25 மிக பெரிய டீல்
25 மிக பெரிய டீல்
ஸ்ரீராமின் கோபம் விண்ணைத் தொட்டது. எப்படி மிதிலா அவனை ஏமாற்றலாம்? அவள் மற்றவரிடம் காட்டியது எல்லாம் வெறும் நடிப்பா? தன்னுடைய சுயநலத்திற்காக தான் அவள் மற்றவரிடம் தன்னை நல்லவளை போல் காட்டி கொண்டாளா? உலகமே இருண்டுவிட்டது போல் உணர்ந்தான் ஸ்ரீராம். மிதிலாவே நம்பகமற்றவள் என்றால், யாரைத் தான் நம்புவது?
வேலாயுதம் தன்னை நினைத்து பெருமைப்பட்டார். அவர் ஸ்ரீராமை இப்படி பார்த்ததில்லை. அன்று, அவர் ஒரு உண்மையை புரிந்து கொண்டார். உணர்வுகளால் கூட ஸ்ரீராமை வென்றுவிட முடியும் என்பது தான் அது. ஸ்ரீராமுக்கு மிதிலாவின் மீது விருப்பம் இருக்கிறது என்று மாலினி கூறிய போது அதை அவர் நம்பவில்லை. ஆனால் இப்போது, அவரால் அதை நம்பாமல் இருக்க முடியவில்லை. ஸ்ரீராமை வீழ்த்திவிட்டது அவருக்கு கண்கூடாகத் தெரிந்தது. அவர் நினைத்தது தவறல்ல.
தனது வாழ்வின் மிகப்பெரிய டீலை இழந்து விட்டதாய் உணர்ந்தான் ஸ்ரீராம்... மிஸ் மிதிலா ஆனந்த்...! அவன் என்ன செய்யப்போகிறான் என்று புரியவில்லை அவனுக்கு. இந்த விஷயத்தை அவன் எப்படி கையாள போகிறான்? தனது உலகம், சுழற்சியை நிறுத்தி விட்டது போல் இருந்தது அவனுக்கு. இது போல் அவன் எப்போதுமே கையாலாகாமல் உணர்ந்ததில்லை. எந்த வியாபார ஒப்பந்தத்தை கைப்பற்ற அவன் அங்கு முனைப்புடன் வந்திருந்தானோ, எந்த ஒப்பந்தம் அவனுக்கு மிக முக்கியம் என்று நினைத்திருந்தானோ, அதை சுத்தமாய் மறந்து போனான்.
சட்டென்று அவனுக்கு பொறி தட்டியது. மிதிலா வேலாயுதத்துக்கு உதவியிருந்தால், அதை அவரே வலிய வந்து அவனிடம் ஏன் கூற வேண்டும்? அவன் மிதிலாவை போலீசில் ஒப்படைத்து விடுவான் என்று அவருக்கு தெரியாதா? ஸ்ரீராம் பலவீனமாய் உணர்ந்தான். மிதிலாவை போலீசில் ஒப்படைப்பதா? அவனால் எப்படி அதை செய்ய முடியும்? எவ்வளவு இக்கட்டான நிலைகளில் அவள் அவனுக்கு உதவி இருக்கிறாள்...? இப்படித் தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அவள் நினைத்திருந்தால், இதற்கு முந்தைய வியாபார ஒப்பந்தங்களில் அதை அவளால் செய்திருக்க முடியுமே...! அவையெல்லாம் இதைவிட மிகப்பெரிய ஒப்பந்தங்கள் ஆயிற்றே...! அவனுக்கு குழப்பம் ஏற்பட்டது. இப்போது, இந்த ஒப்பந்தத்தை கைப்பற்றுவதை விட, மிதிலா, தவறானவளாக இருந்துவிடக் கூடாது என்பதில் தான் அவன் கவனம் இருந்தது. ஆம், சிறிது நேரத்திற்கு முன்பு வரை, அவன் முக்கியமானதாக நினைத்துக்கொண்டிருந்த ஒப்பந்தம், இப்போது மிதிலாவுக்கு முன் ஒன்றும் இல்லாமல் போனது. அவள் உண்மையானவளாக இருக்க வேண்டும். அது தான் அவனுக்கு வேண்டும். அது மட்டும் தான் அவனுக்கு வேண்டும்.
