50 அடுத்த திட்டம்

50 அடுத்த திட்டம்

விமலாதித்தன் வெளியே சென்ற போது, அவரை பின்தொடர்ந்து சென்றார் சாவித்திரி. சுதாகரை விக்ரம் பார்க்க, அவன் சென்று கதவருகில் நின்று கொண்டான், விமலாதித்தன் மீதும் சாவித்திரி மீதும் ஒரு கண் வைப்பதற்காக.  வைஷாலியின் கன்னத்தை மெல்ல தட்டினான் விக்ரம். அவள் உறங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தாள்.

"வைஷு, ரெண்டு பேரும் வெளியே போயிட்டாங்க" என்றான் மெல்லிய குரலில்.

கண்களைத் திறந்து கட்டிலின் மீது எழுந்தமர்ந்தாள் வைஷாலி.

"பாட்டி எங்க போனாங்க?" என்றாள்.

"நம்ம திட்டப்படி, வீட்டுக்கு தான்"

"பொன்னகரம் அனுப்பிட்டீங்களா?"

"ஆமாம், ஸ்டோர் ரூம்ல இருக்காங்க"

"அங்கிளையும், ஆண்டியையும் பார்த்தா ரொம்ப உறுத்தலா இருக்கு" என்றாள் கவலையாக.

"பாட்டியை நினைச்சு அவங்களும் உறுத்தலோட தான் இருக்காங்க. அதனால நீ உறுத்தலோட இருக்க வேண்டாம்"

"நம்ம எப்ப வீட்டுக்கு போக போறோம்?"

"சாயங்காலம். அது வரைக்கும் ரெஸ்ட் எடு"

"ரெஸ்ட்டா? " எதுக்கு?"

"சும்மா ஒரு ஜாலிக்கு" என்று சிரித்தான்.

"போய் ஆன்ட்டியை சமாதானப்படுத்துங்க"

"எப்படி அவங்களை சமாதானப்படுத்த முடியும்? அவங்க ரொம்ப அப்செட்டா இருக்காங்க" என்றான் கவலையாக.

அதைக் கேட்ட வைஷாலியும் கவலை அடைந்தாள்.

"என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு. மாம் நிச்சயம் சந்தோஷப்படுவாங்க"

"என்ன ஐடியா? "

"நம்ம உண்மையாவே அவங்களுக்கு பேர பிள்ளையை கொடுத்துட்டா அவங்க நார்மல் ஆயிடுவாங்க" என்றான் சிரிப்பை அடக்கியபடி.

அவன் மேற்கையில் விளையாட்டாய் குத்தினாள் வைஷாலி. அவளை  அணைத்து நெற்றியில் முத்தமிட்டான் விக்ரம்.

"சுதா, மாமும், டாடும் எங்க?"

"இங்க தான் உட்கார்ந்து இருக்காங்க"

"எப்படி இருக்காங்க?"

"ரொம்ப உடைஞ்சு போயிருக்காங்க"

"சரி, அவங்களை போய் காமினிகிட்ட பேச சொல்லு"

"சரி, நீங்க ஜாக்கிரதையா இருங்க அவங்க எப்ப வேணா இங்க வரலாம்"

"நான் பார்த்துக்கிறேன்"

நேராக விமலாதித்தனிடம் வந்த சுதாகர்,

"வைஷாலியோட டிஸ்சார்ஜ் பத்தி நான் காமினி ஆன்ட்டி கிட்ட கேட்க போறேன். நீங்களும் என் கூட வரீங்களா?" என்றான்.

சாவித்திரியை கேள்விக்குறியுடன் பார்த்தார் விமலாதித்தன். சாவித்திரி சரி என்று தலையசைக்க அவர்கள் காமினியின் அறைக்கு சென்றார்கள்.

விமலாதித்தன், சாவித்திரியுடன், சுதாகர் வருவதை பார்த்து எச்சரிக்கையானார் காமினி.

"உட்காருங்க" என்றார்.

விமலாதித்தனும், சாவித்திரியும் அமர்ந்துகொள்ள, அவர்களுக்கு பின்னால் நின்று கொண்டான் சுதாகர்.

"நாங்க எப்போ வைஷாலியை வீட்டுக்கு கூட்டிகிட்டு போகலாம்?" என்றான் சுதாகர்.

"சாயங்காலம் கூட்டிகிட்டு போகலாம்"

"அவளுக்கு ஹாஸ்பிடல் சப்போர்ட் தேவை இல்லையா?" என்றார் சாவித்திரி.

"இல்ல. நல்ல ஹெல்தியான சாப்பாடு கொடுங்க.  அது போதும்"

"வைஷாலி மறுபடியும் குழந்தை பெற வாய்ப்பு இருக்கா? இல்ல இந்த மருந்து அவளுடைய உடம்புல மோசமான விளைவை ஏற்படுத்தி இருக்கா?" என்றார் சாவித்திரி கவலையாக.

