20 திட்டம்
20 திட்டம்
விக்ரமையும் சுதாகரையும் பார்த்து திகைத்து நின்றாள் வைஷாலி. அவள் நந்தினியுடன் உரையாடியதை அவர்கள் கேட்டு விட்டார்களோ?
"ஹாய்... வெல்கம் டு ஆதித்யா குரூப்ஸ் ஆஃப் கம்பெனி" என்றான் விக்ரம்.
சங்கடத்துடன் கூடிய புன்னகையை உதிர்த்தாள் வைஷாலி.
"சுதா, நான் சொல்லல?" என்றான் விக்ரம் வைஷாலியை பார்த்தபடி.
"ஆமாம் விக்கி, நீ சொன்னப்ப நான் நம்பல" என்றான் கனவுலகத்தில் சஞ்சரிப்பவன் போல சுதாகர்.
"நான் சொன்னதை நீ இப்போ நம்புவேன்னு நினைக்கிறேன்" என்றான் விக்ரம் சிரித்தபடி.
"எப்படி நம்பாம இருக்க முடியும்? நம்பித் தானே ஆகணும்?"
தனது பார்வையை ஒருவரை மாற்றி ஒருவராக மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தாள் வைஷாலி. அவர்கள் எதைப் பற்றி பேசுகிறார்கள் என்று அவளுக்கு புரியவில்லை.
"போன்ல யார்கிட்ட பேசிக்கிட்டு இருந்த? நந்தி பாப்பான்னு ஏதோ சொன்னியே...?" என்றான் அரைக்குள் பிரவேசித்த படி விக்ரம்.
அப்பாடா என்று இருந்தது வைஷாலிக்கு. அப்படி என்றால், அவள் பேசியதை அவர்கள் முழுமையாய் கேட்கவில்லை.
"ஆமாம்... என் ஃப்ரெண்ட் நந்திதா... அவகிட்ட தான் பேசிகிட்டு இருந்தேன்" என்றாள்.
"அப்படின்னா, ராணி நந்தினி தேவின்னு ஏன் சொன்ன?"
"அது... வந்து... நான் ராணி நந்தினி தேவியோட கம்பெனியில இருக்கேன்னு சொன்னேன்" என்று சமாளித்தாள்.
"நான் சொல்லல சுதா?" என்றான் மீண்டும்.
"ஆமாம் விக்கி, நீ சொன்னது உண்மை தான்" என்றான் வியப்புடன்.
"நீ இப்பவும் நினைக்கிறியா, இவளால நந்தினி தேவியை சமாளிக்க முடியாதுன்னு?" என்ற பொழுது அவனுடைய புன்னகை விரிவடைந்தது. வைஷாலியின் கண்களோ பாப்கார்னை போல் பொறிந்தது.
"இவங்க ஒருத்தரால மட்டும் தான் அவங்களை மாதிரி ஒரு தந்திரசாலியை சமாளிக்க முடியும்... ஆனா, ஒரே ஒரு பிரச்சனை தான்..." என்று நிறுத்தி விட்டு விக்ரமை பரிதாபமாய் பார்த்தான் சுதாகர்.
"என்ன?" என்றான் விக்ரம்
"இவங்க ரொம்ப பொய் சொல்றாங்க பா..." என்று வாய் விட்டு சிரித்தான் சுதாகர். விக்ரமும் அவனுடன் இணைந்து கொண்டான்.
"எதுக்காக ரெண்டு பேரும் பைத்தியக்காரங்க மாதிரி சிரிக்கிறீங்க? எதைப் பத்தி ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்கீங்க?" என்றாள் வைஷாலி எரிச்சலுடன். அவர்கள், அவளைத் தான் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது அவளுக்கு புரிந்து தான் இருந்தது. ஆனால் அவர்கள் எதைப் பற்றி பேசுகிறார்கள் என்பது தான் புரியவில்லை.
"ராமா... ஐ மீன் விக்கி... நீ உன்னோட சீதாவை... ஐ மீன் வைஷாலியை கவனிச்சுக்கோ. இல்லன்னா, அவங்க என்னை ஹனுமான் ஆக்கிடுவாங்க" என்றான் கிண்டலாக சுதாகர்.
