20 தீர்வு

20 தீர்வு

அழுதுகொண்டிருந்த நர்மதாவை பார்த்து அமைதியாய் நின்றாள் மிதிலா. தன்னை சுதாகரித்துக் கொண்டு, மிதிலாவை பார்த்து லேசாக புன்னகை புரிந்தாள் நர்மதா. நர்மதாவின் கண்ணீரை நிறுத்த வழி தெரியாமல், அங்கு சோகமாய் இருந்த அனைவரும் அதையே செய்தார்கள். தனது தோழியை பார்த்தவுடன் குதூகலமானான் லட்சுமன். அப்பொழுது குகன் கூறிய வார்த்தைகள் அவனுக்கு ஞாபகம் வந்தது. மிதிலாவை இங்கு அனுப்பியது குகனா? ஏனென்றால், காரணமில்லாமல் மிதிலா பூவனம் வரமாட்டாள். அதுவும் ஸ்ரீராம் இருக்கும் போது நிச்சயம் வரமாட்டாள். காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், அனைத்தையும் மறந்து அவள் இங்கு வந்துவிட்டது சந்தோஷம் என்று நினைத்தான் லக்ஷ்மன். அவன் அவளை நோக்கி ஓடினான்.

"குகா ஃபோன் பண்ணானா?"

ஆமாம் என்று தலையசைத்தாள் மிதிலா.

"விஷயம் என்னன்னு உனக்கு சொன்னானா?"

"மேலோட்டமா..."

"அக்காவோட கல்யாண மோதிரம் காணோம். மாமாவுக்கு ஏதாவது ஆயிடுமோன்னு நினைச்சு அவங்க பயந்து அழுதுகிட்டு இருக்காங்க. அவங்க ரொம்ப சென்டிமென்ட். எல்லாத்துக்கும் சீக்கிரம் அப்செட் ஆயிடுவாங்க. அவங்களை எப்படி சமாதானப்படுத்துறதுன்னே எங்களுக்கு புரியல. ராமுவும், மாமாவும் கூட ட்ரை பண்ணி பாத்துட்டாங்க" என்றான் சோகமாக.

"ஒ..." என்று ஆழமாய் யோசித்தாள்.

"எங்க மூளை எல்லாம் வேலையே செய்யல... உன்னால ஏதாவது செய்ய முடியுமா?"

முடியும் என்று தலையசைத்தாள்.

"நிஜமாவா?"

"ஆனா, என்னுடைய ஐடியா பலன் கொடுக்குமான்னு எனக்கு தெரியல"

"பரவாயில்ல ட்ரை பண்ணி பாரு"

"சரி "

"வா"

அவர்கள் நர்மதாவை நோக்கி நடக்க, நர்மதாவுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த அவளது கணவன் தினேஷ், மிதிலாவை பார்த்து *ஏதாவது செய்யேன்* என்று கண்களால் ஜாடை காட்டினான். அவனை நோக்கி கண் இமைத்தாள் மிதிலா.

மிதிலாவையும் ஸ்ரீராமையும் கவனித்துக்கொண்டிருந்த, புஷ்பாவிற்கு பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டான் லக்ஷ்மன்.

மிதிலா தன்னை நோக்கி வருவதை பார்த்து, கண்களை துடைத்துக் கொண்டாள் நர்மதா. நர்மதாவின் அடுத்த பக்கத்தில் அமர்ந்திருந்த ஸ்ரீராம் எழுந்து நின்றான். அவன் அப்படி செய்வதை பார்த்து, தான் அங்கு வந்தது அவனுக்கு பிடிக்கவில்லையோ என்று நினைத்தாள் மிதிலா. ஆனால் அவளுக்கு ஆச்சரியம் அளிக்கும் வண்ணம், தன் அக்காவின் பக்கத்தில் இருந்த இடத்தை கைகாட்டி,

"உக்காருங்க" என்றான்.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த புஷ்பாவிற்கு மட்டுமல்ல, அனைவருக்குமே ஆச்சரியமாகத் தான் இருந்தது. அவன் தான் தன்னுடைய இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்காதவன் ஆயிற்றே...! முக்கியமாய் நர்மதாவின் பக்கத்தில்...! நர்மதாவின் பக்கத்தில் அமர்ந்து, அவளை பார்த்து புன்னகைத்தாள் மிதிலா. தினேஷுக்கு பக்கத்தில் அமர்ந்து, அவர்கள் பேசுவதை கவனிக்கலானான் ஸ்ரீராம்.

