24 மீண்டும் நிச்சயம்...
24 மீண்டும் நிச்சயம்...
நந்தினியை ஏன் காமினி திட்டினார் என்று ஒன்றும் புரியவில்லை சாவித்ரிக்கு.
"ஏன்டா, காமினி ஆன்ட்டி அம்மா மேல இவ்வளவு கோவபடுறாங்க?" என்றார் குழப்பத்துடன்
அவருக்கு விக்ரம் பதில் கூறும் முன், வைஷாலியிடம் இருந்து அழைப்பு வந்த அதே எண்ணுக்கு போன் செய்தார் நந்தினி.
"ஷ்ஷ்ஷ்...." என்றான் தனது ஆள்காட்டி விரலை உதட்டின் மீது வைத்து.
அந்த அழைப்பை ஏற்றாள் வைஷாலி.
"ஹாய் நந்து பாப்பா..."
"என்னோட ஆதார் நம்பர் உனக்கு எப்படி கிடைச்சது?" என்றார் நந்தினி கோவமாக.
"ஹாஹா... என் நம்பரை டிராக் பண்ணிட்ட போலருக்கு...?" என்று அவள் கிண்டலாக கேட்க, அதிர்ச்சியுடன் விக்ரமை பார்த்தார் சாவித்திரி.
நந்தினியும் அசந்து தான் போனார். இந்த பெண் அவர் எதிர்பார்த்ததைவிட ஆபத்தானவளாய் இருக்கிறாள். நடப்பதையெல்லாம் சரியாக கணித்து செயல்படுகிறாள்.
"உனக்கு என்னுடைய ஆதார் நம்பர் எப்படி கிடைச்சிதுன்னு கேட்டேன்"
"நந்தி மா, உன்னை மாதிரி பணக்காரங்க எல்லாம், அல்ப கவுரவத்துக்காக உதவாத வேலையெல்லாம் செய்வீங்க... இந்தியாவை விட்டு வெளியே போகவே போகாத நீ, உன்னுடைய பாஸ்போர்ட்டை ரெனிவல் பண்ற பாரு... அந்த மாதிரி..." என்றாள் நக்கலாக.
இதைப் பற்றி அவளுக்கு எப்படித் தெரியும் என்று புரியாததால், அமைதி காத்தார் நந்தினி.
"உன்னோட பாஸ்போர்ட்டை நீ வாங்குறதுக்கு முன்னாடி, நீ கொடுக்கிற ப்ரூஃப்ஸ் எத்தனை பேரோட கை மாறி போகணும்னு உனக்கு தெரியுமா?"
"அப்படின்னா, நீ பாஸ்போர்ட் ஆபீஸ்ல தான் வேலை செய்யுறியா?"
"உன்னை பத்தின டீடெயில்ஸ்ஸை தெரிஞ்சுக்க, நான் பாஸ்போர்ட் ஆபீஸ்ல தான் வேலை செய்யணும்னு எந்த அவசியமும் இல்ல" என்றாள் தெனாவெட்டாக
"அப்படின்னா உனக்கு எப்படி கிடைச்சது?"
"என்னுடைய *கைகள்* எல்லா ஆஃபீஸ்லயும் பரவி கிடக்கு..."
"என்னால உன்னோட ஃபோன் இஐஎம்ஐ நம்பரை சேஸ் பண்ண முடியாதுன்னு நினைக்கிறாயா?"
"ட்ரை பண்ணி பாரு" என்று சிரித்தாள் வைஷாலி.
அதற்கும் அவள் வேறு ஏதாவது திட்டம் வைத்திருப்பாள் என்பது புரிந்தது நந்தினிக்கு.
"யருடி நீ?" என்றார் பல்லைக் கடித்துக் கொண்டு நந்தினி.
"நியாயத்தின் கடவுள்" என்று அடித்தொண்டையில் கூறிவிட்டு சிரித்தாள்.
"நான் தான் வைஷாலியை விக்ரமுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு ஒத்துக்கிட்டேனே, அப்புறம் எதுக்காக என்னை இப்படி டார்ச்சர் பண்ணிட்டு இருக்க?"
"ஆனா கல்யாணம் இன்னும் நடக்கலையே செல்லம்... இந்த கல்யாணம் நடந்து முடியிற வரைக்கும், நானும் நீயும் பேசிக்கிட்டு இருக்கலாம். பை" அழைப்பை துண்டித்தாள் வைஷாலி.
கோபத்துடன் தனது கைபேசியை விட்டெறிந்தார் நந்தினி.
சிரித்தபடி நின்றிருந்த விக்ரமை விக்கித்து பார்த்தார் சாவித்திரி.
