32 பார்ட்டி
32 பார்ட்டி
பார்ட்டிக்கு தேவையான ஏற்பாட்டை கவனித்துக் கொண்டிருந்தார் சாவித்திரி. அவருக்கு உதவி கொண்டிருந்தார் கோப்பெருந்தேவி. உயர்தட்டு பெண்களும் ஆண்களும் விழாவை சிறப்பிக்க தயாராக இருந்தார்கள். ஆட்டமும் பாட்டமுமாய் விழா களை கட்ட தயாரானது.
இந்த முறை நந்தினியே காமினியை வரவழைத்திருந்தார். தன்னை தொல்லை செய்து கொண்டிருக்கும் அந்தப் பெண்ணுக்கு இந்த முறை எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் வழங்க அவர் தயாராக இல்லை. ஆனால், நந்தினி தன்னை அழைத்தது காமினிக்கு சிறிதும் பிடிக்கவில்லை.
"எனக்கு விருப்பமில்லாத இந்த பங்ஷனுக்கு வர சொல்லி எதுக்காக என்னை தொல்லைப்படுத்தின?"
"நான் ஏன் உன்னை வர சொன்னேன்னா, அப்போ தான் என் மேல யாருக்கும் சந்தேகம் வராது. நான் இந்த கல்யாணத்தை முழு மனசோட நடத்த விடுறதா எல்லாரும் நினைப்பாங்க. இங்க வர உனக்கு விருப்பம் இல்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனாலும் எனக்கு வேற வழி இல்ல. தயவுசெய்து புரிஞ்சுக்கோ"
அரை மனதுடன் தலையாட்டினார் காமினி.
"வா, வந்து ஏதாவது சாப்பிடு. நீ சாதாரணமா இருக்கிற மாதிரி காட்டிக்கோ"
சரி என்று தலையசைத்தார் காமினி.
முழுதாய் தயாரான நிலையில் தரைதளம் வந்த விக்ரம், இங்கும் அங்கும் வைஷாலியை தேடினான். அவள் இன்னும் தயாராகவில்லை போலிருக்கிறது. பெண்கள் தயாராக சற்று அதிக நேரம் எடுக்க தானே செய்யும்? இது அவளது திருமணத்திற்கான விழாவாயிற்றே...!
*இன்னும் அவ வர எவ்வளவு நேரம் ஆகுமோ தெரியல* என்று முணுமுணுத்தான் விக்ரம்.
வந்திருந்த விருந்தினர் அனைவருக்கும் பழச்சாறு வழங்கிக் கொண்டிருந்தார் ஜெயம்மா. அவரிடமிருந்து ஒரு தம்ளரை எடுத்துக் கொண்டான் விக்ரம். மாடிப்படியை பார்த்தபடி அதை பருகினான். தம்ளரை வாயில் வைத்த அவன், பருகுவதை நிறுத்தினான், வைஷாலி மாடியிலிருந்து இறங்கி வருவதைப் பார்த்து. சிறிது நேரம் அவன் மூச்சு விடவும் மறந்தான். *ப்ரீத் டேக்கிங்* என்றால் இது தானோ? சில நொடிகளுக்கு, அவனை மூச்சு விடவும் மறக்கச் செய்ய ஒரு பெண்ணால் முடியும் என்று அவன் இதுவரை நினைத்ததில்லை. பழச்சாறு தம்ளரை ஓரமாய் வைத்து விட்டு அவளை நோக்கி வந்தான்.
வைஷாலியின் வழியை அவன் மறைத்துக் கொண்டு நின்றதால், அவளும் நின்றாள். அவனது முகத்தை பார்த்தவுடனேயே அவள் புரிந்து கொண்டாள் அவன் தன்னில் தொலைந்து போய்விட்டான் என்பதை. தன் விரல்களை அவன் முன் சொடுக்கினாள்.
