5 அந்தப் பெண்
5 அந்தப் பெண்
பொன்னகரம்
விக்ரம் பொன்னகரம் வந்த போது அது நிசப்தமாய் இருந்தது. பார்ட்டியும் முடிந்து விட்டிருந்தது. அவனது குடும்பத்தினர், பொன்னகரத்தின் விசாலமான வரவேற்பறையில் அவனுக்காக காத்திருந்தார்கள்.
"பொம்மியும், கோப்பு ஆன்ட்டியும் எங்க?" என்ற கேள்விக் கணையை தொடுத்தபடி உள்ளே நடந்தான் விக்ரம்.
விமலாதித்தனும், சாவித்திரியும் அமைதியாய் நந்தினி தேவியை பார்த்தார்கள். அவன் எங்கு சென்று வருகிறான் என்பது அவர்களுக்கு புரிந்து விட்டது. அவன் பொம்மியை சந்திக்கச் சென்றிருக்கிறான். முதல் முறையாக படபடப்பாய் உணர்ந்தார் விமலாதித்தன். அவர் விக்ரமை வெகு சுலபமாக எடுத்துக் கொண்டுவிட்டார். இந்த விஷயத்தில் அவன் இவ்வளவு பிடிவாதமாக இருப்பான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. வீராதித்தனுக்கு அவன் சத்தியம் செய்து கொடுத்த போது அவனுக்கு வயது வெறும் 14 தான். வீராதித்தன் மரணப்படுக்கையில் இருந்த போது, அவனிடம் இறுதியாய் ஒரு முறை சத்தியம் பெற்றுக்கொண்டு தான் உயிர் விட்டார் வீராதித்தன். சிவராமனின் மரணத்தின் போது அவர் விக்ரமிடம் சத்தியம் பெற்றுக் கொண்டிருந்த போதிலும், இறக்கும் தருவாயிலும் அதை அவனுக்கு நினைவுபடுத்தி விட்டு தான் சென்றார். விக்ரமின் உயர்ந்த குரலொலியை கேட்டபோது விமலாதித்தனின் எண்ணம் தடைபட்டது.
"அவங்க அந்த வீட்ல இல்ல..." என்று ஓலமிட்டான் விக்ரம்.
"ஏன்னா அவங்க இங்க இல்ல. அவங்க சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு போய் ரொம்ப வருஷம் ஆச்சு" முகத்தில் எந்த உணர்ச்சியும் என்று கூறினார் நந்தினி.
"ஆனா ஏன் போனாங்க?" என்றான் அதிர்ச்சியோடு.
"அவங்க சொந்தக்காரங்க எல்லாரும் இருக்கிற இடத்துக்கு போகணும்னு விரும்பினாங்க"
"சொந்தக்காரங்களா? நம்மளை விடவா அவங்க சொந்தக்காரங்க முக்கியமானவங்க?"
அந்த கேள்வியை எதிர்பார்க்காத நந்தினி திகைத்து நின்றார். அந்தக் கேள்வியின் உள்ளர்தத்தை புரிந்து கொண்ட விமலாதித்தனுக்கு வியர்த்துப் போனது.
"எதுக்காக அவங்களை போக விட்டீங்க? நீங்க ஏன் அவங்களை தடுத்து நிறுத்தல?"
"அவங்க போகணுமுன்னு சொல்லும் போது நம்ம எப்படி அவங்களை தடுக்க முடியும்? அவங்க முடிவுல நம்ம எப்படி தலையிட முடியும்?"
"தலையிட முடியும்... அவங்க நம்ம கூட தானே இருக்கணும்? அது தானே தாத்தாவுடைய ஆசை?"
"புரிஞ்சிக்க முயற்சி பண்ணு விக்ரம். நம்ம யாரையும் கட்டாயப்படுத்த முடியாது"
"சரி, அவங்க அட்ரஸை கொடுங்க"
"அவங்க அட்ரஸ் எங்ககிட்ட இல்ல"
"என்னது?" என்று முகம் சுளித்தான் விக்ரம்.
"ஆனா, என்னால அவங்க அட்ரஸை உனக்கு வாங்கி கொடுக்க முடியும். ரெண்டு நாள் டைம் கொடு"
அலுப்புடன் பெருமூச்சுவிட்டான் விக்ரம்.
