6 ஜாதகம்
6 ஜாதகம்
தன் கையில் இருந்த வீட்டு சாவியை எடுத்து கதவைத் திறந்தாள் வைஷாலி. அவளுடைய அம்மா இன்னும் வீட்டுக்கு வரவில்லை போலிருக்கிறது. அவர் வேலைக்குச் செல்லும் பெண்மணி. தனியார் நிறுவனத்தில் அக்கவுண்டன்ட் ஆக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். அவர் ஒரு பிகாம் கிராஜுவேட் என்பதால், தன் கணவன் உயிரோடு இருந்த போது, அவருக்கு அவரது பணியில் பலமுறை உதவியிருக்கிறார்.
ஆம், நாம் பேசிக்கொண்டிருப்பது, யாருடைய உதவியுமின்றி, அலைக்கழித்த சுழல்களையெல்லாம் எதிர்த்து நின்று ஜெயித்துக் காட்டிய, சிவராமனின் மனைவி கோப்பெருந்தேவியை பற்றித் தான். வைஷாலியின் தைரியம் எங்கிருந்து வந்தது என்பது இப்பொழுது வாசகர்களுக்கு புரிந்திருக்கும். *தாயைப் போல் பிள்ளை... நூலைப் போல் சேலை* அல்லவா...? தன் அம்மாவின் போராட்டங்களை பார்த்து வளர்ந்தவள் என்பதால், இயல்பாகவே வைஷாலிக்கு போராட்ட குணம் அமைந்துவிட்டது. அதை கோப்பெருந்தேவி பாராட்டினாலும், சிலசமயம் பயப்படவும் செய்தார்.
வீராதித்தனின் மரணத்திற்கு பிறகு என்ன நடந்திருக்க கூடும் என்பதை கணிப்பது ஒன்றும் பெரிய கம்பசூத்திரம் அல்ல. விக்ரமை அமெரிக்காவுக்கு அனுப்பிய பிறகு, கோப்பெருந்தேவியையும் பொம்மியையும், அவனுடைய வாழ்க்கையை விட்டு அனுப்ப முயற்சித்தார் நந்தினி. அவருக்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என்பது நாம் அறிந்ததே. பொம்மியை அழைத்துக்கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறிய கோப்பெருந்தேவி, தனக்கு ஒரு வேலையை தேடிக்கொண்டு சுயகௌரவத்துடன் வாழ்ந்து வருகிறார்.
இப்பொழுது வைஷாலி என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று பார்ப்போம். அட, சமைத்துக் கொண்டு இருக்கிறாள்...! பரவாயில்லையே...! சமையலை முடித்துவிட்டு, குளித்துவிட்டு வந்தாள் வைஷாலி. தனது மடிக்கணினியை எடுத்து, வேலைவாய்ப்புகளை தேடிப்பிடித்து அதற்கு விண்ணப்பித்தாள். தனது அம்மாவின் சுமையை குறைக்க வேண்டும் என்பது தான் அவளது எண்ணம். யாரும் உதவிக்கு இல்லாத சூழ்நிலையில், வேலைக்கு சென்று கொண்டு, ஒரு பெண் குழந்தையை வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. அவர் பட்ட கஷ்டங்களை உணர்ந்தே இருந்தாள் வைஷாலி.
மூன்று வேலைகளுக்கு விண்ணப்பித்த பின், தனது மடிக்கணினியை லாக் அவுட் செய்தாள்.
அப்பொழுது யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்க ஓடிச்சென்று கதவை திறந்தாள். அவளுக்கு தெரியும், வந்திருப்பது அவளுடைய அம்மா தான் என்று. ஏதோ அவரை பார்த்து வெகு காலம் ஆகிவிட்டது என்பது போல அவரை கட்டி அணைத்துக் கொண்டாள் வைஷாலி.
"உன்னோட மார்க் ஷீட்டை வாங்கிட்டியா?" என்றார் கோப்பு எனும் கோப்பெருந்தேவி.
"வாங்கி, மூணு ஜாபுக்கு அப்ளையும் பண்ணிட்டேன்." என்றாள் வைஷாலி பெருமிதத்துடன்.
"குட்"
"சமையலையும் முடிச்சுட்டேன்"
"ஏன் வைஷு? நான் வந்து செஞ்சிருக்க மாட்டேனா?"
