13 பொம்மி
13 பொம்மி
சட்டென்று காரை *யூ* டர்ன் எடுத்து மீண்டும் பார்வதி நகரை நோக்கி வண்டியை செலுத்தினான் விக்ரம். அவனது செயல், சுதாகரை குழப்பியது.
"எங்க போற விக்கி?"
" வைஷாலி வீட்டுக்கு"
"எதுக்கு? "
"அந்த பசங்க சொன்னாங்க, வைஷாலி தான் அவங்களுக்கு படிக்கிறதுக்கு ஹெல்ப் பண்ணுவான்னு..."
"ஆமாம் "
"ஒருவேளை, அவங்க வைஷாலிக்கு ஹெல்ப் பண்றதுக்காக பொய் சொல்லி இருந்தா...?"
"நீ அப்படியா நினைக்கிறே?"
"வைஷாலியே கூட அவங்களை அப்படி சொல்ல வச்சிருக்கலாம்."
ஆம், அப்படியும் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்பது போல் தலையசைத்தான் சுதாகர்.
"அப்படியே இல்லனாலும் நம்ம அங்க இருக்கிற வேற யார்கிட்டயாவது விசாரிச்சி பாக்கலாம். நம்ம தஞ்சாவூருக்கு போயிட்டு வந்தப்போ, நான் அப்படி விசாரிக்காமல் வந்ததுக்காக அம்மா என் மேல கோவ பட்டாங்க." சிரித்தான் விக்ரம்.
......
தனது வாண்டு நண்பர்களுடன் அமர்ந்து பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் வைஷாலி. அப்போது அழைப்பு மணி ஒலிக்க, தனது அம்மா வந்து விட்டதாய் எண்ணி குதூகலித்தாள்.
"அம்மா வந்துட்டாங்க... "என்று சோபாவை விட்டு துள்ளி எழுந்தாள்.
தனது அம்மாவை எதிர்பார்த்து, ஓடிச் சென்று கதவை திறந்தவள், சீரியசான முகபாவத்துடன் நின்றிருந்த *சின்ன முதலாளி* யை பார்த்து திடுக்கிட்டு நின்றாள். வாயிலிருந்த பஜ்ஜி வெளியே தெரியும் அளவிற்கு, வாயை பிளந்து கொண்டு அந்த வாண்டுகள் அவனைப் பார்த்தது.
"ஸ்மார்ட் மூவ், வைஷாலி... உனக்கு ஹெல்ப் பண்ண, ஒரு சின்ன *ஆர்மி*யையே ரெடி பண்ணி வச்சிருக்க போல இருக்கு..." என்றான் அந்த சிறுவர்களை பார்த்தபடி.
தட்டிலிருந்த பஜ்ஜியை கையில் எடுத்துக்கொண்டு, சலீம் மற்றவர்களுக்கு சைகை செய்ய, அவர்கள் அங்கிருந்து ஒவ்வொருவராய் நழுவி சென்றார்கள். வைஷாலி கதவை சாத்தி தாழிடும் முன் வீட்டினுள் நுழைந்தான் விக்ரம்.
"எதுக்காக இங்க வந்தீங்க?" என்றாள் கோபமாக.
"நீ எதுக்காக அவங்களை பொய் சொல்ல சொன்ன?" என்றான் கோபப்படாமல்.
"நான் உங்ககிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன். எனக்கு எதுவும் தெரியாது. நீங்க சொல்ற விஷயமெல்லாம் நடந்துதான்னு கூட எனக்கு தெரியல" என்றாள் அலுப்புடன்.
"எனக்கு உன்னோட ஹெல்ப் வேணும்" என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான் சுற்றி வளைக்காமல்.
"நான் உங்களுக்கு என்ன ஹெல்ப் பண்ண முடியும்?" என்றாள் எரிச்சலாக.
"என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு எனக்கே புரியல. எனக்கு ஹெல்ப் பண்ணு, ப்ளீஸ்..."
