11 சின்ன முதலாளி

11 சின்ன முதலாளி

"நீ இன்னும் உயிரோட தான் இருக்கியா?"

தன்னிடம் கேட்கப்பட்டது எப்படிப்பட்ட கேள்வி என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை வைஷாலியால். வழக்கமாய், இப்படிப்பட்ட கேள்வி, நண்பர்கள் இடையில் கேட்பது தான் வழக்கம். பார்த்து வெகு நாளாகி விட்ட நண்பனை, *நீ இன்னும் உயிரோட தான் இருக்கியா?* என்று விளையாட்டாய் நண்பர்கள் கேட்டுக் கொள்ளலாம். ஆனால், ஆதித்யா குரூப் ஆஃப் கம்பெனியின் ஏஎம்டி, அப்படிப்பட்ட ஒரு கேள்வியை, தன்னிடம் வேலைக்கு சேர வந்த பெண்ணிடம் கேட்பது கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாதது தானே?

சுதாகரும் கூட வைஷாலியை போலவே அதிர்ச்சியடைந்தான். விக்ரமை நன்றாக புரிந்து கொள்ளக்கூடிய அவனுக்கு, இப்பொழுது விக்ரம் என்ன விதத்தில் இந்த கேள்வியை கேட்டான் என்பது சுத்தமாக புரியவில்லை. *இன்னும் நீ உயிரோட தான் இருக்கியா?* என்ற கேள்வியை அவன் கேட்கிறான் என்றால், இந்தப் பெண்ணை விக்ரமுக்கு ஏற்கனவே தெரியுமா? ஆனால் எப்படி? அவன் இந்தியாவிற்கு வந்து ஒரு வாரம் தானே ஆகிறது? அதற்குள் இந்த பெண்ணைப் பற்றி அவனுக்கு எப்படி தெரியும்?

தன்னை, பேயைப் பார்த்து விட்டது போல பார்த்துக் கொண்டு நின்ற விக்ரமை, குழப்பத்துடன் பார்த்தாள் வைஷாலி.

"நான் உயிரோட தான் இருக்கேன். ஆனா, அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?" என்றாள் தன் தோள்களைக் குலுக்கியபடி.

"ஆனா எப்படி?" என்று அவன் குரலை உயர்த்த, அவள் சற்று பின் வாங்கினாள்.

சில அடிகள் எடுத்து வைத்து, அவளை வந்தடைந்தான் விக்ரம்.

"உனக்கு சரியாயிடுச்சா? ஆனா, பிரைன் டெட் ஆனவங்க க்யூர் ஆகவே மாட்டாங்கன்னு சொல்லுவாங்களே...? நீ எப்படி க்யூர் ஆன?"

இப்பொழுது சுதாகருக்கு புரிந்துவிட்டது இந்தப் பெண் யார் என்று. அவனுக்கும் ஆச்சரியமாய் போனது. மூளை சாவு அடைந்தவர்கள் குணமானதாய் சரித்திரமே இல்லையே. அப்படியிருக்க இந்த பெண் மட்டும் எப்படி அதிலிருந்து மீண்டாள்?

"பிரைன் டெட்டா? நானா?  நீங்க என்ன பேசுறீங்கன்னு எனக்கு புரியல"

தன் பல்லை கோபமாய் கடித்தான் விக்ரம்.

"நீ ஏணி மேல இருந்து கீழ விழல? உனக்கு தலையில அடி படல? உன்னை ஆக்சிஜன் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணல?" சரமாரியாக கேள்விகளை அடுக்கினான் விக்ரம்.

"இங்க என்ன நடக்குதுன்னே எனக்கு புரியல. நான் இதுவரைக்கும் எப்பவுமே ஏணி மேல ஏறினதில்ல... சோ, நான் கீழே விழவும் வாய்ப்பு இல்ல... எல்லாத்துக்கும் மேல, நான் ஆக்சிஜன் ஹாஸ்பிடல் உள்ள கால் வச்சதே இல்லை..." என்று எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளித்தாள் அவள்.

"இல்ல... நான் உன்னை அங்க பார்த்தேன்... "

அவள் வலது கண்ணத்தில் இருந்த மச்சம் அவன் கண்ணில் பட்டது.

