27 நிச்சயதார்த்தம்

27

சுமேஷை கைப்பேசியில் வசை பாடிக் கொண்டிருந்தார் நந்தினி.

"என் முன்னாடி வந்த, உன்னை கொன்னுடுவேன். தப்பித் தவறி கூட என் கண்ணுல பட்டுடாத..." என்று எரிந்து விழுந்தார் நந்தினி.

"என்னை நம்புங்க ராணியம்மா. அந்த வீடு மொத்தமா எரிஞ்சி சாம்பலா போற வரைக்கும் நாங்க அங்க தான் இருந்தோம். அந்த வீட்டிலிருந்து யாரும் வெளியில் வர்றதை நாங்க பாக்கவே இல்ல. அவங்க எப்படி அங்கிருந்து தப்பிசாங்கன்னே எனக்கு புரியல"

"போதும்... தொட்டதுக்கெல்லாம் சாக்குப்போக்கு சொல்றதை நிறுத்து. அவங்க இன்னும் உயிரோட... அதுவும் என் வீட்டுல உட்கார்ந்து இருக்காங்க..." என்றார் தாங்கமுடியாத கோபத்துடன்.

"எனக்கு இன்னும் ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுங்க. நான் அவங்க கதையை மொத்தமா முடிச்சிடுறேன்"

"வாயை மூடு... அவங்க என் வீட்டுல இருக்காங்க. அவங்களுக்கு ஏதாவது ஆச்சின்னா, விக்ரம் என் மேல தான் சந்தேகப்படுவான்"

"நீங்க அதை பத்தி கவலைப்படாதீங்க. எதுவாயிருந்தாலும் நான் அவங்க வீட்டை விட்டு வெளியே வரும் போது தான் செய்வேன். அதுவும், யாருக்கும் சந்தேகம் வராதபடி, ஒரு ஆக்சிடென்ட் நடந்த மாதிரி தான் அதை செஞ்சு முடிப்பேன்"

"அதை கல்யாணத்துக்கு முன்னாடி செய்"

"நிச்சயமா செய்றேன்... எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம்"

"நாளைக்கு நான் கோவிலுக்கு வருவேன். வந்து உனக்கு சேர வேண்டிய பணத்தை வாங்கிட்டு போ"

"ரொம்ப நன்றி ராணியம்மா. அவங்க எங்கயாவது வெளில போனா எனக்கு தெரியப்படுத்துங்க"

" சரி "

அழைப்பைத் துண்டித்தார் நந்தினி. கோப்பெருந்தேவியும், வைஷாலியும் அவருடன் தங்கி இருப்பதை அவரால் பொறுக்கவே முடியவில்லை. அவர்கள் இருவரையும் தன் மனதின் அடி ஆழத்திலிருந்து அவர் வெறுத்தார். ஆனால் அவர்களோ, அவரது வீட்டிற்கே வந்து, அவர் கண் முன் அமர்ந்து கொண்டு விட்டார்கள். ஆனால் அவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இப்போது இருப்பதைப் போல், கையாலாகாத தனமாய் அவர் ஒரு போதும் உணர்ந்ததில்லை.

.....

 கோப்பெருந்தேவிக்கும் வைஷாலிக்கும் காலை சிற்றுண்டியை அவர்களது அறைக்கு எடுத்துச் சென்றார் சாவித்திரி. அதை பார்த்த விக்ரம் அவரை தடுத்து நிறுத்தினான்.

" இது என்ன மாம்?"

" கோப்புவுக்கும் வைஷாலிக்கும்  பிரேக்ஃபாஸ்ட் கொண்டு போறேன்"

"எதுக்காக அவங்க ரூமுக்கு கொண்டு போறீங்க? அவங்க நம்மளோட கெஸ்ட். அவங்களை டைனிங் ஹாலுக்கு வர வச்சு தானே நம்ம சாப்பாடு போடணும்?"

அவர்கள் பேசுவதைக் கேட்டபடி வரவேற்பறைக்கு வந்தார் நந்தினி தேவி.

"பாட்டியே வந்துட்டாங்க அவங்களையே கேட்டுப் பார்க்கலாம்" என்றான் விக்ரம்.

