10
"போஸ்ட்மார்ட்டம் செய்தாச்சு சார், கிடைச்ச ரிப்போர்ட்ட வச்சுப் பார்க்கறப்ப ரொம்ப சென்சிடிவான கேசா தெரியுது. அதனால, சீஃப் டாக்டர்கிட்ட தகவல் சொல்லியிருக்கோம். காலைல வந்து பார்த்துட்டு, இன்ஸ்பெக்டர்ட்ட அவரே பேசறதா சொன்னார்."
காவலர் சரியெனத் தலையசைத்துவிட்டு வெளியேற, ரேணு அவனிடம் திரும்பினாள்.
"எப்படி ஜெர்ரி.. இதை இவ்ளோ.. சாதாரணமா சொல்ற?"
அவளது குரலில் தொனித்த பதற்றத்திற்குக் காரணம் புரியாமல் பார்த்தான் ஜெர்ரி.
"ஏன்? ரிப்போர்ட்ஸ் எல்லாத்தையும் நான் இப்படித்தான் சொல்வேன். இருக்கறதை சொல்றதுக்கு நான் ஏன் கவலைப்படணும்?"
"அதில்ல... ஒரு.. compassion, empathy... எதுவுமே வராதா? அந்த-- அது இன்னைக்கு தான்-- அதாவது.. நேத்து அது ஒரு உயிருள்ள ஆள்... இப்ப இல்லை. அது-- அது உன்னை பாதிக்கவே இல்லையா?"
அவன் லேசாகத் தோளைக் குலுக்கிவிட்டு, "நேத்து இல்ல, மூணு நாள். அந்த ஆள் செத்து, மூணு நாளாச்சு." என்றான் அமைதியாக.
ரேணு அதிர்ந்து நின்றாள்.
"மூ.. மூணு நாளா!?"
"இவ்ளோ எமோஷனல் ஆகவேண்டிய அவசியமில்ல. உங்களுக்கு அது ஒரு சடலம். எங்களுக்கு அது ஒரு கேஸ். ஒரு விடை தெரியாத கேள்வி. பதிலைக் கண்டுபிடிக்கற வரைக்கும் அதுக்கு மதிப்பு. அப்பறம் அந்த கேசை மூடிட்டா, மனசுல இருந்தும் அதை ரிமூவ் பண்ணிடணும். மனசுல எல்லாத்தையும் சேர்த்திக்கிட்டே இருந்தா, நிம்மதியா வாழவே முடியாது.
அப்பறம், கேஸ் சென்சிடிவா இருக்கறதால, சீஃப் டாக்டரைக் கேட்காம உனக்கு நியூஸ் தர முடியாது, சாரி"
தன் கையிலிருந்த காகிதத்தை வேகமாகக் கிழித்துப்போட்டாள் அவள்.
"எனக்கு இந்த நியூஸ் வேணும் ஜெர்ரி! திக்கற்று நிக்கற நேரத்துல, எனக்குக் கிடைச்ச ஒரு முக்கியமான பற்றுதல் இது. எனக்கு மட்டுமில்ல, எங்க சேனலுக்கும் இது வேணும். வேற எந்த டிவி சேனலும் ஏறெடுத்துப் பாக்கலைல்ல? நான்தானே மொதல்ல வந்தேன்? அப்பறம் நியூஸ் தரலைன்னா என்ன நியாயம்??"
கட்டற்ற உணர்ச்சிப்பெருக்கோடு அவள் பேசிட, தலையை மட்டும் அசட்டையாக அசைத்துவிட்டு, "ம்ஹூம். சீஃப் டாக்டர் இதை மீடியாவுக்கெல்லாம் கொண்டுபோகக் கூடாதுன்னு சொல்லிட்டார். நாளைக்கு இன்ஸ்பெக்டரைப் பாத்துட்டுத்தான், எந்த நியூஸ்ல எப்படி சொல்லணும்னு அவங்க முடிவு பண்ணுவாங்க. நீ வேற நியூஸ் எதையாவது கவனி ரேணு. அது ஈஸி." எனக் கைவிரித்தான் அவன்.
"ஜெர்ரி... இது தான் முக்கியமான நியூஸ். எனக்கும் எங்க சேனலுக்கும் தேவையான மக்கள் கவனத்தை இந்த மாதிரி ஒரு ஷாக்கிங்கான செய்தி தான் தரும். ப்ளீஸ்.. கன்சிடர்."
தலையை சாய்த்து யோசித்தவன், "நாளைக்கு காலைல வா." என்றுமட்டும் சொல்ல, அதையே அனுமதியாக எடுத்துகொண்டவள் முகம் மலர்ந்தாள்.
"தேங்க்ஸ் ஜெர்ரி! காலைல வந்துடறேன்.. பை!!"
