49 நிஜ முகம்

49 நிஜமுகம்

இதற்கிடையில், பொன்னகரம்

தரைதளம் வந்த நந்தினி, விக்ரமும், சாவித்திரியும், வைஷாலியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதை கண்டு புன்னகைத்துக் கொண்டார்.

"லட்சுமி... " வேலைக்கார பெண்ணை அழைத்தார்.

"சொல்லுங்க ராணியம்மா"

"எங்க, வீட்ல ஒருத்தரையும் காணோம்?" என்றார் ஒன்றும் தெரியாத அப்பாவியை போல்.

"எல்லாரும் ஹாஸ்பிடலுக்கு போயிருக்காங்க அம்மா..."

"ஹாஸ்பிடலுக்கா? எதுக்கு?"

"வைஷாலி பாப்பாவுக்கு வயித்துவலி"

நேராக வெளியே வந்தவர், கார் ஓட்டுநரை, தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு பணித்தார்.

ஆக்ஸிஜன் மருத்துவமனை

விஷயத்தைக் கேட்டு உரைந்து நின்றார் விமலாதித்தன். அதை அவரால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. ஏனென்றால், நந்தினியை நம்பாமல் இருக்க விமலாதித்தனுக்கு காரணம் இல்லை.

அப்பொழுது நந்தினி உள்ளே நுழைவதை அனைவரும் பார்த்தார்கள். அவர்களது பார்வை விமலாதித்தன் பக்கம் திரும்பியது. தன் கோபத்தை கட்டுப்படுத்தியபடி நின்றிருந்தார் அவர்.

"என்ன ஆச்சு? ஏன் யாருமே என்கிட்ட எதுவும் சொல்லாம இங்க வந்துட்டீங்க?" என்றார் நந்தினி.

யாரும் அவருக்கு பதில் அளிக்கவில்லை.

"நான் கேட்கிறது உங்க காதுல விழலையா? எங்க வைஷாலி?"

"அவ ஆபரேஷன் தியேட்டர்ல இருக்கா... உங்க திட்டப்படியே... உங்க விருப்பப்படியே..."என்றார் விமலாதித்தன்.

"என்ன சொல்ற நீ?" என்று மென்று முழுங்கினார்

சாவித்திரி ஏதோ கூறப்போக அவர் கையைப் பற்றி தடுத்து நிறுத்தினான் விக்ரம். அவர் அவனைக் கேள்வியுடன் பார்க்க, அமைதியாய் இருக்குமாறு அவருக்கு சைகை செய்தான். இந்த விஷயத்தில் யாரும் பேசுவதை விட, விமலாதித்தன் இதை கையில் எடுக்க வேண்டும் என்று நினைத்தான் அவன்.

"நீங்க வைஷாலியை என்ன செஞ்சு இருக்கீங்கன்னு எங்களுக்கு தெரிஞ்சு போச்சு..."

"நான் என்ன செஞ்சேன்? அவளுக்கு பிரசாதம் தானே கொடுத்தேன்?"

"கரு கலைக்க தேவையான மருந்தை கலந்து கொடுத்தீங்க..."

அதைக் கேட்டு திடுக்கிட்டார் நந்தினி. அவர்களுக்கு எப்படி தெரிந்தது?

அவரிடம் லேப் டெஸ்ட் ரிப்போர்ட்டை கொடுத்தார் விமலாதித்தன்.

"நீங்க வைஷாலிக்கு கொடுத்த பிரசாதத்துல அபார்ஷன் கன்டென்ட் இருந்தது உறுதியாகி இருக்கு..."

அதிர்ச்சியுடன் காமினியை பார்த்தார் நந்தினி. நந்தினி எதுவும் பேசும் முன், காமினி பேசினார். தன்மீது பழி போடும் சந்தர்ப்பத்தை நந்தினிக்கு கொடுக்க அவர் விரும்பவில்லை.

"நான் தான் உன்கிட்ட இதெல்லாம் வேண்டாம்னு சொன்னேனே... அப்படி இருந்தும் ஏன் இப்படி செஞ்ச நந்தினி?" என்றார் காமினி.