விக்ரம் வாய்விட்டு சிரிக்க, வாயை பிளந்தாள் வைஷாலி. அங்கிருந்து சென்றான் சுதாகர். முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு நின்றாள் வைஷாலி. தனது கைகளை தன் பேன்ட் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு நின்றான் விக்ரம் சிரித்தபடி.
"த கிரேட் வைஷாலி சிவராமன் என்னோட கேபின்ல இருக்காங்கன்னு என்னால நம்ப முடியல" என்றான் விக்ரம்.
"நீங்க ரெண்டு பேரும் எதைப் பத்தி பேசிக்கிட்டு இருந்தீங்க?" என்றாள் வேறு எங்கோ பார்த்துக்கொண்டு.
"எதைக் கேட்கிற?"
"நான் சொல்லல, நான் சொல்லலன்னு நீங்க கேட்டீங்க இல்ல? அதைப் பத்தி தான் கேட்கிறேன்." என்றாள் உரிமையோடு.
"நீ என்னோட பாட்டியை, எங்க வீட்டு லேண்ட் லைன் ஃபோன் மூலமா எப்படி மிரட்டினேன்னு நான் அவன்கிட்ட சொன்னேன். ஆனா அவன் நம்பல. இப்போ, இங்க நீ அவங்ககிட்ட பேசினதை பார்த்துட்டு அவன் ஆடி போயிட்டான்"
சுதாகர் ஆடி போனதை கேட்டு, வைஷாலியும் ஆடிப்போனாள். அதைப் பற்றி விக்ரமுக்கு எப்படி தெரிந்தது?
"நீ பாட்டிகிட்ட பேசும் போது, நானும் என்னோட ரூமின் இன்டர்காம் லைனில் தான் இருந்தேன், நீங்க பேசினதை கேட்டுகிட்டு..."
அது வைஷாலிக்கு பேரதிர்ச்சியை அளித்தது.
"அப்படின்னா, உங்க பாட்டி, வீடு ஃபுல்லா காலர் ஐடி ஃபோனை மாத்த போறாங்கன்னு நீங்க வேணுமின்னே தான் என்கிட்ட சொன்னீங்களா?" என்று சரியாய் கணித்து கேட்டாள்.
"நீ என்ன நெனச்ச? நான் உண்மை புரியாம உளறினேன்னு நினைச்சியா?" என்றான் அழகான சிரிப்புடன்.
பதில் கூறாமல் நகம் கடித்தாள் வைஷாலி.
"அப்படின்னா, நான் உளறினேன்னு தான் நீ நெனச்சுக்கிட்டு இருந்த... இல்லையா?" என்றான் ரசிக்கத்தக்க முகபாவத்துடன்.
"ஆனா, உங்களுக்கு இந்த விஷயம் தெரியும்னு நீங்க காட்டிக்கவும் இல்ல. என்கிட்ட இதைப் பத்தி கேட்கவும் இல்லையே...?"
"ஆனா, உன்னை நான் அலர்ட் பண்னேனே... ஏன்னா,நீ அவங்ககிட்ட மாட்டிக்க கூடாது"
"ஏன்?"
"ஏன்னா, நீங்க என்னோட வைஃப்" என்றான் அவளது முகபாவத்தை கவனித்தபடி.
"அதை எப்படி கல்யாணம்னு எடுத்துக்க முடியும்? நான் தான் என்னோட சுய நினைவிலேயே இல்லையே..." என்றால் எங்கோ பார்த்துக்கொண்டு.
"ஆனா, நான் என் சுய நினைவுல தானே இருந்தேன்? நீ தான் பொம்மி என்ற உண்மை தெரியாமல் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டது உண்மை தான். ஆனா உன்னை கல்யாணம் பண்ணிக்கணும் தான், அந்த கல்யாணத்துக்கு நான் ஒத்துக்கிட்டேன். ஒரு விஷயத்தை யோசிச்சு பாரு, நான் இந்த கல்யாணத்தை சீரியஸா எடுத்துக்கலன்னா, எதுக்காக நான் உன் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கணும்?" என்ற தரமான கேள்வியை கேட்டான்.
