3 எதிர்பாராதது

3 எதிர்பாராதது

ஸ்ரீராமிடம் பேசவேயில்லை நர்மதா. அது ஸ்ரீராமுக்கு எரிச்சலூட்டியது. ஏனென்றால், அதற்கு காரணம் மிதிலா. அவளால் தான், அவனுடைய அக்கா, அவன் மீது கோபமாக இருக்கிறார். நர்மதாவை சமாதானப் படுத்தும் நோக்கோடு அவளது அறைக்குச் சென்றான் ஸ்ரீராம்.

"அக்கா, சின்ன பிள்ளை மாதிரி நடந்துக்குறதை நிறுத்துங்க" என்றான்.

"நான் எப்படி நடந்துக்கணும்னு நீ எனக்கு சொல்லாத, ஸ்ரீராம். ஏன்னா, யார்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு உனக்கே தெரியலயே..." என்று சீறினாள்.

அவள் தன்னை *ஸ்ரீராம்* என்று அழைத்ததை பார்த்து அவன் திடுக்கிட்டான். அவள் கோபமாக இருக்கும் போது தான் அப்படி அழைப்பது வழக்கம். இல்லாவிட்டால் ராமு என்று தான் அழைப்பாள்.

"வேற யாரோ ஒருத்தருக்காக நீங்க என்கிட்ட சண்டை போடுறது எனக்கு சுத்தமா பிடிக்கல" என்றான்.

"என்னுடைய கெஸ்ட்டை நீ இன்சல்ட் பண்ணது, எனக்கு கூட தான் பிடிக்கல... நீ எப்படி அப்படி செய்யலாம்? இந்த வீட்டுல எனக்கு எந்த மரியாதையும் இல்லையா?"

"அக்கா, என்னுடைய எண்ணம் அது இல்ல. அது உங்களுக்கும் நல்லா தெரியும்"

"எனக்கு தெரியும்... ஆனா, மிதிலாவுக்கு தெரியுமா? உன்னை பத்தி அவங்க என்ன நெனச்சிருப்பாங்க?"

"அவ என்னை பத்தி என்ன நினைக்கிறான்னு எனக்கு கவலை இல்ல..."

"அதுக்காக நீ அவங்களை அவமானப் படுத்தலாம்னு அர்த்தமில்ல. உன்னுடைய நடத்தை தான், உன் குடும்பத்தை பத்தி சொல்லும்"

வெறுப்புடன் தன் கண்களை சுழற்றினான் ஸ்ரீராம்.

"அவங்ககிட்ட அப்படி என்ன நீ தப்பா பாத்துட்டேன்னு அந்த மாதிரி நடந்துகிட்ட?" என்ற அவளது குரலில் வருத்தம் தெரிந்தது.

"நீங்க அவகிட்ட அப்படி என்ன பார்த்தீங்கன்னு ஆளாளுக்கு அவ கூட சேர்ந்து ஆடிக்கிட்டு இருக்கீங்க?" அவர்கள் மிதிலாவிடம் காட்டிய ஈடுபாட்டை பொறுத்துக் கொள்ள முடியாமல் கேட்டே விட்டான் ஸ்ரீராம்.

"மிதிலா ரொம்ப நல்ல பொண்ணு"

"ஒரு பொண்ணு எல்லாருக்கும் நல்லவளா இருக்கவே முடியாது. அவ நடிக்கிறா..."

"ஏன் முடியாது? நம்ம அம்மா இல்லையா? யாருக்கு தான் அவங்களை பிடிக்காது? எல்லாருக்கும் நம்ப அம்மாவை பிடிக்கும் தானே?"

"அக்கா, தயவு செய்து அந்த பெண்ணை நம்ம அம்மா கூட கம்பேர் பண்ணாதீங்க" என்று கூறிவிட்டு, அங்கிருந்து விடுவிடுவென்று நடந்தான், அதற்கு மேல் நர்மதா கூறிய எதையும் கேட்க விருப்பம் இல்லாமல். தனது அம்மாவுடன் மிதிலாவை ஒப்பிட்டுப் பேசியது அவனுக்கு பிடிக்கவில்லை.

இரவு உணவு வேலை

இன்னும் இறுக்கமாக தான் இருந்தாள் நர்மதா. ஸ்ரீராமுக்கு ஆச்சரியம் அளித்தது என்னவென்றால், லக்ஷ்மணனும் அப்படித் தான் இருப்பான் என்று அவன் எதிர்பார்த்தான். அவனுக்கும் மிதிலாவுக்கும் இடையில் நடந்த வாக்குவாதத்தை பற்றி, மிதிலா அவனிடம் பற்ற வைத்திருப்பாள் என்று அவன் நினைத்தான். ஆனால், லக்ஷ்மணனோ வெகு சாதாரணமாய் இருந்தான். அவனிடம் மிதிலா எதையும் கூறவில்லையா?

