28 பிரச்சனையில் நந்தினி

28 பிரச்சனையில் நந்தினி...

தவறான நேரத்தில், பொன்னகரத்தில் காமினியை எதிர்பார்க்காத நந்தினி அதிர்ச்சி அடைந்தார். காமினி அங்கு, ஏன், எப்படி, வந்தார் என்று அவருக்கு புரியவில்லை. நந்தினி, சிலை போல் நின்று கொண்டிருக்க, காமினியை வரவேற்றார் விமலாதித்தன்.

"உள்ள வாங்க ஆன்ட்டி"

அப்பொழுது தான் தன் சுய நினைவு பெற்றார் நந்தினி.

"வா காமினி" என்றார் செயற்கையான புன்னகையுடன்.

நந்தினியை பார்த்து முறைத்தபடி உள்ளே வந்தார் காமினி.

"எங்களுக்கு வரப்போற மருமகளை நீங்களும் ஆசீர்வாதம் செய்யுங்க" என்று, குங்குமமும்,  மஞ்சள் அரிசியும் இருந்த தட்டை அவரிடம் நீட்டினார் சாவித்திரி.

வைஷாலியின் நெற்றியில் குங்குமம் இட்டு, மஞ்சள் அரிசியால் அவளை ஆசீர்வதித்தார் காமினி.

"வைஷு, நகை எல்லாம் கொண்டு போய் உன்னுடைய ரூம்ல வச்சுக்கோ டா" என்றார் சாவித்ரி.

சரி என்று தலையசைத்துவிட்டு தனக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை தன் அறைக்கு எடுத்துச் சென்றாள் வைஷாலி.

மதிய உணவு ஏற்பாட்டை கவனிக்க சாவித்திரி சமையல் அறைக்கு செல்ல, அவரை பின் தொடர்ந்து சென்றார் கோப்பெருந்தேவி.

தனக்கு வந்த அழைப்பை ஏற்று பேசியபடி தன் அறைக்குச் சென்றார் விமலாதித்தன். காமினியை தன் அறைக்கு அழைத்துச் சென்றார் நந்தினி.

அது வரை பொறுமையாய் காத்திருந்த விக்ரம், நாலு கால் பாய்ச்சலில் விருந்தினர் அறையை நோக்கி ஓடி சென்று கதவை சாத்தி தாளிட்டான்.  அதைக்கண்ட வைஷாலி திடுக்கிட்டு நின்றாள்.

"வாட் த ஹெல்...? நீங்க இங்க என்ன செய்றீங்க?" என்றாள் கோபமாக.

சட்டென்று அவள் வாயை பொத்தினான் விக்ரம்.

"ஷ்ஷ்... சத்தம் போடாதே. உன்னோட சேட்டைக்கு தீனி போட தான் வந்திருக்கேன்" என்றான் தன் கையை அவள் வாயிலிருந்து விலக்கியபடி.

"என்ன அது?" என்றாள் ரகசியமாக.

"காமினி, சரியான நேரத்துக்கு இங்க எப்படி வந்தாங்கன்னு உனக்கு தெரியுமா?"

தெரியாது என்று தலையசைத்தாள்.

"பாட்டியோட ஃபோன்ல இருந்து அவங்களுக்கு நான் தான் மெசேஜ் அனுப்பினேன்"

அதைக்கேட்டு வைஷாலியின் முகம் மலர்ந்தது.

"இதை வச்சி நீ நந்தி பாப்பாகிட்ட விளையாடலாம்..."

"வெல்டன்..." என்று அவன் தோளை தட்டினாள் வைஷாலி.

தன் தோளை தட்டிக் கொண்டிருந்த அவளது கையை பார்த்துவிட்டு, அவள் முகத்தை பார்த்த விக்ரம்,

"ஒரு பூவும் நிலவும் ஒரே நேரத்தில் அப்ரிஷியேட் பண்றதை, இப்ப தான் முதல் தடவையா பார்க்கிறேன்"என கூறி அவளை சங்கடத்துக்கு ஆளாக்கினான்.

"நான் உன்னை பத்தி தான் சொல்றேன் பொம்மி. பூவும், நிலவும் சேர்ந்த கலவை நீ" என்றான் தன் தலையை லேசாய் சாய்த்தபடி.

"ஓவரா ஐஸ் வைக்காதீங்க" என்றாள் வேறெங்கோ பார்த்தபடி.

