10 ஆத்ம உணர்வு
10 ஆத்ம உணர்வு
குற்ற உணர்ச்சியில் தவித்தான் ஸ்ரீராம். மிதிலாவிடம் அவன் அப்படி பேசியிருக்க கூடாது. அவள் கூறும் ஒவ்வொன்றுக்கும் ஏதாவது பதில் கூற வேண்டும் என்று அவனுக்கு ஏன் தோன்றுகிறது? எல்லா விவாதத்திலும் அவளை ஜெயிக்க வேண்டும் என்று ஏன் அவன் நினைக்கிறான்? அவன் ஒப்புக்கொண்டு தான் தீரவேண்டும்... அவளிடம் ஏதோ இருக்கிறது. தனக்கு வழங்கும் வேலைகளை செய்யாமல், சாக்குபோக்கு சொல்லும் பலரை அவன் பார்த்திருக்கிறான். ஆனால் இந்தப் பெண்ணோ, அவள் செய்ய வேண்டிய அவசியமே இல்லாத வேலையை செய்து முடித்திருக்கிறாள்.
எல்லாம் சரி தான். ஆனால், அவன் எப்படி மன்னிப்புக் கேட்பது? கேட்க கூடாது என்று அல்ல... அவனால் மன்னிப்பு கேட்க முடியாது. கேட்க முடியாது என்பதால், கேட்க விரும்பவில்லை என்று அர்த்தம் அல்ல. அவன் அப்படித் தான். இது தான் ஸ்ரீராம். இது வரை அவன் யாரிடமும் மன்னிப்பு கேட்டதில்லை... ஏனென்றால், இதுவரை அவன் தவறே செய்ததில்லை. தனது உணர்வுகளை வெளிப்படுத்துவதில் அவன் திறமையற்றவன். வார்த்தை விளையாட்டு எல்லாம் அவனுக்கு வராது. அதிரடியாய் காரியத்தில் இறங்கி செய்து முடிப்பான். செயல்களால் பேசக்கூடியவன். அவன் செய்யும் செயல்கள் ஆயிரம் வார்த்தைகள் பேசும். அது பழிக்குப்பழியாக இருந்தாலும் சரி... மன்னிப்பு கோருவதாக இருந்தாலும் சரி... தான் வழக்கமாய் நடந்து கொள்வதற்கு, நேர்மாறாக நடந்து கொண்டால், அதுவும் ஒருவகையில் மன்னிப்பு தானே? மாற்றிக்கொண்டுவிட்ட நடத்தையை விட சிறந்த மன்னிப்பு என்னவாக இருந்துவிட முடியும்?
தன் மனதிற்குள் மிக நீண்ட பட்டிமன்றம் நடத்திய பிறகு, வார்த்தைகளால் நன்றி கூற தேவையில்லை என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான் ஸ்ரீராம்.
அப்பொழுது அவன் கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.
"சொல்லுங்க"
"...."
"அனுப்பிட்டீங்களா?"
"....."
"என்னோட மேனேஜர்கிட்டயிருந்து பணம் வாங்கிக்கோங்க" அழைப்பை துண்டித்து விட்டு மீண்டும் குகனின் அறைக்கு வந்தான்.
"சொல்லு எஸ்ஆர்கே..."
"நான் கொஞ்சம் இன்டோர் ஏர் பியூரிஃபையர் பிளான்ட்ஸ் ஆர்டர் பண்ணி இருக்கேன். அதை ரிசீவ் பண்ணிட்டு, பில்லை செட்டில் பண்ணிடு. நம்ம ஆபீஸ் ஃபுல்லா அந்த பிளாட்ன்ஸை அரேஞ்ச் பண்ணிடு... என்னுடைய கேபினையும் சேர்த்து" கூறிவிட்டு அங்கிருந்து தன் அறையை நோக்கி நடந்தான் ஸ்ரீராம்.
