20
"அப்ப அவன் பண்ணது மட்டும் சரியா?? அவன் பண்ண காரியத்துக்கு இந்நேரம் அவனைக் கொன்னுருக்கணும்--"
"ரேணு.. உங்களுக்கு இனி இங்க வேலை இல்ல. நீங்க போலாம்."
"வாட்?? எப்டி உங்களால இப்டி மனசாட்சியே இல்லாமப் பேச முடியுது?? இந்த சேனலுக்காக எவ்ளோ செஞ்சிருக்கேன் தெரியுமா?? இதை விட்டுட்டு நான் எங்க போவேன்??"
"அது என் பையனைக் கொல்ல முயற்சி பண்றதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும். Now get out and get lost."
திக்பிரமை பிடித்ததுபோல அமர்ந்திருந்தவளை, மீண்டும் கைபேசியில் வந்த மனோவின் குரல்தான் நிகழுலகிற்கு அழைத்து வந்தது.
"ரேணு.. என்னடி, நான் பேசிட்டே இருக்கேன், நீ அமைதியாவே இருக்க? என்னாச்சு ஒனக்கு? எனக்கும்வேற ஃபோன் மேல ஃபோனா வந்துட்டு இருக்கு... நீ கிளம்பி சேனல் ஆபிஸ் வந்துடு, நானும் அரைமணி நேரத்துல வந்துடுவேன். நியூஸை ப்ரொசீட் பண்ணுவோம்... சரியா? எதாவது பேசு ரேணு..!?"
"ம-- மனோ.. எனக்குக் கொஞ்சம்.. டைம் வேணும். நான் அப்பறமா உன்னைக் கூப்பிடறேன். அதுவரை டிஸ்டர்ப் பண்ணாத.. ப்ளீஸ்."
"ஹேய் ரேணு--"
____________________________
சங்கம் டிவி அலுவலகம், நுங்கம்பாக்கம்.
ரேணு தலைமுடியை ஒதுக்கியவாறே வேகமாக உள்ளே வந்தாள். கண்கள் லேசாகச் சிவந்திருந்தன. அதில் மையிட்டு மறைக்க முயன்றிருந்தாள்.
முன்னறையில் காத்திருந்த மனோ நிமிர்ந்து அவளை அதிருப்தியாகப் பார்த்தான்.
"ஹ்ம்ம்.. ரெண்டு மணிநேரம்.. பரவால்ல. நான்கூட நாலைஞ்சு நாள் கழிச்சுத்தான் கூப்பிடுவியோன்னு நெனச்சேன்.."
மனோவின் குரலில் ஆற்றாமை கொதித்தது. ரேணு பெருமூச்செரிந்தாள்.
"மனோ.. ஐம் சாரி. எனக்கு யோசிக்க கொஞ்சம் டைம் தேவைப்பட்டது. இதெல்லாம் நான்--"
"நான் மட்டும் என்ன தெனமும் இந்தமாதிரி வேலையெல்லாம் செய்யறவனா? எனக்கு இருக்காதா சந்தேகம், குழப்பம் எல்லாம்?"
"ப்ச்.. அது வேற, இது வேற மனோ. நான்தான் வந்துட்டன்ல--"
"ரேணு.. ஆயிரமாவது முறையா சொல்றேன்.. உனக்கு எங்கிட்ட பேசணும்னு எதாவது இருந்தா தாராளமா பேசு ரேணு. எதையும் நீ மறைக்கவேண்டிய அவசியமில்ல. இப்ப நான் க்ளோப் டிவில இல்ல. இப்பவாச்சும் என்கிட்ட கொஞ்சம் சொல்லலாம்ல, அங்க என்ன நடந்துச்சுன்னு?? எப்படி ரேணு நாலு வருஷம் வேலைபார்த்த இடத்துல இருந்து ஒரே நாள்ல வெளிய அனுப்பினாங்க உன்னை??"
ரேணு சிரித்தாள்.
"நீயும் தான் மூணு வருஷமா இருந்த.. உன்னை விரட்டல??"
மனோவும் சிரித்தான்.
"இதையெல்லாம் எதிர்பார்த்துத் தான் கார்ப்பரேட்ல வேலை செய்யணும் போல. ஜர்னலிஸ்ட் அசோசியேஷன் எல்லாம் வெறும் ஷோவுக்கு தான் போல! ஒருத்தன் வர்றதில்ல, ஹெல்புக்கு"
ரேணு தலையசைத்து ஆமோதித்தாள்.
மனோ மீண்டும் தீவிரமானான்.
"சரி, பேச்சை மாத்தாத. உன்னை ஏன் தூக்குனாங்க?... நீதான் அடுத்த எக்ஸிக்யூடிவ்னு எல்லாரும் பேசிட்டு இருந்தாங்க.. ஆனா திடீர்னு காணாமப் போயிட்ட அப்படியே. விசாரிச்சா நீ வேலைவிட்டு போயிட்டதா சொல்றான் ஹெச் ஆர்ல. என்னதான் நடந்தது?"