"நீங்களே நாள் முழுக்க வேலை செஞ்சுட்டு வரீங்க... வீட்டுக்கு வந்த பிறகும் வேலை செய்யனுமா?"
பெருமூச்சு விட்டார் கோப்பெருந்தேவி எவ்வளவு சொன்னாலும் இந்த பெண் கேட்பதே இல்லை.
"பரவாயில்லை விடுங்கம்மா"
"அது சரி, இன்னைக்கு ஹோட்டல் *த நியூ பேலஸ்ல* நீ என்ன செஞ்சுகிட்டு இருந்தே?"
அய்யய்யோ என்றானது வைஷாலிக்கு.
*வைஷு மாதா, எவனோ அம்மாகிட்ட பத்த வச்சுட்டான். நீ இன்னைக்கு செத்த... உங்க அம்மா உன்னை அப்படியே முழுசா முழுங்க போறாங்க* என்று முணுமுணுத்தாள் வைஷாலி.
"நான் உனக்கு ஏற்கனவே சொல்லியிருக்கேன், எந்த பிரச்சனையிலும் மாட்டிக்காம தவிர்க்க பாருன்னு..."
"நான் பிரச்சனையை முடிச்சிட்டேன் மா"
"அது முடிஞ்சிடுச்சுன்னு நினைக்காத. அவன் மறுபடி ஆளுங்களோட வந்தா என்ன செய்வ?"
"வந்தா நான் பாத்துக்குறேன்மா"
"எப்படி பாத்துக்குவ? சினிமாவுல வர மாதிரி அவங்க கூட சண்டை போடுவியா? இந்த காலகட்டத்துல பொம்பள பிள்ளைகளுக்கு எவ்வளவு கொடுமை நடக்குதுன்னு நம்ம தான் பார்க்கிறோமே... நம்ம தனியா இருக்கோம் வைஷூ..."
"நம்ம ஒன்னும் தனியா இல்ல... எனக்கு நீங்க இருக்கீங்க, உங்களுக்கு நான் இருக்கேன்"
"இது சுத்த முட்டாள்தனம். ஆம்பளைங்களை எதிர்த்து பொம்பளைங்க எதுவுமே செய்ய முடியாது"
"இன்னும் எத்தனை நாளைக்கு தான் மா உங்களை நீங்களே தாழ்த்திக்குவீங்க? நம்ம பொம்பளையா இருந்தா என்ன? நீங்க என்னை தனியா தான் வளர்த்தீங்க. தனியா தான் எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்தீங்க. இன்னுமா பொம்பளைங்களால எதுவும் செய்ய முடியாதுன்னு நினைச்சிக்கிட்டு இருக்கீங்க?"
"அது தான் எதார்த்தம். சொல்லும் போது சுலபமா சொல்லிடலாம். ஆனா அதை செயல்படுத்துறது அவ்வளவு சுலபம் இல்ல"
"சுலபமா இல்லாமல இருக்கலாம்... ஆனா முடியவே முடியாதுன்னு சொல்ல முடியாது இல்ல?"
"அளவுக்கு அதிகமான நம்பிக்கை என்னைக்குமே நல்லதில்ல"
"இந்த நம்பிக்கை எனக்கு உங்ககிட்ட இருந்து தான் வந்தது. எனக்கு நல்ல வாழ்க்கை கொடுக்கணும்னு நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டிங்க. உங்களைப் பார்த்து வளர்ந்த நான், தன்னம்பிக்கையோடு இருக்க மாட்டேனா?"
"அதனால தான் எனக்கு பயமா இருக்கு. எனக்கு உன்னை விட்டா வேற யாருமே இல்ல. தேவையில்லாத பிரச்சனைல மாட்டிக்காத"
"சரிமா... இனிமே எந்த பிரச்சினைக்கும் போகல. போதுமா?"
அவளை சந்தேக கண்ணோடு பார்த்தார் கோப்பெருந்தேவி.
"போய் குளிச்சிட்டு வாங்க மா. எனக்கு பசிக்குது" என்றாள் வைஷாலி.