போகப் போனவளை மீண்டும் அழைத்தான் அவன்.
"ரேணு!
ஒன் திங். எப்போதும் குப்பையை மட்டும் டஸ்ட் பின்ல போடு. எனக்கு இப்படி குப்பை போடறது புடிக்காது." என்றுவிட்டு வெளியே நகர்ந்தான் ஜெர்ரி.
'இவன் மனிதன்தானா??'
தலையை ஆட்சேபகரமாக அசைத்துவிட்டு, ஆயாசமாகக் கண்களைச் சுழற்றிவிட்டு, தான் கிழித்த காகிதத் துண்டுகளைக் குப்பைத் தொட்டியில் எடுத்துப் போட்டுவிட்டு, அவனைப் பின்தொடரந்து வெளியே நடந்தாள் அவள்.
__________________________________
மனோ தனது கணினியின் முன் அமர்ந்து, சமீபத்தில் வந்திருந்த படங்களின் பட்டியலை அலசி, எதைப் பார்த்துவிட்டு ரிவ்யூ எழுதலாம் என்று மூளையைப் பிசைந்து கொண்டிருந்தான். கைபேசி உர்ரென்று அதிரத் தொடங்கவும், தன் யோசனையைக் களைந்து, அதை எடுத்துக் காதில் வைத்தான்.
"சொல்லு ரேணு.. என்ன இந்த நேரத்துல? தூக்கம் வரல?"
கண்கள் அனிச்சையாக கணினியின் மூலையில் தெரித்த டிஜிட்டல் கடிகாரத்தை அடைந்தன. இரவு பத்தரை என்றது அதில்.
"மனோ, எனக்கு ஒரு ஹெல்ப் வேணும். கொஞ்சம் அர்ஜெண்ட்."
"என்னது, பணம் எதும் வேணுமா?"
"ப்ச், அதில்ல. நான் உனக்கு ஒரு ஃபுட்டேஜ் அனுப்பியிருக்கேன், மெயில்ல. அதைக் கொஞ்சம் பாரேன்.."
"லைன்லயே இரு.." என்றவன் கணினியின் தபால் பெட்டியைத் திறந்து ரேணுவின் அந்த செய்தியைக் கண்டுபிடித்துத் திறந்தான். அதில் நாற்பது நிமிடக் காணொளி ஒன்று வந்திருந்தது கண்டு, அதன்மீது 'க்ளிக்' செய்து தரவிறக்கம் செய்தான்.
"என்னதுடி இது? கீழ்ப்பாக்கம் ஹாஸ்பிடலா? ஹைவேஸ் கேசை ஷூட் பண்ணியா? போட்டோ மட்டும் எடுத்திருக்க வேண்டியதுதான?"
"ம்ஹூம். நீ மதியம் பேசினதுக்கு அப்பறம், எனக்கொரு ஐடியா வந்துச்சு. அதோட முதல்படிதான் இது. ஒரு டாக்குமெண்பரி சீரிய்ஸ் மனோ, கவர்மெண்ட் ஃபாரன்சிக் டாக்டர்ஸும் போலீசும் சேர்ந்து எப்படி தடயம் எதுவுமே இல்லாத ஒரு கொலையைக் கண்டுபிடிக்கறாங்கனு. ரியல் லைஃப். நாளைக்கு காலைல தான் மத்த விபரங்கள் கிடைக்கும். இப்போதைக்கு முதல் கட்டமா, மார்ச்சுவரி, அங்க நடக்குற சில சட்டவிரோத சம்பவங்கள், காலியா கிடக்குற சீஃப் டாக்டர் ரூம், இதையெல்லாம் ஷூட் பண்ணியிருக்கேன்."
"என்னத்துக்கு இதெல்லாம்? ஒழுங்கா ஒரு நியூசை மட்டும் போடவேண்டிதுதான? கொசகொசன்னு இருக்கு உன் வீடியோகிராபி. ரெண்டு செகண்டுக்கு மேல எவனும் பாக்கமுடியாது! கேமரா வேணும்னா எங்கிட்ட கேட்டிருக்கலாம்ல!? நாளைக்கு நியூசை கொண்டுவரலன்னா வேலையை காலி பண்ணிடுவாங்கனு சொன்ன!?"
எதிர்முனையில் ரேணு வாய்விட்டு அலுத்துக்கொண்டாள் பலமாக.
"ஏய்... காலைல இருந்து கஷ்டப்பட்டு பண்ணின கவர் ஸ்டோரி. அநியாயமா இப்படி டிஸ்கரேஜ் பண்ணாத."
