1 நேர்காணல்

1 நேர்காணல்

இந்தியாவின் மிகப் பிரசித்தி பெற்ற ஃபேஷன் கம்பெனியான எஸ்ஆர் ஃபேஷன்ஸ், வழக்கத்திற்கு மாறாக கூட்ட நெரிசலுடன் காணப்பட்டது. அங்கு ஒரு மிக முக்கியமான நேர்காணல் நடைபெறவிருக்கிறது. அனுபவத்துடன் கூடிய மிகச்சிறந்த ஒரு பணியாளரை எதிர்பார்த்து காத்திருந்தது எஸ்ஆர் ஃபேஷன்ஸ். அது தனது அசிஸ்டன்ட் மேனேஜிங் டைரக்டர், பரத்துக்கு தேர்ந்த ஒரு உதவியாளரை தேடிக்கொண்டிருந்தது. ஏராளமான ஆண்களும், பெண்களும் அந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அங்கு குழுமி இருந்தார்கள்.

அந்த நேர்முக தேர்வை நடத்த போகும் கம்பெனியின் மேலாளர் குகன், பல்வேறு கேள்வி தொகுப்புகளுடன் தயாராய் இருந்தான். நேர்காணலை முடித்து விட்டு வெளியேறும் நபரை, அங்கிருக்கும் மற்ற நபர்கள் சூழ்ந்து கொண்டு, நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகளை தெரிந்து கொள்ள முயல்வார்கள் என்று அவனுக்கு தெரியும். அதனால், அனைவரையும் வெவ்வேறு கேள்விகள் கேட்க, வெவ்வேறு கேள்வி தொகுப்புகளுடன் அவன் தயாராக இருந்தான். இதையெல்லாம் பார்க்கும் போது, ஐஏஎஸ் பரீட்சையே சுலபமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இன்று, இந்த நேர்காணலை நடத்துவதைத் தவிர வேறு எந்த வேலையும் குகனுக்கு இருக்கப் போவதில்லை. நேர்காணலில் கலந்துகொள்ள இருப்பவர்களின் நீண்ட பட்டியல், அதை அவனுக்கு எடுத்துக் கூறியது. எஸ்ஆர் ஃபேஷன்சின் ஏஎம்டியின் நேர்முக உதவியாளர் என்றால் சும்மாவா?

நல்ல வேலை, அந்த நேர்முகத் தேர்வு, அந்தக் கம்பெனியின் எம்டி, ஸ்ரீராம் கருணாகரனின் உதவியாளருக்காக நடத்தப்படவில்லை. ஏஎம்டிக்கே இவ்வளவு அலப்பறை என்றால், அதன் எம்டிஐ பற்றி கேட்கவா வேண்டும்? உண்மையைச் சொல்லப் போனால், ஸ்ரீராமுக்கு எப்பொழுதும் ஒரு உதவியாளர் தேவைப்பட்டது இல்லை. அவனுடைய வேகத்திற்கு யாராலும் ஈடு கொடுக்க முடியாது. மேலும், ஒரே ஒரு உதவியாளர் அவனுக்கு போதாது. ஒட்டுமொத்த கம்பெனியுமே அவனை சுற்றி தான் சுழன்று கொண்டிருக்கும்.

சட்டென்று அந்த கம்பெனி சூடேறி போனது. அந்தக் கம்பெனியின் ஏகோபித்த முதலாளியான ஸ்ரீராம் கருணாகரன், புயலென உள்ளே நுழைந்தான். அவனுக்கு வழங்கப்பட்ட வணக்கவுரைகளுக்கு செவி சாய்க்காமல் தனது அறையை நோக்கி விறுவிறுவென நடந்தான். அவன் இடத்தில் வேறு ஒருவர் இருந்திருந்தால், வரவேற்பாளர் பெண் சிந்திய அழகான புன்னகையை தவிர்திருக்க முடியாது. ஆனால், இவன் ஸ்ரீராம் ஆயிற்றே...! எதையும் சட்டை செய்யாமல் அதே வேகத்துடன் நடந்தான்.

அங்கு நின்றிருந்த காவலாளி, அவனுக்கு கதவைத் திறந்துவிட்டார். நேர்கானலில் பங்குபெற இருந்தவர்கள் கூடி இருந்த விசாலமான கூடத்தில் நுழைந்தான் ஸ்ரீராம்.

அவனுடைய கால்கள், அனிச்சையாய் அதன் வேகத்தை இழந்தன. அவனுடைய நடையின் வேகம் தளர்ந்தது. ஒரு குறிப்பிட்ட நபரை பார்த்து அவனுடைய கண்கள் சுருங்கின. அவனுடைய இதழ்களை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை, மிதிலா? என்று உச்சரிக்காமல் இருக்க. ஆனால் அந்தப் பெண்ணோ, அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை... எப்போதும் போல...!