சரி என்று தலையசைத்துவிட்டு சென்றார் கோப்பு. எப்படித் தான் அவள் செய்யும் வேலைகளை எல்லாம் அவளுடைய அம்மா கண்டுபிடித்து விடுகிறாரோ...! அவளைப் பின்தொடர யாரையாவது நியமித்திருக்கிறாரோ? அவள் எப்போதெல்லாம் தைரியமாக எதையாவது செய்கிறாளோ, அப்போதெல்லாம் அவளுடைய அம்மா அவளுக்கு அறிவுரை வழங்குகிறேன் என்று அவளது காதை *தீட்டி* எடுத்து விடுகிறார்.
பொன்னகரம்
யாரிடமோ தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார் நந்தினி.
"அவங்க எப்படி இருக்காங்க?"
"ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க"
"அவங்களை அப்பப்போ கவனிச்சிக்கிட்டே இரு"
"சரிங்க ராணியம்மா"
"இன்னும் கூட கோப்பெருந்தேவி வேலை செஞ்சுக்கிட்டு தான் இருக்காளா?"
"ஆமாம். டேவிட் ஆசீர்வாதத்துகிட்ட அவங்க இன்னும் வேலை செஞ்சுக்கிட்டு தான் இருக்காங்க. அவங்களை ரொம்ப மரியாதையா நடத்துறார் டேவிட் ஆசிர்வாதம்"
"அந்தப் பொண்ணு பொம்மி எப்படி இருக்கா?"
"அந்த பொண்ணு காலேஜ் முடிச்சிட்டா"
"அவ எக்காரணத்தைக் கொண்டும் விக்ரமை சந்திக்க கூடாது"
"கவலைப்படாதீங்க ராணியம்மா, சந்திதச்சாலும் அவங்களுக்கு அடையாளம் தெரியாது... அந்த பொண்ணு அவ்வளவு வளர்ந்துட்டா"
"ம்ம்ம்"
அழைப்பைத் துண்டித்தார் நந்தினி. அவர்கள் எண்ணியது சரி தான். விக்ரம் அவளை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. ஆனால், அவளை பார்த்த போது அவன் மனதில் ஏற்பட்ட உணர்வை தவிர்த்துவிட முடியாது அல்லவா...?
தீவிரமாய் சிந்தித்தார் நந்தினி. விக்ரமின் கோபத்தை அவரால் பொறுக்க முடியவில்லை. அவரை நோக்கி குரலை உயர்த்திய முதல் நபர் அவன் தான்.
அதோடு மட்டுமல்லாமல் விமலாதித்தன் கூட மனம் மாறி விட்டான். அந்த வேலையை சாவித்திரி தான் செய்திருக்க வேண்டும். விக்ரமின் வருகைக்குப் பிறகு சாவித்திரியிடம் நிறையவே மாறுதல் தெரிகிறது. ஆனால் அவர் நந்தினி தேவி... எப்படி அவர்களை கைக்குள் அடக்க வேண்டும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும்.
மறுநாள்
பொன்னகரத்தின் வரவேற்பறையில் தங்கள் குடும்ப ஜோசியருக்கு முன் அமர்ந்திருந்த நந்தினி, தனது சேலை தலைப்பால் வாயை பொத்திக் கொண்டு அழுது கொண்டிருந்தார். அவருக்கு அருகில் நின்றிருந்த சாவித்திரியும் சோகமாய் இருந்தார்.
"என்ன ஆச்சு?" என்றான் விக்ரம்.
அவனுக்கு பதில் கூறாமல் நந்தினி அழவே, அவன் தன் அம்மாவிடம் சென்றான்.
"என்ன விஷயம்ன்னு சொல்லுங்க"
ஜோசியரின் குரல் கேட்டு அவர் பக்கம் திரும்பினான் விக்ரம்.
"உங்க ஜாதகத்தை நினைச்சு அவா அப்ஸட் ஆயிட்டா"
"ஏன்? அப்ஸட் ஆகுற அளவுக்கு என்னுடைய ஜாதகத்தில் என்ன இருக்கு?" என்றான், சிறிதும் ஜாதகத்தில் நம்பிக்கை இல்லாத விக்ரம்.
"உங்கள் ஜாதகத்தில் பெரிய பிரச்சனை இருக்கு" ஜோசியர்.
"எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை" என்றான் முகத்தை திடமாய் வைத்துக்கொண்டு.
"ஆனா, நம்மளை பயமுறுத்தக் கூடிய விஷயங்களை நம்மளால ஒதுக்கித் தள்ள முடியாது" என்று அழுதார் நந்தினி.