"உங்களால தான் மாமா, அக்கா அழுதுகிட்டு இருக்காங்க..." என்றாள் தினேஷிடம்.

"என்னது... என்னாலயா? என்ன இப்படி சொல்றீங்க?" என்றான் பதட்டத்துடன்.

"பின்ன... பாருங்க அவங்க எப்படி அழறாங்கன்னு... நீங்க ஜாக்கிரதையா இருப்பீங்கன்னு ஒரு உத்தரவாதத்தை அவங்களுக்கு கொடுத்திருந்தா, ஒரு சாதாரண மோதிரத்துக்காக இப்படி அழுவாங்களா...?"

அதைக் கேட்டு களுக்கென்று சிரித்தான் தினேஷ்.

"என்ன செய்றது மிதிலா... ஒரு சாதாரண மோதிரம் மேல வச்ச நம்பிக்கையை என்னோட பொண்டாட்டி என் மேல வைக்கலயே..." என்றான் பொய்யான கவலையோடு.

உதட்டை சுழித்து அவனைப் பார்த்து சினிங்கினாள் நர்மதா.

"நீங்க அக்காவை ஒன்னும் சொல்லாதீங்க மாமா. அவங்க உங்க மேல ரொம்ப பாசம் வச்சிருக்காங்க. அதனால தான், உங்களுக்கு ஏதாவது ஆயிடுமோன்னு பயப்படுறாங்க"

ஆமாம் என்று தலையசைத்தாள் நர்மதா.

"எனக்கு ஒன்னும் ஆகாது மிதிலா. நர்மதாவுடைய அன்புக்கு ரொம்ப பவர் அதிகம். அது, எந்த கெட்டதிலிருந்தும் என்னை காப்பாத்திடும். சரி தானே?" என்றான் நர்மதாவின் தோளை தன் கரத்தால் சுற்றி வளைத்தபடி.

"நீங்க சொல்றது ரொம்ப சரி மாம்ஸ். எமனே வந்தாலும், அக்காவை தாண்டி வந்து தான் உங்களை தொட முடியும்" என்று ஒத்து ஊதினான் லட்சுமன்.

"எங்க அம்மா சொல்லுவாங்க, நம்ம ஏதாவது ஒன்னை இழந்தா, அதை விட பெட்டரான ஒன்னை கடவுள் நமக்கு கொடுப்பாருன்னு" ஸ்ரீராம் கூறிய அதே வார்த்தைகளை மிதிலாவும் கூறினாள்.

ஆச்சரியமாய் தன் தம்பியை ஏறிட்டாள் நர்மதா. ஸ்ரீராமும் கூட ஆச்சரியம் அடைந்தான்.

"என்னோட கல்யாண மோதிரத்தை விட பெட்டரான ஒன்னு, என்னவா இருக்க முடியும், மிதிலா?" தன் தம்பியை கேட்ட அதே கேள்வியை, அவள் மிதிலாவையும் கேட்டாள்.

அவள் தம்பியிடம் இல்லாமல் போனது போல் அல்லாமல், மிதிலாவிடம் அதற்கு பதில் இருந்தது. அவள் என்ன பதில் கூற போகிறாள் என்று தெரிந்து கொள்ள ஸ்ரீராம் கூட ஆர்வமாய் இருந்தான்.

"கடவுளுடைய ஆசீர்வாதம்" என்று, கடவுள் நம்பிக்கை உள்ள யாரும் மறுக்கவே முடியாத பதிலை கூறினாள் மிதிலா.
 
"நீங்க என்ன சொல்றீங்க?" என்றாள் நர்மதா கண்கள் பளிச்சிட.

