47 தீர்க்கமான திட்டம்
47 தீர்க்கமான திட்டம்
தன் மனதில் எழுந்த திட்டத்தை எப்படி செயலாற்றுவது என்பதை பற்றி யோசித்தபடி தன்னுடைய அறையில் இப்படியும் அப்படியும் உலவி கொண்டிருந்தார் நந்தினி. தன் குடும்ப வாரிசு, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒரு சாதாரண பெண்ணின் கருவில் வளர்வதை அவர் விரும்பவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, அந்தப் பெண், தன் இல்லத்தில் அடைந்து கொண்டிருக்கும் உரிமையுடன் கூடிய மரியாதையை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. தன் கண் முன்னால் நடந்து கொண்டிருக்கும் அனைத்து இம்சைகளையும் நிறுத்த வேண்டும் என்று நினைத்தார் அவர்.
அதனால் உடனடியாக காமினிக்கு ஃபோன் செய்தார். அந்த அழைப்பை உடனே ஏற்றார் காமினி, விக்ரமுக்கு தன் மீது சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதற்காக.
"சொல்லு நந்தினி"
"என் குடும்ப வாரிசு, வைஷாலி வயித்துல வளருவதை நான் விரும்பல"
"நான் தான் ஏற்கனவே சொன்னேனே... நான் கொடுத்த மருந்து அவள் உடம்புல வேலை செய்யல"
"நான் அதைப் பத்தி பேசல. அந்தக் கருவை உடனடியா கலச்சாகணும். அதை எப்படியாவது செஞ்சே ஆகணும்"
அமைதியாய் இருந்தார் காமினி.
"கருவை கலைக்கிற மாத்திரை குடு"
"இல்ல. என்னால முடியாது. நான் மாட்டிக்கிட்டா, என் மானம், மரியாதை எல்லாம் போயிடும்"
"நீ எதுவும் செய்ய வேண்டாம். என்கிட்ட குடு. நான் பாத்துக்குறேன்"
"ம்ம்ம்"
"ஒருவேளை, அந்த மருந்தை ஆம்பளைங்க சாப்பிட்டா ஏதாவது ஆகுமா?"
கருக்கலைக்கும் மருந்தை ஆண்கள் சாப்பிடுவதா...? முகம் சுருக்கினார் காமினி.
"ஆம்பளைங்க ஏன் அதை சாப்பிட போறாங்க?"
"வைஷாலி சாப்பிடுற எல்லாத்தையும், விக்கிரமும், விமலனும் டேஸ்ட் பண்றாங்க"
"ஒ..."
"அதனால தான் கேட்டேன்"
"வயிற்று வலி, லேசான தலைவலி வர வாய்ப்பு இருக்கு"
"அது பரவாயில்லை. எனக்கு அந்த மாத்திரையை அனுப்பி வை"
"எப்படி அனுப்புறது?"
"நாளைக்கு காலையில நான் கோவிலுக்கு போறேன். நீயும் வரியா?"
"இல்ல, இல்ல, என்னால வர முடியாது" உடனடியாக மறுத்தார் காமினி.
"சரி. அதுக்கு ஏன் இவ்வளவு பதறுற?"
"நாளைக்கு காலையில எனக்கு ஒரு சர்ஜரி இருக்கு. நான் காலையில இங்க இருந்தாகணும். அதனால தான்..."
"சரி. அப்படின்னா யார்கிட்டயாவது கொடுத்து அனுப்பு"
" சரி"
"இந்த தடவை, ஸ்ட்ராங்கா வேலை செய்ற மாதிரி நல்ல மருந்தா கொடுத்து அனுப்பு"
"ம்ம்ம்"
அழைப்பு துண்டிக்கப்பட்டது.
காமினி உடனடியாக விக்ரமுக்கு ஃபோன் செய்தார். அவனும் தாமதிக்காமல் அந்த அழைப்பை ஏற்றான்.
"விக்ரம்..."
"சொல்லுங்க"
"குழந்தையை கருக்கலைப்பு செய்ய நந்தினி என்கிட்ட மாத்திரை கேட்டிருக்கா"
கோபத்தில் பல்லை நரவென கடித்தான் விக்ரம். இறுதியில், அவன் எதிர்பார்த்தது போலவே, எவ்வளவு கீத்தரமாய் இறங்க முடியுமோ இறங்கிவிட்டார் நந்தினி.
"அவங்க எப்ப கேட்டாங்க?"
