2
அலுவலர் கூட்டத்துக்கு அழைப்பு வந்திருந்ததைக் கவனிக்காமல் இருந்துவிட்டது புரிந்து திடுக்கிட்டாள் ரேணு.
'மீட்டிங்கா?? சும்மாவே திட்டுவாங்க, இப்ப மீட்டிங்கை மிஸ் பண்ணிட்டா?'
தலையில் சத்தமாக அடித்துக்கொண்டவள் எழுந்து வெளியே ஓடத்தொடங்க, அதற்குள் கூட்டம் முடிந்ததற்கு அடையாளமாய் அனைவரும் கையில் ஒரு பப்ஸைப் பிடித்துக் கடித்துக்கொண்டு தங்களுக்குள் பேசியபடி திரும்பிவந்துகொண்டிருந்தனர்.
"என்ன ரேணுகா, இன்னிக்கு அட்டெண்டண்ஸ் போச்சா? மீட்டிங் லெட்ஜர்ல சைன் பண்ணலைன்னா இன்னிக்கு சம்பளம் இல்லையாம்!"
நக்கலாகச் சொன்னபடி சக பணியாளர் செல்ல, இன்னும் இருவர் சத்தமாகவே கிசுகிசுத்தனர்.
"பெரிய சேனல்ல வேலபாத்த திமிரு... சம்பளம் போனாதான் திருந்தும்!!"
எழுந்த வருத்தத்தை, கோபத்தை முகத்தில் காட்டாமல், "தட்ஸ் ஆல்ரைட்.. மீட்டிங்ல என்ன சொன்னாங்க?" என்றாள் அவள் நாசூக்காக.
"அதுவா.. நம்ம சேனல்ல சன் நெட்வொர்க்ல இருந்து காப்பியடிச்ச கன்டெண்ட் போடறதால, பல சாட்டிலைட் ஸ்டேஷன்ல நம்ம சேனலை ப்ளாக் பண்ணிட்டாங்க. காப்பிரைட்ஸ் நோட்டீஸ் கூட அனுப்பிருக்காங்களாம். இனி பழையபடி நல்ல நிலமைக்கு வரும்னு யாருக்கும் நம்பிக்கை இல்லை; அநேகமா சேனலை மூடிடுவாங்கனு பேசிக்கறாங்க. ஓனர் திருப்பதில இருக்கார்ல? அவர் வந்து சொல்ற வரைக்கும், காப்பி கண்டெண்ட், காப்பி நியூஸ் எதையும் போடாம, இருக்கற படக்கேசட்டை மட்டும் தேய்க்க சொன்னாரு மேனேஜர்."
'காலையிலிருந்து நீ பார்த்த வேலையெல்லாம் வீணாகப்போனதா? ரேணு.. உன் தரித்திரம் இத்தனை வீரியமானதா? சரிதான்.. அது எத்தனை பாட்டில் சிட்டுக்குருவி லேகியம் தின்கிறதோ..'
எண்ணத்தால் லேசாக அவள் சிரிக்க, அலுவலர்கள் அனைவரும் அவளை வினோதமாகப் பார்க்க, அங்கிருந்து நழுவி மதிய உணவுக்குச் சென்றாள் அவள். தெருவின் முனையில் இருந்த அம்மணி மெஸ் அன்றும் அவளுக்கு அன்னமிட்டது, ஐம்பது ரூபாய்க்கு. ஆண்களாகக் கூடியிருந்த கூட்டங்களுக்கு நடுவே, ஒற்றை நாற்காலியில் அவள் அமர்ந்து கையில் தட்டைப் பிடித்துக்கொண்டு சாப்பிடுவதை, சற்றே வருத்தத்தோடும் வாஞ்சையோடும் பார்த்தார் உணவகத்தின் உரிமையாளர் மற்றும் பரிசாரகரான இசக்கி.
"ஏங்கம்மா.. என்னம்மா உங்களுக்குத் தலையெழுத்து.. இந்த அடாசு சேனல்ல மாட்டிக்கிட்டு அவதிப்படறதுக்கு! நாயா பேயா அலைய உடறானுங்க உங்களை! மதிப்பா உட்கார்ந்து சாப்பிடறதுக்கு ஆபிஸ்ல ஒரு இடம் பண்ணித்தர மாட்டேங்கறானுங்க. எதுக்கும்மா இப்படி கஷ்டப்பட்டுக்கிட்டு..? நீங்கதான் ஊருல குடும்பமும் சொந்தமும் இருக்காங்கனு சொன்னீங்களே..? அங்கயே போயி எதாவது நல்ல உத்தியோகம் பாக்கலாமில்ல?"
சாம்பாரும் பொரியலும் சப்ளை செய்ய நடந்துகொண்டே அவர் கேட்க, ரேணு லேசாகச் சிரித்தாள் சாப்பாட்டுக்கிடையில்.
"எதுக்கு அங்கெல்லாம் போயி வேலை தேடிக்கிட்டு.. இங்கயே சமையல் வேலை எதாவது குடுத்தீங்கன்னா நான் பிழைச்சுப்பேன்ல?"