"கடவுள், நல்லவங்களை சோதிச்சி, அது மூலமா அவங்களுக்கு ஆசிர்வாதம் கொடுப்பாங்களாம். இப்போ, உங்க ரெண்டு பேரையும் கடவுள் ஆசிர்வாதம் பண்ணணும்னு நினைக்கிறாங்க போலிருக்கு..." என்றாள் ஆள்காட்டி விரலால் தன் கன்னத்தை தட்டி, யோசித்தபடி.

"எனக்கு புரியல" என்றாள் நர்மதா ஆர்வமாக.

மிதிலா, தினேஷ் பக்கம் திரும்பினாள்

"மாமா, அக்காவை கோவிலுக்கு கூட்டிகிட்டு போங்க. புதுசா ஒரு மோதிரம் வாங்கி, அம்மன் காலடியில் அதை வச்சு பூஜை பண்ணி, சந்நிதானத்திலேயே அவங்களுக்கு அதை போட்டு விடுங்க. கடவுளுடைய ஆசீர்வாதம் உங்க கூட இருந்தா, எந்த கெட்டது என்ன செஞ்சிட முடியும்...?"

அதைக் கேட்டவுடன் நர்மதாவின் முகம் மட்டுமல்ல ஸ்ரீராமின் முகமும் பிரகாசம் அடைந்தது. வாழ்க்கையிலேயே முதல் முறையாக, தன்னைவிட ஒருவர் சிறப்பாக செயல்பட்டதற்காக வருந்தவில்லை ஸ்ரீராம். இந்த மாதிரியான விஷயங்களில் எல்லாம் அவன் திறமை இல்லாதவன் என்பதை ஒப்புக் கொண்டு தானே ஆக வேண்டும்?

"இது ரொம்ப நல்ல ஐடியா" என்றார் பாட்டி.

"அதுக்கப்புறம், உங்களுக்கு உங்களுடைய பழைய மோதிரம் கிடைச்சாலும் கிடைக்கலாம்" என்றாள் மிதிலா.

அதைக் கேட்டு, எப்போது வேண்டுமானாலும் உடைந்துவிடும் போல இருந்த நர்மதாவின் பழைய மோதிரத்தை இப்போது கொடுக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் புஷ்பா.

"நாளைக்கு நம்ம கோவிலுக்குப் போறோம்... இப்போ உனக்கு சந்தோஷம் தானே?" என்றான் தினேஷ்.

ஆமாம் என்று சந்தோசமாய் புன்னகைத்தாள் நர்மதா. தனது அக்காவின் புன்னகை திரும்பிவிட்டதைப் பார்த்து, ஸ்ரீராமின் இதயம் நிம்மதி அடைந்தது. அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். தினேஷை பார்த்து, தன் புருவத்தை உயர்த்தி சிரித்தாள் மிதிலா. தினேஷ் சந்தோஷமாய் தன் கண்ககளால் அவளுக்கு நன்றி கூற, அவளுடைய சிடுமூஞ்சி பாஸ் கண்களால் அவளை மொத்தமாய் விழுங்கிக் கொண்டிருந்தான்.

மிதிலாவின் பெயரை கேட்டாலே எரிச்சலடைந்து கொண்டிருந்த ஸ்ரீராம், அவளை வைத்த கண் வாங்காமல் ரசித்துக் கொண்டிருந்ததை, நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டிருந்தார் புஷ்பா.

"இந்த சந்தோஷத்தை கொண்டாடலாம்" என்று மிதிலாவையும், நர்மதாவையும் கையை பிடித்து இழுத்து சென்றான் லட்சுமன்.

மற்றவர்களும் அவர்களுடன் சென்றார்கள். அவர்களைப் பார்த்து எரிச்சல் அடைந்தான் ஸ்ரீராம். அவன் அங்கு இருப்பதை யாருமே கண்டுகொள்ளவில்லை. அவன் அங்கு இருக்கிறான் என்பதையே அவர்கள் மறந்து விட்டார்கள்.

உணவு மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த, சின்ன சைஸ் ஜாங்கிரியை எடுத்து மிதிலாவுக்கு ஊட்டி விட்டான் லட்சுமன். நர்மதாவும் ஒன்றை எடுத்து, அவள் வாயில் திணித்தாள். பரத்தும் அதையே செய்ய நினைத்த போது, அவன் கையை பிடித்து தடுத்து நிறுத்தி, அந்த ஜாங்கிரியை பிடுங்கினான் ஸ்ரீராம்.

