2


24 வருடங்களுக்கு முன் ,

மீன் கொடி அது வானுயர்ந்து பறந்திட பாவையவள் மீனாட்சியின் ஆளுகையில் ஆதவனவனும் அழகாய் உதித்திட அந்த குறுகிய சந்தில் ஒரு மூலையில் இருந்த கோவிலில் காலை வேளையை உணர்த்தும் விதமாய் கௌசல்யா சுப்ரஜா என்ற கானம் ஒளிக்க அதையும் தாண்டி ஒரு வீட்டில் ஒரு தாயின் வசவு மொழிகள் கேட்டது .

விளக்கமாறை எடுத்து அவர் விளாசிக்கொண்டிருக்க அவர் கையில் சிக்காமல் ஓடிக்கொண்டிருந்தான் ஒரு ஐந்து வயது சிறுவன் .பின் அந்த வீட்டிலிருந்து வெளியே ஓடியவன் அவன் அன்னையிடம் பின்னே திரும்பி நின்று தனது பின்னழகை ஆட்டி ஒழுங்கு காண்பித்து விட்டு ஓட

அவரோ "ஏலேய் வீட்டுக்கு தான மறுபடி வரணும் அப்போ இருக்குடா உனக்கு"

அவரின் மூத்த புதல்வி பாவாடை தாவணி அணிந்தபடி வாசலை பெருக்க தண்ணீர் நிறைந்த வாளியோடு வந்து நின்ற மஹாலட்சமி விளக்கமாறை அவர் கையிலிருந்து வாங்கி அதை கீழே தட்டி சரி படுத்தியவள் வாசலை பெருக்கியவாறே பேச ஆரம்பித்தாள் "அம்மா ஏன்மா அவனை காலங்காத்தால இந்த அடி அடிக்கிற பாவம் சின்ன பையன் தான"

அவரோ "ஆமாடி சின்ன நொள்ளை இப்டியே செல்லம் குடுத்தே உன் தொம்பிய கெடுத்து வை .நானே உங்கப்பாவுக்கு தெரியாம காச சேர்த்து எப்போவாவது மூத்தவனுக்கு மட்டும் கறியோ முட்டையோ வச்சு தருவேன் அவுங்கப்பா நேத்து ஏதோ காசு பத்தலன்னு பொலம்பிட்டு இருந்தாருனு இந்த வாலுப்பய நா சேத்து வச்ச காச எல்லாம் தூக்கி கொடுத்ததும் இல்லாம காசு இல்லேனா அம்மா கிட்ட கேளுங்கப்பா அம்மா நெறய வச்சுருக்குனு சொல்லிட்டு போய்ட்டான் .உன்னோட அப்பா என்னைய போட்டு வெளுத்து எடுத்துட்டாரு "என்க

அவளோ அதற்குள் வாசலை பெருக்கி முடித்திருந்தவள் "நீ எல்லா பிள்ளைக்கும் ஒரே மாறி செஞ்சு குடுத்தா அவன் சும்மா இருந்துருப்பான் நீ உன் பெரிய மகனுக்கு மட்டும் செஞ்சு குடுத்தா அவனுக்கு என்ன தெரியும் நீ எதுக்கு காசு சேர்த்து வைக்குறன்னு "என்று கேட்டவாறு வாசல் தெளிக்க துவங்க

அவரோ பெரிதாய் நொடித்துக்கொண்டவர் "ஆங் என் புள்ள இன்ஜி..... அது என்ன கருமமோ வாயில வரல அந்த படிப்புலாம் படிக்குறான் இவனும் அவனும் ஒன்னாக்கும். பொட்ட புள்ளையா லட்சணமா உன் தொம்பிக்கு வக்காலத்து வாங்காம வீட்டு வேலை எல்லாம் நல்லா செய்யுற வழிய பாரு .இன்னும் மூணு மாசத்துல உனக்கு கல்யாணம் "என்று விட்டு உள்ளே சென்றார் உறக்கத்தில் இருந்து எழுந்து அழும் தனது இரண்டு வயது மகனை சமாதானம் செய்ய .

அவளோ தன் அன்னையின் இந்த பாரபட்ச செயலை பார்த்து தலையில் அடித்துக்கொண்டே வேலையை தொடர்ந்தாள்.இது இந்த வீட்டின் வழக்கம் தான்.அவளின் அன்னைக்கு மூத்த மகனும் இவளும் மட்டுமே இரு கண்கள் போல் மற்ற இரு பிள்ளைகளையும் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை என்று கண்டுகொள்ளவே மாட்டார் .அதிலும் மாறன் என்றால் சுத்தம்.