"என்னால் இதை நம்ப முடியல. எப்படி நீங்க எல்லாரும் இவ்வளவு பொறுப்பில்லாம இருக்கீங்க? இது தான் நீங்க தாத்தா மேல வச்சிருக்கிற மரியாதையா? அவருடைய கடைசி வார்த்தைக்கு இந்த வீட்டில் மரியாதையே கிடையாதா?"
தலைகுனிந்தார் விமலாதித்தன், தன் மனைவியின் கூரிய பார்வையை எதிர்கொள்ள இயலாமல்.
"எதுக்காக இவ்வளவு டென்ஷன் ஆகுற விக்ரம்? அவங்களுடைய வட்டாரம் ரொம்ப சின்னது. அவங்க அட்ரஸை கண்டு பிடிக்கிறது ஒன்னும் அவ்வளவு கஷ்டமான விஷயம் இல்ல. நான் சொன்ன மாதிரி உனக்கு ரெண்டு நாள்ல அவங்க அட்ரஸை கொடுக்கிறேன்"
"ஒருவேளை அவங்களுடைய அட்ரஸை நீங்க எனக்கு கொடுக்கலைன்னா, என்னோட அட்ரஸை ஒரேடியா நீங்க தொலைக்க வேண்டி இருக்கும்"
"விக்ரம், நாங்க உன்னோட எதிரிங்க இல்ல. அதை நீ முதல்ல புரிஞ்சுக்கோ"
"நான் நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கேன் பாட்டி. அன்னைக்கும் சரி... இன்னைக்கும் சரி... தாத்தா எல்லோரைப் பத்தியும் என்கிட்ட சொல்லி என்னை எச்சரிக்கை பண்ணிட்டு தான் போனாரு"
"என்னை நம்பு விக்ரம்"
"நம்பிக்கை... டேம்... " முணுமுணுத்தபடி அங்கிருந்து சென்றான் விக்ரம்.
சிலை போல் நின்றிருந்தார் ராணி நந்தினி தேவி. விக்ரமை அவர் தப்புக்கணக்கு போட்டு விட்டார். அவன் அவனுடைய தாத்தாவின் மினியேச்சர். அதே கோபம்... அதே பிடிவாதம்... ஏதாவது செய்து அவனை தடுத்து நிறுத்தியாக வேண்டும். இல்லாவிட்டால், அவருக்கு பிடிக்காதவற்றை அவன் செய்து தான் தீருவான். விமலாதித்தனையும் சாவித்திரியும் திரும்பிப் பார்க்காமல் தன் அறைக்குச் சென்றார் நந்தினி.
......
தான் அணிந்திருந்த கோட்டை கழட்டி கோபமாய் தரையில் எறிந்தான் விக்ரம். எப்படி அவனுடைய குடும்பத்தினர் இவ்வளவு அசட்டையாக இருக்கிறார்கள்? இந்த திருமணத்தில் அவர்களுக்கு துளியும் விருப்பம் இல்லை என்று தெரிகிறது. இங்கு என்ன தவறு நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டாக வேண்டும். தன் அம்மாவுக்காக காத்திருந்தான். ஆனால் சாவித்திரி அவன் அறைக்கு வரவில்லை. அவருக்கு தெரியும், விக்ரம் கேட்கும் எந்த கேள்விக்கும் அவரால் பதில் கூற இயலாது என்று. எரிச்சலுடன் அமர்ந்திருந்தான் விக்ரம்.
மறுபுறம்...
தன் அறையில் செய்வதறியாது தவித்து கொண்டிருந்தார் விமலாதித்தன். நடப்பதை எல்லாம் பார்த்தால், தன் அம்மாவுக்கும், மகனுக்கும் இடையில் நடக்கும் பிரச்சனையில் சிக்கி கூழாக போவது அவர் தான். தன் அம்மாவின் மனதை யாராலும் மாற்ற முடியாது என்று அவருக்குத் தெரியும். தன் மகனின் மனதை மாற்றி விடலாம் என்று அவர் எண்ணியிருந்தார். ஆனால், அது அவ்வளவு சுலபமாக நடப்பதாக தெரியவில்லை... சுலபத்தில் நடப்பதாவது...! அதற்கு வாய்ப்பே இல்லை போல் தெரிகிறது. அவனை பார்க்கும் போது அப்படியே தன் தந்தையை பார்ப்பது போலிருந்தது விமலாதித்தனுக்கு. அவனுடைய செய்கைகள் ஒவ்வொன்றும் வீராதித்தனை நினைவுபடுத்துகிறது.
