21 நந்தினியின் அதிர்ச்சி

21 நந்தினியின் அதிர்ச்சி...

தன் மனதிற்கு பிடித்த ஜோசியர் கோவர்தனை தன் வீட்டில் பார்த்து, சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனார் நந்தினிதேவி. அந்த சந்தோஷம் தந்த மயக்கத்தில், கோவர்தன் எப்படி அங்கு வந்தார் என்ற நிதர்சனத்தை யோசிக்க தவறினார் அவர். இருகரம் கூப்பி அவரை வரவேற்றார். சாவித்திரியும்  அவருடன் வாசல் வரை சென்று அவரை வரவேற்றார்.

"வணக்கம் கோவர்தன் ஐயா..."

"வணக்கம் ராணியம்மா"

"நீங்க எங்க வீட்டுக்கு வந்தது நாங்க செஞ்ச புண்ணியம். உட்காருங்க "

சமையலறை இருந்த திசை பக்கம் திரும்பி,

"ஜெயம்மா, ஐயாவுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வா" என்று உத்தரவிட்டார். 

"நீங்க உங்க பேரன் விக்ரமாதித்யாவுக்கு தான் நன்றி சொல்லணும்" என்றார் கோவர்தன்.

"விக்ரமா?" என்றார் நந்தினி ஆச்சரியமாய் சாவித்திரியை  பார்த்தபடி.

அதைப் பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்பது போல் தனது தோள்களை குலுக்கினார்  சாவித்திரி.

"இவர் தான் என்னை கூட்டிக்கொண்டு வந்தார்" என்றார் கோவர்தன்.

விக்ரம் வருவதை பார்த்து புன்னகைத்தார் நந்தினி.

"இவரை நீயா கூட்டிகிட்டு வந்த விக்ரம்?"

"ஆமாம் பாட்டி. நீங்க தானே சொன்னீங்க, இவர் தான் உங்களுடைய ஃபேவரைட் அஸ்ட்ராலஜர்னு..."

ஆமாம் என்று தலையசைத்தார் நந்தினி தேவி.

கோவர்தனுக்கு பழச்சாறு கொண்டு வந்தார் ஜெயம்மா. அதை அவரிடமிருந்து பெற்று, தானே அவரிடம் வழங்கினார் நந்தினிதேவி. நந்தினிதேவிக்கு கேட்காத வண்ணம், சாவித்திரியின் காதில் ஏதோ ரகசியம் உரைத்துவிட்டு, சோபாவில் அமர்ந்து கொண்டான் விக்ரம்.

"சின்னா, நல்லகாலம் இவரை நீ கூட்டிக்கிட்டு வந்த... இரு வரேன்" அதற்கு மேல் ஒன்றும் கூறாமல், அங்கிருந்து தன் அறையை நோக்கி சென்றார் சாவித்திரி.

அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், கோவர்தனிடம்   உரையாடத் தொடங்கினார் நந்தினி.

"நான் உங்களைப் பத்தியும், உங்கள் குடும்பத்தைப் பத்தியும் நிறைய கேள்விப்பட்டிருக்கேன். எங்க அப்பா உங்க குடும்ப பாரம்பரியம் பத்தி நிறைய சொல்லியிருக்கார்" என்றார் கோவர்தன்.

நந்தினி தேவியின் முகத்தில் பெருமை தாண்டவமாடியது.

"உங்களுடைய ப்ரோக்ராமை நான் மிஸ் பண்ணவே மாட்டேன். ஏன்னா, நீங்க சொன்னது எதுவுமே தப்பா போனதே இல்ல. அவ்வளவும் தேவ வாக்கு... " என்று அவரை வாயாரப் புகழ்ந்தார் நந்தினி.

சாவித்திரி, கையில் ஒரு நோட்டுப் புத்தகத்துடன், படி இறங்கி வருவதை பார்த்தார் நந்தினி. அதை கோவர்தனிடம் நீட்டினார் சாவித்திரி.