"மனோ.." எனத் தயக்கமாக இழுத்தாள் அவள்.
"ரேணு, என்கிட்ட கூட சொல்லமாட்டயா?"
"ப்ச்.. இது சரியான இடமும் இல்ல, நேரமும் இல்ல. வந்த வேலைய கவனிப்போமா?"
மேலாளரின் அறைக்கு இருவரும் நடக்க, அவர் அமர்ந்து இரண்டு கைகளிலும் தொலைபேசிகளைப் பிடித்துக்கொண்டு மாறிமாறிப் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தனர்.
"இது பேட் டைம்னு தோணுது எனக்கு..."
"நேத்து யூட்யூப்ல போட்ட ட்ரெய்லர்ல, அடுத்த எபிசோடை இன்னிக்கு நீ லைவ் நியூஸா வாசிக்கறதா சொல்லியிருக்கோம். நாம இருந்தாத்தானே அது நடக்கும்? ஸோ, என்ன நடந்தாலும், உன் வேலைக்கு ஆபத்துக் கிடையாது ரேணு. கான்ஃபிடென்ட்டா போ."
தோள்களை உயர்த்தித் தளர்த்திவிட்டு, முகத்தில் உறுதியோடு அவள் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைய, மனோ புன்னகையுடன் பின்தொடர்ந்தான்.
மேலாளர் ரேணுவைக் கண்டதுமே அனல்கக்கும் பார்வையால் எரித்தார்.
"எங்கிருந்துதான் ஓனர் இப்படியொரு தொல்லையைப் பிடிச்சு சேனலுக்கு கொண்டுவந்தாரோ! சே! அப்படி என்ன திமிரு ஒனக்கு, நீயா தானாப் போயி இப்படியொரு சென்சேஷனல் நியூஸை எடுத்து, யாரோட பர்மிஷனும் இல்லாம சேனலோட பேர்ல ரிலீஸ் பண்ணிருக்க? இதை செஞ்சிட்டு எந்த தைரியத்துல என் கேபினுக்கே வந்து என்முன்னாடியே தெனாவட்டா நிக்கற நீ? ஏன், சேனலுக்கு உன்னவிட்டா வேற ஆளே கிடையாதுன்னு--"
அவர் பாதியில் அமைதியாகிவிட்டு வாசலைப் பார்க்க, ரேணுவும் மனோவும் குழப்பமாகத் திரும்பினர். அப்பாசாமி நாயுடு நின்றிருந்தார் அங்கே.
"என்னம்மா ரேணுகா, மேனேஜர்கிட்ட மட்டும் வம்பு வளர்ந்துகிட்டே இருக்குப்போல?"
அவள் பேசுமுன் மனோ இடையிட்டான்.
"நேத்து உங்க யூட்யூட் பேஜ்ல போட்ட நியூஸ் வைரலாகியிருக்கு சார். ரேணுதான் அதுக்கு முழுக் காரணம். அதனால--"
"பாத்தேன்யா. தைரியமான பசங்கதான் நீங்க, தெரியுது. இப்ப உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க?"
மனோவுக்கு அவரைப் பிடித்திருந்தது.
"இந்த நியூஸ் லீட் நான்தான் ரேணுவுக்கு குடுத்தேன். நேத்தும் நாங்க ரெண்டு பேரும்தான் இதை நியூசா எடுத்தோம். ஸோ.. இங்கயே நானும் கேமராமேனா சேர்ந்துட்டா, நாங்க நியூசை ஃபாலோ பண்றதுக்கு வசதியா இருக்கும் சார்."
"வேலை வேணும்னு கேக்கற, அதானேய்யா?"
ஆமெனத் தலையசைத்தான் மனோ.
அப்பாசாமி சிலகணங்கள் யோசித்தார்.
"ஓவர்நைட்ல சேனலோட பேரை பிரபலமாக்கினீங்க, ஆனா வந்த வேகத்துல அது மறைஞ்சிடாதுன்னு என்ன கேரண்ட்டி? அதனால, இந்த மாசம் முழுக்க இதே பரபரப்பும் சுறுசுறுப்பும் இருக்கான்னு பாக்கலாம். மாசக்கடைசில வாங்க, வேலையப் பத்திப் பேசலாம்."
முத்தாய்ப்பாக அவர் முடித்துவிட, எதிர்த்தோ மறுத்தோ பேசிட எதுவுமின்றி, ரேணுவும் மனோவும் வெளிவந்தனர் அமைதியாக.
"சும்மா சொல்லக்கூடாது. பலே ஆளுதான் அந்த நாயுடு."