"பாரு... வலது கன்னத்தில் மச்சம் கூட இருக்கு... அது நீயே தான்... நீ தான் அந்த ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகியிருந்த"

"சார், ப்ளீஸ்... எது உங்களை இப்படி எல்லாம் யோசிக்க வைக்குதுன்னு எனக்கு புரியல" அலுத்துக் கொண்டாள் விஷாலி.

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான் விக்ரம்.

"இங்க பாரு... நான் சொல்றதெல்லாம் உண்மை... நீ எதுக்காக ஒத்துக்க மாட்டேங்கிறேன்னு எனக்கு புரியல"

"ஏன்னா, நீங்க சொன்னது எதுவுமே நடக்கல"

"இல்ல, நடந்துச்சு..." என கத்தினான்.

"விக்ரம், உனக்கு நிச்சயமா தெரியுமா? இந்த பொண்ணு தான் அந்த பொண்ணா?" என்றான் சுதாகர்.

"சத்தியமா சொல்றேன். இவளை தான் நான் ஆக்சிஜன் ஹாஸ்பிடல்ல கல்யாணம் பண்ணிக்கிட்டேன்" என்று தொண்டை கிழிய கத்தினான் விக்ரம்.

அவன் கூறியதைக் கேட்ட வைஷாலியின் முகம் போன போக்கை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. அவள் அஸ்திவாரமே ஆட்டம் கண்டது. கல்யாணமா? இவனுக்கு என்ன பைத்தியமா? விக்ரமும், சுதாகரும் அவளுடைய அதிர்ச்சியடைந்த முகத்தை கவனித்தார்கள்.

ஒன்றும் கூறாமல் அவள் அங்கிருந்து புறப்பட முற்பட்டாள். அவளது எண்ணத்தை புரிந்து கொண்ட விக்ரம், கண்ணிமைக்கும் நேரத்தில் கதவை  சென்று அடைந்தான். அவள் வெளியே செல்லாத வண்ணம் கதவை சாத்தினான். கோபம் கொப்பளிக்க அவனை முறைத்தாள் வைஷாலி.

"என்னைப் போக விடுங்க. நான் இங்க வேலையில் சேர தான் வந்தேன். இன்னும் ஒரு நிமிஷம் நான் இங்க இருந்தா, நீங்க என்னை பைத்தியமாக்கிடுவீங்க"

அவர்களை நோக்கி விரைந்து வந்த சுதாகர், சூழ்நிலையை சமாளிக்க முயன்றான்.

"விக்கி, தயவுசெய்து இதையெல்லாம் நிறுத்து"

"என்னால முடியாது"

வைஷாலியை நோக்கி திரும்பியவன், அவள் கரத்தைப் பற்றிக்கொண்டு,

"யார் நீ? பிரைன் டெட் பேஷன்ட் மாதிரி   உன்னை நடிக்க சொன்னது யாரு?" என்றான் கோவமாக.

"மிஸ்டர்... வார்த்தையை அளந்து பேசுங்க. அப்படி நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்ல." என்றாள் அவளும் கோபமாக.

"அப்புறம், எப்படி நீ அந்த ஹாஸ்பிடல்ல இருந்த?"

"அது நான் இல்ல. நான் ஏற்கனவே உங்ககிட்ட சொன்னேன் நான் இதுவரைக்கும் ஆக்ஸிஜன் ஹாஸ்பிடலுக்கு போனதே இல்ல. எங்களை மாதிரி மிடில்கிளாஸ் எல்லாம் அந்த ஹாஸ்பிடலுக்கு போக முடியாது. தயவுசெய்து புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. நீங்க பேசுறதை யாராவது கேட்டா, அது என்னுடைய எதிர்காலத்தையே பாதிக்கும்" அவள் அதை கட்டளையாக தான் கூறினாள் என்றாலும், அது கெஞ்சலாக ஒலித்தது. அது விக்ரமை சாந்தப் படுத்தியது.