"எங்க வீட்டுக்கு நீங்க வந்துட்டீங்க... அப்படியே என் மகனோட ஜாதகத்தையும் பார்த்துடுங்களேன். அவனுக்கு எப்ப கல்யாணம் ஆகும்ன்னு சொல்லுங்களேன்"

அதைக் கேட்டவுடன் நந்தினியின் முகம் வெளிறிப் போனது.

"என்ன சாவித்திரி நீ? அவர் நம்மளுடைய விருந்தாளி. அவரை ஏன் தொல்லை செய்ற?"

"இதுல எனக்கு எந்த சிரமமும் இல்ல. இது என்னுடைய வேலை தானே..." சாவித்திரியின் கையிலிருந்து அந்த ஜாதக புத்தகத்தை வாங்கிக் கொண்டார் கோவர்தன்.

"இந்த ஜாதகத்தைப் பொறுத்த வரைக்கும், இவருக்கு இந்த நேரம் கல்யாணம் ஆகி இருக்கணுமே?" என்றார் யோசனையுடன்.

"ஆமாம். ஆயிடுச்சி..." என்றான் விக்ரம் தயக்கமின்றி.

அவனை குழப்பத்துடன் பார்த்தார் கோவர்தன்.

"ஆனா, ஜாதக காரருக்கு எப்ப கல்யாணம் ஆகும்னு நீங்க கேட்டீங்களே?"

"என் ஜாதகப்படி, என்னுடைய முதல் மனைவி இறந்து போயிடுவாங்க இல்லையா?"

"இல்லையே... நிச்சயம் இல்ல. உங்க மனைவி இறந்து போயிடுவாங்கன்னு யார் சொன்னது? உங்களுக்கு ஒரே ஒரு மனைவி தான். நீங்க அவங்க கூட ரொம்ப நாள் சந்தோஷமா இருப்பீங்க"

"நீங்க என்ன சொல்றீங்க சார்? அந்த ஜோசியர் சொன்னதை நம்பி, என்னுடைய பாட்டி இரண்டு நாளில் சாகப்போற ஒரு பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சாங்க... ஏன்னா, நான் கல்யாணம் பண்ணிக்கிற பொண்ணு உயிரோடு இருக்கமாட்டா, இறந்து போய்விடுவான்னு எங்க ஜோசியர் சொன்னாரு"

"அது சுத்த பித்தலாட்டம்... உங்களை யாரோ நல்லா ஏமாத்தி இருக்காங்க... உங்களுடைய ஜாதகம், லட்சத்தில் ஒன்னு... விசேஷ ஜாதகம்... நீங்க உங்க வாழ்க்கையில ரொம்ப சந்தோஷமா இருப்பீங்க. உங்க மனைவி உங்களுக்கு முதுகெலும்பா இருந்து தாங்கி பிடிப்பாங்க. அவங்களுக்கு ஆயுசு கெட்டி. அந்த பொண்ணு நிச்சயம் உயிரோட தான் இருப்பாங்க"

"அப்படின்னா நான் நிச்சயம் அவங்களை சந்திப்பேனா?" என்றான் விக்ரம் ஆர்வத்துடன், ஓரக்கண்ணால் நந்தினியை பார்த்தபடி.

"ரொம்ப சீக்கிரமே நீங்க அவங்களை சந்திப்பீங்க. அவங்க உங்களுக்கு ரொம்ப பக்கத்துல தான் இருக்காங்க. இன்னும் கொஞ்ச நாளில் நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்துடுவீங்க. நீங்க ரெண்டு பேரும், ஒருத்தருக்காக ஒருத்தர் பிறந்தவங்க. இது நடக்கலைன்னா, நான் என்னுடைய தொழிலை விட்டுடறேன்"

அதைக் கேட்ட நந்தினி எரிச்சல் அடைந்தார்.

"அவ உயிரோட இருப்பான்னு சொன்னீங்களே... அதுக்கு ரொம்ப நன்றி...! கடவுளே, சீக்கிரம் என் மருமகளை என்கிட்ட கொண்டு வந்து சேத்துடு" என்றார் சாவித்திரி வெளிப்படையாக.

