15 கோப்பெருந்தேவி
15 கோப்பெருந்தேவி
விக்ரமால் நம்பவே முடியவில்லை,
தனக்கு முன்னால் நின்று கொண்டிருக்கும் பெண்மணி, வேறு யாருமல்ல கோப்பெருந்தேவி, பொம்மியின் அம்மா தான் என்பதை. இத்தனை வருடங்களில், கோப்பெருந்தேவி வெகுவாய் மாறி விட்டிருந்த போதிலும், அவரை அடையாளம் கண்டுகொள்ள அவனுக்கு சில நொடிகளே போதுமானதாய் இருந்தது. ஆனால் வைஷாலியின் வீட்டில் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?
"வைஷு... யார் இவரு?" என்றார் கோப்பெருந்தேவி.
அதிர்ச்சியான முகபாவத்துடன் வைஷாலியை பார்த்தான் விக்ரம். தனது அம்மா வீட்டில் இருப்பதாய் வைஷாலி கூறினாளே...! கோப்பெருந்தேவி தான் அவளுடைய அம்மாவா? அப்படி என்றால் வைசாலி யார்? அவள் தான் பொம்மியா? திகைத்து நின்றான் விக்ரம்.
"நீங்க கோப்பெருந்தேவி தானே?" என்றான்.
"ஆமாம். உங்களுக்கு என்னை எப்படி தெரியும்?"
"இவங்க...?" என்றான் வைஷாலியை நோக்கி தன் கையை நீட்டியபடி.
"என்னோட ஒரே பொண்ணு, வைஷாலி"
இயலாமையால் கண்ணை மூடினாள் வைஷாலி.
"வைஷாலி உங்க பொண்ணா?"
ஆம் என்று தலையசைத்தார் கோப்பெருந்தேவி.
"என்னை உங்களுக்கு அடையாளம் தெரியலையா ஆன்ட்டி?"
"இல்லையே" என்றார் யோசனையுடன்.
"விக்ரமாதித்யா... வீராதித்தனோட பேரன்" என்றான் வைஷாலியை பார்த்தபடி. அவள் தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.
வியப்பதிர்ச்சிக்கு உள்ளானார் கோப்பெருந்தேவி. அவருக்கு சந்தோசப் படுவதா, வேண்டாமா என்றே புரியவில்லை. சின்ன முதலாளி திரும்பி வந்துவிட்டார்... அவருக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறார்...
"நீங்க என்னை மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்"
தன்னை திடப்படுத்திக் கொண்டார் கோப்பெருந்தேவி.
"நாங்க உங்களை ஞாபகம் வச்சிருக்கோமா இல்லையாங்கிறது விஷயமே இல்ல..."
"நானும் உங்களை மறக்கல..."
"அதுவும் விஷயமில்ல சின்ன முதலாளி..."
"என்னை அப்படி கூப்பிடுறதை நிறுத்துங்க. நான் உங்க மருமகன்"
அந்த பதில் அவர்களை திகைக்கச் செய்தது.
"அதெல்லாம் பழைய கதை"
"இதை என்னால நம்ப முடியல. நீங்க என் தாத்தா மேல மரியாதை வச்சிருக்கீங்கன்னு நெனச்சேன். ஆனா இல்ல"
"எங்களுக்கும் கொஞ்சம் மரியாதை இருக்கு, சின்ன முதலாளி. அதை யாருக்காகவும் எதுக்காகவும் எங்களால இழக்க முடியாது"
"நீங்க எதுக்காக உங்க மரியாதையை இழக்கணும்?"
"அதைப் பத்தி பேச நான் விரும்பல. தயவுசெஞ்சு எங்களை விட்டுடுங்க"
"முடியாது... அப்படியெல்லாம் விட முடியாது... விடவும் மாட்டேன்... இவ என்னுடைய வைஃப்"
"உங்க ரெண்டு பேருக்கும் இன்னும் கல்யாணம் ஆகல"
"ஆயிடுச்சு"
வைஷாலிக்கு பதற்றம் அதிகரித்தது.
"தயவு செய்து நான் சொல்றதை கேளுங்க சின்ன முதலாளி. உங்களுடைய லைஃப் ஸ்டைலுக்கு அவ ஒத்து வர மாட்டா. நாங்க ஏழைங்க..."