மென்று முழுங்கினான் விக்ரம். அவனது வாழ்க்கையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? அவனுடைய பாட்டி அவனை படு மோசமாய் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். அவனுடைய ஜாதகத்தைப் பொறுத்தவரை, இறக்க போகும் ஒரு பெண்ணை அவன் மணந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். ஆனால் அவன் மணந்து கொண்ட பெண், அவன் முன்னால் உயிரோடு வந்து நிற்கிறாள். நடந்த திருமணத்தை பற்றி அந்தப் பெண்ணுக்கும் ஒன்றும் தெரியவில்லை. இதெல்லாம் என்ன?

*என் கையை விடுங்கள்* என்பது போல அவனை ஒரு பார்வை பார்த்த வைஷாலி, பிறகு கதவின் மீதிருந்த அவனது கரத்தையும் பார்த்தாள்.

"கடைசியா நான் கேட்கிற ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு"

பெருமூச்சு விட்டு கண்களை மூடினாள் வைஷாலி. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, *என்ன கேள்வி?* என்பது போல் கைகளை கட்டிக்கொண்டு நின்றாள்.

"நான் உன் கழுத்துல தாலி கட்டினதுக்கு பிறகு, உன்னோட வலது உள்ளங்கைல VKM அப்படின்னு என்னோட பெயரை ஷார்ட்டா எழுதினேன். நீ அதை பாக்கலையா?

தன் முகத்தில் அதிர்ச்சியை காட்டிவிடாமல் இருக்க படாத பாடு பட்டாள் வைஷாலி. அவள் தான் அவளது உள்ளங்கையில் VKM என்ற எழுத்துக்களை பார்த்தாளே...! அதிர்ச்சியில் வாயடைத்து நின்றாள் வைஷாலி.  முதலில் அவன் பேசியதைக் கேட்ட போது, அவனுக்கு பைத்தியம் என்று நினைத்தாள். ஆனால் அவளது எண்ணம் தவறு என்பது போல் தெரிகிறது.

"ப்ளீஸ், தயவுசெய்து யோசிச்சு பாரு..." அவன் கண்களிலிருந்த தவிப்பை கண்டாள் வைஷாலி.

சற்று முன், விக்ரமின் மனதில் எழுந்த அதே கேள்வி, இப்பொழுது வைஷாலியின் உள்ளத்தில் எழுந்தது. *அவள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது?* இவர் யார்? மூளைச்சாவு அடைந்து விட்டதாக கூறப்பட்ட ஒரு பெண்ணை இவர் ஏன் மணந்து கொள்ள வேண்டும்? அவளுக்கு திக்கென்றது. இது மிகவும் எச்சரிக்கையுடன் கையாளப்பட வேண்டிய விஷயம். இந்த நாடகத்திற்கு பின்னால் இருப்பது யார் என்பதை அவள் கண்டு பிடித்தாக வேண்டும். தன்னை சுதாகரித்துக் கொண்டு,

*நான் பார்க்கல* என்பது போல தலையசைத்தாள்.

"ஓகே ஃபைன்"

அவள் கொண்டு வந்த பணி நியமன ஆணையில் கையெழுத்திட்டு, அதை அவள் கையில் திணித்தான் விக்ரம்.

"நீ எப்ப வேணும்னாலும் வேலையில் சேரலாம்" என்றான்.

அவனை வினோதமாய் பார்த்த அவள், அவன் கையைப் பிடித்து, அந்த பணி நியமன ஆணையை, மீண்டும் அவன் கையில் திணித்தாள், அவன் செய்தது போலவே. அங்கிருந்து விடுவிடுவென நடந்தாள் அவனுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

வைஷாலிக்கு ஒரு விஷயம் நன்றாக  புரிந்தது. அவளுக்கு தெரியாமல் ஏதோ நடந்திருக்கிறது... அது அவளது திருமணமாக கூட இருக்கலாம்...  ஆனால் ஏன்? அதை செய்தது யார்? குறிப்பாய் அவளை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் என்ன? அவளுக்கே தெரியாமல், இந்த விஷயத்தில் அவளை பயன்படுத்திக் கொண்டது யார் என்பதை அவள் தெரிந்து கொண்டாக வேண்டும்.