"ஏன் டல்லா இருக்க நர்மதா?" என்றான் நர்மதாவின் கணவன் தினேஷ்.

அனைவரும் நர்மதாவை நிமிர்ந்து பார்த்தார்கள், ஸ்ரீராம் உட்பட.

"என்ன ஆச்சி கா? தங்கள் முகத்தில் எப்போதும் குடிகொண்டிருக்கும் அந்தப் புன்னகை எங்கே?" என்று தூய தமிழில் கிண்டலாய் கேட்டான் லட்சுமன்.

"மிதிலா உனக்கு ஃபோன் பண்ணலையா?" என்றாள் நர்மதா.

"மிதிலாவா? இல்லையே? ஆனா, அவ ஏன் எனக்கு ஃபோன் பண்ணனும்?"

"அவங்க, சாயங்காலம் இங்க வந்திருந்தாங்க"

"அப்படியா? அவ என்கிட்ட எதுவும் சொல்லலையே"

உடனடியாய் தன் கைப்பேசியை எடுத்து, மிதிலாவுக்கு ஃபோன் செய்தான் லட்சுமன். மிதிலா எடுத்து பேசினாள்.

"வீட்டுக்கு வந்திருந்தியா?"

"ஆமாம். பாட்டியும், நர்மதா அக்காவும் என்னை பார்க்கணும்னு சொன்னாங்கனு சொன்ன இல்ல?"

"என்கிட்ட ஏன் சொல்லல?"

"நீ ஆஃபீஸ்ல பிஸியா இருப்ப. அதனால உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நெனச்சேன்"

"ஆமாம், நான் கொஞ்சம் பிஸியா தான் இருந்தேன். சண்டே வந்திருக்கலாம் இல்ல?"

"நான் ரொம்ப மும்முரமா வேலை தேடலாம்னு இருக்கேன். எங்க குடும்ப நிலைமை தான் உனக்கு தெரியுமே. இனிமே நான் இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணிக்கிட்டு ரொம்ப பிசியா ஆயிடுவேன். அதனால, அதுக்கு முன்னாடி ஒரு நாள் வந்து அவங்களை பார்க்க நெனச்சேன்"

"சரி மித்து. டேக் கேர்... அங்கிள் ஆன்ட்டியை கேட்டேன்னு சொல்லு"

"ஷ்யூர்... பை" அவள் அழைப்பை துண்டித்தாள்.

லட்சுமணன் மீண்டும் சாப்பிட துவங்கினான்.

தன்னை பற்றி அவள் லட்சுமனிடம் ஒன்றுமே கூறவில்லை என்பதை ஸ்ரீராமால் நம்பவே முடியவில்லை. பெண்கள் என்றாலே கலக்குமூட்டிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தான் ஸ்ரீராம். மிதிலா விஷயத்தில் அப்படி நடக்கவில்லை. அவன் மெல்ல நர்மதாவை பார்க்க, அவளுடைய பார்வை அவனை முள்ளாய் தைத்தது. சாப்பிட்டு முடித்து தன் அறைக்கு சென்றான் ஸ்ரீராம். அவனுடைய அக்கா வருத்தமாய் இருந்தது அவனுக்கு வருத்தத்தை தந்தது. அவளை சமாதானப்படுத்த, மீண்டும் அவள் அறைக்குச் சென்றான். இந்த முறை, எதற்காகவும் கோபம் கொள்ளக்கூடாது என்ற நினைப்புடன்.

நர்மதா, தினேஷுடன் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு, உள்ளே நுழையாமல் அப்படியே மறைந்து நின்றான்.

"ராமு ஏன் காரணமே இல்லாம இப்படியெல்லாம் நடந்துகுறான்னு என்னால புரிஞ்சுக்கவே முடியல" என்றாள் வருத்தத்துடன் நர்மதா.

"நீ மிதிலாகிட்ட பேசுனியா?" என்றான் தினேஷ்.

"இல்ல. எப்படி நான் அவங்ககிட்ட பேசுறது? எனக்கு ரொம்ப உறுத்தலா இருக்கு"

"அந்த மாதிரி செய்யாதே. அவங்க இங்க வந்தது உன்னை பார்க்கத் தான். அவங்களை சமாதானப் படுத்த வேண்டியது உன்னோட பொறுப்பு. இதனால, அவங்க இங்க வர்றதை அடியோடு நிறுத்திட்டா பரவாயில்லையா உனக்கு?"