"உங்க ஸ்டேட்டஸை பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்ல. என் தாத்தாவுக்கு நான் செஞ்சி கொடுத்த சத்தியத்தை நான் காப்பாத்தி தான் தீருவேன்"
"உங்க பாட்டி ஒத்துக்க மாட்டாங்க"
"அவங்க தான் எங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க"
அவன் கூறுவதின் அர்த்தம் புரியாமல் முகம் சுளித்தார் கோப்பெருந்தேவி.
"என்ன சொல்றீங்க?"
"போன வாரம் அவளை நான் ஆக்சிஜன் ஹாஸ்பிடல்ல கல்யாணம் பண்ணிக்கிட்டேன்"
"என்னனது....?" என்று அதிர்ச்சியுடன் வைஷாலியை பார்த்தார் கோப்பெருந்தேவி.
"அதைப் பத்தி அவளுக்கு எதுவும் தெரியாது" என்றான் விக்ரம்.
"எனக்கு எதுவுமே புரியல"
பொன்னகரத்தில் நடந்த விஷயத்தையும், அவன் எப்படி அதற்கு சம்மதிக்க வைக்கப்பட்டான் என்பதையும் கூறினான்.
"எப்படி நீங்க இவ்வளவு சாதாரணமா ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிகிட்டிங்க?"
"என்னோட ஜாதகப்படி, என்னுடைய முதல் மனைவி இறந்துடுவான்னு பாட்டி சொன்னாங்க. அது தெரிஞ்சதுக்கு அப்புறம் நான் எப்படி பொம்மியை கல்யாணம் பண்ணிக்க முடியும்? அதனால தான், சாகப்போற பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிற பரிகாரத்தை செய்ய நான் ஒத்துக்கிட்டேன். நான் செஞ்சது தப்பு தான். ஆனா இப்போ நான் அப்படி நினைக்கல. விதிப்படி எல்லாம் சரியா தான் நடந்திருக்கு"
"இல்லங்க சின்ன முதலாளி, உங்க பாட்டி, எங்களை உங்க வீட்ல இருந்து அவமானப்படுத்தி எப்படி துரத்தி அடிச்சாங்கன்னு உங்களுக்கு தெரியாது. அவங்க இருக்கிற இடத்துக்கு என் பெண்ணை நான் அனுப்ப முடியாது. என் பொண்ணு ராணியா இருக்கணும்னு அவசியம் இல்ல. நிம்மதியா இருந்தா போதும்"
"என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?"
"உங்க பாட்டி சொன்னதுக்காக ஏதோ ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்ட உங்களை நாங்க எப்படி நம்புறது?"
எரிச்சலுடன் பல்லைக் கடித்தான் விக்ரம். அவனுடைய சூழ்ச்சிக்கார பாட்டி, அவனை பொம்மிக்கு திருமணமும் செய்து வைத்து, அவளை நெருங்க முடியாத அளவிற்கு பிரச்சனையையும் உண்டாக்கி விட்டார்.
"பொம்மியோட வாழணும்னு தான் அவங்க பேச்சுக்கு நான் ஒத்துக்கிட்டேன்... ஐ மீன் வைஷாலியோட" தனது ஆள்காட்டி விரலை வைஷாலியை நோக்கி உயர்த்தினான் விக்ரம்.
"அவளுக்கு இந்த கல்யாணத்தை பத்தி எதுவும் தெரியாதுன்னு சொன்னிங்களே...? நீங்க சொல்றதை அவ எப்படி நம்புவா?"
"அவ என்னை நம்புறா. அதனால தான், நான் சொன்னது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரிஞ்சுக்க, நேத்து ஆக்சிஜன் ஹாஸ்பிடலுக்கு போயிருந்தா"
திருதிருவென விழித்துக் கொண்டு நின்ற வைஷாலியை பார்த்தார் கோப்பெருந்தேவி.
"இங்க பாரு..." என்று வைஷாலியை நோக்கி சொடுக்கு போட்டான் விக்ரம். அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள் வைஷாலி.
"எது எப்படி இருந்தாலும் சரி, நீ என்னுடைய வைஃப். நீ என் கூட தான் இருக்கப் போற..."
