9 மற்றுமொரு நாடகம்
9 மற்றுமொரு நாடகம்
தன் உள்ளங்கையை பார்த்த வைஷாலி முகத்தை சுருக்கினாள். என்ன இது? VKM என்று அவளது கையில் எழுதியது யார்? மருத்துவருக்கு பக்கத்தில், கையில் பேனாவுடன் ஒரு சிறுமி நின்று கொண்டிருந்தாள். அவள் அந்த மருத்துவரின் மகளாக இருக்க வேண்டும். தன் கையை அவளிடம் காட்டி,
"இது என்ன?" என்றாள் வைஷாலி.
அந்த எழுத்துக்கள் தனக்கு தெரிகிறதா என்று அவள் கேட்கிறாளோ என்று எண்ணிய அந்த சிறுமி, *VKM* என்றாள்.
இடவலமாய் தலையசைத்து சிரித்த வைஷாலி, அதை எழுதியது அந்த சிறுமி தான் என்று எண்ணிக்கொண்டு தனது கைப்பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றாள்.
அவள் மனதில் பெரிய வருத்தம் ஏற்பட்டது. அவள் இன்று ஒரு நேர்முகத் தேர்வுக்கு செல்ல வேண்டி இருந்தது. மயங்கி விழுந்ததால் அதை அவளால் செய்ய முடியவில்லை. ஏமாற்றத்துடன் வீடு திரும்பினாள்.
.....
வீட்டுக்கு வந்த வைஷாலி, வீட்டின் கதவு திறந்திருந்ததை பார்த்தாள். அப்படி என்றால், கோப்பெருந்தேவி வீட்டுக்கு வந்துவிட்டார்.
சத்தம் செய்யாமல் வீட்டிற்குள் நுழைந்த வைஷாலி, கோப்பெருந்தேவியின் அறைக்கு வந்தாள். தனது பீரோவை திறந்து வைத்துக் கொண்டு ஏதோ செய்துகொண்டிருந்தார் கோப்பெருந்தேவி. மெதுவாய் எட்டிப்பார்த்தாள் வைஷாலி. தன் கையில் இருந்த பொருளை, மறைத்து கொண்டார் கோப்பெருந்தேவி.
"நீங்க என்கிட்ட மறைக்க வேண்டிய அவசியம் இல்ல. நான் ஏற்கனவே பாத்துட்டேன்" என்றாள் வைஷாலி சர்வசாதாரணமாக.
தன் கையிலிருந்த தங்க சங்கிலியை உள்ளே வைத்து பூட்டினார் கோப்பெருந்தேவி. ஆம், அது விக்ரம், வைஷாலிக்கு அணிவித்த அதே தங்கச்சங்கிலி தான்.
"உங்க மனசை கஷ்டப்படுத்துற விஷயத்தை ஏன்மா திரும்பத் திரும்ப நெனச்சு பாக்குறீங்க?" என்றாள் வைஷாலி கவலையாக.
ஒன்றும் கூறாமல் அமைதியாக இருந்தார் கோப்பெருந்தேவி.
"உங்க மனசுலயிருந்து அந்த எண்ணங்களை எல்லாம் தூக்கி எறிய முடியாதா மா? கொஞ்சம் கூட இதயமே இல்லாதவங்க அவங்க"
"எல்லாரையும் அப்படி சொல்லாதே வைஷு... பெரியய்யா மாதிரி நல்ல மனசு உள்ளவர் நம்ம எங்க தேடினாலும் கிடைக்க மாட்டார்"
இந்த முறை வைசாலி அமைதியானாள். கோப்பெருந்தேவி கூறுவது உண்மை தான்.
"என்னை பெத்த மகள் மாதிரி அவர் பாத்துகிட்டார்"
"அவர் இப்போ இந்த உலகத்திலேயே இல்லையே..."
"அவர் மட்டுமில்ல. சாவித்திரியும் ரொம்ப நல்லவங்க. ஆனா பெரியவங்க சொல்லுக்கு கட்டுப்பட்டவங்க"
"அம்மா ப்ளீஸ்... தயவுசெய்து அவங்களை பத்தி பேசுறதை விடுங்க. அவங்களை பத்தி யோசிக்க கூட நான் விரும்பல. ராணி நந்தினி தேவியை நெனச்சாலே உடம்பெல்லாம் பத்திக்கிட்டு எரியுது. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம நம்மள எப்படி அந்த வீட்டை விட்டு துரத்தி அடிச்சாங்க..." என்றாள் கோபமாக.
