18 வைஷாலியின் தீர்மானம்

18 வைஷாலியின் தீர்மானம்

தன்னை பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்த சாவித்ரியை பார்த்து சிலை போல் நின்றாள் வைஷாலி. நீட்டி இருந்த தன் கரத்தை சட்டென்று கீழே இறக்கிக் கொண்டாள். சாவித்திரி விக்ரமை பார்க்க, அவன் ஆம் என்று தலையசைத்து,

"பொம்மி... "  என்றான்.

சிரிப்பதா, வேண்டாமா என்று புரியாமல் அப்படியே நின்றாள் வைஷாலி. அப்பொழுது உள்ளேயிருந்து வெளியே வந்தார் கோப்பெருந்தேவி.

"யாரு வந்திருக்கா, வைஷாலி?"

வெளியே வந்தவர், சாவித்திரியையும் விக்ரமையும் பார்த்து வேரூன்றி நின்றார். அவரது உதடுகள், அவரை மீறி,

"சாவித்திரி தேவி... " என்ற பெயரை உச்சரித்தது.

கோப்பெருந்தேவியை பார்த்தவுடன் உணர்ச்சிவசப்பட்டார் சாவித்திரி. யாரும் எதிர்பார்க்காத வண்ணம் வீட்டினுள் சென்று கோப்பெருந்தேவியை ஆரத்தழுவிக் கொண்டார் சாவித்திரி.

"கோப்பு... எத்தனை வருஷம் ஆச்சு, உங்க எல்லாரையும் பார்த்து? என்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லாம ஏன் வீட்டை விட்டு போனீங்க? எத்தனை தடவை உங்களை தேடி நான் அந்த இடத்துக்கு வந்தேன் தெரியுமா? யாருமே உங்களைப் பத்தி எனக்கு எந்த தகவலும் சொல்லவே இல்ல"

கோப்பெருந்தேவியும், வைஷாலியும்  மட்டுமல்ல விக்ரம் கூட, சாவித்திரி  அவர்களை தேடினார் என்பதை கேட்டு ஆச்சரியம் அடைந்தான்.

அந்த அணைப்பில் இருந்து தன்னை பின்னால் இழுத்துக் கொண்ட சாவித்திரி, கோப்பெருந்தேவியை பார்த்து புன்னகைத்தார்.

"நீங்க எவ்வளவு மாறிட்டீங்க கோப்பு... பார்க்கவே கம்பீரமா இருக்கீங்க. எல்லா பொம்பளைங்களும் உங்களை மாதிரி தான் இருக்கணும். உங்களை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு"

"போராடுறதை  தவிர வேற வழி இல்லங்குற நிலை ஏற்படும் போது போராடி தானே ஆகணும்?"

"நீங்க சொல்றது தப்பில்ல. ஆனா, எல்லா பொம்பளைங்களும் போராட துணியிறதில்ல. வாழ்க்கையில ஏற்படுற இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ள மன தைரியம் தேவைப்படுது. உங்க வீட்டுக்காரர் இறந்த பிறகு, தன்னந்தனியா நின்னு  நீங்க உங்க பொண்ணுக்கு ஒரு கௌரவமான வாழ்க்கையை கொடுத்திருக்கீங்க. இது ரொம்ப பெரிய சாதனை" அவரை மனதார பாராட்டினார் சாவித்திரி.

ஆமாம் என்று தலையசைத்த கோப்பெருந்தேவி,

"வைஷு, எல்லாருக்கும் காபி கொண்டு வா" என்றார்.

உடனே சமையலறையை நோக்கி ஓடினாள் வைஷாலி.

"உட்காருங்க" என்றார் கோப்பெருந்தேவி.

உள்ளே நுழையாமல் அங்கேயே நின்றிருந்த விக்ரம்,

*உள்ள வாங்க* என்று கோப்பெருந்தேவி அழைத்த பின், புன்னகையுடன் உள்ளே நுழைந்தான்.

பாலை ஏற்கனவே சூடேற செய்துவிட்டு வந்ததால், உடனடியாக காபி கலந்து கொண்டு வந்தாள் வைஷாலி.

