3
அவளது மூளை மறுத்தும் கேளாமல் மனது கண்களைத் திருப்பிட, மாளிகை போன்ற அந்த பிரம்மாண்டக் கட்டிடத்தைக் கண்டதும் அப்படியே செயலற்றுப்போனாள் ரேணு. வாகனத்தை வேகம் குறைத்து, சாலையோரத்தில் நிறுத்தியவள், இறங்கி நின்று பாலத்திலிருந்து அந்தக் கட்டிடத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.
"Cheers to Renu! The star of our team!! Renu!! Renu!! Renu!! You are the best Renu!"
"வாழ்ந்தா ரேணுவை மாதிரி வாழணும்ப்பா! கவலையே இல்லாத வாழ்க்கை.. ஆசைப்பட்ட வேலை, அதிலயும் வெற்றி.. அப்பறம் கைநிறைய சம்பளம்.. கூடவே பேரும் புகழும்!! இதுக்குமேல ஒரு மனுஷனுக்கு என்னதான் வேணும்?"
"ரேணு.. உன்னைப் பாக்கணும்னு எடிட்டர் கேட்டாரு.. அநேகமா அடுத்த ப்ரொமோஷன்னு நினைக்கறேன்...!?"
"ரேணு...! எம்டி சாரே உன்னோட ஸ்டோரியைப் பாத்துட்டு எக்ஸ்க்ளூஸிவா பாராட்டி இருக்காரு, நம்ம சேனல் வெப் பேஜ்ல. இங்க பாரு, உன்னை டேக் பண்ணியிருக்காரு!"
"ரேணு.. எம்டி பேசறேன்.. can you come to my cabin?"
அதற்குமேல் நினைக்கவே வேண்டாத நினைவுகள் வருமெனத் தெரிந்தாலும், தடுக்க வழியின்றி செயலற்றுப்போனவளாய் அவள் நிற்க, தெய்வாதீனமாய் அவளது கைபேசி அடித்து அவளை நினைவுச் சுழலிலிருந்து மீட்டது. ஆனால் அதை எடுத்துப் பார்த்தவளுக்கு இன்னுமே அதிர்ச்சியாக இருந்தது.
"மனோ??"
"ரேணு.. ஏய் ரேணு!! நீ.. நான்.. I can see you! நீ தெரியுற எனக்கு! அ.. அங்க.. அந்த பாலத்துக்கிட்ட நிக்கறது நீதான?"
நீண்ட நாட்கள் கழித்துக் கேட்ட நண்பனின் கலவரக் குரலால் பொங்கிவந்த அழுகையை அவனறியாமல் அடக்கியபடி, "பரவாயில்லையே.. கேமரா கண்ணுதான் உனக்கு.. நான்தான்டா." என்றாள் போலியான உற்சாகக் குரலில்.
ஆனால் எதிர்முனை அதன் வருத்தத்தை மறைக்க அந்தளவு சிரமம் ஏதும் படவில்லை.
"ரேணு.. ரேணு.. எப்படி இருக்க ரேணு..? என்ன ஆச்சு? எங்க போன? ஏன் ஒரு ஃபோன் கூட பண்ணல? நாங்க கூப்பிட்டாலும் எடுக்கல? எங்க இருக்க..? என்ன பண்ற?"
இப்போது கண்ணாடி ஜன்னலருகில் அவனது மங்கலான முகம் ரேணுவுக்கும் தெரிந்தது. சரியாக மூன்றாவது மாடியில் இருந்தான் அவன். இருவரும் சரிசமமான உயரத்தில் நிற்க, இடையில் கீழே நாற்பதடி அகல சாலை ஒன்று மட்டும் இருந்தது. நண்பனின் கண்கள் தெளிவாகத் தெரியாவிட்டாலும், அவன் வருந்துகிறான் என்பது புரிந்தது அவளுக்கு.
ஆனால் தன் சோகத்தை அவன்மீது திணிப்பதில் எந்த உடன்பாடும் இல்லை ரேணுவுக்கு. யாரோ செய்த தவறுக்கு, அவள் வருந்துவதே அதிகம் என்றபோது, அவளது நண்பனும் வருந்துவது இன்னும் அதிகப்படியானதாகப் பட்டது. பெருமூச்சொன்றை விட்டவள், கைபேசியில், "மனோ.. எனக்கு ஒண்ணும் இல்ல. நான் நல்லா இருக்கேன், நல்ல வேலைல இருக்கேன். கூடிய சீக்கிரத்திலயே பழையபடி நல்ல நிலைமைக்கு வந்துடுவேன். எனக்காக ஃபீல் பண்ணாத, புரியுதா?" என்றாள் உறுதியான குரலில்.
