Part 51

பாகம் 51

நீதி மன்றம்

"யுவர் ஹனார், எங்க அம்மா தான் எங்க அண்ணனோட வாழ்க்கையை நாசப்படுத்தினாங்க. அவரோட அப்பாவை பறிச்சி, அவங்க அம்மாவை தனியாக்கினாங்க. அவங்க அதோட திருப்தி அடையல. எல்லா விதத்திலயும் எங்க அண்ணனோட சந்தோஷத்தை கெடுக்க முயற்சி பண்ணாங்க. எங்க அண்ணனையும் அண்ணியையும் கொல்ல ஆள் அனுப்பினாங்க. அவங்க சாப்பாட்டுல அந்த ஆள் விஷத்தை கலந்துட்டான்... அது எல்லாருக்கும் தெரியும். கடைசியில, அண்ணியை கொல்ல, ஒரு ஷுட்டரை அனுப்பினாங்க. அப்பா, சொல்ல முடியாத மன அழுத்தத்தில் இருந்தார். மொத்தமா அமைதியை இழந்திருந்தாரு. அவரால தான் எங்க அண்ணன் நிம்மதி இல்லாமல் இருக்காருங்குற குற்ற உணர்ச்சி அவரை கொன்னுகிட்டிருந்தது. எங்க அண்ணனை அழிக்க எங்க அம்மா செஞ்ச கருணையில்லாத செயல்கள் அவரை ரொம்பவே கஷ்டப்படுத்திச்சி. அதனால தான், பார்ட்டியில் அவங்களை பார்த்த உடனே, அவர் நிதானம் இழந்துட்டாரு. எங்க அம்மா நல்லவங்க இல்ல. அவங்க உயிரோட இருந்திருந்தா, எங்க அண்ணனையும் அண்ணியையும் நிச்சயம் கொன்னிருப்பாங்க" என்று கூறி முடித்தாள் ஹீனா.

அவளுடைய வாக்குமூலத்தை குறிப்பெடுத்துக் கொண்டார் நீதிபதி. அர்ஜுனுடைய வக்கீல், சங்கருக்காக ஹீனாவின் வாக்குமூலத்தை வைத்து வாதாடினார். தீர்ப்பு நாளை அறிவித்துவிட்டு அனைவரையும் கலைந்து செல்ல உத்தரவிட்டார் நீதிபதி.

அர்ஜுனுடைய வக்கீல் அவர்களிடம் வந்தார். அவருடைய முகம் நம்பிக்கை இழந்து காணப்பட்டது.

"ஐ அம் சாரி அர்ஜுன் சார். நம்மால எதுவும் செய்ய முடியாது. அவர் மாஷாவைப் பப்ளிக்கா கொன்னிருக்காரு. நிறைய பேர் அவர் கொன்னதை பாத்திருக்காங்க"

"என்னோட வாக்குமூலத்தை எடுத்துக்க மாட்டாங்களா?" என்றாள் ஹீனா

"உங்க வாக்குமூலம் தான் அவருடைய தண்டனையை குறைக்க போகுது. ஆனா, அவருக்கு குறைந்தபட்ச தண்டனை நிச்சயம் கிடைக்கும்"

"குறைந்தபட்ச தண்டனை என்ன?"

"ரெண்டு மூணு வருஷ ஜெயில் தண்டனை கிடைக்கலாம்"

"ஆனா அவர் கொன்னது நல்லவங்களை இல்லயே" ஹீனா.

"சட்டத்துக்கு முன்னாடி அதெல்லாம் செல்லுபடியாகாது. யாரையும் கொல்ல, உரிமை யாருக்கும் கிடையாது... அவங்க நல்லவங்களா இருந்தாலும் சரி, கெட்டவங்களா இருந்தாலும் சரி, அதை சட்டம் அனுமதிக்கிறது இல்ல. அவர் பப்ளிக்ல கொலை செஞ்சிருக்கார். அங்க போலீஸ் எல்லாம் இருந்திருக்காங்க" என்றார் வக்கீல்.