"எது உங்களை பயமுறுத்துது?" என்றான் யோசனையுடன்.
"உங்க ஜாதகப்படி, உங்க முதல் மனைவி இறந்துடுவா" என்றார் ஜோசியர்.
"வாட் ரப்பிஷ்... " என்று பல்லைக் கடித்தான் விக்ரம்.
"ஆமாம்... என்னுடைய ஜோசியம் எப்பவுமே பொய்யாகாது"
"நான் இதையெல்லாம் நம்ப மாட்டேன்" என்று வீடு அதிரும்படி கத்தினான் விக்ரம்.
"உங்க தாத்தா எப்போ இறந்து போவார்னு கணிச்சி சொன்னதும் நான் தான்... உங்க அம்மாவுடைய ஜாதகத்தை பார்த்து, உங்களுடைய இருபத்தஞ்சாவது வயசு வரைக்கும் நீங்க அவங்க கூட இருக்க மாட்டீங்கன்னு சொன்னதும் நான் தான்..."
எச்சில் முழுங்கினான் விக்ரம்.
"உன்னை கல்யாணம் பண்ணி, பொம்மி இறந்துட்டா என்ன செய்றது? அவள் உயிர் விஷயத்துல நீ ரிஸ்க் எடுப்பியா விக்ரம்?" என்றார் நந்தினி.
தனது இதயத்தை யாரோ பிசைவது போல் உணர்ந்தான் விக்ரம். ஜோசியத்தில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட, இது பொம்மியின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் ஆயிற்றே...! அவளுக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால்?
"இதுக்கு எதுவுமே பரிகாரம் இல்லையா?" என்றார் நந்தினி.
"கிரக நிலவரம் சரியில்லை... அதனால எந்த பரிகாரமும் எடுபடாது"
தலை சுற்றி சோபாவில் மயங்கி சரிந்தார் நந்தினி. இல்லையில்லை... மயங்கியது போல நடிதார். ஓடிச்சென்று தண்ணீரை எடுத்து அவர் முகத்தில் தெளித்தார் சாவித்திரி. என்ன செய்வது என்று புரியாமல் அவரை பார்த்துக் கொண்டு நின்றான் விக்ரம். கண்ணை மெதுவாய் திறந்த நந்தினி மீண்டும் அழத் துவங்கினார்.
"இப்ப நான் என்ன செய்வேன்? என் புருஷனோட வார்த்தையை எப்படி நிறைவேத்துவேன்? அவரை நான் சொர்க்கத்தில் சந்திக்கும் போது அவருக்கு என்ன பதில் சொல்லுவேன்? பொம்மி இந்த வீட்டு மருமகளாக வரணும்னு அவர் ஆசைப்பட்டாரே... இந்த ஜாதக சமாச்சாரம் தெரிஞ்ச பிறகு, நான் எப்படி அவளை விக்ரமுக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன்? அவ செத்துப் போனா நான் என்ன செய்றது?"
விக்ரமை ஓரக்கண்ணால் பார்த்தபடி புலம்பினார் நந்தினி. விக்ரமின் முகத்தில் பய ரேகை படர்ந்தது. அந்தப் பெண்ணை பார்ப்பதற்கு முன்பே, அவன், அவளிடம் இவ்வளவு தூரம் கட்டுண்டு கிடக்கிறான் என்றால், அவளை சந்தித்து விட்டால் என்னாவது என்று நினைத்தார் நந்தினி. அந்தப் பெண்ணிடமிருந்து இவனை தள்ளி வைப்பது தான் தனக்கு நல்லது. கிட்டத்தட்ட தான் ஆடிய ஆட்டத்தில் ஜெயித்து விட்டதாய் நினைத்தார் நந்தினி. விக்ரமின் மருண்ட முகம், அப்படி அவரை நினைக்க வைத்தது. ஆனால், விக்ரம் உதிர்த்த அடுத்த வார்த்தைகள், அந்த மருட்சியை, விக்ரமின் முகத்திலிருந்து நந்தினியின் முகத்திற்கு மாற்றியது.
