்கனவே அதைப் பற்றி நன்கு தெரியும். ஆனால், அதற்காக அவள் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டுவிட முடியாது. அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவனுக்கு ஏன் தோன்றியது என்று அவளுக்கு புரியவில்லை. ஒரு முக்கியமான ரெண்டரை எடுக்க அவள் அவனுக்கு உதவினாள்... வேலாயுதம் கைது செய்யப்பட்டார்... அதற்குரிய மரியாதையை அவன் ஏற்கனவே அவளுக்கு வழங்கிவிட்டான். அதோடு அது முடிந்துவிட்டது. அப்படி இருக்க, அவளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன? இதைப் பற்றி அவள் ஸ்ரீராமிடம் பேசி விடுவது உத்தமம். அவளுக்கு வேறு வழி இல்லை. அவளுடைய நிலைப்பாட்டை அவன் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
அவளுடைய எண்ண சங்கிலி அறுபட்டது, அவளுடைய கைபேசி ஒலித்த போது. அந்த அழைப்பு யுவராஜிடமிருந்து வந்தது. அந்த அழைப்பை ஏற்றாள் மிதிலா.
"சொல்லுங்க யுவி"
"நீ கல்யாணத்தை பத்தி என்ன முடிவு எடுத்தன்னு கேட்க நான் ஃபோன் பண்ணேன்னு நினைக்காதே..."
அதைக் கேட்டு திகைத்தாள் மிதிலா. ஏனென்றால், அவள் மனதில் சுத்தமாய் அந்த எண்ணமே இல்லை. அவள் ஸ்ரீராமின் பிரச்சனையில் அதை மறந்து விட்டிருந்தாள். யுவராஜ் தொடர்ந்தான்.
"காலையில நான் ஃபோன் பண்ணப்போ உன்னை கங்கிராஜுலேட் பண்ண மறந்து போயிட்டேன்..."
"எதுக்கு என்னை கங்கிராஜுலேட் பண்ணனும்?"
"என்ன இப்படி கேட்டுட்ட? ஒட்டுமொத்த ஃபேஷன் உலகமும் உன்னை பத்தி தான் பேசிகிட்டு இருக்கு. உன்னால தான் வேலாயுதம் அரெஸ்ட் ஆனாருன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சி..."
"ஓ... அதைப் பத்தி சொல்றீங்களா...?" என்றாள் ஆர்வமில்லாமல்.
"உன்னை ஹானர் பண்றதுக்காக எஸ்ஆர்கே பார்ட்டி எல்லாம் கொடுத்தாராமே? அது தான் ஹைலைட். அதைக் கேட்டு நான் வாயடைச்சு போயிட்டேன். ஏன்னா, எஸ்ஆர்கே எப்பவுமே பார்ட்டியெல்லாம் கொடுத்ததே இல்ல"
"ம்ம்ம்"
"இதுக்காகத் தான் நீ என்கூட இருக்கணும்னு நான் நினைக்கிறேன். எஸ்ஆர்கே மாதிரி திறமைசாலிக்கு உன்னுடைய உதவி தேவையில்ல. ஆனா, எனக்கு நீ தேவை..."
அவன், மறுபடியும் சுற்றி வளைத்து அதே இடத்திற்கு வந்ததை பார்த்து பெருமூச்சு விட்டாள் மிதிலா.
"ஏன் அமைதியா இருக்க மிதிலா? நீ என்னை ஏத்துக்குவேன்னு நான் நம்புறேன்"
"நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன். நான் உங்க அம்மாகிட்ட முதல்ல பேசணும்"
"அதெல்லாம் தேவையில்ல மிதிலா. நானும் அப்பாவும் அவங்களை சமாளிச்சிக்குவோம்"
"எல்லாத்துக்கும் அப்பாற்பட்டு, என்னைப் பத்தி அவங்க தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு"
"என்ன அது?"