"வேற யாருக்கு ஐஸ் வைக்கிறது? பக்கத்து வீட்டுல இருக்கிற பொண்ணுக்கா?"என்றான் கிண்டலாக.

அவனை அதிர்ச்சியுடன் திடுக்கிட்டு பார்த்தாள் வைஷாலி.

"பொறாமையா இருக்கா?"

"பொறாமையா? எனக்கா?"

"இல்லையா?"

"நான் பொறாமைப்பட்டு நேரத்தை வீணாக்க மாட்டேன்... என்னுடைய வழியில குறுக்க வர்றவங்களை போட்டு தள்ளிட்டு போய்கிட்டே இருப்பேன்" என்றாள் தன் கட்டை விரலால் கழுத்தை வெட்டுவது போல் பாவனை செய்து.

அவளை நோக்கி விக்ரம் குனிந்த போது, பின்னால் நகர்ந்தாள்.

"அப்படின்னா நான் எதிர்பார்த்ததை விட ரொம்ப பெரிய பொறாமைக்காரி நீ..."

"ரொம்ப பறகாதீங்க... "

"என் பொண்டாட்டி எனக்காக இவ்வளவு பொறாமை பட்டா, நான் ஏன் பறக்க மாட்டேன்?"

"முதல்ல இங்க இருந்து போங்க. உங்க பாட்டி பார்த்தா, என்னை தீர்த்துக்கட்ட இன்னைக்கே ஒரு பிளானை போட்டுடுவாங்க"

அதை கேட்டு சிரித்த விக்ரம்,

"என்னமோ எங்க பாட்டியைப் பார்த்து ரொம்ப பயப்படுறா மாதிரி நடிக்கிற... அவங்க தான் உன்னை பார்த்து பயந்து போயிருக்காங்க"

"நந்தியாவது என்னை பார்த்து பயப்படுறதாவது..." என்றாள் முகத்தை கோணலாய் மாற்றி. 

அப்படி கோணலாய் மாற்றினால் கூட அவள் அழகாகத் தான் இருக்கிறாள் என்று நினைத்தான் விக்ரம்.

"சரி நீங்க கிளம்புங்க. எனக்கு முக்கியமான வேலை இருக்கு"

"ஃபோன் பண்ண போறியா?"

" ஆமாம்"

"சரி, எனக்கு ஒரு விஷயம் சொல்லு, எப்ப பாத்தாலும் என்னை ரூமை விட்டு வெளியே போக சொல்றியே, கல்யாணத்துக்கு பிறகு என்ன செய்யப் போற?"

"ரூமை விட்டு நான் வெளியே போயிடுவேன்... சிம்பிள்..." என்றாள் தோளை குலுக்கியபடி.

"கதவை பூட்டி, சாவியை தூக்கி வெளியே போட்டுடுவேன்... சிம்பிள்..." என்றான் அவள் கூறியது போலவே.

அவனைப் பார்த்து முறைத்தாள் வைஷாலி.

"இப்படியெல்லாம் முறைச்சா, என்னை தடுத்து நிறுத்திடலாம்னு நினைக்காத"

"அவங்க உங்களை சந்தேகப்படுறதுக்கு முன்னாடி, நான் அவங்களுக்கு போன் செய்றது தான் நல்லது..."

"ஜாக்கிரதை..."

"நீங்க எங்கிட்ட விடுங்க... நான் பாத்துக்கிறேன்"

"காமினி, பாட்டி ரூம்ல இருக்காங்க. அவங்க போனதுக்கு பிறகு கால் பண்ணு"

" சரி "

" பை"

சரி என்பது போல் தலை அசைத்தாள் வைஷாலி. சட்டென்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு அங்கிருந்து ஓடிப் போனான் விக்ரம். அகல விரிந்த கண்களுடன் அதிர்ச்சியாய் நின்றாள் வைஷாலி.

இதற்கிடையில்,

நந்தினியை வகைதொகை இல்லாமல் திட்டிக் கொண்டிருந்தார் காமினி.

"இங்க என்ன நடந்துகிட்டு இருக்கு? இந்தக் கல்யாணத்தை நடக்க விட மாட்டேன்னு பெருசா பீத்திகிட்ட...? இப்போ என்னடான்னா, அந்த பொண்ணை உட்கார வச்சு அவளுக்கு பூ முடிச்சுக்கிட்டு இருக்க... என்ன கண்றாவி இது? உனக்கு கொஞ்சம் கூட வெக்கமே இல்லையா?" சீறிப் பாய்ந்தார் காமினி.

