22
மூவருமே அசவுகரியமான அமைதியில் மூச்சுமுட்டி நிற்க, ரேணுவே மீண்டும், "வேற எதுவுமே பண்ண முடியாதா? எதாச்சும் ஹெல்ப்...?" என்றாள் ஏக்கமான தொனியில்.
மனோ அவளிடம், "பழைய டெட்பாடியைப் பத்தி எதாவது எபிசோட் பண்ண முடியுமான்னு கேளு" என்றான் சத்தமாகவே. ரேணு ஜெர்ரியைப் பார்க்க, அவன் யோசனையாக தலையை சரித்தான். ரேணு விரல்களைப் பிசைந்தாள்.
"ஒரு அனாலிசிஸ் பண்ணலாம். இன்ஸ்பெக்டர் இப்போ வேற ஸ்டேஷன்ஸ்ல இந்தமாதிரிக் கேஸ்கள் எதாவது இருக்கான்னு தேடிட்டு இருக்காங்க. நாம அதனோட சேர்த்து, இந்த ஹாஸ்பிடல்ல இதுக்கு முன்ன இதுமாதிரி கேஸ் எப்பவாச்சும் வந்திருக்கான்னு பார்ப்போமா?"
ரேணுவே எடுத்துக்கொடுக்க, மனோ பூரிப்பாகத் தலையாட்டினான். இருவருமே ஜெர்ரியை ஏறிட, சோர்வாக ஒப்புக்கொண்டு அவர்களை அரசு பிணவறையின் தகவல்கூடத்திற்கு நடத்திச்சென்றான் ஜெர்ரி.
அவனைப் பார்த்ததும் செவிலியர்கள் இருவர் வணக்கம் வைத்தனர்.
"இன்னிக்கு ட்யூட்டி இருக்குங்களா உங்களுக்கு? விசுவநாத் டாக்டரு மட்டுந்தான்னு நினைச்சோமே?"
ஜெர்ரி தயக்கமாக, "அ.. அது.. ட்யூட்டி இல்ல, போலீஸ் விசாரணைக்காக.." என்க, மனோ இடையிட்டு, "சங்கம் டிவி நியூஸ்" என்க, ரேணு திகைக்க, செவிலியர்கள் வழிவிட்டனர் கேள்விகளின்றி.
"பைத்தியமா மனோ உனக்கு?? எதுக்கு அந்த சேனல் பேரை யூஸ் பண்ற?? தேவையில்லாத--"
மனோவைக் கடிந்துகொண்டே அந்த இருட்டடைந்த அறைக்குள் நுழைந்த ரேணு, எதிரே தெரிந்த காட்சியில் அதிர்ந்து உறைந்தாள்.
அவர்கள் நுழைந்திருந்த அறையின் நீள அகலம் கிட்டத்தட்ட ஒரு மைதானத்தை ஒத்திருந்தது. தரைமுதல் கூரை வரை உயர்ந்திருந்த இருபது பெரிய இரும்பு அலமாரிகளில் காகிதக் கோப்புகளும் சீட்டுகளும் சான்றிதழ்களும் இன்னபிற தாள்களும் நிரம்பி வழிந்தன. எங்கோ உயரத்தில் இருந்த சின்னத் துவாரங்களின் வழியே மஞ்சள் கீற்றுகளாய் வெளிச்சம் வந்தது.
ரேணுவின் வலதுபுறம் இருந்த அலமாரிகளில் கண்ணாடிக் குடுவைகளில் வெளிர்மஞ்சள் நிற திரவத்தில் மனித இதயம், நுரையீரல், மூளை, போன்றவை தனித்தனியாக மிதந்து கொண்டிருந்தன. மற்றொரு மூலையில் பதப்படுத்தப்பட்ட சடலங்கள் குளிரூட்டிய கண்ணாடிப் பெட்டியில் உறங்கிக்கொண்டிருந்தன. ஒருகணம் தான் எங்கிருக்கிறோம் என்றே மறந்துபோனாள் ரேணு.
"Oh my God! எங்கே வந்திருக்கோம் நாம??"
"மெடிக்கல் ரெகார்ட்ஸ் ரூம். கீழ்ப்பாக்கம் ஹாஸ்பிடல் ஆரம்பிச்ச 1960ம் வருசத்துல இருந்து, கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை, திருவொற்றியூர், அண்ணா நகர்னு, நாலு ஜிஹெச்சுலயும் இப்போ வரைக்கும் வந்த எல்லா பேஷண்ட்ஸ்சோட எல்லாத் தகவல்களும் இங்க இருக்கு."
"ஓ..." சற்றே கலக்கமான, ஆனால் ஆர்வமான முகத்தோடு சுற்றுமுற்றும் பார்த்தாள் அவள்.
"ஆனா ஏன் இதையெல்லாம் இன்னும் பேப்பராவே வச்சிருக்காங்க?? டிஜிட்டலைஸ் பண்ணலையா?" மனோ சந்தேகமாகக் கேட்டான்.