"என்னோட பாட்டி ஒருத்தர்கிட்ட ஏமாந்திருக்காங்கன்னு என்னால நம்பவே முடியல. நான் அவங்களை ரொம்ப புத்திசாலின்னு நினைச்சுகிட்டு இருந்தேன். இப்போ நான் என்ன செய்யுறது பாட்டி? இப்போ, நான் நீங்க சொன்னதை நம்புறதா? இல்ல, உங்களுடைய ஃபேவரைட் ஜோசியர் சொன்னதை நம்புறதா? அவர் சொன்னதை நீங்க மறுத்து பேசுவீங்களா?" என்றான் நந்தினியிடம்.

அவனுக்கு என்ன பதில் கூறுவது என்று புரியவில்லை, அதுவும் அவருக்கு பிடித்த ஜோசியரின் முன்னால்...

"இல்ல... "

"எப்படி நீங்க யாரோ ஒரு அறை வேக்காடு ஜோசியன் சொன்னதை நம்பி, வேற நல்ல ஜோசியரை கலந்தாலோசிக்காம இவருக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க?" என்றார் கோவர்தன்.

"எல்லாம் விதி ஜோசியரே...! அந்த பொண்ணோட பெயர் தான், விக்ரம் பெயரில் எழுதி இருந்ததுன்னா அதை யாரால் மாத்த முடியும்?" என்றார் சாவித்திரி.

"நீங்க சொல்றதும் சரி தான். சில விஷயங்களை நம்மால் மாத்த முடியாது. ஏன்னா அது ஆண்டவனுடைய கட்டளை" என்றார் கோவர்தன்.

"எங்களுக்கு அந்த பொண்ணோட பெயர் கூட தெரியாது" என்றார் சாவித்திரி வருத்தத்துடன்.

"ஒன்னும் கவலைப்படாதீங்க. சீக்கிரமே அவளை பத்தின எல்லா விஷயமும் உங்களுக்கு தெரிய வரும்"

அதைக்கேட்டு சந்தோஷமானார் சாவித்திரி. விக்ரமோ நந்தினியையே பார்த்துக் கொண்டிருந்தான். அவருடைய இயலாமை நிலையை பார்க்கவே பூறிப்பாக இருந்தது அவனுக்கு.

மிகச் சிறந்த மதிய உணவை பரிமாறி, கோவர்த்தனை கவனித்தார் சாவித்திரி. நந்தினியோ இருதலைக் கொள்ளி எறும்பாய் தவித்துக் கொண்டிருந்தார். கோவர்தன் சீக்கிரம் அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று நினைத்தார் அவர். அவர் கிளம்பும் நேரம் வந்தவுடன், அவரை வழியனுப்பி வைத்து விட்டு தன் அறைக்கு விரைந்தார்.

தனது கைப்பேசியை எடுத்து, கோப்பெருந்தேவியும், வைஷாலியையும் கண்காணிக்க தான் நிர்ணயம் செய்திருந்த ஆளுக்கு ஃபோன் செய்தார்.

"நீ சென்னைக்கு வந்துட்டியா இல்லையா?"  என்றார் எரிச்சலுடன்.

"நானே உங்களுக்கு ஃபோன் செய்யலாம்னு இருந்தேன். அதுக்குள்ள நீங்களே எனக்கு ஃபோன் பண்ணிட்டீங்க" என்றான் சுமேஷ்.

அவன் குரலில் இருந்த பதட்டத்தைப் உணர்ந்தார் நந்தினி.

"என்ன விஷயம் சொல்லு"

"கோப்பெருந்தேவியும் வைஷாலியும் எங்க போனாங்க?" என்றான்.

"என்ன??? நீ என்ன கேட்ட?" என்றார் சுமேஷிடம் இருந்த அதே பதற்றத்துடன்.

"அவங்க இங்க இல்ல "

"எங்கேயாவது போயிருப்பாங்க"

"இல்லங்க ராணியம்மா... அவங்க பார்வதி நகர்ல இல்ல. வீட்டை காலி பண்ணிக்கிட்டு வேற எங்கயோ போயிட்டாங்க."

"எங்க போனாங்க?"

