23 வைஷாலியின் தந்திரம்

23 வைஷாலியின் தந்திரம்

"நான் உங்க கூட ஆஃபீஸ்க்கு வரல. என்னை இங்கேயே இறக்கி விடுங்க. நான் ஆட்டோவில் போயிக்குறேன்" என்றாள் வைஷாலி.

"பாட்டியோட ஆளுங்க உன்னை ஃபாலோ பண்ணி வர வாய்ப்பு இருக்கு. நான் சொல்றதை செய்" என்றான் விக்ரம் கண்டிப்புடன்.

அவன் சொல்வது போல் நடக்க வாய்ப்புள்ளது என்பதால் சரி என்று தலையசைத்தாள் வைஷாலி. அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தவுடன் நேரே தன் அறைக்கு அவளை அழைத்துச் சென்றான் விக்ரம். வரவேற்பாளர்க்கு ஃபோன் செய்து, தன் அறைக்கு காபி அனுப்புமாறு பணித்தான். சிறிது நேரத்தில் அங்கே வந்தான் சுதாகர்.

"உங்க அம்மா, அப்பா, பாட்டியோட பாஸ்போர்ட் எல்லாத்தையும் ரினீவ் பண்ணியாச்சு. இதெல்லாம் அதுக்காக கொடுத்த எக்ஸ்ட்ரா ஜெராக்ஸ் காப்பி ப்ரூஃப்." அவற்றை மேசை மீது வைத்தான் சுதாகர்.

அவற்றை எடுத்து பார்வையிட துவங்கினாள் வைஷாலி.

"சுதா, நீ வீட்டுக்கு போகும் போது வைஷாலியை உன்னோட கூட்டிக்கிட்டு போ" என்றான் விக்ரம்.

"கண்டிப்பா... வேலையை முடிச்சுட்டு கூட்டிகிட்டு போறேன்..." அங்கிருந்து சென்றான் சுதாகர்.

"எல்லாரும் அப்ராட் போறாங்களா?" என்றாள் வைஷாலி"

"அம்மாவும், அப்பாவும் ஒவ்வொரு வருஷமும் என்னை அமெரிக்காவில் வந்து பார்க்கிறது வழக்கம். ஆனா, பாட்டி ஒரு தடவை கூட இந்தியாவை விட்டு வெளியே போனதே இல்ல. ஆனாலும் அவங்க பாஸ்போர்ட்டையும் ரினீவ் பண்ணி வச்சிவோம்."

" ஓ... "

சட்டென்று வைஷாலியின் கண்கள் விரிவடைந்தது. அப்பொழுது, விக்ரம் கேட்ட காபியுடன் உள்ளே வந்தாள் வரவேற்பாளர் பெண். விக்ரமின் கவனம், அந்த பெண்ணின் மீது சென்ற அந்த நொடி பொழுதில், அவனது மேஜை மீதிருந்த துண்டு காகிதத்தையும் பேனாவையும் எடுத்து எதையோ குறித்துக் கொண்டு, மீண்டும் பேனாவை மேஜை மீது வைத்தாள் வைஷாலி. அவள் செய்தது எதையும் தான் கவனிக்கவில்லை என்பது போல் சாவகாசமாய் காபியை பருகினான் விக்ரம். அவள் என்ன செய்வாள் என்று அவனுக்குத் தெரியாதா என்ன? உள்ளுக்குள் நகைத்துக் கொண்டான். வைஷாலியும் காபியை பருகினாள்.

"அப்புறம்?" என்றான் கிண்டலாக.

"அப்புறம் என்ன?" என்று முகம் சுருக்கினாள்.

"நம்ம ஏதோஉரிமையைப் பத்தி பேசிக்கிட்டு இருந்தோம்ல?"

"நான் என்ன சொல்லணும்னு நினைக்கிறீங்க?"

"உண்மையை சொல்லு"

"என்ன உண்மை?"