"அவங்க ஒரு டயாபட்டிக்... ஞாபகம் இருக்குல்ல...?" என்றபடி மிதிலாவை பார்க்க, தனது வாயிலிருந்த இரண்டாவது ஜாங்கிரியை கையில் எடுத்துக்கொண்டு நேராக நின்றாள் மிதிலா.

பாட்டியும், புஷ்பாவும் ஒருவரை ஒருவர் ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டார்கள்.

அங்கு சந்தோஷமாய் இல்லாத ஒரே ஒருத்தி லயா மட்டும் தான். அவள் போட்ட திட்டம் அவளுக்கே வினையாய் முடிந்துவிட்டது. வேறு யாருக்கோ பாராட்டுக்கள் சென்று கொண்டிருக்கிறது. யார் இந்த பெண்? பரத், ப்ரியாவின் திருமணத்தில் கூட இவளை பார்க்கவில்லையே...? எதற்காக இவர்கள் இவளை இப்படி கொண்டாடுகிறார்கள்? போதாக்குறைக்கு, தனது அக்காவின் பக்கத்தில், தான் அமர்ந்திருந்த இடத்தை அவளுக்கு கொடுத்து, ஸ்ரீராமும் அவளுக்கு முக்கியத்துவம் வழங்கி விட்டான். ஆனால் அந்தப் பெண்ணோ ஸ்ரீராமை திரும்பிக்கூட பார்ப்பதாய் தெரியவில்லை. ஆனால், ஸ்ரீராமின் பார்வை அந்தப் பெண் மீது மட்டும் தான் இருக்கிறது... எங்கிருந்து வந்து தொலைத்தாள் இவள்...?

சிறிது நேரம் லக்ஷ்மனுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு, மற்றவர்களுடன் அமர்ந்திருந்த  நர்மதாவிடம் வந்தாள் மிதிலா.
 
"நான் கிளம்பறேன் கா" என்றாள்.

அப்பொழுது ஸ்ரீராமின் முகம் மாறியதை கவனிக்க தவறவில்லை புஷ்பா.

"என்னது...? போறீங்களா...? முடியாது. நீங்க எங்க கூட தான் லஞ்ச் சாப்பிடணும்." என்றாள் நர்மதா.

"நான் இன்னைக்கு எங்க அக்கா வீட்டுக்கு வரேன்னு சொல்லி இருந்தேன். அதுக்கு முன்னாடி லக்கியை பார்க்க வந்தேன்"

"நீ உங்க அக்காவை எப்ப வேணும்னாலும் பார்க்கலாம். ஆனா, இப்பல்லாம் நீ இங்க வரதே இல்ல. அதனால, இன்னைக்கு நீ இங்க தான் இருக்கணும். உங்க அக்கா வீட்டுக்கு நீ அடுத்த வாரம் போகலாம்" என்றார் புஷ்பா.

"நேத்து அக்கா ஃபோன் பண்ணி வரச் சொல்லி இருந்தாங்க" என்று தயங்கினாள் மிதிலா.

"நான் உங்க அக்கா இல்லையா?" என்றாள் நர்மதா முகத்தை சோகமாய் வைத்துக்கொண்டு.

ஆம் என்று தலையசைத்தாள் மிதிலா.

"அப்படின்னா இன்னைக்கு இங்க இருங்க"

அவள் சரி என்று தலையசைத்தவுடன் நிம்மதி அடைந்தான் ஸ்ரீராம்.

"தட்ஸ் கிரேட்" என்று கூறியபடி அவளை இழுத்துக் கொண்டு தன் அறைக்கு ஓடினான் லக்ஷ்மன்.

பரத்தும், ப்ரியாவும் அவர்களுடன் சென்றார்கள். அந்தப் பெண்ணுக்கு இவர்கள் அளித்த முக்கியத்துவத்தை சகிக்கமுடியாமல் எரிச்சலடைந்த லயா, தன் அறைக்கு சென்றாள்.