அது நிச்சயம் நந்தினிக்கு மரண அடி தான்.

"அவங்க உங்க கிட்ட இதை பத்தி பேசினாங்களா?" என்றார் விமலாதித்தன்.

"ஆமாம், பேசினா. ஆனா நான் அதுக்கு ஒத்துக்கல" என்றார் காமினி.

"பொய் சொல்லாத" என்று கத்தியபடி அவரை அறைய முயன்றார் நந்தினி.

பின்னால் நோக்கி நகர்ந்த காமினி, தனது கைபேசியை எடுத்து, தன்னிடம் நந்தினி கருக்கலைக்க மருந்து கேட்ட குரல் பதிவை ஓடவிட்டார். அது விக்ரமுக்கு கூட மிகப் பெரிய ஆச்சரியத்தை தந்தது. அவன் அதை எதிர்பார்க்கவில்லை.

விமலாதித்தனின் கோபம் எல்லை கடந்தது. அதே கோபத்துடன் தன் அம்மாவை உற்று நோக்கினார். அவர் பேசிய கோபப்பார்வை நந்தினியை உலுக்கியது. வாழ்க்கையில் முதன்முறையாக நந்தினிக்கு மனதில் பயம் தோன்றியது.

"விமலா, நான் சொல்றதை கேளு. உனக்கு என்னைப் பத்தி தெரியாதா?"

"தெரியும்னு தான் நெனச்சேன். ஆனா நான் நினைச்சது தப்பு. எனக்கு உங்களைப் பத்தி ஒண்ணுமே தெரியல. நான் நெனச்ச மாதிரி நீங்க இல்ல..." தான் நின்று கொண்டிருப்பது மருத்துவமனை என்பதையும் மறந்து கத்தினார் விமலாதித்தன்.

"சத்தம் போட்டு பேசாதே" என்றார் நந்தினி வழக்கமான தொனியில்.

"அப்படித்தான் பேசுவேன். பேசினா என்ன செய்வீங்க?" என்று மேலும் கத்தினார் விமலாதித்தன்.

அவர் கோபத்தை பார்த்து பின் வாங்கினார் நந்தினி.

"உங்களைப் பார்க்கவே எனக்கு பிடிக்கல. உங்க முகத்துல முழிக்கிறதே பாவம்னு நினைக்கிறேன். இங்கிருந்து போயிடுங்க... இல்லன்னா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது... உங்களை போலீஸில் பிடிச்சு கொடுக்கிறதுக்கு முன்னாடி போயிடுங்க"

சிலை போல் நின்றிருந்தார் நந்தினி. இப்படி ஒரு மோசமான சூழ்நிலையை தன் வாழ்வில் எதிர்கொள்வோம் என்பதை அவர் கனவிலும் நினைத்திருக்கவில்லை. காமினி தனக்கு எதிராய் திரும்பி, இப்படி காலை வருவார் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. உடனடியாய் அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறினார்.

 ஆனால் அவர் எங்கு செல்வார்?

அங்கிருந்த இரும்பு நாற்காலியில், முற்றிலுமாய் உடைந்து நொறுங்கியவராய் அமர்ந்தார் விமலாதித்தன். அவரை கவனித்துக் கொள்ளுமாறு சாவித்திரிக்கு செய்கை செய்துவிட்டு, நந்தினியின் பின்னால் சென்றான் விக்ரம்.

தனக்கு முன்னால் வந்து நின்ற விக்ரமை பார்த்து பேச்சிழந்து நின்றார் நந்தினி. விமலாதித்தனை விட விக்ரம் தான் தன் மீது அதிக கோபத்துடன் இருப்பான் என்று அவர் எண்ணியிருந்தார்.

"நானும் உங்க மேல பயங்கர கோவத்துல தான் இருக்கேன். ஆனா அதுக்காக உங்களை நடுத்தெருவில் நிறுத்த எனக்கு விருப்பமில்ல"

"ஆனா விமலன்..."