"உங்களுக்கு நடந்ததைப் பத்தி சின்னா என்கிட்ட சொன்னான். தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க கோப்பு. *அந்த நேரம்* எதுவும் செய்யக்கூடிய நிலையில நான் இல்ல"

அவர் கூறியதைக் கேட்டு, அவரை விசித்திரமாய் பார்த்தார் கோப்பெருந்தேவி. *அந்த நேரம்* என்று அவர் கூறியது எந்த அர்த்தத்தில்? இப்பொழுது ஏதாவது செய்யக் கூடிய உத்தேசத்தில் அவர் இருக்கிறாரா? அவரால் செய்ய முடியுமா?

"எல்லாம் விதி. அதை பத்தி இப்போ பேசி எந்த பிரயோஜனமும் இல்ல" என்றார் கோப்பெருந்தேவி.

"அப்படி சொல்லாதீங்க கோப்பு... நடந்த எதையும் சின்னா இன்னும் மறக்கல"

"ஆனா..."

தன் கையை காட்டி அவரை தடுத்தார் சாவித்ரி. வைஷாலி காபியுடன் வருவதை அவர்கள் கண்டார்கள். மூவருக்கும் அதை வழங்கினாள் வைஷாலி. அவள் தலை குனிந்தபடி விக்ரமிடம் அதை நீட்டினாள். அவன் அதை பெற்றுக் கொள்வான் என்று காத்திருந்தாள். அவன் அதை வாங்காமல் போகவே, அவன் தன்னை கவனிக்கவில்லையோ என்று நினைத்து, தன் தலையை உயர்த்தினாள். ஆனால் அவனோ அவளை பார்த்து குறுநகை புரிந்து கொண்டிருந்தான். அந்த புன்னகை மாறாமல் அந்த காபியை அவளிடமிருந்து பெற்றுக் கொண்டான். தன்னை  பார்க்க வைக்க தான், அவன் அப்படி நடந்து கொண்டான் என்று தெரிந்து, அவள் வாயைப் பிளந்தாள். காபி கொண்டு வந்த தட்டை கையில் வைத்துக் கொண்டு நின்றாள் வைஷாலி. அந்த காபியை பருகிய சாவித்திரி,

"ரொம்ப நல்லா காபி போட்டு இருக்க" என்றார் அவளைப் பார்த்து புன்னகைத்து. வைஷாலியும் பதிலுக்கு அவரைப் பார்த்து புன்னகைக்க தவறவில்லை.

தன் பேச்சைத் தொடர்ந்தார் சாவித்திரி.

"நீங்க எதுக்காக பயப்படுறீங்கன்னு எனக்கு புரியுது கோப்பு. அவங்க பாட்டி சொன்ன பேச்சை கேட்டு, ஏன் சின்னா பொம்மியை கல்யாணம் பண்ணிகிட்டான்னா, சின்னா, பொம்மியை கல்யாணம் பண்ணிக்குறதுல தனக்கு விருப்பம் இல்லைன்னு காட்டிக்காம ரொம்ப சந்தோஷமா ஒத்துக்கிட்டாங்க. அவங்க அப்படி ஒரு திட்டம் போட்டு வச்சிருக்காங்கன்னு தெரியாம தான் நாங்க அவங்க வலையில் விழுந்துட்டோம். அதோட மட்டும் இல்லாம, அந்த திட்டத்துக்கு அவங்க பொம்மியையே பயன்படுத்துவாங்கனு நாங்க எதிர்பார்க்கல. அவங்க எவ்வளவு தான் முயற்சி செஞ்சாலும், விதி அவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா சேத்து வச்சிடுச்சி"
என்று அவர் கூறிய போது, விக்ரமை  கவனித்தாள் வைஷாலி. அவன் அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டு இருந்ததை பார்த்து தன் பார்வையை வேறுபக்கம் திருப்பிக் கொண்டாள்.

அதைப் பார்த்த விக்ரமின் புன்னகை மேலும் விரிவடைந்தது.

"என் மாமனாருடைய கடைசி ஆசையை நிறைவேத்தணும்... அது தான் என்னோட ஆசை. இல்லனா அவருடைய ஆன்மா சாந்தி அடையாது" என்றார் உணர்ச்சிவசப்பட்டு சாவித்திரி.

"ஆனா, நம்மால என்ன செய்ய முடியும்? உங்க மாமியாரைப் பத்தி உங்களுக்கு தெரியாதா? உங்க வீட்டை விட்டு எங்களை துரத்தின போது அவங்க எங்களை எப்படி அவமானப்படுத்தினாங்க தெரியுமா?"