"ஏர் பியூரிஃபையர் பிளான்ட்ஸா?" என்று முணுமுணுத்தபடி நின்றான் குகன்.
ஸ்ரீராமுக்கும் மிதிலாவிற்கும் எப்படி ஒரே மாதிரியான எண்ணம் தோன்றியது? அவனுடைய அறையில், மிதிலா வைத்த செடிகளை பார்த்தால் அவன் என்ன செய்வான்? ஸ்ரீராமின் அறையை நோக்கி மெல்ல நகர்ந்தான் குகன்.
தன் அறையில் வைக்கப்பட்டிருந்த செடிகளை பார்த்தவுடன் ஸ்ரீராமின் முகம் மலர்ந்தது. அவன் தான் செடி பிரியன் ஆயிற்றே...! ஆனால், அவன் ஆர்டர் செய்திருந்த நர்சரியின் சொந்தக்காரர், இப்பொழுது தானே செடிகளை அனுப்பி இருப்பதாக அவனுக்கு ஃபோன் செய்தார்...? அப்படி என்றால், இந்த செடிகளை இங்கு வைத்தது யார்? குகன் தான் இந்த வேலையை செய்திருக்க வேண்டும். குகனைத் தவிர இந்த அலுவலகத்தில் அவனை புரிந்து கொள்ள யார் இருக்கிறார் என்று நினைத்தான் ஸ்ரீராம்.
தனது அறையின் வாசலில், குகன் நின்றிருப்பதை பார்த்து புன்னகை புரிந்தான் ஸ்ரீராம்.
"நம்மளுடைய வேவ்லெங்த், எப்பவுமே ஸிங்க்ரனைஸ் ஆகுது... இல்ல?" என்றான் ஸ்ரீராம்.
"நீ எதை பத்தி பேசுற எஸ்ஆர்கே?"
"நான் நம்ம ஆஃபீஸ்ல வைக்கறதுக்கு செடிகளை ஆர்டர் பண்ணி இருந்தேன், பொல்யூஷன் கண்ட்ரோலுக்காக எடுத்த ஸ்டெப்பா இருக்கட்டுமேன்னு. அதனால ஏர் பியூரிஃபையர் பிளான்ட்ஸ் கொண்டு வரச் சொல்லி இருந்தேன். எனக்கு செடிகள்னா ரொம்ப பிடிக்கும்னு நீ இந்த செடிகளை இங்க வச்சிருக்கேன்னு எனக்கு தெரியும். ஆனா, நீ என்னை இப்படி ஆத்மார்த்தமா டச் பண்ணுவேன்னு நான் எதிர்பார்க்கல" என்றான் மென்மையான புன்னகையோடு.
அதைக் கேட்டு வியந்து போனான் குகன் என்று தான் கூற வேண்டும். ஆத்மார்த்தமான என்ற பெரிய வார்த்தை எல்லாம் ஸ்ரீராம் பேசினால், அவன் வியக்காமல் என்ன செய்வான்? இப்படியெல்லாம் வெளிப்படையாய் அவன் பேசியதே இல்லையே.
"நீ ஒரு பிளான்ட் லவ்வர்னு, நம்ம காலேஜ்ல படிக்கும் போதிலிருந்து எனக்கு தெரியும். ஆனா, செடிகளை கொடுத்து உன்னை சந்தோஷப்படுதணும் என்கிற எண்ணம், என் மனசுல எப்பவுமே வந்ததில்ல."
ஸ்ரீராமின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது.
"அப்போ இந்த செடிங்க?"
"உன்னோட புது பிஏ தான் இங்க வச்சாங்க. அவங்களுக்கு தெரியுமாம் உனக்கு பூ பிடிக்காது, செடி தான் பிடிக்கும்னு..."
"யாரு...? மிஸ் ஆனந்தா?"
"உனக்கு வேற யாராவது பிஏ இருக்காங்களா?"
"ஆனா, எனக்கு என்ன பிடிக்கும்னு அவங்களுக்கு எப்படி தெரியும்?"
