7 வினோத தீர்வு

7 வினோத தீர்வு

எதிர்பாராத சூழ்நிலையை எதிர்கொண்டு நிற்கிறார் நந்தினி. அவருடைய திட்டமே வேறு. அவர் அதை செயல்படுத்தும் முன், தன்னுடைய முடிவில் விக்ரம் எவ்வளவு திடமாய் நிற்கிறான் என்பதை தெரிந்து கொண்டார் நந்தினி.

"நீ அவளை அமெரிக்காவுக்கு கூட்டிக்கிட்டு போக முடியாது" என்றார் நந்தினி.

"ஏன் கூட்டிக்கிட்டு போக முடியாது?" என்றான் தன் விழிகளை சுருக்கி.

"நீ பத்து வருஷமா அமெரிக்காவில் இருந்தவன். அந்த பழக்க வழக்கங்களை பார்த்து வளர்ந்தவன். அதனால உன்னால அதை ஏத்துக்க முடியுது. ஆனா, பொம்மியோட குடும்பம் அப்படி கிடையாது. அவங்க நம்ம கலாச்சாரத்தோட ஒட்டி வாழுறவங்க.  அவங்கள பொறுத்த வரைக்கும் கல்யாணம் என்கிறது வெறும் சடங்கு இல்ல... வாழ்க்கை" என்று யாரும் மறுக்க முடியாத தன் எண்ணத்தை முன்வைத்தார் நந்தினி.

கைகளைக் கட்டிக் கொண்டு அவரை உறுதியாய் பார்த்தான் விக்ரம்.

"நீங்க என்ன சொல்ல வரீங்க? நான் என்ன செய்யணும்னு நீங்க நினைக்கிறீங்க?"

ஜோசியரை பார்த்து நந்தினி கூறுங்கள் என்பது போல் சைகை செய்தார். நந்தினி ஏற்கனவே தன்னிடம் ஒப்பித்து வைத்திருந்தவற்றை கூற தயாரானார் ஜோசியர்.

"இந்தப் பிரச்சனைக்கு என்னால ஒரு தீர்வை கொடுக்க முடியும்" என்றார் ஜோசியர். அனைவரது கவனமும் அவர் மீது சென்றது.

"என்ன சொல்யூஷன் கொடுப்பீங்க?" என்றான் விக்ரம்.

"ஒரு பொண்ணோட மரணத்துக்கு நீங்க காரணமாக இருக்க வேண்டாம்னு நினைக்கிறீங்க. அதனால தான் கல்யாணம் பண்ணிக்காமலேயே அந்த பொண்ணோட வாழலாம்னு முடிவு பண்ணி இருக்கீங்க, இல்லையா?"

ஆமாம் என்று தலையசைத்தான் விக்ரம்.

"இந்த விஷயத்துக்கு எந்த பரிகாரமும் இல்லை என்கிறதை நான் ஒத்துக்கறேன். ஆனா, சில சமயம் விதியை மதியால் வெல்ல முடியும்" என்றார் ஆர்வமாக.

விக்ரமும், சாவித்திரியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"எதுவா இருந்தாலும் பரவாயில்ல, சொல்லுங்க" என்றார் நந்தினி.

"உங்க ஜாதகப்படி, உங்களுடைய முதல் மனைவி இறந்து போவாங்க..."

அவர் கூறுவதை கவனமாய் கேட்டுக் கொண்டிருந்தான் விக்ரம்.

"உங்களை கல்யாணம் பண்ணிக்கிற பொண்ணு இறந்து போவா... அப்படின்னா, ரெண்டு மூணு நாள்ல இறந்து போக போற பொண்ணை நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்க கூடாது?"

"என்ன சொல்றீங்க நீங்க?" என்றான் முகத்தை சுருக்கி விக்ரம்.

