பார்வையின் ஸ்பரிசம்

 

" ப்ளைட் நம்பர் 22A7 , சென்னை டு துபாய் வில் டிபார்ட் ப்ரம் டெர்மினல் ஒன் " 
என்ற அறிவிப்பு சென்னை விமான நிலையத்தின், காத்திருப்பு அறையிலுள்ள காலி இருக்கைகளை கடந்து, தலை கவிழ்ந்து நெற்றியை கையில் தாங்கியவாறு அமர்ந்திருந்த அவள் செவியை சேர்ந்ததும், சட்டென நிமிர்ந்து தன் முன் இருந்த எல்சிடி டிஸ்ப்லேயை பார்த்தாள்.

  அங்கு ஒன்றன் கீழ் ஒன்றாக ஒளிர்ந்து கொண்டிருந்த பிளைட்களில், அவள் எதிர்பார்த்த மும்பை ப்ளைட் இப்போதும் இல்லை. மணி பனிரெண்டை தாண்டி இருந்தது, அரை மணி நேரம் முன்னால் வந்திருக்க வேண்டிய ப்ளைட் இன்னும் சேர்ந்த பாடில்லை. இவளுடன் வந்திருந்த லக்ஸாவையும் காணவில்லை.

தன் பேக்கிலிருந்த வாட்டர் பாட்டிலால் தொண்டையை நனைத்தாள். தலைமுடியை வாரி ஒரு பின்னலிட்டாள், வில்லென வளைந்த புருவங்களுக்கிடையே விலகியிருந்த நுண்ணிய கரும்பொட்டை இழுத்து பழைய இடத்தில் விட்டாள், நான்காண்டு காலம் புழங்கிய கம்ப்யூட்டரின் கறை, கருவளையமாக கண்ணை சூழ்ந்திருந்தது. இருபத்தைந்தை தாண்டியதன் விளைவாக லேசாக சதை போட்டிருந்தாலும் அவள் அழகில் எள்ளளவும் குறையவில்லை.

சோம்பல் முறித்தபடி சுற்றி நோட்டமிட்டாள் , விமான நிலையமே ஏறக்குறைய வெறிச்சோடி தான் இருந்தது. இவள் பின்னால் இருவர் அமர்ந்தவாறே தூங்கிக் கொண்டிருந்தனர். முன்னாள் ஒரு ஹனிமூன் தம்பதிகள் போல, அவர்களை மட்டுமன்றி சுற்றியிருந்த விமான நிலையத்தையே மறந்து, தேனிலவை தெகிட்டா நிலவாக இங்கிருந்தே தொடங்கி விட்டனர்.

" ஜனனி.. முழிச்சுக்கிட்டியா.. " என்றபடி அருகில் அமர்ந்தாள் லக்ஸா.

" இப்போதான், நீ எங்க போன.. "

" ப்ளைட் டிலே டீடைல்ஸ் கலக்ட் பண்ண தான்.." என்று அவள் சொன்ன பொய்யை காட்டிக்கொடுத்து பேச்சில் கலந்த சிகரட் வாடை. லக்ஸா லண்டனில் பிறந்தவள், அவளுக்கு இதெல்லாம் சகஜம் என்றாலும் ஏனோ இவளிடம் வெளிப்படையாக சொல்ல தயங்குகிறாள். உரிமையாக கேட்குமளவு நெருக்கமுமில்லை ஆபீஸ் பழக்கம் தான், அவளும் இதே ப்ளைட்டில் தான் போகிறாள் என்பதே ஏர்போர்ட் வந்த பிறகு தான் ஜனனிக்கு தெரிந்தது. அவள் ஏன் போகிறாள் என இவளும் கேட்க வில்லை இவள் எங்கே போகிறாள் என அவளும் கேட்கவில்லை.

" இன்னும் டூ ஹவர்ஸ் இங்க தானாம்.. "

" சூப்பர்.. மறுபடியும் தூங்க வேண்டிதான் " மடி மீதிருந்த தன் பேக்கிற்கு தனி இருக்கை அளித்தாள்.

" டிஸ்கஸ்டிங் தீஸ் பீபுள்.. " தேனிலவு தம்பதிகளுக்கு கேட்கும் படியே சீறினாள் லக்ஸா, அவர்களும் இவள் குரல் கேட்டு சற்று விலகிக் கொண்டனர்.