அர்ஜுனும் கிரியும் அமைதி காத்தார்கள். அவர்கள் இதைப் பற்றி ஏற்கனவே விவாதித்து விட்டு இருந்தார்கள். இது அவர்கள் எதிர்பார்த்தது தான்.

அவர்கள் சீதாராணி இல்லம் வந்து சேர்ந்தார்கள். இந்து அமைதி இழந்திருந்ததை கவனித்தான் அர்ஜுன்.

"ஏன் டென்ஷனா இருக்க?" என்றான்

"அப்பா ஜெயிலுக்குப் போயிடுவாரா?"

"நம்மளால முடிஞ்ச அளவுக்கு நம்ம முயற்சி பண்ணி பார்த்துட்டோம். இதுக்கு அப்புறம் நம்மால ஒன்னும் செய்ய முடியாது"

"அவர் தப்பு செஞ்சப்போ ஃப்ரீயா இருந்தாரு. நல்லது செய்யணும்னு நினைக்கும் போது, கடவுள் அவரை தாண்டிச்சிட்டாரு..." என்றாள் சோகமாக.

"நீ தானே சொல்லுவ, யாரும் அவங்க செஞ்ச கர்மத்தில் இருந்து தப்பிக்க முடியாதுன்னு...? அவர் செஞ்சதுக்கான பலனை அவர் அனுபவிக்கிறார்... இப்ப அவர் வருத்தப்படுறார் அப்படிங்கிறதுக்காக, அவர் செஞ்சதெல்லாம் மன்னிப்புக்கு உகந்ததாகாது. எங்க அம்மா வடிச்ச கண்ணீருக்கு பதில் கிடைக்காம போகுமா?"

"ஆனா, அவர் உண்மையிலேயே ரொம்ப வருத்தப்படுறார்ங்க..."

"அவர் வருத்தப்படுறதனால எதுவும் மாறிடாது. ஜெயில்ல தனியா இருக்கும் போது, என் அம்மாவுக்கு அவர் செஞ்ச துரோகத்தை நினைச்சு  இன்னும் அதிகமா வருத்தப்படுவார். ஒருவேளை, உன் கடவுளுக்கு அது தான் தேவையோ என்னமோ... யாருக்கு தெரியும்..."

"உங்களுக்கு வருத்தமா இல்லயா?"

"நிச்சயமா இருக்கு... ஏன்னா, தனியா இருக்கிறது எவ்வளவு கொடுமையானதுன்னு நான் அனுபவிச்சு இருக்கேன். தெரிஞ்சோ, தெரியாமலோ நான் தனியா இருந்து அவஸ்தை பட்டதுக்கு அவர் காரணமானாரு. இப்போ அவரும் அதையே தான் அனுபவிக்க போறாரு. அவரை நினைச்சி எனக்கு கவலையா இருந்தாலும், சந்தோஷமாவும் இருக்கு. ஏன்னா, இது தான் அவர் எங்க அம்மாவை பத்தி நினைக்க போற நேரம்... எங்கம்மாவுக்கு செஞ்ச அநியாயத்தை நிதானமா நெனச்சு பாப்பாருல்ல...?" என்ற போது அவன் தொண்டை அடைத்தது.

அவன் தோளை மெல்ல பற்றி அழுத்தினாள் இந்து.

"உனக்கு தெரியுமா எங்க அம்மா எவ்வளவு நல்லவங்கன்னு... யாருக்குமே தீங்கு நினைக்காத இதயம் அவங்களுக்கு... அவங்களை மாதிரி கலப்படம் இல்லாத அன்போட இருந்தவங்களுக்கு துரோகம் செய்ய ஒரு மனுஷனால எப்படி முடிஞ்சதுன்னு எனக்கு தெரியல. இப்போ அவர் வருத்தப்படுறதனால என்ன பிரயோஜனம் இருக்கு? நாங்க இழந்த சந்தோஷமான வாழ்க்கையை அவரால திருப்பித் தர முடியுமா? இப்போ வருத்தப்பட்டு எந்த  பிரயோஜனமும் இல்ல. ஒரு மனுஷனை கொன்னதுக்கு அப்புறம், வருத்தப்பட்டு என்ன பிரயோஜனமும்? செத்தவன் செத்தவன் தான்..."