இல்லை என்று தலையசைத்துவிட்டு, மதிலாவுக்கு ஃபோன் செய்தாள் நர்மதா. அந்த அழைப்பை ஏற்று பேசினாள் மிதிலா.

"நீங்க என்கிட்ட பேச மாட்டீங்களோன்னு நினைச்சேன்" என்றாள் நர்மதா.

"ஏன்கா அப்படி நினைக்கிறீங்க?" என்றாள் மிதிலா.

"நீங்க என் மேல கோவமா இருப்பீங்கன்னு நெனச்சேன்"

"நான் கோவமா இல்ல... அதுவும்  உங்க மேல நிச்சயமா இல்ல"

"இங்க நடந்ததுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்"

"அதை விடுங்க கா. நான் அப்பவே அதை மறந்துட்டேன்"

"என்ன...? அதை நீங்க மறந்துட்டீங்களா? எப்படி உங்களால முடிஞ்சிது?"

நர்மதாவின் கையிலிருந்த கைபேசியை வாங்கி, ஸ்பீக்கரை ஆன் செய்தான் தினேஷ். அவனும் அவள் பேசுவதைக் கேட்கவேண்டும் என்பதற்காக.

"என்னை வெறுக்கிறவங்களை பத்தி யோசிக்க எனக்கு நேரமில்ல கா... ஏன்னா, என்னை நேசிக்கிறவங்களை நேசிக்கவே எனக்கு நேரம் பத்தல." என்று சிரித்தாள் மிதிலா.

"சோ ஸ்வீட்... இது தான் உங்ககிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது... நான் ரொம்ப கவலைப்பட்டுக்கிட்டு இருந்தேன்"

"ஏன் கா?"

"நீங்க இதுக்கப்புறம் எங்க வீட்டுக்கு வர மாட்டீங்களோன்னு எனக்கு கவலையா இருந்தது..."

"ஆமாக்கா, வரமாட்டேன்..."

"ஐ அம் சாரி, மிதிலா"

"நான் சொல்றதை முழுசா கேளுங்க. உங்க வீட்டுக்கு நிச்சயமா வரமாட்டேன்... உங்க *சிடுமூஞ்சி* தம்பி இருக்கும் போது" என்று அவள் சிரிக்க, நர்மதாவும், தினேஷும் அவளுடன் சேர்ந்து சிரித்தார்கள்.

"அவனை நீங்க சீரியஸா எடுத்துக்காம இருக்கிறதுக்கு ரொம்ப தேங்க்ஸ்"

"நான் தான் சொன்னேனே கா, எனக்கு செய்ய வேண்டிய *நல்ல* விஷயங்கள் நிறைய இருக்கு. என்னுடைய பொன்னான நேரத்தை அவருக்காக வீணாக்க நான் விரும்பல. டோன்ட் வொரி... பி ஹாப்பி"

"குட் நைட், மிதிலா"

"குட் நைட்" அவள் அழைப்பைத் துண்டித்து கொண்டாள்.

ஸ்ரீராம் மெல்ல பின்னோக்கி நகர்ந்தான். மிதிலாவின் மீது கோபப்பட, அவனுக்கு நிறைய காரணங்கள் இருந்தது. அவள் தன்னை சிடுமூஞ்சி என்று கூறியதற்காக... அவனை அவள் பெரிதாகவே எடுத்துக் கொள்ளாததற்காக... அவனை அவள் மதிக்காததற்காக... அதே நேரம், அவனுக்கு குழப்பமாகவும் இருந்தது. எப்படி ஒரு பெண், எதையுமே தன் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இவ்வளவு கூலாக இருக்கிறாள்? அது உண்மையிலேயே சாத்தியம் தானா?

லக்ஷ்மணனை காதலிக்கும் அவள், எப்படி அவனுடைய அண்ணனை பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருக்கிறாள்? அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

.......

இன்று

எஸ் ஆர் ஃபேஷன்ஸ்

மிதிலாவின் நினைவுகளில் இருந்து வெளியே வந்தான் ஸ்ரீராம். தனது வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காத அந்தப் பெண்... எதற்கும் கலங்காத அந்தப் பெண்... அவனையே திருப்பி கேள்வி கேட்ட அந்தப் பெண்... இன்று அவனுடைய அலுவலகத்திற்கு வந்திருக்கிறாள்... அவர்களது முதல் சந்திப்பின் போது, அவள் கூறியது அவன் நினைவுக்கு வந்தது.