"என்ன லக்ஸா.. பொறாமையா.. "

" வாட்.. "

லண்டனில் பிறந்த அரை தமிழச்சிக்கு பொறாமைக்கும் குளத்தாமைக்கும் என்ன வித்தியாசம் தெரியும் .

" ஐ செட்.... ஆர் யூ ஜெலஸ்.. அவங்க லவ் பண்றாங்களேன்னு... "

" நோ.. நோ .. இதுலே என்ன லவ்.. லவ் மீன்ஸ் பாக்ணும் பேசனும் பழகானும்.. சடன்லி தெய் மேரி.. ஏதோ டால் போல வாங்கிறாங்கே.. அப்புறம் சேம்  டேயே எல்லாம்.. மை காட் .. இது ஜஸ்ட் லஸ்ட்.. "

" திஸ் இஸ் லவ் ஹியர்.. நீ லண்டன் கூட சென்னைய கம்பேர் பண்ண கூடாது. இங்க ட்ரடிசன் வேற, லைப்ஸ்டைல் வேற.. "

" யா யா , வாட்டெவர்.. " என அலுத்துக் கொண்டாள் லக்ஸா.

அவளுக்கு எப்படி புரிய வைப்பது என சுற்றும் முற்றும் நோக்கியவள், தன் வாட்டர் பாட்டிலை கையில் எடுத்தாள் 
" யூ சீ.. லவ் இஸ் லைக் திஸ் வாட்டர், கிரீன் பாட்டில்ல இருந்தா க்ரீனா இருக்கும், ப்ளாக் பாட்டில்ல இருந்தா ப்ளாக்கா தெரியும், இட் அடாப்ட்ஸ் .. நம்ம ஊர் ரெஷ்ட்ரிக்சனுக்கு ஏத்த மாதிரி லவ் இப்படி மாறி இருக்கு.. லண்டனுக்கு ஏத்த மாதிரி அப்படி இருக்கு.."

" நீ பேசறதா பாத்தா .. நெறிய எக்ஸ்பீரியன்ஸ் போலே.. " சிமிட்டினாள் லக்ஸா.

மெல்லிய சிரிப்பை உதிர்க்கையில் மனம் இதமாக வலித்தது ஜனனிக்கு,

" அப்கோர்ஸ் .. நெறைய இல்ல , ஒன்னே ஒன்னு தான்.. "

" ஹே.. ப்ளீஸ் ப்ளீஸ்.. டெல் யுவர் ஸ்டோரி.. வீ ஹாவ் டூ ஹவர்ஸ்.. "

வேண்டாம் என்று மறுத்து பார்த்தாள். அவள் கேட்பதாக தெரியவில்லை. சில முறை மறுத்த பின் அவள் கேட்பதை நிறுத்தி விட்டாள். இன்னும் ஒரு முறை மட்டும் கேட்க மாட்டாளா... என மனம் ஏங்கியது. இவளுக்கு சொல்லும் கணங்களில் பொன்னில் பொதிந்த, தன் நினைவுகளில் வாழ்ந்து விட மாட்டோமா... என மனம் கிஞ்சித்தது. அவளும் இறுதி முறையாக கேட்டு விட்டாள். இவளும் சொல்ல தயாரானாள். கேட்டலில் இனிக்கும் கதைகளிடையே சொல்லலில் சுவைக்கும் கதைகள் அரிது, அதிலும் இவள் கதை அரிதிலும் அரிது, 
இவள் கதை... இவளின் அவன் கதை.

அவனை முதலில் கண்ட நாள் பசுமரத்தாணி போல மனதில் பதிந்து விட்டது. பசுமனம் பாறையான பின் எப்படி அழியும். அன்றும் இதே போல நுண்ணிய கரும்பொட்டு தான் அதனை இமைகளுக்கிடையே பொருத்தினாள். கண்களில் கருவளையம் இல்லை. கண் மை தான் சூழ்ந்திருந்தது. முகத்தில் பதினேழு வயதின் பருக்கள் முளைத்திருந்தன. அழகான அவள் ஆடையையும் அது மறைத்த தன் அங்கங்களையும்.கண்ணாடியில் சுற்றி சுற்றி பார்த்து பூரித்துக் கொண்டாள்.