"நீங்க அதைப்பத்தி எல்லாம் கவலைப்படாதீங்க அவளுக்கு ஒன்னும் இல்ல. நல்லா கவனிச்சுக்கிட்டா அவ நிச்சயம் மறுபடியும் கன்சீவ் ஆவா"

"எப்படி கவனிச்சுக்கணும்?"

"அவளை ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணாதீங்க. தவறாம மருந்து சாப்பிட சொல்லுங்க. அன்பும் அரவணைப்பும் இருந்தா சீக்கிரமாவே குணமாயிடுவா." என்றார் சுதாகரை பார்த்து சிரித்தபடி.

"அவளை நான் பார்த்துக்கிறேன்" என்றார் சாவித்திரி.

"அவளுடைய சந்தோஷம் குறையிற மாதிரி நாங்க விட மாட்டோம். அவளை நாங்கள் சந்தோஷமாக பார்த்துக்கிறோம்" என்றார் விமலாதித்தன்.

சரி என்று மெல்ல தலையசைத்த காமினியை பார்த்து கள்ள புன்னகை பூத்தான் சுதாகர்.

"டியூட்டி டாக்டர் கிட்ட சொல்லி அவளுடைய டிஸ்டார்ஜ் பார்மாலிட்டியை கவனிக்க சொல்கிறேன்" என்றார் காமினி.

"சரிங்க டாக்டர்"

அவர்கள் காமினியின் அறையை விட்டு வெளியே வந்தார்கள். காமினியின் மீது ஒரு விசித்திரமான பார்வையை வீசிவிட்டு, அவர்களை சுதாகரும் பின் தொடர்ந்து வந்தான். நிம்மதி பெருமூச்சு விட்டு நாற்காலியில் சாய்ந்தார் காமினி. அவருக்கு வர இருந்த மிகப்பெரிய ஆபத்திலிருந்து அவர் தப்பி பிழைத்து விட்டார். அவருடைய மருத்துவ மனையின் நற்பெயரையும் கவுரவத்தையும் காப்பாற்றி ஆகிவிட்டது. இதன் பிறகு நந்தினி இடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார் காமினி.

இதற்கிடையில்,

"என்னோட மொபைல் எங்க?" என்றாள் வைஷாலி விக்ரமிடம்.

 தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து அதை எடுத்து அவளிடம் கொடுத்தான். அதில் சிம் 2 வை தேர்ந்தெடுத்து, நந்தினிக்கு போன் செய்தாள் வைஷாலி.

*டார்ச்சர்* என்று எழுதப்பட்டிருந்த பெயர் தனது கைபேசியில் ஒளிர்ந்ததை பார்த்து, எரிச்சல் அடைந்தார் நந்தினி. அவர் எச்சரிக்கை அடைந்தார். ஒருவேளை, அவர் இருக்கும் இந்த நிலைக்கு இந்த பெண் காரணமாக இருப்பாளோ? அவள் தான் அவரைப் பற்றி அனைத்தும் அறிந்து வைத்திருக்கிறாளே... இருக்கலாம். ஆனால், விக்ரமுக்கும், வைஷாலிக்கும் திருமணமான பின், அவள் ஏன் ஒருமுறை கூட ஃபோன் செய்யவில்லை? யோசித்தபடி அந்த அழைப்பை ஏற்றார் நந்தினி.

"யார் பேசுறது?" என்றார் அவருக்கு யார் பேசுவது என்று தெரியாததை போல.

"இதை நான் உன்கிட்ட எதிர்பார்க்கலை நந்தி... எனக்கு ரொம்ப பலமுள்ள எதிரி இருக்கிறதா நான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். நீ என்னுடைய எண்ணம் பொய்னு நிரூபிச்சுட்ட. எப்படி என்னை நீ மறக்கலாம்?"

"எதுக்காக இப்ப எனக்கு போன் பண்ண?"

"உன்னோட பிள்ளை உன்னை வீட்டை விட்டு தூக்கி வெளில வீசிட்டாராமே?"

பல்லை நரநரவென கடித்தார் நந்தினி.

"ஐயோ பாவம்... இப்படி ஒரு திருப்புமுனையை உன்னோட வாழ்க்கையில நீ எதிர்பார்த்து இருக்கவே மாட்ட. இல்ல?"

"இப்போ உனக்கு என்ன வேணும்?"

"உன்னுடைய குடும்ப கவுரவத்தை பத்தி எவ்வளவு பெருமை அடிச்சுகிட்ட...? வாயைத் திறந்தாலே, பணம், கௌரவம், ராயல் ஃபேமிலி, இத தானே பேசுவ...? இப்போ என்ன ஆச்சு? உன்னோட ஸ்டேட்டஸ் எங்க போச்சு? உன்னோட கவுரவம் உன்னை காப்பாத்தலையா? உன்னுடைய குல பெருமை உன்னோட அரண்மனையில் உனக்கு ஒரு இடத்தை கொடுக்கலையா?"

