29 பாவம் நந்தினி...
29 பாவம் நந்தினி...
எதிர் பார்த்தது போலவே, தனது சிம்கார்டை சரண்டர் செய்யும் முடிவுக்கு வந்தார் நந்தினி. அவர் தேவையில்லாத பிரச்சினையில் மாட்டிக் கொள்ள தயாராக இல்லை. காமினிக்கு குறுஞ்செய்தி அனுப்பியது அந்த பெண் தான் என்றால், அவள் நிச்சயம் போலீசுக்கும் அனுப்புவாள். அவன் அப்படி செய்யக் கூடியவள் தான் என்று நினைத்தார் நந்தினி.
மறுநாள் காலை
வழக்கமாய் தான் செய்யும் பூஜையை முடித்துக்கொண்டு, உணவு மேஜைக்கு வந்தார் நந்தினி. அங்கு விக்ரம், விமலாதித்தனுடன் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
"விமலா, நான் என்னுடைய சிம்கார்டை சரண்டர் பண்ணலாம்னு இருக்கேன்" என்றார்.
சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவரைப் பார்த்தான் விக்ரம்.
"ஏன் மாம்? என்ன பிரச்சனை?"
"பிரச்சனை ஒன்னும் இல்ல. எனக்கு மொபைல் அவசியம்னு தோணல"
விமலாதித்தன் எதுவும் கூறுவதற்கு முன்,
"நீங்க தாராளமா சரண்டர் பண்ணலாம் பாட்டி. சின்ன பசங்க தான் அதை செய்ய பயப்படனும்" என்றான் விக்ரம் வேண்டுமென்றே.
"ஏன் அதை செய்ய சின்ன பசங்க பயப்படனும்?" என்றார் நந்தினி குழப்பத்துடன்.
"உங்க சிம்கார்டு கம்பெனி ஒரு புது அனோன்ஸ்மெண்ட் பண்ணியிருக்காங்க. யாரெல்லாம் அவங்களோட சிம்கார்டை சரண்டர் பண்றாங்களோ, அவங்களை பத்தின எல்லா ரகசியங்களையும் வெளியில விட்டுடுவாங்களாம்..." இல்லாத கதையை அவிழ்த்து விட்டான் விக்ரம்.
"என்ன்னனனது?" என்று அதிர்ந்தார் நந்தினி.
"ஆமாம் பாட்டி, ஃபோன் யாரெல்லாம் ரகசியத்தை வச்சிருக்காங்களோ அவங்க தான் பயப்படனும். நீங்க பயப்பட வேண்டியதில்ல..."
நந்தினிக்கு வயிற்றைப் பிசைந்தது. அவருடைய எல்லா ரகசிய நடவடிக்கைகளையும் அவர் கைபேசியின் மூலமாக தானே செய்து வந்திருக்கிறார்...? உண்மையிலேயே அவர்கள் அனைத்தையும் வெளியே விட்டு விடுவார்களோ? பயம் அவர் மனதை முழுமையாய் ஆட்கொண்டது.
"உங்க கார்டை என்கிட்ட கொடுங்க மாம். நான் சரண்டர் பண்ணிடுறேன்" என்றார் விமலாதித்தன்.
அவருக்கு என்ன பதில் கூறுவது என்று புரியவில்லை நந்தினிக்கு. அப்போது அங்கு பழச்சாறுடன் வந்தார் சாவித்திரி.
"ஏங்க, நம்ம கல்யாணத்துக்கு தேவையான பர்சேஸ் எல்லாம் செய்ய வேண்டி இருக்கு" என்றார் விமலனிடம்.
"என்னைக்கு பர்ச்சேஸ் பண்ண போற?" என்றார் விமலன்.
"நாளைக்கு..."
"சரி, அப்படியே நான் மாமுடைய சிம் கார்டையும் சரண்டர் பண்ணிடுறேன்"
"சிம் கார்டை சரண்டர் பண்றது ஒன்னும் அவ்வளவு முக்கியம் இல்ல. முதல்ல பர்ச்சேஸ்ஸை முடி" என்றார் நந்தினி அவசரமாய்.