"இப்ப என்ன பண்ணப் போறோம்? மாசம் முழுக்க டிஆர்பியை இதே லெவல்ல வைக்கணும்னா, சோறுதண்ணி இல்லாம இந்த நியூஸ் பின்னால அலையணும் நாம."
"அதுதான் வழின்னா, அதையே செய்வோம். சரி, அடுத்த எபிசோட் என்ன? எதைப்பத்தி சொல்லப் போறோம்?"
"பகல்ல தான் போஸ்ட்மார்ட்டம் பண்ணமுடியும்னு நேத்து ஜெர்ரி சொன்னான்ல, இந்நேரம் பண்ணியிருப்பாங்க. நாம போய் எதாவது புது தகவல் கிடைச்சுதான்னு பார்க்கலாம்.."
"ஹ்ம்ம்.. போலாம்."
தனது பைக்கில் ஏறி அவன் முன்னே செல்ல, ரேணு ஸ்கூட்டரில் பின்தொடர்ந்தாள். மருத்துவமனையை அடைந்து இருவரும் உள்ளே நடக்க, அங்கே ஜெர்ரியின் அறை காலியாக இருந்தது.
சுற்றுமுற்றும் தேடிப்பார்த்துவிட்டு, அங்கிருந்த மனிதர் ஒருவரைக் கேட்டாள் ரேணு.
"சார்.. டாக்டர் ஜெரின்.. எங்கே?"
"இன்னிக்கு அவருக்கு ட்யூட்டி இல்ல. டாக்டர் விஸ்வநாத் தான் இருக்கார். லெஃப்ட்ல போனா மொத ரூம்."
மனோ தலையசைத்து முன்னால் நடக்க, ரேணு யோசனையாகப் பின்தொடர்ந்தாள். டாக்டர் விஸ்வநாத்தின் அறை ஜெர்ரியினுடையதை விட இருமடங்கு இருந்தது. இவர் சீனியர் மருத்துவர் என்பது அதிலிருந்தே விளங்கியது. வெளியே நின்றிருந்த அட்டெண்டர் இவர்களைத் தடுத்தார்.
"என்ன வேணும்?"
ரேணு தயக்கமாக நிற்க, மனோ அசராமல், "சங்கம் டிவி ரிப்போர்ட்டர்ஸ். அந்த ஹைவேஸ் கேஸ் சம்பந்தமா விசாரிக்கணும்" என்றான் தைரியமாக. ரேணு புன்னகைத்து, அதைக் கையால் மறைத்துக்கொண்டாள்.
அட்டெண்டர், "இருங்க சொல்றேன். வரச்சொன்னா கூப்பிடறேன். இப்படி உட்காருங்க" என ஒரு பெஞ்ச்சைக் காட்டிவிட்டு உள்ளே சென்றார்.
மனோ அமர்ந்து காத்திருக்க, ரேணு வெளியே வேடிக்கை பார்த்து நின்றாள். ஐந்து நிமிடங்களில் அட்டெண்டர் வெளியே வந்து, "பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாரு" என்க, மனோ கோபமாக எழுந்தான். ஆனால் ரேணு அவனைத் தடுத்தாள். அட்டெண்டரிடம், "அண்ணே.. பரவால்ல. இதை வச்சுக்குங்க.." என இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுக்களைத் தந்துவிட்டு, மனோவை அழைத்துக்கொண்டு நகர்ந்துவிட, மனோ வினோதமாகப் பார்த்தான் அவளை.
அந்த அட்டெண்டரும் சற்றே திகைத்தாலும், தயங்காமல் பணத்தைத் தன் உள்பாக்கெட்டில் வைத்துவிட்டு, "இந்தாம்மா.. இருங்க.. வேணா மறுபடி கேட்டுப் பார்க்கவா?" எனப் பின்னாடியே வந்தார். மனோ பார்வையாலேயே 'பரவாயில்லயே' என்றிட, ரேணு 'பொறு' என சைகை காட்டிவிட்டு, "இல்ல.. பரவால்ல அண்ணே. நாங்க கிளம்பறோம்.." என நிற்காமல் நடந்தாள்.
"இருந்தாலும் மேடம்.. வெறுமனே போறீங்களே.. எனக்கு மனசு கேக்கல.."
"ஹ்ம்ம்.. லஞ்சத்துக்கு வர்ற மனசாட்சி, சம்பளத்துக்கும் வந்தா இந்தியா உருப்பட்டுடும்" என முணுமுணுத்தான் மனோ. ரேணு அவனை முறைத்துவிட்டு, "வச்சுக்குங்க, வீட்டுல குழந்தைங்க இருந்தா எதாவது வாங்கிக் குடுங்க.." எனப் புன்னகைத்தாள். அவரும் பல்லைக் காட்டிச் சிரிக்க, ரேணுவுக்குத் தனது நேரம் வந்துவிட்டது தெரிந்தது.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top