4 சத்தியம்

4 சத்தியம்

சிவராமனின் உயிர்த் தியாகம், வீராதித்தனை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கியது. கண்ணீர் ததும்பும் கண்களுடன் அவர் சிவராமனின் உயிரற்ற உடலின் முன்பு அமர்ந்திருந்தார். இப்படிப்பட்ட நேர்மையான ஊழியன் அவருக்கு எங்கே கிடைக்கப் போகிறான்? ஊழியன் என்பதற்கு அப்பாற்பட்டு, எப்பேர்பட்ட மனிதன் அவன்?
தன் கணவனின் உடலை பார்த்து கதறி அழுத கோப்பெருந்தேவியின் முன் நிற்க முடியாமல் தவித்தார் வீராதித்தன்.

அவருக்கு கோபம் பீறிட்டு எழுந்தது, சிவராமனின் இறுதி சடங்குக்கு விமலாதித்தனும், சாவித்திரியும் மட்டும் வந்திருந்த போது. நந்தினிதேவியும் விக்ரமாதித்தனும் வரவில்லை.

"நந்தினியும் சின்னாவும் எங்க?" என்றார் கோபம் கொப்பளிக்க.

"அவங்க இங்க வர விரும்பலாம். சின்னாவையும் அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டாங்க" என்றார் விமலாதித்தன் மெல்லிய குரலில்.

"அவ வரலைன்னா போகட்டும். ஆனா, சின்னா இங்க வரலைன்னா, அந்த வீட்டுக்குள்ள என்னைக்குமே நான் காலடி எடுத்து வைக்க மாட்டேன்."

"அப்பா... "

"நான் சொன்னா சொன்னது தான்" என்றார் உறுதியாக வீராதித்தன்.

வீராதித்தன் கூறியதை நந்தினி தேவியிடம் சென்று கூறினார் விமலாதித்தன். வேறு வழியின்றி, விக்ரமை அவருடன் அனுப்பி வைத்தார் நந்தினி, வீராதித்தனை கரித்துக் கொட்டியபடி.

அங்கு வந்தவுடன் பொம்மியை தேடினான் விக்ரம். சிவராமனின் உடலுக்கு பக்கத்தில் அழுதபடி நின்று கொண்டிருந்தாள் அவள். கண்ணீர் வரைந்த கோடுகள், அந்த சின்னப் பெண்ணின் முகமெங்கும் பரவிக்கிடந்தது. அவனையே பார்த்துக்கொண்டிருந்த தனது தாத்தாவின் பக்கம் அவன் பார்வை திரும்பியது. *இங்கே வா* என்னும் படி தன் கையை அசைத்தார் வீராதித்தன். அவர் முன் வந்து முழங்காலிட்டு அமர்ந்தான் விக்ரம்.

"போய் பொம்மியை சமாதானப்படுத்து" என்றார்.

அவர் கூறியதைக் கேட்டு தன் மனைவியை வினோத பார்வை பார்த்தார் விமலாதித்தன். ஆனால் சாவித்திரியோ, அதை பெரிதாக எடுத்துக் கொண்டது போல் தெரியவில்லை.

பொம்மியின் அருகில் சென்ற விக்ரம், அங்கேயே நின்று கொண்டான். அவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது அவனுக்கு.

"அழாத பொம்மி" என்றான் வேறு என்ன கூறுவது என்று தெரியாமல்.

"எங்க அப்பா இனிமே எப்பவும் திரும்பி வரவே மாட்டாருன்னு எல்லாரும் சொல்றாங்க..." என்று தேம்பினாள் பொம்மி.

மரணம் என்றால் என்ன என்று புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு ஒன்றும் விக்ரம் சின்னப்பிள்ளை அல்ல.

"நானும், எங்க தாத்தாவும் உன்னை நல்லா பாத்துக்குவோம். நீ அழாதே" என்றான் எதையும் யோசிக்காமல்.

ஆனால் பொம்மியின் அழுகையை நிறுத்த அந்த வார்த்தைகள் போதுமானதாக இல்லை. தந்தை என்பவர் ஈடுசெய்ய முடியாத சக்தி அல்லவா...! அவருடைய இடத்தை அவ்வளவு எளிதில் மாற்றீடு செய்துவிட முடியாது.

