2 முதல் சந்திப்பு
2 முதல் சந்திப்பு
தங்களது இல்லத்தில் வெகுவாக *ட்ரெண்ட்* ஆகிக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தான் ஸ்ரீராம். அவள் அடிக்கடி அவர்கள் இல்லத்திற்கு வந்து செல்வாள் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால் அவள், அவனது நினைப்பை பொய்யாக்கினாள். அதன் பிறகு அவள் அங்கு வரவேயில்லை. அப்படி இருந்த பொழுதும், அவனது குடும்பத்தினர் அவளை பற்றி பேசுவதை மட்டும் நிறுத்தவில்லை. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அவளைப் பற்றி அவன் கேட்கத் தான் செய்தான். அன்றும் வித்தியாசம் அல்ல... ஸ்ரீராமின் அக்கா, நர்மதா தான் ஆரம்பித்தாள்.
"லட்சு, மிதிலா எப்படி இருக்காங்க?" என்றாள்.
"ஆமா, அவ எப்படி இருக்கா? ஏன் இப்பெல்லாம் நம்ம வீட்டுக்கு அவ வர்றதே இல்ல?" என்றார் பாட்டி.
"அவ ரொம்ப பிஸியா இருக்கா, பாட்டி" என்றான் லட்சுமன்.
"அவ வொர்க் பண்றா தான்... ஆனா, ஒரு ஞாயிற்றுக்கிழமைல நம்மளை வந்து பார்த்துட்டு போகலாமே?" என்றார் பாட்டி தண்ணீரை தம்ளரில் ஊற்றியவாறு.
சாப்பிடுவதை சில நொடி நிறுத்தினான் ஸ்ரீராம். அவள் வேலை செய்து கொண்டிருக்கிறாளா? எங்கு? என்ன வேலை? ஆனால், அதைக் கேட்க அவனது ஈகோ விட்டு விடுமா என்ன? அந்தப் பெண்ணைப் பற்றி பேசுபவர் பட்டியலில் இணைய அவன் விரும்பவில்லை.
"அவ ரொம்ப கவலையா இருக்கா பாட்டி. அவங்க கம்பெனி, நஷ்டத்துல ஓடிக்கிட்டு இருக்கு. அது சீக்கிரமே லாக்டவுன் ஆகும்னு நாங்க எதிர்பார்க்கிறோம்" என்றான் சோகமாக லட்சுமன்.
"அடப்பாவமே" என்றார் பாட்டி.
"எதுக்காக அவங்க கம்பெனி லாக்டவுன் ஆகப்போகுது?" என்றாள் நர்மதா.
"அவங்க பாஸ்க்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு. அவருடைய பையனுக்கு, அவங்க அப்பாவுடைய பிசினஸ் ஃபீல்டு பிடிக்கல. அதனால இந்த பிசினஸை அவங்க இழுத்து மூடுறாங்க." என்றான் ஸ்ரீராமின் மற்றொரு தம்பியான பரத்.
அவள் எந்த நிறுவனத்தில் வேலை செய்கிறாள் என்பதை புரிந்து கொள்ள, இப்பொழுது ஸ்ரீராமுக்கு எந்த கஷ்டமும் இல்லை. இருந்தாலும் அதை நிச்சயப்படுத்திக் கொள்ள அவன் நினைத்தான்.
"ஆனா, மிஸ்டர் தர்மராஜ், ரெக்கவர் ஆகுறார்னு கேள்விப்பட்டேனே..." என்றான், ராஜ் மோட்டார்ஸில் நடப்பது என்னவென்று தனக்கு தெரியாதது போல.
"ஆமாண்ணா... ஆனா, டாக்டர் அவரை வேலை செய்யக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்களாம்" என்றான் பரத்.
"ஓஹோ..."
அப்படி என்றால், அவள் தனது வேலையை இழக்கப் போகிறாள். ஒருவேளை, அதன் பிறகு அவள் இங்கு வர வாய்ப்பு இருக்கிறது. வரட்டும், அவனது குடும்பத்தார் அப்பொழுது தெரிந்து கொள்வார்கள், அவள் உண்மையில் யார் என்பதை.
......
