6

"அது.. ஜெர்ரினு பேரை மட்டும் நல்லாத் தெரியும்.. நீ.. நீங்க.. பயாலஜி க்ளாஸ்னு நினைக்கறேன்.. அதனால, அவ்ளோ க்ளோஸ் இல்ல.."

தட்டுத்தடுமாறி ஏதோ சமாளித்தாள் அவள்.

அவன் ஆமோதிப்பாகத் தலையசைத்தான்.

"ஆமா.. ஸ்கூல்ல பெருசா பேசிக்கிட்டதில்லை தான், ஆனா உன்னை  எல்லாருக்கும் தெரியுமே... ரொம்ப ஆக்டிவா எல்லா பங்ஷன்லயும் பங்கெடுத்துப்ப.. தைரியமா ஸ்டேஜ்ல ஏறிப் பேசுவ.. நம்ம ஸ்கூல்ல அந்த டைம்ல படிச்ச எல்லாருக்கும் கண்டிப்பா உன்னைத் தெரியும்."

அவள் சன்னமாகப் புன்னகைத்தாள்.

"தேங்க்ஸ். நீ.. இங்க என்ன பண்ற? இங்கதான் வேலை செய்யறயா?"
பேசிக்கொண்டே அவன் அணிந்திருந்த அடையாள அட்டையைக் கவனித்தாள் அவள்.

'Dr. Jerrin Wilson. MBBS.,MD.,'

"ம்ம், ஆமா. Forensic Pathologist. போலீஸ் விசாரணைக்கெல்லாம், நான்தான் மெடிக்கல் ஆபிசர்."

அவன் தன் முனகல் குரலுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத உயர்பதவியைச் சொல்ல, ரேணு பாதி புரிந்தும் புரியாமலும் தலையை அசைத்துவிட்டு, தீர்க்கமாக அவனது கையைப்பற்றி இருமுறை குலுக்கினாள்.

"அப்பறம், நீ.. என்ன பண்ற? ப்ரெஸ்ஸா?"

அதே சன்னமான எலிக்குரல். இவனுக்கு ஜெர்ரி என்ற பெயர்தான் என்ன பொருத்தம்! ஒருநாளும் அவனது முழுப்பெயரை யாரும் விளித்துக் கேட்டதில்லை ரேணு. ஆசிரியர்களுக்குக்கூட அவன் 'ஜெர்ரி'தான்.

எத்தனை வசதியான, நினைவிற்கொள்ள எளிமையான பெயர்!? அதைக்கூட இத்துணை வருடத்தில் மறக்க முடிந்ததென்றால் நம் வாழ்க்கைதான் எத்தனை மட்டமோ!

மானசீகமாகத் தன்னையே திட்டிக்கொண்டாள் அவள்.

"ம்ம்.. டிவி தான். சங்கம் டிவி."

"அப்டியா? நல்லது..."

அதற்குத் தலையை மட்டும் அசைத்தாள் அவள். மேற்கொண்டு என்ன பேசுவதெனப் புரியவில்லை. அவனோ, அவள் எதாவது கேட்கட்டுமென அவளையே பார்த்து நின்றான்.

"ஜெர்ரி.. உன்னை.. உங்களை பாக்க சந்தோஷமா இருக்கு.. இங்கயே தான் வேலை செய்யறயா?" கேட்கத் தெரியாமல் கேள்வி கேட்டாள் அவள்.

"இல்ல, நான் கோயம்புத்தூர்ல மெடிசின் முடிச்சிட்டு, மும்பைல பிஜி பண்ணுனேன். அதுக்கப்பறம், MRB எக்ஸாம் எழுதினதுல இந்த வேலை கிடைச்சுது. இப்ப சென்னைக்கு வந்து மூணு மாசம்தான் ஆகுது."

"ஓ.. ஃபைன்.."
செயற்கைத்தனமாய் சிரித்தாள் அவள்.