"அவங்க என்ன சொன்னாங்க?" என்றான் விக்ரம்.

"நம்ம அதை பத்தி பேச வேண்டாம். விடுங்க" என்றார் கோப்பெருந்தேவி.

"சொல்லுங்க ஆன்ட்டி. நம்ம எப்படிப்பட்ட ஒருத்தரை எதிர்க்க போறோம்னு தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப அவசியம்"

"ஆமாம் கோப்பு. சின்னா சொல்றது ரொம்ப சரி. அவங்க என்ன சொன்னாங்கன்னு சொல்லுங்க"

"என் பொண்ணை வச்சு உங்க பையனை மடக்கிட்டேன்னு சொன்னாங்க"

விக்ரம் பல்லைக் கடித்தான். சாவித்திரியோ சங்கடத்திற்கு ஆளானார்.

"இப்போ சொல்லுங்க... எப்படி முழு மனசோட என் பொண்ண உங்க பையனுக்கு நான் கல்யாணம் பண்ணி கொடுப்பேன்? இன்னும் வேற என்ன எல்லாம் அவங்க சொல்ல மாட்டாங்க? என்னெல்லாம் செய்ய மாட்டாங்க? என் பொண்ணு ஒரு அப்பாவி... இப்படிப்பட்ட தந்திரசாலியான ஒருத்தரை எதிர்த்து நிற்க முடியாதவ" என்றார் கோப்பெருந்தேவி பயத்துடன்.

சாவித்திரியின் பார்வை வைஷாலியின் பக்கம் திரும்பிய பொழுது, உடனடியாக தன் முகத்தை அப்பாவியை போல் மாற்றிக்கொண்டு, மெல்ல தன் கண்களை இமைத்தாள் வைஷாலி பாவமாக.

அவளது நடிப்பைப் பார்த்து வாயைப் பிளந்தான் விக்ரம். உலகமகா நடிப்பு என்றால் இது தானோ? இவளா அப்பாவி? அவள் தனது பாட்டியை எப்படி வியர்க்க வைத்தாள் என்பதைத் தான் அவன் கண்கூடாய் கண்டானே...!
தன் உதடுகளை அழுத்திக்கொண்டு சிரிப்பை கட்டுப்படுத்தினான் விக்ரம்.

அவன் அப்படி செய்வதை கண்ட வைசாலி முகத்தை சுளித்தபடி சொடுக்கென்று தன் முகத்தை திருப்பிக் கொண்டாள். இங்கு, இவள் எவ்வளவு சாமர்த்தியமாய் தன் முகத்தை மாற்றிக் கொண்டிருக்கிறாள்...! ஆனால் இவனோ, சிரித்துக் கொண்டிருக்கிறானே...!

"எங்களை நம்புங்க கோப்பு. நானும் சின்னாவும் பொம்மியை நல்லா பாத்துக்குவோம். அவளுடைய பாதுகாப்புக்கு நாங்க ரெண்டு பேரும் பொறுப்பு. தயவுசெய்து புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. சின்னா அவளை ரொம்ப காதலிக்கிறான்..." என்றார் கெஞ்சாத குறையாத.

விழிகளை விரித்து விக்ரமை பார்த்தாள் வைஷாலி. சற்றுமுன் புன்னகையுடன் அவளை பார்த்துக் கொண்டிருந்த அவன், உறுதியான கூறிய பார்வையை அவள் மீது வீசிக் கொண்டிருந்தான். *ஆம்* என்பது போல தன் கண்களை இமைத்து காட்டினான். இந்த முறையும் தன் முகத்தை அவள் திருப்பிக் கொள்ள தான் செய்தாள். ஆனால் இதற்கு முன்பு செய்தது போல் அல்லாமல், பதற்றத்துடன். *வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கும் * கதையை இதுவரை துளியும் நம்பியதில்லை வைஷாலி. அவளுடைய தோழிகள் அதை பற்றி பேசும் போது கூட, அவர்களை கிண்டல் செய்வது தான் அவளுடைய வழக்கம். ஆனால் இப்பொழுது, அதை அவளால் நம்பாமல் இருக்க முடியவில்லை. பல வருடங்களுக்கு முன்பு அவளை  நிச்சயம் செய்து கொண்ட ஒருவன், அவளது முன்னால் நின்று கொண்டு, அவளை காதலிக்கிறேன் என்று கூறினால், அவள் வயிற்றில் ஏன் பட்டாம்பூச்சிகள் பறக்காது? இத்தனை வருடங்கள் காத்திருந்து, அவளை கரம் பிடிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறான் என்றால் அவனது காதல் சும்மாவா?