கதவருகில் நின்று கொண்டு தன்னையே பார்த்துக் கொண்டிருந்த சாவித்திரியின் மீது அவர் பார்வை சென்றது. கட்டிலில் அமர்ந்து தன் கையை பிசைந்தார். அவருக்கு எந்த முக்கியத்துவமும் வழங்காமல், சலவை செய்யப்பட்ட துணிகளை எடுத்து பீரோவில் அடுக்க தொடங்கினார் சாவித்திரி.
"உன்னால அவன் மனசை மாத்த முடியாதா?" என்றார் சாவித்திரியின் முகத்தை பார்க்காமல் விமலாதித்தன்.
"நான் எதுக்காக அவன் மனசை மாத்த முயற்சிக்கணும்? அதை நீங்களே செய்யுங்களேன்" என்றார் சாவித்திரி.
"நான் சொன்னா அவன் கேட்க மாட்டான்"
"நீங்க சொல்றது நியாயமானதா இருந்தா அவன் நிச்சயம் கேட்பான்"
"அவன் நினைக்கிறது நிச்சயம் நடக்காது சாவித்திரி"
"அதை நீங்க( என்பதை அழுத்தி) எப்படி சொல்ல முடியும்? எது முடியும், முடியாது என்கிறது அவங்கவங்க திறமையை பொறுத்த விஷயம். அவன் விக்ரம்... விமலன் இல்ல."
சாவித்திரியின் வார்த்தைகளில் இருந்த சூட்டை உணர்ந்தார் விமலன்.
"நீ என்னை பத்தி என்ன நெனச்சுக்கிட்டு இருக்க? நான் ஒரு கோழைன்னு நினைக்கிறியா? என் அம்மாவுடைய பேச்சைக் கேட்டு நடக்கிறது தப்பா?"
"சின்னாவும் அம்மா பேச்சைக் கேட்டு நடக்குற பிள்ளை தான். ஆனா அதுக்காக, அநியாயத்தை செய்யச் சொல்லி அவங்க அம்மா சொன்னா செய்ய மாட்டான்"
"என்னை என்ன தான் செய்ய சொல்ற?"
"உங்களால எதுவுமே செய்ய முடியாதா? உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க...? நீங்க தான் உங்க அம்மாவுடைய பலம். நீங்க மட்டும் சின்னா பக்கம் நின்னா, அவங்க நிச்சயம் அவங்க முடிவை மறுபரிசீலனை செய்வாங்க. உங்க அப்பாவுக்கு செஞ்சு கொடுத்த சத்தியத்தை நீங்க மறந்துட்டீங்கன்னு என்னால நம்பவே முடியல. அவர் மேலே நீங்க எவ்வளவு மரியாதை வச்சிருந்தீங்க? அவருடைய வார்த்தையை காப்பாத்த வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இல்லையா? அவருடைய வார்த்தையை நீங்க உதாசீனம் செஞ்சா, அவருடைய ஆன்மா சாந்தி அடையுமா? இவ்வளவு தானா நீங்க? ஒரு மனுஷன் செத்துட்டா அவர் மேலே வச்சிருந்த மரியாதை காத்துல பறந்துடுமா?"
"சாவித்திரி..." என்று கோபமாய் உறுமினார்.
தன்னை சுதாகரித்துக் கொண்டார் சாவித்திரி.
"தயவுசெய்து நம்ம பிள்ளையோட உணர்வுகளை புரிஞ்சுக்கோங்க. அவன் பக்கம் நில்லுங்க" கெஞ்சினார் சாவித்திரி.
"எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல"
"சின்னாவுக்கு உண்மை தெரிஞ்சா, நீங்க அவனை நிரந்தரமாக இழந்துடுவீங்க"
இருதலைக் கொள்ளி எறும்பாய் தவித்தார் விமலன்.
"இவ்வளவு நாள் உங்க அம்மாவுக்கு நல்ல பிள்ளையா இருந்தது போதும். இதுக்கப்புறம், நம்ம பிள்ளைக்கு நல்ல அப்பாவா இருக்க முயற்சி பண்ணுங்க. உங்க அம்மாகிட்ட பேசுங்க. அவங்ககிட்ட எப்படி பேசணும்னு உங்களுக்கு மட்டும் தான் தெரியும். நம்ம பிள்ளைக்காக ஒரு தடவை அதை செய்யுங்க"
"எங்க அம்மாவைப் பத்தியும் அவங்க குல கவுரவத்தை பத்தியும் தெரியாத மாதிரி நீ பேசுற"
"இது அதைப் பத்தியெல்லாம் யோசிக்கிற நேரம் இல்ல. நம்ம பிள்ளையை பத்தி மட்டும் யோசிங்க. அவன் வாழ வேண்டிய காலம் நிறைய இருக்கு. இதுக்கப்புறமாவது என் பிள்ளையை என் கூட இருக்க விடுங்க. தயவு செய்து, மறுபடியும் அவனை என்கிட்ட இருந்து பிரிச்சிடாதீங்க"
"அவன் உண்மையிலேயே நம்மளை விட்டு போயிடுவான்னு நீ நினைக்கிறாயா?"