சிவராமனின் உடலை அங்கிருந்து எடுத்துச் சென்ற போது கத்தி அழுது அவள் தொண்டை கட்டிக்கொண்டது. மயங்கி விழுந்த கோப்பெருந்தேவியின் முகத்தில் தண்ணீர் தெளித்தார் சாவித்திரி. மயக்கம் தெளிந்து எழுந்த அவர், முழங்காலை கட்டிக் கொண்டு ஓவென்று அழுதார்.

"அம்மா அழாதிங்க அம்மா" என்ற பொம்மியை செய்வதறியாது பார்த்துக்கொண்டு நின்றான் விக்ரம்.

பொன்னகரம்

தங்கள் அறைக்குச் செல்லாமல் விருந்தினர் அறையில் தங்கினார் வீராதித்தன். அது நந்தினி தேவியை கோபத்தில் ஆழ்த்தியது.

"என்னை அவமானப் படுத்தன்னும்னே இப்படி எல்லாம் செய்றீங்களா?"

"அவமானமா? நீ தான் என்னை அவமானப்படுத்திட்ட. தன்னுடைய உயிரைக் கொடுத்து சிவராமன் என்னை காப்பாத்தி இருக்கான். அவனோட இறுதி சடங்குக்கு கூட நீ வரல... இது தான் நீ என் மேல வச்சிருக்கிற மரியாதையா? அவனுக்கு பதில் நானே செத்திருக்கலாம்..."

"என்ன பேசுறீங்க நீங்க...?"

"நான் பேசுறதுல என்ன தப்பு? என்னுடைய மரியாதை என்னன்னு இன்னைக்கு நான் தெரிஞ்சுக்கிட்டேன்..."

"இப்போ என்ன ஆயிடுச்சின்னு இப்படி குதிக்கிறீங்க? அவன் உயிரை விட்டான். இல்லைன்னு சொல்லல. அதுக்கு பதிலா அஞ்சு லட்சமோ, பத்து லட்சமோ கொடுத்துட்டா போகுது..."

"நீ விலை பேசுறது சிவராமன் உயிருக்கு இல்ல... உன் புருஷனோட உயிருக்கு... எனக்கு விலை வெறும் பத்து லட்சம் தானா?"

"ஏன் இப்படி விதண்டாவாதம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க? அவன் குடும்பத்துக்கு ஏதாவது செய்யணும். அவ்வளவு தானே..."

"அதை பத்தி நீ கவலைப்பட வேண்டிய அவசியமில்ல. சிவராமனுடைய உயிரிழப்பை எப்படி ஈடு செய்யணும்னு எனக்கு தெரியும். நீ எனக்கு கொடுத்த மரியாதை போதும். இனிமே எதுக்காகவும் நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன். இதுக்கப்புறம், நீயும் என்னுடைய எந்த முடிவிலும் தலையிடக்கூடாது"

விருந்தினர் அறையிலிருந்து அவரை பிடித்து வெளியே தள்ளிவிட்டு, கதவை சாத்தினார் வீராதித்தன்.
 
மறுநாள்

அனைவரும் எங்கோ செல்ல தயாராவதை கவனித்தார் நந்தினி.

"எல்லாரும் எங்க கிளம்புறீங்க சாவித்திரி?" என்றார்.

"அப்பா தான் சிவராம் அண்ணன் வீட்டுக்கு எங்க எல்லாரையும் கிளம்ப சொன்னார்"

"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. தன்னுடைய தகுதியை மறந்துட்டு, ஏன் தான் இவரு இப்படி எல்லாம் செய்றாரோ தெரியல. இதுக்குத் தான் ராஜ குடும்பத்தை சேராத ஒருத்தரை நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னேன்" தான் ஐம்பத்தி இரண்டு வருடத்திற்கு முன்பு செய்த தவறை எண்ணி வருந்தினார் நந்தினி தேவி.