டெண்டர் முடிவுக்காக காத்திருந்த மிதிலாவை பார்த்தான் ஸ்ரீராம். ஒருவேளை அவள் தவறு செய்திருந்தால், அவளால் இவ்வளவு அமைதியாக இருக்க முடியுமா? அவள் தவறானவளாக இருப்பாள் என்று அவனால் நம்பவே முடியவில்லை.
முடிவு வெளியிடப்பட்டது...
"மிக குறைந்த தொகையாக, வெறும் அறுபத்தி ஐந்து கோடியை கோட் செய்து, இந்த டெண்டரை கைப்பற்றுகிறது எஸ்ஆர் ஃபேஷன்ஸ்" என்று ஒலிபெருக்கியில் கூறினார் சம்பந்தப்பட்ட அதிகாரி.
நிம்மதி பெருமூச்சுவிட்டு மிதிலாவை பார்த்த ஸ்ரீராம், தனது பார்வையை வேலாயுதத்தின் பக்கம் திரும்பினான். வேலாயுதத்தின் முகத்தில் அதிர்ச்சி தாண்டவமாடியது. அந்த கூடம் கரவொலிகளால் அதிர்ந்தது. ஆனால், அந்த சத்தம் ஸ்ரீராமின் காதுகளை எட்டவில்லை. அனைவரும் அவனுக்கு வாழ்த்து கூற துவங்கினார்கள். ஆனால், அவனது கண்கள் மிதிலாவின் மீதே இருந்தது. அவளை நோக்கி ஓடிச் சென்று, அவளை எவ்வளவு இறுக்கமாய் அணைத்துக் கொள்ள முடியுமோ, அவ்வளவு இறுக்கமாய் அணைத்துக் கொள்ள வேண்டுமென்று தோன்றியது அவனுக்கு. அவள் தவறானவள் அல்ல... அவள் உண்மையானவள்... சுத்தமானவள். அவனது கண்கள் சந்தோஷத்தில் கலங்கியது. ஸ்ரீராம் கருணாகரன் தெரிந்துகொண்டான், மிதிலா தனக்கு எவ்வளவு முக்கியம் வாய்ந்தவள் என்பதை. அவள், அவனுக்கு, இந்த உலகத்தில் எல்லாவற்றையும் விட முக்கியமானவள். அவனது மூச்சுக் காற்றை போல் இன்றியமையாதவள். அவள் தான், தனது வாழ்க்கையின் மிக பெரிய டீல் என்று உணர்ந்தான் ஸ்ரீராம்.
"நான் சொல்லல? எனக்கு தெரியும் மிதிலாவை பத்தி." என்றான் பல்லைக் கடித்தபடி. ஆனால், அது கோபத்தின் வெளிப்பாடல்ல. அவன் முகம் சந்தோஷத்தால் மின்னியது.
வேலாயுதத்தின் முகம் பேயறைந்தது போல் இருந்தது. ஏமாற்றம் அவர் முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது. மிதிலாவை பார்த்த ஸ்ரீராம், அவள் வேலாயுதத்தின் முகத்தைப் பார்த்து விஷமப் புன்னகை பூத்ததை கவனித்தான். அவனுக்கு தெரியாத ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. ஒருவேளை, வேலாயுதம் அவளிடம் தனக்கு சாதகமாய் நடந்து கொள்ளும்படி கேட்டிருக்கலாம். அவரிடம் ஒத்துக் கொள்வது போல் நடந்துகொண்டு விட்டு, அவள் அவரிடம் விளையாடி இருக்கலாம். அவனது மனம், ஓய்வில்லாமல் யோசித்துக் கொண்டிருந்தது.
வழக்கமான சம்பிரதாயங்களை முடிக்க, அழைக்கப்பட்டான் ஸ்ரீராம்.
கூடியிருந்த மக்கள், கலைந்து செல்லத் துவங்கினார்கள். வேலாயுதத்தை நோக்கி சென்ற மிதிலா, அவர் முன் கைகளைக் கட்டிக் கொண்டு புன்னகையுடன் நின்றாள். தூரத்திலிருந்து அந்தக் காட்சியைக் கண்ட ஸ்ரீராமுக்கு ஒன்றும் புரியவில்லை.