"நான் எப்படிப்பட்ட மனநிலையில இருக்கேன்னு உனக்கு தெரிய நியாயமில்லை காமினி. நான் அவங்களைக் கொல்ல முயற்சி பண்ணேன். அவங்க எப்படி தப்பிச்சாங்கன்னு எனக்கு புரியவே இல்ல. அவங்க வீட்டை எரிச்சி சாம்பலாக்கினேன்... ஆனா அவங்க உயிரோட வந்து நிக்கிறாங்க... என்னோட திட்டம் இப்படி ஆகும்னு நான் நினைச்சு கூட பாக்கல"

"நீ போடுற திட்டம் எல்லாமே இப்படி தான் இருக்கு..." என்றார் நக்கலாக.

"இன்னும் நேரம் இருக்கு... எதுவும் கை மீறி போகல. இந்த கல்யாணம் நிச்சயம் நடக்காது என்னை நம்பு" அவரது தோளை தொட்டார் நந்தினி.

 அவரது கையை தட்டி விட்ட காமினி,

"எவ்வளவு தைரியம் இருந்தா, ஒரு லோ -க்ளாஸ் பொண்னுக்கு பூ முடிக்க என்னை நீங்க வர சொல்லி இருப்ப?"

"என்னது..??? நான் வர சொன்னேனா? நான் உனக்கு ஃபோன் பண்ணவே இல்லையே... உன்னை பத்தி எனக்கு தெரியாதா?"

"அப்படியா? அப்படின்னா இது என்ன?" தனது கைப்பேசியிலிருந்த, அவரிடமிருந்து பெற்ற குறுஞ்செய்தியை காட்டினார் காமினி.

அதை பார்த்து நந்தினி அடைந்த அதிர்ச்சிக்கு அளவேயில்லை.

"இல்ல... இதை நான் அனுப்பல"

"போதும் நிறுத்து... உன்னோட ஃபோன்ல இருந்து தான் இந்த மெசேஜ் வந்திருக்கு. ஆனா இதை நீ அனுப்பலன்னு சொல்ற..."

"சத்தியமா நான் அனுப்பல"

"இந்த மாதிரி கீழ்த்தரமான ஜனங்க இருக்கிற இடத்துல நான் இருக்க விரும்பல"

அங்கிருந்து விடுவிடுவென சென்றார் காமினி.

நந்தினியின் கோபம் எல்லை கடந்து கொண்டிருந்தது. வைஷாலியும் கோப்பெருந்தேவியும் அவருக்கு முன்னால் வந்தால், அவரது பார்வையாலேயே அவர்களை எரித்து விடுவார் போல தெரிந்தது.

காமினிக்கு அந்த குறுஞ்செய்தி எப்படி சென்றது என்பது தான் அவருக்கு புரியவில்லை. அந்த குறுஞ்செய்தியை அனுப்பியது யார்? அவருடைய வீட்டிலேயே அவருக்கு எதிராக யாராவது செயல்படுகிறார்களோ? அது யாராக இருக்கும்? விக்ரமுக்கும் சாவித்திரிக்கும் அவருடைய உண்மை சொருபம் தெரியாது. விமலாதித்தன் நிச்சயம் அவருக்கு எதிராக செயல்படப் போவதில்லை. கோப்பெருந்தேவியும் வைஷாலியும் அவருடைய அறைக்குள் நுழையக் கூட தைரியம் அற்றவர்கள். ஒருவேளை இங்கிருக்கும் வேலையாட்கள் யாராவது இந்த வேலையை செய்கிறார்களோ? ஆனால் அவர்கள் எதற்காக இப்படி செய்ய வேண்டும்? அவர்களுக்கு எந்த காரணமும் இல்லையே...?

இதற்கிடையில், சமையலறையில்...

"நீங்க, இங்க எங்க கூட இருக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றார் சாவித்திரி.

"நாங்க இங்க இருக்கிறது உங்களுக்காகவும், விக்ரம்காகவும் மட்டும் தான்" என்றார் கோப்பெருந்தேவி.

"எங்களுக்காக இங்க வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்"

"நாங்க இங்கே இருக்கிறது காமினி தேவிக்கு பிடிக்கலைன்னு நினைக்கிறேன்"

"ஆமாம். ஆனா அதைப் பத்தி யார் கவலைப் பட்டது?"