ஸ்ரீராம் எதிர்பார்த்தபடியே, தனது வேலையை ராஜினாமா செய்த பின் தான் மிதிலா பூவனம் வந்தாள். அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய ஸ்ரீராம், வரவேற்பறையில் ஒருவரும் இல்லாமல் அமைதியாய் இருந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்தான். அப்பொழுது, வேலைக்கார சுப்ரமணி காபி தம்ளர்கள் நிறைந்த தட்டுடன் பாட்டியின் அறைக்கு செல்வதை பார்த்தான் அவன்.
"இதை எங்க எடுத்துக்கிட்டு போற, சுப்பு?" என்றான்.
"பாட்டி எல்லாருக்கும் காபி கொண்டு வர சொன்னாங்க. அங்க தான் எடுத்துக்கிட்டு போறேன், அண்ணா"
"ஏன் எல்லாரும் அங்க இருக்காங்க? அங்க என்ன செய்யறாங்க?"
"மிதிலா மேடம், பாட்டிக்கு ஏதோ சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. எல்லாரும் அங்க தான் இருக்காங்க" என்று கூறிவிட்டு காபி தட்டுடன் நடையை கட்டினான் சுப்பு.
"மிதிலாவா? எதுக்காக இவங்க எல்லாரும் இப்படி ஓவர் ரியாக்ட் பண்றாங்க?" என்று எண்ணியப்படி தனது அறையை நோக்கி நடந்தான்.
பரத்தும், லக்ஷ்மணனும் இன்னும் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பவில்லை. ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற கான்ஃபரன்ஸ்ஸை முடித்துக்கொண்டு நேராக வீட்டிற்கு வந்திருந்தான் ஸ்ரீராம்.
தன் அறைக்கு சென்றாலும், அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. அந்தப் பெண்ணிடம் பேச ஏதாவது ஒரு வாய்பை அவன் தேடியாக வேண்டும். ஒரு நடுத்தர வர்க்கத்து பெண்ணிடம் பேச அவனுக்கு விருப்பமில்லை என்றாலும், தன் குடும்பத்திற்காக அவன் அதை செய்யத் தான் வேண்டும். அப்பொழுது தானே அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவன் தெரிந்து கொள்ள முடியும்? அவளிடம் பேசினால், அவளுடைய உண்மையான எண்ணத்தை அறிந்து கொண்டு விட முடியும் என்று ஆணித்தரமாய் நம்பினான் ஸ்ரீராம்.
அவன் கீழ்தளம் வந்த போது, வரவேற்பறையில் ஒரு பெண் ஏதோ செய்து கொண்டு, தனியாக அமர்ந்திருந்தாள். அவள் திரும்பி அமர்ந்திருந்ததால், ஸ்ரீராமுக்கு அவளது முகம் தெரியவில்லை. அவள் தான் மிதிலாவாக இருக்க வேண்டும். தன் கண்களை ஓட விட்டான் ஸ்ரீராம். அவன் குடும்பத்துப் பெண்கள், பூஜை அறையில் பூஜை செய்து கொண்டிருந்தார்கள். அன்று வெள்ளிக்கிழமை என்பது அவன் நினைவுக்கு வந்தது. இவள் ஏன் அதில் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்வியும் அவன் மனதில் எழுந்தது. அன்று அவளுக்கு மாதவிலக்கு... அது அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை அல்லவா?
மிதிலா தன் தலையை உயர்த்தினாள், பின்னாலிருந்து யாரோ, ஏதோ கூறுவதை கேட்டதால்...!
"உன்னுடைய எண்ணம் நிச்சயம் பலிக்காது"
பின்னால் திரும்பிய மிதிலா, அங்கு ஸ்ரீராம் நிற்பதை பார்த்தாள். அவன் யாரென்று அவளுக்கு தெரியவில்லை. இட, வலமாக பார்த்து, அவன் தன்னிடம் தான் பேசுகிறானா அல்லது வேறு யாரிடமாவது பேசுகிறானா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள நினைத்தாள்.