"இறந்து போற பொண்ணை கல்யாணம் பண்ணி, உங்களுடைய ஜாதகத்தை உண்மையாக்கிடுங்க. ஏற்கனவே சாகக் கிடக்கிற பொண்ணு, எப்படி இருந்தாலும் சாகத் தானே போறா? நீங்க கல்யாணம் பண்ணாலும், பண்ணலனாலும் அவ சாவா. உங்களுக்கும் மனசு உறுத்தல் இருக்காது. அதுக்கப்புறம் உங்களுக்கு பிடிச்ச பெண்ணை கல்யாணம் பண்ணிக்கோங்க"

இது சரிவரும் போல் தோன்றியது விக்ரமுக்கு. ஆனால் சாவித்திரியின் முகம் இருண்டு போனது. இதற்கு பின் என்ன சதி ஒளிந்து இருக்கிறதோ என்று பயந்தார் அவர்.

"இது ரொம்ப நல்ல ஐடியாவா இருக்கு" என்றார் நந்தினி, விக்ரமின் முகத்தை பார்த்தபடி.

"ஆனா, ரெண்டு மூணு நாள்ல சாக போற பொண்ணை எங்க போய் தேடி கண்டுபிடிப்பீங்க? யாரு, எப்போ சாவான்னு யாரால சொல்ல முடியும்?" தரமான கேள்வியைக் கேட்டான் விக்ரம்.

"தினம் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு ஹாஸ்பிட்டலயும் செத்துகிட்டு தானே இருக்காங்க...? வாழ்க்கையோட இறுதிக்கட்டத்தில் இருக்கிற ஒரு பெண்ணை தேடிக் கண்டுபிடிச்சி, அவளை இவருக்கு கல்யாணம் பண்ணி வைங்க. அதையே ஒரு பரிகாரமா செய்யுங்க"

"இது என்னால நிச்சயம் முடியும்" என்றார் நந்தினி சந்தோஷமாக.

"அப்படியா?" என்றார் ஜோசியர்.

"ஆமாம். என்னுடைய ஃப்ரெண்ட் காமினி ஒரு பெரிய ஹாஸ்பிடலோட டீன். உங்களுக்கு ஆக்சிஜன் ஹாஸ்பிடல் தெரியும் தானே?"

"அட ஆமா... அது ரொம்ப பெரிய ஹாஸ்பிடல் ஆச்சே..."

" அவளால நிச்சயம் எனக்கு ஹெல்ப் பண்ண முடியும்" என்றார் நந்தினி நம்பிக்கையுடன்.

அவர்கள் பேசுவதை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தான் விக்ரம். சற்று நேரத்திற்கு முன்பு, விஸ்வரூபமெடுத்து நின்ற பிரச்சனை, இப்பொழுது ஒன்றும் இல்லாமல் போனது போலிருந்தது அவனுக்கு. இந்த விஷயத்தை இவ்வளவு எளிதாய் தீர்த்துவிட முடியுமா? அருகில் நின்றிருந்த தன் அம்மாவை கவனித்தான் அவன். சாவித்திரியின் முகம் சந்தேகத்தால் ஆட்கொள்ளப்பட்டு இருந்தது. காமினியின் பெயரைக் கேட்டவுடனேயே அவரது அஸ்திவாரம் ஆட்டம் கண்டது. அவர் இதுவரை பார்த்ததிலேயே, இந்த இரண்டு வயதான பெண்களைப் போல் ஆபத்தானவர்கள் வேறு யாருமல்ல. காமினியுடன் சேர்ந்து கொண்டு, நந்தினி என்ன திட்டம் தீட்டி கொண்டிருக்கிறார் என்பது அவருக்குப் புரியவில்லை. அவருக்கு படபடப்பாய் வந்தது. அதை கவனித்தார் நந்தினி.

"நீ என்ன சொல்ற சாவித்திரி? இது நல்ல ஐடியா தானே?" என்றார் நந்தினி, சாவித்திரி விக்ரமிடம் எதுவும் கூறுவதற்கு முன்.

தன் மாமியாரை மறுத்துப் பேசும் தைரியம் இல்லாத சாவித்திரி, ஆம் என்று தலையசைத்தார்.

"அப்படின்னா, நான் காமினிகிட்ட பேசி ஆகவேண்டியதை பார்க்கிறேன்"

சாவித்ரி சரி என்று தலையசைக்க, ஜோசியருக்கு பணம் கொடுத்து அவரை அனுப்பினார் நந்தினி.