தன் கையை அவளை நோக்கி நீட்டி பற்றி கொள்ளுமாறு சைகை செய்தான். அதற்கு கீழ்படியாமல் அந்த இடத்தை விட்டு அகன்றாள் வைஷாலி. அவனைப் பார்த்துக் கொண்டு புன்னகையுடன் நின்றான் விக்ரம். *எத்தனை நாள் என்னை தவிர்ப்பாய்?* என்பது போல.
வைஷாலியை தன்னிடம் வருமாறு அழைத்தார் சாவித்திரி.
"சொல்லுங்க ஆன்ட்டி"
"என்கூட வா"
அவளை கையை பிடித்து அழைத்து வந்து, முன் வரிசையில் இருந்த விஐபி நாற்காலியை காட்டி,
"இங்க உட்காரு" என்றார் சாவித்திரி.
"இங்கேயா?"
"ஆமாம். இன்னைக்கு நீ தான் விஐபி." அவள் தோளை பிடித்து அழுத்தி அமர வைத்தார்.
புன்னகையுடன் தலையசைத்த வைஷாலி அதில் அமர்ந்து கொண்டாள். சாவித்திரி விக்ரமையும் அழைத்த போது, அவள் விழிகள் விரிந்தது.
"எஸ், மாம் " என்றான் விக்ரம்.
"வைஷாலி கூட இங்க உட்காரு"
தன் புருவம் உயர்த்தி சிரித்தான் விக்ரம்.
"இந்த புரோகிராம் செம என்டர்ட்டைனிங்கா இருக்கும் போல இருக்கே" என்றான் அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டு.
விருந்தாளிகளை உபசரிக்க அங்கிருந்து சென்றார் சாவித்திரி. இருவரும் ஒன்றாய் அமர்ந்திருந்ததை பார்த்த காமினி, உள்ளுக்குள் புழுங்கினார்.
"உன் மருமகளுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா? தகுதி இல்லாதவங்ககிட்ட எதுக்கு இப்படி போய் வழியிறா?" என்றார்.
ஒன்றும் கூறாமல் அமைதியாய் நின்றார் நந்தினி. அவரால் என்ன கூற முடியும்? சாவித்திரி எப்பொழுதுமே அப்படித் தான். விமலாதித்தன், சாவித்ரியை திருமணம் செய்து கொள்ள விரும்பிய போது, சாவித்ரி ஒரு எளிமை விரும்பி என்பதால் அவரை விமலாதித்தனுக்கு மணமுடித்து வைப்பதில் நந்தினிக்கு சிறிதும் விருப்பமில்லை. வீரவாதித்தன் தான் அவரை விமலாதித்தனுக்கு மணமுடித்து வைத்தார். அவர் அரச குடும்பத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணம் தான் நந்தினியை அந்த திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளச் செய்தது.
"தயவுசெய்து இரண்டு நாள் பொறுத்துக்கோ காமினி. இந்த கல்யாணம் நிச்சயம் நடக்காது" என்றார் நந்தினி.
சரி என்று தலையசைத்தார் காமினி.
.......
"யூ ஆர் லுக்கிங் கார்ஜியஸ்" என்றான் விக்ரம் வைஷாலியிடம்.
"தெரியும்... நான் எப்பவுமே அழகு தான்" என்றாள் வைஷாலி தெனாவெட்டாக.
"அப்படியா? நீ தூங்கும் போது எவ்வளவு அழகா இருக்கேன்னு நான் பார்க்கிறேன்"
அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள் வைஷாலி.
"அதுக்கு ஏன் இவ்வளவு அதிர்ச்சி ஆகுற? கல்யாணத்துக்கு பிறகு நீ எல்லா ராத்திரியும் என் கூட தானே இருக்க போற?"
"பகல்லயும் நான் உங்க கூட தான் இருப்பேன்" என்றாள்.
"நீ சொல்றது சரி. நம்ம ரெண்டு பேரும் எப்பவும் ஒன்னா தான் இருக்க போறோம்"
அவனுக்கு ஏதோ பதில் கூற அவள் முனைந்த போது, விழா துவங்கியது. விக்ரமும், வைஷாலியும் மட்டும் அல்ல, விமலாதித்தனும் நந்தினியும் கூட ஆச்சரியம் அடைந்தார்கள், சாவித்திரியும், கோப்பெருந்தேவியும் மேடையில் தோன்றிய போது.
