18 சுழும் திட்டங்கள்

18 சூழும் திட்டங்கள்

இதற்கிடையில் பூவனம்,

நர்மதாவை தன்னுடைய இலக்காய் நிர்ணயித்துவிட்ட லயா,  அவளை தேடிக் கொண்டு வந்தாள். நர்மதா, பாட்டியின் அறையில், ஏதோ மும்முரமாய் பேசிக்கொண்டிருந்ததை தெரிந்து கொண்டு, ஒளிந்து நின்று அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று ஒட்டு கேட்டாள்.

"இல்ல பாட்டி. நான் அதை செய்ய மாட்டேன்" என்றாள் நர்மதா.

"அட... சொல்றதைக் கேளு. பாரு, அது எப்ப வேணும்னாலும் உடையிற மாதிரி இருக்கு" என்றார் நர்மதாவின் கையில் இருந்த மோதிரத்தை பார்த்தபடி பாட்டி.

"இந்த மோதிரத்தை போட்டுக்கிட்டே நான் எல்லா வேலையும் செய்யறேன் இல்லையா... அதனால தான் அது தேஞ்சி போயிடுச்சி" என்றாள் கவலையாக நர்மதா.

"அதனால தான்  சொல்றேன், அதை மாத்திடுன்னு"

"இது என்னுடைய கல்யாண மோதிரம் பாட்டி. அவர் எனக்கு ஆசையா போட்டது. இந்த மோதிரத்தோட எனக்கு நிறைய சென்டிமென்ட் இருக்கு. இதை என்னால மாத்த முடியாது, பாட்டி"

"உன் இஷ்டம்" என்றார் பாட்டி.

"நான், நம்ம ராமுவுக்காக ஒரு பூஜை ஏற்பாடு பண்ணலாம்னு இருக்கேன்"

"திடீர்னு என்ன பூஜை?" என்றார் பாட்டி.

"நேத்து அவன் ரொம்ப அப்செட்டா இருந்தான். வாழ்க்கையிலேயே முதல் தடவையா, அவன் கையாலாகாம இருந்ததை போல நான் உணர்ந்தேன். அவ்வளவு டென்ஷனா இருந்தான். அவன் எல்லாத்தையுமே ரொம்ப தைரியமா ஃபேஸ் பண்றவன். நேத்து ஏன் அப்படி இருந்தான்னு எனக்கு புரியல" என்றாள் நர்மதா கவலையுடன்.

"அப்படியா? வியாபாரம் சம்பந்தபட்டதா இருந்தா கூட, அவன் அதை பத்தி எல்லாம் ரொம்ப கவலைப்பட மாட்டானே..." என்றார் பாட்டி யோசனையுடன்.

"அது தான் எனக்கும் கவலையா இருக்கு. அவன் எதையுமே வெளிப்படையா சொல்லக்கூட மாட்டான். அதனால தான், அவன் பேர்ல கோவில்ல ஒரு பூஜை பண்ணலாம்னு இருக்கேன்"

"சரி, உனக்கு பூஜை பண்ணணும்னு தோணுச்சுன்னா பண்ணிடலாம்" என்றார் பாட்டி.

சரி என்று சந்தோஷமாய்  தலையசைத்தாள் நர்மதா.

அங்கிருந்து சத்தம் போடாமல் நழுவிச் சென்றாள் லயா. அவர்கள் பேசிக்கொண்டு இருந்ததை கேட்ட அவளுக்கு, ஒரு நல்ல யோசனை தோன்றி விட்டது... நர்மதாவின் மனதில் இடம் பிடிக்க.

எஸ் ஆர் ஃபேஷன்ஸ்

அலுவலக வாசலில் காரை நிறுத்தாமல், நேராக பார்க்கிங் லாட்டுக்கு ஓட்டி சென்ற ஸ்ரீராமை, வித்தியாசமாய் பார்த்தாள் மிதிலா. அவளை அலுவலக வாசலிலேயே இறக்கி விட்டு, அவன் மட்டும் பார்க்கிங் செய்ய செல்வான் என்று எதிர்பார்த்தாள் அவள். ஆனாலும் அவனை கேள்வி கேட்க முடியாது. அவன் பாஸ் அல்லவா...! காரை விட்டு கீழே இறங்கி, இருவரும் ஒன்றாக நடந்து வந்தார்கள். அது மிதிலாவை சங்கடத்திற்கு உள்ளாக்கியது. தங்களை மாலினி கவனித்துக் கொண்டிருந்ததை பார்த்த போது, அவள் உள்ளுக்குள் மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளிக் குதித்தாள்.