"நானும் அதை இன்னும் மறக்கல வைஷாலி... ஏதோ ஒரு யோசனை..."
"நீங்க எதைப் பத்தி யோசிக்கிறீங்கன்னு எனக்கு நல்லா தெரியும். அதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்ல."
"நானும் எல்லாத்தையும் மறக்க தான் முயற்சி பண்றேன். ஆனா ஏனோ என்னால முடியல. ஏன்னு எனக்கும் புரியல"
தன் அம்மாவை எப்படி சமாதானப்படுத்துவது என்று புரியவில்லை வைஷாலிக்கு.
"ஒருவேளை, சின்ன எஜமானை அவங்க வெளிநாட்டுக்கு அனுப்பாம இருந்திருந்தா..."
"அம்மா, உங்களை கையெடுத்து கும்பிடுறேன். தயவுசெய்து எதையெல்லாம் மறந்துடுங்க. உங்க சின்ன எஜமான் இருந்தா கூட ஒன்னும் பண்ணி இருக்க முடியாது..."
"இல்ல வைஷாலி. அவரை வெளிநாட்டுக்கு அனுப்பினதே, நம்மகிட்ட இருந்து அவரை தூரமா வைக்கணும்னு தான்"
"அதனால என்னம்மா இப்போ? நந்தினி தேவி எவ்வளவு இதயம் இல்லாதவங்க நமக்கு தெரியாதா? அவங்க உலகமே வேறம்மா. நம்மால அந்த உலகத்துல வாழ முடியாது. முக்கியமா நந்தினி தேவியோட யாராலயும் வாழ முடியாது. வீரா தாத்தா உயிரோடு இருந்திருந்தா கூட, இந்த கல்யாணத்தை நிச்சயமாக அவங்க நடக்க விட்டிருக்க மாட்டாங்க. அப்படியே நடந்திருந்தா கூட, என்னை நிம்மதியா வாழ விட்டிருக்க மாட்டாங்க. மேற்கொண்டு அதை பத்தி பேசாதீங்க. நான் எதைப் பத்தியும் நினைக்க போறதில்ல. நீங்களும் நினைக்காதீங்க"
வைஷாலியின் கோபத்தில் தவறொன்றுமில்லை. கோப்பெருந்தேவிக்கும் கூட நந்தினியின் மீது கோபம் இருக்கிறது. அவருக்கும் கூட இந்த திருமணத்தில் விருப்பமில்லை. அவருடைய பயமெல்லாம் வைஷாலியை பற்றி தான். வைஷாலி சின்ன எஜமானை பற்றி யோசிப்பதில் அவருக்கும் விருப்பமில்லை. அதனால் தான் நந்தினி தேவி தங்களுக்கு இழைத்த கொடுமையை, அவ்வப்போது அவளுக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார். சுய கவுரவம் கொண்ட பெண்மணி என்பதால், தன் மகள் பலவீனம் அடைவதை அவர் விரும்பவில்லை.
"சரி, அதை விடு. நீ இன்டர்வியூவுக்கு போனியே அது என்ன ஆச்சு?" என்றார் கோப்பெருந்தேவி விஷயத்தை மாற்றி.
"நான் மிஸ் பண்ணிட்டேன் மா" அலுத்துக் கொண்டாள் வைஷாலி.
"ஏன்? எப்படி மிஸ் பண்ண? காலையில ரொம்ப ஆர்வமா கிளம்பி போனியே..."
"எனக்கும் ஒன்னும் புரியல மா. நான் பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸுக்காக காத்திருந்தேன். திடீர்னு ஏதோ அப்நார்மலா இருந்தது. எனக்கு என்ன ஆச்சுன்னே தெரியல. கண் விழிச்சபோ, ஒரு சின்ன கிளினிக்ல இருந்தேன். நான் மயங்கிட்டேன்னு டாக்டர் சொன்னாங்க" என்று விஷயத்தை ஒப்பித்தாள் வைஷாலி.
"அதுக்கு டாக்டர் என்ன சொன்னாங்க?" என்றார் கோப்பெருந்தேவி கவலையுடன்.
"சில சமயம் அப்படி நடக்கும்ன்னு சொன்னாங்க"
"நாளைக்கு ஒரு நார்மல் செக்கப் பண்ணிடுவோம்"
"அம்மா, டென்ஷன் ஆகாதீங்க. நான் நல்லா தான் இருக்கேன்"
"இந்த விஷத்தில் நீ சொல்றத நான் கேட்க மாட்டேன்"
"சரி, சரி... இன்னைக்கு நீங்க வேலைக்கு போகலையா?"
