4
"என்ன மனோ இது??"
"உனக்கு இப்போதைக்கு இது ரொம்பத் தேவைப்படும்னு தோணுச்சு. அதான். ட்ரை பண்ணிப் பாரு."
"ப்ச்.. வேணாம் மனோ.. நாளைக்கு வேலைக்கு வேற போகணும்.."
சலிப்போடு வேண்டாமெனவும் அவன் முறைக்க, வேகமாக அதை எடுத்து மடக்கெனக் குடித்துவிட்டாள் அவள். அவனும் அத்தனைநேரம் வைத்திருந்த இறுக்கமான முகத்தை விட்டு சிரித்துவிட்டான்.
"பொறுமையா... விக்கிக்கப் போவது.."
மீண்டும் பரிசாரகரிடம் சைகை காட்ட, மீண்டும் கோப்பை நிரப்பப்பட, இந்த சுழற்சி நான்கைந்து முறை நடந்தது. எப்போதோ காலேஜில் சகமாணவிகளோடு பெட் கட்டி அருந்தியது. அதன்பின் இப்போதுதான் மறுபடி. மதுபானத்தின் மெல்லிய ஆதிக்கம் பிடித்திருந்தது அவளுக்கு. எங்கோ மிதப்பதுபோல் சுகமாக இருந்தது. காரணமின்றிச் சிரிப்பு வந்தது.
தட்டில் இருந்த உணவையும் அவளே இடையிடையே உண்டுமுடிக்க, மனோ அமைதியாக பார்த்திருந்தான். நிமிர்ந்து அவனைப் பார்த்து வினோதமாக சிரித்துவிட்டு, மறுகணமே அழத்தொடங்கினாள் ரேணு.
அதை எதிர்பார்த்ததைப் போல அமைதியாகவே அமர்ந்திருந்தான் மனோ.
"டேய், எனக்கு மட்டும் ஏன்டா இப்படில்லாம் நடக்குது?? Why me??"
மேசையில் கையை ஊன்றி, அதில் தலையைக் கவிழ்த்து அவள் குலுங்கியழ, தோளில் தட்டிக்கொடுத்து ஷ்ஷ் என்று அவளைத் தேற்றினான் அவன்.
"இப்பவாச்சும் சொல்லு ரேணு... என்ன நடந்தது? ஏன் சொல்லாமக் கொள்ளாம திடீர்னு வேலைய விட்டுப் போன? ஏன் யாருகிட்டக் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேங்கறாங்க?"
அழுகைக்கிடையே சிரித்தாள் அவள்.
"ஐ... சரக்கு ஊத்திக் குடுத்து.. என்கிட்ட வார்த்தைய வாங்கப் பாக்கறயா? நடக்காது.. நானெல்லாம்..." என்றபடியே அவள் விக்கிக்கொண்டே எழுந்து நின்று தள்ளாட, மற்றவர் பார்க்குமுன் எழுந்து அவளைப் பிடித்துக்கொண்டு, பில்லைக் கட்டிவிட்டு வெளியே கூட்டிச்சென்றான் மனோ.
"ச்ச்.. சரி.. எதுவும் கேட்கல. இதுல மட்டும் நல்லா தெளிவா இரு. பேச்சுக்குப் பேச்சு ஃப்ரெண்டுன்னு சொல்றது.. ஆனா எதையும் மறைக்காம ஷேர் பண்றதில்ல. என்னதான் நட்போ!!"
"மனோ.. நீ என்னோட உயிர் நண்பன்.. எனக்காக நீ உயிரயே குடுப்ப.. குடுக்கணும்.. குடுக்காட்டாலும் நானே எடுத்துப்பேன், கவலைப்படாத!! ஸ்ஸப்பா.. காலைல இருந்து ஏத்துன டென்ஷனை எல்லாம் இறக்க, இன்னும் கொஞ்சம் ஏத்திக்கணும் போல இருக்கே.. குடும்பப் பொண்ணுங்க எல்லாம் தெய்வம்டா!! எப்படித்தான் இது இல்லாம வீட்டு டென்ஷனை சமாளிக்கறாங்களோ! ரெஸ்பெக்ட்!!"
தள்ளாடியபடி சென்று தன் வண்டியில் சாய்ந்து பக்கவாட்டில் அமர்ந்தாள் அவள்.
அவளைப் பாவமாகப் பார்த்தான் மனோ.
"வண்டிய ஓரமா நிறுத்து. காலைல வந்து எடுத்துக்கலாம். நான் உன்னை வீட்ல ட்ராப் பண்றேன். என்கூட வா."