"தெரியலம்மா... பார்வதி நகர்ல இருக்குற ஜனங்களே ஆச்சரியபடுறாங்க. ஏன்னா யாருக்கும் அவங்களை பத்தி எதுவுமே தெரியல. நேத்து சாயங்காலம் வரைக்கும் அவங்க இங்க தான் இருந்தாங்களாம். ஆனா இன்னைக்கு காலையில, அவங்க இங்க இல்ல. எப்படி ஒரே ராத்திரியில அவங்க வீட்டை காலி பண்ணாங்கன்னு யாருக்கும் ஒன்னும் புரியல."

நந்தினி தேவிக்கு அதிர்ச்சியாய் இருந்தது. அவருக்கு சந்தோஷப்படுவதா, வருத்தப்படுவதா என்றே புரியவில்லை. அவர் கையை விட்டு அவர்கள் நழுவி விட்டது அவருக்கு வருத்தம். அவர்கள் விக்ரமின் பார்வையை விட்டு சென்றுவிட்டது சந்தோஷம்... ( அவர் அப்படித் தான் நினைத்தார் )

"நீ என்ன செய்வியோ எனக்குத் தெரியாது. அவங்க எங்க இருக்காங்கன்னு எனக்கு தெரிஞ்சாகனும்" என்றார் நந்தினி.

"நான் முயற்சி செய்றேன்" என்றான் நம்பிக்கை இல்லாமல்.

"கோப்பெருந்தேவி, டேவிட் ஆசீர்வாதம்கிட்ட தானே வேலை செஞ்சுகிட்டு இருக்கா? அவ நிச்சயம் வேலைக்கு வருவா. அங்க போய் அவளை பிடி" என்று அழைப்பை துண்டித்தார் நந்தினி எரிச்சலுடன்.

நந்தினியின் கைபேசியுடன் இணைக்கப்பட்டிருந்த ப்ளூடூத்தை ஆஃப் செய்து புன்னகைத்தான் விக்ரம். நந்தினியின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொண்ட விக்ரம் செய்திருந்த ஏற்பாடு அது.

சுதாகருக்கு ஃபோன் செய்தான் விக்ரம்.

"சொல்லு விக்கி "

"வைஷாலியும், கோப்பு ஆன்ட்டியும் எப்படி இருக்காங்க?"

"சேஃபா இருக்காங்க"

"என்ன செய்றாங்க?"

"தெரியல. இப்ப தான் நான் என் அம்மாவோட அவங்களுக்கு சாப்பாடு கொண்டு போக போறேன்"

"தேங்க்யூ சுதா... "

"உன் தேங்க்ஸ்ஸை நீயே வச்சுக்கோ" என்று சிரித்தபடி அழைப்பை துண்டித்தான் சுதாகர்.

சுதாகருடைய அம்மா, சாப்பாட்டு கூடையுடன் வந்தார்.

"வா போகலாம்" என்றார்.

வைஷாலி இருந்த பகுதிக்கு அவர்கள் வந்தார்கள். ஆம், அவர்களை சுதாகரின் வீட்டில் பாதுகாப்பாய் வைத்திருந்தான் விக்ரம். வீட்டை காலி செய்து கொண்டு விடியற்காலையில் அவர்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள். மிகுந்த அசதியுடன் இருந்ததால் பகலெல்லாம் உறங்கி விட்டு அப்போது தான் கண்விழித்து இருந்தார்கள்.

சுதாகர் கதவைத் தட்ட, வைஷாலி கதவை திறந்தாள்.

"ஹலோ வைஷாலி..."

"ஹலோ, உள்ள வாங்க "

"இவங்க என்னோட அம்மா" என்று அறிமுகம் செய்து வைத்தான் சுதாகர்.

"வணக்கம் ஆன்ட்டி" என்று கரம் கூப்பி அவரை நமஸ்கரித்தாள் வைஷாலி.

"இவங்க தான் மா, மிஸஸ் வைஷாலி விக்ரமாதித்யா... விக்ரமோட ஒய்ஃப்" என்றான் வைஷாலியின் முகம் போன போக்கை பார்த்து சிரிப்பை அடக்கியபடி,  சுதாகர்.

"ஹாய்" என்றார் அவனுடைய அம்மா கல்யாணி.