வழக்கமாய் அலுவலகத்திற்குள் புயலென நுழையும் ஸ்ரீராம், அவளுடைய நடைக்கு ஈடு கொடுத்து மெல்லவே நடந்து வந்தான். அது மாலினியின் வயிற்றை எரியச் செய்தது. எரியும் வயிற்றில் எண்ணெய் வார்ப்பது போல, இந்த முறை, விதியும் சேர்ந்து விளையாடியது. கீழே விரிக்கப்பட்டிருந்த தரைவிரிப்பில் கால் தடுக்கி விழப் போன மிதிலாவை, லாவகமாய் தாங்கிப் பிடித்தான் ஸ்ரீராம். மிதிலாவும் அவனுடைய கோட்டை கெட்டியாய் பற்றிக் கொண்டாள்.

ஸ்ரீராமின் கண்கள் அவள் முகத்தில் நிலைத்தது. சுற்றுப்புறத்தை மறந்து சில நொடிகள் நின்றான். மிதிலா அவனை பிடித்து மெல்ல தள்ளிய போது தான் அவனுக்கு சுய நினைவு வந்தது. மெல்ல அவளைத் தன் கரங்களில் இருந்து விடுவித்தான்.

"ஐ அம் சாரி சார். கால் தடுக்கிடிச்சி..." என்று, தலைகுனிந்தபடி, பேசவே திணறினாள் மிதிலா.

இது தான் முதல் முறை, மிஸ் ஆனந்த் அவன் கண்களைப் பார்க்காமல் பேசுவது. எவ்வளவு தைரியமாய் நேருக்கு நேர் முகத்தை பார்த்து பேசக் கூடியவள் அவள்...! குறிஞ்சிப் பூ போல, காணமுடியாத புன்னகை பூத்தது ஸ்ரீராமின் முகத்தில், அவனை அறியாமலேயே...!

அவன் புன்னகைத்ததை பார்த்து, வேறொரு முகத்திலும் புன்னகை அரும்பியது. ஸ்ரீராமின் நண்பன் குகனை தவிர அது வேறு யாராக இருக்க முடியும்? ஸ்ரீராமின் முகத்தில் புன்னகையை பார்ப்பது அறுசுவை விருந்து உண்பதை போன்றது... அதுவும் அந்த புன்னகை அரும்பியது ஒரு பெண்ணுக்காக. ஒரு பெண்ணைப் பார்த்து அவன் சிரித்து, இது வரை குகன் பார்த்ததில்லை. அங்கிருந்து விறுவிறுவென தன் அறையை நோக்கி சென்றாள் மிதிலா. புன்னகை மாறாமல் ஸ்ரீராமும் அங்கிருந்து நகர்ந்தான். அந்த புன்னகை, மாலினியின் கையிலிருந்த காகிதம் தூள் தூளாக காரணமானது. கோபத்துடன் அதை கிழித்து எறிந்தாள் மாலினி.

தன் மனதில், மிதிலாவுக்காக தோன்றியிருக்கும் புதிய உணர்வுக்கு என்ன பெயரென்று ஸ்ரீராமுக்கு புரியவில்லை. ஆனால், குகனும், மாலினியும் அதில் தீர்க்கமாய் இருந்தார்கள். ஏனென்றால், அவன் பெண்களிடம் எப்படி நடந்து கொள்வான் என்பதை நன்கறிந்தவர்கள் ஆயிற்றே அவர்கள் இருவரும். பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே ஸ்ரீராமுடன் இருந்து வருகிறான் குகன். அவன் எந்தப் பெண்ணுக்கும் முக்கியத்துவம் அளிக்க மாட்டான் என்று குகனுக்கு நன்றாக தெரியும். மாலினியை பற்றிக் கூற வேண்டியதே இல்லை. அவன் பெண்களின் மேல் எப்படி எரிந்து விழுவான் என்று தான் அவளுக்கு நன்றாக தெரியுமே...!

மிதிலாவின் அறைக்கு சென்றான் குகன்.

"ஹாய் மிதிலா"

"ஹாய்"

"கான்ஃபிரன்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் எப்படி இருந்தது?" என்றான்.

"ஆஸம்"

"நிஜமாவா?"

"ஆமாம். அங்க யுவராஜும்  வந்திருந்தாரு" என்றாள் சந்தோஷமாக.

"எந்த யுவராஜ்?" என்று தன் நெற்றியை ஆள்காட்டி விரலால் தடவினான்.