"நிச்சயம் செய்வான். ஏன்னா, அவன் நம்ம இல்லாம தனியா வாழ்ந்து பழகிட்டான். உங்களால தான் அவனுக்கு அப்படி ஒரு பழக்கம் ஏற்பட்டுச்சு. தனியா இருக்கிறது, அவனுக்கு ஒன்னும் புதுசு இல்ல. அதனால நிச்சயம் அவன் அதை செய்வான்"
"அவன்கிட்ட உன்னால பேசிப் பார்க்க முடியாதா? எனக்காக...? நமக்காக...?"
"முடியாது... என் பிள்ளையுடைய பார்வையில நான் தப்பானவளா தெரிய விரும்பல. அவன் என்னை மதிக்கிறான். அதை எனக்கு சாதகமாக நான் பயன்படுத்த மாட்டேன். என் மேல அவன் வச்சிருக்கிற மரியாதையை என்னால கெடுக்க முடியாது. நீங்க என்ன வேணா செய்ங்க. ஆனா, இந்த விஷயத்துல நீங்க சொல்றதை நான் கேட்க மாட்டேன்"
அவருடைய உள்ள உறுதியை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் விமலாதித்தன். இது தான் முதல்முறை சாவித்திரி இப்படி பேசுவது. அவருக்குத் தான் அவருடைய மகன் பலம் சேர்த்து விட்டானே...!
மறுநாள் காலை
ஒரு முடிவோடு மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தார் விமலாதித்தன். விக்ரமைப் பற்றி தன் அம்மாவிடம் பேசுவது என்ற முடிவுக்கு வந்திருந்தார் அவர். சாவித்திரி சொல்வது சரி தான். தன் அம்மாவிடம் எப்படிப் பேசினால் காரியம் ஆற்றலாம் என்று அவருக்கு தெரியும். உண்மையைக் கூறப் போனால், சரியோ, தவறோ, யார் சொல்வதையும் நந்தினி கேட்க மாட்டார் என்பதும் அவருக்கு தெரியும். அவருக்கு என்ன வேண்டுமோ அதைத் தான் அவர் செய்வார். அவரை மாற்ற வீராதித்தனாலேயே இயலவில்லையே.
பூஜை செய்துகொண்டிருந்தார் நந்தினி. பூஜை அறைக்கு உள்ளே சென்று கண்ணை முடி நின்றார் விமலன். பூஜை முடித்து அவருக்கு பிரசாதம் கொடுத்தார் நந்தினி. தன் அம்மாவின் பாதம் தொட்டு விமலன் வணங்க, அவரை ஆசிர்வதித்தார் நந்தினி.
"மாம்..." என்று தயங்கினார் விமலன்.
"சொல்லு விமல்"
"என் கனவுல அப்பா வந்தார். நான் அவரை ஏமாத்திட்டதாகவும், அவருடைய வார்த்தைகளை மறந்துட்டதாகவும், கண்கலங்க என் மேல கோபப்பட்டார்"
தன் கையிலிருந்த பூஜை தட்டை இறுக்கமாய் பற்றினார் நந்தினி.
"மாம்... எனக்கு மனசு ரொம்ப வேதனையா இருக்கு. அப்பா நம்மளை விட்டு போனதா நான் நினைக்கல. அவர் இங்க தான் இருக்கார்... நம்மளை கவனிச்சுக்கிட்டு இருக்கார்... அவருடைய விருப்பத்தை நம்ம பூர்த்தி செய்ற வரைக்கும் அவருடைய ஆத்மா சாந்தி அடையாது..."
"நம்ம என்ன செய்யணும்னு நினைக்கிற?"