அவரும் சிரித்துக்கொண்டே, "உங்களைத் தெரியாதுன்னு நினைச்சீங்களா? மூணு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் எப்படி இருந்தீங்க...! எங்க கடைல முக்கால்வாசி நேரம் உங்க 'க்ளோப் டிவி' நியூஸ் சேனல் தான் ஓடும். அதுல தினமும் ரெண்டு முறையாச்சும் நீங்க வந்து நியூஸ் குடுக்காம இருந்ததே இல்ல.. நான் எப்பவும் பார்ப்பேன்" என்றிட, 'டிவி சேனல்' எனக் கேட்டதில் நான்கைந்து பேர் அவள்புறம் திரும்பினர்.
"டிவில நியூஸ் வாசிக்கறவங்களா நீங்க?"
ஒரு நடுத்தர வயது ஆண் கேட்க, அவள் இல்லையென்று தலையசைத்தாள்.
"நியூஸ் ரீடர் இல்ல, ரிப்போர்ட்டர். ரேணுகா ராமன்."
"ஓ..."
அந்த 'ஓ'வில் தெரிந்த ஏமாற்றமும் அலட்சியமும் அவளுக்கு ஆத்திரமூட்ட, எதுவும் பேசிவிடக் கூடாதென அவசரமாக உணவை எடுத்து வாயில் திணித்துக்கொண்டாள் அவள். அதில் புரையேற, இசக்கி அவசரமாகத் தண்ணீர் கொண்டுதந்தார்.
சாப்பிட்டுவிட்டு, பாக்குத்தட்டை குப்பையில் போட்டு, கைகழுவிவிட்டு, கணக்குப் புத்தகத்தில் அன்றைய தேதியிட்டுத் தன் பெயரைக் குறித்துவிட்டு, இசக்கிக்குத் தலையசைத்துவிட்டு மீண்டும் அலுவலகத்துக்குள் வந்தாள் அவள்.
செய்திப்பிரிவின் உள்ளே செல்ல, அங்கே செய்திப்பிரிவின் செயல்தூண்களான, எடிட்டரும் இரண்டே இரண்டு செய்தியாளர்களும் மேசைகளில் சாய்ந்து நின்று, வட்டமேசை மாநாடு போன்று ஆலோசனைக் கூட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். செய்திப் பிரிவின் ஒரே பெண் ஊழியரான ரேணு, தயங்கித் தயங்கி ஓரமாக வந்து நின்றாள்.
".. அதான்.. அப்படியே காப்பி பேஸ்ட் பண்றதால தான பிரச்சினை வருது.. வார்த்தையை எக்குத்தப்பா மாத்திப் போட்டு, சில நம்பர்சை அங்கங்க டிங்கரிங் பண்ணினா நம்ம வேலை சேஃப் ஆகும்ல? சேனலை நெட்டி நிமிர்த்த முடியாது.. இருந்தாலும், காப்பிரைட்ஸ் பிரச்சினை இருக்காதுல்ல.. போறப்ப ஏன் கேசு, கோர்ட்டுனு ஆகணும்.. நல்ல முறையா இழுத்து மூடிடலாம். அதைத்தான் ஓனர்கிட்ட நான் சொல்லப்போறேன்.."
எடிட்டர் தனது முடிவுரையை விஸ்தாரமாக முன்வைக்க, அவரது விசுவாசிகளான இரண்டுபேரும் தலையை பலமாக ஆட்டி வழிமொழிய, ரேணு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு இடையிட்டாள்.
"ஏன் சார்.. நியூஸ் கலெக்ட் பண்றது ஒண்ணும் கஷ்டமான வேலை இல்லையே சார்...? அதுவும் நம்ம லோக்கல் சேனல்.. லோக்கல் நியூஸ் நிறையப் போடலாம் சார்.. நம்ம சேனலோட பலமே, இன்னும் இலவச சேனலாகவே இருக்கறதுதான். அதுல உருப்படியான, பிரயோஜனமான செய்திகளைப் போட்டா, மக்களுக்கும் யூஸ்ஃபுல்லா இருக்குமே..?"
ஏதோ தெய்வகுத்தம் செய்துவிட்டதைப் போல அவளை அதிர்ச்சியாகப் பார்த்தனர் விசுவாசி பணியாளர்கள். எடிட்டர் தனது முட்டைக் கண்களால் அவளை முறைக்க, அவள் விடாமல், "வேணும்னா.. நானே நியூஸ் கலெக்ட் பண்ணி, கம்பைல் பண்ணித் தர்றேன்.. நீங்க பாருங்க. புடிக்கலைன்னா, பழையபடியே.. திருட்டு வேலை செய்யலாம்." என்றாள்.
"ஹேய்.." என்று ஒருவன் ஆரம்பிக்க, எடிட்டர் அவனை அடக்கி, அவளை முறைத்தார்.