இவள் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாள்? அவளும் நேர்முகத்தேர்விற்கு தான் இங்கு வந்திருக்கிறாளா? ஆனால், யாருமே அதை பற்றி பேசவே இல்லையே. அவனுடைய குடும்பத்தினர், இன்று காலை வெகு இயல்பாய் இருந்தார்களே. அவள் இன்று நேர்காணலுக்கு வரப்போகிறாள் என்பது அவர்களுக்கு தெரியாதோ! ஒருவேளை லட்சுமணனுக்கு தெரிந்திருக்கலாம். அவன் தான் மிதிலா விஷயத்தில் சும்மாவே துள்ளிக் குதிப்பானே...!

சுற்றும் முற்றும் பார்த்தான் ஸ்ரீராம். அவனுடைய டிசைனர் டீமின் ஹெட், கையில் ஒரு கோப்புடன் அங்கு நின்றிருந்தார். தன் கைகளை அசட்டையாய் அவரை நோக்கி அசைத்தான். அவர் அவனை நோக்கி ஓடிவந்தார்.

"நான் சொன்ன வேலை முடிஞ்சிடுச்சா?" என்றான்.

"எஸ் சார்" தன் கையில் வைத்திருந்த கோப்பை அவனிடம் நீட்டினார்.

தன் கவனத்தை மிதிலாவின் மீது வைத்தபடி அதை வாங்கி புரட்டினான் ஸ்ரீராம். அவன் எதிர்பார்த்தபடியே, உள்ளே நுழைந்த லட்சுமன், மிதிலாவை பார்த்து திகைத்து நின்றான்.

"மிதிலா..." என்று தன்னையும், அவனிருந்த சூழலையும் மறந்து கத்தி விட்டான். அவள் அங்கு வரப்போவது அவனுக்கு தெரியாது என்பது அவன் முகத்திலேயே எழுதி இருந்தது.

மிதிலா அவனைப் பார்த்து குளிர்ச்சியாய் புன்னகைத்தாள்.

"நீ இங்க என்ன செய்யற?" என்றான் லட்சுமணன்.

அவள் எதுவும் கூறுவதற்கு முன்,

"இன்டர்வியூவுக்கு வந்திருக்கேன்னு சொன்ன... உதை வாங்குவ" என்றான்.

"உதை வாங்கினாலும், நான் உண்மையைத் தான் சொல்லுவேன்" என்று சிரித்தாள்.

"நீ ஏன் இப்படி இருக்க? இதனால தான் எனக்கு உன்னை பிடிக்கிறதில்ல" என்று கூறிய அவனை, கிண்டலாய் பார்த்து சிரித்தாள் மிதிலா.

"கோவப்பட ட்ரை பண்ணாத, லக்கி. நீ ரொம்ப காமெடியா இருக்க..." என்று அவனைக் கிண்டல் செய்தாள் மிதிலா.

அவளைப் பார்த்து முறைத்தான் லட்சுமன்.

"ஏன் டென்ஷன் ஆகுற, லக்கி? இந்த ஜாபுக்கு நான் எளிஜிபிள்ளா இருந்தா, எனக்கு இந்த வேலை கிடைக்கப் போகுது... சிம்பிள்..."

என்ன பெண் இவள்? ஒருவேளை, அவள் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால், நேர்காணலுக்கு வரப் போகும் கேள்விகளை தனக்கு தருமாறு அவனை கேட்டிருக்க மாட்டார்களா?

சோக பெருமூச்சுவிட்டான் லட்சுமன். மீண்டும் தன் இடத்தில் சென்று அமர்ந்துகொண்டாள் மிதிலா. அவளை நோக்கி ஒரு பார்வை வீசி விட்டு தன் அறைக்கு சென்றான் ஸ்ரீராம்.

அப்படி என்றால், லக்ஷ்மணனுக்கு கூட அவள் இங்கு நேர்காணலுக்கு வரப் போவது தெரியாது. அவள் அவ்வளவு தன்னம்பிக்கை உடையவளா? ஆம், அவள் தன்னம்பிக்கை உடையவள் தான்...! அதனால் தான், தன் நெருங்கிய நண்பனான லட்சுமனிடம் கூடக் கூறாமல் இங்கு வந்திருக்கிறாள்.

தனது நாற்காலியில் சாய்ந்து, மிதிலாவை பற்றி சிந்திக்கலானான் ஸ்ரீராம். அவள் தான், அவன் அடிக்கடி சிந்திக்கும் ஒரே பெண்... அல்லது, அவள் தான், அவனை சிந்திக்க வைக்கும் பெண்...!