ஸ்ரீராமின் நிலையோ முற்றிலும் வேறாக இருந்தது. வெளி அழகை கண்டு மனம் தடுமாறும் அற்ப்பன் அல்ல ஸ்ரீராம். அவன் இருக்கும் ஃபேஷன் உலகில் அதெல்லாம் சர்வ சாதாரணம். தினம் தினம் ஏராளமான அழகிகளை அவன் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். சொல்லப் போனால், சோப்பை கொண்டு கழுவிவிடக் கூடிய, அப்படிப்பட்ட அழகை பார்த்து அவன் வெறுத்து விட்டான். ஆனால் இந்தப் பெண், அந்த ரகத்தை சேர்ந்தவள் அல்ல. இவளுடைய அழகு கழுவிவிட கூடியதல்ல. சாதாரண காட்டன் சுடிதாரில் உண்மையாய் தெரிந்தது அவள் அழகு. லட்சுமணன் இந்தப் பெண்ணை காதலிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால், அழகை கொண்டு பூவனத்தில் எதுவும் செய்துவிட முடியாது. ஏனென்றால், இது ஃபேஷன் நிறுவனமல்ல... குடும்பம். இந்த குடும்பத்தில் அடியெடுத்து வைக்க மதிப்பும், மரியாதையும் தேவை. அவையெல்லாம் இந்த பெண்ணிடம் இருக்க முடியாது என்று நினைத்தான் ஸ்ரீராம்.
மிதிலாவின் வார்த்தைகளைக் கேட்டு சுயநினைவு பெற்றான் ஸ்ரீராம்.
"எக்ஸ்க்யூஸ் மீ... நீங்க என்கிட்டயா பேசிக்கிட்டு இருக்கீங்க?"
"நான் உன்கிட்ட பேசுறேன்னு ரொம்ப பறக்காதே" என்றான் வெடுக்கென்று.
மிதிலா, தன் கால்களை குனிந்து பார்த்தாள், நான் தரையில் தானே நிற்கிறேன்? என்பது போல.
"நான் சொன்னது உனக்கு புரிஞ்சுதா? நீ நினைக்கிறது நிச்சயம் நடக்காது. நான் அதை நடக்க விடமாட்டேன்" என்றான் தீர்க்கமாக.
"நீங்க யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?" என்றாள் முகத்தை சுருக்கி.
"ஸ்ரீராம் கருணாகரன்"
தன்னுடைய புருவத்தை இயல்பாய் உயர்த்தினாள் மிதிலா. அப்படி என்றால், இவர் தான் லட்சுமணனின் மூத்த அண்ணன். இவரைப் பற்றி லட்சுமணன் நிறைய கூறியிருக்கிறான். தன்னுடைய காதலுக்கு ஸ்ரீராம் தான் மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருப்பான் என்று அவன் கூறியது அவள் நினைவுக்கு வந்தது. அவனும் ஊர்மிளாவும் இவரைப் பற்றி தான் கவலை படுவார்கள். ஆம், லட்சுமணன் விரும்புவது ஊர்மிளாவைத் தான். லட்சுமணன் மற்றும் மிதிலாவுடன் கல்லூரியில் படித்தவள் தான் ஊர்மிளா. ஸ்ரீராமின் முழு சம்மதம் இன்றி அவர்களால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று அவர்கள் இருவரும் பேசிக் கொண்டது மிதிலாவுக்கு நினைவுக்கு வந்தது.
அவர்களுடைய காதலைப் பற்றித் தான் ஸ்ரீராம் பேசிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்தாள் மிதிலா. லட்சுமணனின் தோழியாக இருப்பதால், அவனுக்கு துணை நிற்கவும் நினைத்தாள் அவள்.
"நான் சொல்றதைக் கேளுங்க, ஜூனியர்"
ஸ்ரீராமை ஜூனியர் கருணாகரன் என்று அழைப்பதும் வழக்கமாயிருந்தது.
"நீ சொல்றதை நான் காது கொடுத்துக் கேட்பேன்னு நினைச்சியா?"
"நான் சொல்றதை கேட்க உங்களுக்கு விருப்பம் இல்லனா, எதுக்காக என்னை கேள்வி கேக்குறீங்க?" என்று அவனையே திருப்பி கேள்வி கேட்டாள் அலட்சிய புன்னகையுடன்.
"உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்?"
