2 எங்கே பொம்மி?

2 எங்கே பொம்மி?

நிம்மதி இழந்தவராய் தன் அறையில் இங்குமங்கும் உலவிக் கொண்டிருந்தார் விமலாதித்தன். விக்ரம் இப்படி நடந்து கொள்வான் என்று அவர் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவனை இங்கிருந்து அனுப்பி விடவேண்டும் என்ற நந்தினிதேவியின் முடிவில் அவன் மிகுந்த அதிருப்தி அடைந்திருந்தான் என்பது அவருக்கு தெரியும். இந்தியாவுக்கு திரும்பி வரும் சந்தோஷத்தில், அவன் பழையதை மறந்து விடுவான் என்று அவர் எண்ணியிருந்தார். ஆனால், அவன் இப்படி சீறி பாய்வான் என்று அவர் நினைக்கவில்லை.

வரும் நாட்களில் அவனை எப்படி கையாளப் போகிறோம் என்று பயந்தார் அவர். இதற்கே அவன் இப்படி சீறினான் என்றால், அவருடைய அம்மாவின் வார்த்தைக்கு பணிந்து, எப்படி அவருடைய ஆசையை அவன் நிறைவேற்ற போகிறான்? சாவித்திரி கூறியது போல், ஒருவேளை, அவன் இன்னும் பொம்மியை மறக்காமல் இருந்தால் என்ன செய்வது? தான் செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றியே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்தால் என்னாவது? அவருக்கு தலை சுற்றுவது போல் இருந்தது. தலையை பிடித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்து கொண்டார். அன்று மாலை நடக்கவிருந்த உபச்சார விழாவை எண்ணி அவர் பயந்தார். அதைப் பற்றி சாவித்ரியிடம் பேச வேண்டும் என்று நினைத்தார். விக்ரமை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்ட ஒரே நபர் அவர் மட்டும் தான். ஆனால், தங்கள் அறைக்கு செல்லாமல் மொத்தமாய் தவிர்த்துவிட்டு, அன்று முழுவதும் விக்ரமுடன் அவன் அறையிலேயே இருந்துவிட்டார் சாவித்திரி.  ஏனென்றால் அவருக்கு தெரியும் அவர் கணவர் என்ன செய்வார் என்று.

மாலை

மேல்தட்டு மக்களுடன், ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலை போல் காட்சியளித்தது பொன்னகரம். அங்கு இறுமாப்புடன் வலம் வந்தார் ராணி நந்தினி தேவி. அவர் முகத்தில் இருந்த புன்னகை, அங்கிருந்த மக்களின் செல்வச் செழிப்பிற்கு ஏற்ப, வளர்ந்தும், குறைந்தும், கொண்டிருந்தது. தன்னுடைய அரச குல தோழியும், ஆக்சிஜன் மருத்துவமனையின் உரிமையாளருமான காமினி தேவியை, மேன்மையுடன் அணைத்து வரவேற்றார் நந்தினி. காமினிதேவியோ, நந்தினிதேவிக்கு மேல் தலைக்கனம் பிடித்தவராய் காணப்பட்டார்.

"எங்க உன் பேரன்?" என்றார் தெனாவெட்டாக.

"இப்போ வந்துடுவான்"

"பார்க்க நல்லா இருப்பான்ல? இல்லன்னா, நான் என் பேத்திகிட்ட அவனைப் பத்தி பேச, வாயை கூட திறக்க முடியாது" என்ற அவர் குரலில் எகத்தாளம் தெரிந்தது.

"என் பேரனைப் பார்த்து உன்னோட பேத்தி மயங்கி விழுவா" என்றார் பெருமிதத்துடன் நந்தினி.

தனது மகனின் வரவை விமலாதித்தன் ஒலிபெருக்கியில் தெரிவித்த போது,
பெருமகன்களாலும், சீமாட்டிகளாலும் நிரம்பியிருந்த கூடம் அமைதியானது.