"என்னால நம்பவே முடியல, சின்னா. வைஷாலி இவ்வளவு தைரியசாலியான பொண்ணா?"
"நிச்சயமா சொல்றதுக்கு இல்லம்மா. ஒருவேளை, ஃபியூச்சர்ல அவ தைரியம் இன்னும் அதிகமாகலாம்" என்றான் சிரித்தபடி.
"அம்மாவை ஒருத்தர் கண்ட்ரோல் பண்றதை நான் பாக்குறது, இது தாண்டா ஃபர்ஸ்ட் டைம்... " என்றார் வியப்பில் இருந்து வெளியே வராதவராய்.
"நேரத்தை வீணாக்குனது போதும். சீக்கிரமா எங்களுக்கு கல்யாணம் பண்ணி வையுங்க" என்றான் விக்ரம்.
"அம்மாகிட்டயும், அவங்க பிள்ளைகிட்டயும் இதைப் பத்தி நான் பேசுறேன்"
"இன்னைக்கே அப்பாகிட்ட இதைப் பத்தி பேசுங்க"
சரி என்று தலையசைத்தபடி அங்கிருந்து செல்ல நினைத்த சாவித்திரி, நின்று,
"அதுக்கும் ஏதாவது ரகசிய திட்டம் வச்சிருக்கியா சின்னா?" என்றார்.
பதில் கூறாமல் சிரித்தான் விக்ரம்.
"கடவுளே... இந்த பசங்களுக்கு ரொம்ப தைரியம்" என்றபடி அங்கிருந்து சென்றார் சாவித்திரி. அதேநேரம், வைஷாலி தைரியசாலியான பெண்ணாக இருப்பதை நினைத்து அவர் நிம்மதி அடைந்தார். நந்தினியைப் பற்றி ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பதால், அவள் அவரை சமாளித்து விடுவாள் என்ற நம்பிக்கை அவருக்கு பிறந்தது.
மறுபுறம், கோப்பெருந்தேவியின் இடத்திற்கு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தார் நந்தினி, அவரது இருப்பிடத்தை தெரிந்து கொள்வதற்காக. அது மட்டுமல்லாமல், 'தாங்கள் இன்னும் பார்வதி நகரில் தான் இருக்கிறோம்' என்று வைஷாலி சொன்னது உண்மை தானா என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும் அவருக்கு. தரைதளம் வந்தவர்,
"சாவித்திரி, நம்ம போயி வைஷாலியோட அம்மாவை பார்த்து கல்யாணத்தை பேசி முடிக்கலாம்" என்றார்.
சாவித்திரி விமலாதித்தனை பார்க்க,
"சரிம்மா. நான் சின்னாகிட்ட அவங்க வீட்டு அட்ரசை கேட்கிறேன்" என்றார்.
"ம்ம்ம்ம்"
"ஞானம்... " என்று வேலைக்காரனை அழைத்தார் விமலாதித்தன்.
பவ்யமாய் அவர் முன் வந்து நின்றான் ஞானம்.
"சின்னாவை நான் வர சொன்னேன்னு சொல்லு"
"சரிங்க ஐயா" என்று கூறிவிட்டு, விக்ரமின் அறையை நோக்கி விரைந்தான் ஞானம்.
சிறிது நேரத்தில் தரைதளம் வந்தான் விக்ரம்.
"கூப்பிட்டீங்களா டாட்? "
"ஆமாம். நாங்க வைஷாலி வீட்டுக்கு போய், கோப்பெருந்தேவிகிட்ட கல்யாண விஷயம் பேசலாம்னு இருக்கோம்"
"தட்ஸ் கிரேட் "
"அவங்க வீட்டு அட்ரஸ் சொல்லு"
"நான் உங்களை கூட்டிகிட்டு போறேன்"
"நீ வரக்கூடாது" என்றார் நந்தினி பட்டேன்று.
"ஏன் பாட்டி? பூ முடிக்க போகும் போது தானே நம்ம வீட்டு வழக்கப்படி மாப்பிள்ளை உங்க கூட வரக்கூடாது? நீங்க என்ன பூ முடிக்கவா போறீங்க?" என்றான் விக்ரம்.
இதைப் பற்றியெல்லாம் விக்ரமுக்கு எப்படி தெரியும் என்று அதிசயித்த நந்தினி, இல்லை என்று தலையசைத்தார்.
"அப்புறம் நான் வர்றதுல என்ன பிரச்சனை?"
"சின்னா, நம்முடைய பழக்க வழக்கம் எல்லாம் உனக்கு எப்படி தெரியும்? நீ இந்தியாவிலேயே இல்லையே... நம்ம வகையறா கல்யாணத்திலும் நீ கலந்துகிட்டதில்லயே..."