அப்போது அங்கு வந்தார் விமலாதித்தன். அனைவரும் வரவேற்பறையில் இருந்ததை பார்த்து அவர் ஆச்சரியமடைந்தார். அவருடைய ஆச்சரியத்திற்கு காரணம், அவர்கள் ஒன்றாக இருந்தது அல்ல... அவர்கள் ஒன்றாக இருந்தும் அங்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது தான். நந்தினியும், விக்ரமும் ஒன்றாக இருந்தால், அங்கு ஏதாவது ஒரு பிரச்சனை முளைத்து விடுகிறது. ஆனால் இன்று வரவேற்பறை அமைதியாய் காணப்பட்டது.

அவர்கள் எதிர்பார்க்காத வண்ணம், அங்கிருந்து நடையைக் கட்டினார் நந்தினி. அது சாவித்திரிக்கு ஆச்சரியத்தை அளித்தது. நந்தினி, விமலாதித்தனை தன் அறைக்கு வரச் சொல்லி, இங்கு நடந்தவற்றை அவருடன் விவாதிப்பார் என்று எண்ணினார் சாவித்திரி. ஆனால் நந்தினி அப்படி செய்யவில்லை.  அவர் மனதில் என்ன இருக்கிறது?

"சின்னா, நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்" என்றார் விமலன்.

"சொல்லுங்க, டாட்"

"இந்தியாவில இருக்கிற வரைக்கும், நீ நம்ம ஆஃபீசுக்கு வந்து போயிகிட்டு இருக்கலாம் இல்லையா?"

"பொம்மியை மீட் பண்ணதுக்கு பிறகு நிச்சயம் வரேன்"

தன்னை காற்று போன பலூனை போல் உணர்ந்தார் விமலன்.

"எப்படி இருந்தாலும் அது நடக்கத் தானே போகுது?" என்றார் அவர்.

"நடக்கட்டும் டாட்" என்றான் பிடிகொடுக்காமல்.

சாவித்திரியை பார்த்த விமலன் தன் கண்களால் அவரிடம் கெஞ்சினார்.

"உனக்கு எப்போ விருப்பமோ அப்போ நீ ஆஃபீசுக்கு போ. யாரும் உன்னை எதுவும் கேட்க மாட்டாங்க. ஆனா அப்பப்போ போயி, அப்பாவுக்கு ஏதாவது ஆலோசனை கொடுத்தா, அது அவருக்கு உபயோகமா இருக்கும்  இல்லையா? நீயும் வீட்டில் போர் அடிச்சிக்கிட்டு தானே இருக்க?" என்றார் சாவித்திரி யோசனையுடன்.

"ஆமாம் சின்னா... நீ உன் விருப்பப்படி எதையும் செய்யலாம். எந்த கட்டாயமும் கிடையாது. இந்தியாவில இருக்கிற வரைக்கும் ஒரு டைம் பாஸ்க்காகவாவது வாயேன்..."

சரி என்று தலையசைத்துவிட்டு தன் அறைக்கு சென்றான் விக்ரம்.

"நான் தெரிஞ்சுக்க கூடிய சமாசாரம் ஏதாவது இருக்கா?" என்றார் விமலன், மாடிப்படியேறி கொண்டிருந்த விக்ரமை பார்த்தபடி.

"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல..."

"ஏதாவது பிரச்சனையா?"

ஆமாம் என்று தலையசைத்துவிட்டு அங்கு நடந்தவற்றை விமலனுக்கு விளக்கிக் கூறினார் சாவித்திரி.

விக்கித்துப் போனார் விமலன். எதற்காக அவருடைய அம்மா இப்படி எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்? என்ன செய்ய அவர் திட்டமிட்டிருக்கிறார்? விக்ரம் பிறந்த போதே அவனுடைய ஜாதகத்தை கணித்தாகிவிட்டது. அவனுடைய ஜாதகம் அமோகமாய் இருந்ததாய் தானே ஜோசியர் கூறினார்...? இதைப் பற்றி எல்லாம் அவர் அப்போது ஒரு வார்த்தை கூட கூறவில்லை. எதற்காக இந்த திடீர் நாடகம்? அதுவும் காமினி தேவியுடன்...