என்ன என்பது போல் அவர்களைப் பார்த்தார் நந்தினி.

"பாருங்க பாட்டி, ஆண்டிக்கும் வைஷாலிக்கும் அம்மா பிரேக்ஃபாஸ்ட் கொண்டு போறாங்க. அவங்க நம்மளோட விருந்தாளிங்க இல்லையா? அவங்களை நம்ம டைனிங் ஹாலுக்கு கூட்டிக்கிட்டு வந்து உபசரிக்குறது தானே முறை?  நம்ம *ராயல் ஸ்டேட்டஸை* பத்தி அவங்க என்ன நினைப்பாங்க? நம்மள அவங்க தாழ்வா நினைக்க மாட்டாங்களா?" என்று அவருடைய கௌரவத்தில் கை வைத்தான் விக்ரம்.

"அவங்க நம்ம கூட சேர்ந்து சாப்பிட சங்கடபடலாம்னு சாவித்திரி நெனச்சி இருக்கலாம்" என்று சூழ்நிலையை சுமூகமாக கையால நினைத்தார் நந்தினி.

"ஆமாம் சின்னா, அம்மா சொல்றது சரி தான். அவங்க சங்கடபடுவாங்கன்னு தான் நானே கொண்டு போறேன்" என்றார் சாவித்திரி.

"மாம், இன்னும் ஒரு வாரத்துல நம்ம பொன்னகரத்தோட மருமகளாக போற பொண்ணு வைஷாலி. அதுக்கு அவளை நம்ம தயார் படுத்த வேண்டாமா? இன்னும் எத்தனை நாளைக்கு அவ சங்கடப் பட்டுக்கிட்டே இருக்கிறது?" என்றான் விக்ரம் புன்னகையுடன்.

"நீ சொல்றதும் சரி தான் சின்னா" என்றார் சாவித்திரி யோசனையுடன்.

"நீங்க போங்க. நான் போய் அவங்களை கூட்டிட்டு வரேன்" என்றான் விக்ரம்.

சரி என்று தலையசைத்து விட்டு சென்றார் சாவித்திரி. விக்ரம் அவர்கள் அறைக்கு சென்று, கதவை தட்டினான். கதவை திறந்தவள் வைசாலி தான். லேசான அலங்காரத்துடன் மிக அழகாய் இருந்த வைஷாலியை பார்த்து திகைத்து நின்றான் விக்ரம். திடீரென்று எது அவளை இப்படி அலங்கரித்துக் கொள்ள செய்தது? அவன் தன்னை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றதை பார்த்த வைஷாலி, அவன் முகத்தின் அருகே விரலை சொடுக்கினாள். தன்னை சுதாகரித்துக் கொண்ட விக்ரம்,

"என் மாமியார் எங்க?" என்றான் குறும்பு புன்னகையுடன்.

தன் அம்மாவை அவன் *மாமியார்* என்று அழைத்ததை எதிர் பார்க்காத வைஷாலியின் கண்கள், அதிர்ச்சியுடன் பெரிதாயின.

"பார்த்து... உன்னோட கண்ணு முழி இரண்டும் கீழே விழுந்துட போகுது" என்றான் கிண்டலாக.

"அம்மா வாஷ் ரூம்ல இருக்காங்க"

"ஓ... நீ தனியாவா இருக்க?" என்றான் சீண்டலாய்.

இடுப்பில் கை வைத்துக் கொண்டு, தன் புருவத்தை உயர்த்தி, அவனை எச்சரிக்கும் தொனியில் பார்த்தாள் வைஷாலி.

"ரூம்ல தனியா உக்காந்துக்கிட்டு போர் அடிச்சுக்கிட்டு இருக்கியே... வெளியில் வந்து எங்க கூட மிங்கில் ஆகலாமேன்னு சொன்னேன்... "

"நோ தேங்க்ஸ்..."

"ஒரு வாரத்துக்குப் பிறகு நீ இப்படி எல்லாம் சொல்ல முடியாது..."

"ஏன் சொல்ல முடியாது?"