"அடுத்தவங்களுடைய விருப்பதுக்கு குறுக்கே நிக்கிறது எப்பவுமே நல்லது இல்ல. நீங்க அதை செய்யக் கூடாது"
"நான் என்ன செய்யணுமுன்னு நீ எனக்கு சொல்லித் தரவேண்டிய அவசியமில்ல. உன்னுடைய உண்மையான எண்ணத்தை புரிஞ்சிக்க முடியாத முட்டாள் இல்ல நான். எங்க குடும்பத்துல இருக்கிற யாரை வேணும்னாலும் நீ கவுத்திருக்கலாம். ஆனா, என்கிட்ட உன்னுடைய பாச்சா பலிக்காது"
"என்னுடைய உண்மையான எண்ணம், எப்பவுமே எல்லாரையும் சந்தோஷப்படுத்துறது தான்... உங்களை மாதிரி இல்ல"
"எப்படி மத்தவங்களை சந்தோஷபடுத்தணும்னு எனக்கு தெரியும்"
"நீங்க, அப்படி செய்றவரா இருந்தா லக்கியோட விருப்பத்துக்கு குறுக்கே நிக்க மாட்டிங்க"
"என்னுடைய தம்பிக்கு எது சரியா இருக்கும்னு எனக்கு தான் தெரியும்"
"சரி... உங்க விருப்பம் போலவே செய்யுங்க. பாவம் லக்கி. உங்களை மாதிரி ஒரு அண்ணனை சகிச்சிகிட்டு வாழணுமுங்குறது அவன் தலையெழுத்து"
ஸ்ரீராமால் இதைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.
தனது கைப்பையை எடுத்துக்கொண்டு, அவள் அங்கிருந்து செல்ல முயன்ற போது, அவளை வழிமறித்தான்.
"நான் பேசிக்கிட்டு இருக்கும் போது, நீ பாட்டுக்கு இங்கிருந்து போனா என்ன அர்த்தம்?"
"யார் நீங்க? நான் ஏன் நீங்க பேசுறதை கேட்கணும்? நான் ஏன் நீங்க சொல்றதை கேட்டு நடக்கணும்?" என்ற கேள்விகளை கேட்டு, அவன் ஈகோவை தொட்டுப் பார்த்தாள் மிதிலா.
அவன் தோளைப் பிடித்து லேசாய் தள்ளி விட்டு, அங்கிருந்து பூஜை அறையை நோக்கி நடந்தாள். அதை மிகப்பெரிய அவமானமாய் உணர்ந்தான் ஸ்ரீராம். இது தான் முதல் முறை, ஒருவர் தைரியம் கொண்டு அவனை தொடுவதும்... பிடித்து தள்ளுவதும்... அவனையே கேள்வி கேட்பதும்... அவளுக்கு எவ்வளவு தைரியம்? இந்தப் பெண் நிச்சயம் பூவனத்தின் மருமகளாக கூடாது என்பதைத் தன் நெஞ்சில் எழுதினான் ஸ்ரீராம், வருங்காலம் தனக்காக எழுதி வைத்திருப்பது என்ன என்பதை அறியாமல்!
பூஜையை முடித்துக் கொண்டு, அவன் வீட்டுப் பெண்கள் வெளியே வந்தார்கள். ஒரு கிண்ணம் நிறைய சர்க்கரைப் பொங்கல் பிரசாதத்தை மிதிலாவிடம் கொடுத்த நர்மதா, உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்த ஸ்ரீராமை பார்த்தாள்.
அவன் வேறு உடையில் இருந்ததை பார்த்து,
"நீ எப்போ வந்த ராமு? நீ வந்ததை நான் பார்க்கலையே" என்றாள்.
"நீங்க ரொம்ப பிசியா இருந்திங்க கா... வேற ஒருத்தர் கூட" என்றான் மிதிலாவை பார்த்தபடி.
"நாங்க, பாட்டியோட ரூம்ல மிதிலா கூட இருந்தோம். நாங்க சொன்னோமில்ல... இவங்க தான் மிதிலா... லட்சுவோட ஃப்ரெண்ட்"
ஸ்ரீராம் எதுவும் கூறுவதற்கு முன்,
"நாங்க ஏற்கனவே இன்ட்ரொடியூஸ் ஆயிட்டோம்..." என்றாள் பொங்கலை சாப்பிட்டபடி மிதிலா.