"வேலைக்கு வந்து ரெண்டு மாசம்கூட ஆகல, எடிட்டரையே எதிர்த்துப் பேசற! இந்தத் திமிருக்கு... சரி, மூணு நாள் டைம். ஒரு நல்ல நியூஸ் ஐட்டத்தைக் கொண்டு வந்தன்னா, உனக்கு இங்க வேலை. இல்லைன்னா, திருட்டு வேலைன்னு சொன்னதுக்காவே உன் சீட்டு கிழிஞ்சிடும்."
'ஆமா.. உனக்கே இங்க வேலை இருக்கப் போறதில்ல.. இதுல என்னை சீட்டுக் கிழிக்கறயாக்கும்..'
"சரிங்க சார்."
ஒரு தைரியப் புன்னகையோடு வெளியே கிளம்பினாள் ரேணு.
நீண்ட நாட்கள் கழித்து ஒரு செய்திக்காக வெளியே செல்வது உற்சாகமளித்தாலும், யார் கண்ணிலும் படாமல் எங்கு சென்று செய்தி சேகரிப்பது என்ற சலிப்பும் தோன்றிட, தனது கருப்பு ஆக்சஸ்(Access) வாகனத்தை சுரத்தின்றி உயிர்ப்பித்து, வாகன வெள்ளத்தில் அவளும் ஒரு கலமாகக் கலந்தாள்.
மவுண்ட் ரோடு போக்குவரத்துக்குள் பழக்கப்பட்டவள் போல இலகுவாக நுழைந்து, தேனாம்பேட்டை சிக்னல் வரையில் இலக்கின்றிச் சென்றுகொண்டிருந்தவள், வலதுபுறம் திரும்பி அகர்வால் இனிப்புக் கடையின்முன் வண்டியை நிறுத்தி இறங்கினாள். கடையின் முகப்பில் போட்டிருந்த மார்புயர மேசை ஒன்றுக்குப் பக்கத்தில் நின்று, தன் கைபேசியை எடுத்து அதன் தொடுதிரையில் தெரிந்த அழைப்பெண்கள் பட்டியலை மேலும் கீழுமாய்த் தடவித் தடவி யோசித்தவள், இறுதியில் மனதை மாற்றிக்கொண்டு கைபேசியைப் பைக்குள் போட்டாள்.
வந்துசெல்லும் மனிதர்களை சிறிதுநேரம் கவனித்தாள். பின்னர் கடையில் ஒரு பாதாம்பால் மட்டும் வாங்கி அருந்திவிட்டு, மீண்டும் வண்டியை எடுத்துக்கொண்டு சாலையில் விரைந்தாள் அவள்.
முன்பெல்லாம், காவிரி டெல்டா விவசாயிகள் போராட்டத்திலிருந்து, காதல் விவகாரத்தால் கொல்லப்பட்ட கல்லூரி மாணவன் வரை, தான் செய்த ஆயிரமாயிரம் செய்தித் தொகுப்புகள் ரேணுவின் மனதில் நிழலாட, ஏதோ சாதனை விருதைப் பிடிப்பதைப் போல மைக்கைப் பிடித்து நின்று கேமராவை நேருக்கு நேர் பார்த்து, "க்ளோப் நியூஸ் செய்திகளுக்காக, திருவான்மியூரிலிருந்து, உங்கள் செய்தியாளர் ரேணுகா ராமன், மற்றும் ஒளிப்பதிவாளர் மனோ" என்று கூறும்போது, ஒவ்வொரு முறையும் எழும் சிலிர்ப்பை நினைத்து ஏங்கினாள் அவள். கைகள் இப்போது மைக் ஒன்று கிடைக்காதா எனப் பரபரக்க, வாய்விட்டு 'ச்ச்' என சலித்துக்கொண்டு வண்டியின் த்ராட்டிலை முறுக்கினாள்.
ஜெமினி மேம்பாலத்தில் செல்லும்போது, அந்தப்பக்கம் திரும்பிவிடக் கூடாதென வலுக்கட்டாயமாகக் கழுத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு சாலையில் மட்டும் கண்களை வைத்தாள் அவள். ஆனாலும் மனம் அல்லவா? அதன் விருப்பத்துக்குக் கண்களைத் திருப்பியது இடதுபக்கமாக.
வானுயர்ந்த கட்டிடம். நீலமும் வெள்ளையுமாய்க் கண்ணாடிப் பாளங்கள். நவீன மென்பொறி மாளிகை. பகலிலும் ஜொலித்தது அந்தக் கட்டிடத்தின் மேல்மாடியில் ஒய்யாரமாய் வீற்றிருந்த கண்ணாடிக் கோளம். சூரிய ஒளியை நாற்திசைகளிலும் சிந்திக்கொண்டு சுழன்றுகொண்டிருந்த அந்த ராட்சத உருண்டையின்மேல் ஆளுயர எழுத்துக்களால் எழுதப்பட்ட ஒரு பெயர்.
'க்ளோப் டிவி.'
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top