25 தீ விபத்து
25 தீ விபத்து
நந்தினி உள்ளுக்குள் தகித்துக் கொண்டிருந்தார். வைஷாலியின் மீது விக்ரம் காட்டிய அபாயகரமான அளவிற்கான அக்கறையை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. திருமணத்தை நிறுத்தி விட முடியும் என்ற நம்பிக்கையை அவர் அடியோடு இழந்திருந்தார். அவர் கட்டமைத்து வைத்திருக்கும் அனைத்து தடைகளையும் விக்ரம் உடைத்தெறிந்து விடுவான் என்பது நிச்சயமாய் தெரிந்தது அவருக்கு.
வைஷாலியின் வீட்டில் இருந்து அவர்கள் வெளியே வந்தவுடன், அவர்களை நிறுத்தினார் நந்தினி.
"விமலா, நான் கோவிலுக்கு போகணும். எனக்கு ஒரு டாக்ஸியை கூப்பிடு" என்றார்.
தனது புருவங்களை உயர்த்தினான் விக்ரம்.
"டாட், அவங்களை டிரைவர் கூட உங்க கார்ல அனுப்பி வைங்க. நீங்களும் அம்மாவும், என் கூட என் கார்ல வாங்க" என்றான் விக்ரம்.
"ஆமாம்மா. நீங்க என் காரை எடுத்துக்கிட்டு போங்க." என்றார் விமலாதித்தன்.
"நானும் உங்ககூட வரட்டுமா அம்மா?" என்றார் சாவித்திரி.
"இல்ல வேண்டாம் வேண்டாம்... நான் போய்க்கிறேன். நீ கிளம்பு. ராத்திரிக்கு நல்ல சாப்பாடா செய்ய சொல்லி வேலைக்காரங்க கிட்ட சொல்லு"
சரி என்று தலையசைத்துவிட்டு விமலாதித்தனுடன், விக்ரமின் காரில் புறப்பட்டு சென்றார் சாவித்திரி. நந்தினி கோவிலை நோக்கி பயணமானார்.
கோவிலில்...
நந்தினி கோவிலுக்குள் வந்த போது, அவருக்காக அங்கே சுமேஷ் காத்திருந்தான். தான் சாமி கும்பிட்டுவிட்டு வரும் வரை காத்திருக்கும் படி அவனுக்கு சைகை செய்துவிட்டு, சென்றார். அவர் வரும் வரை அவருக்காக காத்திருந்தான் சுமேஷ்.
சிறிது நேரத்திற்கு பிறகு வந்து ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்தார் நந்தினி. அந்த தூணுக்கு மறுபக்கத்தில் ஏற்கனவே சுமேஷ் அமர்ந்திருந்தான். தங்களை யாரும் கவனிக்கவில்லை என்பதை அவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.
"அவங்க வீடு எங்க இருக்குன்னு தெரிஞ்சுகிட்ட இல்ல?" என்றார் நந்தினி.
"பாத்துக்கிட்டேன் ராணியம்மா. நீங்க தான் உங்களை ஃபாலோ பண்ணி வர சொன்னீங்களே... அப்புறம் நான் எப்படி வராமல் போவேன்?"
"அவங்க பார்வதி நகரில் தான் இருக்காங்க"
"நான் அவங்க மேல ஒரு கண் வச்சிக்கிறேன்"
"வேண்டாம். நீ அதை செய்ய வேண்டியதில்ல"
"ஏன் மா? "
"இதுக்கு அப்புறம் அவங்க உயிரோடு இருக்கக் கூடாது" என்பதைக்கூட முகத்தில் எந்த பாவனையும் காட்டாமல் கூறினார் நந்தினி.
"நீங்க என்ன சொல்றீங்க?" என்று அதிர்ந்தான் சுமேஷ்.