"பரவாயில்ல, மாம். வேலையோட வேலையா நான் அதை செஞ்சிடுவேன்"
"நான் கல்யாணத்துக்கு பிறகு தான் என்னோட சிம் கார்டை சரண்டர் பண்ணலாம்னு இருக்கேன். கல்யாணத்தப்போ எனக்கு போன் தேவைப்படும். அதை அப்புறம் பண்ணிக்கலாம்"
சரி என்று தலையசைத்தார் விமலாதித்தன். விக்ரம் உள்ளூர சிரித்து கொண்டான்.
"இன்னைக்கு, வைஷாலிக்கு மருதாணி வரைஞ்சி விடலாம்னு இருக்கேன். முக்கியமான சில ஃப்ரிண்ட்சையும் வர சொல்லி இருக்கேன்" என்றார் சாவித்திரி.
"அப்படியா மாம்... நான் இருக்கணுமா?" என்றான் விக்ரம்.
"ஒன்னும் தேவையில்லை..." என்றார் கிண்டலாக.
"ஏன்?" என்றான் விக்ரம்.
"இதுக்கெல்லாம் நீ இருக்கணும்னு அவசியம் இல்ல"
"நீங்கல்லாம் என்ன செய்வீங்க?"
" நம்ம ரிலேட்டிவ்ஸ், தெரிஞ்ச ஃப்ரெண்ட்ஸ்ஸை எல்லாம் கூப்பிட்டு மருதாணி போட்டு விடுவோம்"
"அதுல என்ன ஸ்பெஷல்? "
"வைஷாலி கையில உன் பெயரை போடுறது தான் ஸ்பெஷல்..."
அதைக் கேட்டு புன்னகைத்தான் விக்ரம். வைஷாலியின் கையில் அவன் பெயரை போட போகிறார்கள். ஆனால், அவன் அங்கு இருக்க வேண்டிய தேவை இல்லையாம். அப்படி என்றால் அவள் கையிலிருக்கும் தன் பெயரை எப்படி பார்ப்பது?
அந்த இடத்தை விட்டு அகன்ற அவன், தனது அறைக்கு செல்லுவது போல் பாசாங்கு செய்துவிட்டு, வைஷாலியை பார்க்க விருந்தினர் அறைக்கு சென்றான். தனது ஈரக்கூந்தலை துண்டால் துவட்டி கொண்டு இருந்தாள் வைஷாலி. அவன் உள்ளே நுழைந்ததை பார்த்த அவள், *எதுக்காக இங்க வந்தீங்க?* என்று கேட்கும் முன்,
"சிம் கார்டை சரண்டர் பண்ண பாட்டி முடிவு பண்ணி இருக்காங்க" என்றான்.
"நிஜமாவா?" என்று சிரித்தாள் வைஷாலி.
"ஆமாம். ஆனா நான் அப்படி செய்ய விடாம தடுத்துட்டேன்"
"குட் ஜாப்..."
"இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?"
"மெஹந்தி போடப் போறாங்களாம்"
"நீ என்ன செய்யப் போற?"
"நானும் தான் போட்டுக்கப் போறேன்..."
"நான் வேற என்னமோ கேள்விப்பட்டேனே...? "
"என்ன?"
"என்னோட பெயரை உன் கையில் எழுத போறாங்களாமே..."
"ஆமாம் அதனால?" என்றாள் சாதாரணமாய்.
"உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நீ சுத்த அன்ரொமான்டிக்..." என்று சிரித்தான் விக்ரம்.
"ரொம்ப தேங்க்ஸ்... வேற ஏதாவது சொல்லனுமா? "
"ஒன்னும் இல்ல. உன்னை சாயங்காலம் பார்க்கிறேன்"
அதைப் பற்றி யோசித்தபடியே அங்கிருந்து சென்றான் விக்ரம்.
வெகு சிலரை மட்டுமே அழைக்கப் போகிறேன் என்று சாவித்திரி கூறினார் அல்லவா? அதற்கே பிரம்மாண்டமாய் கூடிவிட்டார்கள் பெண்கள். ராஜ பரம்பரையை சேர்ந்த குடும்பத்தில் நடக்கும் விஷயம் என்றால் சும்மாவா? அனைவருக்கும் மெஹந்தியை போட்டுவிட பல அழகுக்கலை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு இருந்தார்கள்.