"அப்பா சொன்ன மாதிரி, சிவராமனுடைய மகளையே நம்ம வீட்டு மருமகளா... "
அதற்கு மேல் அவரை பேச விடாமல் தன் கையைக் காட்டி நிறுத்தினார் நந்தினி. ஒன்றும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். நிம்மதிப் பெருமூச்சு விட்டார் விமலன். வழக்கமாய் கோபப்படுவது போல், நந்தினி தேவி கோபப்படவில்லை அல்லவா...! ஆனால் அதற்காக, இந்த முடிவில் அவருக்கு சம்மதம் என்று அர்த்தமல்ல. அவர் யோசிக்கட்டும்.
இது அனைத்தும் ஒரு புறமிருக்க, இந்த கதை ஓட்டத்திற்க்கு வேண்டிய, முக்கியமான ஒரு நபரை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது... பொம்மி.
ஆனால், அவளை நாம் எங்கு சென்று தேடுவது? அவள் தான் சென்னையில் இல்லை என்று நந்தினி தேவி கூறி விட்டாரே...! ஆனால், நாம் ஏன் அவர் வார்த்தையை நம்ப வேண்டும்? நமக்கு நன்றாகவே தெரியும், அவர் விக்ரமின் முன், நல்லவரை போல வேடமிட்டு கொண்டிருக்கிறார் என்று. அவருடைய சுபாவமும் நாம் அறிந்ததே. பொம்மி தன் மருமகளாய் வருவதை அவர் ஒருபோதும் விரும்பியதில்லை. அப்படி இருக்கும்போது அவர் நம்பகத்தன்மை உள்ளவராய் எப்படி இருப்பார்?
ஒரு நிமிடம்... நமக்கு ஏற்கனவே பரிச்சயமான ஒருவரை நாம் இங்கு பார்க்கிறோம். அவள் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கிறாள். நேற்று மாலை விக்ரம் பார்த்த அதே பெண். ஆனால் இவளை பார்த்த உடன் விக்ரமுக்கு ஏன் வித்யாசமாய் தோன்றியது? அவனுடைய உள்ளுணர்வு எப்போதும் தவறாகாது என்று அவன் எண்ணவில்லையா? விக்ரமின் மனதில் ஏற்பட்ட உணர்வுக்கும் இவளுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா? யார் இந்த பெண்? பார்த்துவிடுவோமே...
நேற்று இருளில் நம்மால் அவளை சரியாய் கூர்ந்து கவனிக்க இயலவில்லை. இன்றும் தனது அடர்த்தியான கூந்தலை பிடி கிளப்பினால் அவள் அடக்கி வைத்திருந்தாள். கருப்பு நிற சுடிதாரில் கொள்ளை அழகாய் இருந்தாள். மிளகு சைஸ் கருப்பு நிற பொட்டும், லிப்ஸ்டிக் அணியாமல் இயற்கையாகவே சிவந்திருந்த அதரங்களும், மை தீட்டப்படாத புருவங்களும் அவளை அழகாய் காட்டின. வெகு ஸ்டைலாக இருந்தாள்.
அவளுடைய முகம் சட்டென்று மாறியது. பயம் அவள் முகத்தில் படர்ந்தது. அவளுக்கு எதிர்ப்புறம் நின்றிருந்த ஒருவன் அவளையே முறைத்து பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் கழுத்தில் அணிந்திருந்த ஸ்டீல் செயினும், ஃபங்க் கிராப்பும் நமக்கு அவன் மீது ஒரு நல்ல அபிப்பிராயத்தை வழங்கவில்லை. அவனுக்கு நாகரீகம் என்றால் என்னவென்றே தெரியாது என்பதை, அவனுடைய *பார்வை* கூறியது. அவனை கேள்விமுறையை இல்லாமல் தூக்கி *உள்ளே* வைத்து விடலாம் போல் இருந்தான். அவன் ஒரு கடைந்தெடுத்த பொறுக்கி என்பது அவன் நெற்றியில் எழுதி ஒட்டியிருந்தது. தன்னுடைய இரு சக்கர வாகனத்தை திருப்பிக் கொண்டு அந்தப் பெண்ணை நோக்கி சென்றான். பதட்டத்துடன் இங்குமங்கும் பார்த்தாள் அவள்.
"ஏய் குட்டி... ரொம்ப நேரமா நிற்கிற...?" என்று அவளைப் பார்த்து கண்ணடித்தான் அவன்.