இதற்கிடையில்,

தன் கையில் இருந்த பணி நியமன ஆணையை கோபத்துடன் வீசி எறிந்தான் விக்ரம். அருகிலிருந்த சுவற்றை கோபமாய் ஓங்கி ஒரு குத்து குத்தினான். அவன் கையை பிடித்து இழுத்து, அவனை சோபாவில் அமர வைத்தான் சுதாகர்.

"எனக்கு நிச்சயமா தெரியும்... அது அவ தான்"

"அதனால?"

"என்ன பேசுற நீ?"

"நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணு இவ தான்னா, அவ உன்னோட ஒய்ஃப்"

"மண்ணாங்கட்டி... சாகப்போற ஒரு பெண்ணைத் தான் நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா, அவ குத்து கல்லு மாதிரி என் முன்னாடி வந்து நிக்கிறா. அப்படின்னா என்ன அர்த்தம்?  எனக்கு என் பாட்டி மேல தான் சந்தேகமா இருக்கு"

"உன் பாட்டி, இந்தப் பெண்ணை நடிக்க வச்சிருப்பாங்கன்னு நினைக்கிறாயா?"

"நான் அப்படி நினைக்கல"

"ஏன்?"

"ஒருவேளை அவங்க இந்த பெண்ணை நடிக்க வச்சிருந்தா, இந்த ஆஃபீஸ் பக்கமே வரக்கூடாதுன்னு அவளை வார்ன் பண்ணியிருப்பாங்க..."

ஆமாம் என்று தலையசைத்தான் சுதாகர்.

"அவளுக்கும் இதைப் பத்தி எதுவும் தெரியாதுன்னு நினைக்கிறேன்"

"இருக்கலாம்...  இவளை மயங்க வச்சு அவங்க ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு வந்திருக்கலாம்"

"எக்ஸாக்ட்லி"

"ஆனா எதுக்காக இவளை கொண்டு வரணும்? பணத்தைக் கொடுத்தா, நடிக்க ஆயிரம் பேர் இருக்காங்களே..."

"அது தான் எனக்கும் புரியல"

"நம்ம அந்தப் பெண்ணை போக விட்டிருக்கக் கூடாது விக்ரம். அவ யாருன்னு தெரிஞ்சா, நமக்கு ஏதாவது புரியலாம்."

"அவளோட பயோடேட்டா, இந்த கம்பெனியோட ரெக்கார்ட்ஸ்ல இருக்கும்"

"அதுல அவளுடைய அட்ரஸ் இருக்குமா?"

" நிச்சயமாய் இருக்கும்"

"அப்படின்னா நம்ம அவளை ஈஸியா பிடிச்சிடலாம்"

தனது அலுவலக மேலாளரை வரவழைத்தான் விக்ரம்.

"இன்னைக்கு வேலையில சேர வந்த கேண்டிடேட்ஸ்ஸோட டீடெயில்ஸ் எனக்கு வேணும்"

" எஸ் சார்... "

" குயிக்"

அதைக் கொண்டுவந்து விக்ரமிடம் கொடுத்துவிட்டு சென்றார் மேலாளர்.

"வைஷாலி..." என்று அவள் பெயரை முணுமுணுத்தான், பயோடேட்டாவை பார்த்த விக்ரம்.

தனக்கு தேவையான விவரங்களை தனது கைப்பேசியில் பதிவு செய்து கொண்டான் விக்ரம். அதை செய்யும் போது, அவன் அதை மனப்பாடம் செய்து கொண்டான் என்பதை கூறத் தேவையில்லை. அந்த முகவரியை படித்த சுதாகர்,

"இந்த அட்ரஸ், இங்கிருந்து கொஞ்ச தூரத்துல தான்" என்றான்.

"இந்த ஏரியா எங்க இருக்குன்னு உனக்கு தெரியுமா? "

"தெரியும். என்னோட ஃப்ரெண்டு ஒருத்தன் அங்க இருந்தான். ஆனா, இப்ப அவன் அங்க தான் இருக்கானான்னு எனக்கு தெரியல"

"அவனுக்கு கால் பண்ணி, அவன் எங்க இருக்கான்னு தெரிஞ்சுக்கோ"

"நேரிலேயே போய் பாத்துட்டு வந்துடறேன்"

" நானும் கூட வரேன் "

" சரி "

"இன்னைக்கு சாயங்காலம் போகலாம்"

"ஓகே "

.......