"ஆமாம். எனக்கு வேற வழியில்ல. விக்ரம் வரம்பு மீறிப் போய்க்கிட்டு இருக்கான். அவன் நிச்சயம் இந்த கல்யாணத்துல இருந்து பின்வாங்கவே மாட்டான். அந்தப் பெண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு பிடிவாதமா இருக்கான். எந்த காரணத்தையும் சொல்லி அவனை தடுத்து நிறுத்த முடியும்னு எனக்கு தோனல"
"சரி. நீங்க சொன்ன வேலையை நான் முடிக்கிறேன்"
"ஜாக்கிரதை. அது ஒரு விபத்து மாதிரி தெரியணும். யாருக்கும் எந்த சந்தேகமும் வரக்கூடாது"
"சரி மா. நாளைக்கு காலையில அவங்க செத்துட்டாங்கன்னு உங்களுக்கு செய்தி வரும்"
"இந்த வேலையை முடிச்சா, உனக்கு நான் பத்துலட்சம் தருவேன்"
"ரொம்ப நன்றி மா" என்றான் சுமேஷ் சந்தோஷமாக.
இந்த முறை சுமேஷுக்கு முன்கூட்டியே பணம் வழங்கவில்லை நந்தினி. ஒருவேளை அவன் மாட்டிக்கொண்டு விட்டால், அவனிடம் இவ்வளவு பணம் எப்படி வந்தது என்ற கேள்வி எழும் போது, அவன் ஒரு வேளை அவரை நோக்கி கைநீட்ட வாய்ப்பிருக்கிறது அல்லவா.
"நான் உன்னை மறுபடியும் எச்சரிக்கை பன்றேன். ஜாக்கிரதையா இரு. எந்த தப்பும் நடக்கக்கூடாது" என்றார் நந்தினி.
"நடக்காது" என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றான் சுமேஷ்.
சிறிது நேரம் கண்களை மூடி அங்கேயே அமர்ந்திருந்து விட்டு, பிறகு கிளம்பிச் சென்றார் நந்தினி.
பொன்னகரம்
சாவித்திரியை அழைத்தபடி வீட்டிற்குள் நுழைந்தார் நந்தினி. சமையலறையில் இருந்த சாவித்திரி ஓடிவந்தார்.
"சொல்லுங்கம்மா"
"நம்ம நாளைக்கே வைஷாலிக்கு பூ முடிக்கலாமா?"
"நாளைக்கேவா?"
"ஆமாம். நாளைக்கு, நாள் ரொம்ப நல்லா இருக்காம். கோவில்ல பூசாரி சொல்லிக்கிட்டு இருந்தாரு"
"நீங்க சொல்ற படியே செஞ்சிடலாம் மா"
"வைஷாலிக்கு கொடுக்க லேட்டஸ்ட் டிசைன்ஸ்ல சில நகை செட் எல்லாம் வாங்கிக்கோ." என்று நந்தினி கூறியவுடன், நம்ப முடியாமல் மெல்ல தலையசைத்தார் சாவித்திரி.
இவர் உண்மையிலேயே ராணி நந்தினி தேவி தானா? சாவித்திரியால் நம்பவே முடியவில்லை.
"எனக்கு குடிக்க பால் கொண்டு வா. ராத்திரி சாப்பிட எனக்கு வேற எதுவும் வேண்டாம். பால் மட்டும் போதும்."
சரி என்று தலையசைத்துவிட்டு மீண்டும் சமையல் அறைக்கு விரைந்த சாவித்திரி, பாலுடன் வந்தார்.
"விக்ரம் எங்க? "
"ஆஃபீஸ்ல ஏதோ முக்கியமான வேலை இருக்குன்னு போயிருக்கான்"
"ஓ..."
நிதானமாய் பாலை பருகி முடித்துவிட்டு தன் அறைக்குச் சென்றார் நந்தினி.
நந்தினியிடம் ஏற்பட்டிருந்த நல்ல மாற்றத்திற்காக கடவுளுக்கு நன்றி கூறினார் சாவித்ரி. விக்ரம் தன் மனதை மாற்றிக் கொள்ள மாட்டான் என்பதை புரிந்து கொண்டு தான், அவர் தன் மனதை மாற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்தார் சாவித்திரி.
இரவு
அன்று இரவு முழுதும் உறக்கம் கொள்ளவில்லை நந்தினிக்கு. அவர் அளித்த வேலையை சுமேஷ் திறம்பட செய்து முடிக்க வேண்டுமே என்ற பதட்டம் அவருக்கு. வேலையை முடித்துவிட்டு அவருக்கு குறுஞ்செய்தி அனுப்புவதாக கூறி இருந்தான் சுமேஷ். அதற்காக தான் அவர் காத்திருந்தார்.