"டாட் உங்களை பார்க்க கூட விரும்ப மாட்டார்... கொஞ்ச நாளைக்கு அவர் முன்னாடி வராதீங்க. ஸ்டோர் ரூம்ல இருங்க. அவருக்கு தெரியாம  உங்களுக்கு நான் சாப்பாடு கொண்டு வந்து தரேன்."

அவனை பரிதாபமாய் பார்த்தார் நந்தினி. இறுதியில் அவருக்கு மிஞ்சியது, வெறும் ஸ்டோர் ரூம் தானா?

சரி என்று தலையசைத்தார் நந்தினி.

கார் ஓட்டுநரை அழைத்து, நந்தினியை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு பணித்தான் விக்ரம்.

"பாட்டியை வீட்டுக்கு கூட்டிகிட்டு போங்க. அவங்க அங்க இருக்கிறது அப்பாவுக்கு தெரியக்கூடாது" என்று கட்டளையிட்டான்.

சரி என்று பவ்யமாய் தலையசைத்தார் ஓட்டுநர். அவருடன் சென்றார் நந்தினி.

மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியே சென்ற காரை பார்த்தபடி நின்றான் விக்ரம். எவ்வளவு தலைக்கனம்...! எவ்வளவு திமிர்...! எவ்வளவு அகங்காரம்...! உதிர்த்தவை அனைத்துமே இரக்கமற்ற வார்த்தைகள்...! இன்று அவருக்கு மிஞ்சியதோ வெறும் ஸ்டோர் ரூம்...! அவன் இதழில் அலட்சிய புன்னகை இழையோடியது.

உள்ளே வந்த விக்ரம் அங்கு தன் பெற்றோரை காணவில்லை. அவனிடம் அந்த சுதாகர்,

"அங்கிளும், ஆன்ட்டியும் வைஷாலி கூட இருக்காங்க. இப்போ தான் வைஷாலியை ரூமுக்கு மாத்தினாங்க"  என்றான்.

வைஷாலியின் அறைக்கு வந்த விக்ரம், விமலாதித்தனும் சாவித்திரியும் கண்ணீருடன் நின்றிருந்ததை கண்டான். வைஷாலி கண்களை மூடி படுத்திருந்தாள்.

"சின்னா, காமினி ஆன்ட்டி கிட்ட சொல்லி தேவையான எல்லா டெஸ்டையும் எடுக்க சொல்லு. நமக்கு வைஷாலியோட உண்மையான கண்டிஷன் என்னன்னு தெரியணும். அந்த மருந்து, அவளுடைய கர்ப்பப்பையில என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கோ தெரியல..." என்றார் விமலாதித்தன் கவலையுடன்.

தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் அழுதார் சாவித்திரி.

"மாம், ப்ளீஸ் அழாதீங்க. நீங்க தான் வைஷாலியுடைய பலம். நீங்களே இப்படி அழுதுகிட்டு இருந்தா, அவ நம்பிக்கை இழந்திடுவா" என்றான் விக்ரம்.

"எப்படி நான் அழாம இருக்க முடியும்? அவ சுமந்துகிட்டு இருந்தது நம்ம குடும்ப வாரிசு. அதை நம்மால காப்பாத்த முடியாம போனதை நினைக்கும்போதே வெட்கமா இருக்கு. நம்ம குடும்ப வாரிசுக்கு எதிரி, நம்ம வீட்டிலேயே இருந்ததை தாண்டா என்னால தாங்கவே முடியல." மீண்டும் அழுதார் சாவித்திரி.

சாவித்திரி கூறிய உண்மையை கேட்ட விமலாதித்தனுக்கு யாரோ தன் தலையில் கொள்ளி வைப்பது போல் இருந்தது.

"நான் கோப்பெருந்தேவிக்கு என்னடா பதில் சொல்லுவேன்? நம்மளை நம்பி தானே அவங்க நம்ம வீட்டுக்கு வைஷாலியை அனுப்பி வச்சாங்க? நம்ம மேல இருந்த நம்பிக்கையில நம்ம வீட்டை விட்டு தைரியமா கிளம்பி போனாங்களே... எந்த மூஞ்சை வச்சுக்கிட்டு நான் அவங்களை பார்ப்பேன்?"