"டேவிட் சார் குடும்பத்தோட ஒரு பங்ஷனுக்கு போயிருக்கார்... அதான் எனக்கும் லீவ்"
"ஓ..."
"போய் முகத்தை கழுவிட்டு வா. சாப்பிடலாம்"
"ஓக்க்கீ..."
*ஓகே* என்பதைத் தான் அப்படிக் கூறி விட்டு சென்றாள் வைஷாலி.
மாலை
தான் திருமணம் செய்து கொண்ட பெண்ணை நினைத்தபடி சோகமாய் அமர்ந்திருந்தான் விக்ரம். ஏன் அவன் அந்தப் பெண்ணுக்காக இவ்வளவு கவலைப்படுகிறான் என்று அவனுக்கு புரியவில்லை. தன் அறையை விட்டு வெளியே வரவே இல்லை அவன். ஆனால் நந்தினிதேவி கதவைத் தட்டும் போது கதவை திறக்காமல் அவனால் இருக்க முடியாது. எரிச்சலுடன் கதவைத் திறந்தான். அவனைப் பார்த்துப் புன்னகைத்தார் நந்தினி.
" சொல்லுங்க பாட்டி"
அவனை நோக்கி ஒரு மடிக்கப்பட்ட காகிதத்தை நீட்டினார் நந்தினி.
"பொம்மியோட அட்ரஸ்" என்றார் புன்னகை மாறாமல்.
நம்பமுடியாமல் அவரைப் பார்த்தான் விக்ரம். அவன் முகபாவம் உடனடியாய் மாறியது. அவர் கொடுத்த காகிதத்தை ஆர்வத்துடன் வாங்கிக்கொண்டான்.
"இதை உங்களுக்கு யார் கொடுத்தது பாட்டி?"
"கோப்பெருந்தேவியோட தூரத்து சொந்தக்கார பெண்ணை நான் அடிக்கடி கோவில்ல சந்திக்கிறது உண்டு. அவங்களுக்கு கோப்பெருந்தேவியோட அட்ரஸ் நிச்சயம் தெரிஞ்சி இருக்கணும்னு நினைச்சேன். ஏன்னா, அவங்க தஞ்சாவூருக்கு அடிக்கடி கல்யாணம் காட்சின்னு போயிட்டு வருவாங்க. நான் நினச்ச மாதிரியே, அவங்ககிட்ட அட்ரஸ் இருந்தது."
"தேங்க்யூ பாட்டி"
"உனக்கு வேண்டியதை கொடுக்கத் தான் நாங்க இருக்கோம் விக்ரம்" அந்த இடத்தை விட்டு அகன்றார் நந்தினி.
அந்த முகவரியை எடுத்துக்கொண்டு சாவித்திரியின் அறைக்கு வந்தான் விக்ரம் சந்தோஷமாக. சற்று நேரத்திற்கு முன்பு வரை சோகமாக இருந்த அவனை, எது சட்டென்று மாற்றியது என்று சாவித்திரிக்கு புரியவில்லை. அவருக்கு மேலும் ஆச்சர்யம் அளிக்கும் வகையில், சாவித்திரியை சந்தோஷமாய் கட்டிக்கொண்டான் விக்ரம்.
"என்ன ஆச்சு சின்னா?"
தன் கையில் இருந்த காகிதத்தை அவரிடம் காட்டினான். அவன் கையிலிருந்து அதை பெற்று, திறந்து பார்க்க, அவர் முகம் மலர்ந்தது.
"இது உனக்கு எப்படி கிடைச்சது?"
"பாட்டி கொடுத்தாங்க "
ஃபியூஸ் போன பல்பை போல் ஆனார் சாவித்திரி. சோபாவில் அமர்ந்து அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த விமலாதித்தனை கவலையுடன் பார்த்தார் சாவித்திரி.
"நாளைக்கு நான் தஞ்சாவூருக்கு போறேன்" என்றான் விக்ரம் உற்சாகமாக.
தன் பதட்டத்தை காட்டிக்கொள்ளாமல் சரி என்று தலையசைத்தார் சாவித்திரி. அங்கு, விக்ரமுக்காக காத்திருப்பது என்ன என்பது தான் அவருக்கு புரியவில்லை.
"டிரைவரை கூட்டிட்டு போறியா?" என்றார் விமல்.
"இல்லப்பா... சுதாவும் என்னோட வரப்போறான். நாங்களே காரை ஓட்டிக்கிட்டு போறோம்"
எனக்கூறிவிட்டு சுதாகரிடம் விஷயத்தைச் சொல்ல அங்கிருந்து சென்றான் விக்ரம்.
"எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க"
"என்ன விஷயம்னு நாளைக்கு தெரிஞ்சிடும்... ஜஸ்ட் வெயிட் அண்ட் வாட்ச்..." என்றார் விமலாதித்தன்.
சுதாகருக்கு ஃபோன் செய்து, அடுத்த நாள் விடியற்காலையில் புறப்படத் தயாராக இருக்கும் படி கூறினான் விக்ரம். ஆர்வத்தில் அன்று இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை விக்ரமுக்கு. பத்து வருடத்திற்கு பிறகு, அவன் நாளை பொம்மியை சந்திக்கப் போகிறான். அவள் பார்ப்பதற்கு எப்படி இருக்க போகிறாளோ...! கண்ணை மூடி தூங்க முயன்றான். ஆனால் அவனால் அது முடியவில்லை. தூக்கம் அவன் கண்களை இழுத்துக்கொண்டு சென்ற போது அலாரம் அடித்தது. அலறி அடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தான் விக்ரம். பரபரவென தயாராகி சாவித்திரியிடம் ஆசீர்வாதம் பெற்று தஞ்சாவூருக்கு கிளம்பினான்.
சுதாகருடன் தஞ்சாவூரை சென்றடைந்தான் விக்ரம். தஞ்சாவூரிலிருந்து பத்து கிலோமீட்டர் உள்ளே இருந்தது அந்த கிராமம். சிறிய கிராமம் என்பதால், தங்கள் கையில் இருந்த முகவரியை தேடி பிடிப்பது அவ்வளவு ஒன்றும் கடினமாக இல்லை அவர்களுக்கு. காரை விட்டு கீழே இறங்கினான் விக்ரம். அவன் மனம் எவ்வளவு கிளர்ச்சியுடன் இருந்தது என்று நன்றாகவே புரிந்தது சுதாகருக்கு.
அது நான்கு வீடுகள் கொண்ட ஒண்டு குடித்தனம். அவை அனைத்தும் நடுத்தர வர்க்கத்து வாடகை வீடுகள் என்பது நன்றாகவே தெரிந்தது. வயதான பெரியவர் ஒருவர் தனது பழைய இருசக்கர வாகனத்தை துடைத்துக் கொண்டிருந்தார்.
"பெரியவரே" என்றான் சுதாகர்.
உயர் வர்க்கத்து தோரணையுடன் நின்றிருந்த அவர்களை கேள்விக்குறியுடன் பார்த்தார் அந்த பெரியவர்.
"யார் தம்பி நீங்க? உங்களுக்கு என்ன வேணும"
"கோப்பெருந்தேவியை பார்க்கணும்" என்று சுதாகர் கூறியவுடன் அந்தப் பெரியவரின் முகம் மாறியது.
"அவங்களுக்கு நீங்க என்ன வேணும்?" என்றார்.
"நாங்க அவங்களுக்கு தூரத்து சொந்தம்"
"உங்களுக்கு அவங்களை பத்தி ஒன்னும் தெரியாதா?" என்றார் அவர்.
விக்ரமை பார்த்து விட்டு, தெரியாது என்று தலையசைத்தான் சுதாகர்.
"அவங்க உயிரோட இல்ல" என்று அவர்கள் தலையில் குண்டை தூக்கிப் போட்டார் அவர்.
"என்னது...????" என்று நண்பர்கள் இருவரும் அலறினார்கள்.
"ஆமாம் தம்பி. ஒரு மாசமாச்சு"
"அவங்க பொண்ணு...?" என்று பரபரத்தான் விக்ரம்.
"அவளைப் பத்தி பேசாதீங்க தம்பி. அவளால தான் கோப்பெருந்தேவி செத்து போனாங்க" என்றார் சோகமாக.
"ஏன்? என்ன ஆச்சு?" என்றான் பதட்டத்துடன் விக்ரம்.
"எவனோ ஒருத்தன் கூட ஓடிப் போயி, அவங்க அம்மாவை அந்த பொண்ணு தலை குனிய வச்சிடுச்சி, தம்பி"
விக்ரமின் மனோ நிலையை நம்மால் வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை. அவன் உள்ளுக்குள் நொறுங்கி சுக்குநூறானான். மரியாதையே வடிவாய் திகழ்ந்த சிவராமனின் மகள், இப்படி ஒரு காரியத்தைச் செய்வாள் என்பதை அவனால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.