இங்கே இவனை வைத்து பெரும் பஞ்சாயத்தே நடந்து கொண்டிருக்க அதை எல்லாம் சிந்தனை செய்யாமல் பக்கத்து சந்தில் அவனுடைய ஒத்த வயதுடைய சிறுவர்களுடன் கிட்டிப்புள் விளையாண்டு கொண்டிருந்தான் இளமாறன் .

இளமாரனின் குடும்பமோ நடுத்தர குடும்பத்திலேயே அடிமட்ட நடுத்தரக்குடும்பம் .அவனின் தந்தை சத்தியமூர்த்தி சூழ்ச்சியால் இருந்த சொத்துக்கள் அனைத்தையும் இழந்து தனது கடின உழைப்பால் தனது குடும்பத்தை பசியிலிருந்தும் பிள்ளைகளை கல்வி இன்மையிலிருந்தும் காத்து வருகிறார் .

அவர் ஒரு தையர் கடை வைத்திருக்கிறார் .அவரின் துணைவியார் ஷாந்தி .பெயரிற்கும் குணத்திற்கும் கொஞ்சமும் சம்மந்தம் இல்லாத ஒருவர்.

இவர்களுக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள் மூத்தவள் மஹாலட்சமி வயது இருபது .பன்னிரண்டாம் வகுப்பிற்கு பின் படிக்க விருப்பம் இல்லாததால் வீட்டிலேயே அன்னைக்கு உதவியாய் இருக்கிறாள் .

இரண்டாவது மகன் முருகன் எலக்ட்ரிகல் இன்ஜினீரிங் தியாகராஜா கல்லூரியில் முதலாமாண்டு பயில்கிறான் வயது 17 .நல்ல புத்திசாலி ஆனால் அகம்பாவமும் தான் என்ற எண்ணமும் மிகவும் அதிகம்.

மூன்றாவது இளமாறன் வயது ஐந்து ஒரு இடத்தில் நில்லாமல் துரு துருவென்று சுற்றிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் படிப்பில் சுட்டியான சிறுவன். நான்காவது பிள்ளை கடைக்குட்டி ராஜா வயது இரண்டு .

முருகன் எப்பொழுதும் படிப்பை பற்றி பேசுவது மட்டம் தட்டுவது அகங்காரமாய் திரிவது என்றிருக்க அவனை பாசமாய் அரவணைத்து அன்னை அறியாது அவனுக்கு பிடித்த பலகாரங்கள் செய்து கொடுத்து அவனோடு விளையாடும் அக்கா மஹாலட்சமி என்றால் மாறனுக்கு மிகவும் இஷ்டம் .மஹாலட்சுமிக்கும் அவ்விதமே எனில் இது இப்படியே தொடருமா ?மாற்றம் ஒன்றே மாறாததல்லவா .

அடிக்கடி ஏதாவது குறும்பு செய்து அன்னையிடம் இருந்து அடி வாங்குவதிலிருந்து தப்பிப்பதற்காக அடுத்த சந்திற்குள் ஓடி விடுவான் இளமாறன் .அங்கே அவனுக்கென்ன ஒரு பட்டாளமே இருக்கும் அதில் அவனது உற்ற தோழர்கள் இருவர் .ஒன்று மோகன் அவனும் மாறனும் ஒரே வகுப்பில் பயில்பவர்கள் .

அடுத்தது ராமன் ,அவனை விட இரண்டு வயது மூத்தவன் எனினும் அவர்களுடன் ஒன்றாய் சுற்றித்திரிபவன் .

அன்று ஞாயிறு ஆதலால் அனைத்து சிறுவர் சிறுமிகளும் சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்க அங்கே ராமனும் விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது அங்கே வந்தாள் பதினெட்டு வயது மதிக்கத்தக்க ஒரு பெண் .பாவாடை தாவணி அணிந்து சடை பின்னி போட்டிருந்தவள் ராமனை அழைத்தாள் "டேய்ய் ராமா "என்க அந்த மூவர் குழு அவர்கள் அழைத்த அழைப்புக்கு செவி சாய்த்து அவளிடம் சென்றது .

இந்த இருவரையும் பார்த்து முறுவலித்தவள் "டேய்ய் ராமா அம்மா தங்கச்சி பாப்பாவோட வீட்டுக்கு வந்துட்டாங்க போய் பாரு " என்றால் ராமனின் மூத்த தமக்கை தாமரை .

ராமனோ தங்கை வந்துவிட்டாள் என்றதும் முகம் எல்லாம் பிரகாசிக்க "ஐய் வந்துட்டாங்களா அக்கா இதோ வரேன்" என்றவன் அவர்கள் இருவரையும் பார்த்து "நீங்களும் வாங்கடா தங்கச்சிய பாத்துட்டு வரலாம்"என்று அழைக்க இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டவர்கள் தாமரையை பார்க்க

அவளோ சிரித்தவாறு "என்னடா இந்த முழி முழிக்குறீங்க வாங்க "என்றவாறு முன்னே செல்ல மூவரும் பின்னே சென்றனர் .