வெள்ளை சுடிதார் அவளது ராசியான சுடிதார். அன்று அவளுக்கு ராசி தேவைப்பட்டது. இஞ்சினயரிங் கோச்சிங் கிளாஸ் சேர போகிறாள் இன்றைக்கு, இது அவள் கனவு, அதிலும் கம்ப்யூட்டர் இஞ்சினயரிங் தான் . சிறு வயதில் கம்ப்யூட்டர் பூதம் கதை படித்ததிலிருந்து கம்ப்யூட்டர் மீதும், பூதம் மீதும் பெரும் மோகம் கொண்டாள். பின்னாளில் பூதம் கற்பனை என்று அறிந்ததும் கம்ப்யூட்டரை கட்டி கொண்டாள்.

அழுது புரண்டு, சண்டையிட்டு, உண்ணாவிரதமெல்லாம் இருந்து ஒரு வழியாக தந்தையை ஒத்துக்கொள்ள செய்து விட்டாள், அது மட்டுமா அயராது படித்து பன்னிரெண்டாம் வகுப்பில் பள்ளியிலேயே முதல் மாணவியாக மார்க்கும் வாங்கியாயிற்று.  திருநெல்வேலியில் இந்த கோச்சிங் கிளாசில் மட்டும் சேர்ந்து விட்டால் போதும், என்ட்ரன்ஷில் இஞ்சினியரிங் இவள் வசம், நினைக்கையிலேயே தேனை நெஞ்சில் ஊற்றியது போல சில்லிட்டது.

" அப்பா.. கெளம்பிட்டியா இல்லையா.. எட்டு மணி பஸ் போயிட போறதுப்பா சீக்கிரம் வா.. " எட்டு கட்டையில் கத்தினாள்.

" வரேண்டி ஏன் கத்துற.. " வாட்ச்சை மாட்டியபடி வந்தார் இவள் அப்பா கோவிந்தன்.

" சரி சரி.. வா வா .. " என அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் போது,

" சாப்டுண்டு போங்கோளேன்.. " என்றாள் அம்மா, அவளை கொல்ல வேண்டும் போல இருந்தது. ஒரு வழியாக சைக்கிளில் பஸ்டாண்டை நெருங்குகையில் கேட்கும் சத்தமெல்லாம் எட்டு மணி பஸ்ஸின் ஹாரன் போலவே அதிர்ந்தது.

எட்டு மணி பஸ் போகவில்லையென பஸ் ஸ்டாண்ட் பெரியவர் சொன்ன பிறகு தான் நிம்மதியாயிருந்தது. இருந்தும் நொடிக்கு ஒரு முறை நீர் காக்கா போல எட்டி எட்டி பார்த்துக் கொண்டே தான் இருந்தாள்,

" கொஞ்சம் உக்காரேண்டி.. வராமலா போயிட போறது.. "

" வந்துடுத்து.. " என்று அவள் சிரிக்க, பின்னால் கனைத்த படியே வந்தது எட்டு மணி பஸ். 
சரியான கூட்டம், ஆட்கள் இறங்குவதற்கே அரை மணி நேரம் பிடிக்கும் போல, எப்போது ஏறலாம் என எதிர்பார்த்திருந்த வேளையில் தான் அவனை முதலில் பார்த்தாள்.

கையில் ஐந்தாறு பைகளுடன் இறங்குவதற்கு போராடி கொண்டிருந்தான், பார்க்கவே பாவமாக இருந்தது. அவன் இவளை பார்த்ததாக தெரியவில்லை , இவள் ஏறிக்கொண்டதும் மீண்டும் அவனை பார்த்தாள், பஸ் பின்னாடியே ஓடி வந்து கொண்டிருந்தான், அதே பாவம் போன்ற முகம், உதவ வேண்டுமென்று தோன்றியது, கண்டக்டர் கண்ணில் சிக்கவில்லை, கீழே அனாதையாக கிடந்த, அவன் பை தான் சிக்கியது. அதை எடுத்து அவன் மேல் வீசினாள்.பிடித்துகொண்டான் என தெரிந்ததும் தான் நிமிர்ந்து அவனை பார்த்தாள், அவன் ஏற்கனவே இவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான், இல்லை லேசாக முறைத்துக் கொண்டிருந்தான்.

எதற்கு முறைக்கிறான் . ஒரு வேளை பையை எறிந்தோம்னு முறைக்கிறானோ.. ? மீண்டும் பார்த்தாள் , தெரு முனையில் பஸ் திரும்பி மறையும் வார்த்தை பார்த்தும் அவன் பார்வையின் அர்த்தம் புலப்படவில்லை. 
அதை பற்றி ஆராய்ச்சி செய்யவும் அவளுக்கு நேரமில்லை.