"பாவம் கோப்பெருந்தேவி... அவங்க மக செஞ்ச காரியத்தை அவங்களால தாங்கவே முடியல. அந்த பொண்ணு ஓடிப் போன உடனே, உடம்பு சரியில்லாம படுக்கையில் விழுந்தவங்க தான். பாவம் போன மாசம் தான் உயிரை விட்டாங்க. அவங்களோட இறுதி சடங்குக்கு கூட அந்த பொண்ணு வரல. எங்க இருக்கான்னு தெரியல"என்று முடித்தார் அந்த பெரியவர்.
சுதாகரின் கண்கள், விக்ரமின் முகத்தின் மீதே இருந்தது, அவனுடைய முகபாவத்தை கவனித்துக் கொண்டு. இந்த விஷயத்தை விக்ரம் எப்படி எதிர்கொள்ளப் போகிறான் என்று அவனுக்கு புரியவில்லை. விக்ரமின் முகம் போன போக்கை பார்த்து அவனுக்கு மரண பயம் ஏற்பட்டது.
அப்பொழுது, அங்கிருந்த மற்றொரு வீட்டில் இருந்து, ஒரு வயதான பெண்மணி வந்தார்.
"யார் இவங்க?" என்றார் அந்த பெரியவரிடம்.
"அவங்க நம்ம கோப்புவை பாக்க வந்து இருக்காங்க"
"ஒரு மாசத்துக்கு முன்னாடி வந்திருக்கக் கூடாதா தம்பி...? தான் பெத்த பொண்ணு பொம்மியாலயே யாரும் இல்லாத அனாதையா செத்துப்போனா... பாவம்..."என்று அதே கதையை கூறினார் அந்த பெண்மணி.
பின்னோக்கி நகர துவங்கினான் விக்ரம் இதற்கு மேலும் பொம்மியை பற்றி கேட்க அவன் தயாராக இல்லை. திரும்பி வேகமாய் நடக்க துவங்கினான். சுதாகர் அவனுக்கு பின்னால் ஓடினான்.
"விக்கி ப்ளீஸ்... கம்போஸ் யுவர்செல்ஃப்" அவன் தோளில் கை வைத்தான் சுதாகர். அவனது கையைத் தட்டிவிட்டு நடந்தான் விக்ரம்.
ஒன்றும் கூறாமல் வெறித்துப் பார்த்தபடி நின்றான் விக்ரம். தன் வாழ்வில் இப்படிப்பட்ட ஒரு நிமிடங்களை தான் எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. பொம்மியும் தனக்காக காத்திருப்பாள் என்று அவன் எண்ணியிருந்தான். ஆனால் அவள், அவனை ஏமாற்றி விட்டாள். தனது தாத்தாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை தன்னால் காப்பாற்ற முடியாது என்று உணர்ந்த போது, அவனால் அதை தாங்க முடியவில்லை. அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தான். அவனுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியாத சுதாகரும் அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.
........
கோப்பெருந்தேவியின் கதையை விக்ரமுக்கு கூறிய அந்த பெரியவர், நந்தினிதேவிக்கு ஃபோன் செய்தார். அதற்காகவே காத்திருந்த நந்தினி அந்த அழைப்பை ஏற்றார்.
"உங்க பேரன் இங்க வந்தாரு, ராணியம்மா. அவர்கிட்ட நீங்க சொன்னதை அப்படியே சொல்லிட்டேன்"
"நீங்க சொன்னதை விக்ரம் நம்பிட்டானா?"
"சந்தேகமே இல்ல... நீங்க அவர் முகத்தை பார்த்திருக்கணுமே..."
"நான் சொன்ன மாதிரி உங்க அக்கௌன்ட்க்கு பணம் வந்து சேரும்"
"ரொம்ப நன்றிங்க ராணியம்மா"
வெறுக்கத்தக்க புன்னகையுடன் அழைப்பைத் துண்டித்தார் நந்தினி. அவருடைய திட்டம் பலித்துவிட்டதில் அவருக்கு பரம திருப்தி.
ஆனால், விதி ஆடப்போகும் விளையாட்டை அவர் அறிந்திருக்கவில்லை. தன்னால், விக்ரமை, வைஷாலியிடம் நெருங்க விடாமல் தடுத்து விட முடியும் என்று அவர் எண்ணியிருந்தார். ஆனால் அவர்கள் சந்தித்தே தீர வேண்டும் என்று விதி இருந்தால், பொம்மி தானாகவே வந்து விக்ரமின் முன் நின்று விடமாட்டாளா...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top