"ஆனா, நீங்க அவரை காப்பாத்த முயற்சி பண்ணீங்களே..."

"நான் நன்றி கெட்டவன் இல்ல. அவர் உன்னை காப்பாத்தினார்... என் வாழ்க்கையை காப்பாத்தினர்... என் எதிர்காலத்தை காப்பாத்தினார்... அதுக்காக அவருக்கு நான் அதை செஞ்சேன்"

வருத்தமாய் இருந்தது இந்துவுக்கு.

"சாயங்காலம் ரெடியாயிரு"

"சாயங்காலமா? நம்ம எங்க போறோம்?"

"மறந்துட்டியா? இன்னைக்கு வெள்ளிக்கிழமை. உன் கூட கோவிலுக்கு வர்றதா நான் வாக்கு கொடுத்திருக்கேன்"

இந்துவின் வருத்தம் எல்லாம் பஞ்சாய் பறந்து போனது.

"நிஜமாவே நீங்க என் கூட கோயிலுக்கு வரப் போறீங்களா?"

"பின்ன? நான் கேட்டதை தான் உங்க அம்மா கொடுத்துட்டாங்களே... இப்போ நான் சொன்னதை செய்ய வேண்டிய நேரம் இது"

"அப்போ நீங்க ஆஃபீஸ் போகலயா?"

"இல்ல. கிரி பார்த்துக்குவான்"

"சரி... நீங்க என்ன சாப்பிடுறீங்க?"

"நீ (என்பதை அழுத்தி) என்ன சாப்பிடுற?" என்றான்

"ஏன் கேட்கிறீங்க?"

"இன்னைக்கு நான் தான் சமைக்க போறேன்"

"என்னது?"

"நான் தான் சமைக்கப் போறேன்னு சொன்னேன்"

"ஏங்க?"

"சும்மா தான்... ஒரு சேஞ்சுக்கு... இன்னைக்கு உனக்கு லீவு... பாவம் நீ, உங்க மாமனாரை நெனச்சி ரொம்ப கவலையா இருக்க... அதனால தான்" என்ற அவன் குரலில் கிண்டல் ஒலித்தது.

"அப்போ நான் என்ன செய்றது?"

"நீ கிச்சன்ல வந்து உட்கார்ந்து, உன் புருஷனை பார்த்துகிட்டு இரு"

"எப்படி சமைக்கணும் நான் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கணுமா?"

"வேண்டாம்... இது இன்டர்நெட் உலகம். அதுல என்ன வேணாலும் கத்துக்கலாம்"

"அஜ்ஜு, சமைக்கிறேன்ங்குற பேர்ல, ஏதாவது புஸ்த்தாவெல்லம் செய்யாதீங்க..."

"அது பாஸ்தா" என்று சிரித்தான்.

"ஏதோ ஒன்னு"

"கவலைப்படாதே உனக்கு பிடிச்சதை தான் செய்ய போறேன்"

"என்ன செய்யப் போறீங்க?" என்றாள் ஆர்வமாக.

"பிரியாணி..."

"ஐய்யா... எனக்கு ரொம்ப பிடிக்கும்"

உலகத்திற்கே வழிகாட்டும் கூகுள் செஃப்பின் உதவியுடன் சமைத்தான் அர்ஜுன். வதக்க வேண்டியவற்றை எல்லாம், காளானுடன் சேர்த்து வதக்கிவிட்டு, அதில் அரிசியை கலந்து, அதை எலக்ட்ரிக் குக்கரில் போட்டு, குக் மோடுக்கு மாற்றினான். பிறகு, பச்சடிக்கு வெங்காயத்தை வெட்டினான்.

இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் எதற்காகவும் அவன் இந்துவிடமிருந்து ஆலோசனை பெறவில்லை. அது இந்துவை ஆச்சரியப்படுத்தியது. உண்மையிலேயே பிரியாணி நன்றாகவே இருந்தது. அதை ரசித்து ருசித்து சாப்பிட்டாள் இந்து.