ரேணுவின் நண்பனாயிற்றே அவன், அவனுக்குப் புரியாததா?
"பொய்!! நீ சரியா இல்லை. கஷ்டத்துல இருக்க. ஆனா உனக்கு உன் ஈகோ தான பெருசு.. எங்ககிட்ட எதுவும் சொல்லமாட்டிங்கற. இப்ப ஒழுங்கா அங்கயே நிக்கற நீ, நான் அஞ்சே நிமிஷத்துல வரேன், என்ன? மீறி போன, அப்பறம்.. அவ்ளோதான்!"
"ப்ச்.. மனோ.. லூசுத்தனமா எதுவும் பண்ணாத, ஆபிஸ் அவர்ஸ்ல உன்னை எங்கயும் வெளிய விடமாட்டாங்க. ப்ளஸ், எனக்கும் கொஞ்சம் அவசரவேலை இருக்கு. நான் போகணும். ஐ ப்ராமிஸ், இன்னிக்கு நைட் டின்னருக்கு மீட் பண்ணலாம். நான் கண்டிப்பா வரேன், சரியா? இப்ப நான் கிளம்பறேன்."
அவன் மறுத்துவிட்டு நிறைய திட்டுக்களை கைபேசியில் அனுப்ப, அதைக் கவனிக்காமல் அணைத்துவிட்டுக் கண்கலங்க அவனுக்குக் கையசைத்துவிட்டுத் தனது வண்டியில் ஏறி அமர்ந்தாள் அவள். கைகள் தன்னிச்சையாக வாகனத்தை செலுத்திட, மனது கனத்தது.
'எப்படி இருந்த வாழ்க்கை.. ஒரே நாளில் தலைகீழாகப் புரட்டிப்போட்டதைப் போல மாறிவிட்டது.. இதென்ன விதியோ!?'
பாலத்தைவிட்டு இறங்கி, துணைச்சாலைக்கு மாறி, செய்தியாகுமளவு நிகழ்வுகள் ஏதேனும் கண்ணுக்குப் படுகிறதா எனத் தேடியபடியே மெல்ல வாகனத்தைச் செலுத்தினாள் அவள். வேறு நாளென்றால், கட்சி அலுவலகங்களுக்கோ, இல்லை கலெக்டரேட்டுக்கோ, தலைமைச் செயலகத்துக்கோ நேரடியாகச் சென்றிருப்பாள், பின்சீட்டில் மனோவும் அவனது கேமராவும் துணையாக. இப்பொழுது யாரையெல்லாம் தவிர்க்கவேண்டும் என்றொரு பட்டியலே வைத்திருந்ததால், குறுகிய சந்துக்களிலும், குழாயடிகளிலும் செய்திகள் தேடிச் சுற்றுகிறாள்.
நான்கைந்து சிறிய செய்திகள் கிடைத்தன. ஒரு வீட்டில் காணாமற்போன நாய்க்குட்டி, ஒரு தெருவில் மூடாமல் விட்ட சாக்கடை, ஆளற்ற இடத்தில் உடைந்துகிடந்த தண்ணீர்த் தொட்டி, டீக்கடையில் பஜ்ஜிகள் விலை உயர்வு, தற்போது மழை வருவதற்கான அறிகுறி.
மணியைப் பார்த்தாள் தனது கைபேசியில்; நான்கு பத்து. இப்போது கிளம்பினால் ஐந்து மணிக்கு அலுவலகம், மாலைச் செய்திக்கு இவற்றைப் போடலாம். காலைச் செய்திக்கு மிச்சத்தை சேமிக்கலாம். வேண்டிய அளவு அவமானங்களை சந்தித்துவிட்டு, பின்னர் ஏழு மணிக்கு வீடுதிரும்பலாம்.
மனோவை... சந்திக்கப் போகலாமா..?
'நீயிருக்கும் நிலையில்.. மனோவை சந்தித்து அவனையும் வருந்த வைக்கப் போகிறாயா ரேணு? அவனாவது நிம்மதியாக அங்கே இருக்கட்டுமே.. உன்னை சந்தித்து, அவனுக்கும் வேலை போகவேண்டுமா?'
ஆனால் ப்ராமிஸ் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருந்தாளே அவள்!
செய்த சத்தியத்தை மீறக்கூடாது என்று மனதில் கூறிக்கொண்டு, தனது ஆக்ஸசை நுங்கம்பாக்கம் சங்கம் டிவி அலுவலகத்துக்குச் செலுத்தினாள்.
எதிர்பார்த்ததைப் போலவே ஏளனச் சிரிப்புகளும், நக்கல்களும் நிறையவே வந்தன. கூனிக்குறுகாமல், அதை யதார்த்தமாக ஏற்றுக்கொண்டு, இந்த அலுவலகத்திற்கு வந்ததிலிருந்து முதல்முறையாக, ஒரு ஒரிஜினல் நியூஸ் ரீல் ஒன்றைத் தயாரிக்கத் தொடங்கினாள் அவள்.