"நீ என்னை காதலிக்கிற என்கிற உண்மை"

"உண்மையிலேயே உங்களை நான் காதலிக்கும் போது நிச்சயம் சொல்றேன்"

காபியை குடித்து முடித்து குவளையை மேஜையின் மீது வைத்துவிட்டு மீண்டும் அவளைப் பார்த்தபடி நாற்காலியில் சாய்ந்து அமர்ந்த விக்ரம்,

"நான் உனக்கு போட்டுவிட்ட செயின் எங்க?" என்றான்.

வைஷாலியின் கரம் அனிச்சையாய் அவள் கழுத்தை தொட்டது.

"உங்க பாட்டி எங்களை வீட்டைவிட்டு துரத்தினப்போ அதை நான் கழட்டிட்டேன்"

"ஏன்? நீ என்னை நம்பலையா?"

"ஒரு அகங்காரம் பிடிச்ச பொம்பளையோட பேரனை நான் எப்படி நம்பறது?"

"ஒரு நல்ல உள்ளம் படைச்ச தாத்தாவுடைய பேரனை நீ நம்பலாம் இல்லையா?"

அவனுக்கு பதில் அளிக்க வார்த்தை கிடைக்காமல் திணறினாள் வைஷாலி. சந்தேகமே இல்லை, அவன் தாத்தாவின் பேரன் தான்.

"எப்ப வேணும்னாலும் நொறுங்கி விழுந்துடும்முனு இருந்த நிலையில் நான் எந்த கற்பனைக் கோட்டையையும் கட்ட தயாரா இல்ல" என்றாள் உறுதியாய்.

"பொம்மியோட நம்பிக்கையை சம்பாதிக்க, பாட்டியோட பேரன் ரொம்ப கஷ்டப்பட்டு ஹார்ட் வொர்க் பண்ணனும் போல இருக்கே..."

ஒன்றும் கூறாமல் அவனை ஏறிட்டாள்  வைஷாலி.

தனது வேலையை முடித்துக்கொண்டு அங்கு வந்தான் சுதாகர். அப்போது வைஷாலியிடம் ஒரு பையை கொடுத்தான் விக்ரம்.

"என்ன இது?"

"திறந்து பாரு"

அதிலிருந்து, இஸ்லாமிய பெண்கள் அணியும் இரண்டு பர்தாக்களை வெளியில் எடுத்த வைஷாலி, விக்ரமை கேள்விக் குறியுடன் பார்த்தாள்.

"நீயும், ஆன்ட்டியும் வெளியில் வரும் போது, இதை போட்டுகிட்டு போங்க. இது உங்களை பாதுகாப்பா வைக்கும்"

சரி என்று தலையசைத்தாள் வைஷாலி.

"நீ எப்ப கிளம்ப போற?" என்றான் சுதாகர் விக்ரமிடம்.

"சரியா பதினஞ்சு நிமிஷம் கழிச்சு..."

"சரி, நாங்க கிளம்பறோம்"

விக்ரம் கொடுத்த பர்தாவை அணிந்து கொண்டு சுதாகருடன் புறப்பட்டாள் வைஷாலி. பதினைந்து நிமிடத்திற்கு பிறகு,

"என்னை இங்கே இறக்கி விடுங்க." என்ற வைஷாலியை, குழப்பத்துடன் பார்த்த சுதாகர்,

"இங்கேயா? எதுக்கு?" என்றான்.

"எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு"

"ஒன்னும் பிரச்சனை இல்ல. நான் வெயிட் பண்றேன். உங்க வேலைய முடிச்சுட்டு நீங்க வாங்க"

"இல்ல சுதாகர் அண்ணா நீங்க கிளம்புங்க"

"முடியவே முடியாது... விக்ரம் என்னை கொன்னுடுவான்"

"நீங்க என்னை இங்க இறக்கிவிட்டிங்கன்னு அவருக்கு எப்படி தெரியும்?"

"அவன் இப்போ எனக்கு போன் பண்ணுவான். அப்போ நான் அவனுக்கு சொல்லிடுவேன் இல்ல..."

*அடப்பாவி* என்பது போல் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு, தன் முகத்தை பார்த்தாவினால் மறைத்துக் கொண்டு, கீழே இறங்கினாள் வைஷாலி.