"இங்க பாருங்க, நீங்க சொன்னதை எல்லாம் வச்சு, நான் ஏற்கனவே குழம்பி போய் இருக்கேன். தயவு செய்து என்னை இன்னும் பிரச்சினையில மாட்டி விடாதீங்க"
"எனக்கு தெரியும் நீ பயந்திருக்க. என்னால உனக்கு எந்த பிரச்சனையும் வராது. நான் ஏன் ஏமாத்தப்பட்டேன்னு எனக்கு தெரியணும்" என்றான் அமைதியாக.
"நீங்க பெரிய பிசினஸ் மேன். பெரிய கம்பெனியை நடத்திக்கிட்டு இருக்கீங்க. இவ்வளவு தைரியமா உங்களையே ஒருத்தர் ஏமாத்தி இருக்காங்கன்னா, என்னோட நிலைமை என்ன ஆகும்? என்னை அவங்களால என்ன வேணா செய்ய முடியுமே..."
"இந்த கல்யாணத்துக்கு குறிப்பா உன்னை செலக்ட் பண்ணதுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும்னு நான் நம்புறேன். அதை நான் தெரிஞ்சுக்கணும்"
அவன் கூறிய காரணம், அவளை திகைக்க வைத்தது. அந்தக் காரணம் என்னவாக இருக்க முடியும் என்பதைத் தான் அவள் ஏற்கனவே யூகித்து விட்டாளே...
"என்ன பெரிய காரணம் இருந்திட போகுது? நாங்கல்லாம் ரொம்ப சாதாரணமானவங்க... எங்களுக்குன்னு யாரும் இல்ல. எங்களை யார் வேணா எதுக்கு வேணா யூஸ் பண்ணிக்கலாம்..." என்றாள் காட்டமாக.
"ஐ அம் சாரி... இது என்னுடைய நலேட்ஜ்ஜுக்கு அப்பாற்பட்டு நடந்துடுச்சு" மனதார மன்னிப்பு கேட்டான் விக்ரம்.
"சாக இருந்த ஒரு பொண்ண எதுக்காக நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க?"
கண்ணை மூடி பெருமூச்சு விட்டான் விக்ரம்.
"நான் செஞ்ச அந்த தப்புக்காக ரொம்ப வருத்தப்படுறேன். அதை விடு. நடந்ததை மாத்த முடியாது..."
தான் முன்பின் அறியாத ஒரு பெண்ணிடம் தன் மன வருத்தத்தை வெளியிட்டான் விக்ரம்.
"இப்போ நீங்க என்ன செய்யப் போறீங்க?"
"நீ என்னோட வீட்டுக்கு என்கூட வரணும்"
"எதுக்கு? "
"என்னோட ஃபேமிலியை பொருத்தவரை நீ என்னோட வைஃப். உன்னை பார்த்து, அவங்க என்ன செய்றாங்கன்னு நான் பார்க்கணும்"
"உங்களுக்கு என்ன பைத்தியமா?"
"அவங்க ஏன் இந்த நாடகத்தை நடத்தினாங்கன்னு அப்ப தான் நான் தெரிஞ்சிக்க முடியும்"
"அது உங்க பிரச்சனை... நான் ஏன் உங்க கூட வரணும், அதுவும் உங்களுக்கு பொண்டாட்டியா...? அதோட விளைவுகள் என்ன ஆகும்னு நீங்க யோசிச்சு பாத்தீங்களா?"
"இதைப் பத்தி யாருக்கும் எதுவும் தெரிய வராது. தயவுசெய்து புரிஞ்சுக்க முயற்சி பண்ணு"
"நீங்க என்னுடைய நிலைமையை புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. இல்லன்னா, உண்மையிலேயே நீங்க என்னை தேடி கண்டுபிடிக்க முடியாத ஒரு இடத்துக்கு வீட்டை மாத்திக்கிட்டு நான் ஓடிப் போய் விடுவேன்"
"அப்படி செய்யறத்துக்கு முன்னாடி, தயவுசெய்து என்னை பத்தி யோசிச்சு பாரு"
"நீங்க தயவுசெய்து இங்கிருந்து போறீங்களா?"
"அப்படின்னா நீ எனக்கு ஹெல்ப் பண்ண மாட்டியா?"