முதலில், அவர்கள் இருவருக்கும் என்ன சம்பந்தம் என்பதை, சற்று பின்னால் பயணித்து நாம் தெரிந்து கொண்டு விடுவோம்...!

அழகான கூட்டுக் குடும்பம் ஸ்ரீராமுடையது. அவனுடைய அப்பாவும், சித்தப்பாவும், அக்கா, தங்கைகளை மணந்து கொண்டவர்கள். அவனுடைய அப்பாவும், அம்மாவும் ஒரு விபத்தில் காலமானார்கள். பூவனம் என்ற பெயர் கொண்ட 100 கோடி மதிப்பிலான வீடு அவனுடையது. ஆம், அந்த வீடு ஸ்ரீராமின் உழைப்பால் உருவானது.

ஒரு ஞாயிற்றுக்கிழமை

மிதிலா என்ற பெயரை, மீண்டும் மீண்டும் கேட்டு எரிச்சல் அடைந்தான் ஸ்ரீராம். அவள் அவனுடைய சித்தப்பா மகன் லக்ஷ்மணனின் தோழி. அவர்கள் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். முந்தைய தினம் தான், முதல் முறையாக, மிதிலா பூவனம் வந்திருந்தாள். காலை முதல், அந்தப் பெண்ணைப் பற்றியே தான் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறான் ஸ்ரீராம். எல்லோரும் அவளைப் பற்றி தான் பேசிக் கொண்டிருந்தார்கள். அவள் லட்சுமணனுடைய தோழி. அப்படி இருக்கும் போது, அவளால் மற்றவரின் கவனத்தை எப்படிக் கவர முடிந்தது? இங்கு வந்திருந்த ஒரே நாளில் எப்படி அவளால் அனைவரிடமும் பழக முடிந்தது? அவள் எப்படிப்பட்ட பெண்?

மிதிலா அப்படி சொன்னாள்... மிதிலாவுக்கு இது பிடிக்கும்... அவள் என்னை இப்படி செய்ய சொன்னாள்...

அவனுடைய குடும்பத்தார், ஒருவரிடம் இவ்வளவு ஈடுபாடு காட்டுவது இது தான் முதல் முறை. அந்தப் பெண் யார்? இவர்கள் பேசுவதை எல்லாம் வைத்து பார்த்தால், அவள் ஒரு நடுத்தர வர்க்கத்து பெண்ணாகத் தான் இருக்க வேண்டும். அவனுடைய குடும்பத்தார் எப்படி இவ்வளவு சீக்கிரம் ஒரு பெண்ணால் கவரப்பட்டு விட்டார்கள்? இப்படிப் பட்டவர்களை பற்றி அவனுக்கு தெரியாதா? தன்னை நல்லவர்களாக காட்டிக்கொண்டு, பணக்காரர்களை தங்கள் வலையில் விழவைப்பது இவள் போன்ற பெண்களுக்கு சகஜம். இந்த பொண் வித்தியாசமானவளாக இருக்க வாய்பில்லை. இங்கு அவள் ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் தான் வந்திருக்க வேண்டும். ஒருவேளை லட்சுமணனை வளைத்துப் போடுவது அவள் எண்ணமாக இருக்கலாம். இந்த முட்டாள் லட்சுமணனும், அவளைப் பற்றி சரிவர தெரிந்து கொள்ளாமல் அவள் பின்னால் அலைந்து கொண்டிருக்கிறான்.

ஒருவேளை அவளுடைய நோக்கம் அதுவாக இருந்தால், அது நிச்சயம் நடக்காது. ஸ்ரீராம் இருக்கும் வரை அதை நடக்க விட மாட்டான். ஒரு நடுத்தர வர்க்கத்துப் பெண், நிச்சயம் பூவனத்தின் மருமகளாக முடியாது. ஆனால், லட்சுமணனையும் முழுதாய் குறை கூறி விட முடியாதே...! அவளால் இந்த குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் வளைத்துப் போட்டு விட முடியும் என்றால், லட்சுமணனும் தான் என்ன செய்வான்? ஆனால், அவனைக் காக்க ஸ்ரீராம் இருக்கிறான். அவளுடைய முகமூடியைக் கிழித்து, அவளுக்கு சரியான பாடம் கற்பிப்பான். அவள் மிகவும் திறமைசாலியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அனைவரையும் அவள் பேச்சுக்கு ஆட வைப்பாளா? எல்லாவற்றையும் சரியாக திட்டமிட்டு தான் அவள் செய்து கொண்டிருக்கிறாள். ஸ்ரீராம் இங்கு இருக்கும் வரை, அவளால் நிச்சயம் பூவனத்தில் நுழைய முடியாது.