"அம்மா, உலகம் கைக்குள்ள அடங்கி ரொம்ப நாளாச்சு" என்றான் சிரித்தபடி.
"நாளைக்கு காலைல நம்ம வைஷாலி வீட்டுக்கு போகலாம்" என்றார் விமலாதித்தன்.
"ஓகே, டாட்" என்றான் சாதாரணமாக விக்ரம்.
நந்தினியோ அவர்களது இருப்பிடத்தை தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருந்தார்
மறுநாள் காலை
முழுவதும் தயாரான நிலையில் மாப்பிள்ளை போல் வந்த விக்ரமை பார்த்து புன்னகைத்தார் சாவித்திரி.
அவர்கள் வைஷாலியின் வீட்டை நோக்கி புறப்பட்டார்கள். கார், பார்வதி நகரை நோக்கி பயணித்த போது சற்று தடுமாறித்தான் போனார் நந்தினி. வைஷாலி, முன்பு குடியிருந்த வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளி இருந்த ஒரு வீட்டின் முன் அவர்களது கார் நின்றது. அவர்களை கோப்பெருந்தேவி வரவேற்ற போது நந்தினி சங்கடத்திற்கு உள்ளானார். சுமேஷை மனதிற்குள் திட்டி தீர்த்தார். எவ்வளவு பெரிய முட்டாள் அவன். அவர்கள் பார்வதி நகரிலேயே வேறு ஒரு வீட்டிற்கு குடிபெயர்ந்து இருக்கிறார்கள். அது கூட தெரியாமல் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டதாய் கூறினானே...!
நந்தினியை பார்த்த கோப்பெருந்தேவிக்கும் சங்கடமாகத் தான் இருந்தது.
"எப்படி இருக்கீங்க கோப்பெருந்தேவி? எதுக்காக எங்ககிட்ட சொல்லாம அந்த வீட்டை காலி பண்ணிட்டு போயிட்டீங்க?" என்றார் விமலாதித்தன். அது நந்தினியை மேலும் சங்கடப்படுத்தியது.
"உங்க அம்மா உங்ககிட்ட எதுவும் சொல்லலையா? அவங்களுக்கு தான் எல்லாம் தெரியுமே...! உண்மையை சொல்லப் போனா..." என்று உண்மையை சொன்ன போனவரை தடுத்தார் நந்தினி.
"அதெல்லாம் முடிஞ்சு போன விஷயம்... நம்ம பசங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறோம். இப்போ அதையெல்லாம் பத்தி பேசுறது தேவையில்லாததுன்னு நினைக்கிறேன்" என்றார் மென்மையான குரலில், ஆனால் திடமாக.
'எவ்வளவு சாதாரணமாக சொல்லிவிட்டார்' என்பது போல் பல்லைக் கடித்தான் விக்ரம்.
"ஆக்ஸிஜன் ஹாஸ்பிடல்ல, கல்யாணம் நடந்ததா, நம்ப முடியாத விஷயத்தை வைஷாலி சொன்னா..."
"அவ சொன்னது உண்மை தான், கோப்பு. ஆனா அப்போ, அவ உங்க மகள்னு எங்களுக்கு தெரியாது" என்றார் சாவித்திரி தயக்கத்துடன்.
"அவங்க ரெண்டு பேருக்கும், முறைப்படி கல்யாணம் பண்ணி வைக்கிறதை பத்தி பேச தான் நாங்க இங்க வந்திருக்கோம்" என்றார் விமலாதித்தன்.
"உங்க அம்மாவுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் தானா?" என்று நேரடியாகவே கேட்டார் கோப்பெருந்தேவி.
"ஆமாம்... நிச்சயம் அவங்களுக்கு விருப்பம் தான்." என்றார் விமலாதித்தன் அவசரமாக.
"அப்படியா? உங்களுக்கு இந்த கல்யாணத்துல சம்மதமா?" என்று நந்தினியை நோக்கி கேள்விக்கணை வீசினார் கொப்பெருந்தேவி.
ஆமாம் என்று தலையசைத்தார் நந்தினி.
"நாங்க உங்க தகுதிக்கு சமமானவங்க இல்லையே...!"
விமலாதித்தன் அவருக்கு பதில் கூறும் முன், விக்ரம் முந்திக்கொண்டு பதிலளித்தான்.