"மாட்டேன். நீங்க இப்படி என்னை டிஸ்டர்ப் பண்ணா, நான் போலீசை கூப்பிடுவேன்"
"அஃப் கோர்ஸ், நீ நிச்சயமா போலீசை கூப்பிடலாம் தான். நான் ஒருத்தரை தேடிக்கிட்டு இருக்கேன். உன்னுடைய ஹெல்ப் இல்லாம என்னால *அவளை* தேடி கண்டுபிடிக்க முடியாது..."
வைஷாலியின் மூளைக்குள் விளக்கு எரிந்தது. *அவளை* யா?
"நீங்க யாரை தேடிக்கிட்டு இருக்கீங்க?" என்றாள் தனது ஆர்வத்தை காட்டிக்கொள்ளாமல்.
"என்னோட கல்யாணம் நிச்சயமான ஒரு பெண்ணை தான் நான் தேடிக்கிட்டு இருக்கேன்" என்று கூற அவன் தயங்கவில்லை.
அவன் தன்னைத்தான் தேடிக் கொண்டிருக்கிறான்...
"உங்களுக்கு ஏற்கனவே ஒரு பொண்ணு கூட கல்யாணம் நிச்சயமாகி இருந்தா, எதுக்காக வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிகிட்டீங்க?"
"அவளைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு தான், இவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்"
"என்ன சொல்றீங்க நீங்க?" என்றாள் குழப்பக் குறியுடன்.
"அது ஒரு பெரிய கதை. நீ என்கூட என்னோட வீட்டுக்கு வர்றதா இருந்தா, நிச்சயம் நான் அதை உனக்கு சொல்றேன்"
"இங்க பாருங்க, இந்த விஷயம் எல்லாம் எங்க அம்மாவுக்கு தெரிஞ்சா என்னை கொன்னு போட்டுடுவாங்க. எங்களை மாதிரி நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவங்க எல்லாம் இப்படிப்பட்ட நாடகத்தை யோசிச்சி கூட பார்க்க முடியாது. தயவு செய்து என்னை கட்டயபடுத்தாதீங்க."
ஏமாற்றமாய் போனது விக்ரமுக்கு. இந்த பெண்ணின் உதவியைப் பெறுவது நிச்சயம் சாத்தியம் அல்ல என்பது அவனுக்கு புரிந்து போனது. அவன் அங்கிருந்து கிளம்ப நினைத்த போது,
"உங்க ஃபியான்சியோட பேரை நான் தெரிஞ்சுக்கலாமா?" என்றாள் வைஷாலி.
"பொம்மி"
அங்கிருந்து சென்றான் விக்ரம் வைஷாலியை கலக்கத்திற்கு ஆளாக்கி. ஒரு பஜ்ஜியை எடுத்து வாயில் திணித்தபடி சோபாவில் அமர்ந்தாள். உண்மையிலேயே விக்ரம் அவளை தான் தேடிக் கொண்டிருக்கிறாரா? அப்படி என்றால் அவர் எதற்காக அவளை மணந்து கொண்டார்? எதற்காக அவள் அவருடைய வீட்டுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார்? தன்னுடைய பாட்டியை அவர் சந்தேகிக்கிறாரோ? சின்ன முதலாளியின் மனைவியாய் அவள் பொன்னகரம் சென்றால் என்னாகும்? தான் திருமணம் செய்து கொண்டது வேறு யாரையும் அல்ல, தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட பொம்மியை தான் என்ற உண்மை, சின்ன முதலாளிக்கு தெரிந்தால் என்னவாகும்?
சோபாவில் சாய்ந்துகொண்டு சிரித்தாள் வைஷாலி. இதெல்லாம் என்ன? எதற்காக அவளுடைய வாழ்க்கையில் இப்படிபட்ட திடீர் திருப்பங்கள்? அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அனைத்தையும் விக்ரமின் போக்கில் விட்டுவிடுவது என்று முடிவு செய்தாள். பார்ப்போமே, சின்ன முதலாளி என்ன செய்கிறார், எப்படி தன்னை கண்டுபிடிக்கிறார் என்று, நினைத்துக் கொண்டாள் வைஷாலி.