"இப்போ தான். அவ காலை கட் பண்ணிட்டு, உடனே உனக்கு போன் பண்றேன்"
"நீங்க அவங்களுக்கு என்ன சொன்னீங்க?"
"நான் சரின்னு சொல்லிட்டேன்"
"அவங்களுக்கு மாத்திரையை எப்ப கொடுக்க போறீங்க?"
"நாளைக்கு காலையில"
"சரி "
"நான் இப்ப என்ன செய்யணும்?"
"வைட்டமின் டாப்லெட் கொடுங்க"
"சரி"
விக்ரம் அழைப்பை துண்டிக்க முனைந்த போது,
"விக்ரம்..."
"சொல்லுங்க"
"நான் நீ சொல்றபடி தான் எல்லாத்தையும் செஞ்சுக்கிட்டு வரேன். தயவு செஞ்சு என்னோட மரியாதை கெட்டு போற மாதிரி எதுவும் செஞ்சுடாத"
"நான் எதுவும் செய்யாம இருக்கணும்னா, நீங்க உங்க நந்தினியை கைவிட்டாகணும்"
"நிச்சயம் செய்றேன். எனக்கு, என்னோட ஹாஸ்பிடலும், ரெபுட்டேஷனும் தான் எல்லாத்தையும் விட முக்கியம். ஏன்னா, நான் இந்த நிலைக்கு என்னுடைய ஹாஸ்பிடலை கொண்டுவர ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன்"
"ஃபைன்..."
அழைப்பை துண்டித்தான் விக்ரம். அடுத்த நிமிடம் அவனது கைபேசி, மீண்டும் மணியடித்தது. அந்த அழைப்பு சுதாகரிடம் இருந்து தான் வந்தது.
"சொல்லு சுதா"
"விக்ரம், பாட்டி கருவை கலைக்க பிளான் பண்ணி இருக்காங்க"
"காமினி இப்ப தான் ஃபோன் பண்ணி சொன்னாங்க"
"அப்படியா? அவங்க அவ்வளவு உண்மையானவங்களா?"
"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. அவங்க தன்னை சேஃப்காட் பண்ணிக்கிறாங்க"
"அதுவும் சரி தான்."
"உனக்கு தான் வைஷாலி கர்ப்பமா இல்லங்குற விஷயம் தெரியுமே, அப்படி இருக்கும் போது எதுக்காக இவ்வளவு பதட்டமா இருக்க?" என்றான் விக்ரம்.
"நான் அதை நினைச்சு பதட்டமா இல்ல. எனக்கு விளைவுகளை நினைச்சா தான் கவலையா இருக்கு" என்ற சுதாகரின் குரலில் கவலை தெரிந்தது.
"ஆமாம். டாட் தான் ரொம்ப உடைஞ்சு போயிடுவாரு"
"எனக்கு ஒரு விஷயம் தான் புரியவே மாட்டேங்குது"
"என்னது?"
"பாட்டி, கோவிலுக்கு போறாங்க, வீட்லயும் பூஜை செய்றாங்க, இப்படிப்பட்ட கீழ்த்தரமான வேலையெல்லாம் செய்யும் போது அவங்களுக்கு உறுத்தாதா? அந்தக் கடவுளை பார்க்கும் போது, கடவுள் தண்டிக்கும்னு அவங்களுக்கு மனசுல பயமே வராதா? அவங்க மனசுல இருக்கிறது என்ன மாதிரியான பக்தி? உண்மையிலேயே கடவுள் இருக்குன்னு நம்பி தான் அவங்க சாமி கும்பிடுகிறார்களா?"
"அந்த சந்தேகம் எனக்கும் இருக்கு. அதனால தான், கடவுள் பெயரால தன்னை நல்லவனா காட்டிக்கணும்னு நினைக்கிறவங்களை நான் நம்புறதே இல்ல. அவங்களைப் பொறுத்த வரைக்கும், கடவுள் பக்தி அப்படிங்கிறது, அவங்களுடைய சுய ரூபத்தை மறைக்க பயன்படுத்துற போர்வை. அதுக்குள்ள ஒளிஞ்சிகிட்டா, என்ன வேணா செய்யலாம்னு அவங்களுக்கு நினைப்பு. கடவுள் பெயரை வைச்சி மக்களை ஏமாத்திக்கிட்டு திரியிறாங்க"
"உங்க பாட்டியும் அப்படிப்பட்ட ஒருத்தர் தான்"
"ஆமாம்"
"நம்ம அடுத்து என்ன செய்யப் போறோம்?"