"அம்மா, சுதாகர் அண்ணனும், அவங்க அம்மாவும் வந்திருக்காங்க" என்றாள் வைஷாலி.

"இதோ வரேன்" என்று கூறியபடி முகத்தை துடைத்தபடி வெளியே வந்தார் கோப்பெருந்தேவி.

"நீங்க கோப்பெருந்தேவி தானே?" என்றார் கல்யாணி...

"ஆமாம் உங்க குரல் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு..." என்றார் கோப்பு.

"கோப்பு, நான் தாண்டி கல்யாணி... தஞ்சாவூரில் அன்னை தெரசா ஸ்கூல்ல படிச்சமே..."

 கோப்பெருந்தேவியின் முகம் பிரகாசம் அடைந்தது.

"கல்லு... நீயா...?"

இருவரும் ஆரத் தழுவிக் கொண்டார்கள். சுதாகரும், வைஷாலியும் ஒருவரை ஒருவர் ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டார்கள்.

"உன்னுடைய குரல் மாறவேயில்லை கல்லு..."

"நீ கொஞ்சம் கூட மாறாம அப்படியே இருக்க"

"நீங்க குடும்பத்தோட   திருவண்ணாமலைக்கு தானே போனிங்க?"

"ஆமாம். கல்யாணத்துக்கு பிறகு நான் என் ஹஸ்பண்ட் கூட சென்னைக்கு வந்துட்டேன். உங்க கதையை பத்தி சுதாகர் சொன்னான். ஆனா, அது நீயா இருப்பேன்னு நான் நினைச்சு கூட பாக்கல" என்றார் கல்யாணி.

"அது ரொம்ப பெரிய கதை" என்றார் கோப்பெருந்தேவி.

"வைஷாலி, இவங்க ரெண்டு பேரும் பழைய கதை எல்லாம் பேசி ரொம்ப பிசியா இருக்க போறாங்கன்னு நினைக்கிறேன்" என்றான் சுதாகர்.

கோப்பெருந்தேவியும் கல்யாணியும் ஆம் என்று சிரித்தார்கள்.

"முப்பது வருஷம் கழிச்சு பார்க்கிறோமே... சும்மாவா?" என்றார் கல்யாணி.

"அம்மா, அவங்க ஒர்கிங் வுமன். அதை மறந்துடாதீங்க"

"பரவாயில்ல சுதா. இன்னும் கொஞ்ச நாளைக்கு நான் வீட்டில் இருந்து தான் வேலை செய்யப் போறேன். ஆசிர்வாதம் சார் என்னுடைய ராஜினாமாவை ஏத்துக்கல. வீட்டிலிருந்தே வேலை செய்ய சொல்லிட்டாரு"

"இது ரொம்ப நல்ல விஷயம்... ஒரு உண்மையான வொர்க்கரை யாரும் இழக்க நினைக்கமாட்டாங்க"

"ஆமாம். யாராவது என்னை பத்தி கேட்டு வந்தா, நான் வேலையை ராஜினாமா செஞ்சிட்டு போயிட்டதா சொல்றேன்னு ஆசிர்வாதம் சார் சொல்லி இருக்காரு"

"நல்லதா போச்சு. விக்கி இனிமே ரிலாக்ஸா இருப்பான்"

"ஆனா அதுக்காக கோப்பு தாராளமா இருக்கக்கூடாது. கொஞ்ச நாளைக்கு அவங்க வீட்டை விட்டு வெளியில் வராமல் இருக்கிறது தான் நல்லது" என்றார் கல்யாணி.

"நீங்க கவலைப்படாதீங்க மா. விக்ரம் பார்த்துக்குவான்" என்று சிரித்தான் சுதாகர்.

பொன்னகரம்

கோவர்தன் கூறிய விஷயங்களை, சாவித்திரி கூறிய போது, அதிர்ச்சி அடைந்தார் விமலாதித்தன்.

"என்னால இதை நம்பவே முடியல. அந்த பொண்ணு இன்னும் உயிரோடதான் இருப்பாளா?" என்றார் நம்பமுடியாமல்.