"நீங்க உங்களை அறிமுக படுத்திக்கிட்டப்போ என்னால உங்ககிட்ட பேச முடியல. அதுக்காக, உங்களுக்கு மரியாதை செய்யாம இருந்துட முடியாதுல்ல...?" என்றாள் நக்கலாக.
அவளைப் பார்த்து முறைத்தார் வேலாயுதம்.
"அல்பத்தனமான திட்டம் போட்டு இந்த டெண்டரை ஜெயிச்சிடலாம்னு நினைச்சிங்களா?"
"என்ன செஞ்ச நீ?"
"நான் ஏன் அதை உங்ககிட்ட சொல்லணும்? நீங்க என்ன எனக்கு சம்பளமா கொடுக்கிறீங்க?" என்று கிண்டலாக கேட்டுவிட்டு அங்கிருந்து அவள் செல்ல நினைத்த போது,
"இந்த டெண்டரை நீ எப்படி காப்பாத்தினேன்னு சொல்லு" என்றார் பல்லைக் கடித்தபடி.
அவரை நோக்கி திரும்பிய மிதிலா,
"யோசிங்க... யோசிச்சுக்கிட்டே இருங்க..." என்று கூறியபடி பின்னோக்கி நகர்ந்தாள் மிதிலா.
அவரிடம் ஒன்றும் கூறாமல், ஸ்ரீராமிடம் வந்த, அவள்,
"நம்ம கிளம்பலாமா சார்?" என்றாள்.
சரி என்று தலையசைத்தான் ஸ்ரீராம். அவளை தவறாக நினைத்தற்காக அவன் வருந்தினான். வேலாயுதத்தின் வார்த்தைகளை நம்பி, அவன் அவளை தவறாக நினைத்திருக்கக் கூடாது. அவன் தவறாக நினைத்தது வெகு சொற்ப நேரம் தான் என்றாலும், அவள் அப்படிப்பட்ட பெண் இல்லை அல்லவா...?
"இங்க என்ன நடக்குது மிதிலா?" என்றான்.
"நமக்கு டெண்டர் கிடைச்சிடுச்சு, சார்"
"அது எல்லாருக்கும் தெரியும். நான், திரைக்குப் பின்னால நடந்த விஷயத்தை பத்தி கேட்கிறேன்"
"நிச்சயமா சொல்றேன். ஆனா, இப்போ இல்ல... நம்ம ஆஃபீஸுக்கு போகணும்"
"இல்ல... எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும்"
"சரி, ஆஃபீஸுக்கு போற வழியில சொல்றேன்"
"ஆனா, ஆஃபீசுக்கு அவ்வளவு அவசரமா போக வேண்டிய அவசியம் என்ன?"
"அதை நீங்களே தெரிஞ்சுக்குவீங்க"
தன் கண்களை சுழற்றிய ஸ்ரீராம்,
"ஓகே, லெட்ஸ் கோ" என்றான்
எஸ் ஆர் ஃபேஷன்ஸ்
குகனுடைய அறையில் அமர்ந்து, முக்கியமான ஒரு ஆவணத்தை தட்டச்சு செய்து கொண்டிருந்தாள் மாலினி. அவளை, தன்னுடைய அறையில் ஏன் வேலை செய்யச் சொன்னான் குகன் என்று அவளுக்கு புரியவில்லை. ஸ்டெனோவான அவள், அவளுடைய கணினியில் தான் அனைத்து வேலைகளையும் செய்வது வழக்கம். ஆனால், இன்று காலையில் இருந்தே, தன்னுடைய அறையில் அவளை இருத்திக்கொண்டு வேலை வாங்கிக் கொண்டிருக்கிறான் குகன்.