அவள் சர்க்கரை பொங்கல் சாப்பிடுவதை பார்த்து உண்மையிலேயே அசந்து தான் போனான் ஸ்ரீராம். அவன் வீட்டு சர்க்கரை பொங்கலில் எப்பொழுதும் இனிப்பு தூக்கலாக இருக்கும் என்பது அவனுக்கு தெரியும். சர்க்கரை வியாதி இருக்கும் ஒருவர், இவ்வளவு அனாவசியமாக இனிப்பு சாப்பிடுவதை அவன் பார்ப்பது இது தான் முதல் தடவை. அது வேறு, அவன் கோபத் தீயில் எண்ணெயை வார்த்தது. இதுவரை, அவன் தான் இனிப்பை சாப்பிட துணிந்ததே இல்லையே...!
"நீங்க ஒரு டயாபட்டிக்னு என்னால நம்பவே முடியல" என்றாள் நர்மதா.
"டயாபட்டிஸ் என்னை கண்ட்ரோல் பண்ண முடியாது. என்னோட உடம்பு, மனசு, எல்லாமே என்னோட கண்ட்ரோல்ல தான் இருக்கும். நோயைத் தாண்டி, அதை எப்படி கண்ட்ரோல்ல வைக்கணும்னு எனக்கு தெரியும் கா" என்று அழகாய் சிரித்தாள்.
"உங்களுடைய சுகர் லெவலை சரியா வைக்க ஏதாவது செய்யறீங்களா?"
"காலையில யோகாவும், வெந்தய பொடியும், தூங்குறதுக்கு முன்னாடி நாகப்பழக் கொட்டை பவுடர் அவ்வளவு தான்" என்று தன் தோள்களை அனாயாசமாக குலுக்கினாள், தனக்கு எதிரில் நிற்கும் ஒருவனுடைய எரிச்சலை பற்றி உணராமல்.
"நான் சொல்லல ராமு..?" என்றாள் நர்மதா.
"இதெல்லாம் சுத்த ஹம்பக்... உண்மையா இருக்க வாய்ப்பே இல்ல" என்றான் வெறுப்புடன்.
அவனைப் பார்த்து முகம் சுளித்தாள் மிதிலா.
"நான் கிளம்பறேன் கா. எனக்கு டைம் ஆச்சி" என்றாள்.
"எப்படி நழுவி ஓடுறான்னு பாரு" என்றான் ஸ்ரீராம்.
"இவருக்கு என்ன பிரச்சனை?" என்றாள் மிதிலா, நர்மதாவை பார்த்து.
"எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. நான் சரியா தான் இருக்கேன். எப்பவும் சரியா தான் இருப்பேன். நீ தான் சரியில்ல...!" என்றான் தன் பல்லை கடித்தபடி.
"என்ன ஆச்சி, ராமு? ஏன் நீ இப்படி நடந்துக்கிற? அவங்க நம்மளுடைய கெஸ்ட்" என்றாள் நர்மதா.
"இப்படிப்பட்ட கீழ்த்தரமான கெஸ்ட்காக, ஒரு நாள் நீங்க வருத்தப்படுவீங்க கா..."
"கீழ்த்தரமான கெஸ்ட்டா?" என்றாள் அதிர்ச்சியுடன் மிதிலா
ஸ்ரீராம் மேலும் எதுவும் கூறுவதற்கு முன்,
"போதும் நிறுத்து ராமு... ப்ளீஸ், என்னை மன்னிச்சிடுங்க மிதிலா... ஐ அம் சாரி" என்று கெஞ்சினாள் நர்மதா.
"நீங்க என்ன தப்பு செஞ்சீங்க? நான் செஞ்சது தான் தப்பு. நான் இங்க வந்திருக்கவே கூடாது. நான் கிளம்பறேன்..." என்றாள் தன் கண்ணீரை கட்டுப்படுத்தியபடி. இந்த மனிதன் முன் தன் கண்ணீரை சிந்த அவள் தயாராக இல்லை.
அங்கிருந்து அவள் கிளம்பி சென்றாலும், ஸ்ரீராமின் எண்ணத்தில் அவள் நாற்காலி போட்டு அமர்ந்து விட்டாள் என்று தான் கூற வேண்டும். அவளைக் கீழ்த்தரமான பெண் என்று அவன் கூறினாலும், அவள் கண்கள் கலங்கிய பொழுது அவனுக்கு வருத்தமாக இருந்தது. ஆனால், அவன் வருத்தப்பட்டாலும் அவன் எண்ணத்தில் எந்த மாறுதலும் இல்லை.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top