"2000த்துல இருந்து டிஜிட்டல் பண்ணிட்டாங்க. ஆனா இன்னும் பேப்பர் காப்பியும் ரெடி பண்ணிட்டு தான் இருக்காங்க. இன்னிக்கு டிஜிட்டல் டேட்டாவை என்னோட கம்ப்யூட்டர் மூலமா ஆக்சஸ் பண்ண முடியாது. நான் இன்னிக்கு இங்க வந்திருக்கவே கூடாது. நாளைக்கு இந்த டேட்டா உங்களுக்கு எப்படிக் கிடைச்சதுன்னு ட்ரேஸ் பண்ணினா, டிஜிட்டல்ல ஈஸியா கண்டுபிடிச்சிடலாம். இங்க அப்படிக் கிடையாது. பேப்பர்களை யாரு பாத்தான்னு யாரும் கண்டுபிடிக்க முடியாது."
ஜெர்ரி விளக்க, மனோ பெருமையாகத் தலையசைத்தான்.
"ரேணு, உன் ஃப்ரெண்டுக்கு கிரிமினல் மூளை தான்!"
"ப்ச்!" ரேணு முறைத்தாள் அவனை.
"சரி, டைம் வேஸ்ட் பண்ணாம, போன மாசத்துல இருந்து ரிவர்ஸ் ஆர்டர்ல ஃபைல்களை செக் பண்ணுவோம்."
"நான் ராயப்பேட்டை ரெகார்ட்ஸ் பாக்கறேன்."
"நான் அண்ணா நகர்."
"நான் கீழ்ப்பாக்கம்."
ரேணு கடைசியாக சொல்ல, மனோ லேசாக சிரிக்கத் தொடங்கி, பின் அடங்கினான். ரேணு முறைத்தாள் அவனை.
ஜெர்ரி ரேணுவிடம் திரும்பி, ஒரு அலமாரியை நோக்கிக் கைகாட்டினான்.
"அந்த ஷெல்ஃப் முழுக்க."
"ம்ம்."
அதற்கடுத்த அலமாரியில் அவன் நின்று, தரவுகளைப் புரட்டத் தொடங்கினான். மனோ சற்றுத் தள்ளி இருந்தான்.
ஜெர்ரி வழக்கமான சன்னக் குரலில், "கீழ்ப்பாக்கம்னு கேட்டதும் ஞாபகம் வருது, உன்னோட சைக் டெஸ்ட் என்ன ஆச்சு?" என வினவ, ரேணு மீண்டும் திரும்பி அவனையும் கோபமாக முறைத்தாள். ஆனால் அவனோ முகத்தில் எவ்வித கிண்டலோ கேலியோ அன்றி, சாதாரணமாகவே வினவியிருந்தான். எனவே அவளது முறைப்பைக் கண்டு குழப்பமானான்.
"என்ன ஆச்சு? எதாவது தப்பாக் கேட்டுட்டனா?"
ரேணு லேசாகப் பெருமூச்செரிந்தாள்.
"ப்ச், இல்ல. அன்னிக்கு அங்க போகல."
ஜெர்ரியின் நெற்றியில் சுருக்கங்கள் விழுந்தன.
"அப்ப இன்னும் நீ டெஸ்ட் எடுக்கலையா?"
இப்போது ரேணு சலிப்பானாள்.
"இன்னும் இல்ல. விடு ஜெர்ரி, பரவால்ல, நான் பாத்துக்கறேன், தேங்க்ஸ்."
"லான்செட் மெடிக்கல் ஜர்னல்ல வந்த ஆர்ட்டிகிள்படி, சுமார் எண்பத்தி ஏழு சதவீத மக்களுக்கு வர்ற மனநோய்கள் கொஞ்சம் சீக்கிரமாவே கண்டுபிடிச்சிருந்தா குணப்படுத்தியிருக்க முடியுற வகையை சார்ந்துதான் இருக்கும். மூணு நாள்ல இருந்து மூணு வாரம் வரை உள்ள சாதாரண இடைவெளி கூட, மனநல மருத்துவத்துல ரொம்ப முக்கியமானது--"
"ப்ச்.."
"இல்ல, நிஜமாவே உனக்கு எதாவது மெண்டல் ப்ராப்ளம் இருந்துச்சுன்னா--"
"ஸ்டாப்பிட் ஜெர்ரி! நான் ஒண்ணும் பைத்தியம் கிடையாது!!"
சத்தமாக அவள் கத்தவும் மனோ திரும்பிக் கண்களால் வினவ, ஜெர்ரி இரண்டடி நகர்ந்துகொண்டான் பின்னால். ரேணு தனது தோள்பையை எடுத்துக்கொண்டு விறுவிறுவென எழுந்து வெளியேற, மனோ ஜெர்ரியை வினோதமாகப் பார்த்தான்.
"மிஸ்டர்! அவகிட்ட என்ன கேட்டீங்க?"
"டாக்டர்." சன்னமாக சொன்னான் ஜெர்ரி.