அவர்களை மேடையில் பார்த்தவுடன் உற்சாகமாய் கை தட்டிய வைஷாலியை பார்த்து புன்னகைத்தான் விக்ரம். இளம் பெண்களின் நடனத்துடன் நிகழ்ச்சி *டாப் கியரில்* பறக்க தொடங்கியது. அது வைஷாலிக்கு மிகவும் பிடித்திருந்தது. அவள் நிகழ்ச்சியை ரசிக்க தொடங்கினாள். விக்ரம், தனக்கு வைஷாலியுடன் செலவிட கிடைத்த நேரத்தை ரசித்தான்.
*என்னை தாலாட்ட வருவாளா* பாடலை ஒரு இளைஞன் உணர்வு பூர்வமாய் பாடத் துவங்கியவுடன் விக்ரமின் பார்வை வைஷாலியின் மீது குவிந்தது. அவனது பார்வை, தன் மீது நிலைத்து விட்டதை உணர்ந்த வைஷாலியால் அவனை பார்க்காமல் தவிர்க்க முடியவில்லை. அவளது கரத்தை அவன் மெல்ல பற்றிய பொழுது, அவளுக்கு அது சங்கடமாய் தெரிந்தாலும், ஏனோ அவன் கையிலிருந்து தன் கையை விடுவித்துக் கொள்ள அவளுக்கு தோன்றவில்லை.
அந்த பாடல் முடிந்து, அனைவரும் கரகோஷம் செய்த போது தான் தனது சுயநினைவிற்கு அவர்கள் வந்தார்கள். தன் கையை அவனிடமிருந்து இழுத்துக் கொண்டு நேராய் அமர்ந்துகொண்டாள் வைஷாலி.
அடுத்த நடன நிகழ்ச்சியை வழங்கப் போவது யார் என்று கூற சாவித்திரி ஒலிபெருக்கியுடன் மேடையில் தோன்றினார். அவர் கையில் இருந்த ஒலிபெருக்கியை யாரோ பறித்த போது அவர் திடுக்கிட்டார். பின்னால் திரும்பிய அவர், ஒலிபெருக்கியுடன் விக்ரம் நின்றிருந்ததை பார்த்தார். விக்ரமை மேடையில் பார்த்த வைஷாலி ஆர்வமானாள். அவன் நடனமாட போகிறானா என்ன? இன்று அவன் ஏதோ செய்யப் போவதாய் கூறினானே...! அவன் வைஷாலியை பார்த்து புன்னகைத்த போது மென்று விழுங்கினாள் வைஷாலி.
அவன் கையில் இருந்த ஒலிபெருக்கியை லேசாய் தன்னை நோக்கி சாய்த்து,
"கல்யாண மாப்பிள்ளை ஏதோ சொல்ல விரும்புறார்னு நினைக்கிறேன்" என்றார் சாவித்திரி.
ஆமாம் என்று தலையசைத்த விக்ரம், பேசத் துவங்கினான்.
"நான் வைஷாலியை கல்யாணம் பண்ணிக்க போறேன்... எங்களுடைய கதையில யாருக்குமே தெரியாத ஒரு சேப்டர் இருக்கு. நாங்க சின்ன பசங்களா இருந்த போதே, எங்களுக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சு. ஆமாம்... ஷி இஸ் மை சைல்ட்ஹுட் ஸ்வீட் ஹார்ட்"
படபடக்கும் இதயத்துடன் தனது துப்பட்டாவை இறுக பற்றினாள், இதை சிறிதும் எதிர்பார்க்காத வைஷாலி.