விமலனின் மனதில் பயம் துளிர்விட்டது. விக்ரம் மனம் வெறுக்கும் படி நந்தினி ஏதாவது செய்து விட்டால் என்ன செய்வது? விக்ரம் தன்னை எப்போதும் மன்னிக்க மாட்டான். தன் மகனை நிச்சயம் அவர் இழந்து விடுவார்.

"சின்னாவுடைய ஜாதகத்தில் இப்படிப்பட்ட பிரச்சனை இருக்கிறதா நீங்க என்கிட்ட எதுவும் சொல்லலையே?" என்றார் சாவித்திரி.

அவருக்கு பதில் சொல்லாமல் நின்றார் விமலன்.

"சின்னாவுக்கு கோபம் வர்ற மாதிரி தயவுசெய்து எதுவும் செய்யாதீங்க. அவனோட விருப்பத்துக்கு மாறா நீங்க ஏதாவது செஞ்சா, நான் உங்களை எப்பவுமே மன்னிக்க மாட்டேன்"

"அவங்க காமினியுடைய பேத்தியை நம்ம விக்ரமுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறாங்கன்னு நான் சந்தேகப்படுகிறேன்"

"என்னங்க சொல்றிங்க?"என்று படபடத்தார் சாவித்திரி.

"காமினி தேவியோட பேத்தியை நம்ம விக்ரமுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஏற்கனவே அம்மா நம்மகிட்ட பேசி இருந்தது உனக்கு ஞாபகம் இல்லையா?"

"ஆனா இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கும்?"

"அவங்க சாகப்போற எந்த பொண்ணையும் கூட்டிட்டு வர மாட்டாங்க. அதுக்கு பதிலா, காமினி தேவியுடைய பேத்தியை, அவ சாகப் போறதா சொல்லி, கொண்டு வந்து, அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சுடுவாங்கன்னு நினைக்கிறேன்"

சாவித்திரிக்கு உதறல் எடுத்தது.

"அதுக்கு பிறகு, அவ சாகர வரைக்கும், அவளை உன்னுடைய மனைவியா ஏத்துக்கிட்டு வாழ சொல்லி கேட்பாங்கன்னு நினைக்கிறேன்"

"அப்படி செஞ்சா, சின்னா மறுக்க மாட்டான்னு அவங்க நினைக்கிறாங்களோ?"

"அப்படித் தான் நினைக்கிறேன்"

"அடக்கடவுளே, காமினி தேவியுடைய பேத்தி எப்படி இருப்பான்னு நான் பார்த்ததே இல்லையே... இப்ப நான் என்ன செய்யுறது?" என்று புலம்பினார் சாவித்ரி.

விமலனின் முகம் பிரகாசம் அடைந்தது.

"இரு... என்கிட்ட அவ ஃபோட்டோ இருக்குன்னு நினைக்கிறேன்"

"நிஜமாவா? "

"ஆமாம் ஒரு தடவை அவங்க வீட்ல நடந்த பர்த்டே பார்ட்டிக்கு அம்மாவை விடுறதுக்கு நான் போயிருந்தேன். அப்போ நான் எல்லாரையும் சேர்த்து ஒரு போட்டோ எடுத்தேன். அதில் அவளும் இருக்கான்னு நினைக்கிறேன்"

"கொஞ்சம் தேடிப் பாருங்களேன்"

தனது கைப்பேசியில் இருந்த அந்த பெண்ணின் புகைப்படத்தை தேடினார் விமலன். அவர் தேடிய புகைப்படம் இருந்தது.

"இவ தான்... "

அந்தப் பெண்ணின் புகைப்படத்தை வாங்கி பார்த்தார் சாவித்திரி. அவள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவ்வளவு ஒன்றும் அழகாக இல்லை. ஆனால் அவள் அணிந்திருந்த படாடோபமான  உடை, அவள் ஒரு இளவரசி என்பதை எடுத்துக் கூறியது. அந்த புகைப்படத்தை தனது கைபேசிக்கு அனுப்பிக் கொண்டார் சாவித்திரி.