*யார் நீங்க? நீங்க சொல்றதை நான் ஏன் கேட்கணும்? நீங்க சொல்றதை கேட்டு நான் ஏன் நடக்கணும்?*

மிஸ் கூல்... இந்தக் கேள்விகளுக்கு உனக்கு நிச்சயம் பதில் கிடைக்கும், இங்கு உனக்கு வேலை கிடைத்தால். அவளுக்கு இவன் முதலாளி ஆவான். அவன் கூறுவதை அவள் கேட்டுத் தான் ஆக வேண்டும். அவன் சொல்படி அவள் நடந்து தான் தீர வேண்டும். கேட்க மாட்டாள்? கேட்பாள்... கேட்க வேண்டும்... கேட்டுத் தான் ஆகவேண்டும்... ஏனென்றால் அவன் அவளுக்கு முதலாளி.

தன் அறையிலிருந்து, கண்ணாடி சுவற்றின் வழியாக கீழே பார்த்தான் ஸ்ரீராம். தன்னுடைய நேர்காணலை முடித்துக் கொண்டு சந்தோஷமாய் வெளியே வந்தாள் மிதிலா, தன் கட்டை விரலை லக்ஷ்மணனை நோக்கி உயர்த்தியபடி. லட்சுமணனுடன் கை குலுக்கினாள் அதே சந்தோஷத்துடன். அவள் முகம், மிகுந்த நம்பிக்கையுடன் காணப்பட்டது. அவள் நேர்காணலை மிக நன்றாக செய்திருக்கிறாள் போல் தெரிகிறது. தனது நாற்காலியில் அமர்ந்து என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தான் ஸ்ரீராம்.

அப்பொழுது, நேர்காணல் முடிவுகளுடன் அவனது அறைக்கு வந்தான் அந்த கம்பனியின் மேலாளரும், ஸ்ரீராமின் தோழனுமான குகன். ஸ்ரீராமிடம் அந்த முடிவுகளை சமர்ப்பித்தான்.

"முடிஞ்சுதா?" என்றான் ஸ்ரீராம்

"முடிஞ்சது, எஸ் ஆர் கே..."

அந்த தாளை தன் கையில் எடுத்து, படித்தான் ஸ்ரீராம். அவன் எதிர்பார்த்தது போலவே, மிஸ் மிதிலா ஆனந்த் தேர்வு செய்யப்பட்டிருந்தாள்.

"இந்த போஸ்ட்க்கு ரொம்ப எலிஜிபிளான ஒரு ஆளை நான் செலக்ட் பண்ணி இருக்கேன். இவங்க ஒரே ஒருத்தர் தான், நான் கேட்ட எல்லா கேள்விக்கும் பதில் சொன்னாங்க. அவங்களுக்கு வேண்டிய எக்ஸ்பீரியன்ஸ்ஸும் இருக்கு. பரத்துக்கு இவங்க பர்ஃபெக்ட் *பிஏ* வா இருப்பாங்க" என்றான் குகன் ஒரே மூச்சில்.

"அப்பாயின்மென்ட் ஆர்டரை டைப் பண்ணி கொண்டுவா" என்றான் ஸ்ரீராம்.

"ஷ்யூர், எஸ்ஆர்கே..."

சென்ற வேகத்திலேயே மிதிலாவின் பணி நியமன ஆணையுடன் திரும்பி வந்தான் குகன்.

"இதோ அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர். நீ சைன் பண்ணணும்"

ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருந்த பணி ஆணையின் குறிப்பிட்ட வரிகளை படித்தான் ஸ்ரீராம்.

*எங்கள் நிறுவனத்தின் *ஏஎம்டி* பரத் தினகரனின் பர்சனல் செக்கரட்ரியாக தாங்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறீர்கள்.* என்று இருந்தது.

தனது கோட்டில் சொருகி வைத்திருந்த, தங்க முனை பொறுத்தபட்ட பேனாவை எடுத்தான் ஸ்ரீராம். ஏஎம்டி யில் இருந்த *ஏ* வை அவன் அடித்த போது, குகனுக்கு குழப்பம் ஏற்பட்டது. அவன் பரத் தினகரன் என்னும் பெயரை அடித்து, *ஸ்ரீராம் கருணாகரன்* என்று தன் பெயரை எழுதிய பொழுது, அதிர்ச்சியடைந்தான் குகன். அவனை பார்க்காமல், அந்த பணி நியமன ஆணையில் தன் கையெழுத்திட்டான் ஸ்ரீராம்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top