அங்கிருந்து வேகமாய் நடக்க தொடங்கினாள் அவள். விடாமல் அவளை பின்தொடர்ந்தான் அவன். பின்னால் திரும்பி திரும்பி பார்த்தபடி ஓட்டமும் நடையுமாக அருகிலிருந்த ஒரு சிறிய ஹோட்டலை வந்தடைந்தாள். வந்த வேகத்தில், கணக்காளரின் மேஜையின் மீது மோதி கொண்டாள்.
"பார்த்துப் போ மா" என்றார் அவர்.
பயத்துடன் தன்னை பின்தொடர்ந்து வந்தவனை பார்த்துவிட்டு, அவள் உள்ளே ஓடினாள். கணக்காளரும் அவள் பார்த்த திசையில் பார்த்தார். அவளை பின்தொடர்ந்து வந்தவன் உள்ளே வந்து அவளை தேடினான். அவள் கழிவறையின் பக்கத்தில் நின்று கொண்டிருப்பதை பார்த்துவிட்டு, அவளை நோக்கி சென்றான் அவன். அவளுடைய மருண்ட பார்வை, அவனுடைய தைரியத்தை அதிகரித்தது.
அவன் அவளருகில் வந்தவுடன், அவன் எதிர்பார்க்காத வண்ணம், தனது துப்பட்டாவை, அவன் கையில் திணித்தாள் அந்தப் பெண்.
"அய்யய்யோ என்னை காப்பாத்துங்க... இவன் என்கிட்ட தப்பா நடந்துக்க பாக்குறான்..." என்று அவள் அலறிய அலறல் அங்கிருந்த அனைவரையும் ஒன்று திரட்டியது.
தன்னை அந்தப் பெண் புத்திசாலித்தனமாய் மாட்டி விட்டதை கண்ட அவன் மருண்டான்.
எதைப் பற்றியும் யோசிக்காமல், மக்கள் அவனை கும்மி எடுக்கத் தொடங்கினார்கள்.
"இவன் அந்த பொண்ணை துரத்திக்கிட்டு வந்ததை நான் பார்த்தேன். பாவம் அந்த பொண்ணு... ரொம்ப பயந்து போயிருக்கு" என்றார் கணக்காளர்.
முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டு நின்றாள் அவள்.
"அவனை போலீஸ்ல புடிச்சுக் குடுங்க" என்றார் ஒருவர்.
"வேண்டாம் சார்... ப்ளீஸ்... போலீஸ் ஸ்டேஷன்ல என்னையும் வர சொல்லுவாங்க..." என்றாள் அவள் சோகமாக.
"அந்த பொண்ணு சொல்றது சரி தான். நீ போம்மா. அவனை நாங்க பாத்துக்குறோம்" என்றார் ஒரு பெரியவர்.
"தேங்க்யூ அங்கிள்... நான் போகட்டுமா?"
"நீ கெளம்பு மா" என்றார் மேனேஜர்
உதை வாங்கிக் கொண்டிருந்த அவனை நோக்கி, இடது புருவத்தை உயர்த்தி, கள்ளச் சிரிப்பு சிரித்தாள் அந்தப் பெண்.
"யார்கிட்ட டா உன் திமிரை காட்ற? உன்னை மாதிரி எத்தனை பேரை நான் பார்த்திருப்பேன்? என்கிட்ட வாலாட்டுறவங்களுக்கு எப்படி பாடம் சொல்லி கொடுக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும்" என்று எண்ணியபடி, தனது துப்பட்டாவை ஸ்டைலாக தனது தோளில் போட்டுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள் அவள்.
அப்பொழுது அவளுக்கு கைபேசி அழைப்பு வர, தனது கைப்பையிலிருந்த கைபேசியை எடுத்து பேசியபடி நகர்ந்தாள். அப்போது அவளது கைப்பையில் இருந்த அவளுடைய கல்லூரி அடையாள அட்டை கீழே விழுந்தது. அதை கவனித்த ஒரு பெண், அதில் இருந்த அவளது பெயரை படித்துவிட்டு,
"வைஷாலி... " என்று அழைத்தாள்.
நமக்கு சுருக்கென்றது. பொம்மியின் உண்மையான பெயர் வைஷாலி என்று நாம் அறிந்ததே. விக்ரமின் மனதில் ஏற்பட்ட விசித்திர உணர்வுக்கு அர்த்தம் இருக்கிறதோ...! இந்த வைஷாலி நமது பொம்மியாக இருக்க வாய்ப்பிருக்கிறதா?
ஆம்... இந்த வைஷாலி தான் நமது பொம்மி.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top