"எங்க கல்யாணத்துக்கு பிறகு பாட்டி மனசை மாத்திக்கிட்டாங்கன்னு நினைச்சேன் மாம். ஆனா இல்ல... வைஷாலியை பழிவாங்கறதா நினைச்சுகிட்டு, அவங்க என்னை பழி வாங்கிட்டாங்க..." என்றான் விக்ரம் ஓரக்கண்ணால் தன் அப்பாவை பார்த்தபடி.

"நான் சொல்றதை கவனமா கேளுங்க" என்றார் விமலாதித்தன்.

 இருவரும் அவரைப் பார்க்க,

"எக்காரணத்தைக் கொண்டும் *அவங்க* நம்ம வீட்டில நுழையக் கூடாது"

சாவித்திரி முகம் சுளித்தார் அவர் *அவங்க* என்று குறிப்பிட்டது யாரை?

"நம்ம வீட்ல இனிமே அவங்களுக்கு இடமில்ல"

"ஆனா அது அவங்க வீடு டாட்" என்றான் விக்ரம்.

"யாரு சொன்னது? அதையெல்லாம் எப்பவோ எங்க அப்பா நம்ம பேருக்கு மாத்தி எழுதிட்டாரு. எனக்கும், எனக்குப் பிறகு என்னுடைய மகனுக்கும் தான் அதில் முழு உரிமை இருக்கிறதா அவர் உயில் எழுதி வச்சுட்டு தான் இறந்தார்"

அதைக் கேட்டு ஆச்சரியமடைந்தான் விக்ரம். இந்த விஷயம் அவனுக்கு புதிது. நந்தினி ஆடிய ஆட்டத்தையும், அவருடைய அலட்டலையும் பார்த்து அத்தனை சொத்துக்களும் அவர் பெயரில் இருப்பதாகத்தான் அவன் எண்ணிக் கொண்டிருந்தான். நிச்சயம் விமலாதித்தன் பாராட்டப்பட வேண்டியவர் தான். அவர் தன் அம்மாவின் மீது வைத்திருந்த அன்பும் மரியாதையும் களங்கமற்றது. அனைத்து சொத்துக்களும் தன் பெயரில் இருக்கும் பொழுது கூட, அவர் தன் அம்மாவின் மீது வைத்திருந்த மரியாதை சிறிதும் குறையவில்லை. தன் அப்பாவின் மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டது விக்ரமுக்கு.

"அப்படின்னா அவங்க செலவுக்கு என்ன செய்வாங்க?"

"அவங்க தன்னை தாழ்வார் நினைச்சிட கூடாதுன்னு, நான்தான் சில கோடிகளை அவங்க பேர்ல பேங்க்ல டெபாசிட் பண்ணி வச்சிருந்தேன்"

"ஒ..."

"நான் அவங்களை ரொம்ப நம்பினேன்"

"அவங்களுக்கு எல்லாரையும் விட கவுரவம் தான் முக்கியம்"

"மண்ணாங்கட்டி... என்னோட பேரக்குழந்தையை விடவா அவங்களுக்கு கவுரவம் முக்கியமா போச்சு?" என்றார் வேதனையுடன்.

"வைஷாலிக்கு என்ன பதில் சொல்றதுன்னு எனக்கு புரியல டாட். இதுக்கு தான் அவ என்னை கல்யாணம் பண்ணிக்கவே பயந்தா. பாட்டி இப்படி செஞ்சிருக்க கூடாது"

கட்டிலுக்கு சென்று, வைஷாலியின் பக்கத்தில் அமர்ந்து, மெல்ல அவள் தலையை வருடி கொடுத்தான். தன் கண்ணில் பொங்கி வந்த கண்ணீரை தன் மனைவி மகனிடம் காட்ட விரும்பாமல் அங்கிருந்து வெளியேறினார் விமலாதித்தன்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top