29

"மனோ!!!" அதிர்ச்சியாக சத்தமிட்டாள் ரேணு. "என்ன பேசற நீ??"

"ப்ச், ப்ளீஸ்! நீ வேணா கவனிக்காம இருந்திருக்கலாம், எனக்கு கண்ணெல்லாம் நல்லா வேலை செய்யுது. மத்தவங்க யாருகிட்டயும் முகம் குடுத்தே பேசாதவன், உன்னை மட்டும்தான் கண்ணைப் பார்த்துப் பேசுவான். நானும் உன்கூடத்தான் இருப்பேன், ஆனா என்னைத் திரும்பிக் கூட பாக்க மாட்டான். இன்ஸ்பெக்டர் மேடத்தை கூட நிமிர்ந்து பாக்க மாட்டான். ஆனா நீன்னா மட்டும்... நீ வேணா எழுதி வெச்சுக்கோ, நாம போயி ஹெல்ப்புன்னு கேட்டதுமே ஒத்துக்குவான் அவன்."

ரேணு இன்னும் நம்பமாட்டாமல் பார்த்தாள் அவனை. அவள் மறுத்துப் பேசுமுன் அவள் கன்னத்தைத் தட்டிவிட்டு, "டேக் கேர், குட்நைட்" என்றுவிட்டு அவன் கிளம்பிவிட, அன்றிரவு வெகுநேரம் தூங்காமல் விழித்திருந்தாள் ரேணு. ஜெர்ரியை நினைத்தபோது, மனதில் வேறொரு முகம் தன்னிச்சையாகவே தோன்றுவதைத் தடுக்கத் தெரியவில்லை அவளுக்கு.

கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப் போகின்றது, அவன் சென்று.

கசப்பான உணர்வொன்று நா முதல் அடிமனது வரை படர, சத்தமிட்டு சலித்துக்கொண்டு, தண்ணீர் அருந்திவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டாள் அவள்.

***

அண்ணா நகரில் 'பட்டர்ஃப்ளை' எனப் பெயரிடப்பட்ட புது சிற்றுண்டிக் கடை ஒன்றில் அமர்ந்து காத்திருந்தான் மனோ. கைபேசியில் காலையிலிருந்தே மூடாமல் திறந்து வைத்திருந்த யூட்யூப் செயலிதான் இப்போதும் ஓடிக்கொண்டிருந்தது. பொறுமையின்றி மீண்டுமொருமுறை நிமிர்ந்து ரேணுவுக்காகக் கண்களை அலையவிட்டான் அவன்.

அவள் இன்னும் வந்தபாடில்லை.

நண்பகல் பதினோரு மணியின் வெள்ளை வெய்யில் கதவின் வழியே கொஞ்சம் நுழைந்தது. வலதுபுறம் அலங்காரப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த சுவரைச் சுற்றி, சில இளம்பெண்கள் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தனர்.

கதவைத் திறந்துகொண்டு அவசரமாக உள்ளே நுழைந்தாள் ரேணு. கருநிற சுடிதாரும், வெள்ளி ஜரிகை போட்ட காட்டன் துப்பட்டாவும் அணிந்திருந்தவள், முகத்தில் எவ்வித அலங்காரமும் இன்றி இருந்தாள்.
முகத்தில் விழுந்த கேசத்தைக் காதுக்குப் பின்னால் ஒதுக்கிவிட்டவாறே மனோவின் எதிரே வந்தமர்ந்தாள் அவள்.

"சாரி.. ரொம்ப லேட் பண்ணிட்டனா?"

"தண்ணியடிச்ச நானே தெளிஞ்சு வந்துட்டேன். உனக்கு என்ன வந்தது??"

அவள் பார்வையைத் தாழ்த்திக்கொண்டாள்.

"காலைல எழுந்திரிக்க லேட்டாகிடுச்சு.."

அவளை முறைத்தவாறே கையுயர்த்திப் பரிசாரகரை அழைத்தான் அவன். இளைஞன் ஒருவன் கருநீல மேல்சட்டையும், அதன்மேல் மஞ்சள் நிறத்தில் பட்டாம்பூச்சிகள் போட்ட ஏப்ரனும் அணிந்து அவர்களிடம் வந்தான்.

"யெஸ் சார்? ஆர்டர் பண்றீங்களா?"

"எனக்கு ஒரு சமோசா, ஒரு லெமன் ஜூஸ். உனக்கு ரேணு?"

ரேணு சற்றே யோசனையானாள். பின் தோளைக் குலுக்கிவிட்டு, "பாதாம் பால்" என்றாள்.

பரிசாரகர் சென்றதும் மனோ சிரிப்போடு ஏறிட்டான் அவளை.
"அதுதான் சொல்வன்னு நான் நினைச்சேன்.. நீ சொல்லிட்ட!"

அவரவர் குளிர்பானத்தை அருந்தி முடித்தும்கூட, சிறிதுநேரம் அங்கேயே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர் இருவரும்.