"கல்யாணத்துக்கு பிறகு, ரூமை விட்டு வெளியே போக மாட்டேன்னு நீ சொன்னா, எனக்கு சந்தோஷம் தான். ஏன்னா நான் ரூம்ல தானே இருப்பேன்..."

"அந்த நேரம் நான் ரூம்ல இருக்க மாட்டேன்"

"ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாது மா..."

"அதைப் பத்தி நான் அப்புறம் யோசிக்கிறேன்"

"சரி, இப்போ என்கூட வா"

"எங்க?" என்றாள் முகத்தை சுளித்து.

"டைனிங் ஹாலுக்கு. அம்மா கூட்டிக்கிட்டு வர சொன்னாங்க"

"நான் இங்கேயே சாப்பிட்டுக்குறேன்" என்றாள் எங்கோ பார்த்தபடி
 
"ஏன்? என் பாட்டியை பார்த்தா பயமா இருக்கா?"

"யாருக்கு...? எனக்கா...? நான் ஏன் நந்தியை பார்த்து பயப்படனும்?"

"ஷ்ஷ்.... மெதுவா பேசு. அவங்க காதுல விழுந்துட போகுது" என்றான் தனது ஆள்காட்டி விரலை உதட்டின் மீது வைத்து.

"நீங்க தான் அவங்களை பார்த்து பயப்படுறீங்க" என்றாள் தெனாவெட்டாக.

"அம்மா, தாயே... ஒத்துக்குறேன்... தயவுசெய்து கல்யாணம் வரைக்கும் உன் வாயை மூடிக்கிட்டு இரு. இப்போ என் கூட சாப்பிட வா"

அப்பொழுது குளியலறையிலிருந்து வெளியே வந்தார் கோப்பெருந்தேவி.

"விக்ரம்...? "

"அம்மா உங்களை சாப்பிட கூட்டிக்கிட்டு வரச் சொன்னாங்க ஆன்ட்டி"

 வைஷாலியை பார்த்தார் கோப்பு.

"நம்ம இங்கேயே சாப்பிடலாம் மா " என்றாள் வைஷாலி.

"நாங்க சாப்பிட கீழே வறோம்" என்றார் கோப்பெருந்தேவி.

"அம்மா..." என்று ஏதோ சொல்ல நினைத்த வைஷாலியை, தன் கையை காட்டி அமர்த்தினார் கோப்பெருந்தேவி. சரி என்று தலையசைத்துவிட்டு புன்னகையுடன் சென்றான் விக்ரம்.

"ஏன் மா?"

"எத்தனை நாளைக்கு நீ உள்ளேயே அடஞ்சிருக்க முடியும்? இவங்க எல்லாரும் உன்னோட குடும்பமாக போறாங்க. நீ அவங்க கூட கலந்து பழகி தான் ஆகணும். அப்போ தான் அவங்களுடைய வாழ்க்கை முறையையும், பழக்க வழக்கங்களையும் நீ தெரிஞ்சுக்க முடியும். வா போகலாம்"

விடுவிடுவென நடந்தார் கோப்பெருந்தேவி. அவரை பின்தொடர்ந்தாள் வைஷாலி. அங்கு ஏற்கனவே அனைவரும் கூடி இருந்தார்கள். அவர்கள் இருவரையும் வரவேற்றார் சாவித்திரி.

"வாங்க கோப்பு... வா வைஷூ, இங்க உட்காரு" விக்ரமுக்கு எதிர் இருக்கையில் அவளை அமர வைத்தார்.

நந்தினியின் முகத்தையே உற்று கவனித்துக் கொண்டிருந்த வைஷாலியை பார்த்து புன்னகைத்தான் விக்ரம்.

"இன்னைக்கு வைஷாலிக்கு பூ முடிக்கலாம்னு நாங்க பேசி வச்சிருந்தோம். இந்த ஃபையர் ஆக்சிடென்ட்டால அது நடக்காம போயிடுச்சு" என்று வருத்தப்பட்டார் சாவித்திரி.