அவளது பேச்சை வெட்டி,

"நான் பொன்னகரத்தில் தான் இருக்கேன்"

"ஸ்டோர் ரூம்ல தானே? அடடா, என்ன ஒரு இடம்...!" என்றாள் நக்கலாக.

"என் பின்னாடி சுத்துறத தவிர உனக்கு வேற வேலை இல்லையா?"

"அதை விட இன்ட்ரஸ்ட் ஆன விஷயம் வேற என்ன இருக்கு? இதைவிட என்னை சந்தோஷப்படுத்த வேற விஷயமே இல்ல"

"என்னுடைய இப்போதைய நிலைமைக்கு நீயும் ஒரு காரணம்னு எனக்கு தெரியும்"

"ஆஹா! என்ன ஒரு கண்டுபிடிப்பு...! ஆமாம்... நான் தான்... உன்னோட இந்த நிலைமைக்கு நான் தான் முக்கிய காரணம் இப்போ என்ன செய்ய போற?"

"எதுக்காக இப்படி எல்லாம் செய்ற?"

"வேற எதுக்கு? சும்மா ஒரு ஜாலிக்கு தான்"

"உனக்கு தைரியம் இருந்தா, என் முன்னால வாடி பார்க்கலாம்"

"நான் உன் முன்னாடி வந்தா நீ தாங்க மாட்ட நந்தி பாப்பா"

"யார் நீ? போலீஸ் ஆஃபீஸரா?"

"ஹாஹா... அதுக்கு மேல" அழைப்பை துண்டித்தாள் வைஷாலி.

தனது கைபேசியை எரிச்சலுடன் பார்த்தார் நந்தினி. யார் அவள்? இத்தனை நாளாய் அவள் எங்கிருந்தாள்? இப்பொழுது திடீரென மறுபடி ஏன் வந்தாள்? தரையில் அமர்ந்து தன் தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டார் நந்தினி.

தன் புருவத்தை உயர்த்தி தன் அருகில் அமர்ந்திருந்த விக்ரமை பார்த்தாள் வைஷாலி. அவள் உச்சந்தலையில் கை வைத்து அவள் தலையை ஓர் ஆட்டு ஆட்டினான் விக்ரம்.

"கிரேசி உமன்..."

"உங்க பாட்டி மட்டும் என்னவாம், அவங்க கிரேசி இல்ல?"

"அவங்க மேட் உமன்." சிரித்தான் விக்ரம்.

"கவலைப்படாதீங்க. நம்ம அவங்களை கவனிச்சுக்கலாம்"

"அவங்களை நம்ம வீட்ல வச்சிருக்கிறது எனக்கு என்னமோ சரியா படல"

"சரி இல்ல தான். ஆனா அவங்க நம்ம கண்ணு முன்னாடி இருக்கிறது தான் நமக்கு நல்லது. ஏன்னா, அவங்களுடைய காண்டாக்ட் ரொம்ப பெருசு. நிறைய செல்வாக்கானவங்களை அவங்க தெரிஞ்சு வச்சிருக்காங்க. அவங்க பவர்ஃபுல்லானவங்கன்னு நம்ம ஒத்துக்கிட்டு தான் ஆகணும்"

"அதுக்காகத்தான் அவங்களை நம்ம வீட்ல வச்சிருக்கேன்"

"அவங்களுக்கு இருக்கிற பவரை ஒன்னும் இல்லாம செஞ்சதுக்கு பிறகு, அவங்களை என்ன செய்யணும்னு யோசிக்கலாம்"

"என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்" என்றான் விக்ரம்.

"என்ன செய்யப் போறீங்க?"

"சரியான நேரம் வரும் போது சொல்றேன் "

"என்கிட்ட சொல்ல மாட்டீங்களா?"

"அப்புறமா சொல்றேன்னு சொன்னேன்ல?"

"போங்க, நீங்க ரொம்ப மோசம்..."

"நம்ம ரொம்ப கிரிட்டிக்கலான நிலையில் இருக்கோம். அவங்க நம்ம வீட்ல இருக்கிற விஷயம் அப்பாவுக்கு தெரிஞ்சா, அவர் என்ன செய்வார்னு சொல்ல முடியாது. ஒருவேளை அவருடைய கோபம் உச்சத்தை தொடலாம். அப்படி இல்லன்னா, அவங்களுடைய மோசமான நிலையை பார்த்து, அவங்களை மன்னிச்சிடலாம்"

ஆமாம் என்று தலையசைத்தாள் வைஷாலி கவலையுடன்.

"அப்படி நடக்க கூடாதுன்னா, நம்ம நிச்சயம் அதுக்கான வேலையை செஞ்சாகணும்."

"என்ன செய்யணும்?"

"நம்ம முதல்ல வீட்டுக்கு போகலாம். அதுக்குப் பிறகு என்ன செய்யறதுன்னு சொல்றேன்" என்று புன்னகைத்தான் விக்ரம்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top