இஞ்சினியரிங் கனவுகள் நிறைய பாக்கி இருந்தன. அவள் அப்பாவிற்கு மில்லில் க்ளர்க்காக தான் வேலை, அவர் சம்பளம் பிள்ளைகளின் கனவுகளுக்கு போதாது என்பதை சிறு வயதிலேயே அவளும், அவள் அக்காவும் அறிந்து கொண்டனர். அக்காள் கனவு காண்பதை நிறுத்திக் கொண்டாள். ஊர் பக்கத்திலேயே ஒரு காலேஜில் ஆர்ட்ஸ் படிக்கிறாள்., இவளோ அவர் சக்திக்குட்பட்டே தன் கனவுகளை நிறைவேற்றும் அளவு கல்வியை பெருக்கி கொண்டாள்.
இதோ இப்போது கனவுகள் மெய்ப்படும் தொலைவில் இருக்கிறாள். திருநெல்வேலி கோச்சிங் கிளாஸ் தான் மாவட்டத்திலேயே சிறந்தது. அங்கு மட்டும் இடம் கிடைத்தால் போதும் ,

'ஆஞ்சநேயா உனக்கு நெய்யப்பம் என் கையாலையே செஞ்சு சாத்துறேன், சீட் கிடைக்கனும்பா. ' மனமுருக வேண்டிக் கொண்டாள்.

அவள் நேரம் ஆஞ்சநேயருக்கு அன்றைக்கு நெய்யப்பம் பிடிக்கவில்லை போலும்.

" என்ன சார்.. இப்போ வந்து கேக்குறிங்க.. எல்லா சீட்டும் முடிஞ்சாச்சே.. பேசாம ஒரு வருஷம் போட்டும்.. பாப்பாவ அடுத்த வருஷம் சேர்த்துருவோம் " இழித்தான் கோச்சிங் கிளாஸ் ஊழியன்.

வரும் வழியெல்லாம் அப்பாவை திட்டி கொண்டே தான் வந்தாள். அவரும் பொறுத்து பொறுத்து பார்த்து விட்டு, ஊர் வந்ததும் பொரிந்து தள்ளி விட்டார்,

" எங்க படிச்சா என்ன.. படிக்கற பிள்ளைகள் எங்கேனாலும் படிக்கும். நீ நம்ம சீனிவாசன் சார்டயே படி.. "

" அப்பா.. அவரு போன வருஷம் தான்பா ஸ்டார்ட் பண்ணிருக்கார்.. "

" எப்போவா இருந்த நோக்கு என்னடி, படிக்க தானே போற, இதுக்காக ரெண்டாயிரம் , மூவாயிரம்லாம் செலவு பண்ணிண்டிருக்க முடியாது. சீனிவாசன் நம்மவா..கூட குறைய கொடுத்தாலும் வாங்கிப்பார்.. "
கூறிவிட்டு தன் வேலையை பார்க்க நகன்றார்.

வீடு வரை தனி பிரயாணம் தான். போகும் வழியெல்லாம் சின்னா பின்னமான தன் கனவுகளையும் , அதனை சீனிவாசன் சார் கையில் ஒட்ட வைப்பதும் தான் சிந்தனையில் ஓடிக் கொண்டிருந்தது. காற்றில் கலைந்த தன் தலை முடியை விலக்கும் பொழுது தான் ஓரக்கண்ணில் அவனை மீண்டும் கண்டாள்.

இப்போதும் முறைத்துக் கொண்டு தான் இருந்தான். மீண்டும் நேராக அவனை பார்த்தாள், அவன் காந்த விழி பார்வையில் இவள் கண்கள் அகப்பட்டு கொண்டது. அந்த சில நொடிகளில் அவனின் அவசரத்தில் கோதப்பட்ட முடியிலிருந்து நீல நிற சட்டை வெளிர் நீல ஜீன்ஸ் வரை பதிவாகிவிட்டது. பக்கத்தில் மாங்காய் திருடி பெயிலான மணியும் பிளந்த வாயுடன் நின்று கொண்டிந்தான். பின் தன் பார்வையை திருப்பி நேராக நடந்தாள். திரும்பி பார்க்கலாமா.. ? வேண்டாம் .. நேராக வீட்டை சென்றடைந்தாள்.