"ப்ச்.. வீடு உனக்குத் தெரியாதுப்பா.. ஏன்.. எனக்கே தெளிவா இருந்தாதான் அந்த வீதிக்குள்ள வீடு எங்கிருக்குன்னு தெரியும். நீ போ மனோ.. நான் இப்படியே ஓரமா--"
"ஏய்!!" என்று கத்தத் தொடங்கியவன், மீண்டும் பல்லைக் கடித்துத் தன்னை அடக்கிக்கொண்டு, "வீடு மாறிட்டயா? எப்போ? ஏன் அதைக் கூட சொல்லல?" என்றான் கோபக்குரலில்.
மீண்டும் சத்தமின்றி அழத்தொடங்கினாள் அவள்.
"வாடகை குடுக்கக் காசில்லடா...!"
மனோவின் முகம் உடனே தளர்ந்தது. தனது பையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துத் திறந்து, அவளுக்குக் கொடுக்க, அதை வாங்கி முகத்திலும் அடித்துக் கழுவிக்கொண்டாள் அவள். இன்னும் விசும்பல் நிற்கவில்லையென்றாலும், தள்ளாட்டம் கொஞ்சம் குறைந்தது. மொத்தத் தண்ணீரையும் குடித்துவிட்டு, ஒருமுறை கழிப்பறைக்குச் சென்றுவிட்டு, மீண்டும் பார்க்கிங்குக்கு வந்தாள் அவள்.
தள்ளாட்டம் காணாமற்போய், கண்கள் சிவந்திருந்தன.
"சாரிடா.. நீ ஆசையா மீட் பண்ணக் கூப்பிட்ட, நான் இதை ரியாலிட்டி ஷோ மாதிரி செண்டிமெண்டல் ஆக்கிட்டேன். ஐம் சாரி."
புன்னகைக்க முயன்றாள் அவள்.
"காசு வேணுமா ரேணு?"
சாதாரணக் குரலில் மனோ கேட்டான்.
"சேச்சே.. அதெல்லாம் வேணாம்."
வேகமாக வண்டியை எடுக்கச் சென்றவளைக் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தினான் அவன்.
"எவ்ளோ வேணும்?"
"அட, நெஜமாவே எனக்குக் காசெல்லாம் வேணாம். I learned to cut my expenses. நான் மேனேஜ் பண்ணிப்பேன்... ஆனா..."
"ம்ம்??"
"இப்போதைக்கு உடனடியா ஒரு நல்ல கவர் ஸ்டோரி வேணும்ப்பா.. சேனல் ரொம்ப டௌண்ல போயிட்டிருக்கு.. ஒரு எக்ஸ்க்ளூஸிவான ஐட்டம் கிடைச்சா நல்லா இருக்கும். என்ன பண்றதுன்னு தெரியல.."
தலையாட்டிக் கேட்டுக்கொண்டான் அவன்.
"சரி. எங்கிட்ட சொல்லிட்டல்ல? நான் எதாவது பண்ணப் பாக்கறேன்.. ஃப்ரீயா விடு. ஒழுங்கா வீடு போய் சேர்ந்துட்டு, கால் பண்ணு. மறக்காம நைட் எதையாச்சும் சாப்ட்டுட்டு படு. புரியுதா?"
அவள் சிரித்தாள்.
"சரிங்க சார்! இப்ப நான் போகலாங்களா?"
"ம்ம்.. வீட்டுல கூப்பிட்டாங்களா? ஃபோன் எடுக்கறயா ? இல்ல அவங்களுக்கும் அல்வா தானா?"
அதற்கும் சிரித்தாள்.
அவன் கவனமாக அடுத்த கேள்வியை எடுத்தான்.
"அவனை.. அவனைப்பத்தி.. எதுவும் தகவல் வந்துச்சா?"
சட்டென சிரிப்பு மறைந்து முகம் இறுகியது அவளுக்கு. கையிலிருந்து வண்டிசாவியைத் தரையில் ஆவேசமாக வீச, அதிலிருந்த கண்ணாடி கீசெயின் பொம்மை உடைந்து நொறுங்கியது.
அனல்கக்கும் பார்வையோடு அவனை முறைத்தாள் ரேணு. மதுமயக்கம் எப்போதோ காணாமற்போயிருந்தது. கொலைவெறி மட்டுமே இப்போது விழிகளில் குடியிருந்தது.
"சைக்கோவா நீ?? இப்ப எதுக்கு அந்தப் பேச்சை எடுக்கற?? அஞ்சு நிமிஷம்... அஞ்சு நிமிஷம் நான் நிம்மதியா இருந்தா பொறுக்காதா உனக்கு!? சேடிஸ்ட் சைக்கோ!! போடா உன் வேலையப் பாத்துட்டு!!"
ஊரே அதிரும்படி அவள் கத்த, ஆங்காங்கே வாகனத்தை எடுக்க வந்த சிலர் அவர்களைத் திரும்பிப் பார்க்க, அவசரமாக சாவியைத் தரையிலிருந்து எடுத்துக்கொண்டு, வண்டியை உயிர்ப்பித்து, மனோவைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் தன் வழியில் விரைந்தாள் ரேணு.