"அப்பறம்.. உன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எப்டி இருக்காங்க? சாகர், சந்தியா, குமார்.. எங்க இருக்காங்க எல்லாரும்?"

அவள் அசட்டுத்தனமாய்த் தலையைச் சொறிந்தாள்.

"இல்ல.. யார்கூடவும் டச்ல இல்ல. அதெல்லாம்.. ரொம்ப வருஷம் ஆச்சுல்ல... "

அவன் சற்றே ஏமாற்றமடைந்த முகத்தோடு ஒருகணம் பார்த்துவிட்டு, மூக்கைத் தடவிக்கொண்டான் இடதுகையால். குற்றவுணர்வு கொஞ்சம் தோன்றினாலும், அவள் எதுவும் காட்டிக்கொள்ளாமல் தலையசைத்துவிட்டு  நின்றாள்.

பரிச்சயப்பட்ட முகம் தந்த ஆறுதலைக் காட்டிலும், நினைவுகளைத் தோண்டியெடுக்கும் முயற்சியின் ஆயாசம் அவளை வருத்தியது. பள்ளியிலிருந்து பிரிந்தபிறகு, யாருடனும் ஒருமுறைகூட தொடர்புகொள்ள நினைக்காத தன்மீது கோபமாக வந்தது.

மேலும், ஜெர்ரி அவள்மீது கொண்ட அபிப்ராயம் அவளது ஒவ்வொரு வார்த்தையாலும் தகர்ந்துவிடும் போல் இருந்தது. மேற்கொண்டு பேசாமல் இருப்பதே உத்தமம் எனத்தோன்றியது.

அவனும் பேசியது போதும் என்பதுபோல் வேறேதும் கேட்காமல், "இவங்களுக்கு UCஐ காட்டுங்க.." என்று அருகில் இருந்த உதவியாளரிடம் சொல்லிவிட்டு, தனது அலுவலக அறைக்குச் சென்றுவிட்டான்.

இடுப்புயர மேசைகளில் வெள்ளைத் துணிகள் போர்த்தப்பட்ட உடல்கள் மூலைக்கொன்று இருக்க, பத்தடி உயர சுவரொன்றில் குளிர்பதன கிடங்கு வசதி செய்யப்பட்டு, பெட்டிகளாக அடுக்கியும் வைக்கப்பட்டிருந்தன பிணங்கள்.

"UCன்னா என்ன? எதுக்கு அவன் அப்படி சொன்னான்?"
தன்னுடன் வந்த பராமரிப்பாளர் பெண்மணியிடம் வினவினாள் அவள்.

"UCனா unidentified corpse. அதாவது பேரில்லாத அனாதைப் பொணம்மா. போலீஸ் சர்ட்டிபிகேட்ல அப்படி எழுதுவோம்."

"ஓ.. சரி, இங்க மார்ச்சுவரிக்கு வர்ற எல்லா பாடியையும் பத்திரப்படுத்தி வச்சிடுவீங்களா? எத்தனை நாளானாலும் வந்து வாங்கிக்கலாமா?"

"அப்டில்லாம் இல்லம்மே!! எல்லாம் கரையான் அரிச்சுப் போறதுக்குள்ள தூக்கி வீசிடுவோம். பேருதான் கூலிங் பெசிலிட்டி, பாதி நேரம் கரண்ட்டே இருக்காது.. நாறிப் போச்சுன்னா நாம நிக்க முடியாதும்மே! நாலு நாளைக்கு மேல எந்த பாடியும் இருக்காது. கவர்மெண்ட்டு டாக்டருக படிக்கற காலேஜுக்கு அனுப்பிடுவோம், அவுங்க அறுத்துப் பாத்து எத்தையோ படிச்சிகினு கெடப்பாங்க.. மத்ததை கொண்டுபோய் எரிச்சிடுவோம். ஆஸ்பத்திரி வேஸ்ட்டு எல்லாம் போட்டு எரிப்பானுவளே, அந்தாண்ட கொண்டுபோய் போட்டுடுவோம்..."