"தர்மராஜோட சன் யுவராஜ்"

"ஓ, அவரா... ஆமாம், யுவராஜ் புதுசா ஒரு ஃபேஷன் ஹவுஸ் ஆரம்பிக்கிறார்"

"ஆமாம்"

"உங்களுக்கு யுவராஜை தெரியுமா?"

"நல்லா தெரியும்... தர்மராஜ் சாரோட சன்னாச்சே..."

"ஆனா, யுவராஜுக்கு அவங்க அப்பாவுடைய பிசினஸில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லையாமே..."

"ஆமாம்"

"அப்பறம், அவரை உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது? தர்மராஜ் சாருடைய ஆபீசுக்கு வருவாரா?"

"அடிக்கடி வருவார்"

"ஓ... அப்படியா?" என்று சற்று நிறுத்திவிட்டு,

"வேற ஏதாவது இன்ட்ரஸ்டிங்கான விஷயம் இருக்கா?" என்றான் தனது எதிர்பார்ப்பை வெளியில் காட்டிக் கொள்ளாமல்.

"நான் ஒரு விஷயத்தை தெரிஞ்சுகிட்டேன்" என்று பொடி வைத்துப் பேசினாள் மிதிலா.

"என்ன விஷயம்?"

"நம்ம ஜூனியருக்கு பொம்பளைங்க மத்தியிலே ரொம்ப கிரேஸ் இருக்கு" என்றாள் ரகசியமாக.

"என்ன சொல்றீங்க நீங்க?" என்றான், அவள் எதைப் பற்றிப் பேசுகிறாள் என்பதை புரிந்து கொண்ட பின்னாலும், தன் ஆர்வத்தை வெளிப்படையாய் காட்டிக்கொள்ளாமல்.

"ஒரு லேடி, அவரை ராமின்னு கூப்பிட்டாங்க" என்று சிரித்தாள்.

"யார் அது?"

"மிஸஸ் சக்கரவர்த்தி"

"ஓ அவளா..." என்றான் ஒருமையில் மரியாதை இல்லாமல். அதை மிதிலாவும் கவனித்தாள்

"உங்களுக்கு அவங்களை தெரியுமா?"

"எல்லாருக்கும் தெரியும்" என்றான் நக்கலாக.

அவனைப் பொருள் பொதிந்த பார்வை பார்த்தாள் மிதிலா.

"மிஸ்டர் சக்கரவர்த்தியோட செகண்ட் வைஃப் அது. அவரோட வைஃப் இறந்ததுக்கு அப்புறம், அவருடைய பையன் சிங்கப்பூரில் செட்டில் ஆனதால, வயசான காலத்துல தனக்குன்னு யாராவது வேணுமுன்னு இந்த பொம்பளையை அவர் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. இந்த பொம்பளை ஒருத்தரையும் விடமாட்டா. யார் கூட வேணும்னாலும் சுத்துவா. எல்லாரையும் ஒரு ரவுண்ட் பாத்துடுவா. கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம முன்னாடி போய் நின்னு வழிவா.  மிஸ்டர் சக்கரவர்த்தி எவ்வளவு மரியாதையான ஆள் தெரியுமா? இந்தப் பொம்பளை அவர் பெயரை கெடுத்துடா." என்றான் வருத்தத்துடன்.

மிதிலாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. அதே அதிர்ச்சியுடன் நகம் கடித்தாள்.

"நம்ம ராமியை அவ ரொம்ப நாளா ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கா. நம்ம ஆளு திமிங்கலமாச்சே...! அவ போடுற தூண்டில்ல சிக்கிடுவானா? அவளோட பாச்சா எதுவும் அவன்கிட்ட பலிக்கல"

"சக்கரவர்த்தி சாரை, ஜூனியர் ரொம்ப மதிக்கிறாருன்னு நினைக்கிறேன்" என்றாள் மிதிலா.

"எஸ்ஆர்கே தன்னை மதிக்கிறான். கிடைக்கிற சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கிற சாதாரணமான ஆள் இல்ல அவன். அவனுக்குன்னு வேல்யூஸ் இருக்கு..." என்றான் பெருமையுடன்.

அமைதியாய் தலையசைத்தாள் மிதிலா.

"உங்க கதை என்ன? மாலினியை ஒரு வழி பண்றதுன்னு ஒரு முடிவோட இருக்கீங்க போல இருக்கே..." என்று போட்டு வாங்கினான் சிரித்தபடி, அவள் அதை வேண்டுமென்று செய்யவில்லை என்று தெரிந்த போதும்.

"மாலினியை வெறுப்பேத்த நான் அவர் மேல தெரிஞ்சே விழுந்தேன்னு நினைக்கிறீங்களா?" என்றாள் லேசான கோபத்துடன்.