அதிர்ச்சியுடன் அவனை நோக்கி திரும்பினாள் வைஷாலி.
"நீ என்னுடைய பொண்டாட்டிங்குறதை யாராலயும் மாத்த முடியாது. நீயும் அதை மறக்காதே"
மென்று முழுங்கினாள் வைஷாலி.
"புரிஞ்சுதா உனக்கு?"
அம்மா, மகள் இருவரையும் நோக்கி, ஒரு கூரிய பார்வையை வீசி விட்டு அங்கிருந்து சென்றான் விக்ரம்.
இரண்டடியில் வைஷாலி அடைந்தார் கோப்பெருந்தேவி.
"அவர் சொன்னது உண்மையா?"
ஆமாம் என்று தலையசைத்தாள் வைஷாலி.
"உனக்கு எப்படி தெரியும்? உனக்கு எதுவும் தெரியாதுன்னு அவர் சொன்னாரே...?"
"அன்னைக்கு என்னோட கையில VKMன்னு அவர் பெயரோட ஷார்ட் ஃபார்மை எழுதினதா அவர் சொன்னாரு. நான் மயங்கி விழுந்த அன்னைக்கு என் கையில நான் அதை பார்த்தேன்"
சப்த நாடியும் ஒடுங்கி நின்றார் கோப்பெருந்தேவி. அவருக்கு ராணி நந்தினி தேவியைப் பற்றி நன்றாகவே தெரியும். அவரைப் போன்ற இரக்கமற்ற பெண்ணை தன் வாழ்நாளிலேயே கண்டதில்லை, கோப்பெருந்தேவி. எதற்காக அவர் இதை செய்தார்? எதனால் விக்ரம், வைஷாலியை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று அவர் நினைத்தார்?
"ஐ அம் சாரி மா"
"எனக்கு என்ன சொல்றதுன்னு புரியல"
தனது அறைக்கு சென்று கதவை தாழிட்டுக் கொண்டார் கோப்பெருந்தேவி. தலையில் கை வைத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தாள் வைஷாலி.
வெளியில் வந்து காரை ஸ்டார்ட் செய்த விக்ரம், சுதாகர் இருசக்கர வாகனத்தில் வருவதை கவனித்தான். காரை விட்டு கீழே இறங்கினான்.
"விக்கி, நீ இங்க என்ன பண்ற?"
"நீ ( என்பதை அழுத்தி ) இங்க என்ன பண்ற?" என்றான் விக்ரம்.
"என்னோட ஃபிரண்ட் திரும்பி வந்துட்டான். நமக்கு அவன் ஹெல்ப் பண்ணுவான்"
"தேவையில்ல"
"ஏன்? என்ன ஆச்சு?"
"நான் பொம்மியை கண்டுபிடிச்சிட்டேன்"
"என்னது....? நிஜமாவா?" என்று துள்ளி குதித்தான் சுதாகர்.
"ஆமாம் பொம்மி வேற யாரும் இல்ல, வைசாலி தான்"
"வைஷாலியா...? அன்பிளிவபுல்"
ஆம் என்று தலையசைத்தான் விக்ரம். அப்பொழுது, வைஷாலியின் வாண்டு பட்டாளம் அங்கு வந்தது. அவர்களைப் பார்க்கச் சொல்லி சைகை செய்தான் விக்ரம்.
"உங்ககிட்ட நாங்க கொஞ்சம் பேசணும்" என்றான் சலீம்.
தன் கைகளை கட்டிக் கொண்டான் விக்ரம்.
"நீங்க நெனச்சுக்கிட்டு இருக்கிறது உண்மையில்ல" என்றான் அர்ஜுன்.
"எது? "
"உங்க தங்கச்சி ஓடிப்போக வைஷாலி அக்கா ஹெல்ப் பண்ணல. அவங்க ரொம்ப நல்லவங்க"
விக்ரமும், சுதாகரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். இந்த கதையை தான் இந்த பிள்ளைகளிடம் கூறி வைத்திருக்கிறாளா?
"எனக்கு தங்கச்சி இல்ல" என்றான் விக்ரம்.
"உங்களுக்கு?" என்றான் சுதாகரை பார்த்து அர்ஜுன்.