அங்கு குழுமியிருந்த அனைவரது கண்களும், விசாலமான மாடிப்படிகளின் பக்கம் திரும்பின. தன் அம்மாவுடன் அங்கு மிடுக்காய் நின்றிருந்தான் விக்ரம். சாம்பல் நிற கோட்டு, சூட்டில் கம்பீரமாய் இருந்தான் அவன். தங்கள் முன் நின்றிருந்த அழகிய வாலிபனின் மீதிருந்த கண்களை அகற்ற யாருக்குமே மனம் வரவில்லை. காமினியின் கண்கள் அவன் மீது வேரூன்றியிருந்தது. திருப்தியான புன்னகை அவர் முகத்தில் மலர்ந்தது. அவரால் இனி தைரியமாய் அவருடைய பேத்தியிடம் விக்ரமை பற்றி பேச முடியுமே. தனது வாரிசின் விழுமிய தோற்றத்தை கர்வத்துடன் கண்டுகளித்தார் நந்தினிதேவி. தன் மகனின் கரத்தை சுற்றி வளைத்துக் கொண்டு, அவனுடன் அழகாய் நடந்து வந்தார் சாவித்திரி.

விமலாதித்தனும், சாவித்திரியும் அவனை தங்களைச் சேர்ந்த மக்களிடம் அறிமுகம் செய்து வைத்தார்கள். லேசான புன்னகையை உதிர்த்ததோடு நிறுத்திக் கொண்டான் விக்ரம்.

அவர்களை தன்னிடம் வரச் சொல்லி கையசைத்தார் நந்தினி. அவர் காமினியுடனும், தன் மற்றொரு தோழியான சுமித்ராவுடனும்  அமர்ந்திருந்தார்.

"இவங்க என்னுடைய ஃப்ரெண்ட் காமினி தேவி... ஆக்சிஜன் குரூப் ஆஃப் ஹாஸ்பிடல்ஸ் ஓனர்..." என்று அலட்டலாய் அவரை அறிமுகம் செய்து வைத்தார் நந்தினி.

அவரை நோக்கி லேசாய் தலையசைத்தான் விக்ரம்.

"இவங்க சுமித்ரா... அசாமில் இருக்கிற பெரிய டீ கம்பெனி ஓனர்"

காமினிக்கு கொடுத்த அதே மரியாதையை தான் அவன் சுமித்ராவுக்கும் கொடுத்தான்.

"அதான் விக்ரம் திரும்ப வந்தாச்சே... எப்போ அவனுக்கு கல்யாணம்?" என்றார் சுமித்ரா சகஜமாக.

நந்தினிதேவி ஆர்வமானார். இதில் விக்ரமின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் அவருக்கு. காமினிதேவியும் கிட்டத்தட்ட அதே நிலையில் தான் இருந்தார். அதோடு, விக்ரமின் குரலைக் கேட்கும் ஆர்வமும் அவருக்கு இருந்தது.

"எங்க ஃபேமிலில நிறைய எல்ஜிபில் கேர்ள்ஸ்  இருக்காங்க. நீ சரின்னு சொன்னா, விக்ரமுக்கு நான் பொண்ணு பார்க்க ரெடியா இருக்கேன்" என்று விக்ரமை பார்த்து சிரித்தபடி கூறினார் சுமித்ரா.

தனது அம்மாவின் முகத்தை உன்னிப்பாய் கவனித்துக் கொண்டிருந்தான் விக்ரம்.

"நான் உனக்கு பொண்ணு பாக்கட்டுமா விக்ரம்?"

தன் கணவனையும் மகனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார் சாவித்திரி. விக்ரமிடமிருந்து *சரி* என்ற பதிலை எதிர்பார்த்திருந்த நந்தினிக்கு, அவனது பதில் அதிர்ச்சியளித்தது.

"தேவையில்ல... ஐ அம் அல்ரெடி எங்கேஜ்ட். என் பாட்டி உங்ககிட்ட சொல்லலையா?" என்ற அவனது குரல் படு வசீகரமாய் இருந்த போதிலும், அதை ரசிக்கும் நிலையில் இல்லை காமினி.

நந்தினி தேவியின் முகம் வெளிறிப் போனது. தன் உள்ளத்தில் எழுந்த சந்தோஷத்தை முகத்தில் வெளிப்படுத்தி விடாமல் இருப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது சாவித்திரிக்கு.