"நான் என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க?" என்றார் கோப்பெருந்தேவி.

"வைஷாலியை பொன்னகரத்துக்கு அனுப்பி வைங்க. அவளுக்கு நாங்க இருக்கோம். அவ என்னோட மருமக" என்றார் சாவித்திரி வைஷாலியை பார்த்தபடி.

மீண்டும் வைஷாலியின் வயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறந்தது. அவள் சாவித்திரிக்கு மருமகள் என்றால்,  விக்ரம் அவளுடைய கணவன் அல்லவா?

"நான் இதை பத்தி வைஷாலிகிட்ட பேசணும். அவகிட்டயிருந்து சில விஷயத்தை நான் தெரிஞ்சிக்க நினைக்கிறேன். ஏன்னா, இது அவ்ளோட வாழ்க்கை. அவளுக்கு பிடிக்காத வாழ்க்கையை அவ மேல திணிக்க நான் விரும்பல" என்றார் சாவித்ரியை பார்க்காமல்.

ஏமாற்றதுடன் விக்ரமை பார்த்தார் சாவித்ரி.

"பரவாயில்ல ஆன்ட்டி. நீங்க வைஷாலிகிட்ட பேசிட்டு சொல்லுங்க. என்னால புரிஞ்சிக்க முடியுது. என்னோட பாட்டி மாதிரி பணக்காரங்க முன்னாடி, பலவீனமான ஒரு பொண்ணு நிக்க முடியாது தான்..." என்றான் விக்ரம் வைஷாலியை பார்க்காமல். ஆனால் அதற்காக, அவளுடைய முக மாற்றத்தை அவன் கவனிக்கவில்லை என்று அர்த்தமல்ல.

தன் ஓர உதட்டை கடித்தபடி கண்களை சுருக்கினாள் வைஷாலி. யார் பலவீனமானவள்? வைஷாலியா? நீண்ட பெருமூச்சை இழுத்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள். அவள் ஏதோ ஒரு முடிவுக்கு வந்துவிட்டதை உணர்ந்த விக்ரம், உள்ளூர புன்னகைத்துக் கொண்டான். அவளை சீண்டி விட வேண்டும் என்று தானே அவன் அதை கூறினான்...!

"நீங்க ஒரு நல்ல முடிவை எடுப்பீங்கன்னு  நான் நம்புறேன்" என்றார் சாவித்திரி.

உறுதி அளிக்காத புன்னகை பூத்தார் கோப்பெருந்தேவி.

"கிளம்பலாமா சின்னா?"

"கிளம்பலாம். நம்ம சீக்கிரம் வீட்டுக்குப் போக வேண்டிய வேலை இருக்கு இல்லையா?"

"ஏன்?" என்றார் சாவித்திரி.

"நம்ம வீட்டுல இருக்கிற எல்லா லேண்ட்லைன்  போனையும் *காலர் ஐடியோட* சேர்த்து மாத்த பாட்டி ஆர்டர் பண்ணி இருந்தாங்க இல்ல? அதை மாத்தி கொடுக்க, கொஞ்ச நேரத்துல ஆளுங்க வருவாங்க"

அதைக் கேட்ட வைஷாலியின் முகம், பேயறைந்தது போல மாறியதை கவனித்தான் விக்ரம்.

"ஆமாம். அம்மா காலையில சொல்லிக்கிட்டு இருந்தாங்க. நான் அதை மறந்தே போயிட்டேன். நல்ல வேலை நீ ஞாபகப்படுத்தின" என்றார் சாவித்திரி.

சில நொடிகளுக்குள் வைஷாலியின் முகம் வேறுவிதமாய் மாறியதை கவனித்து ஆச்சரியம் அடைந்தான் விக்ரம். அவள் முகத்தில் குறும்பு புன்னகை தவழ்ந்தது. அவனது பாட்டியை வெறுப்பேற்ற, அவள் வேறு ஏதோ ஒரு யுத்தியை கண்டுபிடித்து விட்டது போல் தெரிகிறது. பார்க்கலாம், அந்த *அப்பாவி பெண்ணின்* மனதில் தோன்றியிருக்கும் புதிய உத்தி என்ன என்பதை...