மதிய உணவு வேளை

மதிய உணவிற்காக மிகப்பெரிய உணவு மேசையில் அனைவரும் கூடினார்கள். அனைவருக்கும் இனிப்பை பரிமாறினாள் ஸ்ரீராமின் அக்கா நர்மதா. ஸ்ரீராமுக்கும் கொடுத்தாள்.

"அக்கா... எனக்கு ஸ்வீட்டா?" என்றான் அதிர்ச்சியாக ஸ்ரீராம்.

அவன் ஒரு சர்க்கரை நோயாளி.

"இது ஆற்காடு ஸ்பெஷல் ஸ்வீட்" என்றார் பாட்டி கற்பகம்.

"ஆமாம் ராமு... டேஸ்ட் பண்ணி பாரு. உனக்கு ரொம்ப பிடிக்கும்" என்றாள் நர்மதா.

"ஒரு ஸ்வீட் ஒன்னும் உன்னுடைய சுகர் லெவலை ஏத்திடாது" என்றார் சித்தி புஷ்பா, நர்மதா தனக்களித்த *மக்கன் பேடா*வை ருசித்தபடி.

எப்போதும் தன்னை இனிப்பு சாப்பிட சொல்லி வற்புறுத்தாத அவர்கள், இன்று கூறியதை கேட்டு அமைதியாய் அதை சாப்பிட தொடங்கினான் ஸ்ரீராம். அது உண்மையிலேயே பிரமாதமாக இருந்தது.

"நல்லா இருக்கில்ல?" என்றார் பாட்டி.

ஆமாம் என்று கூறி அதை சாப்பிட்டு முடித்தான் ஸ்ரீராம்.

"மிதிலாவுடைய அப்பா, அடுத்த தடவை ஆற்காடு போகும் போது நம்ம இந்த ஸ்வீட்டை வாங்கிட்டு வர சொல்லலாம்" என்றார் புஷ்பா.

"மிதிலாவா?" என்றான் ஸ்ரீராம்

"ஆமாம். நேத்து அவ தான் இதை வாங்கிட்டு வந்தா" என்றார் பாட்டி.

மறுபடியும் மிதிலாவா? என்று தன் கண்களை சுழற்றினான் ஸ்ரீராம்.

"இன்னும் வேணுமின்னா ஒரு ஸ்வீட் சாப்பிடு, ராமு. மிதிலா ஸ்வீட் சாப்பிட தயங்கவே மாட்டேன்கிறா" என்ற புஷ்பாவை வினோதமாக பார்த்தான் ஸ்ரீராம்.

"என்னை பைத்தியக்காரி மாதிரி பார்க்காத. மிதிலாவுக்கும் சர்க்கரை வியாதி இருக்கு தெரியுமா?" என்று அவர் கூற நம்ப முடியாமல் விழி விரித்தான் ஸ்ரீராம்.

"ஆமாம் ராமு... அவளும் டயாபட்டிக் தான். ஆனா, ஸ்வீட் சாப்பிடுறா" என்றாள் நர்மதா.

"இதெல்லாம் சுத்த பேத்தல்" என்றான் கடுகடுப்புடன் ஸ்ரீராம்.

"அவ ஏதோ ஸ்பெசிஃபிக் டயட் ஃபாலோ பண்றான்னு நினைக்கிறேன். அதனால தான், அவ அவ்வளவு தைரியமா இருக்கா..." என்றாள் நர்மதா.

"ஆமாம் நர்மதா, அவ ஸ்வீட் சாப்பிடும் போது, நான் அவ முகத்தில் ஒரு துளி கூட தயக்கத்தை பார்க்கவே இல்ல" என்றார் பாட்டி.

"தயக்கமா...? நீங்க வேற அத்தை, அவர் ரசிச்சி ருசிச்சில்ல சாப்பிட்டா" என்றார் சித்தி புஷ்பா.

ஸ்ரீராமின் நிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. ஒரு சர்க்கரை வியாதிகாரி இனிப்பைத் தவிர்க்காமல் இருந்ததைப் பற்றி அவன் இப்பொழுது தான் முதல் தடவை கேட்கிறான். நிச்சயம் அந்தப் பெண் மிகப்பெரிய ஏமாற்றுக்காரியாகத் தான் இருக்க வேண்டும். ஒரு சர்க்கரை நோயாளி, நிச்சயம் தயக்கமில்லாமல் இனிப்பை உண்ணவே முடியாது. அவன் சந்தேகப்பட்டது போல் அவள் எதோ ஒரு திட்டத்துடன் தான் இங்கு வந்திருக்கிறாள். அவனுக்கு அந்தப் பெண்ணைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது...

அவர்கள் சந்தித்த போது...

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top