"நம்ம ரெண்டு பேருடைய தகுதியை பத்தி பேச நாங்க இங்க வரல. கல்யாணம் பேசி முடிக்க தான் வந்திருக்கோம். அதுவும் என் தாத்தாவுடைய விருப்பத்தை நிறைவேற்ற மட்டும் இல்ல... வைஷாலி இப்போ என்னுடைய வைஃப். தெரிஞ்சோ தெரியாமலோ எங்களுடைய கல்யாணம் நடந்துடுச்சி. இதுக்கு பிறகு, நம்ம ரெண்டு பேருடைய தகுதியை பத்தி எல்லாம் பேச வேண்டிய அவசியமில்ல"
தன்னுடைய எரிச்சலை வெளியில் காட்டிக் கொள்ள முடியாமல் அமர்ந்திருந்தார் நந்தினி.
"ஆமாம் கோப்பு. வைஷாலின்னு வந்துட்டா, அதுல விக்ரமுக்கு எந்தவித மாற்று எண்ணமும் கிடையாது. தயவுசெய்து புரிஞ்சுக்கோங்க" என்றார் சாவித்திரி.
"வைசாலி எங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?"என்றான் விக்ரம்.
"அவளோட ரூம்ல இருக்கா" என்றார் கோப்பெருந்தேவி வைஷாலியின் அறையை பார்த்தபடி.
யாரும் எதிர்பார்க்காதபடி, அந்த அறையை நோக்கிச் சென்ற விக்ரம், கதவை பிடித்து தள்ளினான். கைகளைக் கட்டிக் கொண்டு, சுவற்றில் சாய்ந்து நின்றபடி, அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தாள் வைஷாலி. அவனை பார்த்து அவள் வியப்புற்றாள். அவளது கையைப் பிடித்து வரவேற்பறைக்கு அழைத்து வந்தான் விக்ரம். நம்பமுடியாத பார்வையுடன் அவனைப் பின்தொடர்ந்தாள் வைஷாலி.
"பத்து வருஷத்துக்கு முன்னாடி, நான் வைஷாலியோட கழுத்துல போட்டுவிட்ட செயினை நான் பார்க்கலாமா?" தான் பிடித்திருந்த வைஷாலியின் கையை விடாமல் கோப்பெருந்தேவியிடம் கேட்டான் விக்ரம்.
கோப்பெருந்தேவி, சாவித்ரியை பார்க்க, அவர் கொண்டு வாருங்கள் என்பது போல் ஜாடை காட்டினார். உள்ளே சென்று அதை கொண்டு வந்து விக்ரமிடம் கொடுத்தார் கோப்பெருந்தேவி. அவரிடமிருந்து அதை பெற்றுக் கொண்ட விக்ரம், எதைப் பற்றியும் யோசிக்காமல், அதை வைஷாலியின் கழுத்தில் அணிவித்தான். அவனது அதிரடி நடவடிக்கையால் திகைத்து நின்றாள் வைஷாலி. அதை அணிவித்த போது விக்ரமின் கூரிய பார்வை வைஷாலியின் முகத்தில் ஊன்றி நின்றது. அங்கிருந்த மற்றவர்களும் கூட அதிர்ச்சி அடைந்தார்கள் என கூற தேவையில்லை.
"இதுக்கப்புறம் இதை எப்பவும் நீ கழட்ட நினைக்காதே" என்றான் உரிமையுடன். அது கட்டளை போலவும், எச்சரிக்கையாகவும் ஒலித்தது.
வாயடைத்துப் போனாள் வைஷாலி.
"டிவியில வருவாரே ஃபேமஸான ஜோசியர் கோவர்தன், அவர்கிட்ட கான்சல்ட் பண்ணிட்டு, கல்யாண செய்தியை சொல்றோம். கல்யாணத்துக்கு முன்னாடி செய்ய வேண்டிய சடங்கை எல்லாம் நீங்க செய்ய ஆரம்பிச்சிடுங்க. நான் சொல்றது சரிதானே பாட்டி?" என்றான் விக்ரம்.
வேறு வழியில்லாமல் ஆமாம் என்று தலையசைத்தார் நந்தினி.
வந்த வேலை முடிந்ததால் அங்கிருந்து செல்ல வேண்டிய நேரம் வந்தது. விக்ரம் அதற்கு எந்த அவசரமும் காட்டவில்லை. தனது நடையின் வேகத்தை குறைத்து, மெல்ல பின்தங்கிய அவன், வைஷாலியை நோக்கி குனிந்து,
"என்னை காதலிக்க ஆரம்பிச்சுடு, பொண்டாட்டியே..." என்று கண்ணடித்து விட்டு சென்றான்.
வைஷாலியின் கை அனிச்சையாய் அவள் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை தொட்டுப் பார்த்தது.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top