பார்வதி நகர்
பார்வதி நகர் முழுவதும் ஆள் அரவமின்றி நிசப்தமாய் இருந்தது. நள்ளிரவு என்பதால் மனித நடமாட்டமே இல்லை.
"சொல்றதை கவனமா கேட்டுக்கங்க... எந்த தப்பும் நடக்கக் கூடாது" என்று தனது ஆட்களுக்கு எச்சரிக்கை விடுத்தான் சுமேஷ்.
"நீ கவலைப்படாத. வேலையை முடிச்சுட்டு, சத்தம் போடாம இங்கிருந்து கிளம்பிடுவோம். யாருக்கும் எதுவும் தெரியாது" என்றான் ஒருவன்.
சுமேஷ் சரி என்று தலையசைக்க, அவனது ஆட்கள் வைஷாலியின் இல்லத்தை சூழ்ந்து கொண்டார்கள். ஜன்னலில் தொங்கிக்கொண்டிருந்த திரை சிலைக்கு தீவைத்தனர். சிறிது நேரத்தில் சரசரவென வீடு முழுவதும் தீ பரவ தொடங்கியது. அங்கிருந்து சத்தமில்லாமல் தூரமாய் சென்று அவர்கள் நின்று கொண்டார்கள். அந்த வீடு மொத்தமாய் சாம்பலாவதை பார்த்துவிட்டு, அங்கிருந்து சென்றார்கள்.
நந்தினியின் முகம் பிரகாசம் அடைந்தது, சுமேஷ் அனுப்பிய
*முடிந்தது*
என்ற குறுஞ்செய்தியை பார்த்தவுடன்.
"என்னுடைய குல கௌரவத்தை நாசம் பண்ண இருந்த ஒரே ஒரு பிரச்சனையும் எரிஞ்சிடுச்சி..." என்று நினைத்தபடி நிம்மதியாய் உறங்கி போனார் நந்தினி.
மறுநாள் காலை
தன் அறையை விட்டு வெளியே வந்த நந்தினி, வைஷாலிக்காக நகைகளை தேர்வு செய்து கொண்டிருந்த சாவித்திரியை பார்த்து உள்ளூர நகைத்துக் கொண்டார். அவர் வருவதைப் பார்த்த நகைக்கடை முதலாளி எழுந்து வணக்கம் தெரிவித்தார்.
"சின்னம்மா, நகை கொண்டு வரச்சொல்லி ஃபோன் பண்ணாங்க. அதனால தான் நானே வந்தேன்" என்றார் பவ்யமாக.
மிடுக்காய் தலையசைத்துவிட்டு சாவித்திரிக்கு எதிரில் அமர்ந்து கொண்டார் நந்தினி.
"இதை பாரு சாவித்திரி, வைஷாலிக்கு இது ரொம்ப நல்லா இருக்கும்" என்று தானே ஒரு நகையை தேர்ந்தெடுத்து கொடுத்தார் நந்தினி.
"ஆமாம்மா" என்று அதை தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டார் சாவித்திரி.
அப்பொழுது மாடியிலிருந்து பரிதவிப்புடன் இறங்கி வந்தார் விமலாதித்தன்.
"மாம்..."
"என்ன ஆச்சி விமலா?"
"எப்படி சொல்றதுன்னு புரியல மாம்" என்ற அவரது கண்கள் கலங்கியது.
அவரை அப்படி பார்த்த சாவித்ரி திகிலடைந்தார்.
"என்ன ஆச்சுங்க?" என்றார்.
"கோப்பெருந்தேவியும், வைஷாலியும்..." என்ற அவரது தொண்டை அடைத்தது
"அவங்களுக்கு என்ன ஆச்சுங்க?" என்றார் பயத்துடன் சாவித்ரி.
"அவங்க வீட்ல ஃபயர் ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சாம்..." என்றார் கையால் முகத்தை மூடியவாறு.
பேயறைந்தவரை போல் அவரை பார்த்துக் கொண்டு நின்றார் சாவித்திரி.
"என்ன சொல்ற விமலா? கடவுளே ஏன் எங்களை இப்படி எல்லாம் சோதிக்கிற? அவங்க மட்டும் நல்லபடியா இருந்தா நான் உனக்கு விசேஷ பூஜை செய்றேன்" என்று பறிதவிப்பது போல் பாசாங்கு செய்தார் நந்தினி.