காமினியும், சுமித்ராவும் திகைப்படைந்தார்கள். விக்ரம் நிச்சயதார்த்தம் ஆனவனா? எப்பொழுது? எப்படி? ஏன்? கேள்விக்குறியுடன் நந்தினியை பார்த்தார் காமினி. இப்படிப்பட்ட உண்மையை மறைத்துவிட்டு, எப்படி அவர் தன் பேத்தியை பெண் கேட்டார்? அந்த சூழ்நிலையை எப்படிக் கையாள்வது என்றே புரியவில்லை நந்தினிக்கு.

"நீ என்ன சொல்ற? உனக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சா? அதைப் பத்தி எங்ககிட்ட நந்தினி எதுவும் சொல்லலையே" என்றார் காமினி.

"அவங்க உங்ககிட்ட எதுவும் சொல்லலைன்னா அது என்னோட பிரச்சினை இல்ல" என்றான் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல்.

"யார் அந்த பொண்ணு? இந்தியாவோட பெரும் பணக்காரர்கள்ல அவளும் ஒருத்தியா?" அவளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் காமினிக்கு.

"இல்ல... என் தாத்தாவுடைய அக்கவுன்டன்ட்டோட டாட்டர்"

தன் அரச குடும்ப கவுரவம் காற்றில் பறப்பது போல் உணர்ந்தார் நந்தினி. இன்னும் கூட விக்ரம் அந்தப் பெண்ணை மறக்காமல் இருந்தது அவருக்கு பேரதிர்ச்சியை அளித்தது. வாயடைத்து நின்றிருந்தார் விமலாதித்தன். சாவித்திரியோ மகிழ்ச்சிக்கடலில் திளைத்துக் கொண்டிருந்தார்.

அகங்கார மூட்டைகளை தன் தலையில் சுமந்து கொண்டிருந்த தன் தோழிகளை பார்க்க முடியாமல் தவித்தார் நந்தினி. அவருடைய நல்ல நேரம், சாவித்திரியின் தோழி ஒருவர் விக்ரமை அழைக்க, அங்கிருந்து சென்றான் விக்ரம்.

"என்ன இது? விக்ரம் நிச்சயதார்த்தம் ஆனவனா?"

"அதெல்லாம் சுத்த ரப்பிஷ்"

"நீ என்ன சொல்ற? "

"இது எல்லாத்துக்கும் என் புருஷன் தான் காரணம்" என்று அந்தக் கதையை அவர்களிடம் கூறினார் காமினி.

"அவ்வளவு தானா?" என்று பெருமூச்சு விட்டார் காமினி.

"அவ்வளவு தான்"

"ஆனா, விக்ரம் இந்த விஷயத்துல ரொம்ப சீரியஸா இருக்கிற மாதிரி தெரியுதே..."

"அவனை நான் பார்த்துக்கிறேன். நீ மட்டும் என் கூட இரு, போதும்"

"சரி, நீ என்ன உதவி கேட்டாலும் நான் செய்றேன்"

"தேங்க்யூ சோ மச். அந்த வேலைக்காரனுடைய பொண்ணு என் வீட்டுக்கு மருமகளாக வர கூடாது. எனக்கு அவ்வளவு தான் வேணும்."

"நிச்சயம் வர மாட்டா. இப்படிப்பட்ட கீழ் வர்க்கம் எல்லாம் நமக்கு சரிசமமா வர நம்ம விடவே கூடாது"

"அப்படி ஒரு போதும் நடக்காது"

"இந்த விஷயத்துக்கு நீ ஒரு முடிவு கட்ற வரைக்கும், நான் ரோஷினிகிட்ட விக்ரமை பத்தி எதுவும் சொல்ல போறதில்ல. என்னால அவளை ஏமாத்த முடியாது"

"எல்லாம் சீக்கிரமே நல்லபடியா முடியும். ரோஷினி தான் இந்த வீட்டுக்கு மருமகளாக வரப்போறா"

சரி என்று தலையசைத்தார் காமினி.