வரவேற்பறையில் அமர்ந்திருந்த ஸ்ரீராம், லயாவைவிட எரிச்சல் அடைந்தான். மிதிலா இருக்கும்  லக்ஷ்மணனின் அறைக்கு அவனால் செல்ல முடியாது. தனது அறைக்கும் செல்ல முடியாது. அவன் சென்றபின் மிதிலா ஒருவேளை இங்கு வந்தால் என்ன செய்வது? அவனுக்கே தெரியாமல், அவனது மனம் மிதிலாவை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தது.

"நர்மதா, வா நம்மளும் லட்சுமன் ரூமுக்கு போகலாம்." என்றார் பாட்டி.

"ஆமாம் பாட்டி. அவங்க ரொம்ப நாளைக்கு அப்பறம் இங்க வந்திருக்காங்க" என்றாள் நர்மதா.

"நான் மட்டும் இங்க இருந்து என்ன செய்யப் போறேன்? நானும் வரேன்" என்றான் தினேஷ்.

"ராமு, உனக்கு சாப்பிட ஏதாவது வேணுமா?" என்றார் புஷ்பா.

வேண்டாம் என்று தலையசைத்தான்.

"அட, காலையில இருந்து நீ எதுவுமே சாப்பிடலயே. ஏதாவது சாப்பிடு" என்றார் பாட்டி.

சரி என்று தலையசைத்துவிட்டு, வேறு வழியில்லாமல் தன் அறைக்கு சென்றான் ஸ்ரீராம். அனைவரும் லக்ஷ்மணனின் அறைக்கு சென்றபின் மிதிலா மீண்டும் வரவேற்பறைக்கு வர வாய்ப்பில்லை அல்லவா...?

அங்கிருந்து செல்ல நினைத்த பாட்டியை தடுத்து நிறுத்தி, அவர் காதில் ஏதோ கூறினார் புஷ்பா. சரி என்று புன்னகையுடன் தலையசைத்தார் பாட்டி.

சமையலறையில் காத்திருந்தார் புஷ்பா. அவர் எதிர்பார்த்தபடியே, சில நிமிடங்களில் சமையல் அறைக்கு வந்தாள் மிதிலா.

"என்ன வேணும் மிதிலா?" என்றார் ஆரஞ்சு பழச்சாற்றை கண்ணாடி டம்ளரில் ஊற்றியபடி புஷ்பா.

"பாட்டிக்கு சுடுதண்ணி கொண்டு போக வந்தேன்"

"அப்படியா, இரு"

ஒரு பாத்திரத்தை எடுத்து தண்ணீரை சூடேற்றினார் புஷ்பா. பழச்சாற்றை கையில் எடுத்துக் கொண்டு திரும்பிய அவருக்கு கால் மடங்கி கொண்டது.

"ஐயோ... " என்று அலறினார்

"என்ன ஆச்சு, ஆன்ட்டி?"

"ஒன்னும் இல்லம்மா... இஸ்ஸ்ஸ்ஸ்..."

"என்ன செய்யணும்னு சொல்லுங்க. நான் செய்யறேன்"

"ரொம்ப நன்றி மா... இந்த ஜூஸை ராமுகிட்ட கொடுக்க முடியுமா மா?" என்றார் காலை பிடித்தவாறு.

திகைத்து நின்றாள் மிதிலா. ஜூனியருக்கு பழச்சாறு தருவதா? யாராவது அவளது உதவிக்கு வந்து விடக்கூடாதா என்று, கடவுளை வேண்டியபடி வாசலை நோக்கினாள். இந்த முறை, புஷ்பாவிற்கு உதவுவது என்று கடவுள் முடிவு செய்துவிட்டதால், மிதிலாவின் உதவிக்கு யாரையும் அனுப்பவில்லை.

"ப்ளீஸ்மா... " என்றார் புஷ்பா கெஞ்சலாக.

சரி என்று தயக்கத்துடன் தலையசைத்துவிட்டு, அந்த பழச்சாற்றை வாங்கிக்கொண்டு ஸ்ரீராமின் அறையை நோக்கி சென்றாள் மிதிலா.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top