அவள் வீடு, தான் சுமந்த பாரத்தை எப்போது இறக்கலாம் என கால் நடுங்க காத்திருக்கும் ஒரு பழைய ஒட்டு வீடு. மரப்பட்டியிட்ட அதன் கதவினை திறந்தாள். சின்ன சின்ன அறைகளாக ரயில் வண்டி போல நீண்டிருந்தது வீடு. நடுவில் வெயிலுக்கும் மழைக்கும் வாய் பிளக்கும் முற்றம் வேறு.

" போன காரியம் என்னாச்சுடி.. " என்றாள் அம்மா.

" நாசமா போச்சு.. டீ போடு .." ஃபேன் சுவிச்சை தட்டி விட்டு நாற்காலியில் விழுந்தாள். ஃபேன் சுத்த மறுத்தது.

" கரண்ட் இல்லையாம்மா.. "

ஆஞ்சநேயா.. என மனதுக்குள் கத்தினாள், ஆண்டவனுக்கே கேட்டது போல சட்டென கரென்ட் வந்து  ஃபேன் வேகமெடுக்க, சமாதியான டிவியும் உயிர்பித்து செய்தி வாசித்துக் கொண்டது. அதில் பாடல்களை தேடிய வேளை,

" மாமிமிமி... " என்றது வாசலில் ஒரு பழக்கப்பட்ட குரல்.

திரும்பவே தேவையில்லை,

" அம்மா .. பக்கத்து வீட்டு வானரம் வந்திருக்கு.. "

" ஏய்.. அவன் வயசு என்ன.. உன் வயசு என்ன.. பெரியவாள மதிக்கறதில்ல.. உன் தோப்பனாருக்கு சொந்தகாரவா அவா "

' ஆமா.. முப்பதைஞ்சு வயசாகியும் கல்யாணம் ஆகல .. அலப்பறை.. ரோட்டுல கிழவி போனாலும் விடாது.. சனியன்.. ' என மனதிற்குள் அவனை வாழ்த்திக் கொண்டிருக்கும் போதே மற்றொரு முறை கத்தி விட்டான் அந்த அலப்பறை.,

" என்னனு கேளுமா.. "

" வேலையா இருக்கேனோல்லியோ.. போய் கேளுடி.. சோம்பேறி கழுதை. "

உச்சு கொட்டி விட்டு கிளம்பினாள். இவளை கண்டதும் வாசல் படியை, வாயில் ஊற்றிய ஜொள்ளால் கழுவி விட்ட படி நின்று கொண்டிருந்தான் பக்கத்து வீட்டு ராஜு.

" என்னடி.. நீ வந்திருக்காய்.. சோம்பேறி ஆச்சே நீ.."

" என்ன வேணும்.. "

" மாமா இல்லையா.. "

" அப்பா ஆத்துல இல்ல .. வெளிய போயிருக்கா. அம்மா தான் இருக்கா.. என்ன விஷயம் "

" ஆத்துல மாமி குழம்பு வைக்கலை.. முடியலன்னு படுத்துடறா .. மாட்டு பொண்ணு வந்தாதான் குலம்புலாம்ங்கரா.. " அவன் இழிக்கையில் , கையில் மறைத்து வைத்திருந்த கிண்ணம் வெயில் பட்டு மின்னியது.

" உங்காத்துல என்ன ரசமா .. வாசம் தூக்கறதே.. "

'இல்ல விசம்' என நாவில் வந்த வார்த்தைகளை வாய்க்குள் அடக்கி விட்டு, 
" கொடுங்கோ.. எடுத்துண்டு வரேன் " அவள் கை நீட்ட, கிண்ணத்தை கொடுக்கும் சாக்கில் அவன் விரல்களால் இவள் விரலை நக்கினான்.

அருவருத்துக் கொண்டு வந்தது, வீட்டில் பேச முடியாத வார்த்தைகளால் அவனை திட்டிய படியே ரசத்தை கிண்ணத்தில் நிரப்பியவள், அவன் கையில் தராமல், நாய்க்கு வைப்பது போல தரையில் வைத்து விட்டு நகன்றாள்.

மீண்டும் நாற்காலியில் அக்கடா என விழுந்த போது, டிவியில் சிம்பு மன்மதனாக பத்து பெண்களுடன் ஆடிக் கொண்டிருந்தான். கண்களை மூடி பின்னால் சரிந்தாள், அந்த பையன் முகம் நினைவுக்கு வந்தது, கூடவே எரிச்சலும் வந்தது.

தொடரும்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top