வேலாயுதம் என்ன நினைக்கிறாரோ தெரியவில்லை. டெண்டரை கைப்பற்றிய பிறகு, நிச்சயம் அவர் அவளுக்கு ஃபோன் செய்திருப்பார். ஆனால், அவளுடைய கைபேசியோ அவளது அறையில் இருக்கிறது. அவளுக்கும், வேலாயுததிற்கும் இடையேயான ஒப்பந்தத்தின்படி, அவர் ஸ்ரீராமிடம், மிதிலா தான் தனக்கு உதவினாள் என்று கூறியிருப்பார். *இந்த டெண்டரை வேலாயுதம் கைப்பற்ற, மாலினி அவருக்கு உதவ வேண்டும். எஸ்ஆர் ஃபேஷன்ஸ்ஸில் இருந்து மிதிலாவை வெளியேற்ற, வேலாயுதம் மாலினிக்கு உதவ வேண்டும்* என்பது தான் அவர்களுக்கு இடையில் இருந்த ஒப்பந்தம். பணத்திற்காக மிதிலா தன்னை ஏமாற்றிவிட்டாள் என்று தெரிந்தால், நிச்சயம் ஸ்ரீராம் அவளை சும்மா விடமாட்டான். இந்த நிறுவனத்திலிருந்து அவளை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிடுவான். தன் மனதின் அடியாழத்திலிருந்து அவளை வெறுக்க துவங்குவான். அதன் பிறகு மாலினிக்கும் ஸ்ரீராமுக்கு இடையில் யாரும் இருக்க மாட்டார்கள். ஸ்ரீராமை தன்வசமாக்குவது அதன் பிறகு அவளுக்கு கடினமாக இருக்காது.
எல்லாம் சரி தான். ஆனால், மிதிலாவை பற்றி பொய் கூற, வேலாயுதம் இவ்வளவு அவசரப்பட்டிருக்க வேண்டாம்...! மாலினி கொடுத்த அதீத நம்பிக்கையில், வேலாயுதம் ஆரம்பத்திலேயே உளறிக்கொட்டி விட்டார். இது மாலினியே கூட எதிர்பாராதது. டெண்டரை கைப்பற்றிய பிறகு தான் அவர் ஸ்ரீராமிடம் இதைப் பற்றிக் கூறுவார் என்று அவள் நினைத்திருந்தாள். ஆனால், மாலினியின் துரதிர்ஷ்டம், ஸ்ரீராமை நிலைகுலையச் செய்ய வேண்டும் என்று, வேலாயுதம் செய்த வேலை, ஸ்ரீராமுக்கு தன் மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிய வைத்து விட்டது. நல்ல மனம் கொண்டவர்களுக்கு கெடுதல் செய்ய நினைத்தால், அந்த கெடுதல் கூட நல்லதாக தான் முடியும். அது தான் இங்கு ஸ்ரீராமுக்கும் மிதிலாவுக்கும் நடந்திருக்கிறது.
"இந்த வேலை எப்ப தான் முடியுமோ தெரியல" என்று உள்ளுக்குள் அலுத்துக் கொண்டாள் மாலினி.
திடீரென்று அலுவலகம் அமைதியானது. அது, ஸ்ரீராம் அலுவலகத்திற்கு வந்துவிட்டான் என்பதற்கான அறிகுறி. அது மாலினிக்கு தெரியும். ஸ்ரீராம் வந்து விட்டானா? அவன் மிதிலாவின் மீது கோபத்துடன் வந்திருப்பான். மாலினிக்கு ஆவல் தாங்கவில்லை. அப்போது அவள், குகனின் அறைக்குள் மிதிலா வருவதைப் பார்த்தாள்.
"டெண்டர் ரிசல்ட் என்ன ஆச்சி மிதிலா?" என்றான் குகன், முடிவை தெரிந்து கொண்டே.
அவனுக்குத் தான் மிதிலா, ஏற்கனவே குறுஞ்செய்தி அனுப்பிவிட்டாளே...! மாலினியை, குகனின் அறையில் நிறுத்தி வைக்க வேண்டும் என்பது அவர்களுடைய திட்டம். மாலினி, வேலாயுதத்தின் அழைப்பை ஏற்க கூடாது என்பதற்காகத் தான் இந்த ஏற்பாடு.
"டெண்டர் நமக்குத் தான் கிடைச்சிருக்கு" என்றாள் ஓரக்கண்ணால் மாலினியை பார்த்தபடி மிதிலா.
அந்த அலுவலகம் முழுவதும் குளிரூட்டப்பட்டு இருந்த போதும், மாலினிக்கு வியர்த்துக் கொட்டியது. அவள் மிதிலாவை, பேயை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"வாவ், கிரேட்" என்று மிதிலாவுடன் கை குலுக்கினான் குகன்.