"நீங்க இவ்வளவு நல்லா சமைப்பிங்கன்னு எனக்கு தெரியாதுங்க"

"உனக்கு பிடிச்சிருக்கா?"

"ரொம்ப"

அவளுடைய முகபாவம் மாறியது.

"அப்பா என்ன சாப்பிடுறாருன்னு தெரியல" என்றாள் சோகமாக.

"தயவுசெஞ்சி இந்த மாதிரி யோசிக்கிறதை நிறுத்து. அவருக்கு கொடுத்ததை அவர் சாப்பிடுவார். நம்மால எதுவும் செய்ய முடியாது. அதை புரிஞ்சுக்கோ"

"நம்ம, இந்த மாதிரி பிரியாணி செஞ்சி சாப்பிடறோம்னு அவருக்கு தெரிஞ்சா, நம்மளை பத்தி அவர்  என்ன நினைப்பார்?"

"அவர் புள்ள செஞ்ச பிரியாணியை சாப்பிட முடியலன்னு வருத்தப்படுவார்" என்று சிரித்தான்

"நீங்க ரொம்ப மோசம்"

"மோசமானவங்களுக்கு நான் மோசமானவன் தான். தேவையில்லாம எதையும் யோசிக்குறதை விட்டுட்டு, உன் புருஷன் செஞ்ச பிரியாணியை சாப்பிடு"

சரி என்று தலையசைத்துவிட்டு சாப்பிட தொடங்கினாள் இந்து.

"சீக்கிரம் சாப்பிடு"

"ஏங்க?"

"சாப்பிட்டதுக்கு அப்பறம் சின்னதா ஒரு ப்ரோக்ராம் வச்சுக்கலாம்" என்றான்.

"ப்ரோக்ராமா?"

"உனக்காக நான் எவ்வளவு நல்லா பிரியாணி செஞ்சு கொடுத்திருக்கேன்..."

"அதுக்கு...?"

"அதுக்கு நீ பதிலுக்கு எனக்கு மரியாதை செய்ய மாட்டியா?"

அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது அப்பொழுது தான் புரிந்தது இந்துவுக்கு.

"நான் ரொம்ப ஃபுல்லா சாப்பிட்டு இருக்கேன். என்னால அசைய கூட முடியாது" என்றாள்.

"ஆனா, நான் ஃபுல்லா சாப்பிடலயே..."

"நம்ம சாயங்காலம் கோவிலுக்கு போகணும்" என்றாள்.

"அதனால என்ன?"

"கோவிலுக்கு போகும் போது, அந்த மாதிரி எல்லாம் எதுவும் செய்யக் கூடாது. கோவில் ரொம்ப புனிதமானது"

"நீ எதை பத்தி பேசுற இந்து?" என்றான் ஏதும் புரியாதது போல.

"நீங்க என்ன கேக்கறீங்கன்னு எனக்கு தெரியும்"

"நான் என்ன கேட்டேன்? "

"விடுங்க நீங்க..."

"பிரட் பஜ்ஜி செஞ்சு கொடுக்க சொல்லி கேக்கலாமுன்னு பார்த்தேன்"

"பிரட் பஜ்ஜியா...?" என்றாள் விழி விரிய.

"நீ என்ன நெனச்ச?"

"நான் வந்து..."

தன் கைகளை கட்டிக் கொண்டு அவளை பார்த்து கிண்டலாய் புன்னகைத்தான் அர்ஜுன். வேண்டுமென்றே அவளிடம் வம்புக்கு வருகிறான் என்பதை புரிந்து கொண்டாள் இந்து. பரபரவென அவள் கன்னத்தில் ரத்தம் ஏறி அவள் கன்னம் சிவந்தது.

அவள் அங்கிருந்து ஓடி செல்ல நினைத்த போது அவள் கையை பிடித்து தடுத்து நிறுத்தி அவள் காதில் ரகசியம் உரைத்தான்.

"அந்த ப்ரோக்ராமை நம்ம கோவிலுக்கு போயிட்டு வந்ததுக்கு அப்புறம் வச்சுக்கலாம்." என்றான்.

வெட்கம் தாங்காமல் அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள் இந்து.

தொடரும்...
 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top