"எனக்கு என்ன தெரியும்? கோவர்தன் சார் சொன்னதை நான் உங்ககிட்ட சொன்னேன்" என்றார் சாவித்திரி.

"சின்னா என்ன சொன்னான்?"

"பொம்மியை நெனச்சு அவன் வருத்தத்தில் இருந்தாலும், தான் கல்யாணம் பண்ணிக்கிட்ட அந்த பொண்ணு உயிரோட இருப்பான்னு கேட்டு நிம்மதியா இருக்கான்."

"என்ன நடக்குதுன்னே எனக்கு ஒன்னும் புரியல" என்றார் அலுப்புடன் விமலாதித்தன்.

உள்ளூர நகைத்துக் கொண்டார் சாவித்திரி. அகங்காரம் பிடித்த அம்மாவுக்கு மகனாய் பிறந்தால், இப்படி குழம்பித்தான் தவிக்க வேண்டும் என்று நினைத்தார் அவர்.

மறுநாள்

தனது தோழி காமினியையும் அவருடைய பேத்தி ரோஷினியையும் வரவேற்றார் நந்தினி.

"சாவித்ரி இங்க வா, நம்ம வீட்டுக்கு யார் வந்திருக்கானு பாரு" என்றார் நந்தினி.

சங்கடத்துடன் அவர்களைப் பார்த்து புன்னகைத்தார் சாவித்திரி. இது எதிர்பாராதது. இவர்கள் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

"அம்மா, இவங்களுக்கு நான் குடிக்க ஏதாவது கொண்டு வர்றேன்" என்று சமையல் அறைக்கு விரைந்தார் சாவித்திரி.

அவர் விக்ரமுக்கு போன் செய்தால், அவன் எடுக்கவில்லை.

"எதுக்காக இந்த பையன் என்னோட போனை எடுக்க மாட்டேங்குறான் தெரியலையே... இப்போ இவங்க வந்திருக்கிற விஷயத்தை நான் எப்படி அவனுக்கு சொல்றது?" என்று புலம்பி  தவித்தார்

அதே நேரம், விக்ரமின் குரல் கேட்டது. சாவித்ரியை அழைத்தபடி அவன் வீட்டின் உள்ளே ஓடிவந்தான்.

"அம்மா நீங்க எங்க இருக்கீங்க?"

வரவேற்பறையில் அமர்ந்திருந்த நந்தினிக்கோ, அவரது தோழிக்கோ எந்த முக்கியத்துவமும் அளிக்காமல் அவன் சாவித்திரியை தேடினான். அவர் சமையலறையிலிருந்து எட்டிப்பார்க்க, அவரை நோக்கி சந்தோஷமாய் ஓடினான் விக்ரம். சாவித்திரியை தூக்கிக்கொண்டு அதகளம் செய்தான். அவன் செய்த அட்டகாசத்தை ஒன்றும் புரியாமல் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார் நந்தினி. இதற்கு முன் அவன் எப்பொழுதும் இப்படியெல்லாம் செய்தது இல்லையே...!

"சின்னா, என்ன இது? என்னை கீழே இறக்கி விடு"

அவரை கீழே இறக்கிவிட்டு சந்தோஷமாய் அணைத்துக் கொண்டான்.

"நான் அவளை கண்டுபிடிச்சிட்டேன் மா"

"யாரை சின்னா?"

"என்னோட வைஃபை"

அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்த காமினியை கவனித்தார் நந்தினி.

"நிஜமாவா?" என்று சிலாகித்தார் சாவித்திரி.

"ஆமாம் மா" தனக்கு இடப்புறமும், வலப்புறமும் பார்த்து விட்டு, வெளியே ஓடி சென்று, வைஷாலியை உள்ளே இழுத்து வந்தான் விக்ரம்.

மருண்ட பார்வையுடன், உண்மையாய் பயந்தவள் போலவே வந்து நின்றாள் வைஷாலி. தான் அமர்ந்து இருந்த இருக்கையை விட்டு எழுந்து நின்றார் நந்தினி, சிவராமனின் மகளை பார்த்த அதிர்ச்சியில்...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top