மிதிலா, குகனுக்கு சைகை செய்ய, அவன் சரி என்று தலையசைத்து,
"மாலினி, நம்ம வேலையை லஞ்சுக்கு பிறகு செய்யலாம். இப்போ நீங்க கிளம்புங்க" என்றான்.
சரி என்று தலையசைத்துவிட்டு தனது அறைக்கு விரைந்தாள் மாலினி. தன்னுடைய கைப்பேசியை எடுத்துப் பார்த்தவள், அதில் வேலாயுதத்திடம் இருந்து ஏழு மிஸ்டு கால்கள் வந்திருந்ததை பார்த்தாள். ஒன்றும் புரியாமல் பெருமூச்சு விட்டவள், வேலாயுதத்துக்கு ஃபோன் செய்தாள். அந்த அழைப்பை உடனடியாக ஏற்றார் வேலாயுதம்.
"நீ அங்க என்ன எழவு கொட்டிக்கிட்டு இருக்க? பெரிய இவ மாதிரி, டெண்டர் அமௌன்ட்டை மாத்திட்டதா அலட்டிக்கிட்ட... ஆனா, வழக்கம் போல ஸ்ரீராம் டெண்டரை சுருட்டிட்டான். என் முன்னாடி வந்த, உன்னை சாவடிச்சிடுவேன்... என்கிட்ட வாங்குன பணத்தை மரியாதையா திருப்பிக் கொடு. இல்லன்னா உன்னை தூக்கி உள்ள வெச்சுடுவேன்..." என்று நெருப்பைக் கக்கினார்.
"என்னை நம்புங்க சார். நான் டெண்டர் அமௌன்ட்டை, 90 கோடிக்கு மாத்தினேன். இது எப்படி நடந்துச்சுன்னு எனக்கு ஒண்ணுமே புரியல"
"வாயை மூடு. நீ சொல்றதை, இன்னும் நான் கேப்பேன்னு நினைச்சியா? நீயும் அந்த திமிர் பிடிச்ச மிதிலாவும் சேர்ந்து தானே இதையெல்லாம் செஞ்சீங்க? இதை நீங்க ரெண்டு பேரும் திட்டம்போட்டு, வேணுமின்னே செஞ்சிருக்கணும்..."
"சத்தியமா இல்லை சார். என்னை நம்புங்க. இது எப்படி நடந்துச்சுன்னு எனக்கு தெரியல"
"என் பணத்தை எனக்கு திருப்பி அனுப்பு" என்று அழைப்பைத் துண்டித்தார் வேலாயுதம் கோபமாக.
மாலினிக்கு கோபம் தலைக்கேறியது. இது எப்படி நடந்தது? பின்னால் திரும்பியவள் மிதிலா நிற்பதை பார்த்து மிரண்டு போனாள்.
"ஃபோன்ல யாரு? வேலாயுதமா?" என்றாள் மிதிலா.
"என்ன பேசுறீங்க நீங்க?"
அவள் கையிலிருந்த கைப்பேசியை பிடுங்கிய மிதிலா, ஒரு அவுட் கோயிங் காலையும், ஏழு மிஸ்டுகால்களையும் பார்த்தாள்.
"இப்பவும் நீ அவர்கிட்ட பேசலைன்னு சொல்லுவியா?"
மென்று முழுங்கினான் மாலினி.
"நானும், குகனும் இந்த டெண்டரை பத்தி பேசிக்கிட்டிருந்தப்போ நீ ஒளிஞ்சிருந்து கேட்டதை நான் பார்த்தேன். இந்த டெண்டர், ஜூனியருக்கு எவ்வளவு முக்கியமானதுன்னு உனக்கே நல்லா தெரியும். தெரிஞ்சிருந்தும், என்னை இங்கிருந்து வெளியே அனுப்பணும் என்கிற ஒரே காரணத்துக்காக நீ இந்த வேலையை செஞ்சிருக்க. இடிஞ்சு விழுற கட்டிடத்துக்கு என்னை அனுப்புனது கூட பரவாயில்ல... ஏன்னா, என்னை உனக்கு பிடிக்காது. ஆனா, ஜூனியருக்கு எதிரா நீ திரும்புவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. ஏன்னா, நீ அவர் மேல வச்சிருக்கிற காதல் உண்மையானதுன்னு நான் நெனச்சேன்" என்ற அவளை அதிர்ச்சியுடன் பார்த்தாள் மாலினி.