"பை வைஷு... " என்றான் விக்ரம்.

சரி என்பது போல் அவசரமாய் தலையசைத்தாள் வைஷாலி. அவர்கள் அங்கிருந்து விடை பெற்றார்கள்.

வைஷாலியை பொருள் பொதிந்த பார்வை பார்த்தார் கோப்பெருந்தேவி.

"அவங்க மறுபடி இங்க வர்றதுக்கு முன்னாடி, நம்ம வேற வீடு தேடிக்கிட்டு இங்கிருந்து போயிடலாம்" என்றார் கோப்பெருந்தேவி.

"வேற வீட்டுக்கா, எதுக்குமா?"

"நான் வேற என்ன செய்யணும்னு நீ நினைக்கிற? அந்த மோசமான பொம்பள உன்னை சின்ன முதலாளி வாழ்க்கையில் இருந்து தூக்கி எறிய என்ன வேணாலும் செய்ய தயங்க மாட்டாங்க. அவர் கூட உன்னை நிம்மதியா வாழ விட மாட்டாங்க" என்றார் தவிப்புடன்.

"நீங்க சொல்றது சரி தான். இந்த விஷயத்துல நான் உங்களோட ஆர்க்யூ பண்ண போறது இல்ல. ஏன்னா, எது சரி எது தப்புன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். ஆனா, தயவு செய்து என்னை வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க சொல்லி மட்டும் சொல்லாதீங்க..."

"நீ என்ன சொல்ற வைஷாலி?" என்று அதிர்ந்தார் கோப்பெருந்தேவி.

"எனக்கு அவரோட கல்யாணம் ஆயிடுச்சு மா. தெரிஞ்சு நடந்ததோ, தெரியாம நடந்ததோ கல்யாணம் கல்யாணம் தானே மா?"

"நீ சுய நினைவோட தான் பேசுறியா?"

"ஆமாம்மா. பத்து வருஷத்துக்கு முன்னாடி எனக்கு அவர் கூட நிச்சயம் நடந்துச்சு. எனக்கும், அவருக்கும் ஆக்சிஜன் ஹாஸ்பிடல்ல கல்யாணம் நடந்துச்சுன்னு அவர் சொன்ன போது நான் நம்பல. ஆனா அவர் தன்னுடைய பெயரோட ஷார்ட் ஃபார்ம்மை என்னோட கைல எழுதினார்னு சொன்னப்போ நான் ஷாக் ஆயிட்டேன். ஏன்னா, நான் அந்த எழுத்துக்களை என் கையில பார்த்தேன். வேற ஒருத்தர் கூட உறுத்தலோட  நான் எப்படி மா வாழ முடியும்? நீங்களே சொல்லுங்க, எங்களுக்கு நடந்தது கல்யாணம் இல்லையா? ஆமாம்னு சொன்னா, அவர் தானே மா என்னுடைய புருஷன்? அவரை விட்டுட்டு நான் எப்படிம்மா வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க முடியும்?" என்றாள் வேதனை ததும்பும் குரலில்.

கோப்பெருந்தேவிக்கு  ஏதோ உரைக்க,

"நீ அவரை காதலிக்கிறாயா?" என்றார்.

"இல்லமா... நிச்சயமா இல்ல. ஆனா, எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சுன்னு தெரிஞ்ச பிறகு, என்னால வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டு நிம்மதியா வாழ முடியும்னு எனக்கு தோணல"

கோப்பெருந்தேவி திகைத்து நின்றார்.

"ஆனா, நந்தினி தேவி உன்னை நிம்மதியா இருக்க விட மாட்டாங்க"

"அவங்க குடும்பத்துல போய் வாழறதை பத்தி நான் பேசலா மா. இந்த கல்யாணத்தை பத்தி என் மனசுல என்ன தோணுச்சோ அதை தான் நான் சொன்னேன். இப்போ இருக்கிற மாதிரி, நான் எப்பவும் உங்க கூடவே இருந்துடறேன்" என்றாள் உறுதியாக.

அவளுடைய உறுதி, கோப்பெருந்தேவியை குலைத்தது. ஒன்றும் புரியாமல் நின்றார் அவர். எப்படி வைஷாலிக்கு புரியவைப்பது என்று அவருக்கு புரியவில்லை. ஏனென்றால், அவள் கூறுவது தவறு இல்லை என்பது அவருக்கும் தெரியும்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top