கோப்பெருந்தேவியும் கூட வெகு சிலரை அழைத்திருந்தார். அதில் சுதாகரின் அம்மா கல்யாணியும் ஒருவர். அனைவரும் தத்தம் கைகளில் மருதாணியை இட்டுக்கொள்ள துவங்கினார்கள். வைஷாலிக்காக பிரத்தியேகமான ஒரு டிசைனை தேர்வு செய்து வைத்திருந்தார் சாவித்திரி. அதில் மணமக்களின் பெயர்களை எழுதும் படியாய் அழகாயிருந்தது. திருமணம் சம்பந்தமான திரையிசை பாடல்கள் பின்னனியில் ஒலித்துக் கொண்டிருந்தது.
"வைஷூ, இந்த டிசைன் உனக்கு பிடிச்சிருக்கா?" என்றார் சாவித்திரி.
"பிடிச்சிருக்கு ஆன்ட்டி" இன்று உடனடியாய் கூறினாள் வைஷாலி.
"கல்யாண மாப்பிள்ளை மற்றும் பொண்ணின் பெயர்களை அழகான எழுத்தில் எழுதுங்க" என்றார் சாவித்திரி, அழகுக்கலை நிபுணரிடம்.
அவர் சரி என்று கூற, அவர் முன் சென்று அமர்ந்தாள் வைஷாலி. விக்ரம் மற்றும் வைஷாலியின் பெயர்கள் அவள் கையில் வரையப்பட்டது. முழுதும் வரைந்து முடித்த பின் சாவித்திரியிடம் வந்தாள் வைஷாலி.
"எனக்கு உங்களோட ஹெல்ப் வேணும் ஆன்ட்டி" என்றாள்.
"நீ என்கிட்ட என்ன வேணாலும் கேட்கலாம்"
"என் கூட கொஞ்ச நேரம் நிக்கிறீங்களா?"
"இது ஒரு ஹெல்ப்பா?" என்று சிரித்தார் சாவித்ரி.
"ஆமாம் ஆன்ட்டி. நான் இப்போ பாட்டிகிட்ட ஃபோன்ல பேச போறேன்"
"என்ன்னனனது?" என்று அதிர்ந்தார் சாவித்திரி.
"ஆமாம் ஆன்ட்டி"
"ஒருவேளை, அவங்க நம்மளை கண்டுபிடிச்சிட்டா?"
"அவங்க கண்டுபிடிக்க கூடாதுன்னு தான் உங்களை என் கூட நிக்க சொல்றேன். நீங்க என்கூட இருந்தா அவங்களுக்கு என் மேல சந்தேகம் வராது"
"என்ன செய்யப் போற?"
"உங்ககிட்ட பேசுற மாதிரி பாசாங்கு செஞ்சுகிட்டு, அவங்ககிட்ட ப்ளூடூத் மூலமா பேசப்போறேன்..."
நீண்ட மூச்சை இழுத்து விட்டு
"சரி" என்றார் சாவித்திரி.
சாவித்ரியை நந்தினிக்கு முதுகை காட்டிக்கொண்டு நிற்கும்படி செய்துவிட்டு, சாவித்ரியை பார்த்தபடி நின்று, நந்தினிக்கு ஃபோன் செய்தாள் வைஷாலி. வைஷாலிக்கு ஆர்வம் தாங்கவில்லை. இது தான் முதல் முறை, அவள் ஃபோன் செய்யும் போது நந்தினியின் முகத்தைப் பார்த்துக் கொண்டு பேசப்போவது. ஃபோனில் பேசும் போது, நந்தினியின் முகம் எப்படி போகிறது என்பதை பார்க்க வேண்டும் என்பது அவளுடைய வெகு நாள் ஆசை. அவள் எதிர்பார்த்தது போலவே பல்லைக் கடித்தபடி எரிச்சலுடன் அந்த அழைப்பை ஏற்றார் நந்தினி.
"இப்போ என்ன? எதுக்காக எனக்கு ஃபோன் பண்ண?"
"என்ன பாப்பா இப்படி கேக்குற? உனக்கு நான் ஃபோன் பண்ண ஏதாவது காரணம் வேணுமா என்ன? உன்கிட்ட பேச எனக்கு உரிமை இல்லையா?"