"ஆனா, என்னுடைய எண்ணம் தப்புன்னு நீ நிரூபிச்சிட்ட. நீ டெண்டர் அமௌன்ட்டை மாத்தும் போது எனக்கு ரொம்ப வருத்தமா இருந்தது. இன்னும் பத்து கோடி கம்மியா, டெண்டரை வெறும் 65 கோடிக்கு சப்மிட் பண்ணோம். ஏன்னா, எப்படியும் இந்த டெண்டர் ஜூனியர் கையை விட்டுப் போகக்கூடாதுன்னு எங்களுக்கு ஒரு வெறியே வந்துடுச்சு... உன்னால..."
மாலினி தலைகுனிந்து நின்றாள்.
"உன்னுடைய சுயநலத்துக்காக, நீ விரும்புறவருடைய மனசு உடையிறதை பத்தி நீ கவலைப் படல. இவ்வளவு தானா உன்னுடைய காதல்? நம்ம காயப்பட்டாலும், நமக்கு பிடிச்சவங்க காய படக்கூடாதுன்னு நினைக்கிறது தான் உண்மையான காதல். அவங்க மனசை சந்தோஷப்படுத்துறது தான் காதல். நீ ஒரு சுயநலவாதி. நீ யாருடைய காதலுக்கும் அருகதை இல்லாதவள்." என்றாள் அமைதியாக.
"ஐ அம் சாரி, மிதிலா. தயவுசெய்து யார்கிட்டயும் சொல்லிடாதீங்க" கெஞ்சினாள் மாலினி.
அவளுடைய கெஞ்சலுக்கு செவிசாய்க்காமல், அந்த இடத்தை விட்டு நகர மிதிலா திரும்பிய போது, அவள் காதலுக்கு கொடுத்த விளக்கத்தை கேட்டுக்கொண்டு நின்றிருந்தான் ஸ்ரீராம். அவனை அங்கு பார்த்து விக்கித்துப் போனாள் மாலினி. ஆனால், அவனது முகமோ வழக்கத்திற்கு மாறாய் அமைதியாய் இருந்தது.
அப்போது அங்கு போலீஸ் வருவதை அவர்கள் பார்த்தார்கள்.
"இந்த பொண்ணு தான்" என்றான் ஸ்ரீராம் மாலினியை சுட்டிக்காட்டி.
மாலினியின் கைபேசியை போலீசாரிடம் ஒப்படைத்தாள் மிதிலா.
"மாலினி, வேலாயுதத்தோட கடைசியா பேசினதை நாங்க ரெக்கார்ட் பண்ணிட்டோம். இவங்க வேலாயுதம்கிட்ட பணம் வாங்கியிருக்காங்க" என்றார் இன்ஸ்பெக்டர்.
ஆமாம் என்று தலையசைத்தான் ஸ்ரீராம்.
மாலினியின் கையில் விலங்கு பூட்டப்பட்டது.
"எஸ்ஆர்கே, ப்ளீஸ் என்னை விட்டுடுங்க. இனிமே இப்படி செய்ய மாட்டேன்" என்று அழத் தொடங்கிய மாலினியை, பெண் போலீசார் தங்களுடன் அழைத்துச் சென்றார்கள்.
அவளுக்காக வருத்தப்பட்டாள் மிதிலா. ஒரு பெண், தன் பாதையில் வரும் ஒருத்தியை விலக்குவதற்காக இந்த அளவிற்கு கூட இறங்கி செல்வாள் என்பதை அவளால் நம்ப முடியவில்லை. அவள் அங்கிருந்து தன் அறைக்கு செல்ல முயன்ற போது, அவளை தடுத்தான் ஸ்ரீராம்.
"மிதிலா..."
அவனை நோக்கி தன் பார்வையைத் திருப்பினாள் மிதிலா.
"தேங்க்ஸ்..."
"நான் என் கடமையைத் தான் சார் செஞ்சேன்" அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை மிதிலா.
அவளைப் பார்த்தபடி புன்னகையுடன் நின்றான் ஸ்ரீராம். அவள் தன் கடமையைத் தான் செய்தாள் என்றாலும், ஸ்ரீராமின் இதயத்தை மொத்தமாய் கொள்ளையடித்துவிட்டாள்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top