"அதனால என்ன, மாம்? அதை இப்போ செஞ்சா என்ன? நீங்க என்ன சொல்றீங்க டாட்? "

"அதானே...? செய்யலாமே? என்ன மாம் சொல்றீங்க? நம்ம வைஷாலிக்கு பூ முடிக்கலாம் இல்லையா?" என்றார் விமலாதித்தன்.

அதை மறுக்க நந்தினி முனைந்த போது, விக்ரம் பேசியதை கேட்டு நின்றார்.

"அவங்க என்ன சொல்ல போறாங்க டாட்? நமக்குத் தெரியாதா,  இந்த கல்யாணத்தை நடத்த அவங்க எவ்வளவு ஆர்வமாக காத்திருக்காங்கன்னு?"

"ஆமாம்... அப்படின்னா செஞ்சிடலாமா, மாம்? "

"என்ன இப்படி கேக்கறீங்க? வைஷாலிக்காக அம்மா நகை செட் எல்லாம் செலக்ட் பண்ணி வச்சிருக்காங்க தெரியுமா?" என்றார் சாவித்திரி சந்தோஷமாக.

விமலாதித்தன் நந்தினியைப் பார்க்க, வேறு வழியின்றி சரி என்று தலையசைத்தார் நந்தினி.

"சாப்பிட்டு முடிச்சிட்டு, பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க, கோப்பு. (சாவித்ரியின் பக்கம் திரும்பிய விமலாதித்தன் ) நீ போய் அந்த நகையெல்லாம் கொண்டு வா சாவித்திரி" என்றார்.

சரி என்று தலையசைத்தார் கோப்பெருந்தேவி. சிற்றுண்டியை முடித்துக்கொண்டு வைஷாலியுடன் காத்திருந்தார் அவர். வைஷாலிகாக வாங்கிய நகைகளுடன், பூவும், குங்குமமும் கொண்டுவந்தார் சாவித்திரி. அந்த நகைகளை நந்தினியிடம் கொடுக்குமாறு சைகை செய்தான் விக்ரம். பயத்தை மென்று முழங்கினார் சாவித்திரி.

சாவித்திரியிடம்  வந்த விக்ரம், அவரிடம் இருந்த நகைகளை பெற்று அதை நந்தினியிடம் கொடுத்தான்.

"இதை எல்லாம் நீங்களே வைஷாலிகிட்ட கொடுங்க பாட்டி" என்றான்.

"சின்னா, ஃபாரின்ல இருந்தாலும் நீ இன்னும் நம்ம மரியாதையை மறக்கல. எங்க அம்மாவுக்கு மரியாதை கொடுத்து, எனக்கு நீ பெருமை சேர்த்துட்ட. உன்னை என் மகன்னு  சொல்லிக்க நான் ரொம்ப பெருமை படுறேன்" என்று பூரித்தார் விமலாதித்தன்.

நந்தினியோ சூழ்நிலை கைதியாய் தவித்துக் கொண்டிருந்தார். வைஷாலியை சோபாவில் அமர வைத்தார் சாவித்திரி. அவளிடம் அந்த நகைகளை கொடுத்து விட்டு அவளுக்கு குங்குமம் சூட்டினார் நந்தினி.

 அதே நேரம், அவர்கள்,

"நந்தினி..." என்ற குரல் கேட்டு திரும்பினார்கள். தனது *ராயல் நண்பியான* காமினி அங்கே தகித்துக் கொண்டு நின்று இருந்ததை பார்த்தார்  நந்தினி.

"வாங்க ஆன்ட்டி " என்று அவரை வரவேற்றார் விமலாதித்தன்.

காமினியின் கோபப் பார்வைக்கு முன்னால் நிற்கவே தடுமாறினார் நந்தினி. அவரை எப்படி சமாதானப்படுத்துவது என்று புரியவில்லை நந்தினிக்கு. நந்தினியுடைய பரிதாபகரமான நிலையை பார்த்து புன்னகை புரிந்தான் விக்ரம். அவருக்கே தெரியாமல், அவருடைய கைபேசியில் இருந்து காமினிக்கு குறுஞ்செய்தி அனுப்பி, காமினியை சரியான நேரத்திற்கு அங்கே வர வைத்ததே அவன் தானே...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top