என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அமைதி காத்தாள் வைஷாலி.
"நீ விருப்பப்பட்டா முறைப்படி நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்"
"என்னையும், எங்க அம்மாவையும் உங்க பாட்டி நிச்சயம் கொன்னுடுவாங்க" என்று உண்மையை கூறினாள் தயக்கமின்றி.
"நான் அப்படி நடக்க விட மாட்டேன். என்னை நம்பு"
"நீங்க என்ன செய்வீங்க? எங்களை எங்கேயாவது ஒளிச்சி வச்சிடுவீங்களா?"
"தேவைப்பட்டா நிச்சயம் செய்வேன்"
"இது கேட்கவே ரொம்ப சில்லியா இருக்கு. எவ்வளவு நாளைக்கு எங்களை உங்களால ஒளிச்சு வைக்க முடியும்? எங்க ஒளிச்சி வைப்பீங்க?"
"என்கிட்ட ஒரு பிளான் இருக்கு "
"என்ன பிளான்? "
அவன் திட்டத்தை கூறக் கூற வைஷாலியின் முகம் மின்னியது. ராணி நந்தினி தேவியை கடுப்பேற்ற இதை விட ஒரு சிறந்த சந்தர்ப்பம் அவளுக்கு கிடைக்காது.
"நீ என்னோட பாட்டியை எவ்வளவு வேணா வெறுப்பேத்தலாம்... அவங்க கூட இருந்துகிட்டே... " என்றான் அவள் முக பாவத்தை கவனித்தபடி.
"நீங்க பேசுறத பாத்தா, நான் உங்க பாட்டியை வேணுமின்னே வெறுப்பு ஏத்துற மாதிரியில்ல இருக்கு..." என்றாள் அவன் மேஜையின் மீது இருந்த பேப்பர் வெயிட்டை உருட்டியபடி.
"இல்லையா?" என்று சிரித்தான்.
வைஷாலியும் சிரித்தாள்.
"நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?"
"இங்க பாருங்க சின்ன முதலாளி... "
"தயவுசெய்து அந்த சின்ன முதலாளியை தூக்கி உடைப்பில் போடுறியா? மரியாதை மனசுல இருந்தா போதும்"
"ஓகே விக்கி..." என்ற அவளை அதிசயமாய் பார்த்தான் விக்ரம்.
"மரியாதை மனசுல இருக்கு" என்றாள் கிண்டலாக.
"நெவர் மைண்ட்... " என்று சிரித்தான் விக்ரம்
"உண்மைய சொல்லனும்னா எனக்கு கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்ல"
விக்ரமின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது.
"எனக்கு எப்பவும் எங்க அம்மா கூடவே இருக்கணும்னு தான் ஆசை. ஏன்னா அவங்களுக்கு என்னை விட்டா வேற யாருமே இல்ல. ஆனா அதே நேரம், நான் என்னுடைய உரிமையை விட்டுக் கொடுக்கவும் தயாரா இல்ல" என்றாள் உறுதியாக.
"உரிமையா?"
"ஆமாம். ராணி நந்தினி தேவி என்னோட அனுமதி இல்லாம எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க. அவங்களுக்கு அந்த உரிமையை யார் கொடுத்தது? என்னுடைய வாழ்க்கை அவங்களுக்கு விளையாட்டா? அவங்க செஞ்ச செயல்களுக்கு அவங்க பதில் சொல்லித் தான் ஆகணும். என்னை அவங்களுடைய மருமகளாக ஏத்துக்கிட்டு தான் ஆகணும். அது தான் என்னை உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சதுக்காக அவங்களுக்கு நான் கொடுக்க போற பெரிய தண்டனை"
"நீ சொல்றது ரொம்ப சரி. அவங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது, அவங்க செஞ்ச தப்பை யாராலயும் நிரூபிக்க முடியாதுன்னு அவங்க நினைச்சுகிட்டு இருக்காங்க. அவங்க அப்படித் தான். அவங்களை எதிர்க்கிற எல்லாரையும் இல்லாம செஞ்சுடுவாங்க" என்று மேலும் அவளது கோபத் தீயில் எண்ணையை ஊற்றினான் விக்ரம்.