"உங்ககிட்ட நான் நிச்சயம் சொல்லுவேன். ஆனா, இப்ப இல்ல. உங்க அம்மாகிட்ட சொன்னதுக்கு பிறகு..."
"ஏதாவது சீரியஸான விஷயமா?"
"ஆமாம் "
"ப்ளீஸ் என்கிட்ட சொல்லேன். எங்க அம்மா ஒத்துக்குவாங்களா மாட்டாங்களான்னு நான் சொல்றேன்"
"அவங்க என்ன செஞ்சாலும் சரி. நான் இதைப் பத்தி அவங்ககிட்ட சொல்லி தான் தீருவேன். ஏன்னா, நான் வாழப்போற குடும்பத்தை சேர்ந்தவங்க அதைப் பத்தி நிச்சயம் தெரிஞ்சுக்கணும்"
"நீ பேசுறத கேட்டா எனக்கு ரொம்ப பதட்டமா இருக்கு"
அமைதியாய் இருந்தாள் மிதிலா.
"என்கிட்ட சொல்ல மாட்டியா?"
"குட்நைட் யுவி"
அழைப்பை துண்டித்தாள் மிதிலா. அவளுக்கு நன்றாகத் தெரியும், உண்மை தெரிந்தால், யுவராஜின் அம்மா, நிச்சயம் இந்த திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டார். தர்மராஜும், யுவராஜும் நிச்சயம் அவள் மீது வருத்தம் கொள்வார்கள். ஆனால் அவளுக்கு வேறு வழி இல்லை. அவள் உண்மையை கூறி தான் ஆகவேண்டும்.
பூவனம்
தனது அறையில் இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தான் ஸ்ரீராம். மிதிலா பேசிய வார்த்தைகள் அவன் காதில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
*நீங்க பேசினது ஜூனியருக்கு தெரியாம பார்த்துக்கோங்க. என்னுடைய பெயரை அவர் கூட சேர்த்து வச்சி நீங்க பேசினீங்கன்னு தெரிஞ்சா, அவர் உங்க எல்லாரையும் பார்வையாலேயே எரிச்சிடுவார்*
அவள் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள்? அவனுக்கு அவளை அறவே பிடிக்காது என்றா? இன்னும் கூட அவன் தனது கௌரவத்துடன் ஒட்டிக்கொண்டு நிற்கிறான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாளா? ஒரு காலத்தில் அவன் அப்படி இருந்தது உண்மை தான். ஆனால், இந்தப் பெண் தான் அதை அடியோடு இடித்து தரைமட்டமாக்கி விட்டாளே...! பிறகு அவன் மனதில் கௌரவத்திற்கு இடம் எங்கே இருக்கிறது?
அவனது அறையில் இருந்த லேண்ட்லைன் தொலைபேசி அலறத் துவங்கியது. வெறுப்புடன் அதை எடுத்து பேசினான் ஸ்ரீராம்.
"ஹலோ..."
"நான் மிதிலா பேசுறேன்"
அதைக் கேட்டு கிளீன் போல்ட் ஆனான் ஸ்ரீராம். அவள் தனக்கு ஃபோன் செய்வாள் என்பதை அவன் எதிர்பார்க்கவில்லை. சொல்ல போனால், அவன் ஃபோன் செய்தால் கூட, அவள் எடுத்து பேச மாட்டாள் என்று எண்ணியிருந்தான்.
"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நர்மதா அக்கா எனக்கு ஃபோன் பண்ணியிருந்தாங்க. நம்ப முடியாத ஒரு விஷயத்தை சொன்னாங்க. உங்ககிட்ட நான் அதைப் பத்தி தெளிவா பேச விரும்புறேன் சார். இது சாதாரண டெண்டர் கிடையாது, நம்முடைய வாழ்க்கை. என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு உங்களுக்கு ஏன் தோணுச்சின்னு எனக்கு தெரியல. நான் அதை தெரிஞ்சுக்கவும் விரும்பல. ஏன்னா, அது எனக்கு தேவை இல்ல. இந்த விஷயத்தை நான் *இழுக்க* வேண்டாம்னு நினைக்கிறேன். என்னை மன்னிச்சிடுங்க. உங்களை கல்யாணம் பண்ணிக்க நான் தயாரா இல்ல" என்றாள் முடிந்த அளவுக்கு குரலில் பணிவை காட்டி.