எரிச்சலுடன் அங்கிருந்து சென்றார். சாவித்திரி நிம்மதி பெருமூச்சு விட்டார். எதிர்மாறான குணாதிசயங்களை கொண்ட இருவரை ஒரே வீட்டில் சமாளிப்பது மிகக் கடினம். நந்தினி தேவியை தவிர மற்ற அனைவரும் சிவராமன் இல்லத்திற்கு சென்றார்கள்.

.....

கணவனை பறிகொடுத்த சிவராமனின் மனைவி  கோப்பெருந்தேவி, சித்தப்பிரமை பிடித்தவரை போல் அமர்ந்திருந்தார். அவர் மடியில் படுத்திருந்தாள் பொம்மி. வீராதித்தன் வருவதைப் பார்த்து, எழுந்து அமர்ந்து கொண்டாள் பொம்மி. ஆனால் கோப்பெருந்தேவியிடம் எந்த மாறுதலும் இல்லை. முகத்தில் எந்த உணர்ச்சியும் இன்றி, ஒரே இடத்தை வெறித்துப் பார்த்தபடி இருந்தார். ஆனால் அவர் கண்ணில் இருந்து கண்ணீர் வழிவது மட்டும் நிற்கவேயில்லை. அவர் எதிரில் தரையில் அமர்ந்தார் வீராதித்தன்.

"அம்மா கோப்பு..."

தன் முகத்தை திருப்பாமல், கருவிழியை மட்டும் அவரை நோக்கி நகர்த்தினார் கோப்பெருந்தேவி.

"நீ என்னோட பொண்ணு மாதிரி. நீ பொம்மியை பத்தி கவலைப்பட வேண்டாம். அவ எங்க பொறுப்பு. சிவராமனோட உயிருக்கு பதிலா என்னால எதையும் தரமுடியாது..."

தன் முகத்தை மூடிக்கொண்டு அழுதார் கோப்பெருந்தேவி.

"ஆனா, நிச்சயம் ஈடு செய்ய முடியும். சத்தியமா சொல்றேன், பொம்மி தான் எங்க வீட்டு மருமகள் "

கோப்பெருந்தேவி மட்டுமல்ல, விமலாதித்தனும், சாவித்திரியும் கூட அதிர்ச்சி அடைந்தார்கள். கோப்பெருந்தேவியின் கரத்தைப் பற்றி, தன் கரத்தை அவர் கரத்தின் மீது வைத்து,

"என்னோட சின்னா, பொம்மியை கல்யாணம் செஞ்சிக்குவான்" என்றார்.

பொம்மி, விக்ரமை பார்க்க, அவளை பார்த்து புன்னகைத்தான் விக்ரம். அவனைத் தன்னிடம் வருமாறு அழைத்தார் வீராதித்தன். அவர் அருகில் வந்து, முழங்காலிட்டு அமர்ந்தான் விக்ரம்.

"நீ என்னை மதிக்கிற இல்ல?"

ஆமாம் என்று தலையசைத்தான்.

"நான் கோப்பு ஆன்ட்டிக்கு சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கேன். நீ தான் என்னோட சத்தியத்தை காப்பாத்தணும். எனக்காக அதை நீ செய்வீயா?"

"ப்ராமிஸ்ஸா நான் பொம்மியை கல்யாணம் பண்ணிக்கிறேன் தாத்தா" என்றான் பொம்மியை பார்த்து புன்னகைத்தபடி.

"கார்ல ஒரு பேக் வச்சிருக்கேன். அதை எடுத்துக்கிட்டு வா"

காரை நோக்கி ஓடினான் விக்ரம். விமலாதித்தனும், சாவித்திரியும் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. நந்தினி தேவிக்கு என்ன பதில் கூறுவது? விமலாதித்தனுக்கு நடுக்கம் ஏற்பட்டது. சாவித்திரிக்கும் பயமாகத் தான் இருந்தது. அதே நேரத்தில் அவருக்கு சந்தோஷமாகவும் இருந்தது.