வைஷாலி தன்னுடன் வீட்டிற்கு வர மறுத்துவிட்டதால், தனது நம்பிக்கையை முழுவதுமாய் இழந்திருந்தான் விக்ரம். அடுத்து என்ன செய்வது என்பதே அவனுக்கு புரியவில்லை. இந்த விஷயத்தில் தனக்கு மிகப்பெரிய பிடிமானம் கிடைத்துவிட்டது என்று அவன் எண்ணியிருந்தான். ஆனால் இப்பொழுது, அது கை நழுவி விட்டதாய் அவன் உணர்ந்தான்
மறுநாள்
கோப்பெருந்தேவி வேலைக்கு செல்லட்டும் என்று காத்திருந்தாள் வைஷாலி. அவளுக்கு இன்று மிக முக்கியமான வேலை ஒன்று செய்ய வேண்டியுள்ளது. பரபரவென தயாராகி ஆக்ஸிஜன் மருத்துவமனையை நோக்கி விரைந்தாள். மருத்துவமனையை அடைந்த அவள், உள்ளே நுழைந்தாள், தன்னை யாரோ பின்தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை அறியாமல். அந்த யாரோ, விக்ரமின் நண்பன் சுதாகர்.
மருத்துவமனையை தற்செயலாய் காரில் கடந்து கொண்டிருந்த விக்ரமும் சுதாகரும், வைஷாலி அதனுள் செல்வதை கவனித்தார்கள். தன்னைப் போன்ற நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள், ஆக்சிஜன் மருத்துவமனைக்கு செல்ல முடியாது என்று அவள் கூறினாள் அல்லவா? அப்படி என்றால், இப்பொழுது அவள் அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாள்? இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். விக்ரமின் மனதில் இருப்பதை புரிந்து கொண்டு, காரை விட்டு கீழே இறங்கி அவளைப் பின் தொடர்ந்து சென்றான் சுதாகர். தனது ப்ளூடூத்தின் மூலமாக, விக்ரமுக்கு அவன் *லைவ் கமெண்ட்டரி* கொடுத்துக் கொண்டிருந்தான் என்பதை கூற வேண்டிய அவசியமில்லை. விக்ரமே அவளைத் தொடர்ந்து செல்ல வேண்டும் என்று தான் நினைத்தான், ஆனால் வைஷாலி அவனை பார்த்து விட்டால் காரியம் கெட்டு விடும் என்பதால் சுதாகரை அனுப்பினான்.
அந்த மருத்துவமனையில் இங்கும் அங்கும் சுற்றி திரிந்தாள் வைஷாலி, தன்னை யாராவது அடையாளம் காண்கிறார்களா என்று கவனித்துக் கொண்டு. அவள் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. அன்று திருமணம் நடந்த போது, அவளுடைய அறையில் இருந்த செவிலி, அவளை அடையாளம் கண்டுகொண்டாள். பேயை பார்த்தது போல ஆனாள் அவள். உடனடியாய் காமினிக்கு ஃபோன் செய்தாள். தனது அறையில் ஒரு நோயாளியை சோதனை செய்து கொண்டிருந்த காமினி அந்த அழைப்பை ஏற்றார்.
"சொல்லு"
"டாக்டர், அந்த பொண்ணு இங்க வந்திருக்கா"
"எந்த பொண்ணு?
"உங்க ஃப்ரெண்டோட பேரனுக்கு நீங்க கல்யாணம் பண்ணி வச்சீங்களே..."
"என்ன்ன்னனது..???? அந்த பொண்ணு இங்க என்ன செஞ்சுகிட்டு இருக்கா?"
"தெரியல டாக்டர் "
"அவளை என் ரூமுக்கு கூட்டிகிட்டு வா... உடனே..."
"சரிங்க டாக்டர் "
அழைப்பை துண்டித்துவிட்டு, வைஷாலியை நோக்கி விரைந்தாள் அந்த செவிலி.
"வாட் கேன் ஐ டூ பார் யூ?" என்று கேட்ட அந்த செவிலியை மேலும் கீழும் பார்த்தாள் வைஷாலி.
சட்டென்று என் தலையை பிடித்துக் கொண்டு,
"ஒரே தலைவலி... ட்ரை கஃப்... ( லொக்கு லொக்கு என்று இருமி காட்டினாள்) என்னால தூங்கவே முடியல" என்றாள் சோகமாக.