ராமனின் வீட்டிலும் வறுமை அதிகமாய் இருக்க அவனின் அன்னை தந்தை மீனாட்சி சங்கரன் தம்பதியருக்கு நான்கு குழந்தைகள் இருந்தனர். மூத்தவள் தாமரை வயது பதினேழு பன்னிரண்டாம் வகுப்பு முடிந்ததும் அரசாங்க தேர்வு எழுதி இப்பொழுது கிளெர்க்காக சுகாதாரத்துறையில் பணியாற்றுகிறாள் .

அடுத்தது ராமன் வயது ஏழு ,அவனிற்கு பின் ஒரு தங்கை பெயர் சௌபாக்கியவதி வயது மூன்று.

அடுத்த தங்கை இப்பொழுதே பிறந்திருந்தாள். பிறந்து ஒரு மாதம் ஆகி இருக்க அவரின் அன்னையின் வீட்டிலிருந்து இப்பொழுதே பிறந்த குழந்தையை தூக்கி வந்திருந்தார் அவர்களின் அன்னை மீனாட்சி .'

வீட்டிற்குள் வந்ததும் ஒரு மரத்தொட்டில் தென்பட அதை நோக்கி ஓடினான் ராமன் .மற்ற இருவரும் மெதுவாய் தொட்டிலில் அருகே செல்ல மாறன் கண்டதென்னவோ மெல்லிய வெள்ளை நிற பருத்தி உடை அணிந்து பஞ்சுப்பொதியலென பாலின் வெண்ணிறத்தில் சிறு கைகள் சிறு கால்கள் அசைந்துகொண்டிருக்க அரை உறக்கத்தில் இருப்பதன் அடையாளமாய் அவ்வப்போது வாயை திறந்து திறந்து மூடியபடி சோழி போன்ற கண்ணை உருட்டிக்கொண்டிருந்த பெண் குழந்தையை தான் .

ராமன் அவளின் கைகளையும் கால்களையும் ஆச்சர்யம் நிறைந்த விழிகளுடன் மெலிதாய் வருடிக்கொண்டிருந்தான் .கண்கொட்டாமல் இளமாறன் அந்த குழந்தையை ஆச்சர்யம் நிறைந்த விழிகளுடன் பார்த்துக்கொண்டிருக்க திடீரென அவளோ வீறிட்டு அழ ஆரம்பித்தாள் .

அவள் அழுவதில் பதறிய ராமன் அவன் அன்னையை தேடி ஓட மோகனோ அவனின் அன்னை அழைத்தாரென்று எப்பொழுதோ ஓடி இருந்தான்.அவள் அழுவதில் பதற்றமடைந்த மாறன் அவளை மெலிதாய் தட்டி கொடுத்து "ஜூ ஜூ ஜூ பாப்பா அழாத அழாத "என்று தன் பிஞ்சு கைகளால் மெல்ல தட்டி கொடுக்க மெல்ல அழுகையை நிறுத்திய குழந்தை மீண்டும் உறங்க ஆரம்பித்தாள் .

அவள் உறங்குவதை புன்னகையுடன் பார்த்தவன் பின் அங்கிருந்து நகர முற்பட அவனின் கை விரலை கெட்டியாய் உறக்கத்தில் பிடித்திருந்தாள் குழந்தை .

மாறன் " பாப்பா இப்டி பிடிச்சிருந்தா நா எப்படி போறது விடுங்க கைய "என்று மெல்ல கூறியவாறு கையை விடுவிக்க போராட அங்கு சிரிப்புடன் வந்த தாமரையோ சிரிப்புடன் கையை விடுவித்தவள் சிணுங்கிய குழந்தையை தட்டி உறங்கவைத்தவள் அவனிடம் திரும்ப

அவனோ "அக்கா பாப்பா பேரு என்ன ?"என்க

அவளோ அவனின் தலையை கலைத்தவள் "பாப்பா பேருல பாதி பேரு உன் பேருடா.  இலக்கியா "என்க

அவனுக்கோ வாயில் இலக்கியா வராமல்"இலயியா "என்க

தாமரை அத்தனை முறை மீண்டும் மீண்டும் கூறியும் அவனிற்கு வாயில் இலக்கியா வருவேனா என்றது .பின் சோர்ந்தவன் "அக்கா விடுங்க எனக்கு வரல நா பாப்பாவை லயான்னு கூப்ட்டுக்குறேன் "என்று விட்டு அவளின் கன்னத்தை வருடிவிட்டு செல்ல குழந்தைக்கு அது பிடித்ததோ என்னவோ உறக்கத்திலேயே தன் பொக்கை வாயை திறந்து சிரித்தது ..    

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top