ஆர்வமாக அப்பெண்மணி சொல்ல, அரண்டுபோன பார்வையுடன் அதையெல்லாம் கேட்டுக்கொண்டாள் ரேணு.

சட்டென அவள் நிருபர் என்பதை நினைவுகூர்ந்து, பதற்றமாய்த் திரும்பியது அந்தப் பெண்.

"நான் சொன்னதை வெளிய சொல்லிடாதம்மே! எனக்கு எந்த பேஜாரும் வேணாம்.."

ரேணு அவசரமாகத் தடுத்து உறுதியளித்தாள்.
"சேச்சே.. அப்படில்லாம் பண்ணமாட்டேன். மேல சொல்லுங்க"

ம்ஹூம்.. அத்தோடு வாயை மூடிக்கொண்டது நீலச்சேலை. குறிப்பேட்டில் எண்ணை சரிபார்த்து, ஒரு ஐஸ் பெட்டியைத் திறக்க, அதிலிருந்த பிணத்தின் கோலத்தைக் கண்டவள் முற்றிலும் அதிர்ந்து, பதறி, முகம் வெளிறி, இரண்டடி தள்ளிநின்றாள். தொண்டையில் குமட்டிக்கொண்டு வந்தது.

சடலங்களைப் பார்ப்பது புதிதில்லைதான், நான்கைந்து கொலை வழக்குகளை செய்தி சேகரித்திருக்கிறாள் தான், புகைப்படங்கள் எடுத்திருக்கிறாள் தான்.

ஆனால் இதுவரை இப்படி ரத்தசகதியாய், உருவிழந்த உடலொன்றை இதுவரை வாழ்க்கையில் பார்த்ததில்லை அவள். பாதி முகமே சிதைந்துபோய், எலும்புகளெல்லாம் சதையைத் துளைத்துத் துருத்திக்கொண்டு, அகோரத்துக்கும் மேலான கோரத்தில்...

நெற்றியில் வியர்வை முத்துக்கள் தோன்ற, வாய்க்கசப்பும் குமட்டலும் அதிகரிக்க, வேகமாக வெளியேறி வாஷ்பேசின் தேடினாள் அவள். நல்லவேளையாக, அதிகம் அவளை அலையவிடாமல் சுவரின் மூலையிலேயே இருந்தது ஒரு இரும்பு ஸிங்க்.

முடித்துவிட்டு, கையையும் வாயையும் அலம்பிக்கொண்டு அவமானப் பார்வையோடு மீண்டும் பிணவறைக்குள் அவள் வர, "இன்னாதா மீடியா ஆளுங்களோ!?? இத்துக்கெல்லாம் இப்பிடி ஒவரா பண்ணுனா, போட்டாவை எடுத்து டிவியில, பேப்பர்ல போடசொல்ல இன்ன பண்ணுவீங்க?" என்றது அப்பெண் நக்கலும் சலிப்புமாக.

"சாரி.. கண்டிப்பா இந்தக் கொடூரமான போட்டோவை எல்லாம் டிவியில, பேப்பர்ல போடமாட்டோம். இது தேர்ட் ரேட்டட் மீடியா. எக்ஸ்ட்ரீம் வயலென்ஸ், எக்ஸ்ட்ரீம் கோர். போட்டோ வேணாம். அதை உள்ள வச்சிடுங்க ப்ளீஸ்."

அந்தப் பக்கம் திரும்பாமலிருக்க முயன்றாலும் அவ்வப்போது பார்வையின் ஓரத்தில் அப்பிணம் தெரிந்தது. ரேணுவுக்கு உடம்பெல்லாம் வியர்த்து வந்தது.