"எனக்கு தெரியல"
திகைப்படைந்தான் ஸ்ரீராம். எப்படி இந்தப் பெண் இதையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாள்?
அவன் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை ஓரளவு புரிந்து கொண்டான் குகன். மிதிலா அவனை கவர நினைக்கிறாள் என்று தவறாக நினைத்து விடுவானோ என்ற எண்ணம் குகனுக்கு ஏற்பட்டது.
"நீ அவங்ககிட்ட கேக்கலையா?" என்றான் ஸ்ரீராம்.
"கேட்டேன். அவங்களுடைய பழைய பாஸ், தர்மராஜோட கேபின்ல, அவங்க ஃபிளவர்ஸ் வைக்கிறது வழக்கமாம். உனக்கு பூ பிடிக்காதுங்குறதால அவங்க அதையே இங்க செய்ய முடியாதுல்ல..."
"ஒருவேளை, லக்ஷ்மன் சொல்லி இருப்பான்னு நினைக்கிறேன்"
"இருக்கலாம்... இல்லாமலும் இருக்கலாம்... "
தனது கைபேசியை வெளியில் எடுத்து, லக்ஷ்மணனுக்கு ஃபோன் செய்தான் குகன்.
"லட்சுமன், எஸ்ஆர்கேவோட கேபினுக்கு வா"
ஸ்ரீராமுக்கு ஆவல் அதிகரித்தது, அவனுக்கு என்ன பிடிக்கும் என்று, மிதிலாவிடம் கூறியது லட்சுமணனா, இல்லையா என்று தெரிந்துகொள்ள.
"என்னை எதுக்கு கூப்பிட்ட, குகா?" என்றான் அங்கு வந்த லட்சுமன்.
அங்கு வைக்கப்பட்டிருந்த செடிகளை பார்த்து,
"வாவ்... உன்னோட கேபின் சூப்பரா மாறிடுச்சி" என்றான்.
"இது மிதிலாவோட ஐடியா" என்றான் குகன், ஸ்ரீராமின் முகத்தை பார்த்த வண்ணம்.
"மிதிலாவா? ராமுவுக்கு செடி பிடிக்கும்னு அவளுக்கு எப்படி தெரியும்?" என்றான் லட்சுமன்.
"என்னைப் பத்தி அவங்ககிட்ட சொன்னது நீ இல்லையா?" என்றான் ஸ்ரீராம்.
"இல்ல... நாங்க வழக்கமா இன்ட்ரஸ்டிங்கான விஷயத்தைப் பத்தி தான் பேசுறது... போரடிக்கிற விஷயத்தையெல்லாம் பேச மாட்டோம்" என்றான் சர்வ சகஜமாக.
ஸ்ரீராம் அவனைப் பார்த்து முறைக்க, தனது தொண்டையிலிருந்து வெளியே குதிக்க நினைத்த சிரிப்பை அடக்கினான் குகன்.
"அவுட்... " என்றான் தன் பல்லை கடித்தபடி ஸ்ரீராம்.
அங்கிருந்து ஓடிச் சென்றான் லக்ஷ்மன்.
"லோடு வந்திருக்கும்னு நினைக்கிறேன். நான் போய் செக் பண்றேன்" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான் குகன்.
தனது அறையில் வைக்கப்பட்டிருந்த செடிகளின் மீது தன் கண்களை ஓட விட்டான் ஸ்ரீராம். அந்த செடிகளை ஏந்தியிருந்த தொட்டிகளின் நிறம் கூட அவனுக்கு பிடித்த வெள்ளை நிறத்தில் இருந்தது.