"நான், எங்க அம்மா அப்பாவுக்கு ஒரே பையன்"
"அப்புறம் எதுக்காக எங்க அக்கா பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கீங்க?"
"அவ என்னோட வைஃப்"
அதைக்கேட்டு அதிர்ந்தார்கள் அந்த சிறுவர்கள்.
"நீங்க பொய் சொல்றீங்க. அக்காவுக்கு இன்னும் கல்யாணம் ஆகல"
"அவங்க ரெண்டு பேருக்கும் சின்ன வயசிலேயே நிச்சயம் ஆயிடுச்சு. போன வாரம் அவங்களுக்கு கல்யாணம் நடந்துச்சு. வைஷாலிக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல" என்றான் சுதாகர்
"இதை எங்களால நம்ப முடியல"
"வைஷாலியோட அப்பா, இவங்க தாத்தா வீராதித்தன்கிட்ட தான் வேலை செஞ்சுகிட்டு இருந்தாரு. உண்மையா இல்லையான்னு உங்க அக்காவை கேளுங்க"
"அது எங்களுக்கு தெரியும்"
" அக்கா ஒரு தடவை எங்ககிட்ட சொன்னாங்க"
அவ்வளவு தான் என்பது போல் தன் தோளை குலுக்கினான் சுதாகர். காரில் ஏறி அமர்ந்து அங்கிருந்து கிளம்பினான் விக்ரம். தனது இரு சக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்தான் சுதாகர்.
"அங்கிள்" என்றான் சலீம்.
தனது வண்டியை ஆஃப் செய்தான் சுதாகர்.
"சாரி அங்கிள்..."
"பரவாயில்லை விடுங்க..." தன்னுடைய விசிட்டிங் கார்டை எடுத்து அவர்களை நோக்கி நீட்டினான்.
"நீங்க நல்ல பசங்களா இருக்கீங்க. உங்களுக்கு ஏதாவது வேணும்னா கேளுங்க" என்றான்.
சரி என்று சந்தோஷமாய் தலையை அசைத்தார்கள் அந்த பிள்ளைகள்.
பொன்னகரம்
வீட்டிற்கு வந்த விக்ரம், சமையலறைக்குச் சென்று சாவித்திரியை தேடினான். ஆனால் அவர் அங்கு இல்லை.
"குமரய்யா, அம்மா எங்க?" என்றான் வேலைக்காரனிடம்.
"அம்மாவும், ஐயாவும், ராணியம்மா கூட காமினி அம்மா வீட்டுக்கு பார்ட்டிக்கு போயிருக்காங்க."
அதைக் கேட்டு எரிச்சல் அடைந்தான் விக்ரம். அவனிடம் சொல்லாமல் அவனுடைய அம்மா எதற்கு பார்ட்டிக்கு சென்றார்? இந்த வயதான கிழவிகள் ஆபத்திலும் ஆபத்தானவர்கள். அவர்கள் என்ன கொண்டுவர போகிறார்களோ தெரியவில்லை.
சாவித்திரிக்காக வெகுநேரம் காத்திருந்தான் விக்ரம். ஆனால் மணி பதினொன்று ஆகியும் அவர் பார்ட்டியிலிருந்து திரும்பி வரவில்லை. அவரிடம் காலையில் பேசிக் கொள்வது என்று தீர்மானித்து உறங்கினான்.
மறுநாள்
தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது சுதாகருக்கு. அதை ஏற்ற அவன்,
"யார் பேசுறது?" என்றான்.
"நான் பார்வதி நகரிலிருந்து சலீம் பேசுறேன்"
"ஹாய், என்ன விஷயம் சொல்லு?"
"வைஷாலி அக்கா கோவிலுக்கு போறாங்க"
"ஓ..."
"அவங்க கோவில்ல இருக்கும் போது பொய் சொல்ல மாட்டாங்க"
"ஓஹோ..."
"நீங்க ஏதாவது கேட்டா அவங்க உண்மை தான் சொல்லுவாங்க"
"தேங்க்ஸ்"
"வெல்கம்"
அந்த அழைப்பை தூண்டித்தவுடன், விக்ரமுக்கு போன் செய்தான் சுதாகர்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top