மனோவின் முகத்தில் இன்னதெனக் கணிக்க முடியாத உணர்ச்சிகள்.
அவள் போகும் வழியை சிலகணங்கள் பார்த்திருந்துவிட்டு, பின் அவனும் தனது வண்டியில் ஏறிக் கிளம்பினான்.
_______________________________________
காலையில் எழுந்தபோது நேற்றைய மிச்சமாக லேசான தலைவலி மட்டும் இருந்தது அவளுக்கு.
நேற்றைய நினைவுகள் தெளிவாகத்தான் இருந்தன. வலியை மறந்து கொஞ்சநேரம் மதுபானத்தின் மயக்கத்தில், மமதையில் இருந்த அந்த நொடிகளே தேவலாம்போல இருந்தது. சுயத்தில் இருக்கும்போதுதான் அடிக்கடி கட்டுப்பாட்டை இழந்து கத்துவதாகத் தோன்றியது.
கடிகாரத்தைப் பார்த்துவிட்டு அவசர அவசரமாகத் தயாராகத் தொடங்கியவள், கிளம்பும்போதுதான் தன் கைபேசியை எடுத்துப் பார்த்தாள். மனோ வாய்ஸ் நோட் அனுப்பியிருந்தான். இப்போது கேட்க அவகாசமில்லையென, பைக்குள் அதைப் போட்டுவிட்டு வீட்டைப் பூட்டிவிட்டு அலுவலகம் கிளம்பினாள்.
அலுவலக அறை வாசலிலேயே எடிட்டர் நின்றிருந்தார்.
"வாங்க ரிப்போர்ட்டர்.. பெரிய்ய தலைப்புச் செய்திகளா கொண்டுவந்திருந்தீங்க நேத்து.. இன்னிக்கும் அதே மாதிரி ப்ரேக்கிங் நியூஸ் கிடைக்குமா? உங்களுக்காகத் தான் நியூஸ் ரீல் மொத்தமும் சுத்தமா காத்துட்டு இருக்கு. நியூசை போடுங்க மேடம்."
கொல்லென்று சிரித்தது அலுவலகமே, அதாவது, அலுவலகத்திலிருந்த இரண்டு ஊழியர்களும்.
அவள் தலையைக் குனிந்துகொண்டு பொறுமையாக, "சரி சார்." என்றுமட்டும் சொல்லிவிட்டு, தனது இடத்தில் அமர்ந்து, நேற்றைய உபரி செய்திகளைத் தனது கைபேசியிலிருந்து கணினியில் தட்டச்சு செய்திடத் தொடங்கினாள்.
"தானும் நாசமாப்போயி, ஆபிசையும் நாசம் பண்றா.."
எடிட்டர் சத்தமாகவே அவளை சபிக்க, அந்தக் குரல்களைத் தடுப்பதற்காகக் காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டாள் அவள். கைபேசியில் மனோவின் குறுஞ்செய்தியைக் கண்டவள் அதை ஓடவிட்டாள்.
"ஏய்.. ரேணு.. சாரி... நைட் ஒழுங்கா வீடு போயிருப்பனு நம்புறேன். ஃபோன் பண்ணச் சொல்லியும் நீ பண்ணல, பரவால்ல விடு. அப்புறம்.. நீ கேட்டது. கவர் ஸ்டோரி: ஒரு ஹைவே ஆக்சிடெண்ட். ஆள் அடையாளம் ஏதும் தெரியல. ஜிஹெச்ல இருந்து ஃபோன் வந்தது. இங்க யாருக்கும் அந்த நியூஸ் தேவையில்லையாம். க்ரூப் செண்டிமெண்ட் கன்டெண்ட் தான் டிஆர்பி ஏர்றதுக்கு யூஸாகுமாமா... அதுனால இது வேணாமாம் இங்க. நான் சொன்னேன்னு யாருகிட்டயும் சொல்லிடாத. டைம் இருந்தாப் போய்ப்பாரு.
அப்பறம், உங்கப்பா கூப்ட்டாரு, உன்னைப் பேச சொன்னாரு. தயவுசெய்து பேசு. கால் பண்ணா இதையெல்லாம் உங்கிட்ட சொல்றதுக்குள்ள நீ கட் பண்ணிடுவ. அதான் வாய்ஸ் நோட்ல சொல்றேன். மறந்துடாம ஒருதரம் ஃபோன் பண்ணு. புரியுதா?"
அப்பா பகுதியை மனதில் எடிட் செய்து நீக்கியவள், கேஸ் விஷயங்களை மட்டும் கிரகித்துக்கொண்டாள். செய்தி வந்தபோது மணி ஒன்பது. இப்போதோ பத்தரை. சென்று அந்த செய்தியைத் தொடரலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தபோது...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top