"விஷயத்துக்கு வா"
"நீ பார்க்க செம ஹாட்டா இருக்க"
"என்னது..???" என்று முகம் சுளித்தாள் நந்தினி.
"இந்த வயசுல இந்த போடு போடுறியே... சின்ன வயசுல எப்படி இருந்திருப்ப...?"
"நான் எப்படி இருக்கேன்னு உனக்கு எப்படி தெரியும்?"
"எப்படின்னு நான் சொன்னா நீ ஷாக் ஆயிடுவ..."
"விஷயத்தை சொல்லு"
"நான் உன் வீட்டில் தான் இருக்கேன்... வியர்த்துக் கொட்டுற உன்னோட முகத்தை பார்த்துகிட்டு..."
"என்ன்ன்ன்னனனது...???"
அங்கிருந்தவர்கள் மீது ஒவ்வொருவராய் தன் கண்களை செலுத்தினார் நந்தினி. ஆனால் அவருக்கு யார் மீதும் சந்தேகம் எழவில்லை. சாவித்திரியிடம் தனது மெஹந்தியை காட்டியபடி, பேசிக்கொண்டு நின்றிருந்தாள் வைஷாலி, ஒன்றும் செய்யாதவளை போல. ஓரக்கண்ணால் நந்தினியை பார்த்து புன்னகை புரிந்தாள்.
"நீ எங்க இருக்க?" என்றார் நந்தினி.
"இங்க தான் இருக்கேன்னு சொன்னேனே" என்றாள், சாவித்திரியின் கையை பார்த்தபடி.
அழைப்பை துண்டித்து விட்டு, செக்யூரிட்டி அழைத்தார் நந்தினி.
"செக்யூரிட்டி...."
அவன் தலை தெறிக்க ஓடி வந்தான்.
"சொல்லுங்க ராணியம்மா"
"கதவை சாத்து... நான் அவளை கையும் களவுமா பிடிக்கிற வரைக்கும் இங்கிருந்து இங்கு யாரும் வெளியில் போகக் கூடாது" என்றார் பல்லைக் கடித்துக்கொண்டு கோபமாய்.
"யாரை மா சொல்றீங்க?" என்றார் சாவித்திரி, ஒன்றும் தெரியாதவர் போல.
"என்னை ஃபோன்ல ஒருத்தி மிரட்டினா. அவ இங்க தான் இருக்கா"
"இங்கயா? "
"ஆமாம்... செக்யூரிட்டி எல்லாருடைய பேகையும், பரிசையும் செக் பண்ணு"
"எதுக்காக இப்படி எல்லாம் செய்றீங்க?" என்றார் அந்த கூட்டத்தில் இருந்த ஒரு பெண்மணி.
"இங்க இருக்கிற ஒவ்வொருத்தரும் உங்க ஃபோன் மூலமா என்கிட்ட இப்ப பேச போறீங்க. அந்த திமிர் பிடிச்சவளை நான் சும்மா விட போறதில்ல... ம்ம்ம்... ஆரம்பிங்க... செக்யூரிட்டி, ஒவ்வொருத்தரா எனக்கு ஃபோன் பண்ண வை... அவளோட குரலை நான் கண்டுபிடிக்கிறேன்..."
"ஆனா அம்மா... " என்று ஏதோ கூற சாவித்திரி முனைந்த போது,
"சாவித்ரி, நீ எதுவும் பேச வேண்டாம். நான் என்ன செய்றேன்னு எனக்கு நல்லாவே தெரியும். இன்னைக்கு மட்டும் அவள் என் கைல கிடைக்கட்டும், நான் என்ன செய்றேன்னு பாரு. வைஷாலியையும் கோப்பெருந்தேவியும் அவங்க ரூமுக்கு போக சொல்லு." என்று சீறிப்பாய்ந்தார் நந்தினி.
"வைஷு, அம்மாவை கூட்டிகிட்டு ரூமுக்கு போடா" என்று தன் சிரிப்பை அடக்கியவாறு கூறினார் சாவித்திரி.
வழக்கம் போல் முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு, சரி என்று தலையசைத்துவிட்டு கோப்பெருந்தேவியுடன் தன் அறையை நோக்கி நடந்தாள் வைஷாலி.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top