சற்று முன் நடந்தவற்றை யோசித்தபடி வீடு வந்து சேர்ந்தாள் வைஷாலி. ஒரு சொம்பு நிறைய தண்ணீரை எடுத்து ஒரே மடக்கில் குடித்து முடித்தாள். யார் இந்த விக்ரம்? அவளது கையில் VKM என்று எழுதியது அவரா? அப்படி என்றால் அவர் கூறுவது எதுவும் பொய் இல்லையா? உண்மையிலேயே அவளுக்கு அவருடன் திருமணம் நடந்து விட்டதா? அவர் அவளது கணவனா? ஆனால் அது எப்படி நிகழ்ந்தது? சமீபத்தில் தான் மயங்கி விழுந்து, ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது அவள் நினைவுக்கு வந்தது. ஆனால் அவள் இருந்தது ஒரு சிறிய மருத்துவமனை தானே? ஆனால் அவரோ, அவளை ஆக்சிஜன் மருத்துவமனையில் பார்த்ததாக கூறுகிறார்... அவளுக்கு தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டுமென்று தோன்றியது. தாங்க முடியாத கோபம் அவள் மனதில் எழுந்தது. அப்போது அவளது பார்வை அங்கு வைக்கப்பட்டிருந்த அவளது மடிக்கணினியின் மீது சென்றது. அதை எடுத்து, ஆதித்யா குரூப்ஸ் ஆஃப் கம்பெனியை பற்றி விவரங்களைத் தேடத் துவங்கினாள்.

ஆதித்யா குரூப்ஸ் ஆஃப் கம்பெனி என்ற பெயர், பத்து வருடங்களுக்கு முன்பு தான் மாற்றப்பட்டிருந்தது. அதற்கு முன், அதன் பெயர், வீராஸ் அண்ட் கம்பெனி.

திக் பிரமை பிடித்தது போல் ஆனாள் வைஷாலி. வீராஸ் அண்ட் கம்பெனியா? அந்த நிறுவனத்தில் தானே அவளுடைய தந்தை பணியாற்றிக் கொண்டிருந்தார்...! அப்படி என்றால் என்ன அர்த்தம்? இவர் வீராதித்தன் குடும்பத்தை சேர்ந்தவரா?

ஒரு முக்கியமான விஷயத்தை நிச்சயப்படுத்திக் கொள்ள, மேலும் அவர்களை பற்றி தேடத் துவங்கினாள்.

*ஆதித்யா* என்னும் பெயர், அந்த நிறுவனத்தின் முன்னாள், இன்னாள் மற்றும் வருங்கால முதலாளிகளின் பெயர்களான வீராதித்தன், விமலாதித்தன், விக்ரமாதித்தனை உள்ளடக்கியது.

எதிர்பாராத இந்த உண்மையை ஜீரணிக்க முடியாமல் தவித்தாள் வைஷாலி.

அந்த நிறுவனத்தின் இளைய முதலாளி, அமெரிக்காவில் இருக்கும் அந்த நிறுவனத்தின் கிளையில் பணிபுரிந்து கொண்டிருப்பதாக ஒரு குறிப்பு இருந்தது.

விக்ரம் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்து சில நாட்களே ஆகியிருந்ததால், அவனைப் பற்றிய சமீபத்திய விவரங்கள் இன்னும் அந்த நிறுவனத்தின் வலைதளத்தில் சேர்க்கப்படவில்லை. விக்ரம் அலுவலகம் வர ஒப்புக் கொள்வான் என்பதை விமலாதித்தன் கூட எதிர்பார்த்திருக்கவில்லை அல்லவா.!

ஆனால், வைஷாலிக்கு அவனைப் பற்றிய எந்த கூடுதல் விவரமும் தேவைப்படவில்லை. அவன் யார் என்பதை அவள் புரிந்து கொண்டாள். விக்ரம் வேறுயாருமல்ல, சில வருடங்களுக்கு முன்பு, வீராதித்தனால் தனக்கு நிச்சயம் செய்து வைக்கப்பட்ட சின்னமுதலாளி தான் அவன்...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top