வீராதித்தன் கூறிய பையை கொண்டு வந்து அவரிடம் கொடுத்தான் விக்ரம். அதிலிருந்த ஒரு டப்பாவில் ஒரு தங்கச் சங்கிலி இருந்தது. அதை பார்த்தவுடன் சாவித்திரிக்கு புரிந்து போனது. அதே போன்ற சங்கிலியைத் தான், அவர்களுடைய நிச்சயதார்த்தத்தின் போது, விமலாதித்தன் அவருக்கு அணிவித்தார். அந்த சங்கிலி இன்னும் அவர் கழுத்தில் இருந்தது. அவர் எதிர்பார்த்தபடியே அந்த சங்கிலியை விக்ரமிடம் கொடுத்தார் வீராதித்தன்.

"இதை பொம்மி கழுத்தில் போடு"

அவரிடமிருந்து அதை பெற்று, பொம்மியின் கழுத்தில் அணிவித்தான் விக்ரம்.

"இப்போ அவங்க சின்ன பிள்ளைங்க. அவங்க மேஜர் ஆன உடனே அவங்க கல்யாணத்தை நடத்தி வைக்கலாம்" என்றார் வீராதித்தன்.

கண்ணீர் மல்க, தன் கரம் கூப்பி அவருக்கு நன்றி தெரிவித்தார் கோப்பெருந்தேவி. ஆதரவாய் அவர் தலையை வருடிக் கொடுத்தார் வீராதித்தன். சாவித்ரியை நோக்கி தன் கையை நீட்ட அவர் சில பணகட்டுகளை அவரிடம் கொடுத்தார்.

"இந்த பணத்தை வச்சுக்கம்மா. பொம்மி எங்க வீட்டு பொண்ணு. அவளுக்கு எந்தக் குறையும் இருக்கக் கூடாது" என்றார்.

கண்ணீருக்கிடையில் புன்னகைத்தபடி தலையசைத்தார் கோப்பெருந்தேவி.

அவர்கள் விடைபெற ஆயத்தமானார்கள். பொம்மிக்கு கண்களால் ஏதோ உணர்த்தினார் கோப்பெருந்தேவி. அவள் அவர்களின் கால்களை தொட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டாள். அந்த குட்டி பெண்ணை அனைத்து அன்பாய் முத்தமிட்டார் சாவித்திரி.

"உனக்கு என்ன வேணும்னாலும் என்னைக் கேட்கலாம். சரியா?" என்றார் தன் மருமகளிடம், தன் மாமனாரின் மீது அதீத மரியாதை கொண்ட அந்த மருமகள்.

சரி என்று தலையசைத்தாள் பொம்மி.

அனைவரும் அங்கிருந்து கிளம்ப, அவர்களை பார்த்து கையசைத்தாள் பொம்மி.

"இந்த செயினை கழட்டாத... எப்பவும்..." என்றான் விக்ரம்.

அதற்கும் சரி என்று தலையசைத்தாள் பொம்மி.

காரில்...

"டாட்..." என்று தயக்கத்துடன் ஆரம்பித்தார் விமலாதித்தன்.

தன் கையை காட்டி அவரை தடுத்தார் வீராதித்தன்.

"உங்க அம்மாகிட்ட நான் பேசிக்கிறேன். நீங்க யாரும் அவளுக்கு பதில் சொல்ல வேண்டாம்"

பெருமூச்சு விட்டார் விமலாதித்தன்.

பொன்னகரம்

எதிர்பார்த்தபடியே பெரிய களேபரத்தில் இறங்கினார் நந்தினி தேவி. கையில் கிடைத்ததை எல்லாம் போட்டு உடைத்தார்.

"எவ்வளவு தைரியம் இருந்தா, இப்படி செய்விங்க? எப்படி என்னை கேட்காம இப்படி ஒரு முடிவை நீங்க எடுக்கலாம்?"

"உன்னை மாதிரி இதயம் இல்லாத பொம்பளைகிட்ட நான் எதுக்காக அனுமதி கேக்கணும்?"

"வார்த்தையை அளந்து பேசுங்க"

"பொம்மி தான் இந்த வீட்டு மருமக. அதுல எந்த மாற்றமும் இல்ல"

"அது நிச்சயம் நடக்காது"

"நிச்சயமா நடக்கும்..."