"அவளுடைய நினைவுகளை என்னுடைய இதயத்தில் சுமந்துகிட்டு நான் அவளுக்காக பத்து வருஷம் காத்திருந்தேன். அவளை எப்போ சந்திக்கப் போறேன்... அவ கூட எப்போ பேச போறேன்... எப்போ அவ கூட இருக்க போறேன்னு ஒவ்வொரு நிமிஷமும் ஏங்கிக்கிட்டு இருந்தேன். நான் அவளை காதலிக்கிறேன்னு அவளுக்கு தெரியும். ஆனா, எந்த அளவுக்கு காதலிக்கிறேன்னு அவளுக்கு தெரியாது. எங்களுக்கு கல்யாணம் ஆகப்போகுது. ஆனா இதுவரைக்கும் என்னோட காதலை நான் அவகிட்ட ப்ரொபோஸ் பண்ணவே இல்ல. இப்போ நான் அதை செய்யப் போறேன்"
உற்சாகமாய் கைதட்டினார் சாவித்திரி. அவரைத் தொடர்ந்து அனைவரும் கைதட்டி மகிழ்ந்தார்கள், இருவரை தவிர. அந்த இருவர் யார் என்று கூற வேண்டிய அவசியம் இல்லை.
மேடையை விட்டு கீழே இறங்கி வைஷாலியிடம் வந்த விக்ரம், வைஷாலியை நோக்கி தன் கையை நீட்டினான். தயக்கத்துடன் மெல்ல கண் இமைத்தாள் வைஷாலி.
"போ வைஷாலி" என்று கூட்டம் குரலெழுப்பி ஆர்ப்பரித்தது.
அவள் கோப்பெருந்தேவியை பார்க்க அவரும் *போ* என்பது போல கண்ணிமைத்தார். மெல்ல அவன் கரத்தை பற்றினாள் வைஷாலி. அவளை மேடைக்கு அழைத்து வந்தான் விக்ரம். யாரும் எதிர் பார்க்காத வண்ணம், அவள் முன் மண்டியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி அளித்த விக்ரம்,
"வில் யு மேரி மீ?" என்றான்.
தன்னை சுற்றி என்ன நடந்தது என்று வைஷாலி கவனிக்கவில்லை. தன் முன் மண்டியிட்டு, தன் பதிலுக்காக காத்திருந்த விக்ரம் மீது இருந்து, தன் கண்களை அகற்றவே முடியவில்லை வைஷாலியால்.
"பண்ணிக்கிறேன்னு சொல்லு" என்று மீண்டும் கூட்டம் குரல் எழுப்பியது.
ஆம் என்று அனிச்சையாய் தலையசைத்தாள் வைஷாலி. புன்னகையுடன் எழுந்த விக்ரம், அவளை தழுவி, மேலும் அவளுக்கு அதிர்ச்சி அளித்தான். அதிர்ச்சியில் அவள் விழிகள் பெரிதானது. கூடியிருந்த மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்ய, அரங்கம் அதிர்ந்தது.
சாவித்திரியும் கோப்பெருந்தேவியும் அதே அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் முகத்தில் லேசான வெட்கம் படர, இருவரும் சிரித்துக்கொண்டார்கள். அந்த காட்சியை கண்ட விமலாதித்தன் சிலை போல் நின்றார். தன் மகன் மனதில் கொண்டுள்ள ஆசையை அவர் கண்முன்னே காண்பது இது தானே முதன் முறை...!
விக்ரமிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள் வைஷாலி. விக்ரமை அவள் நிமிர்ந்து பார்க்கவே இல்லை. அவளுக்கு ஏற்பட்ட சங்கடம், அவளது தொண்டைக் குழியை அடைத்தது. அவன் மனதில் இருந்த பேரார்வம் அவளை திகைக்கச் செய்தது. அது அவளுக்கு ஒரு வித பதட்டத்தையும் அளித்தது. அவனை எந்த விதத்திலும் தடுத்து நிறுத்துவது சாத்தியம் என்று அவளுக்கு தோன்றவில்லை. அந்த எண்ணம் அவளுக்கு நடுக்கத்தை தந்தது.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top