"இல்ல மாம். அவங்க பிழைக்க வாய்ப்பே இல்லயாம். அவங்களுடைய வீடு மொத்தமா சாம்பலா போயிடுச்சாம். ஒன்னுமே மிஞ்சலயாம்"
"இல்ல... என்னால இதை நம்பவே முடியல" என்று சோபாவின் மீது மயங்கி விழுந்தார்... திருத்தம்... மயங்கி விழுவது போல் நடித்தார்.
அவரை நோக்கி விரைந்த சாவித்திரி அவர் கன்னத்தை தட்டி
"அம்மா" என்று அழைத்து பார்த்தார்.
அவரிடம் எந்த அசைவும் இல்லாமல் போகவே, அவரது முகத்தில் தண்ணீர் தெளித்தார். மெல்ல கண்விழித்த நந்தினி அழத் தொடங்கினார்.
"கடவுளே வைஷாலிக்கு பதில் என்னோட உயிரை நீ எடுத்திருக்கக் கூடாதா? அந்த சின்ன பொண்ணோட உயிரை ஏன் பறிச்ச?" என்று கதறினார்.
சாவித்திரியும் விமலாதித்தனும் கண்ணீர் சிந்தியபடி நின்றார்கள்.
"நான் விக்ரமுக்கு என்ன பதில் சொல்லுவேன்? அவன் எப்படி இந்த உண்மையை தாங்கப் போறான்? குழந்தை ஆசை படுறான்னு அவனுக்கு பிடிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணி வச்சு அழகு பார்க்க நினைச்சேனே..." என்று புலம்பியபடி தன் முகத்தை கைகளால் மூடிக் கொண்டு அழுதார் நந்தினி.
அப்போது தான், ஜாகிங் சென்ற விக்ரம் இன்னும் வீடு திரும்பவில்லை என்பது நினைவுக்கு வந்தது சாவித்திரிக்கு. விக்ரமை நினைத்த போது அவருக்கு தொண்டையை அடைத்தது. விமலாதித்தனின் தோளில் சாய்ந்து கொண்டு அழுதார் சாவித்திரி.
அப்பொழுது, ஜாகிங் உடையில் உள்ளே நுழைந்தான் விக்ரம். அவர்களது முகங்களைப் பார்த்துக் கொண்டு அப்படியே நின்றான்.
"சின்னா..." என்று கதறியபடி அவனை நோக்கி ஓடிச்சென்று அவனை கட்டிக் கொண்டு அழுதார் சாவித்திரி.
"என்ன ஆச்சு மாம்?"
"சின்னா, உன் மனசை திடப்படுத்திக்கோ"
" விஷயத்தை சொல்லுங்க"
" வைஷாலி... "
" வைஷாலி? "
"அவங்க வீடு, ஃபையர் ஆக்சிடென்ட்ல எரிஞ்சு போச்சு"
" ஆமாம், எனக்கு தெரியும்"
" தெரியுமா? தெரிஞ்சுமா இவ்வளவு சாதரணமா இருக்க?"
" வேற என்ன செய்யறது? அதையேவா நெனச்சுக்கிட்டு இருக்க முடியும்?"
" நீ என்னடா இப்படி பேசற?" என்றார் குழப்பத்துடன் சாவித்திரி.
"அவங்க வீடு மொத்தமா எரிஞ்சி சாம்பல் ஆயிடுச்சு. அதனால தான் நான் அவங்களை இங்க கூட்டிட்டு வந்துட்டேன்" என்று தனக்கு பின்னால் பார்த்தான் விக்ரம்.
வைஷாலி, கோப்பெருந்தேவியுடன் உள்ளே நுழைந்தாள். சந்தோஷ கண்ணீருடன் வைஷாலியை சந்தோஷமாய் அணைத்துக் கொண்டார் சாவித்திரி. அவர்களைப் பார்த்த விமலாதித்தன், துள்ளிக் குதித்தபடி அவர்களை நோக்கி ஓடினார். நந்தினியோ எளிதில் பெயரிட்டு விட முடியாத முகபாவத்துடன், பேயை பார்ப்பது போல் அவர்களை பார்த்துக் கொண்டு நின்றார்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top