ரேணு பில் கட்ட தனது பையிலிருந்து ரூபாயை எடுக்க, மனோ முறைத்துத் தடுத்து அவனது டெபிட் கார்டில் அதைச் செலுத்தினான். பணம் செலுத்துமிடத்தில் நின்று ரேணு கண்ணாடிக் காட்சியலமாரிக்குள் வைக்கப்பட்டிருந்த இனிப்புகளைப் பார்வையிட, அதைக்கண்ட மனோ, "எதாவது வேணுமா?" என்றான் அவளிடம்.

அரைநொடி உள்ளுக்குள் சற்றே நெகிழ்ந்துவிட்டாலும், முகத்தில் எதையும் காட்டாமல் வேண்டாமெனத் தலையசைத்தாள் ரேணு.

"எங்க அப்பா இப்படித்தான் கேப்பார்.." அவள் மென்மையாக முணுமுணுத்தது அவனுக்கும் கேட்டது.

அவள் கேட்காமலேயே மிட்டாயொன்றை வாங்கிக் கையில் திணித்தவன், தோளோடு அழுத்தம் கொடுத்து அவளைக் கூட்டிச்சென்றான் வெளியே.

***

மருத்துவமனையை அடைந்தபோது ஜெர்ரியின் அறைக்கு வெளியே இரண்டொரு காவலர்கள் இருந்தனர். ஜெர்ரியைக் காணவில்லை.

"டாக்டர்... எங்கே..?"
யாரையும் குறிப்பாகப் பார்க்காமல் கேட்டாள் அவள்.

ஒரு கான்ஸ்டபிள் நிமிர்ந்து, "போஸ்ட்மார்ட்டம் ரூம்" என்றார். "ஏன்?"

தலையசைத்துவிட்டு மனோவிடம் திரும்பியவள் கண்களால் வினவினாள்.

"சரி, வா. வெய்ட் பண்ணுவோம்."

மருத்துவமனை வராண்டாவில் அமர்ந்திருந்த நேரத்தில் ரேணு தனது குறிப்பேட்டை எடுத்து மனோவுக்குக் கொடுத்தாள்.

"காலைல கொஞ்சம் எழுதினேன். இந்த கேஸ்ல நமக்குத் தெரிஞ்சது கொஞ்சமே கொஞ்சம் தான். தெரிஞ்சுக்க வேண்டியது நெறய இருக்கு. கொலை செய்யப்பட்ட மூணு பேரையும் இன்னும் அடையாளம் கண்டுபிடிக்கல. அந்த மூணு பேருக்கும் எதாவது லிங்க் இருக்கான்னு தெரியல. நடுவில வேற எதாவது கொலை நடந்துச்சான்னும் முழுசா தேடிக் கண்டுபிடிக்கல. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ஸை நாம இன்னும் வாசிக்கல. அத்தோட, போலீஸ் இதை எந்தக் கோணத்துல டீல் பண்றாங்கன்னும் நமக்குத் தெரியல."

"சீக்கரமே தெரிஞ்சுக்கலாம்.."

பணியாளர் ஒருவர் வந்து, காவலர்களிடம் தரவை நீட்டியவாறே, "ரிப்போர்ட்ஸ் வந்திருச்சு சார், இந்தாங்க. அந்த பொண்ணு சூசைட் தான். தடயம் தெளிவா இருக்குன்னு டாக்டர் சொன்னாரு" என்க, அதை வாங்கிக்கொண்டு காவலர்கள் நகர, பணியாளர் திரும்பி ரேணுவைப் பார்த்து, "என்னம்மா வேணும்?" என்றார்.

"டாக்டர் ஜெரினைப் பாக்கணும்.."

"வருவார், உட்காருங்க"

பத்து நிமிடத்தில் ஜெர்ரி வந்தான், குப்பென வீசும் ஃபார்மலின் வாசத்துடன். ரேணு லேசாக முகஞ்சுழித்தாலும் புன்னகையுடன் எதிர்நோக்க, மனோவோ அப்பட்டமாக, "பொண நாத்தம்" என்றான் அவள் காதுக்குள்.

"மனோ! ஷ்ஷ்!! ஜெர்ரி.. ஹாய்..!"

"என்னால உங்களுக்கு எந்த ஹெல்ப்பும் பண்ண முடியாது, சாரி"

பட்டென அவன் கூறுவானென எதிர்பாராமல் அவள் திகைத்தாள் ஒருகணம். மறுகணமே மனோவிடம் திரும்பி, 'பார்த்தாயா' என்பதுபோல கண்காட்ட, அவனும் தோல்வியை ஒப்புக்கொண்டவன்போல தலையை ஆமோதிப்பாக ஆட்டினான்.

ஜெர்ரி தனது அறைக்குள் சென்று கதவடைத்துக்கொள்ள, மனோவும் ரேணுவும் செய்வதறியாது வெறுமனே நின்றனர் வராண்டாவில்.