"இருங்க வைஷாலி நானும் வரேன்"

"வேண்டாம் வேண்டாம் நானே போய்க்கிறேன்..." என்று அவசரமாய் இறங்கி சென்றாள். அது சுதாகருக்கு சந்தேகத்தை கிளப்பியது.

காரை விட்டு கீழே இறங்கி அவளுக்கு தெரியாமல் அவளை பின் தொடர்ந்து சென்றான். அவள் ஒரு மொபைல் ஷாப்பினுள் நுழைவதை பார்த்து குழம்பினான். அதே நேரம் அவனுக்கு விக்ரம் போன் செய்தான்.

"விக்கி, வைஷாலி காரை நிறுத்தச் சொல்லி இறங்கினாங்க. நான் அவங்களை ஃபாலோ பண்ணிட்டு வந்தேன். அவங்க..."

"மொபைல் ஷாப்புக்கு போனாளா?" என்றான் அவனது பேச்சை வெட்டி.

"உனக்கு எப்படி தெரியும்?" என்று அதிசயித்தான் சுதாகர்.

தனக்கு எப்படி தெரியும் என்ற விஷயத்தை கூறினான் விக்ரம்.

"நெஜமாவா? "

"ஒரு கெஸ் தான்.... அவ அப்படித் தான் செய்வான்னு நினைச்சேன்" என்று சிரித்தான்.

"சூப்பர்..."

"உனக்கு ஒன்னும் தெரியாத மாதிரி அமைதியா போய் கார்ல உக்காந்துக்க"

"டன்"

மீண்டும் காருக்கு வந்து அமர்ந்துகொண்டான் சுதாகர். சற்று நேரத்தில் வைஷாலி வந்த பின் காரை கிளப்பிக் கொண்டு சென்றான்.

பொன்னகரம்

நிம்மதியிழந்து இங்குமங்கும் தனது அறைக்குள் உலவிக் கொண்டிருந்தார் நந்தினி தேவி. எப்படி, எங்கிருந்து ஆரம்பிப்பது என்று அவருக்கு புரியவில்லை. கோப்பெருந்தேவியும் வைஷாலியும் எங்கு இருக்கிறார்கள் என்பதும் அவருக்கு தெரியவில்லை. தாங்கள் பார்வதி நகரில் இருப்பதாய் வைஷாலி கூறினாள். ஆனால் சுமேஷ் அவர்கள் அங்கு இல்லை என்று கூறினான். அவர்கள் பார்வதி நகரிலேயே வேறு எங்கோ இருக்க வேண்டும்.

அவருடைய எண்ணம் தடைப்பட்டது, லேண்ட் லைன் ஃபோன் மணி அடித்த போது.

"கங்க்ராஜுலேஷன் நந்தி பாப்பா..."

 அந்த குரலை கேட்டு, நந்தினி உஷார் ஆனார். காலர் ஐடியில் ஒளிர்ந்த எண்களை குறித்து வைத்துக்கொண்டார்.

"நல்ல பிள்ளை மாதிரி கல்யாணத்துக்கு ஒத்துகிட்ட போல தெரியுது..."

"உனக்கு எப்படி தெரியும்?"

"அதை தெரிஞ்சிக்கிறதை தவிர வேற என்ன வேலை இருக்கு எனக்கு?"

"ஆமாம், நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்"

"ரொம்ப சந்தோஷம்... ஞாபகத்தில வச்சிக்கோ, ஏதாவது குண்டக்க மண்டக்க செய்யணும்னு நினைச்சா, ரொம்ப மோசமான விளைவுகளை நீ சந்திக்க வேண்டியிருக்கும்"

ஒன்றும் கூறாமல் அமைதியாய் இருந்தார் நந்தினி.

"அந்த அப்பாவி பொண்ணு வைஷாலியை ஏமாத்தலாம்னு நினைக்காத. நான் உயிரோட இருக்கிற வரைக்கும், அப்படி நடக்க விடமாட்டேன்"

தன் தலையில் கை வைத்துக் கொண்டார் நந்தினி.

"உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும். உன்னுடைய புத்திசாலித்தனத்தை வைசாலி விஷயத்தில்  காட்ட நினைக்காத. வைசாலி வேணுமுன்னா அப்பாவி பொண்ணா இருக்கலாம். ஆனா உன் பேரன் அப்பாவி இல்ல. அவருக்கு மட்டும் உன் மேல சந்தேகம் வர ஆரம்பிச்சிட்டா, உன்னுடைய நாடகமெல்லாம் அவர்கிட்ட எடுபடாது. ஞாபகத்தில் வச்சுக்கோ"

அழைப்பை துண்டித்தாள் வைஷாலி.

அவசரமாய் காமினிக்கு போன் செய்தார் நந்தினி.

"சொல்லு நந்து"

"நான் சொல்ற நம்பரை எழுதிக்கோ. இந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு கண்டுபிடி. அந்த பொண்ண நான் கண்டுபிடிச்சாகணும்"

"எந்த பொண்ணு?"

"அவளுக்கு நம்மளுடைய எல்லா நாடகமும் தெரிஞ்சிருக்கு. ஃபோனை போட்டு என் உயிரை வாங்குறா..."

"இதை நீ ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல?"

"அவளைப் பத்தி எதுவுமே தெரியாம உன்கிட்ட நான் என்ன சொல்றது? இப்போ தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எனக்கு மறுபடி ஃபோன் பண்ணா. காலர் ஐடி மூலமா அவ நம்பரை நான் தெரிஞ்சுக்கிட்டேன்."

"சரி. அந்த நம்பரை எனக்கு கொடு. நான் அவ அட்ரஸை கண்டு பிடிச்சு சொல்றேன்"

 நந்தினி அந்த எண்களை கூற, குறித்துக் கொண்டார் காமினி.

"இப்போ நான் யாருன்னு அவளுக்கு காட்றேன்" என்று பல்லைக் கடித்துக் கொண்டு அகங்காரத்துடன் கூறினார் நந்தினி.

அவர்கள் அழைப்பை துண்டித்து கொண்டார்கள். வழக்கம் போல, தனது காதில் இருந்து ப்ளூடூத்தை சிரித்தபடி எடுத்தான் விக்ரம், பொன்னகரத்தில் நுழைந்த படி.

"என்ன சின்னா விஷயம்? வரும் போதே சிரிச்சுக்கிட்டே வர?" என்றார் சாவித்திரி.

"வழக்கமா எல்லார் வீட்லயும், மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையில சண்டை நடக்கும். ஆனா நம்ம வீட்ல, அது வேற மாதிரி நடக்கப் போகுது" என்று சிரித்தான் விக்ரம்.

"என்னடா சொல்ற?"

"இந்த வீட்டுல, உங்க மாமியாரும், உங்க மருமகளும் சண்டை போட்டுக்க போறாங்க. நமக்கு செம என்டர்டைன்மென்ட் " என்று சிரித்தான்.

"சின்னா, நீ நினைக்கிற மாதிரி அம்மா அவ்வளவு சாதாரணமானவங்க கிடையாது. அவங்ககிட்ட ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும். வைஷாலியை நினைச்சா எனக்கு ரொம்ப பயமா இருக்கு"

"நீங்க கவலைப்படாதீங்க. நான் தான் இருக்கேன்ல? நான் அவளை பார்த்துக்கிறேன்"

"அந்த பெண்ணை அம்மா எப்படி எல்லாம் தொல்லை படுத்த போறாங்களோ எனக்கு தெரியல..." என்றார் வருத்தமாக.

"மாம், நீங்க வைஷாலியை பத்தி கவலைப் படுறதை விட்டுவிட்டு, உங்க மாமியாரை பத்தி கவலை படுங்க"

"சும்மா இரு சின்னா... அவ கொஞ்சம் அதிகமா பேசுறா அப்படிங்கறதுகாக, அம்மா மாதிரி ஒரு பவர்ஃபுல்லான ஆளை அவ சமாளிப்பான்னு எப்படி நினைக்க முடியும்?"

"உங்களுக்கு ஞாபகம் இருக்கா, ஒரு நாள், நம்ம லேண்ட் லைனுக்கு வந்த ஃபோனை எடுக்க பாட்டி தப தபன்னு ஓடி வந்தாங்களே...?"