"நீங்க அவன் மேல தெரிஞ்சே விழல... ஆனா, அவன் உங்களை மறுபடியும் தெரிஞ்சே தான் காப்பாத்தினான்..."

*மறுபடியும்* என்ற வார்த்தையை வேண்டுமென்றே அழுத்தி கூறினான்.

"நீங்க ஒரு டயாபட்டிக். அந்த பில்டிங்கில் மாட்டிக்கிட்டப்போ, எதுவுமே சாப்பிடாம இருந்தீங்களே, உங்களுக்கு மயக்கம் வரலையா?" என்று மெல்ல ஆரம்பித்தான்.

"வந்தது... நான் கிட்டத்தட்ட மயங்கிட்டேன்" என்று உண்மையை கூறினாள் மிதிலா.

"அப்படின்னா, எஸ்ஆர்கே தான் உங்களை அந்த பில்டிங்கில் இருந்து வெளியே தூக்கிட்டு வந்தானா?" என்று தனக்கு பதில் தெரிந்த கேள்வியை கேட்டான்.

மிதிலாவுக்கு தெரியும், ஸ்ரீராம் தான் அவளை தூக்கி கொண்டு வந்தான் என்று. ஸ்ரீராம் அவளை தூக்கி வந்த போது, தான் பதறிப்போனதாய் அவளுடைய அம்மா சாந்தா அவளிடம் கூறியிருந்தார்.

ஆமாம் என்று தலையசைத்தாள் மிதிலா.

"நல்ல வேளை, சரியான நேரத்துக்கு எஸ்ஆர்கே வந்து, அந்த ஆபத்தான  பில்டிங்ல இருந்து உங்களை தூக்கிகிட்டு வந்தான்" என்ற போது,

மிதிலாவின் முகத்தில் பதற்றத்தை கண்டான் குகன். ஸ்ரீராமின் முந்தைய நடவடிக்கைகளால், அவனிடமிருந்து மிதிலா விலகியே இருந்தது குகனுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இப்பொழுது, தன்னுடைய முந்தைய கடுமையான நடத்தைக்காக ஸ்ரீராம் வருத்தப் படுகிறான் என்பதும், அவனுக்கு மிதிலாவிடம் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதும் குகனுக்கு தெரியும். மிதிலாவிடம் அவனது மென்மையான அணுகு முறையும், மிதிலா, குகன் மீது தண்ணீர் ஊற்றி விளையாடிய போது ஸ்ரீராமிடம் தெரிந்த  பொறாமையும் தான் அதற்கு சாட்சியம். ஒரு நல்ல நண்பனாக அவர்களுக்குள் இருக்கும் இடைவெளியை அழிப்பது தன் கடமை என்று நினைத்தான் அந்த நல்ல நண்பன்.

ஒருபுறம், குகன் ஸ்ரீராமுக்கும் மிதிலாவிற்கும் இடையில் இருக்கும் இடைவெளியை எப்படி குறைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த அதேநேரம், மாலினி வேறு ஒரு திட்டம் வகுத்துக் கொண்டு இருந்தாள். அவள் பொறாமைத் தீயில் வெந்து கொண்டிருந்தாள். ஸ்ரீராம், மிதிலாவிடம் காட்டிய மாற்றத்தை அவளால் சகிக்கவே முடியவில்லை. முக்கியமாய், அவன் அவளை பார்த்து வீசிய புன்னகை... ஏதாவது பெரிதாய் செய்து, மிதிலாவுக்கு எஸ்ஆர் ஃபேஷன்ஸில் இருக்கும் மதிப்பை அடியோடு குலைத்து, ஸ்ரீராம் அவளை வெறுக்கும்படி செய்து விட வேண்டும் என்று அவளுக்கு வெறி ஏற்பட்டது. அதை செய்வதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து அவள் காத்திருக்க விரும்பவில்லை. தானே ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்குவது என்று முடிவெடுத்தாள். எஸ்ஆர் ஃபேஷன்ஸை பற்றியும், ஸ்ரீராமை பற்றியும் தனக்கு தெரிந்தவற்றை வைத்துக்கொண்டு அதை செய்ய நினைத்தாள் மாலினி.

இது இவ்வாறு இருக்க, பூவனத்தில், மிஸஸ் ஸ்ரீராம் பதவியை பிடிக்கவேண்டும் என்ற தனது எண்ணத்தை நிறைவேற்ற, நர்மதாவை தன் பக்கம் சாய்பதற்கான ஒரு உபாயத்தை, தன் மூளையை கசக்கி, கண்டுபிடித்துவிட்டாள் லயா.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top