"ராணியம்மா கவலைப் படுவாங்க "

"அவங்களை விக்ரம் பாத்துக்குவான்"

"விக்ரம் ரொம்ப சின்ன பிள்ளை. அவங்க என்னென்ன செய்வாங்கன்னு அவருக்கு தெரியாது"

உள்ளூர நகைத்துக் கொண்டார் சாவித்திரி.

"நம்ம தான் இருக்கோமே... அவங்களுக்கு நம்ம ஹெல்ப் பண்ணுவோம் இல்லையா?"

ஆமாம் என்று தலையசைத்தார் கோப்பெருந்தேவி.

"நான் காமினி தேவிக்கு இந்த ஜூசை கொடுத்துட்டு வர்றேன்" என்று பழச்சாறு தம்ளருடன் வெளியே வந்த சாவித்திரி, காமினி அங்கிருந்து விடுவிடுவென்று செல்வதை பார்த்தார்.

சாவித்திரியும் கோப்பெருந்தேவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். என்ன நடந்திருக்கலாம் என்று அவர்களுக்கு ஓரளவு புரிந்தது.

சில நிமிடத்திற்கு பிறகு,

நந்தினியின் கைபேசி ஒலிக்க எரிச்சலுடன்பல்லைக் கடித்தார் நந்தினி, அதில் *டார்ச்சர்* என்ற பெயர் ஒளிர்ந்ததை பார்த்து. ஒரு வேளை அந்த குறுஞ்செய்தியை அனுப்பியது அவளாக இருக்குமோ என்ற எண்ணம் அவர் மனதில் உதித்தது. அவசரமாய் அந்த அழைப்பை ஏற்றார்.

"ஹாய் நந்தி "

"உனக்கு என்ன வேணும்?"

"உன்னோட ஃப்ரண்ட் காமினிகிட்ட உன்னை திட்டுவாங்க வைக்கனும்னு நெனச்சேன். அது நல்லபடியா முடிஞ்சிடுச்சு போலருக்கு..."

"உனக்கு எப்படி தெரியும்?"

"எனக்கு எல்லாம் தெரியும்"

"அப்படின்னா அந்த மெசேஜை அனுப்புனது நீ தானா?"

"ப்பா... செம்ம அறிவாளியா ஆயிக்கிட்டே போற மா நீ"

"நீ அதை எப்படி செஞ்ச?"

"நான் தான் சொன்னேனே, எனக்கு நிறைய கரங்கள் இருக்குன்னு..."

"என்ன சொல்ற நீ? "

"நான் என்ன சொல்றேன்னா... உன்னோட ஃபோன்ல இருந்து என்னால கமிஷனருக்கு கூட மெசேஜ் அனுப்ப முடியும்"

பீதி அடைந்தார் நந்தினி.

"என்னை மன்னிச்சிடுங்க கமிஷனர் சார், கோப்பெருந்தேவியோட வீட்டை நான் தெரியாம எரிச்சிட்டேன்... என்னை மன்னிச்சுடுங்க ப்ளீஸ்..." கலகலவென்று சிரித்தாள் வைஷாலி.

"வாயை மூடு "

"நீ ஒழுங்கா இருந்தா, நான் வாயை மூடிக்கிட்டு ஒழுங்கா இருப்பேன். இல்லன்னா..."

நந்தினியின் முகத்தில் பயத்தின் ரேகை படர்ந்தது.

"விக்ரமுக்கும், கோப்பெருந்தேவிக்கும் உண்மை தெரியிற வரைக்கும் தான் உன்னுடைய நேரம் நல்லா இருக்கும். ஆனா அது எப்பவும் நடந்துடாது. ஜாக்கிரதை..."

அழைப்பை துண்டித்தாள் வைஷாலி, நந்தினியை பீதியில் விட்டுவிட்டு.

தன் கையிலிருந்த கைப்பேசியை பார்த்தார் அவர். அவருடைய கைபேசியை, யார் வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும் என்றால், அதை பயன்படுத்துவதில் என்ன பாதுகாப்பு இருக்கிறது?

அதேநேரம், அதே வீட்டில் இருந்த மற்றொரு அறையில், கட்டிலில் விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள் வைஷாலி. நந்தினியை பயமுறுத்த,  இதைவிட சிறந்த வேறு ஒரு விஷயம் எதுவும் இருக்க முடியாது. அவளுடைய யூகம் சரியானால், அவர் தன்னுடைய கைபேசி எண்ணை *சரண்டர்* செய்துவிட நினைப்பார்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top