அதன் பிறகு விக்ரம் அங்கு காணப்படவில்லை. தனது மகனை தேடிக்கொண்டிருந்தார் சாவித்திரி. உன்னை அறிமுகம் செய்து வைத்துவிட்ட பிறகு நீ அங்கிருந்து சென்று விடலாம் என்று அவர் கூறியிருந்தார் அல்லவா? அதனால் தான் அவன் அங்கிருந்து சென்று விட்டிருக்கிறான். தன் மகனையும், அவன் அந்த பெண்களுக்கு அளித்த பதிலையும் எண்ணி உள்ளூர நகைத்துக் கொண்டார் சாவித்திரி.

சாவித்திரியை பற்றி நாம் இங்கு கூறியே ஆகவேண்டும். அவர் ஒரு சுவாரசியமான கதாபாத்திரம். அரச பரம்பரையில் பிறந்திருந்தும் கூட, அவர் மட்டும் எப்படி இவ்வளவு வித்தியாசமாய் இருக்கிறார்? ஆம், அவர் ஒரு விதிவிலக்கு. டைட்டானிக் கதாநாயகி ரோஸை போல், அரச பரம்பரையின் சட்ட திட்டங்களை விரும்பாதவர்... சின்னத்தம்பி குஷ்பூவைப் போல, சேற்றில் நடக்கவும், தண்ணீரில் ஆட்டம் போடவும் விரும்பியவர்... மற்ற பெண்களைப் போல் சுதந்திர காற்றை சுவாசிக்க ஏங்கியவர். நந்தினி தேவி மாமியாராக வாய்த்த பிறகு, அதெல்லாம் கனவில் கூட நடப்பது சாத்தியம் அல்லவே. தன் பதினான்கு  வயது மகனை தன்னிடமிருந்து பிரித்த போது, ஏதும் செய்ய இயலாதவராய்  குமுறி அழுதவர். இப்பொழுது தான் அவர் பக்கம் காற்று வீசத் துவங்கியிருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் அவர் சந்தோஷப்பட தானே செய்வார்...!  தன் மகனுக்காக அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை, இனி வரும் அத்தியாயங்களில் நாம் பார்க்கலாம். இப்போது விக்ரம் எங்கு சென்றான் என்று சற்று கவனிப்போம்.

பார்ட்டியில் இருந்து கிளம்பி சென்ற விக்ரம், பொம்மியின் வீட்டை நோக்கி தனது காரை செலுத்தினான். கடந்த பத்து ஆண்டுகளில் சென்னை மிகவும் மாறிவிட்டிருந்தது. ஆனால், பொம்மியின் குடும்பம் குடியிருந்த, மயிலாப்பூரின், லட்சுமி நகரின் பெயர் மாறவில்லை. அந்த இடத்தை வந்தடைந்தான் விக்ரம்.

ஆனால், அவனுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில், அந்த வீட்டில் பொம்மியின் குடும்பத்திற்கு பதிலாக வேறு யாரோ இருந்தார்கள்.

"உங்களுக்கு என்ன வேணும்?" என்றார் அங்கிருந்த பெண்மணி.

"நான் பொம்மியை பாக்கணும்" என்றான் விக்ரம்.

"அப்படி யாரும் இங்க இல்லையே..."

"பத்து வருஷத்துக்கு முன்னாடி அவங்க இங்க தான் இருந்தாங்க"

"நாங்க இந்த வீட்டுக்கு வந்து ரெண்டு வருஷம் தான் ஆச்சி. எங்களுக்கு அவங்களை பத்தி எதுவும் தெரியாது" என்றார் அந்தப் பெண்.

என்ன செய்வதென்றே புரியவில்லை விக்ரமுக்கு. அவன் ஒரு முறை தான் இந்த வீட்டுக்கு வந்திருக்கிறான்... பொம்மியின் அப்பா சிவராமனின் இறுதி சடங்கின் போது... அப்போது அவனுக்கு வயது பனிரெண்டு தான். அவர்கள் எங்கு சென்றார்கள்? ஏன் சென்றார்கள்? எதற்காக அவனது குடும்பத்தினர் அவர்களை இங்கிருந்து போக விட்டார்கள்? அவனது குடும்பத்தினருக்கு அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். அவனுக்கு அவர்கள் பதில் கூறித் தான் ஆகவேண்டும். பொம்மியை பற்றி தன் வீட்டாரிடம் கேட்டு தெரிந்து கொள்ள, தன் வீட்டை நோக்கி விரைந்தான் விக்ரம்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top