ஓரிரு நாழிகைகள் கழித்துக் கதவு திறக்கப்பட, ஜெர்ரி அவர்களிருவரையும் பார்த்தும் பாராமல் கூறாய்வு அறையை நோக்கி நடக்க, "ஜெர்ரி.. ஜெர்ரி நில்லேன் ப்ளீஸ்.." என்றவாறு பின்தொடர்ந்து வந்தாள் ரேணு.

"ரேணு, இன்ஸ்பெக்டர் சொன்னதை நீயும் கேட்ட தானே? ப்ளீஸ்.. என்னை தர்மசங்கடமான சூழ்நிலைக்கு தள்ளாதீங்க."

ஏனோ மனது வலித்தது ரேணுவுக்கு. ஏமாற்றமோ, தோல்வியோ.. எதுவோ மனதை சோர்ந்துபோகச் செய்தது.

"ஓ.. சாரி ஜெர்ரி.. தெரியாம வந்துட்டோம். இனிமே வரமாட்டோம். வா மனோ, போலாம்"

"ரேணு.."

"மனோ! போலாம்!"

மனோ ஒருமுறை ஜெர்ரியை அதிருப்தியாகப் பார்த்துவிட்டு ரேணுவை அழைத்துக்கொண்டு நகர எத்தனிக்க, "அடடே.. ரிப்போர்ட்டர் மேடம், இங்கதான் இருக்கீங்களா? உங்களைத்தான் தேடி வந்தேன்" என்றொரு ஏளனக்குரல் எதிரிலிருந்து வர, மனோவும் ரேணுவும் குழப்பமாக நிமிர்ந்து பார்த்தனர்.

சிறப்புக் குற்றப்பிரிவு ஆய்வாளரான தயாளன் தான் நின்றார் அங்கே.

***

முன்தினம் ரேணு காவல்துறை அலுவலகத்தில் அவரிடம் சண்டையிட்டுச் சென்றபிறகு, தயாளன் தரவுகளைப் பார்த்தபடி சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.

சிப்பந்தி ஒருவர் வந்து, "சார், ப்ரீஃபிங் ரூம் ரெடி சார். டீம் அங்க வெய்ட் பண்றாங்க" என்று அழைக்க, அவரும் ஃபைலை எடுத்துக்கொண்டு நடந்தார்.

ஏசி குளிர்வித்த இருட்டறையில் திரையரங்கம் போல ப்ரொஜெக்டர் வைத்து வழக்கின் விபரங்கள் திரையில் காட்டப்பட, தயாளன் ஒவ்வொன்றாக விளக்கினார்.

".. டெட்பாடி எல்லாமே ஹைவேஸ் பக்கத்துல தான் இருந்திருக்கு.. ஸோ, ஹைவேஸ் பக்கத்துல சர்விலன்ஸ் அதிகப்படுத்தணும். இது மட்டும்தான் இப்ப நமக்கு ஒரே வழி. ஏன்னா, வேற எந்தத் தகவலும் அந்தக் கில்லரைப் பத்தி கிடைக்கல. இது நம்ம டீம்க்கு ரொம்பவே சவாலான கேஸ். யாருக்காவது எதாவது ஐடியா இருந்தா சொல்லலாம்."

கூட்டத்தில் ஒரு கை உயர்ந்தது.

"சார், நீங்க இதை மீடியா இன்வால்வ் ஆகாம நடத்தணும்னு சொன்னீங்க.. ஆனா சார், இதுவரை உலக அளவுல நடந்த எல்லா சீரியல் கில்லிங் கேஸ்லயும், நூத்துக்கு தொண்ணூறு கில்லர்ஸ் சைக்கோவா தான் இருந்திருக்காங்க. அதுவும், very narcissistic people. அதாவது, தங்களைப் பத்தி செய்தி வர்றதை ரொம்பவே விரும்பறவங்களா இருந்திருக்காங்க. இப்போ வரைக்கும் இந்த கேஸை நியூஸா வெளியிட்டது ரேணுகாங்கற ரிப்போர்ட்டர் மட்டும்தான். தெரிஞ்சோ தெரியாமலோ, கில்லர்கூட ஒரு தொடர்பை அவங்க ஏற்படுத்திக்கிட்டாங்க... கில்லர் தன்னைப் பத்தின நியூஸைப் பார்க்கும்போது, தவறாம ரேணுவையும் பார்த்திருப்பான். ஸோ, ரேணுவை யூஸ் பண்ணி, இந்தக் கில்லரைப் பிடிக்க முடியும் சார்."

உதவி ஆய்வாளர் தெளிவாக விளக்க, தயாளன் முகத்தில் சிந்தனைக் கோடுகள் படர்ந்து, பின் தெளிந்தன.

"சரி, ரேணுவைப் பயன்படுத்தி கில்லரை பிடிக்க ஸ்கெட்ச் போடுங்க. ஆனா இது ரேணுவுக்குத் தெரியாம நடக்கணும். இது அந்த டாக்டருக்கும் தெரியக் கூடாது."

*****

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top