திக்குமுக்காடிப் போனான் ஸ்ரீராம். அவனுக்கென்று, யாரோ ஒருவர், ஏதோ செய்வது இது தான் முதல் முறை. இதுவரை, அவனுடைய அக்கா நர்மதா கூட அவனுக்கு பிடித்த செடிகளை வழங்கி அவனை சந்தோஷப்படுத்தி பார்த்ததில்லை. சொல்ல போனால், அவன் எப்பொழுது பார்த்தாலும் செடிகளுடன் காலம் கழிப்பதாக அவள் குறை தான் கூறுவாள். அவனைப் பொறுத்தவரை செடிகள், மன அமைதியை தரும் விஷயம். அவன் வருத்தமாக இருக்கும் போதெல்லாம், தோட்டத்தில் தான் கிடப்பான். செடிகள் அவன் வாழ்க்கையில் மிக முக்கியமான இடத்தை வகித்து வந்தன. அவன் தோட்ட கலையை கற்றது, அவன் அம்மாவிடத்திலிருந்து. செடிகள், அவனுடைய அம்மாவை அவனுக்கு நினைவூட்டின. அதனால் தான் ஆத்மார்த்த உணர்வைப் பற்றி அவன் பேசினான். தெரிந்தோ, தெரியாமலோ, யாரோ அவனுடைய ஆத்மாவை தொட்டு தான் விட்டார்கள் போலிருக்கிறது...!
ஆனால் இதை, மிதிலா எந்த ஒரு நோக்கத்துடனும் செய்யவில்லை. இதை ஒரு கடமையாக தான் அவள் கருதினாள். இதற்கு முன்பு அவள் பணிபுரிந்த இடத்திலும் இதை செய்து தான் இருக்கிறாள். ஆனால், அவள் இங்கு அதை செய்யாமல் தவிர்த்திருக்க முடியும். ஸ்ரீராமுக்கு பூக்கள் பிடிக்காது என்ற ஒரு காரணமே, அவள் அதைத் தட்டிக் கழிக்க போதுமானதாக இருக்கிறது. ஆனால், அவனுக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்துகொண்டு அதை அவள் செய்திருக்கிறாள். தான் செய்யும் வேலையில் அவளுக்கு அவ்வளவு ஈடுபாடா? என்று எண்ணினான் ஸ்ரீராம்.
அப்பொழுது...
ஸ்டெனோ மாலினி, ஸ்ரீராமின் அறைக்கதவை தட்டினாள். அவள் கையில், அந்த நிறுவனத்திற்கு வந்த சில கடிதங்கள் இருந்தன. வரவேற்பாளர் பெண், தனது திருமணத்திற்காக விடுமுறையில் சென்றிருந்தாள். அதனால், மாலினி அந்த கடிதங்களை கொண்டு வந்தாள்.
தன் முன் வந்து நின்ற பெண்ணை பார்த்ததும் ஸ்ரீராமுக்கு எரிச்சல் ஏற்பட்டது.
"என்ன?"
"லெட்டர்ஸ் வந்திருக்கு"
அவசரமாய் குகனுக்கு போன் செய்தான் ஸ்ரீராம்.
"சொல்லு எஸ்ஆர்கே"
"மிஸ் ஆனந்தை என்னோட கேபினுக்கு வர சொல்லு" என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
மாலினி ஏதோ சொல்ல முயல, தன் கையை காட்டி அவளை தடுத்து, மிதிலா வர காத்திருந்தான். சில நொடிக்குள் உள்ளே நுழைந்தாள் மிதிலா.
"மிஸ் ஆனந்த்... அந்த லெட்டர்ஸ்ஸை வாங்குங்க. இதுக்கு அப்புறம், உங்களுடைய அனுமதி இல்லாம, யாரும் என்னோட கேபின்குள்ள நுழையக்கூடாது. நீங்க என்னோட பிஏ. அதோட வொர்த் என்னன்னு புரிஞ்சுக்கோங்க. யாரா இருந்தாலும், உங்க மூலமா தான் என்னை பார்க்க முடியும்னு சர்க்குலர் அனுப்புங்க. சில்லி ரீசன்க்காக யாரையும் என்னோட கேபின்குள்ள விடாதீங்க. இஸ் தட் கிளியர்?"