"நான் உயிரோட இருக்குற வரைக்கும் அப்படி நடக்க விட மாட்டேன்"

"நான் உயிரோட இல்லைனாலும் அது நடக்கும்... சின்னா, இங்க வா..."

அவரிடம் ஓடி வந்தான் விக்ரம்.

"நீ தாத்தாவை மதிக்கிற இல்ல?"

"ஆமாம்" என்றான்.

"என் மேல உனக்கு உண்மையிலேயே மரியாதை இருந்தா, யார் என்ன சொன்னாலும் சரி... எனக்கு செஞ்சி கொடுத்த சத்தியத்தை நீ காப்பாத்தணும்..."

அவரே எதிர்பார்க்காத வண்ணம், அவர் தலையில் கை வைத்து,

"நிச்சயம் காப்பாத்துவேன் தாத்தா" என்றான் விக்ரம்.

தன் நினைவிலிருந்து வெளிவந்தான் விக்ரம். தனது கை கடிகாரத்தை பார்க்க மணி 7 தான் ஆனது. அவ்வளவு சீக்கிரம் வீட்டிற்கு செல்ல அவன் விரும்பவில்லை. இன்னும் பார்ட்டி முடிந்திருக்காது என்று அவனுக்கு தெரியும். அதனால், அருகில் இருந்த சிறிய தெருவினுள் வண்டியை செலுத்தினான். காரை ஓரமாக நிறுத்திவிட்டு, கண்ணை மூடி  சாய்ந்தான்.

திடீரென்று, மயிலிறகால் வருடுவது போன்ற ஓர் உணர்வு அவனுக்குள் எழுந்தது. தன் மனதில் எழும் உணர்வுகளை அவன் எப்போதும் உதாசீனம் செய்ததில்லை. அவை அவனிடம் ஏதாவது ஒன்றை கூறாமல் இருந்ததில்லை. கண்களைத் திறந்து நேராய் அமர்ந்தவன், அருகிலிருந்த கடையில் இருந்து ஒரு பெண் வெளிவருவதை கவனித்தான். அவன் இருக்கும் திசையை நோக்கித்தான் அவள் வந்தாள். அவனுக்கு எந்த ஒரு பெண்ணையும் உறுத்துப் பார்க்க வேண்டும் என்று தோன்றியதே இல்லை... எப்போதும்...

பூசினார் போன்ற உடல்வாகுடன், கோதுமை நிறத்தில் இருந்தாள் அந்தப் பெண். தனது அடர்ந்த கூந்தலை *பிடி கிளிப்பினால்* கட்டுப்படுத்தி இருந்தாள். கருப்பு நிற ஜீன்சும், இளஞ்சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ் குர்தியும் அவ்வளவு பாந்தமாய் இருந்தது அவளுக்கு. அவனது காரின் அருகில் வந்த அவள், தன் கைப்பையிலிருந்து கைபேசியை எடுத்து காதில் வைப்பதைப் பார்த்த விக்ரம், தனது காரின் கண்ணாடி கதவை கீழே இறக்கினான்.

"சொல்லுங்க மா... வாங்கிட்டேன்... இன்னும் அரை மணி நேரத்தில் வீட்டுக்கு வந்துடுவேன்." என்று அழைப்பை துண்டித்து விட்டு நடந்தாள்.

அவள் செல்வதையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் விக்ரம். அந்தப் பெண்ணின் முக ஜாடை அவனுக்கு பரிச்சயமானதாய் தோன்றியது. அவனுடைய இதயம் வேகமாய் துடித்தது. யாராவது அவளை பொம்மி என்று அழைப்பார்களோ என்று எண்ணினான். இந்த பத்து ஆண்டுகளில் அவன் இப்படி எல்லாம் எண்ணியதே இல்லை. பொம்மி அல்லாத வேறு ஒரு பெண்ணை அவன் நினைத்தது கூட கிடையாது. முதல் முறையாக, அவனது மனம், அவனுக்கு ஏதோ உணர்த்த நினைத்ததை உதாசீனம் செய்து விட்டு அங்கிருந்து கிளம்பினான் விக்ரம்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top