"ஒருவேளை அவங்க இந்த பெண்ணை கூட்டிக்கிட்டு வந்தா, சின்னா இவளை கல்யாணம் பண்ணிக்க நிச்சயம் நான் விடமாட்டேன்"

சரி என்பது போல் தலையசைத்தார் விமலாதித்தன். அது சாவித்திரிக்கு நிம்மதியை தந்தது. வழக்கமாய் செய்வது போல், விமலாதித்தன் அவர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

.....

லேண்ட் லைன் ஃபோனின் ரிசீவரை வைஷாலியை நோக்கி நீட்டினார் கோப்பெருந்தேவி. அவரிடமிருந்து அதைப் பெற்றுக்கொண்டு பேசினாள் வைஷாலி.

"எப்படி இருக்கீங்க அங்கிள்?"

"தேவன் கிருபையாலே நல்லா இருக்கேன் மா. நீ உன்னுடைய கிராஜுவேஷனில் 90% மார்க் எடுத்து இருக்கியாமே..." என்றார் டேவிட் ஆசிர்வாதம்.

"ஆமாம் அங்கிள்"

"கங்கிராஜுலேஷன்ஸ்"

"தேங்க்யூ அங்கிள்"

"நீயும் நம்ம கம்பெனியில ஜாயின் பண்ணலாமே? அம்மா கொஞ்சம் ரிலாக்ஸா இருப்பாங்க இல்லையா?"

"அம்மாவும் அதைத் தான் சொன்னாங்க. ஆனா நான் சொந்தமா முயற்சி பண்ணி பார்க்கலாம்னு இருக்கேன் அங்கிள்" என்றாள் தயக்கத்துடன்.

"நல்ல விஷயம் தான். ஆனா டேவிட் ஆசீர்வாதத்தோடு கதவு உனக்காக எப்பவும் திறந்திருக்கு. அதை நீ மறந்துடாத. எப்ப வேணும்னாலும் நம்ம கம்பெனில ஜாயின் பண்ணிக்கலாம்"

"தேங்க்யூ சோ மச் அங்கிள்" அழைப்பை துண்டித்தாள் வைஷாலி.

"டேவிட் அங்கிள் என்னை அவங்க கம்பெனில சேர சொல்றாரு" என்றாள் ரிசீவரை வைத்தபடி.

"நானும் அதைத் தான் சொல்றேன்"

"அம்மா, என்னை பொத்தி பொத்தி வைக்கணும்னு நினைக்காதீங்க. ஒரு காட்டு மரம் மாதிரி என்னை வளர விடுங்க" என்றாள் சுதந்திர பறவை போல கையை விரித்து.

"நீ எதுக்காக அங்க வந்து சேர மாட்டேன்கிறன்னு எனக்கு நல்லா தெரியும்"

ஏன்? என்பது போல் அவரை பார்த்தாள் வைஷாலி.

"தனியா, சுதந்திரமா உனக்கு பிடிச்சத செய்யணும்னு நினைக்கிற இல்லையா...?"

"பின்ன என்னம்மா? ஸ்கூலுக்கு போற குழந்தை மாதிரி, என் கையை பிடிச்சு கூட்டிட்டு போவீங்க. எனக்கு அதெல்லாம் சுத்தமா பிடிக்கல"

"உனக்கு நான் ரெண்டு மாசம் டைம் தரேன். அதுக்குள்ள உனக்கு நீ ஒரு வேலையை தேடிக்கலைன்னா, நீ என்கூட டேவிட் சார் ஆஃபீஸ்ல ஜாயின் பண்ணனும்"

"கடவுளே, ரெண்டு மாசத்துக்குள்ள எப்படியாவது எனக்கு ஒரு நல்ல வேலையை கொடுத்துடு"

பொன்னகரம்

விமலாதித்தனையும் சாவித்திரியும் அழைத்தபடி விக்ரமின் அறையை நோக்கி விரைந்தார் நந்தினி. விக்ரம் வெளியே கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தான்.

"விக்ரம்... "

"சொல்லுங்க பாட்டி. என்ன ஆச்சு?"