'நேற்று அது நம்மைப்போல் ஒரு உயிருள்ள ஜீவன். இன்று அது.... 'அது'. அஃறிணை. அதற்கும் கீழ். அகோரம். காணச் சகிக்காத பயங்கரம். கனவுகளில் மிரட்டும் அமானுஷ்யம். நம் விதி இதனுடன் ஒப்பிடும்போது எவ்வளவு கருணை வாய்ந்தது. வேலை போனதற்கெல்லாம் விதியை சாடினோமே.. இப்படி அடையாளமழிந்து, உருவிழந்து, உயிரற்றுப் போகாமலிருக்க என்ன புண்ணியம் செய்தோமோ!'

முதுகில் புல்லரித்தது அவளுக்கு. கால்கள்வேறு தள்ளாடின. தட்டுத் தடுமாறி வெளிவந்து, பாதையோரம் போட்டிருந்த பெஞ்சில் அமர்ந்தாள் அவள். தன்னை சமன் செய்துகொள்ள மூச்சுவிடத் தொடங்கிய நேரத்தில் அருகில் யாரோ நிற்கும் அரவம் உணர்ந்து நிமிர்ந்தவள் ஜெர்ரியைப் பார்த்ததும் எழுந்தாள்.

"கூட வந்து ஹெல்ப் பண்ணாட்டியும், அட்லீஸ்ட் ஒரு வார்னிங்காவது தந்திருக்கலாம்ல?"

கோபமாக வந்தது அவன்மீது. நண்பனென்று பேசிக்கொண்ட நேரத்திலா தன்னை எச்சரிக்கையின்றி இத்தகைய அகோரத்தை சந்திக்கவிடுவது?

"ஐம் சாரி.. நீ ப்ரஸ் தான.. அதான்.. இதெல்லாம் சகஜம்னு நினைச்சேன்.." அவன் எவ்வித முகமாற்றமும் இன்றிப் பேசினான்.

"நான் இல்லைனு சொல்லல. ஆனா, இதுவரை இவ்வளவு கோரமா பாத்ததில்ல. ஏன்.. நீயே சொல்லேன், உன் அனுபவத்துல இதுமாதிரி பார்த்திருப்பயா?"
கத்தியதில் குரல் கமறியது அவளுக்கு.

"இல்லைதான். நான் பாத்ததுல இது கொஞ்சம் ஓவர் தான். கொஞ்சம் வினோதமான கேசும் கூட.."

ரேணு கண்களைச் சுருக்கினாள். "ஏன்?"

"சுத்தமா எந்தத் தடயமும் கிடைக்கலை சம்பவ எடத்துல. ப்ளட் பிரிண்ட்ஸ், டிஎன்ஏ.. எதுவுமில்ல. ஆக்ஸிடெண்ட்னு மட்டும் தான் தெரியும். ஆனா எந்த வண்டி, எப்போ, எப்படின்னு ஒண்ணும் தெரியல. ஆள் அடையாளமும் தெரியல. யாரும் க்ளெய்ம் பண்ண வரலை இதுவரைக்கும். சும்மா சர்க்குலர் மட்டும் எல்லா ஸ்டேஷனுக்கும் அனுப்பிருக்காங்க."

"நீ கண்டுபிடிச்சிட்டயா? செத்தது எப்படின்னு?"
கொஞ்சம் நக்கல் இருந்தாலும், அறிந்துகொள்ளும் ஆர்வத்தில்தான் கேட்டாள் ரேணு.

"இன்னும் போஸ்ட்மார்ட்டம் ஆர்டர் வாங்கலை ரேணு. போஸ்ட்மார்ட்டம் பண்ணினா தான மரணத்துக்கான காரணம் என்னன்னு கண்டுபிடிக்கமுடியும்? ஆனா.. எனக்குத் தெரிஞ்சவரைக்கும்..."

"ம்ம்? என்ன?"

"இது விபத்து இல்ல, கொலை."

தாழ்ந்த குரலில் தீர்க்கமாக அவன் சொல்ல, ரேணு சற்றே திகைத்துப் பின்வாங்கினாள்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top