"அதெல்லாம் என்கிட்ட நடக்காது. அவங்க என்ன செய்யறாங்கன்னு நான் பார்க்கிறேன்..."என்றாள் கோபமாக.
"நான் உன் கூட இருப்பேன். அவங்க என்னை ஏமாத்திட்டாங்க அப்படிங்கறதுக்காக கிடையாது... அவங்க என்னோட தாத்தாவை ரொம்ப அவமதிச்சிட்டாங்க..."
"அவங்க உங்க மேல கோவபடுவாங்க"
"நிச்சயம் கோவப்பட தான் செய்வாங்க. அதைப் பத்தி எல்லாம் யார் கவலைப் பட்டது?"
"நீங்க கவலைப்படலையா?"
"நான் ஏன் கவலைப் படனும்? என் பொண்டாட்டி தான், பத்து உயிர் இருந்தாலும், அத்தனையும் எனக்காக கொடுப்பாளாமே" என்று ஜோசியர் கூறியதை நினைவு கூர்ந்தான் விக்ரம்.
"இங்க பாருங்க மிஸ்டர் விக்ரம்... எனக்கு இந்த லவ், கீவ் எல்லாம் சரிப்பட்டு வராது..."
"உங்க அம்மா மேல உனக்கு லவ் இல்லன்னு சொல்லுவியா?"
"அது வேற..."
"நிச்சயம் இல்ல... எல்லாம் ஒன்னு தான். சீக்கிரமே நீயும் என்னை காதலிப்ப... நான் உன்னை காதலிக்குற மாதிரி..."
அமைதி காத்தாள் வைஷாலி.
அப்பொழுது கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.
"உள்ளே வரலாமா?" என்றான் சுதாகர்.
"வாடா" என்றான் விக்ரம்.
இரண்டு பழச்சாறு தம்ளருடன் உள்ளே நுழைந்தான் சுதாகர்.
"இந்தாங்க சீதாதேவி..." என்று அவன் கூற, சிரித்தான் விக்ரம்.
"ராமரே, இது உங்களுக்கு..." என்று மற்றொரு தம்ளரை விக்ரமிடம் நீட்டினான்.
"நான் ராம், சீதா, தியரியை பத்தி பேசினது, உங்க பாட்டியை வெறுப்பேத்த தான்... " என்றாள் முகத்தை திடமாய் வைத்துக்கொண்டு.
"நீங்க அதை முழு மனசோட சொன்னதா நான் சொல்லவே இல்லையே... ஆனாலும் அது கேட்க ரொம்ப நல்லா இருந்தது. நான் சொல்றது சரி தானே விக்கி?" என்றான் சுதாகர்.
தன் தலையை லேசாய் சாய்த்து புருவத்தை உயர்த்தி, அவன் கூறுவது சரி என்பது போல் சிரித்தான் விக்ரம்.
"எது எப்படியோ, சீக்கிரமே நீ பொன்னகரத்தில் இருக்கப் போற"
"அப்படியா? சீதாதேவி, அயோத்திக்கு வர ஒத்துகிட்டாங்களா?" என்றான் சுதாகர்.
"ஆமாம். அவ ஒத்துகிட்டா... ஆனா எனக்காக இல்ல... என்னோட பாட்டிக்கு பதிலடி கொடுக்க" என்றான் பொய்யான வருத்தத்துடன்.
"அது பிரச்சனையே இல்ல விக்கி. இப்போ அவங்க உன்னோட பிளானை ஏத்துக்கிட்டாங்க. சீக்கிரமே உன்னையும் ஏத்துக்குவாங்க. நான் சொல்றது சரி தானே சீதா மாதா?"
"கொஞ்ச நேரம் சும்மா இருக்கீங்களா, ஆஞ்சநேயரே...?"
"தயவு செய்து என்னை அப்படி மட்டும் கூப்பிடாதீங்க. நான் அவரை மாதிரி கல்யாணம் பண்ணிக்காம இருக்க விரும்பல..." என்றான் அவசரமாக.
சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு சரி என்று தலை அசைத்தாள் வைஷாலி.