"தான் செஞ்ச பாவத்துக்கான பலனை பாட்டி அனுபவச்சு தான் ஆகணும். அதை தான் செய்ய வைக்க போறோம்"
"வைஷாலியை கவனமா இருக்க சொல்லு"
"நான் பாத்துக்குறேன்"
"டேக் கேர் "
அழைப்பை துண்டித்துக் கொண்டார்கள்.
அப்பொழுது, இரவு உடையை மாற்றிக் கொண்டு, குளியலறையை விட்டு வெளியே வந்தாள் வைஷாலி. அவள் கையைப் பிடித்து கட்டிலின் மீது அமர வைத்தான் விக்ரம்.
"நம்ம ரொம்ப நாளா எதிர்பார்த்துகிட்டு இருந்த விஷயம், நாளைக்கு நடக்க போகுது"
"என்னது?"
"நாளைக்கு பாட்டி பிடிபட போறாங்க"
"எப்படி?"
"அவங்க காமினி கிட்ட அபாஷன் பில்ஸ் கேட்டிருக்காங்க"
அதைக் கேட்ட வைஷாலியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.
"நெஜமாவே அவங்க கேட்டாங்களா?"
ஆமாம் என்று தலையசைத்தான் விக்ரம். வைஷாலி மேலும் ஏதோ சொல்ல போக அவளை கையை காட்டி தடுத்தான்,
"நாளைக்கு நான் வீட்டில இருக்க மாட்டேன்"
"ஏன்?"
"அவங்க செய்யப் போற வேலைக்கு நான் தடையா இருக்கக் கூடாது"
திக் பிரம்மை பிடித்தவளை போல் அவனை பார்த்தாள் வைஷாலி.
"நாளைக்கு அவங்க உனக்கு எதையாவது சாப்பிட கொடுத்தா..."
அவன் பேச்சின் இடையே புகுந்து,
"நான் சாப்பிட மாட்டேன்" என்றாள் வைஷாலி.
"கண்டிப்பா சாப்பிடணும்" என்றான் விக்ரம்.
"என்ன சொல்றீங்க?" என்றாள் திகிலுடன்.
"காமினி கொடுக்கப் போறது வெறும் வைட்டமின் டேப்லெட் தான். அதனால அதைப் பத்தி நீ கவலைப்பட வேண்டியதில்ல"
சரி என்று தலைகசைத்தாள் வைஷாலி. நாளை அவள் நடந்து கொள்ள வேண்டிய முறைகளை அவளிடம் விவரித்தான் விக்ரம்.
"நீங்க நிஜமாகவே இதை செய்யப் போறீங்களா?" என்ற வைஷாலியின் குரல் நடுக்கத்துடன் ஒலித்தது.
"நமக்கு வேற வழி இல்ல. நாளைக்கு இதை நம்ம செய்யாம விட்டுட்டோம்னா, வாழ்க்கை முழுக்க அதை நினைச்சு வருத்தப்பட வேண்டி இருக்கும்"
"ஆனா காமினி நம்ம கண்ட்ரோல்ல தானே இருக்காங்க?"
"எத்தனை நாளைக்கு இருப்பாங்கன்னு நினைக்கிற? அவங்க எப்ப வேணாலும் மாறலாம்... இல்லன்னா, காமினி மேல நம்பிக்கை போய், பாட்டி டாக்டரையே கூட மாத்தலாம்... நம்ம இந்த விஷயத்துல கேர்லெஸ்ஸா இருக்க முடியாது"
அவன் கூறுவது முற்றிலும் சரி என்று தோன்றியது வைஷாலிக்கு.
"ஆனா, அங்கிளும், ஆன்ட்டியும் ரொம்ப அப்செட் ஆயிடுவாங்க..."
"நம்ம குழந்தைக்கு உண்மையிலேயே ஏதாவது ஆனா, அவங்க அதுக்கு மேல ரொம்ப அப்செட் ஆவாங்க..."
அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் வைஷாலி.
"நம்மால இதை தவிர்க்கவே முடியாதா?"
"முடியும்... நம்ம நினைக்கிற மாதிரியே இந்த குடும்பத்தில் இருக்கிற ஒவ்வொருவரும் நினைச்சா தான் அது சாத்தியம். நம்மால மட்டும் எதுவும் செஞ்சிட முடியாது"
அவள் முகத்தை தன்னை நோக்கி உயர்த்தினான் விக்ரம்.