"வாட்?" மனோ புருவம் சுளித்தான்.
"மிஸ்டர் இல்ல, டாக்டர்."
ஆயாசமாகக் கண்களைச் சுழற்றிவிட்டு, மனோவும் வெளியே விரைந்தான்.
வராண்டாவின் எதிர்ப்புறம் இருந்த மலேரியா விழிப்புணர்வு விளம்பரத் தட்டியைப் பிடித்தபடி நின்றிருந்தாள் ரேணு. மனோ அருகில் வரவும் அவசரமாகக் கண்களைத் துடைத்தாள்.
மனோ எரிச்சலாக உச்சுக்கொட்டினான்.
"ஏய்!! என்னதான்டி ஆச்சு உனக்கு?? நானும் கேட்டுக்கிட்டே இருக்கேன், ஒவ்வொரு தடவையும் எதையாவது சொல்லி மழுப்பிட்டு, அப்பறம் தனியா உக்காந்து கண்ணைக் கசக்கற! ஏன், நாங்கள்லாம் உங்க சோகத்தை பகிர்ந்துக்கற அளவுக்கு தகுதியானவங்க இல்லையோ?? அப்போ ஃப்ரெண்டுன்னு சொல்றதெல்லாம் வெறும் வாய்வார்த்தை தான், இல்ல?"
"மனோ ப்ளீஸ்.."
அவன் அவள் பேசுவதற்காகவெல்லாம் காத்திருக்கவில்லை. கையை வம்படியாகப் பிடித்திழுத்து நடத்தி, மருத்துவமனையை விட்டு வெளியே செல்வதற்காக வராண்டாவில் விரைந்தான். எதிரே வந்த ஜெர்ரி இருவரையும் பார்த்தான். மனோ அவனைக் கண்டுகொள்ளாமல் தாண்டிச் செல்ல, ரேணு தலையைக் குனிந்தவாறே பின்சென்றாள்.
இருவரும் வெளியே செல்வதைப் பார்த்தும் ஒன்றும் செய்யத் தோன்றாமல் நின்றான் ஜெர்ரி. பின் கைக்கடிகாரத்தில் நேரம் பார்க்க, அது நான்கரை எனக்காட்டிட, அறைக்கதவை இழுத்துப் பூட்டிவிட்டு, சட்டைப்பையிலிருந்து தனது பைக் சாவியை எடுத்தவாறே அவனும் வெளியே நடந்தான்.
வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ரேணுவும் மனோவும் நின்று வாக்குவாதம் செய்துகொண்டிருந்ததை தூரத்திலிருந்தே பார்த்தான் அவன். சிறிதுநேரம் எதுவும் செய்யத் தோன்றாமல் அங்குமிங்கும் பார்த்தபடி நின்றவன், அனிச்சையாகவே ரேணுவின் முகத்தை உற்று நோக்கத் தொடங்கினான். பேசும்போது புருவங்கள் வேதனித்துச் சுருங்கி விரிவதையும், கண்கள் அவ்வப்போது கோபமும் சோகமும் மாறிமாறிக் காட்டுவதையும், உதடுகள் அதிவேகமாக வார்த்தைகளைத் தெளிப்பதையும் கவனித்தபடியே அங்கேயே நின்றான் அவன்.
சில நிமிடங்களில் திரும்பிப் பார்த்த இருவரும் ஜெர்ரி தூரமாகவே நிற்பதைப் பார்த்தனர். மனோ ஆயாசமாகக் கைகளைக் காற்றில் அடித்துவிட்டு, தனது பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட, ரேணு சோர்வாக நடந்து அவனிடம் வந்தாள்.
"ஐம் சாரி." ரேணு கலக்கமான குரலில் சொல்ல, ஜெர்ரி "ம்ம்" என்றுமட்டும் சொன்னான்.
சிறிதுநேரம் இருவருமே பேசாமல் நின்றனர். ரேணுதான் முதலில் உடைத்தாள் மவுனத்தை.
"எனக்கு.. என்னால.. ப்ச், நான் இப்படியெல்லாம் இருந்ததே இல்ல, தெரியுமா? என் கேரக்டரே வேற. You know Jerry? My life was perfect. I had everything. திடீர்னு ஒருநாள் எல்லாமே மறைஞ்சு போனமாதிரி ஆகிடுச்சு. வாழ்க்கைல ஒரு பேலன்ஸே இல்லாத மாதிரி இருக்கு. மனோவுக்கு இதை எப்படி சொல்லிப் புரியவைக்கறதுன்னு கூட எனக்குத் தெரியல. அவனுக்கும் கிட்டத்தட்ட அதே நிலமைதான், ஆனா என்னோட பிரச்சனை வேற. அதை--"
படபடவென அவன் கேட்காமலேயே அத்தனையும் சொன்னவள், சட்டென அதை உணர்ந்து நிறுத்திக்கொண்டாள். ஜெர்ரி கேள்வியாகப் பார்க்க, கலங்கிய கண்களைத் தளர்த்தி மறைத்தாள் அவள்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top