"நான் கிளம்புறேன் "
"நான் உனக்கு அப்புறமா கால் பண்றேன். நான் சொன்னதை மறக்காதே" என்றான் விக்ரம்.
"மறக்கமாட்டேன். உங்க ஃபோனுக்காக காத்திருப்பேன்"
"ஆண்ட்டிகிட்ட விஷயத்தை சொல்லி அவர்களுக்கும் புரிய வை"
"அவங்க புரிஞ்சுக்குவாங்க" என்று நம்பிக்கையோடு கூறிவிட்டு நடந்தாள் வைஷாலி.
"நல்லா காலம், அவங்க உன்னுடைய பிளானை ஏத்துக்கிட்டாங்க"
"அவ பொன்னகரம் வரட்டும். என்னையும் அவளை ஏத்துக்க வைக்கிறேன்"
"பார்த்து விக்கி, அவங்க ஒரு புயல். அவங்களை ஒரு பாட்டில்ல அடைக்க முடியாது"
"எனக்கு தெரியும். அவ அவங்க அம்மாவ ரொம்ப நேசிக்கிறா. அப்படின்னா அவளுக்கு உண்மையாய் இருக்கிறவங்களை அவளுக்கு பிடிக்கும்னு தானே அர்த்தம்? அதனால அவளால நிச்சயம் என்னை அவாய்ட் பண்ணவே முடியாது"
ஆம் என்று சிரித்தான் சுதாகர்.
மறுநாள் காலை
பொன்னகரம்
தொலைக்காட்சியில், ராசிபலன் பார்த்துக்கொண்டிருந்தார் ராணி நந்தினி தேவி. விக்ரமோ செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்தான். நந்தினிக்கு பாலும், விக்ரமுக்கு காபியும் கொடுத்துவிட்டு தானும் ஒரு காபி கோப்பையுடன் அமர்ந்துகொண்டார் சாவித்ரி.
"ஏன் தான் நீங்க இப்படி ராசிபலன் எல்லாம் பார்த்துகிட்டு இருக்கீங்களோ தெரியல" என்றான் காப்பியைப் பருகியபடியே விக்ரம்.
அவனுக்கு சாவித்திரி பதில் கூறுவதற்கு முன், நந்தினி பதில் கூறினார்.
"இவரை மாதிரி ஒரு பெஸ்ட் ஜோசியரை நீ பார்க்கவே முடியாது. அவர் எது சொன்னாலும் அப்படியே நடக்கும். அவர்கிட்ட அப்பாய்ன்மெண்ட் வாங்குறது அவ்வளவு சுலபமில்ல. அவர் அவ்வளவு பிஸி... அதனால தான் அவருடைய ப்ரோக்ராமை நான் மிஸ் பண்ணாம பார்ப்பேன்..." என்றார் நந்தினி.
"அப்படியா? அப்படின்னா அவர் சொல்றதை நம்ம நம்பித் தான் ஆகணும்"என்றான் விக்ரம் அவர் கூறியதை அவன் உண்மையிலேயே நம்பி விட்டான் என்பது போல.
அவனை நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டிருந்தார் சாவித்திரி. அவன் இப்படி வித்தியாசமாக நடந்து கொள்ள என்ன காரணம்? வழக்கத்திற்கு மாறாய், வரவேற்பறைக்கு வந்து காபி குடித்துக் கொண்டிருக்கிறான்... தன் பாட்டியுடன் அவன் ஜோசியத்தை பற்றி உரையாடுவதும் வழக்கத்திற்கு மாறானதே... அவர் கூறியதை அவன் நம்பிவிட்டது முற்றிலும் மாறானது... அவரது முகத்தில் தெரிந்த குழப்பத்தை புரிந்துகொண்டு , சாவித்ரியை பார்த்து கண்ணடித்தான் விக்ரம். அது அவரது சந்தேகத்தை மேலும் உயர்த்தியது. அவர் என்ன என்பது போல் சைகையால் கேட்க, அவன் மெல்ல தன் கண்களை இமைத்தான், புன்னகையுடன்.
சாவித்திரிக்கு ஒன்றுமே புரியவில்லை, அவன் அதே ஜோசியரை பொன்னகரம் அழைத்து வரும் வரை...
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top