"சரி, என் கூட வாங்க"
"எங்க? "
"உங்களை ஒரு டாக்டர்கிட்ட கூட்டிகிட்டு போறேன்"
"உங்க சர்வீஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. பேஷன்ட்டை எவ்வளவு அக்கறையா கவனிக்கிறீங்க..." என்றபடி அந்த செவிலியை பின்தொடர்ந்தாள் வைஷாலி.
அவளை காமினியின் அறைக்கு அழைத்து சென்ற அந்த செவிலி, அவளை பார்க்கும்போதெல்லாம் இருமினாள் வைஷாலி. வைஷாலியை பார்த்து பேச்சிழந்து போனார் காமினி.
"குட்ட்ட் மாஅஅஅர்னிங் டாக்டர்" என்றாள் இரு கரங்களையும் கூப்பி அவர் முன் தலைகுனிந்து வைஷாலி.
"உங்களுக்கு என்ன பிரச்சனை? "
மீண்டும் இருமினாள்.
"இருமல்... தலைவலி... தொண்டைவலி... "
"ஒரு இன்ஜக்ஷன் போட்டா சரியாயிடும்" என்றார் காமினி.
"வேண்டாம் டாக்டர், எனக்கு இன்ஜெக்ஷன் வேண்டாம்" என்றாள் பயப்படுவது போல் பாசாங்கு செய்து.
"ஏன்? நீ என்ன சின்ன குழந்தையா?" என்றார் காமினி எரிச்சலுடன்.
"இல்ல டாக்டர்... நியூஸ் பேப்பர்ல ஒரு விஷயம் படிச்சேன். அதனால தான் எனக்கு ரொம்ப பயமா இருக்கு"
"என்ன விஷயம்? "
"சில டாக்டர்ஸ் ஹாஸ்பிடல் நடத்துறோம் அப்படிங்கற பேர்ல, இல்லீகல் விஷயமெல்லாம் செய்றாங்களாம்... சின்ன பொண்ணுங்களை மயங்க வச்சு... " என்று சற்றே நிறுத்தியவள்,
"கிட்னி திருடுறாங்களாம்" என்றாள்.
"திஸ் இஸ் ரப்பிஷ்..." என்று சீறினார் காமினி.
"நானும் அதையே தான் சொல்றேன்... ஹவ் ரப்பிஷ்... எவ்வளவு சீப்பான, எவ்வளவு மட்டமான ஆளுங்க... இவங்கல்லாம் எதுக்குத் தான் ஹாஸ்பிடல் நடத்தறாங்களோ" காமினியை ஓரக்கண்ணால் பார்த்தபடி கூறினாள் வைஷாலி. காமினியின் முகத்தில் பதட்டம் தெரிந்தது.
"இது ஒரு கௌரவமான ஹாஸ்பிடல் தெரியுமா"
"தெரியும் டாக்டர்... ஆனா, நீங்க அப்படி எல்லாம் செய்றீங்கன்னு நான் சொல்லவே இல்லையே..." என்றாள் நாற்காலியில் சாய்ந்தபடி.
கடகடவென சில மருந்துகளை சீட்டில் எழுதி அவளிடம் கொடுத்தார் காமினி.
"இதை சாப்பிடு. சரியா போயிடும் "
"தேங்க்யூ டாக்டர்" என்று எழுந்து நின்ற வைஷாலி, மீண்டும் கரங்களை குவித்து, குனிந்தபடியே பின்னோக்கி நகர்ந்து அந்த இடத்தை விட்டு சென்றாள்.
பெருமூச்சு விட்டு தண்ணீரை குடித்தார் காமினி. வைஷாலியை எப்படி எடுத்துக் கொள்வது என்று அவருக்கு புரியவில்லை. எந்த சலனமும் இல்லாத அவளது முகம் அவரை குழப்பியது.
தனது சிரிப்பை அடக்கியபடி மருத்துவமனையை விட்டு வெளியே வந்தாள் வைஷாலி. வாய்விட்டு சிரிக்க நினைத்த அவள், திடுக்கிட்டு நின்றாள். தனது காரின் மீது ஒய்யாரமாய் சாய்ந்தபடி அங்கு நின்றிருந்தான் விக்ரம்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top