"தேவையில்லாம உன்னை ஸ்ட்ரெஸ் பண்ணிக்காத. எல்லாமே உன் கையில தான் இருக்கு. அதை மறந்துடாத. நீ ஏதாவது சின்னதா தப்பு செஞ்சாலும், நம்மளுடைய மொத்த திட்டமும் பாழாயிடும்"
சரி எனறு தலையசைத்தாள் வைஷாலி.
"படுத்து தூங்கு. நீ நாளைக்கு காலையில ஃபிரஷா இருக்கணும். எப்பவும் போலவே..."
சரி என்று தலையசைத்தாள் வைஷாலி. விக்ரமும் படுத்துக்கொள்ள, அவன் நெஞ்சில் தலை சாய்த்து அவன் இடையை வளைத்துக் கொண்டாள் வைஷாலி. அவளை தன் கரங்களால் ஆதரவாய் சுற்றி வளைத்துக் கொண்டான் விக்ரம். அவர்கள் இருவரும் உறங்கவும் இல்லை, ஒன்றும் பேசவும் இல்லை.
மறுநாள் காலை
அனைவரும் காலை சிற்றுண்டிக்காக உணவு மேசையில் கூடினார்கள். வழக்கத்திற்கு மாறாக, கோட்டு, சூட்டுடன் வந்த விக்ரமை பார்த்த சாவித்திரி,
"வெளியில எங்கையாவது போறியா சின்னா?" என்றார்.
"ஆமாம்மா என்னோட ஃப்ரெண்ட் இந்தியா வந்திருக்கான். அவனை போய் பாத்துட்டு வரலாம்னு இருக்கேன்"
சாப்பிட்டுக் கொண்டிருந்த நந்தினி, ஒரு நொடி சாப்பிடுவதை நிறுத்தினார். சந்தர்ப்பம், அவருக்கு சாதகமாக செயல்படுவதாய் நினைத்து உள்ளூர பூரித்தார்.
"வைஷாலியை உன் கூட கூட்டிகிட்டு போகலையா?" என்றார் விமலாதித்தன்.
விக்ரம் அவருக்கு பதில் கூறும் முன்,
"அவ பிரக்னண்டா இருக்கா. அதை நீ மறந்துடாத. அனாவசியமா அவ சுத்திக்கிட்டு இருக்க கூடாது..." என்றார் நந்தினி.
விக்ரமும், வைஷாலியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"ஆமாம் டாட். பாட்டி சொல்றது சரி. அதனால தான் நான் அவளை என்னோட கூட்டிக்கிட்டு போகல" என்றான் விக்ரம்.
"நான் கோவிலுக்கு போறேன்... சீக்கிரமே திரும்பி வந்து விடுவேன்" என்றார் நந்தினி.
விக்ரமும், விமலனும் வீட்டை விட்டு கிளம்பி சென்றார்கள்.
வைஷாலியின் பதற்றம் அதிகரித்தது.
"இது தான் ஃபர்ஸ்ட் டைம், வீட்ல யாருமே இல்லாம, நம்ம ரெண்டு பேர் மட்டும் தனியா இருக்கிறது... இல்லடா?" என்றார் சாவித்திரி அப்பாவியாய்.
தன் பதட்டத்தை மறைத்துக் கொண்டு, அவரைப் பார்த்து செயர்க்கையாய் புன்னகைத்தாள் வைஷாலி.
தொடரும்...
புதிய கதை... ஒரு முன்னோட்டம்...
மூடப்பட்ட கதவின் மீது சாய்ந்து கண்களை மூடி நின்றான் யாழினியன், தன் உள்ளம் வென்ற பாரதியை எண்ணியபடி.
ஆரத்தி தான், யாழினியனுக்கு எல்லாமாய் இருந்தவள். ஆனால் அது அவளுக்கு தெரியாது... இல்லை இல்லை, அவன் அவளுக்கு தெரிய விட்டதில்லை.
ஆரத்தி ...! தன் மனதின் அடி ஆழத்திலிருந்து யாழினியன் நேசித்த பெண். ஆனால் அதை அவளிடம் அவன் எப்போதும் கூறியதில்லை.
இப்பொழுது, அவன் அவளை பல ஆண்டுகளாய் தேடி வருகிறான்... அவள் எங்கிருக்கிறாள்? என்ன ஆனாள்? யாருக்கும் தெரியாது. அவர்கள் வாழ்வில் நடந்தது தான் என்ன? நடக்கப் போவது தான் என்ன?
நாளை முதல் ஆரம்பமாகிறது,
*மருத்துவனே மருந்தாய்...!*
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top