வேறு எவரும் உதவிட வராமல் ஒதுங்கி நிற்க, மொத்த வேலைகளையும் அவளே செய்யவேண்டியதாக இருந்தது. கணினியில் ஸ்லைட்களைத் தயாரித்து, அதை ரீலில் ஏற்றி, அதில் பிண்ணனிக் குரலையும் இசையையும் சேர்த்து, இறுதியில் சரிபார்த்து, சேனலின் செயற்கைக்கோளுக்கு அதை ஒளிபரப்புக்கு அனுப்பிவைத்தாள். இடையிடையே வந்து நக்கலாகச் சிரித்த எவரையும் ஏறிட்டுப் பாராமல் பணியை முடித்துக்கொண்டு வெளியே கிளம்பினாள்.
"எல்லாம் திமுரு தான்.. இதெல்லாம் திருந்தாது... எல்லா இடத்துலயும் இப்படித்தான் மொக்க வாங்கப் போறா.."
பணியாளர்கள் இருவர் தங்களுக்குள் பேசிக்கொண்டது கதவை அடையும்வரை கேட்டது. தன்னைப்பற்றி இருக்காது என்று பொய் சமாதானம் செய்துகொண்டு, மனோவிற்கு அழைத்து எங்கே வருவதெனக் கேட்டுக்கொண்டாள்.
'Bristo cafe' வழக்கத்துக்குக் குறைவான கூட்டத்துடனே இருந்தது. ரேணு நுழைந்தபோது, மனோ ஒரு ஓரமான மேசையில் அவளுக்காகக் காத்திருந்தான். சுற்றுமுற்றும் ஒருமுறை எச்சரிக்கையாகப் பார்த்துவிட்டு, அவனெதிரில் சென்று அமர்ந்தாள் அவள்.
"எப்டிடா இருக்க?"
தயக்கமான புன்னகையுடன் அவள் பார்க்க, பதில்கூறாமல் அவளை நன்றாக முறைத்தான் அவன். அவன் என்ன எதிர்பார்க்கிறானெனத் தெரிந்தாலும், அதைப் பேசாமல் தவிர்த்தாள் அவள்.
"என்னப்பா.. வர சொல்லிட்டு, இப்படி ஒண்ணுமே பேசாம இருந்தா எப்படி? அப்ப நான் போவட்டா?"
சின்னதாக சிரித்தபடி அவள் கேட்க, "அப்படியே பல்லைத் தட்டிடுவேன்!" என்றான் அவன் வேகமாக. இரண்டொருவர் சத்தத்தால் திரும்பிப்பார்க்க, கையை முறுக்கித் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டான் அவன்.
குரலைத் தாழ்த்திக்கொண்டு, "மூஞ்சியைப் பேத்துடுவேன் பாத்துக்க! இந்த சீனெல்லாம் என்கிட்ட செல்லாது. என்னதான் நினைச்சிட்டு இருக்க? எங்க இருக்கற? என்ன பண்ற? சாப்பாட்டுக்கு என்னடி வழி? ஏன் இப்படி இளைச்சு, கறுத்து, ஆளே ஒருமாதிரி ஆகிட்ட?" என்று உறுமினான் அவன்.
அவன் கையைப் பிடித்துக்கொண்டு சாந்தப்படுத்த முயன்றாள் அவள்.
"மனோ.. என்கிட்ட எதுவும் கேட்காத ப்ளீஸ்... நான் நிஜமா நல்லா இருக்கேன். அந்தச் சேனலை விட்டா எனக்கு வேற போக்கிடம் கிடையாதா என்ன? என்னைப்பத்தி நீ இவ்ளோ கவலைப்படவேண்டிய அவசியமே இல்லப்பா. எல்லாம் சீக்கரம் சரியாகிடும்."
அவன் எதுவும் பேசாமல் பரிசாரகரிடம் சைகை காட்டினான். அவர் இரண்டு தட்டுக்களில் ப்ரெட் சாண்ட்விச்சும், சிக்கனும் கொண்டுவந்து வைத்தார். மேலும் இரண்டு கண்ணாடிக் கோப்பைகளை வைத்து, நிறமற்ற பானமொன்றை அதில் நிரப்பினார். அது தண்ணீரில்லை என்பது அதன் நறுமணத்திலேயே தெரிந்தது அவளுக்கு. வோட்காவா வைனா என்பதுதான் குழப்பமாக இருந்தது.
அதிர்ச்சியாக அவனை ஏறிட்டாள் ரேணு.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top