விமலனும் சாவித்திரியும் அங்கு வந்து சேர்ந்தார்கள்.

"காமினி எனக்கு போன் பண்ணா. மூளைச்சாவு அடஞ்ச ஒரு பெண்ணை அவங்க ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்காங்களாம்"

திகைப்புடன் அவரை பார்த்தான் விக்ரம். விமலனும் சாவித்திரியும் எச்சரிக்கை ஆனார்கள்.

"மூளை சாவு அடஞ்சவங்க பிழைக்க மாட்டாங்கன்னு நம்ம எல்லாருக்கும் நல்லா தெரியும்"

ஆம். அது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

"அந்தப் பொண்ணோட அம்மா, அவளுடைய உடல் உறுப்பை எல்லாம் தானம் செய்ய முடிவு பண்ணி இருக்காங்களாம். நம்மளுடைய ஜாதக பிரச்சனையை காமினி அவங்ககிட்ட சொன்னாளாம். அவங்க பெரிய மனசு பண்ணி இந்த சடங்குக்கு ஒத்துக்கிட்டாங்களாம்."

"நிஜமாவா? " என்றான் விக்ரம் ஆச்சரியமாக.

"ஆமாம். இப்ப தான் காமினி எனக்கு போன் பண்ணா. அந்த பொண்ணு கிட்ட தட்ட இறந்த மாதிரி தான். அவ பிழைக்க, ஒரு பர்சன்ட் கூட வாய்ப்பு இல்லையாம். இது ஒரு நல்ல சந்தர்ப்பம்னு தோணுது என்ன சொல்றீங்க?"

சாவித்ரிக்கு எதுவும் கூறுவதற்கு முன்,

"சரி செய்ங்க" என்றான் விக்ரம்.

சாவித்திரியும் விமலனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்கு கிலி பிடித்து கொண்டது. ஒருவேளை காமினியின் பேத்தியை நந்தினி காட்டினால், இந்த திருமணத்தை எப்படி தடுத்து நிறுத்துவது என்று புரியவில்லை அவர்களுக்கு.

"கிளம்புங்க போகலாம்... நான் நம்ம ஜோசியரை வர சொல்றேன்." என்றார் நந்தினி.

"இதுக்கு எதுக்கு அவர் வரணும்?" என்றான் விக்ரம்.

"இது ஒரு பரிகாரம் தானே...? அதுக்கு அவர் தான் வந்து செஞ்சுக் கொடுக்கணும்"

ஜோசியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரை மருத்துவமனைக்கு வரவழைத்தார் நந்தினி.

அனைவரும் ஆக்சிஜன் மருத்துவமனையை வந்தடைந்தார்கள். அவர்களுக்காக காத்திருந்தார் காமினி தேவி. மூளைச்சாவு அடைந்த அந்த பெண்ணை நோக்கி அவர்களை அழைத்துச் சென்றார் காமினி. விமலனின்  கையை, பயத்தில் அழுத்தமாய் பற்றினார் சாவித்திரி. காமினி தேவியின் பேத்தியின் முகத்தை ஒருமுறை நன்றாக நினைவு படுத்திக் கொண்டார்.

விமலனும் சாவித்திரியும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். அந்தப் பெண் காமினியின் பேத்தி அல்ல. இருவரும் பொருள் போதிந்த சிரிப்பு சிரித்துக் கொண்டார்கள்.

ஆனால்... ஆக்சிஜன் மாஸ்க் அணிந்து படுத்திருந்த அந்தப் பெண்ணை பார்த்தவுடன் விக்ரமின் முகம் பேயறைந்தது போலானது. நம்பமுடியாமல் வெறித்து பார்த்துக் கொண்டு நின்றான். இரண்டு நாட்களுக்கு முன் அவன் கடைத்தெருவில் பார்த்த அதே பெண்... யாராவது அவளை பொம்மி என்று அழைக்க மாட்டார்களா என்று அவன் எண்ணினான் அல்லவா, அதே பெண்... ஆம் அங்கு இருந்தது வேறு யாரும் அல்ல, வைசாலி தான்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top