"உண்மையா தோணுனத சொன்னேன், சரி விடு. நான் சொல்றதைக் கேளு. இப்ப உடனடியா மொத்த ஃபுட்டேஜையும் டெலிகாஸ்ட் பண்ணிடாத. முதல்ல ரெண்டு நிமஷத்துக்கு வர்ற மாதிரி ஒரு ட்ரெய்லர் ரெடி பண்ணு. அப்பறம் அதை சோஷியல் மீடியால ஷேர் பண்ணு. ஆர்வதைத் தூண்டற மாதிரி இருக்கணும் அது. 'மேலும் தெரிந்துகொள்ள, சங்கம் டிவி காணவும்' அப்டினு போடு. இனிமே ஒழுங்கா கேமராவுல ஷூட் பண்ணு. உங்க ஆபிஸ்ல யாராச்சும் கிராபிக் டிசைனர் இருந்தான்னா, அவன்கிட்ட சொல்லி நல்ல எபெக்டோட வீடியோவை ரெடி பண்ணு. புரியுதா?"
ஒன்றிரண்டு கொட்டாவிகள் பதிலாக வந்தன.
"இவ்ளோ அழகா சொல்றயே மனோ.. நீயே அதெல்லாம் ரெடி பண்ணித் தாயேன்.. ஹிஹி.."
"எத்தனை பேருடி கிளம்பியிருக்கீங்க இப்படி? உன் வேலைய நீதான் செய்யணும். ஏற்கனவே வேலையிருக்கற அடுத்தவனை அதுல இழுக்கக்கூடாது. நான் காலைல ரிவ்யூவை சம்மிட் பண்ணலைன்னா எடிட்டர் என்னைக் காய்ச்சி எடுத்துருவான்! நியூஸ் எழுதறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா ரேணு..?"
கைபேசியில் பேசினாலும் அவள் முறைப்பதை உணரமுடிந்தது அவனால்.
"என்கிட்டயேவா? நாலு வருஷம் மனோ!! நாலு வருஷமா ஃபீல்ட் ரிப்போர்ட்டர் நான். சும்மா டெஸ்க்ல உட்கார்ந்துக்கிட்டு ஆர்ட்டிகிள் எழுதலை. காடும் மேடுமா அலைஞ்சு திரிஞ்சு நியூஸ் கலெக்ட் பண்ணியிருக்கேன். இப்பவும் அதைத்தான் செஞ்சிட்டு இருக்கேன்--"
"ஹேய் ரிலாக்ஸ், நான் சும்மா விளையாட்டாத்தான் சொன்னேன். கூல் டௌண். இப்ப என்ன, உனக்கு ஹெல்ப் பண்ணனுமா?--"
"ப்ச், வேணாம். நான் பாத்துக்கறேன். நாளைக்கு நான் ஜிஹெச் போறேன். காலைல வந்து கேமரா வாங்கிக்கறேன்."
"ரேணு, உங்கிட்ட ஒண்ணு கேக்கணும்.. எதுக்காக நீ இவ்ளோ சிரமப்படற? இந்த வேலை இல்லன்னா வேற வேலை. அப்படித்தான க்ளோப் சேனலை விட்டுட்டுப் போன? இப்ப மட்டும் ஏன் இத்தனை அக்கறை?"
ரேணு மறுமுனையில் தலையை சோர்வாக சரித்தாள். எங்கே சுற்றினாலும் இறுதியில் அதிலேயே வந்துநிற்கும் நண்பனை நினைத்து சிரிப்பதா அழுவதா எனப் புரியவில்லை அவளுக்கு.
"மனோ, அது வேற. இது வேற. இப்ப அதைப் பேசாத."
"ரேணு, மூழ்கப்போற கப்பல்மாதிரி அந்த சேனல். அவனவன் வேறவேற இடத்தைத் தேடிப் போகலைன்னா, கப்பலோட சேர்ந்து மூழ்கவேண்டிதுதான்! மீடியால இருக்கற எல்லாருக்குமே இது தெரியும்."
"மனோ, என்னால உனக்கு விளக்கம் குடுக்க முடியல, ப்ளீஸ். இந்த வேலை எனக்கு வேணும். இதையும் விடமுடியாது."
"அதான் கேக்கறேன்.. ஏன் ரேணு?"
வாய்வரை வந்தன வார்த்தைகள்.
"ஏன்னா வாழ்க்கைல எதாச்சும் ஒரு விஷயத்துக்காகவாச்சும் போராடணும்னு தோணுது மனோ எனக்கு!! கைவிட்டுப்போன ஒவ்வொரு வாய்ப்புக்காகவும் இப்ப போராடணும்னு தோணுது!!"
பட்டென அழைப்பைத் துண்டித்துவிட்டாள் அவள்.
மனோ தோளைக் குலுக்கிவிட்டு, கணினியில் ஒரு படத்தை ஓட்டத் தொடங்கினான்.
ரேணு தூக்கமின்றி விழித்திருந்தாள்.
___________________________________
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top