ஆமாம் என்று தலையசைத்தார் சாவித்ரி.

"அது வைஷாலியோட கால் தான்"

"என்னடா சொல்ற நீ?" என்று பதறினார் சாவித்திரி.

 உதட்டை மடித்து ஆமாம் என்று தலையசைத்தான் விக்ரம்.

"அவ தான் பாட்டியை டார்ச்சர் பண்ணிக்கிட்டு இருக்கா"

"அப்படின்னா அவளை நேரில் பார்த்த போது ஏன் அவங்க ஒண்ணுமே சொல்லல?"

"ஏன்னா, அந்த பொண்ணு வைஷாலி தான்னு பாட்டிக்கு தெரியாது"

பிரமித்து நின்றார் சாவித்திரி. தன் விரலை சொடுக்கினான் விக்ரம். சிரித்தபடி அவரிடம் அனைத்தையும் கூறி முடித்தான்.

"இதெல்லாம் உண்மையா?"

"ஆமாம் "

"என்னால நம்பவே முடியல"

"நான் உங்களை நம்ப வைக்கிறேன்"

"எப்படி? "

"என் கூட வாங்க" அவர் கையை பிடித்து தன் அறைக்கு அழைத்துச் சென்றான் விக்ரம்.

 "அம்மா என்னைக் கூப்பிடுவாங்க"

"இன்னும் ஒரு மணி நேரத்துக்கு அவங்க உங்களை கூப்பிட மாட்டாங்க" என்றான் விக்ரம்.

"ஏன்?"

"ஏன்னு இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களுக்கே புரியும்"

அவரை சோபாவில் அமர வைத்துவிட்டு காத்திருந்தான் விக்ரம். சாவித்ரிக்கு ஒன்றுமே புரியவில்லை அவன் ஏன் தன்னை அங்கு காத்திருக்க செய்கிறான் என்று. தான் வைத்திருந்த மற்றொரு கைபேசியுடன்  இயர் ஃபோனை இணைத்துவிட்டு அமர்ந்திருந்தான்.

அடுத்த பத்தாவது  நிமிடம் காமினியிடமிருந்து நந்தினிக்கு அழைப்பு வந்தது. இயர் போனின் ஒரு பக்கத்தை சாவித்திரியிடம் கொடுத்துவிட்டு, மற்றொரு பக்கத்தை தன் காதில் பொருத்திக் கொண்டான் விக்ரம்

"உன் மனசுல நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க?" என்று எரிந்து விழுந்தார் காமினி.

"என்ன ஆச்சு காமினி?"

"வாயை மூடு... நான் இங்க வேலை வெட்டி இல்லாம இருக்கேன்னு நினைச்சுக்கிட்டு இருக்கியா?"

"விஷயத்தை சொல்லிட்டு அதுக்கப்புறம் என் மேல கோபப் படு" என்றார் நந்தினி.

"நீ கொடுத்த நம்பர் உன்னோட நம்பர்"

"என்ன்னனனது?" என்று அதிர்ந்தார் நந்தினி.

"என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது? ஒரு புது நம்பரை வாங்கி அதை என்கிட்ட குடுத்தியா?"

"இல்ல காமினி. நான் எந்த புது நம்பரும் வாங்கல. அதை வேற யாரோ தான் செஞ்சிருக்கணும்"

"உன்னோட ஆதார் நம்பர் இல்லாம, உன்னோட பேர்ல  எப்படி புது நம்பர் வாங்கியிருக்க முடியும்? நீ குடுக்காம அது எப்படி மத்தவங்க கைக்கு போயிருக்க முடியும்?"

"இல்ல. நான் யாருகிட்டயும் என்னோட ஆதார் நம்பரை கொடுக்கல "

மேலும் அவர் கூறியதைக் கேட்க விரும்பாமல் அழைப்பை துண்டித்தார் காமினி. என்ன நடக்கிறது என்று புரியாமல், விழுந்து விழுந்து சிரித்த விக்ரமை பார்த்துக் கொண்டிருந்தார் சாவித்திரி.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top