"எஸ் சார்"
மாலினியை நோக்கி தன் கரத்தை நீட்டினாள் மிதிலா. அந்தக் கடிதங்களை மிதிலாவிடம் கொடுத்துவிட்டு, முகத்தை தொங்கப் போட்டபடி, ஸ்ரீராமின் அறையை விட்டு வெளியேறினாள் மாலினி.
"அந்த லெட்டர்ஸை செக் பண்ணிட்டு, ரிப்ளை அனுப்புங்க. என்னுடைய சிக்னேச்சர் தேவைப்பட்டா சொல்லுங்க"
"எஸ் சார்"
அவள் அங்கிருந்து செல்ல எத்தனித்த போது,
"இப்பவே, இங்கேயே செக் பண்ணுங்க"
"எஸ் சார்" என்று கூறிவிட்டு அந்த கடிதங்களை ஆராயத் துவங்கினாள் மிதிலா. அதில் இரண்டு கடிதங்களை, ஸ்ரீராம் பார்வையிட வேண்டியிருந்தது. அதை அவனது மேஜையின் மீது வைத்தாள். அந்த கடிதங்களை படித்தான் ஸ்ரீராம்.
"நோட்ஸ் எடுத்துகிட்டு, உடனே பதில் அனுப்புங்க"
நோட் பேடை எடுத்துக்கொண்டு, அவன் கூறுவதை எழுத தயாரானாள்.
"நின்னுகிட்டே எப்படி எழுதுவீங்க? உட்காருங்க" என்றான்.
அதைக் கேட்டு லேசாய் முகம் சுருக்கினாள் மிதிலா. தன் முன்னால் அமரும் வாய்ப்பு அவளுக்கு எப்போதும் கிடைக்காது என்று அவன் கூறினானே...! தன்னுடைய கைபேசியை, ஸ்ரீராமின் மேஜையின் மீது வைத்துவிட்டு, அவனது மேஜைக்கு முன்னலிருந்த நாற்காலியில் அமர்ந்து, அவன் கூறுவதை எழுதத் துவங்கினாள். சுருக்கெழுத்து பயின்றவள் என்பதால், ஸ்ரீராமின் வேகத்திற்கு ஈடு கொடுப்பதில் அவளுக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை.
மிதிலாவின் கவனம், அவள் செய்து கொண்டிருந்த வேளையில் ஆழ்ந்து பதிந்திருந்ததால், சைலண்ட் மோடில் இருந்த அவளுடைய கைபேசிக்கு வந்த அழைப்பை அவள் கவனிக்கவில்லை. ஆனால், இங்கும் அங்கும் நடந்து கொண்டு, அவள் எழுத வேண்டியதை கூறிக் கொண்டிருந்த ஸ்ரீராம் அதை கவனித்தான். யுவராஜ் என்ற பெயர், அவளுடைய கைபேசியின் திரையில் ஒளிர்ந்தது. அவளுடைய முன்னாள் பாஸ், தர்மராஜின் மகனுடைய பெயரும் யுவராஜ் தான் என்பது ஸ்ரீராமுக்கு தெரியும். மிதிலாவுக்கு அழைப்பு விடுப்பது அவனாக இருக்குமோ? ஆனால், அவன் ஏன் அவளுக்கு அழைப்பு விடுக்கிறான்? அவள் தான் வேலையை விட்டாகிவிட்டதே...? தனது கைபேசியை கவனிக்காமல், தான் கூறுவதை குறிப்பெடுத்துக் கொண்டிருந்தத மிதிலாவை கவனித்தான் ஸ்ரீராம். கைப்பேசி அழைப்பு நின்று போனது. ஆனால், அது யுவராஜின் பெயருடன் மீண்டும் ஒளிர்ந்தது. மிதிலாவையும், அவளது கைபேசியையும், மாறிமாறி பார்த்த வண்ணம், அவள் எழுத வேண்டியதை கூறிக் கொண்டிருந்தான் ஸ்ரீராம்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top