"ஒருவேளை இது தான் பிரச்சனைனா, நான் பொம்மியை கல்யாணம் பண்ணிக்கல. சந்தோஷமா வாழ கல்யாணம் அவசியமே இல்ல. அது ஒரு சடங்கு. அவ்வளவு தான்... நான் அவளை கல்யாணம் பண்ணிக்காம அவ கூட வாழ்ந்துட்டு போறேன்..." என்றான் தோள்களை குலுக்கியபடி.
அதிர்ச்சியுடன் எழுந்து நின்றார் நந்தினி. விக்ரம் இப்படி ஒரு யோசனையை முன் வைப்பான் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை.
"அது சரியில்ல. கல்யாணம் பண்ணிக்காம ஒரு பொண்ணு கூட வாழுறது தப்பு." என்று அலறினார் நந்தினி.
"இதெல்லாம் அமெரிக்காவில ரொம்ப சகஜம் பாட்டி." என்றான் சாதாரணமாக.
"இது அமெரிக்கா இல்ல... இந்தியா"
"அப்படின்னா நான் பொம்மியை கூட்டிக்கிட்டு அமெரிக்காவுக்கு போறேன். அங்கே யாரும் எங்களை எந்த கேள்வியும் கேட்க மாட்டாங்க"
வாயடைத்துப் போனார் நந்தினி. அவருக்கு என்ன கூறுவதென்றே தெரியவில்லை.
"என் ஜாதகத்துல பிரச்சனை இருக்கு. எனக்கு அதுல நம்பிக்கை இல்லனா கூட, பொம்மியோட உயிர் விஷயத்துல என்னால ரிஸ்க் எடுக்க முடியாது. அப்புறம் நான் என்ன செய்யுறது? பொம்மியை மட்டுமில்ல, வேற யாரையும், எப்பவுமே நான் கல்யாணம் பண்ணிக்க முடியாது. அப்படின்னா, *லிவ் இன்* ரிலேஷன்ஷிப் தான் ஒரே வழி. நான் சொல்றது சரி தானே மா?" என்றான் சாவித்திரியிடம்.
"ஆங்...? ஆங்..." என்றார் மகன் அளித்த அதிர்ச்சியிலிருந்து வெளிவராத சாவித்திரி. ஆனால் அது இன்ப அதிர்ச்சி... ஜோசியர் கூறியதை கேட்ட போது அவருக்கு ஏமாற்றமாய் போனது. ஏனென்றால், அவருக்கு நன்றாக தெரியும் இது நந்தினி ஆடும் ஆட்டம் என்று. ஆனால், அவர் எதிர்பாராத விதமாக, அவருடைய மகன், அவருடைய மாமியாரின் வாயை அடைத்து விட்டான்.
"நான் சொல்றது சரி தானே?" என்று மீண்டும் கேட்டான் விக்ரம்.
"சின்னா..." என்று ஏதோ சொல்ல முயன்றவரை தடுத்தான் விக்ரம்.
"உங்களுக்கு என்னை பத்தி தெரியும். நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா ஒரு பொண்ணு செத்து போவான்னா, நான் பொம்மியை மட்டுமில்ல, யாரையும் கல்யாணம் பணிக்க மாட்டேன். அப்படினா, நான் வேற என்ன செய்றது? சாமியாரா போயிடவா?"
"என்ன சின்னா இப்படி சொல்ற? நீ எங்களுக்கு ஒரே மகன். உன்னை எப்படி எங்களால் அப்படி விட முடியும்?"
"சரி, அப்போ நான் என்ன செய்றதுன்னு நீங்களே சொல்லுங்க"
"நமக்கு வேற வாழி இருக்குறதா தெரியல. நீ சொல்றது தான் ஒரே வழி. நீ பொம்மியை அமெரிக்காவுக்கு கூட்டிகிட்டு போயிடு. வழக்கம் போல நான் உங்களை அங்க வந்து பாத்துக்குறேன்" என்றார் சாவித்ரி சோகமாக.
என்ன கன்றாவி இது? என்பது போல நின்றார் நந்தினி. அவர் ஒன்றை நினைத்து ஒரு திட்டம் போட்டால், இங்கு ஏறுமாறாய் அல்லவா நடந்து கொண்டிருக்கிறது...! இந்த அம்மாவும் பிள்ளையும் அவர் எண்ணத்தை நிறைவேற்ற விட மாட்டார்கள் போலிருக்கிறதே... இப்போது அவர் என்ன செய்ய போகிறார்?
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top