தான் கூற வேண்டியதை கூறி முடித்து விட்டதால் அழைப்பை துண்டிக்கப் போனவளை,
"ஒரு நிமிஷம் மிதிலா..." என்ற ஸ்ரீராமின் கம்பீர குரல் தடுத்தது.
மீண்டும் கைப்பேசியை தன் காதுக்கு கொடுத்தாள் மிதிலா.
"நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்குவீங்க" என்றான் அவள் குரலில் தெரிந்த அதே பணிவை காட்டி.
"என்ன சொன்னீங்க...?" என்றாள் குழப்பத்துடன்.
"நீங்க... என்னை... கல்யாணம்... பண்ணிக்குவீங்கன்னு சொன்னேன்"
"ஐ அம் சாரி ஜூனியர். அது நடக்காது"
"நடக்கும்... நிச்சயம் நடக்கும்"
"ஆனா, ஜூனியர்..."
"குட் நைட் மிதிலா" அழைப்பை துண்டித்தான் ஸ்ரீராம்.
தனது கைபேசியை வெறித்துப் பார்த்தாள் மிதிலா. இப்பொழுது ஸ்ரீராம் கூறியதும், நர்மதா எச்சரித்ததும், பிசிறு தட்டாமல் ஒத்துப்போகிறது. இந்த அக்காவும், தம்பியும் அவர்கள் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? கோபமாய் தனது கைப்பேசியை கட்டிலின் மீது தொப்பென்று வைத்தாள். அதே நேரம் அவளை இனம்புரியாத பயம் ஆட்கொண்டது. யுவராஜின் அம்மாவிடம் அவள் சொல்ல நினைத்திருக்கும் உண்மையை, ஸ்ரீராமிடமும் சொல்ல வேண்டுமா? அவளுக்கு வெறுப்பாய் இருந்தது. தனது சொந்த விஷயத்தை, தலைகனம் பிடித்த ஒருவருடன் பகிர்ந்து கொள்வது என்பது தர்மசங்கடத்தின் உச்சம்... ஆனால், அவளுக்கு வேறு வழியில்லை. ஒன்று மட்டும் நிச்சயம். உண்மை தெரிந்தால், ஸ்ரீராம் தலைதெறிக்க ஓட போகிறான். அவளுக்கு தெரியாதா, அவன் எந்த அளவிற்கு தன் கவுரவத்தை பெருமையாய் நினைப்பவன் என்று...!
இதற்கிடையில்,
தனது கையிலிருந்த தொலைபேசியின் ரிசீவரை கட்டிலில் தூக்கி எறிந்தான் ஸ்ரீராம் கோபமாக. சோபாவில் அமர்ந்து தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டான். இந்தப் பெண் ஏன் இவ்வளவு இனிமையானவளாய் இருக்கிறாள்? தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்பதை கூட அவள் எவ்வளவு மரியாதையுடன் கூறினாள்...! தன்னிடம் கோபத்தையோ வெறுப்பையோ அவள் காட்டவில்லை. அவள் ஏன் தன்னிடம் தொலைபேசியில் உரையாடினாள் என்று அவனுக்கு தெரியும். சொந்த விஷயத்தையும் அலுவலக விஷயத்தையும் சேர்க்கக்கூடாது என்ற ஸ்ரீராமின் நிலைப்பாட்டை அவளும் கடைபிடிக்க நினைக்கிறாள். அவளது இந்த உயரிய குணங்கள் தான், அவனை பித்து பிடிக்க செய்கிறது...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top